the social network – தொலைந்த நட்பில்…..


பதினேழு வருஷங்களுக்கு முன்னர் திடீரென்று விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் “இன்று மட்டும் இலங்கை அரச பகுதிகளுக்குச் செல்ல பாஸ் நடைமுறை விலக்கப்பட்டுள்ளது” என்ற அறிவிப்பை தட்டாதெருவில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியின் வாயில் இருந்து புலிகளின் குரல் வானொலி சொல்கின்றது. அன்றைய புலம்பெயர்ந்த என் உறவுகளில் ஒன்று இதுநாள் வரை தொடர்பறுந்து கிடந்து, கடந்த சில வாரங்களுக்கு முன் எதேச்சையாக Facebook தளத்தின் வழி friend request ஆக மீண்டும் சந்திக்கின்றது. இப்படி எப்போதோ, எங்கோ சிதறுண்டு போன மணிகளாய்ப் போன நட்புக்களும் சொந்தங்களும் மீண்டும் இணைய எதோ ஒருவகையில் Facebook தளம் பாலமாக அமைந்து விட்டது.

வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றேன். ரயில் நிலையத்தில் மாலை நேரத்தில் வைத்திருக்கப்படும் பத்திரிகையை எடுத்துப் பிரிக்கின்றேன். the social network படம் குறித்த ஒரு துணுக்குப் போடப்பட்டிருக்கின்றது. இந்த வாரமே படத்தைப் பார்த்து விடுவது என்று நினைத்துக் கொண்டேன். the social network பார்க்கும் போது கலவையாக உணர்வுகள், மீண்டும் அதை அசைபோடும் போது இதைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியவில்லை. கூடவே இப்படத்தின் மூலக்கதையாக அமைந்து விட்ட The Accidental Billionaires புத்தகத்தை வாங்கி வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.


பள்ளி நாட்களிலோ, கல்லூரி வாழ்வியலிலோ மனதில் எங்கோ தோன்றும் ஒரு பொறி தான் பெரு நெருப்பாய் எம் வாழ்க்கையைப் பாதையைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றது. அப்படித் தான் இந்த இரண்டு நண்பர்களும் எதிர்பாராத வேளையில் சிறுபுள்ளியாய் உருவாக்கும் ஒரு திட்டம் உலகத்தின் கடைக்கோடி மனிதனையும் ஆட்கொள்ளுகின்றது. ஆனால் அதற்கு அவர்கள் கொடுத்த விலை? அதைத் தான் the social network சொல்லிப் போகின்றது.


2003 ஆம் ஆண்டில் ஒரு நாள், தன் காதலியைப் பிரியும் Harvard University மாணவன் Mark Zuckerberg இன் வாழ்க்கை அதற்குப் பின்னர் தான் பல்வேறு சவால்களைச் சந்திக்கப் போகின்றது என்பதை அவன் அப்போது உணர்ந்திருப்பானோ தெரியவில்லை. அந்த நேரத்தில் அவனுக்குக் கிடைத்த Eduardo Saverin நட்பும் சேர்ந்து கொள்ள Mark Zuckerberg இவனைப் பயன்படுத்தி Harvard University மாணவிகளின் கணினிகளை ஊடறுத்து அவர்களின் புகைப்படங்களைக் களவாடி FaceMash என்ற தளத்தில் பதிந்து ஒப்பீட்டு விளையாட்டை ஆரம்பிக்கின்றான். இதனால் பல்கலைக்கழக் கணினிக் கட்டுப்பாட்டகம் செயல் இழப்பதோடு மாணவர் மத்தியில் Mark ஒரு கறுப்பு ஆடாக மாறிப்போகின்றான். கூடவே நன்னடத்தை வேண்டிப் பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து எச்சரிக்கப்படுகின்றான். மாணவ சமூகத்தில் இவனுக்கு அவப்பெயர் ஏற்பட்டாலும் அவனிடம் இருக்கும் இந்தத் திறமையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள Cameron Winklevoss , Tyler Winklevoss இரட்டையர்களும் அவர்களோடு தொழிற்பங்காளியாக இருக்கும் Divya Narendra முனைகின்றார்கள். தமது Harvard Connection என்ற தளத்தின் ப்ரோக்ராமராக நியமனம் பெறுகின்றான் Mark.


மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஆன கதையாய் Mark, Thefacebook என்ற சமூக வலைத்தளத்தை Harvard University மாணவ சமூகத்தில் ஏற்படுத்த முனையும் தன் ஆசையைத் தன் நண்பன் Eduardo Saverin இடம் கூறுகின்றான். Eduardo மீண்டும் தன் நண்பனுக்குக் கைகொடுக்கின்றான். இம்முறை பண ரீதியாகவும் கூட, கூடவே இந்த இருவரும் உருவாக்கிய Thefacebook ஐ Eduardo பல்கலைக்கழக சமூகத்தின் பரவலான பார்வைக்குக் கொண்டுபோகின்றான். அதனால் Thefacebook, Harvard University இன் மாணவர்களிடையே பரபரப்புக்குரிய ஒரு தளமாக அமைந்து குறுகிய அந்தக் காலத்தில் புகழைச் சம்பாதிக்கின்றது.


மீண்டும் ஒரு எதிர்பாராத சந்திப்பு, இம்முறை Christy Lee என்ற சக மாணவி வழியாக, அந்தச் சந்திப்பே பின்னர் நண்பர்கள் இருவரும் Thefacebook என்ற குறுகிய சமூகத்தளத்தின் வலையமைப்பை விரிவாக்கும் நோக்கைத் தீவிரப்படுத்துகின்றது கடுமையாக உழைக்கின்றார்கள் Thefacebook தன் வலையமைப்பை விரிக்கும் போது Facebook ஆக மாறிப்போகின்றது. அது நாள்வரை இணைந்து செயற்பட்ட Mark Zuckerberg, Eduardo Saverin பிரிவுக்கு வழிகாலாய் அமைந்து விடுகின்றது இந்த facebook இன் செயற்பாட்டில் கவரப்பட்டு வர்த்தக ரீதியாக இந்தத் தளத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வந்த Sean Parker (Napster நிறுவன முன்னோடிகளில் ஒருவர்) இன் சந்திப்பு. facebook உலகம் எங்கும் நட்பு வலையைப் பரப்பிக் கொண்டிருக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் நண்பர்கள் பிரிகின்றார்கள், திடீர் நண்பன் Sean Parker போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகின்றான். Harvard Connection தளத்தின் பங்காளர்கள் தமது தளத்தின் அடிப்படை இலக்கணங்களைத் திருடியே Mark , facebook தளத்தை உருவாக்கமுடிந்தது என்ற ரீதியில் வழக்குத் தொடர்கிறார்கள், சம காலத்தில் தனது எதிரியாகிப் போன நண்பன் தொடர்ந்த வழக்கை வேறு Mark சந்திக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகின்றான். இந்தச் சிக்கல்களின் நதிமூலத்தில் ஆரம்பித்துப் பயணிக்கின்றது the social network திரைப்படம்.

David Fincherஇன் இயக்கத்தில் ஒக்டோபர் 1, 2010 வெளிவந்த இப்படத்தில் (கவனிக்க, கதை நிகழத் தொடங்கிய அதே மாதம்), Jesse Eisenberg ஐ கதையின் முக்கிய பாத்திரமான Mark Zuckerberg ஆக நடித்திருக்கின்றார்.


Ben Mezrich எழுதிய The Accidental Billionaires என்ற உண்மையைத் தழுவிய நாவலை அடிப்படையாகக் கொண்டே the social network உருவாக்கப்பட்டிருக்கின்றது. படத்தின் கதை மாந்தர்களும் ( அவர்களின் பெயர்கள், காலங்கள் உட்பட) எல்லாமே நிஜவாழ்வில் சமீப வருஷங்களுக்கு முன்னால் தான் நடந்து போனவை. இப்படியான ஒரு சமகாலத்தின் முக்கியமான ஒரு நிகழ்வைத் திரைவடிவில் காட்டும் போது பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் நிகழ்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் சம்பந்தத்தோடு பாயும் காட்சியமைப்போடு நேர்த்தியான படத்தொகுப்பு, தேர்ந்தெடுத்த ஒவ்வொரு பாத்திரங்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் நடிப்பு, கச்சிதமான திரைக்கதை என்று the social network மிகத்தரமான படைப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றது. ஒரு மேனாட்டுப் பல்கலைக்கழக வாழ்வியலின் கூறுகளை நுணுக்கமாக அனுபவித்த வகையில் இப்படம் காட்டும் களங்களும் மிகவும் நெருக்கமாக மனதில் இடம்பிடிக்கின்றன. படம் முழுவதுமே இருவேறு வழக்குகளைச் சந்திக்கும் கதைக்களனாக தர்க்க விவாதங்களோடு பயணித்தாலும் போரடிக்காமல் சொல்லியிருப்பதே இப்படத்திற்குப் பரவலான நல்ல விமர்சனங்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்ரது.

The Accidental Billionaires நாவல் ஒக்டோபர் 2003 ஆம் ஆண்டில் இருந்து பயணப்பட ஆரம்பிக்கின்றது, மே 2008 இல் வந்து நிற்கின்றது. நிறைவில் இந்த நாவலில் பயணித்த முக்கியமான நிகழ் பாத்திரங்களின் இன்றைய நிலை குறித்தும் பகிரப்பட்டிருக்கின்றது. இந்த நாவலாசிரியர் Ben Mezrich நாவலை எழுதப்போந்த போது முக்கிய பக்கபலமாக நின்று செயற்பட்டவர் என்று Eduardo Saverin (Facebook co-founder) ஐ நன்றி பாராட்டும் அதேவேளை பலமுறை தொடர்பு கொண்டும் தன் வேண்டுகோளை Facebook நிறுவனர் Mark Zuckerberg தட்டிக் கழித்து விட்டார் என்று சொல்கின்றார். நாவலை முழுமையாகப் படிக்கும் போது the social network சொல்லாத பல சேதிகளைச் சொல்லி வைக்கும்.

10 thoughts on “the social network – தொலைந்த நட்பில்…..”

 1. தல நோட் பண்ணிக்கிட்டேன்…இங்க வந்த பிறகு முன்ன மாதிரி படம் நேரம் இல்லை ;(

  என்னோட ஒரு லிஸ்டூ என்ன ஆச்சுன்னு இன்னும் தெரியல..

 2. முன்பு ஆர்குட் மூலமாகத்தான் நான் நிறைய என் பள்ளிக்கால நட்புகளை கண்டுபுடிச்சேனாக்கும்!

  ஸோ படம் நம்ம பக்கம் வரட்டும் கண்டிப்பா பார்த்துப்புடலாம் 🙂

 3. ஒரு பைட் இல்ல, பாட்டு இல்ல, குத்தாட்டம் இல்ல லாஜிக் இல்லாத கதையில்ல, கிழட்டு கதாநாயகனும், 18 வயது கதாநாயகியுமில்ல, ஒரு செக்ஸியான போஸ்டரில்ல….

  இப்படி ஒரு படத்த எப்படியய்யா சுத்தத் தமிழனாகிய நான் பார்ப்பது?

  இது அநியாயம், அக்கிரமம், அதர்மம்.

 4. ஆயில்ஸ்

  படம் வந்ததும் பாரும்

  விசரன் அண்ணோய்

  தமிழ் ரசிகப்பெருமக்களின் ரசிப்புத்தன்மையை நாடிபிடிச்சு வச்ச்சிருக்கிறியள் 😉

  ம.தி.சுதா

  வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி

 5. இந்த மாதிரி (facebook etc ) பதிவுகளைப் பார்க்கும்போதுதான் நமக்கு வயசாகி விட்டது என்று புரிகிறது. ஒண்ணும் புர்லே தலைவா 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *