வெந்த மண்ணில் என்ன விடுப்பு?

பதுளை, வெலிமட, மஹாநுவர,
தம்புல்ல, குருநாகல, வியங்கொட,
பொலன்னறுவ, கடவத்த, கெக்கிறாவ,
குளியாப்பிட்டிய, கொஹ_வல, றம்புக்கன

வழித்தடம் மாறிய வண்டிகள் எங்கும்
பழிகிடக்கின்றன ‘யாப்பன’ பார்க்க!

நகரத்துத் தெருக்களிலும்
நாகவிகாரை முன்னும்
நல்லூரான் வீதி தொட்டு
நாவாந்துறை வரையும்
வண்ண வண்ண வண்டி அணி
வந்து நிக்குது
கண்ணிரண்டும் கண்டு கண்டு
வலி எடுக்குது!

கொய்த கனிகளொடு
கொய்யாக் கனிவகையுமு;
வேர்க்கடலை, சோளம்,
விறகு, பலகை, முகம் –
பார்க்கும் கண்ணாடி,
பற்றறி, மின்சாதனங்கள்
பிளாஸ்ரிக்கில் பூவும்,
பிரமிக்கும் பாத்திரங்கள்
கண்டகண் மற்றொன்றும் காண முடியாது –
திண்டாட, யாழ்ப்பாணத்
தெருநீளம் கடை விரித்தீர்!
தெருவோரம் மரநிழலில்
தண்டிறங்கிச் சமைக்கின்றீர்
வருவோரை வரவேற்று
வரலாறு படைத்தவர் நாம்!
யாழ்ப்பாணத்தான் செல்வம்
யார் யாரோ கொள்ளையிட்டார்
நீர்வாரிப் போனாலும்
நின்று பிடிக்க வல்லான்!

தலையைக் கவிழ்த்தபடி
தாம் தொலைத்த வாழ்க்கையினை
தேடுகிறார் தமிழர்கள்!
தென்னிலங்கைச் சோதரர்காள்,
இந்த மயானத்தில்
என்னத்தைத் தேடுகிறீர்?
வெந்த மண்ணில் என்ன விடுப்பு?

– கவிஞர் சோ.பத்மநாதன் (சோ.ப)

நன்றி : இருக்கிறம் சஞ்சிகை

5 thoughts on “வெந்த மண்ணில் என்ன விடுப்பு?”

  1. இருக்கிறம் ஆரம்பித்த எனது தாய் மாமன் மகன் மனோரஞ்சன் இன்று எம்முடன் இல்லை. ஆனால் அவரின் ”இருக்கிறம்” இருக்கிறது. தரமானதோர் படைப்பு.

  2. நிகழ்கால வாழ்க்கையினைப் பிரதிபலிக்கும் கவிதை. பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.

Leave a Reply to S Sakthivel Cancel reply

Your email address will not be published. Required fields are marked *