16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை – யாழ்தேவி ரயில் பிடிக்க

ஏப்ரல் 10 ஆம் திகதி, வருஷம் 2015 காலை 6.15

வாடகைக் கார் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் பவ்யமாக வந்து நின்றது. கார் ஓய்ந்த வேகத்தில் குட்டித்தூக்கத்தில் இருந்த பிரசாத் விழித்துக் கொண்டான். கூடவே வந்த தம்பிராசா கார் எப்படா நிற்கும் என்று ஏங்கியிருந்தவன் போல அவுக்கென்று கார்க்கதவைத் திறந்து வெளியில் வந்து தன் கோடுபோட்ட கிப்ஸ் மார்க் சாரத்தை இரண்டுபக்கமும் துலாவிவிட்டுக் இடுப்பில் நிறுத்தினான். முன் சீட்டில் இருந்த பிரசாத்தும் மெல்ல எழும்பி வெளியே வந்து இரண்டு கைகளையும் மேலே நோக்கி உயர்த்தி ஒரு குறும் உடற்பயிற்சி செய்து அலுப்பை நீக்கி விட்டு தம்பிராசாவைப் பார்த்துச் சிரித்தான்.

“தம்பி! நீங்கள் இங்கேயே நில்லுங்கோ, நான் போய் ரிக்கட் எடுத்திட்டு வாறன்” பிரசாத்தின் பதிலுக்குக் காத்திரமால் கோட்டை புகையிரத நிலைய ரிக்கட் கவுண்டரை நோக்கிப் பாய்ந்தான்.
வாடகைக்கார்க்காரருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஒரு ஓரமாக பேவ்மன்ற் பக்கமாக நின்றான் பிரசாத்.

“தம்பி! சொல்லு வழி கேட்டுப்பழகு மோனை, அந்த நாளையை மாதிரி இல்லை இப்ப உலகம், நீயும் 20 வருஷமா பிடிவாதமா ஊருக்கு வாராமல் இருந்து விட்டு இப்ப வாறாய், கட்டுநாயககாவிலை பிளேன் எடுத்தா அடுத்த இருபது நிமிஷத்திலை பலாலியிலை நிப்பாய், உனக்கேன் இந்தக் றெயில் பயணமெல்லாம்?” யாழ்ப்பாணத்தில் இருந்து பிரசாத்தின் தாய் தங்கம்மா முதல் நாள் வரை தொலைபேசியில் இறைஞ்சியும் கேட்டால் தானே.

“அம்மா! கனகாலத்துக்குப் பிறகு வாறன், யாழ்தேவி எப்பிடி இருக்குதெண்டும் பார்க்காவேண்டாமோணை?”

ஒருமாதிரி தன் பிடிவாதத்தைக் காட்டி இன்று அதைச் சாதித்தும் காட்டும் முனைப்பில் கோட்டைப் புகையிரத நிலையம் முன் நிற்கிறான் இவன். தம்பிராசா ரிக்கட் எடுத்து வருவது தெரிகிறது.

“தம்பிராசா! இந்தப் பத்து நாளும் திக்குத் தெரியாமல் மாறியிருக்கிற கொழும்பிலை நீயும் இல்லையெண்டா என்பாடு கஷ்டமாயிருந்திருக்கும்” தன் நன்றியறிதலை காட்டும் தருணமிது என்று பிரசாத் ஆரம்பித்தான்.

“சும்மா போங்கோ அண்ணை, இதெல்லாம் என்ன பெரிய உதவியோ, உங்கட அப்பா எவ்வளவு தங்கமானவர், சுறுட்டுக் கொட்டிலுக்குள்ள இருந்த என்னை கொழும்பு காண வச்சு இப்ப நான் பேர் சொல்லுறது மாதிரி இருக்க அவர் தானே காரணம்” தம்பிராசா சாகும் வரைக்கும் கடன் கழிப்பான் போல.

பிரசாத்தின் தகப்பன் கனகசபை தமிழ் வாத்தியாராக இருந்தவர், கூடவே தோட்டவேலையும். வெள்ளன நாலு மணிக்கே தோட்டப்பக்கம் போய் இறைப்பு முடிச்சு பிறகு வீடு வந்து தாவடிப்பள்ளிக்கூடம் போய் பிறகு பின்னேரம் பள்ளிக்கூடம் முடிச்சதுக்குப் பிறகு மீண்டும் தோட்டத்தை எட்டி ஒருக்கால் பார்த்து விட்டு இணுவில் கந்தசுவாமி கோயிலுக்குப் போய் அங்கே இருக்கிற மடத்தடியில் இருந்து உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியலைப் பேசிவிட்டு இரவு ஒன்பது மணிச் செய்தியைக் கேட்டு விட்டுப் படுக்கைக்குப் போகும் சுழற்சி முறை வாழ்க்கையைக் கொண்டவர்.

“உந்தப் பொயிலையால (புகையிலை) என்ன கோதாரி லாபம் கிடைக்குது, உணர்த்திப் போட்ட பொயிலை எல்ல்லாம் பிறகு நாட்கணக்கில் கிடந்து இழுபடும், முந்தியெண்டா சிங்கள நாட்டுக்கும்
போகும், இப்ப தண்டவாளமே இல்லாம சல்லிக்கல்லு குவிஞ்சிருக்கு, உது உங்களுக்குத் தேவையோ?” பிரசாத்தின் தாய் என்னதான் சொன்னாலும் அவர் கேட்டால் தானே.

“இஞ்சை பாரப்பா! என்ர அப்புவின்ர காலத்திலை இருந்து செய்யிற தோட்டம், பணத்தை நம்பியே நான் செய்யிறனான்? தோட்டத்துக்குள்ளை இறங்காட்டி எனக்கு சீவன் போனது மாதிரி” பிடி கொடாமல் கனகசபையர் கதைப்பார்.

இனிமேல் பணப்பயிர்களை உற்பத்தி செய்வதை நிறுத்தி சீவனோபாய உற்பத்தியை பெருக்க வேணும் என்று விடுதலைப்புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் தமீழீழமெங்கும் சொன்ன காலத்திலை மட்டும் பக்கத்திலை இருந்த மாமியாட்களின் காணியிலை தக்காளி போட்டு காலம் தள்ளினார். இதெல்லாம் தொண்ணூறாம் ஆண்டுகளிலை.

கனகசபையரோடு தோட்டத்தில் கூட மாட வேலை செய்து , இறைப்புக்கு வந்து, புகையிலை வேளாண்மை முடிந்து கோடா போடும் வரை துணையாய் இருந்தவன் மாரிமுத்து. மாரிமுத்தன் தான் உவரின்ர பி.ஏ என்று பிரசாத்தின் அம்மா கிண்டலடிப்பார். மாரிமுத்துவின் மகன் தான் இந்த தம்பிராசா. அதிகம் படிக்காத தம்பிராசா சுருட்டுக் கொட்டிலுக்குள் தான் வாழ்க்கையைத் தேடப்போனான். ஆனால் கனகசபையர் தன்னுடைய சொந்தக்காரரின் வெள்ளவத்தைக் கடைக்கு அவனை அனுப்பி வைத்தார். படிக்காக விட்டாலும் தம்பிராசா நல்ல விசயகாரன் பத்து வருசத்துக்குள்ளை பம்பலப்பிட்டியில் ஒரு சின்ன பலசரக்குக் கடை போடுமளவுக்கு முதலாளி ஆகி விட்டான்.

பிரசாத் இருபது வருஷங்கள் கழித்து நாட்டுக்கு வருகின்றான் என்று அறிந்த நாள் முதல் அவனுக்கு தேவையான தங்குமிட வசதியெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்ததோடு தேவை ஏற்படும் போதெல்லாம் பிரசாத்தோடு ஒட்டிக்கொண்டு இடங்களைக் காட்டவும் போய்த் திரிந்தான். இந்த இருபது வருஷங்களில் கொழும்பு அடியோடு மாறி விட்டது. ஏதோ ஒரு வீறாப்பிலை இருந்திட்டன் என்று நினைத்துக் கொண்டான் பிரசாத்.

“யாழ்ப்பாணம் போவதற்கான ரயில் தயாராகி விட்டது” சிங்களத்தைத் தொடர்ந்து தமிழில் அறிவிப்பு கேட்டது. யாழ்தேவியை காணும் போது சொந்தக்காரரைக் காணும் சந்தோஷம். தாவி ஏறினான் பிரசாத். கூடவே தம்பிராசா பெட்டிகளோடு. இரண்டாம் வகுப்புப் பெட்டியில் யன்னல் ஓரமாக இடம் பிடித்துக் கொண்டான்.
“சரியண்ணை, அப்ப நான் வரப்போறன், சுகமாப் போட்டு வாங்கோ” தம்பிராசா பிரசாத்தின் கைகளை இறுகப்பற்றி விடை கொடுத்தான்.

சித்திரை வருஷப்பிறப்புக்கு ஊருக்குப் போற கூட்டம் பெரிதாக வரும் என்று நினைத்தான் பிரசாத். ஆனால் இப்பதானே சொகுசு பஸ், பிளேன் என்று இருப்பதால் சனத்துக்கு நிறைய சொய்ஸ், என்று முன்னால் இருந்த வெறும் சீட் ஒன்றைப் பார்த்து முணுமுணுத்தான்.

வவுனியா பல்கலைக் கல்லூரியில் கொஞ்சக் காலம் படித்த காலத்தில் வெள்ளி இரவு யாழ்தேவி எடுத்து வந்து கொழும்பில் சீமா (CIMA) கிளாசுக்கு சனிக்கிழமை போய் விட்டு பிறகு ஞாயிறு கொன்கோர்ட், ஈரோஸ் பக்கம் படம் பார்க்க ஒதுங்கி விட்டு பிறகு மீண்டும் வவுனியாவுக்கு ரயில் எடுத்த காலம் நினைவில் வந்து மோதியது. யாழ்தேவியின் டீசல் கலந்த ஒரு நச்சு மணமே பெர்பியூம் போல நாசிக்குள் நிறைந்திருந்தது.

தன் முதுகில் சுமந்து உப்பு மூட்டை காவுவது போல மெல்ல மெல்ல யாழ்தேவி தாள லயத்தோடு பயணிக்க ஆரம்பித்தாள். யன்னல் பக்கமாக குவிய வைத்த பிரசாத்தின் முகத்தை குப்பென்று காற்று அடித்து விட்டுப் போனது.

“இதயம் படத்திலை வாற முரளி மாதிரித் தான் இவர் யாழ் தேவியில போனா கற்பனை லோகத்துக்குப் போயிடுவார்” பிரசாத்தைப் பார்த்து கிண்டலடித்த வாசன் பக்கத்தில் இருப்பது போலப் பிரமை. அவனும் இவனோடு கூடவே சீமா கிளாசுக்கு கொழும்புக்கு வாற கூட்டாளி. கடைசியாக எப்ப நான் அவனைப் பார்த்தேன்.

“மச்சான்! நான் ஊருக்குப் போறன், வவுனியா வளாகத்திலை இருந்து படிச்சு ஒரு சாதாரணனா வெளியில வாற்தை விட நாட்டுக்காகப் போராடப் போறன், எங்கட சனத்துக்கு விடிவு வேணுமடா” அந்தக் கடைசி இரவில் குருமன் காட்டில் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து அந்த இரவில் பேசியது தான் வாசனோடு இருந்த கடைசி நாள்.

9 thoughts on “16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை – யாழ்தேவி ரயில் பிடிக்க”

 1. ரயில் பயண விவரிப்பு ஏனோ என் கல்லூரி கால ரயில் பயணங்களை லேசாக கிளறிவிட்டது!

  பாஸ் ஹீரோயின் எப்ப எண்ட்ரீ போடுவாங்க! வண்டி மெல்ல ஓட்டம் எடுக்கும்போது விஜய்காந்து மாதிரி ஓடி வந்து ஏறுவாங்களா?

 2. //கொழும்பில் சீமா (CIMA) கிளாசுக்கு சனிக்கிழமை போய் விட்டு பிறகு ஞாயிறு கொன்கோர்ட், ஈரோஸ் பக்கம் படம் பார்க்க ஒதுங்கி விட்டு பிறகு மீண்டும் வவுனியாவுக்கு ரயில் எடுத்த காலம் நினைவில் வந்து மோதியது.//

  சினிமா அறிவுப் பெருங்களஞ்சியத்தின் ஆரம்பம் இப்படித்தானா!!! இப்ப விளங்குது.

 3. மிக நல்ல துவக்கம்… மனசுக்குள் யாழ்தேவி ஓடிக்கொண்டிருக்கிறது.

 4. வருகைக்கு நன்றி ஆயில்ஸ்

  ஹீரோயின்ஸ் வர வேண்டிய நேரத்தில வந்தே தீருவாங்க 😉

  மழை

  என்ன இப்பிடிச் சொல்லிப் போட்டியள் 😉

 5. யாழ்தேவி பயணம்…ஒருமுறை கிடைத்தது. முன்னர் வெள்ளிக்கிழமை யாழ்தேவி கொழும்பில் இருந்து வெளிக்கிட்டால் கொழும்பு படுத்திடும் என்டு சொல்லுறவையள். அவ்வளவு சனம் கிளம்புமாம். ம்ம்ம்ம்…! தொடரட்டும்…!இன்னும் சூடு பிடிக்கல போல கதையில…!!!

 6. தல கோபி, ஐஎஸ்ஆர், சின்ன அம்மிணி மற்றும் கதியால்

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *