காதுக்குள்ள கேக்குது இன்ரநெற் றேடியோ

என்னதான் தொழில்நுட்ப மாயைகள் புதிது புதிதாய் வந்து விழுந்தாலும் வானொலி என்ற ஊடகம் எல்லாவற்றுக்கும் சளைக்காமல் நின்று பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றது. வானொலி கேட்பதில் உள்ள சுகம், ஏதாவது வேலையைப் பார்த்துக் கொண்டே அதுபாட்டி ஓடிக்கொண்டே இருக்கும். காதலா காதலா படத்தில் கமல் பாடுமாற் போல “ஒரே கல்லுல ரெண்டு மாங்கா” என்ற இந்தச் சுகானுபவம் தொல்லைக்காட்சியில் கிட்டாது தானே. பிடித்தமான எழுத்தாளரின் நாவலொன்றைப் புரட்டிப்படிக்கும் போது அதில் வரும் கதை மாந்தர்களை நாமே கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் சுகம் வானொலியில் ஏதோ ஒரு பாடலைக் கேட்கும் போது, அதுவும் பார்க்காத படமாக இருக்கும் பட்சத்தில் மனக்குதிரை அப்படியே ஒரு காட்சியோட்டத்தைப் பாடலோடு ஓட்ட ஆரம்பிக்கும். இந்தளவு தூரம் ஈடுபாட்டோடு கேட்கும் ஒரு பாடலை கண்ணுக்கு முன்னால் மரத்தை எழெட்டுத் தரம் சுத்தி தாய்லாந்திலோ அமெரிக்காவிலோ தாவிப் போகும் காட்சி அமைப்பில் பொருத்தினாலும் அவ்வளவு தூரம் இருக்காது. அது தான் வானொலியின் மகத்துவம். அதுவும் ஒரு தேர்ந்ததொரு அறிவிப்பாளர் கையில் நல்ல பாடல்கள் கிடைப்பது தேர்ந்தெடுத்த ஓவியன் கையில் கிட்டும் தூரிகை மாதிரி. பாடல்களை அறிவுக்கும் பாங்கும், எந்தப் பாடலை எந்த நேரம் கொடுக்க வேண்டும் என்பது கூட அறிவிப்பாளனுக்குப் புரியா விட்டால் அந்தப் பாவம் நேயர்களைத் பதம் பார்க்கும். எத்தனை
ஆயிரம் பாடல்களைச் சீடிக்களிலும் காஸெட்டுக்களிலும் நிரப்பியிருந்தாலும் எதிர்பாராத நேரத்தில் த்ரில்லாக வந்து பாயும் பாடலைக் கேட்கும் அனுபவமே தனிதான். பாடலை ஒலிபரப்பும் போது சட்டென்று வெட்டி விடுவது போலத் துண்டாடுவது செவிட்டில் பளாரென அறைவது போலத் துண்டாடுவதுடுவது உயிர்க்கொலைக்குச் சமானமானது என்று நினைப்பதுண்டு. அறிவிப்பாளர் கையில் இருக்கும் ஒலிக்கட்டுப்பாட்டுக் கருவியில் (control Panel) உள்ள ஒலிக்கட்டுப்பாட்டு முள்ளை மெல்ல மெல்ல மெதுவாகக் குறைத்து முடிக்கும் போது தான் அந்தப் பாடலை முழுமையாக ஒலிபரப்பாது விட்டதற்கானக் கொஞ்ச நஞ்சப் பாவமன்னிப்புக் கிடைப்பதற்குச் சமானமானது.

வானொலி கேட்கும் அனுபவம் என்பது தொட்டிலில் இருந்து என் சுடுகாடு வரை ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கும் போல. என் பதின்ம வயசுக்காலம் வரையான வானொலி கேட்பு அனுபவங்களை முன்னர் ஆகாச வாணியும் விவித் பாரதியும்….! என்ற பதிவில் சொல்லியிருக்கிறேன். இரண்டாவது கட்ட அனுபவத்தில் நானும் ஒரு ஒலிபரப்பாளனாக, நிகழ்ச்சித்தயாரிப்பாளனாகவும் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புக்கிட்டியிருக்கின்றது. கிட்டத்தட்ட 12 வருஷங்கள் கடந்த ஒலிபரப்பு அனுபவங்கள் சுகமும் சவாலும் நிறைந்த கலவையாகத் தான் பயணிக்கிறது. அது ஒருபுறமிருக்க, வானொலி நேயராகத் தொடரும் பயணத்தின் இன்னொரு பரிமாணத்தைத் தான் இங்கே சொல்ல வந்துள்ளேன். அதுதான் இணையவானொலிகள் என்றதொரு பரிமாணம்.

இணைய வானொலிப்பரப்பில் கனேடிய வானொலிகளில் இருந்து அவுஸ்திரேலிய வானொலிவரை அண்டமெங்கும் வியாபித்திருக்கும் வானொலிகள் இணைய ஊடகத்தைப் பயன்படுத்தித் தம் அடுத்த பரிமாணத்துக்கு வந்துவிட்டன. வானொலிகள் என்ற மட்டில் இல்லாது இணைத்துக்கான தனித்துவமான ஒலிபரப்புக்கள் என்ற ரீதியில் 24 மணி நேரப்பாடல் ஒலிபரப்புக்களும் இயங்கி வருகின்றன. ஆரம்பத்தில் இணையத்தளத்தை விரித்து வைத்துவிட்டு அதில் இருக்கும் இணைய வானொலிக்கான சுட்டியைக் கிளிக்கி அங்கேயே கேட்கவேண்டிய நிர்ப்பந்தம். அதுவும் பத்து வருஷங்களுக்கு முன்னர் இலங்கையின் சக்தி எஃப் எம் போன்ற வானொலிகள் ஒலிபரப்பாகும் போது அறிவிப்பாளரும் , பாடல்களும் அடிக்கடி விக்கல் எடுத்தும் மெளனித்தும் பயணிக்கும் சீரற்ற சேவையாக இருக்கும். ஒருபாடல் விக்கி விக்கி பத்து நிமிடத்துக்கு மேலாகப் பயணிக்கும். அந்தக்காலமெல்லாம் இப்போது மலையேறியாச்சு. மேம்பட்ட ஒலித்தரத்தோடும் சீரான ஒலிபரப்பாகவும் இணைய வானொலிகள் மாறிவிட்ட அதே நே ரம் இன்னொரு தொழில் நுட்பத்தையும் கச்சிதமாகப் பயன்படுத்தி விட்டன. கம்பியூட்டருக்கு முன்னால் கொட்டாவி விட்டுக்கொண்டே குந்தி இருந்து பாட்டுக் கேட்க வேண்டுமா, இல்லவே இல்லை. கம்பியூட்டருக்கே வேலை கொடுக்காத கம்பியில்லாத் தொழில் நுட்பம் வந்து விட்டது. அது தான் இந்த wifi யுகத்தின் மகத்துவம். இன்று என் விட்டில் ஒரு Sagem ip radio இருக்கிறது. அந்த வானொலியை வீட்டில் எந்த மூலையில் வைத்தும் கம்பியூட்டரோடு அண்ட விடாமலும் கேட்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. எல்லா நாடுகளில் இருந்தும் இணையம் வழி ஒலிபரப்பாகும் வானொலிகளில் ஏறக்குறைய 99% வீதமானவை இந்த வானொலியில் கிட்டுகின்றன. விடுபட்ட வானொலிக்காரர் குறித்த wifi radio நிறுவனத்தின் இணையத்தளத்தை அணுகி வேண்டுகோள் வைத்தால் உடனேயே அந்த வானொலியையும் சேர்ப்பித்து விடுகிறார்கள். ஒரு ரிமோட் ஐ வைத்துக் கொண்டு கனடா, சிங்கை, இலங்கை என்று தாவும் வாய்ப்பை இந்த wifi radio கொடுத்திருப்பது பெரும் வரப்பிரசாதம். புதிதாக என்னென்ன வானொலிகள் சேர்ந்திருக்கின்றன என்பதை ஸ்கான் பண்ணி favourite இல் பொருத்தும் வாய்ப்பும் இதன் மூலம் கிட்டியிருக்கிறது.

சரி வீட்டுக்குள் வானொலி கேட்கும் அனுபவம் இன்னொரு பரிமாணத்தை அடைந்திருக்கிறதே அடுத்தது என்ன? றோட்டில் நடக்கும் போதும் ரயிலில் பயணிக்கும் போதும் கூட வானொலி கேட்க வகையுண்டா? என்ற நினைப்புக்கும் இன்பத் தேனாக வந்தது ஐபோனின் வரவு. ஏற்கனவே உள்ள செல்போன்களில் இணைய வானொலி என்பது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்தாலும், ஐபோனின் வருகைக்குப் பின் பாட்காஸ்ட் என்ற தனி நபர்களின் ஒலிப்பகிர்வுகளோடு, இணைய வானொலிக்கான செயலிகளும் (applications) வந்திருக்கின்றன. iPhone Apps இல் இலவசமாக இறக்கக் கூடிய இந்த செயலிக்களில் Tandora , Minnal Radio , போன்ற வானொலித் திரட்டிகளில் இலங்கையின் சக்தி எஃப் எம், வெற்றி எஃப் எம் ஈறாக 24 தமிழ் வானொலிச் சேவைகள் கிட்டுகின்ற அதே நே ரத்தில் வானொலி நிலையங்கள் தமக்கான தனித்துவமான செயலிகளையும் உருவாக்கியிருக்கின்றன. அந்த வகையில் மலேசியாவின் பண்பலை வரிசையான THR ராகா THR Raaga , சிங்கப்பூர் ஒலி சார்ந்த வானொலிக் குடும்பம் சார்ந்த 13 வானொலிகளை இணைத்து MeRadio என்றும் வந்திருப்பதும் உண்மையிலேயே இதெல்லாம் கனவா நனவா என்று எண்ணத் தோன்றுகிறது. ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் பேசிக்கொண்டிருக்கும் அறிவிப்பாளரின் குரலில் ஐபோனின் வழியே காதுக்குள் கேட்டுக் கொண்டே சிட்னி ரயிலில் பயணிப்ப்போம் என்றெல்லாம் கனவு கண்டிருப்போமா என்ன?

இணைய வானொலிகளில் தமிழ்ச்சேவை செய்து வரும் வானொலிகள் பல இன்னும் இந்த செல்பேசியூடான வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். நான் கேட்டவரை THR ராகாவின் ஒலிபரப்பின் ஒலித்துல்லியம் மகா அருமை. சிங்கப்பூர் வானொலியையும் முதலிடத்தில் சேர்த்துக் கொள்வேன் ஆனால் இடையிடையே வரும் மக்கரை சரிசெய்து கொண்டால்.

இப்போதெல்லாம் செல்பேசி நிறுவனங்கள் செல்போனில் பாவிக்கும் இணையப் பாவனையைத் தாராளமாக்கியிருக்கின்றன. எனவே அதிக கட்டணம் ஆகும் என்றெல்லாம் பயந்து பயந்து வானொலியைக் கேட்க வேண்டிய காலமும் மெல்ல மறைகிறது.

காதுக்குள்ளே இன்ரநெற் றேடியோவைக் கேட்டுக் கொண்டே பதிவு எழுதுவதும் கூடச் சுகம் சுகமே… 😉

13 thoughts on “காதுக்குள்ள கேக்குது இன்ரநெற் றேடியோ”

 1. //எதிர்பாராத நேரத்தில் த்ரில்லாக வந்து பாயும் பாடலைக் கேட்கும் அனுபவமே தனிதான்/

  இந்த ஒரு காரணம் மட்டுமே இன்றும் கூட வானொலி என் கொண்டாட்டத்துக்குரிய ஆகச்சிறந்த மீடியாவாக இருக்கின்றது பாஸ் 🙂

  //ஒலிக்கட்டுப்பாட்டுக் கருவியில் (control Panel) உள்ள ஒலிக்கட்டுப்பாட்டு முள்ளை மெல்ல மெல்ல மெதுவாகக் குறைத்து முடிக்கும் போது தான்//

  சில சமயங்களில் எனக்கு கோவம் வந்துடும்! ஆஸ்திரேலியா வானொலி 1ல தித்திக்கும் வெள்ளி பண்ற ஆளும் இப்படி செய்வாரு! அவுரு மட்டும் என் கையில சிக்கட்டும் அப்ப இருக்குடி ராசா 🙂

 2. அட! மீ டூ ஸேம் ஸேம்! நோக்கியா இண்டர்நெட் ரேடியோ மூலமாத்தான் பல வானொலிகளை ரசிச்சு கேக்கமுடியுது ! என்ன இன்னும் ஊர்ல ஒலிபரப்பாகுற வானொலிகளும் இணையத்தில் கிடைக்கப்பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் !

 3. பிரபா  லண்டன் லங்காசிறிfm தான் சிறப்பானது இது என்கருத்து.

 4. வருகைக்கு நன்றி ஆயில்யன் 😉

  உங்கள் கருத்துக்கு நன்றி நேசன்

 5. Cool 94.7 ஆசியாவிலேயே சிறந்ததாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது உண்மையா,
  இதில் என்ன சூட்சுமம்.
  இந்தப் பதிவில் வருவது போன்று லொள்ஸ் தங்கள் நிலையம் செய்வதுண்டா. 🙂

  http://ibnuzubairtamil.blogspot.
  com/2011/01/blog-post_17.html

 6. என்ன இருந்தாலும் அந்தக் கால இலங்கை வானொலிக்கு
  ஈடாக எதுவும் கிடையாது. இஸ்லாமிய நிகழ்ச்சிகளும் சரி
  பாட்டுக்குப் பாட்டு,திரை விருந்து போன்ற சினிமா நிகழ்ச்சிகளும் சரி,
  காலை நேரப் 'பிறந்த நாள் இன்று பிறந்த நாள் நாம் பிள்ளைகள்
  போலே தொல்லைகள் இல்லா மலர்ந்த நாள்' அப்ப்பப்பா,அம்மம்மா என்று
  உறவுகளோடு ….அப்பப்பா………

 7. \பாடலை ஒலிபரப்பும் போது சட்டென்று வெட்டி விடுவது போலத் துண்டாடுவது செவிட்டில் பளாரென அறைவது போலத் துண்டாடுவதுடுவது உயிர்க்கொலைக்குச் சமானமானது என்று நினைப்பதுண்டு//

  உண்மையிலும் உண்மை..

  நீங்க சொல்ற அடுத்த ஒலிக்குறைப்பு என்ன கருணைக்கொலையா..

  அய்யா சாமி பாட்டைப்போடுங்கய்யா முழுசா..:))

 8. அழகாக பகிர்வுல 😉

  உங்கள் நிகழ்ச்சி எல்லாம் நேரடியாக கேட்பேன்னு நானும் நினைச்சுக்கூட பார்க்கவில்லை ! 😉

  \பாடலை ஒலிபரப்பும் போது சட்டென்று வெட்டி விடுவது போலத் துண்டாடுவது செவிட்டில் பளாரென அறைவது போலத் துண்டாடுவதுடுவது உயிர்க்கொலைக்குச் சமானமானது என்று நினைப்பதுண்டு\

  இந்த மாதிரி அதிக உயிர்க்கொலைகள் இங்க நடக்கும் தல…கூடவே இசையமைத்தவர் பெயரை பாடியதாகவும் பாடியவர் பெயரை மாற்றியும் சொல்லும் போது நேராக போயி ஒங்கி செவிட்டில் பளாரென அறையலாம் போல இருக்கும் ;))

 9. வாங்க அரபுத்தமிழன்

  அந்த லொல்ஸ் எல்லாம் கிடையாது ;0, இலங்கை வானொலியும் தன் சுயத்தை இழந்து பலகாலமாயிற்று 🙁

 10. வாங்க முத்துலெட்சுமி

  ஒலிக்குறைப்பு தவிர்க்க முடியாதது, நிகழ்ச்சி முடிய 3 நிமிடம் இருக்கும் போது என்ன பண்ணலாம் ? 😉

 11. வணக்கம்! தம்பி!
  உம்மட
  எடுப்புக்கும், சாய்ப்புக்கும்- நான்
  (படத்துக்கும்,எழுத்துக்கும்)
  எடுபட்டுப் போய்க்
  கனகாலம்.
  காலம் பிந்தினாலும் காரியமில்லை.
  நல்லதை, நயத்தைப் பற்றி
  ஒண்டும் பாராட்டாமல் பறையாமல்
  கிடக்கிறது வடிவில்லை தானே?
  வளரட்டும் உம்மட
  எடுப்பும் சாய்ப்பும்.
  பாட்டும்,பூராயமும்(பேட்டியும்).

  அன்புடன்
  ந.குணபாலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *