3 idiots போதித்த பாடம்


“என்னட்டைப் படிக்கவாறவைக்கு நான் பரீட்சை நோக்கத்துக்காகப் படிப்பிக்க விரும்புறதில்லை, என்னட்டை இருக்கிற, நான் கற்ற பொருளியல் அறிவை உங்களுக்குக் குடுக்கவேண்டும் எண்டது தான் என் ஒரே நோக்கம்”

“எங்களை மாதிரி பொருளியல் ஆசிரியர்களை பரீட்சை மண்டபத்திலை இருத்தி இப்ப தயாரிக்கிற இறுதிப்பரீட்சை வினாத்தாள்களுக்கு விடையளிக்கச் சொல்லிச் சொன்னால் சிறப்பான புள்ளிகளைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறி”

அன்று எனது பொருளியல் ஆசான் வரதராஜன் சொன்னது மூளையின் எங்கே ஒரு மூலையில் ஒளிந்திருந்தது, அந்த ஞாபகக்கிணற்றில் நேற்றுக் கல்லறெந்து கலைத்தது 3 idiots.

3 idiots என்ற ஹிந்திப் படம் வந்து ஏழு மாதங்கள் ஓடிவிட்டாலும் (23 December 2009)இப்போது தான் அந்தப் படத்தின் மூலப்பிரதிகள் டிவிடிக்களாக வந்திருக்கின்றன. ஒவ்வொரு மாசமும் குறைந்தது 2 , 3 முறையாவது கடைக்காரரிடம் “3 idiots வந்துட்டுதா” என்று கேட்டு வைப்பது வழக்கமாக இருந்தது. படத்தின் மூலக்கதையின் ஒரு வரி செய்தியைத் தவிர வெறெதையும் இது நாள் வரை இணையத்திலோ அச்சூடகத்திலோ படிப்பதைத் தவிர்த்து விட்டிருந்தேன். இவ்வளவுக்கும் 3 idiots சொல்லும் சேதி தான் என்ன?

இப்போது இருக்கும் இந்தியக் கல்வி அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும், ஒரு மாணவனது சுய சிந்தனைகளுக்கும் அவனது ஆற்றல்களுக்குமான களமாக அவனால் சுதந்திரமானமுறையில் தன் விருப்பான துறையைத் தேர்ந்தெடுத்து அதில் தன்னை வளர்ப்பதற்கும், வெறுமனே ஆண்டாண்டுகாலமாக விளைவித்த ஆராய்ச்சிகளின் பேப்பர் குவியல்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கிளிப்பிள்ளைத் துறையில் மாற்றம் ஏற்படுத்தி செயல்முறைக் கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் படம் சொல்லும் சாராம்சம். இவ்வளவையும் சொல்லிவிட்டு இது இந்திக் கல்வி அமைப்பில் மட்டும் தான் இருக்கிறது என்றால் உங்களாலோ என்னாலோ நம்பவா முடியும்? நமது இலங்கையின் பாடத்திட்டமும் கல்வி அமைப்பும் கூட இதே லட்சணத்தில் தானே இருக்கின்றது.

3 idiots படத்தில் வரும் ரஞ்சோ என்ற ஷியாமளதால் சன்சட்(அமீர்கான்), பரான் குரேஷி (மாதவன்),ராஜீ ராஸ்ரோகி (ஷர்மான் ஜோஷி) ஆகிய மூன்று முட்டாள் (!) கல்லூரி நண்பர்கள், சாத்தூர் ராமலிங்கம் (ஓமி வைத்யா) என்ற புத்தகப்பூச்சி மாணவன், வீரு சாஸ்த்ரபோதி (பொமான் இரானி) என்ற இவர்களின் கல்லூரி முதல்வர் ஆகிய பாத்திரங்கள் தான் படத்தின் மூலப்பாத்திரங்களாக, குறித்த கதையை நகர்த்திச் செல்பவர்களாக மட்டுமன்றி இவர்கள் தான் நமது இலங்கை, இந்தியக் கல்வி அமைப்பின் குறியீடுகளாகவும் இருக்கின்றார்கள்.

ராஞ்சோ (அமீர்கான்) என்ற மாணவன் கட்டுக்கட்டாய் அடுக்கியிருக்கும் புத்தக மலைகள் தான் ஒவ்வொரு மாணவனின் சுயசிந்தனைக்கும் தடையாக இருக்க்கின்றன, இந்தக் கல்விமுறையை அறவே ஒழித்து ஒரு மாணவனின் தேடல்களுக்குக்கும் அவனது திறமைக்கும் வடிகாலாய் இந்தக் கல்வி அமைப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ராஜீவோ (ஷர்மான் ஜோஷி) படுத்த படுக்கையாய் இருக்கும் அப்பா, சுற்றிக்கொள்ள ஒரே சீலையோடு இருக்கும் தாய், தங்கச்சியின் கல்யாணம் இவற்றுக்கெல்லாம் தான் படிக்கும் படிப்புத் தான் கைகொடுக்கும், அந்தப் படிப்பை எப்படிப் படித்தால் தான் என்ன என்ற ரீதியில் சாம்பிராணிப்புகையும் ஊதுவத்தியுமாக கடவுளர் படங்களுக்கு புகை பாய்ச்சிக்கொண்டிருப்பவன். அடுத்தவன் பரான் குரேஷி (மாதவன்) புகைப்படக்கலையைத் தன் உயிராய் நேசிப்பவன், ஆனால் தன்னை ஒரு என்சினியர் ஆக்கி அழகுபார்க்கத் துடிக்கும் தன் தந்தையின் தீரா ஆசைக்குப் பலிகடாவாகத் தன்னை உள்ளாக்கியவன். இந்த மூன்று துருவங்களும் சேரும் போது கண்டிப்பாக ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியரிடம் நல்ல பேர் எடுக்கத் துடிப்பதும், தானே முதல் மாணவனாக வர வேண்டும் என்ற வெறியோடு பாடப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் கரைத்துக் குடித்து (அந்த வரிகள் என்ன சொல்ல வருகின்றன என்பதைக் கூடத் தன் சுய சிந்தனையில் ஏற்றி வைக்காத) வகையறா மாணவன் சாத்தூர் ராமலிங்கம் (ஓமி வைத்யா). இவர்கள் மாணவ சமுதாயத்தின் நான்கு குறியீடுகளாக இருக்கும் போது, இந்தப் புள்ளிகளோடு இன்னொருவராக, எந்தவிதமான மாற்றத்தையும், சுய அறிவின் வெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் கல்வி அமைப்பின் பிரதிநிதியாக, மாணவர்களால் வைரஸ் என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்ட கண்டிப்பான கல்லூரி முதல்வர் வீரு சாஸ்த்ரபோதி (பொமான் இரானி). இவர்களை இணைத்து 3 idiots பாடம் எடுக்கிறது.


இந்திய சினிமாவின் செழுமையான சினிமாக்களின் பட்டியலில் தவிர்க்கமுடியாத படங்களாக Lagaan, Rang De Basanti, Taare Zameen Par இந்த மூன்று படங்களோடு இப்போது 3 Idiots படமும் சேர்ந்து கொள்ளும். இதில் கெளரவப்படக்கூடிய விஷயம் இந்த நான்கு படங்களுமே ஹிந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் அமீர்கானின் பங்களிப்போடு வந்தவை, ஆச்சரியமான விஷயம் எந்த விதமான ஹீரோயிசங்களும் வாந்தி வருமளவுக்கு மசாலாவும் திணிக்காத கலைப்படைப்புக்கள். 3 Idiots படத்தில், நிஜத்தில் 45 வயதான அமீர்கானை ஒரு கல்லூரி மாணவனாக எல்லோராலும் ஏற்க முடிவதே அவரின் அர்ப்பணிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. உடனே நீங்கள் எங்கள் சரத்குமார் கூட காற்சட்டையும் டை அணிந்த சேர்ட்டும் போட்டுக்கொண்டு நமீதாவுடன் மீயா மீயா என்று பாடினவர் என்றெல்லாம் எதிர்க்கேள்வி கேட்கக் கூடாது. இந்தப் படத்தின் உருவாக்கம் குறித்த டிவிடியில் பார்த்தால் அமீர்கான் எவ்வளவு தூரம் தனக்குள் ஒரு பாடம் நடத்தி 25 வருஷங்களைக் குறைத்துக் குறித்த பாத்திரங்களாக மாறி இருக்கின்றார் என்பதைப் பார்க்கும் போது இந்த அற்புதமான கலைஞனின் சினிமா குறித்த நேசம் நெகிழ வைக்கின்றது. படம் ஆரம்பிப்பதில் இருந்து முடியும் வரை இயக்குனர் சொல்ல வந்த செய்தியின் குறியீடாகவே இவர் பயணிக்கின்றார். கல்வி அமைப்பின் கோணல்பக்கங்களையும், ஓட்டைகளையும் தன் புத்திசாலித்தனமான செய்கைகளால் உணர்த்தும் போதும், முட்டாள் பட்டம் கட்டி ஓரம் கட்டினாலும் தன்னை நிரூபிக்கும் போதும் படம் பார்க்கும் போது ரசிக்க முடிகின்றதென்றால் படம் முடிந்ததும் உறைக்க வைக்கின்றது. Aal Izz Well என்று சொல்லிக் கொண்டே வாழ்க்கையை விளையாட்டாக எடுக்கும் இந்தப் பாத்திரத்திற்கும் பின்னும் ஒரு சோகம் ஒட்டிக் கொண்டே இருக்கின்றது என்பதை இறுதியில் காட்டும் வரை தெரியாத வகையில் நடிப்பதாகட்டும், தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் போது கொட்டும் மழையைக் கடந்து தன் முகத்தில் காட்டும் போதும் எந்தவிதமான ஹீரோயிச ஒளியையும் தன்னில் பாய்ச்சாதவாறு படத்தில் பயணிக்கும் சகபயணிகளோடு தானும் ஒருவராகப் பயணித்து நிறைவான தன் நடிப்பை வழங்கி நிற்கின்றார்.


மாதவனுக்கு தமிழ்ப்படங்களில் ஆட்டம் போட்டுக் காசு பண்ணுவதை விட ஹிந்தியில் இந்தப் படம் போலவும் Rang De Basanti போலவும் படம் பண்ணினால் காசு மட்டுமல்ல மாதவன் என்ற நடிகனின் இருப்பும் உலகிற்குத் தெரியவரும். ரஞ்சோ (அமீர்கான்)வின் செயற்பாட்டில் ஈர்க்கப்பட்டு அவனின் நண்பனாக மாறுவது, அவனுக்காகவே இறுதி வரை தோள் கொடுப்பது இவையெல்லாம் வெகு இயல்பாக வெளிப்படும் வேளை, கம்பஸ் இண்டர்வியூவைப் புறக்கணித்து நான் விரும்பிய புகைப்படத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் நான் உயரவேண்டும், இன்சினியராக வந்தால் காசு நிறையும் ஆனால் நான் புகைப்படக் கலைஞராக வந்தால் என் மனசு நிறையும் என்று சொல்லியவாறே தன் தந்தையிடன் இறஞ்சியவாறே இவர் அழும் காட்சி, தம் தமிழ் சமூகத்துப் பெற்றோரின் கண்களையும் கசிய வைக்கும். 3 Idiots இன் துணைப்பாத்திரமான வரும் மாதவனின் பங்களிப்பு மாற்றுக் கலைஞனை நினைக்காத அளவுக்கு நேர்த்தியானது.


இவர்களோடு வரும் ஷர்மான் ஜோஷி, வழக்கமான லூசுத்தனமான சேஷ்டைகளும் இரட்டை அர்த்த ஜோக்குகளும் கொண்ட சினிமா பார்முலா இல்லாத இன்னொரு இயல்பான பாத்திரம். தன் வறிய குடும்பத்தைக் காப்பாற்றத் தன்னை இந்த வெற்றுக்கல்வி முறையில் மூழ்கிவிடலாமா அல்லது ரஞ்சோ (அமீர்கான்)வின் நட்பா என்று முடிவெடுக்கத் தெரியாத குழப்பவாதியாகிப் பின்னர் கல்லூரியின் மூன்றாம் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முனைவதும் கூட நம் வாழ்வின் நிதர்சனமான பாத்திரங்களில் ஒன்றேன்.


சதா புத்தகப் பூச்சியாக வலம் வந்து, நானே முதலாம் இடம் பெறுவேன் என்ற வெறியோடு தன் சிந்தனா சக்தியை சில நூறு பக்கப் புத்தகங்களை மனப்பாடம் செய்து கொண்டிருக்கும் சாத்தூர் ராமலிங்கம் என்ற பாத்திரத்தில் நடித்த ஓமி வைத்யா போன்ற நபர்கள் தமது பிள்ளைகளை வெருட்டி உருட்டி முதலாம் வாங்கில் உட்கார வைத்து டாக்டராகவோ இஞ்சியினராகவோ களிமண் பொம்மைகளாக மாற்றும் நமது சமுதாயத்துப் பெற்றோர்களின் நதிமூலமாக,


நடைமுறைக் கல்விமுறையில் இருக்கும் முரணை எல்லாம் பார்க்கக் கூடாது, வந்தோமா படித்தோமா பட்டம் பெற்றோமா என்று போய்க் கொண்டே இருக்க வேண்டும். எதிர்க்கேள்வி கேட்பவனுக்கொ,சுயமாகச் சிந்திப்பவனுக்கோ எல்லாம் இங்கே இடமில்லை என்ற ரீதியில் ஒரு சராசரி கல்லூரி முதல்வரின் பிரதிபிம்பமாக வரும் பொமான் இரானி உங்கள் கல்லூரிப் பருவத்து ஆசிரியரையோ முதல்வரையோ தானாகப் பொருத்திப் பார்க்க வைக்காவிட்டால் நீங்கள் அதிஷ்டசாலி என்றே அர்த்தம். இந்த நடிகர் பொமான் இரானியின் உடல் மொழியை வைத்தே ஒரு ஆய்வுப்பட்டம் சமர்ப்பிக்கலாம்

இப்படியான பாத்திரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் காணலாம் என்பது நிதர்சனமான வலி நிறைந்த உண்மை.


3 Idiots இந்தப் படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி, ஏற்கனவே மருத்துவத்துறை சார்ந்த கல்வி அமைப்பின் ஓட்டைகளை முன்னாபாய் எம்.பி.பி.எஸ் மூலம் காட்டியவர். இந்தப் படம் இந்த இயக்குனர் எவ்வளவு தூரம் தன்னுடைய சிந்தனையைச் சுதந்திரமான முறையில் திரையுலகின் முக்கிய ஆளுமைகளோடு கொண்டுவர முடிந்திருக்கின்றது என்பதைப் பலமாக நிரூபிக்கும் காட்சியமைப்புக்கள் படம் முழுதும் விரவிக்கிடக்கின்றன. கல்லூரி முதல்வரின் மகள் பிரசவ வேதனையால் துடிக்கும் போது வெள்ளக்காடாய் நிறைந்திருக்கும் வீதி தடைப்பட்டிருக்க, மூன்று முட்டாள் மாணவர்களின் அந்த நேரத்துச் சமயோசிதமான செயற்பாடுகள்தான் ஒரு வாழ்க்கையையே காப்பாற்றும் என்ற காட்சியில் சற்று மிகைப்படுத்தல் இருந்தாலும் அந்தக் காட்சியின் மூலம் அனுபவப்படிப்பே வாழ்க்கையைக் காப்பாற்றும், ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்னும் இயக்குனரின் முத்திரை பதிவாகி நிற்கின்றது. கடைசிக்காட்சியில் ராஞ்சோ என்ன ஆனான் என்ன எதிர்ப்பார்ப்போடு அவர்கள் பயணிக்கும் போது பரபரப்பு நம்மிலும் தொற்றிக் கொள்கின்றது. ராஞ்சோ தன் சிந்தனைகளை நிரூபித்தானா என்பதை யதார்த்த பூர்வமாகக் காட்டுவது இயக்குனரின் திறமைக்கு இன்னொரு சான்று.

தான் விரும்பிய படிப்பைத் தேர்ந்தெடுத்து வாழ முடியாத சூழல், குதிரை ஓடுதல் என்ற ஆள்மாறாட்டம் மூலம் கல்வித்துறையின் ஓட்டைகளைக் காட்டுவது, எதையும் நடைமுறை உலகோடு பொருந்திப் பார்த்து கல்வித்துறையில் சீர்திருத்தத்தை விரும்பாத இலாகா இவையெல்லாம் 3 idiots காட்டும் நிஜங்கள்.

தன் பிள்ளை டொக்டராக, இன்சினியராக வர வேண்டும் என்ற எமது சந்ததியின் சுய இச்சைகள் அடுத்த சந்ததிக்கும் நிதானமாகக் கையளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வியாதி இப்போது புலம்பெயர்ந்த நம் சமூகத்திலும் புலம்பெயராத சிந்தனையாக ஒவ்வொரு பெற்றோர் மனங்களிலும் ஆணிவேராக இருக்கின்றது. எமது சுய இச்சைகளுக்கும், கெளரவத்துக்கும், பெருமைக்குமான அடையாளங்களாக பிள்ளைகளைக் களிமண் பொம்மைகளாகச் செய்து அழகு பார்க்கின்றோம். ரியூசன், ரியூசனுக்கு இன்னொரு ரியூசன் என்றெல்லாம் ஒவ்வொரு வார இறுதிகளை நிரப்ப, கூடவே சங்கீதம், நடனம், கீபோர்ட், நீச்சல், ஓட்டம் என்று இன்னொரு பட்டியலும் இருக்கின்றது. வெளிநாட்டுக் கல்விச்சூழல் தான் விரும்பிய துறையில் தன்னை மேம்படுத்தவே, வளர்க்கவோ எந்த விதமான தடைகளையும் விதிக்காத நிலையில் புலம்பெயரா நம்மவர் சிந்தனை தான் இங்கே பெரும் மலையாக முன்னே நிற்கின்றது.

முன்னர் படித்து வியந்த, சிவசங்கரி எழுதிய “அப்பா” என்ற நூலை மீளவும் பிரித்துப் பார்க்கின்றேன். அந்த நூல் 3 idiots இல் வரும் ராஞ்சோ என்ற மாணவன் போல வாழ்ந்து காட்டிய ஒரு நிஜத்தின் கதை சொல்கின்றது. அவர் வேறுயாருமல்ல, கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடு என்னும் பிறவி விஞ்ஞானி பற்றியது. கோயம்புத்தூரில் வாழ்ந்த ஜி.டி நாயுடு எப்படியெல்லாம் தன் சுய சிந்தனையை விசாலப்படுத்தி அனுபவபூர்வமான உண்மைகளோடு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை எல்லாம் உருவாக்கினார் என்பதை தமிழராகிய எம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்? 1985 ஆம் வருஷம் “அப்பா” என்ற நூலாக இவரின் வாழ்க்கை அனுபவம் பதிவாகிய போது மகன் ஜி.டி.கோபால் இப்படிச் சொல்கின்றார் “இன்றைய இளைய தலைமுறையினரில் குறிப்பாக உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் பயிலும் மாணவர்களில் பலருக்கும் தன்னம்பிக்கையும், ஆர்வமும் ஆக்கபூர்வமான சிந்தனையும், உத்வேகமும் குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்த நிலைக்கு முக்கிய காரணம் நமது கல்வித்தரமும், சூழ்நிலையும், தகுந்த வழிகாட்டுதல் இல்லாததுமே ஆகும். முறையான கல்வியோ, உதவியோ இன்றி சிறந்த சாதனைகளைப்படைத்த பலர் முன்பு இருந்திருக்கின்றார்கள். அவர்களின் அனுபவங்களும், வாழ்க்கையின் அணுகுமுறைகளும் ஏன் ஒரு வழிகாட்டியாகவும் தூண்டுதலாகவும் அமையக் கூடாது?”
இந்த நூலை ஜி.டி.நாயுடுவோடு பழகவர்கள், சேகரித்த விபரங்கள் என்று மூன்று வருஷ முனைப்பில் எழுதிய சிவசங்கரி இப்படிச் சொல்கின்றார், “தொழிலதிபர், படிக்காத மேதை, உலகம் புகழும் விஞ்ஞானி என்று அவரைக் குறிப்பட்டவர்களில் பலரும் சின்னப் புன்னகையோடு eccentric மனிதர் என்றும் சொன்னது ஏன் என்று விடாமல் யோசனை பண்ணிய போது தவறு திரு.நாயுடு மேல் அல்ல: அவர் 30 வருஷங்கள் முன்னதாகப் பிறந்து விட்டது தான் குற்றம். Mr.Naidu was 30 year ahead of his-time என்பதைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிந்த நிறைவோடு புத்தகத்தை முடிக்கின்றேன். “அப்பா” ஓவ்வொரு புலம்பெயர்ந்த தமிழர்களது வீடுகளின் பூஜை அறையில் கூட இருக்க வேண்டிய நூல்.

“என்னட்டைப் படிக்கவாறவைக்கு நான் பரீட்சை நோக்கத்துக்காகப் படிப்பிக்க விரும்புறதில்லை, என்னட்டை இருக்கிற, நான் கற்ற பொருளியல் அறிவை உங்களுக்குக் குடுக்கவேண்டும் எண்டது தான் என் ஒரே நோக்கம்”

“எங்களை மாதிரி பொருளியல் ஆசிரியர்களை பரீட்சை மண்டபத்திலை இருத்தி இப்ப தயாரிக்கிற இறுதிப்பரீட்சை வினாத்தாள்களுக்கு விடையளிக்கச் சொல்லிச் சொன்னால் சிறப்பான புள்ளிகளைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறி”

1991 ஆம் ஆண்டுகளில் ஒரு பொருளியல் மாணவனாக, யாழ்ப்பாணம் ஶ்ரீதர் தியேட்டருக்கு முன்னால் இருந்த பொருளியல் கல்லூரியின் ஒரு கிடுகுக் கொட்டிலுக்குள் மாணவர்களோடு மாணவர்களாகக் குழுமி இருந்த இருந்த எனக்கும் சேர்த்து பொருளியல் கற்பித்த வரதராஜன் மாஸ்டர் முதல் நாள் வகுப்பில் சொன்னவை அவை. அந்த முதல் நாள் வகுப்பையே கடைசி நாளாகக் கணித்து வேறு பொருளியல் ஆசிரியரைத் தேடிக்கொண்டவர்களுக்கும், வரதராஜன் மாஸ்டரின் வகுப்புக்கும் போய் இன்னொரு பொருளியல் ஆசிரியரைப் பரீட்சை நோக்கத்துக்காத் தேடிகொண்டோருக்கும் அந்த முதல் நாள் வரதராஜன் சேர் சொன்னது தான் தூண்டுகோலாக இருந்ததென்றால் கடைசிவரை வரதராஜன் மாஸ்டரோடு மட்டும் பயணப்பட்டவர்களில் நானும் சேர்ந்து கொண்டேன். எங்கள் வகுப்பு மட்டுமல்ல அதற்கு முன்பும் பின்பும் ஏன் இன்றும் யாழ்ப்பாணத்துக் கிடுகுக் கொட்டிலில் பாடம் நடத்தும் வரதராஜன் சேர் இதைத் தான் சொல்லுவார் என்பது எனக்குத் தெரியும்.

அன்று என் வகுப்பறையின் எங்கோ ஒரு மூலையில் இருந்து, தன் சுயத்தைத் தேடி எங்கோ போய்த் தொலைந்து காணாமல் போன யாரோ ஒரு சகபாடியைத் தேடுகின்றேன், ராஞ்ஜோவின் நண்பர்கள் போல…….

free as the wind was he
like a soaring kite was he
where did he go…lets find him
we were led by the path we took
while he carved a path of his own
stumbling, rising,care free walked he
we fretted about the morrow
hi simply reveled in today
living each moment to he fullest

where did he come from…..
he touched our hearts and vanished….
where did he go….let’s find him
in scorching sun,
he was like a patch of shade….
in an endless desert, like an oasis….
on a bruised heart,
like soothing balm was he
afraid, we stayed confined in the well,
fearless, he frolicked in the river
never hesitating to swim against the ride

he wandered lonesome a a cloud
…yet he was our dearest friend
where did he go… let’s find him

19 thoughts on “3 idiots போதித்த பாடம்”

 1. பரீட்சை நோக்கிலேயே இன்றைய கல்வி முறை அமைந்திருப்பது நிஜம்தான்! அதையும் தாண்டி படிக்கின்ற காலகட்டத்திலேயே வேலைக்கு தேவையான வேறு சில படிப்புக்களையும் கற்றுக்கொள்ள வாய்ப்புக்களும் அதிகமே ஆனால் அவைகளில் பெரும்பாலும் கம்ப்யூட்டர் துறை சார்ந்தவைகளே அதிகம் என்பதும் நிதர்சனம்!

  தொழில் நுட்ப படிப்பு படித்து முடித்து வெளிவந்த காலகட்டத்தில் படித்தவைகளை பிராக்டிகலாக்கி பார்க்க வாய்ப்புக்கள் மிகக்குறைவு என்ற ரீதியில் நான் இழந்தவைகளும் சில உண்டு!

  படம் நானும் பார்த்துவிட்டேன்! சுதந்திரமானதொரு உணர்வினோடு படிப்பை வாழ்வியலுடன் கலந்துகொண்டு போகும் அந்த – பட – வாழ்க்கை நிஜத்தில் கனவாகத்தான் போனது !

 2. எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய,
  "அப்பா" என்கிற நூலைப்
  படிப்பதற்காகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 3. படம் வெளிவாந்து இவ்வளுவு நாள் கழித்து படத்தை சிலாகித்து இருக்கிறீர்கள்…

  ரொம்ப விளக்கமா கதை எல்லாம் சொல்லி இருக்க வேணுமா என்ன???

  ஆனால் அப்பா என்னும் புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்.. அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்றா ஆவல் வருகிறது…

  அடுத்த பதிவுகளில் அந்த புத்தகத்தைப் பற்றிய சில விஷயங்களை கவர்ந்தால் நலம்.

 4. கடைக்குட்டி said…

  படம் வெளிவாந்து இவ்வளுவு நாள் கழித்து படத்தை சிலாகித்து இருக்கிறீர்கள்…

  ரொம்ப விளக்கமா கதை எல்லாம் சொல்லி இருக்க வேணுமா என்ன???//

  வாங்க கடைக்குட்டி

  படம் சொல்லும் சேதியை பாத்திரங்களின் அமைப்போடு குறிப்பிட்டேன், ஆனால் படத்தில் கதை பதிவில் இடம்பெறவில்லை.

  அப்பா நூலை கண்டிப்பாக வாங்கிப்படியுங்கள்

 5. ஆயில்யன் said…

  தொழில் நுட்ப படிப்பு படித்து முடித்து வெளிவந்த காலகட்டத்தில் படித்தவைகளை பிராக்டிகலாக்கி பார்க்க வாய்ப்புக்கள் மிகக்குறைவு என்ற ரீதியில் நான் இழந்தவைகளும் சில உண்டு! //

  தொழில் நுட்பப் படிப்புக்களுக்கான களமும் நாட்டமும் குறைவாக இருப்பதோடு அதற்கான தொழில்தொழில்முனைப்பும் நம் நாடுகளில் அதிகம் இல்லை என்பதும் ஒரு குறை

 6. NIZAMUDEEN said…

  எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய,
  "அப்பா" என்கிற நூலைப்
  படிப்பதற்காகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.//

  வாங்க நிஜாம்தீன்

  தேடிக் கிட்டினால் படியுங்கள், அருமையான படைப்பு

 7. தல..எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க துண்டும் படம்..படத்தின் செய்தி அதை படைத்தவிதம் 😉

  உங்க விமர்சனமும் அதே போல தான் இருக்கு தல 😉

 8. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது. ஆனால் செயல்ரீதியான திறமை எவ்ளோ இருந்தாலும் பேப்பரில் இருக்கும் பட்டத்திற்குபட்டயத்திற்கு தான் இன்று மதிப்பு தருகின்றார்கள்..

  இதனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் என்ற முறையில்..

 9. வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி சுரேஷ் கண்ணன்

 10. ஜி.டி.நாயுடு ஒரு ப்ளேட் கண்டுபிடிச்சாராம். அது மழுங்கவே மழுங்காதாம். ஆனா எந்த கம்பெனியும் அதை வாங்க தயாரா இல்லை. ஒரு தரம் வாங்கினா அப்பறம் யாருமே வாங்கமாட்டாங்களே.
  ஜி.டி.நாயுடு பேரை 3 இடியட்ஸ் தமிழாக்கத்தில் வைப்பார்களேயானால் நன்றாக இருக்கும்.

 11. கோபிநாத் said…

  தல..எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க துண்டும் படம்//

  உண்மை தான் தல, இவ்வளவு நாள் ஒரு விமர்சனம் கூட வாசிக்காமல் விரதம் இருந்தேன் 😉

 12. தமிழ் பிரியன் said…

  ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது. ஆனால் செயல்ரீதியான திறமை எவ்ளோ இருந்தாலும் பேப்பரில் இருக்கும் பட்டத்திற்குபட்டயத்திற்கு தான் இன்று மதிப்பு தருகின்றார்கள்.. //

  நிதர்சனம் அதுதான் என்பது வேதனை

  சின்ன அம்மிணி said…

  ஜி.டி.நாயுடு ஒரு ப்ளேட் கண்டுபிடிச்சாராம். அது மழுங்கவே மழுங்காதாம். ஆனா எந்த கம்பெனியும் அதை வாங்க தயாரா இல்லை. ஒரு தரம் வாங்கினா அப்பறம் யாருமே வாங்கமாட்டாங்களே. //

  சின்ன அம்மணி

  நீங்கள் சொன்ன தகவலை நானும் படித்த ஞாபகம், ஆனா ஜி.டி.நாயுடுவையே மறந்துவிட்டதே உலகம்

  சென்ஷி said…

  :))

  நல்லா எழுதியிருக்கீங்க தல.. அப்பா புத்தகம் விரைவில் வாங்கிடறேன்.//

  நன்றி தல 😉

 13. நல்ல பதிவு பிரபா. பார்த்து பார்த்து அற்புதமாக செதுக்கி இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள். "அப்பா" வை நானும் தேடிக்கொண்டு இருக்கின்றேன். எப்படியும் படித்து விட வேணும்.
  அன்புடன் மங்கை

 14. // இந்திய சினிமாவின் செழுமையான சினிமாக்களின் பட்டியலில் தவிர்க்கமுடியாத படங்களாக Lagaan, Rang De Basanti, Taare Zameen Par இந்த மூன்று படங்களோடு இப்போது 3 Idiots படமும் சேர்ந்து கொள்ளும். //
  lagaanஐ சேர்தது ஏற்றபாடு இல்லை. லகான் ஒரு சராசரி இந்திய படமே.

 15. இதற்கு மறுபக்கமும் உண்டு. கரும்பலகையில் காட்டியமாதிரி உள்ள சமன்பாடுகளை மிக்க விருப்பத்தோடு, காதலோடு தேடித் தேடிப் படித்த என் போன்றவர்களும் உண்டு! நீங்கள் ஒரேயடியாக நம் படிப்பு முறையை வாருவது கவலையைத் தருகிறது 🙁

 16. வருகைக்கு நன்றி மங்கை அக்கா

  வெண்காட்டான்

  உங்கள் கருத்துக்கு நன்றி

  பாரதி

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

  சக்திவேல்

  நான் பாடங்களை விருப்போடு படித்ததைக் குறித்து விமர்சனம் எதனையும் முன் வைக்கவில்லை, எமது பாடத்திட்டத்தில் செயல்முறை அறிவை அதிகம் புகட்டாததைத் தான் சொல்லியிருக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *