1.1.11 – “கத தொடருன்னு”


“அனுபவிக்கும் ஒருபாடு விஷமிண்டாகின்ன காரியங்களு பின்னையில் ஒறுக்கும் போது வெறும் கதகளா…ஒரு காரியம் இல்லாத கதைகளா….”

1.1.11 பிறந்திருக்கின்றது. வழக்கம் போல புதிய ஆண்டு பிறக்கும் போது நாளை மற்றுமொரு நாளே என்ற எண்ணம் இல்லாத உணர்வாகத் தான் இன்றைய விடியலையும் ஆரம்பித்து வைத்தேன். காலையில் சிட்னி முருகன் கோயில் போனேன், பின்னர் ஒரு மணி நேரப் பயணத்தில் நேராக மல்கோவா மாதா ஆலயம் சென்று தரிசிக்கின்றேன். இன்றைய நாளை ஏதோ ஒரு வகையில் மனதுக்கு அமைதியையும் நிறைவையும் உண்டுபண்ணும் விஷயங்களைத் தேடித் தேடி நுகர்கின்றேன். ஏனென்றால் இந்த நாள் வெறும் இன்னொரு நாள் அல்ல இன்னொரு ஆண்டுக்கான விடியலின் தொடக்கமாகப் பார்க்கின்றேன். இது இன்று நேற்றல்ல ஓவ்வொரு ஆண்டும் தொடர்கின்றது. ஆனால் சவால்களும், சோதனைகளும், சந்தர்ப்பங்களும் வழக்கம் போல முந்திய ஆண்டுகளைப் போலத் தொடரும் என்ற உணர்வும் வழக்கம் போல இந்த ஆண்டின் தொடக்கம், இன்றைய நாளிலும் மனதின் ஓரமாய் ஒட்டிக்கொண்டிருக்கின்றது.

“கத தொடருன்னு” மலையாளப்படத்தின் படத்தின் டிவிடியை வாங்கி வைத்திருந்து சில வாரங்கள் கழிந்த நிலையில் இன்றைய நாளில் அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு உந்தித் தள்ள, முழுமையாகப் பார்த்து முடித்துவிடுகின்றேன். அதீத சோகமோ, உச்ச பட்ச சந்தோஷமோ அதன் ஊமை மொழிகளுக்குப் பாஷையாக நான் தேடிக்கொள்வது இசைஞானி இளையராஜாவின் பாடல்கள். எண்பதுகளில் அவர் கொடுத்த அந்தப் பொக்கிஷங்களை இருபது வருஷங்கள் கழித்தும் என் உணர்வுகளின் மொழியாய்ப் பொருத்திப் பார்க்கின்றேன். இன்றைய நாள் இந்த விசேஷ நாளில் அவரின் இசையில் சமீபத்தில் வெளிவந்த “கத தொடருன்னு” ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டுமே என்பதும் ஒரு காரணம். இன்னொன்று சத்யன் அந்திக்காடு.

ஒரு சாதாரண கதைத் துணுக்கை எடுத்துக் கொண்டு அசாதாரணமான தாக்கத்தை உண்டு பண்ணும் வித்தை தெரிந்தவர் சத்யன் அந்திக்காடு. அதை “கத தொடருன்னு” மீள நிரூபிக்கின்றது. சத்யன் அந்திக்காடுவின் ஏறக்குறைய எல்லாப் படங்களையும் பார்த்து ஆய்வுப்பட்டம் எழுதும் அளவுக்கும் இவரின் படங்கள் ஒவ்வொன்றுமே என் மனதில் ஆரவாரமில்லாத ஆக்கிரமிப்பை உண்டுபண்ணியவை.
சாட்சியமாக நான் முன்னர் பகிர்ந்த இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி. சத்யன் அந்திக்காடுவுக்கு “கத தொடருன்னு” 50 வது படம். அவரின் தற்போதைய செல்வாக்குக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை வைத்து ஒரு சூப்பர் டூப்பர் மசாலாச் சரக்கைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் 50 வது படம் என்பதற்காக அவர் சமரசம் எதுவும் செய்துகொள்ளவில்லை. அதுவே அவரின் பலம். வழக்கம் போலத் தன் கதைக்கு நாயகனாக ஜெயராமைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்.

டாக்டருக்குப் படிக்கும் வித்யாலட்சுமி நம்பியார் (மம்தா மோகன்தாஸ்) தன் காதலன் ஷாநவாஸ் (ஆஷிப் அலி) என்ற இசைக்கலைஞனை மதம் மீறிய காதலாக இரண்டு பக்க எதிர்ப்புக்களோடும் கைப்பிடிக்கும் போது நினைத்திருக்கமாட்டாள் தொடர்ந்து வரும் சவால்களை. ஆனால் அந்தச் சவால்கள் அவளுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டுகின்றது பிறேமன் (ஜெயராம்) என்ற ஆட்டோ ட்ரைவர் மூலம். கோட்டையில் இருந்து குப்பத்துக்குப் போகும் அவள் வாழ்க்கையில் புதிய பல கதவுகள் திறக்கின்றன.

“அனுபவிக்கும் ஒருபாடு விஷமிண்டாகின்ன காரியங்களு பின்னையில் ஒறுக்கும் போது வெறும் கதகளா..ஒரு காரியம் இல்லாத கதைகளா….” தன் பிள்ளையால் கைவிடப்பட்டுக் குப்பத்தில் ஒதுங்கிப்போன லாசர் (இன்னசெண்ட்) சொல்லும் வரிகள் அவை. அனுபவிக்கும் போது துன்பம் தரக்கூடிய நிகழ்வுகள் பின்னாளில் வெறுங்கதை என்ற மட்டில் ஆகிவிடுகின்றன. யோசித்துப் பாருங்கள். வாழ்க்கையில் எத்தனையோ சவால்களையும், சோதனைகளையும் சந்திக்கும் போது அவை அந்தக் கணம் தற்கொலைப்பாறையில் நின்று இடமா வலமா போவது என்று தீர்மானிக்கும் கணங்களாக இருக்கும். ஆனால் வழியா இல்லை?

தன் ஒவ்வொரு படத்துக்கும் தேர்ந்தெடுத்த நடிகர்களை வைத்துப் படம் பண்ணும் சத்யன் அந்திக்காடு இந்தப் படத்தில் மம்தா மோகன்தாஸை ஏன் தேர்ந்தெடுத்தார்?இவரும் கவர்ச்சி அலையில் மூழ்கிவிட்டாரோ என்ற என் நினைப்பை அடியோடு மாற்றிவிட்டது மம்தாவின் நடிப்பு. திசையறியா அபலையாக அவர் நடிக்கும் ஒவ்வொரு ப்ரேமும் மம்தாவுக்குப் பெரும் தீனி. ஜெயராம் பற்றி நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சத்யன் அந்திக்காடுவோடு அவர் சேர்ந்தால் அது ஒரு படி மேலதிக போனஸாக இருக்கும். சதா சாத்திரக்காரனையும், நாள் கோள் நட்சத்திரங்களையும் பார்த்துத் தன்னைச் சமாதானப்படுத்தும் பிறேமன் என்னும் ஆட்டோக்காரராக ஜெயராம், படத்தில் இவரை ஒன்றும் ஏகபோக உரிமை கொண்ட நாயகனாகக் காட்டாமல் கச்சிதமாக இருக்கிறது இவரின் பாத்திரப்படைப்பு. சைக்கிளில் திரிந்து லாட்டரி விற்கும் இன்னசெண்ட், வெளியே அனல் பறக்கும் கோபத்தையும் உள்ளே பூச்செண்டையும் வைத்திருக்கும் நடிப்பில் மல்லிகா என்ற லஷ்மிப்ரியா, ஒவ்வொரு கட்சியும் கூட்டம் போடும் போதும் குப்பத்து ஆட்களுக்கு அந்தந்தக் கட்சிகளின் சீருடையை மாற்றிக் கூட்டம் சேர்த்துக் காசு பண்ணும் மம்முக்கோயா, எப்போதோ குற்றவாளியாக இருந்து பின்னர் போலீஸ் ஒவ்வொரு முறை கள்ளக் கேஸ் போதும் ஆஜராகும் பாத்திரம், வழக்கம் போல் சின்னப் பாத்திரமாக இருந்தாலும் பெரிதாகக் கவனிக்க வைக்கும் கே.பி.ஏ.சி.லலிதா என்று ஒவ்வொரு பாத்திரங்களின் நுட்பமான உணர்வுகளை அழகாகக் கொண்டு வந்திருக்கின்றார் சத்யன் அந்திக்காடு.

இசைஞானி இளையராஜாவுச் சமீப வருஷங்களில் கிடைத்த நல்லதொரு கூட்டு சத்யன் அந்திக்காடுவினுடையது. “யாரோ பாடுன்னுதூரே”

என்ற பாடலும் அந்தப் பாடலின் அடிநாதமாய் ஒலிக்கும் இசையும் படம் பூராகவும் சந்தோஷப்பூரிப்பிலும், சோகக் கணங்களிலும் ஜாலம் செய்கின்றது. கடலோரக்கவிதைகள் படத்தில் வரும் “அடி ஆத்தாடி” பாடலின் ஆரம்ப அடிகளை ஒரு காட்சியில் இசைக்குழு ஒன்று மீட்டும் அந்த நேரம் அப்பப்பா எனக்கு ஏற்படுத்திய அந்த உணர்வைப் பொருத்திப்ப்பார்க்கச் சொற்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

1.1.11 நாள் ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக வானொலியில் நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன். இணையப்பரப்பில் கிடைத்த நல்ல பல ஆளுமைகளை வானொலி வழியாகச் சந்தித்த கணங்களை இன்னும் மகிழ்வோடு நினைத்துப் பார்க்கின்றேன். 2010 ஆம் ஆண்டை விடை கொடுக்கும் நாளில் அந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளின் பார்வையாய் வானொலித் தொகுப்புக்களைப் பகிரத் தகுந்தவர்களைத் தேடியபோது கிட்டியவர்கள், 2010 இல் தமிழ் எழுத்துத்துறை – எழுத்தாளர் பா.ரா என்ற பா.ராகவன், 2010 இல் இந்தியா – பெங்களூர் அரவிந்தன், 2010 இல் உலகம் – TBCD என்ற அரவிந்த், 2010 இல் தமிழ் சினிமா – கேபிள் சங்கர் இவர்கள் எல்லோருமே குறித்த தமது விடயதானங்களில் வெகு சிறப்பான பகிர்வுகளைக் கொடுத்திருந்தார்கள். நான் நினைக்கின்றேன்
இணைய ஊடகத்தையும் வானொலி ஊடகத்தையும் இணைத்து இந்த மாதிரியான தோரணையில் ஆண்டுப்பகிர்வைக் கொடுப்பது இதுவே முதல் முறை. அதற்காக என்னோடு தோள் நின்ற அவர்களையும் நன்றி மறவாமல் பதிவு செய்கின்றேன்.

2010 இல் இழப்புக்கள் என்ற வகையில் நான் நேசித்த இசைக்குயில் பின்னணிப்பாடகி ஸ்வர்ணலதா , இசையமைப்பாளர் சந்திரபோஸ் ,
“முகத்தார்” என்ற எஸ்.ஜேசுரட்ணம் ஆகியோரின் மறைவு பெருந்தாக்கத்தை உண்டு பண்ணிய அதே அளவுக்கு இயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப் பேட்டி அதீத திருப்தியையும் மன நிறைவையும் கொடுத்திருக்கின்றது. பகிர்ந்து கொள்ளக் கூடிய சந்தோஷங்களைச் சொல்லும் அளவுக்கும் பகிர்ந்து கொள்ள முடியாத் துயரங்கள், சவால்கள் பல தனிப்பட்ட ரீதியில் கிட்டினாலும் அவற்றைச் சொல்லும் அளவுக்கு மனம் பக்குவப்படவில்லை என்ற என் நினைப்புக்கு இணையாக பாண்டியராஜன் சொன்னதைத் தான் சொல்ல வேண்டும் “இந்த நேரத்தில் என்ன சந்தோஷம் கிட்டுதோ அதை ரசிக்கணும் ருசிக்கணும்”

“அனுபவிக்கும் ஒருபாடு விஷமிண்டாகின்ன காரியங்களு பின்னையில் ஒறுக்கும் போது வெறும் கதகளா
…ஒரு காரியம் இல்லாத கதைகளா….”
கதை 1.1.11 இற்குப் பின்னும் தொடரும்…

17 thoughts on “1.1.11 – “கத தொடருன்னு””

 1. 'கத தொடருன்னு' என்ற படத்தின் தலைப்பையே
  இடுகை தலைப்பாக வைத்து, புது வருடத்தை
  ஆரம்பித்து உள்ளீர்கள். படத்தைப்
  பற்றிய தெளிவான வெளிப்பாடு, உங்கள்
  விமரிசனம். (படம் சோகப்படமா?)

  உங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள்!
  -கலையன்பன்.

  இது பாடல் பற்றிய தேடல்!

  !

 2. வணக்கம் கலையன்பன்

  சோகப்படமா சந்தோஷப்படமா என்பதை விட கலவையான உணர்வைக் கொடுக்கும் படம்

  உங்களுக்கும் இனிய ஆங்கிலப்புதுவருட வாழ்த்துக்கள்

 3. வணக்கம் தமிழ்ப்பிரியன்

  உங்களுக்கும் ஆங்கிலப்புதுவருட வாழ்த்துக்கள் பாஸ்

 4. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்கள் நண்பரே
  பல தடவைகள் உங்களுடைய வலைபதிவுக்கு வந்திருந்தாலும் இதுதான் என்னுடைய முதலாவது பின்னூட்டம்.

  2011ம் ஆண்டு இனிய ஆண்டாக அமைய என்னுடைய வாழ்த்துக்களை மீண்டும் @றிக்கொள்ளுகிறேன்

 5. நானும் இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.நல்ல இடுகை.
  ராஜாவின் உயிர் துடிப்பான இசை ஒர் ப்ளஸ் பாயிண்ட்ங்க.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 6. தல எதிர்பார்க்க வேயில்லை.- கலக்கல் பகிர்வு 😉

  \அதீத சோகமோ, உச்ச பட்ச சந்தோஷமோ அதன் ஊமை மொழிகளுக்குப் பாஷையாக நான் தேடிக்கொள்வது இசைஞானி இளையராஜாவின் பாடல்கள்\

  \ஒரு சாதாரண கதைத் துணுக்கை எடுத்துக் கொண்டு அசாதாரணமான தாக்கத்தை உண்டு பண்ணும் வித்தை தெரிந்தவர் சத்யன் அந்திக்காடு.\

  அப்படியே வழிமொழிக்கிறேன்.

  "அனுபவிக்கும் ஒருபாடு விஷமிண்டாகின்ன காரியங்களு பின்னையில் ஒறுக்கும் போது வெறும் கதகளா..ஒரு காரியம் இல்லாத கதைகளா… 🙂

  இந்த வரிகளும் படத்தை பார்க்க துண்டியாவைகளில் ஒன்று 😉

  படம் கடந்து போனாதே தெரியவில்லை. சத்தியன் அவர்களுக்கு எப்படிதான் முடியுதோ..இந்த மாதிரி கொண்டு போறது ! 😉

  அந்த குழந்தையாக வரும் பெண் குழந்தையும் மிக அழகாக நடித்திருக்கும்.

  இன்னசெண்ட் அந்த குழந்தையிடம் கதை சொல்லும் காட்சியும் மனதில் எப்போதும் நிறக்கும் காட்சிகளில் ஒன்று ;))

  மிக நல்ல பகிர்வு தல 😉

 7. வதீஸ்

  உங்களுக்கும் இனிய ஆங்கிலப்புதுவருட வாழ்த்துக்கள்

 8. வாங்க ரவிஷங்கர்

  படத்தை முடிந்தால் தேடிப்பிடிச்சுப் பாருங்க

 9. தல கோபி

  "அனுபவிக்கும் ஒருபாடு விஷமிண்டாகின்ன காரியங்களு பின்னையில் ஒறுக்கும் போது வெறும் கதகளா..ஒரு காரியம் இல்லாத கதைகளா..//

  இந்த வரிகள் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தியது உங்கள் மூலம் தான் தல. மிக்க நன்றி

 10. குருவே , ஆண்டு துவக்கத்திலே ஒரு நல்ல படத்தைப்பற்றி தகவலையும் ( நான் இன்னும் பார்கவில்லை ஆனால் குருவின்மீது நம்பிக்கை உள்ளது ) ……"இந்த நேரத்தில் என்ன சந்தோஷம் கிட்டுதோ அதை ரசிக்கணும் ருசிக்கணும்" என்ற பயனுள்ள தத்துவத்தையும் தந்ததுக்கு நன்றி குருவே. எனது புதுவருட வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் உங்கள் பணி வெற்றியுடன் நடைபோட வாழ்த்துகிறேன் .

 11. சின்ன அம்மிணி

  உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  வாங்கோ ராஜா

  உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 😉

  வாசுகி

  இனிய ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகுக

 12. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரபா; எனக்குக் கடவுள் நம்பிக்கை அவ்வளவு இல்லாதபோதிலும், தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில்தான். யாரோ வயது போன ஒன்று சொன்னதிற்காக மாற்ற ரெடி இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *