கே.எஸ்.பாலச்சந்திரனின் “கரையைத் தேடும் கட்டுமரங்கள்”

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த கலைஞர். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் இவர் புலம்பெயர்ந்த மண்ணிலும் தன் கலைச் சேவையை ஆற்றி வருகின்றார். இவர் நடிப்புத் துறையில் மட்டுமன்றி எழுத்துலகிலும் தன் தடத்தைப் பதித்திருக்கின்றார் என்பது பலரும் அறியாததொன்று. குறிப்பாக வடலி வெளியீடாக இவரது “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி கனடாவின் Agincourt Community Centre இல் மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படுகின்றது. அதனையொட்டி திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “ஈழத்து முற்றம்” நிகழ்ச்சிக்காக அவரை நான் வானலையில் சந்தித்த பேட்டியை இங்கே தருகின்றேன்.

ஒலி வடிவில்

வணக்கம் திரு.கே.எஸ்.பாலசந்திரன் அவர்களே

வணக்கம்

ஆரம்பத்திலே தனிநடிப்புத் துறை, பின்னர் வானொலி தொலைக்காட்சி நடிகர் அத்தோடு ஈழத்து திரைப்பட நடிகர் என்று பல முகங்களிலே உங்களுடைய நடிப்புத்திறனை ஒரு கலைஞராக நீங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். இவற்றைத் தவிர எழுத்துத்துறையிலே ஆரம்பகாலத்தில் இருந்து உங்களுடைய முயற்சிகள் எப்படி இருந்தன என்பது பற்றிச் சொல்லுங்களேன்.

நான் இளைஞனாக இருந்தபோது ஆரம்பத்தில் சிரித்திரன் சஞ்சிகையிலே சிரிப்புக்கதைகள் அதைச் “சிரி கதைகள்” என்று சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் சொல்லுவார், அப்படிச் சிரிகதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். அதன் பிறகு சிறுகதைகளை அவ்வப்போது இலங்கையின் பிரபல தினசரிகளின் வாரப்பதிப்புக்களிலே எழுதியிருக்கிறேன்.

இவற்றை விட எழுத்துத்துறை என்று சொன்னால் இலங்கை வானொலியில் எனது நகைச்சுவை நாடகங்களும் அதே போல சமூக நாடகங்களும் குணசித்திர பாத்திரங்கள் நிரம்பிய சோகமயமான நாடகங்கள் கூட ஒலிபரப்பாகியிருக்கின்றன. அவற்றை நான் எழுதியிருக்கிறேன். “கிராமத்துக் கனவுகள்” என்பற தொடர் நாடகம் அவற்றுள் ஒன்று.

கிராமத்துக் கனவுகள் போன்ற நாடகப் பிரதிகள் போன்றவற்றையும், சிரிகதைகளையும் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். இவற்றை சிரித்திரன் தவிர்ந்த மற்றைய பத்திரிகைகள் மூலமாக வந்திருக்கும் உங்கள் எழுத்தாக்கங்கள் பற்றி?

நான் எழுதிய சிறுகதைகள் “மலர் மணாளன்” என்ற எனது புனைபெயரிலே வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளிலே வந்திருக்கின்றன. அவற்றை விட நிறைய கலை சம்பந்தமான கட்டுரைகளை இலங்கையின் தினசரிகளான தினபதி, தினகரன், வீரகேசரி போன்றவற்றின் வாரப்பதிப்புகளிலே நிறையக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன்.

ஆரம்பகாலகட்டத்திலே ஈழத்து சினிமாவின் ஒரு மைல் கல் அல்லது ஒரு மகுடமாகத் திகழ்கின்ற திரைப்படமான “வாடைக்காற்று” என்ற ஒரு திரைப்படத்திலே ஒரு அருமையான பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தீர்கள். இப்பொழுது உங்களின் ஒரு புதிய முயற்சியாக “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற கிட்டத்தட்ட வாடைக்காற்று நாவல் போன்ற கடலோரத்து வாழ்வியலைப் பிரதிபலிக்கக் கூடிய நாவல் ஒன்றை உருவாக்கியிருக்கின்றீர்கள்.
உங்களின் இந்த “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நாவல் பற்றிச் சொல்லுங்களேன்.

“கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற இந்த நாவல் நீங்கள் குறிப்பிட்டதைப் போன்று கடலோடிகளின் கதை சொல்லும் ஒரு நாவல். எனக்கு எப்பொழுதுமே இந்தக் கடலோடிகள் மீது மிகுந்த பற்று, விருப்பம் இருக்கிறது. காரணம் இந்த நாவலின் என்னுரையிலேயே நான் குறிப்பிட்டிருக்கின்றேன். கடலில் தினமும் அலைகளோடு ஜீவமரணப் போராட்டம் நடாத்தி மீளும் அல்லது தோற்றுப் போகும் சமூகத்திடம் எனக்குள்ள நியாமான மதிப்பும், இரக்கமும் தான் இந்த நாவலை எழுதத் தூண்டியிருக்கின்றது என்று.

நீங்கள் குறிப்பிட்ட இந்த வாடைக்காற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுது அந்தத் திரைப்படத்திலே நடித்த நடிகர், உதவி இயக்குனர் என்ற வகையிலே அங்குள்ள அந்த மக்களின் வாழ்வியலை அன்றாட வாழ்க்கையை அவதானித்து என் மனதில் புடம் போட்டு அதன் அடிப்படையிலே எழுதியது தான் இந்த நாவல்.

அப்படியென்றால் “வாடைக்காற்று” காலத்தில் இருந்தே இந்த நாவல் குறித்த கரு உங்கள் அடிமனதிலே தங்கியிருக்கின்றது, அப்படித்தானே?

ஆமாம், அந்தக் களம் வேறு. நான் பாவித்த இந்த நாவலுக்கான கதைக்களம் வேறென்றாலும் கூட அந்தக் கருவை நான் நீங்கள் சொன்னது போல வாடைக்காற்றுத் திரைப்படக் காலத்தின் போது தான் நான் மனதில் உருவகித்து காலம் செல்ல விரிவு படுத்தி 306 பக்கங்கள் உள்ள ஒரு நாவலாக எழுதினேன்.

அப்படியென்றால் 33 ஆண்டுகளுக்குப் பின்னால் இந்த நாவலின் கரு இப்போது நூல் வடிவிலே பிரசவமாகியிருக்கின்றது. இந்த வேளை “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற நாவலை எழுதி நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த போது பதிப்பாக்கம் என்ற வகையிலே நீங்கள் எடுத்த முயற்சி பற்றி விளக்கமாகச் சொல்லுங்களேன்.

உண்மையில் இந்த நாவலை நூல் வடிவில் காணவேண்டுமென்ற ஆசை நீங்கள் சொன்னது போல நீண்ட காலமாக இருந்தது. இந்தக் கதையின் பின்னணி ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முந்திய காலப்பகுதி. இதை நூல்வடிவிலே கொண்டு வருவதற்காக நான் பல பதிப்பகங்களைத் தொடர்பு கொண்டேன். ஏதோ பிற காரணிகளினால் அது தடைப்பட்டுப் போன பின்னர் நீங்கள் எழுதிய கம்போடியப் பயணம் பற்றிய “கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி” என்ற அந்த நூலை வெளியிட்ட வடலி பதிப்பகம் இதற்குப் பொருத்தமானவர்கள் என்று நீங்கள் வழிகாட்டி விட அதையொட்டித்தான் நான் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.

மிகுந்த ஆர்வமுள்ள இளைஞர்கள், வடலிப்பதிப்பகத்தைச் சார்ந்த அகிலன் அவர் ஒரு படைப்பாளி, கவிஞர், சிறுகதை எழுத்தாளர். அதே போன்று சயந்தன், இருவரும் இணைந்து மிகவும் உற்சாகமாக எனது நாவலை வெளியிடுவதற்கு உதவி புரிந்தார்கள். மிகவும் சிரமப்பட்டார்கள். உங்களுக்குத் தெரியும் 306 பக்கமான ஒரு நாவல் பிரதியை வெளியிடும் போது அதில் பல தவறுகள், எழுத்துப் பிழைகள் எழலாம். அவற்றை எல்லாம் திருத்துவதற்கு அவர்கள் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்குமாக நாங்கள் ஈ மெயில் மூலமாக எத்தனையோ பிழைகளைக் கண்டு திருத்தி பிழைகளற்ற ஒரு நாவலாக வெளியிடுவதற்கு அவர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். அந்த வடலிப்பதிப்பகம் நம்மவர்கள் சார்ந்த பதிப்பகம் என்ற வகையிலே எமது படைப்புக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றவர்களாகவும், எமது படைப்பாளிகளை மதிக்கின்றவர்களாகவும் நான் அவதானித்தேன். அந்த வகையிலே அந்தப் பதிப்பகம் பக்கம் கைகாட்டி விட்ட உங்களுக்கு என் தனிப்பட்ட நன்றியும். இந்த நாவலை நான் நூல் வடிவில் கொண்டு வருவதற்கு என்னை விட அவர்கள் அதிகம் சிரமப்பட்டார்கள்.


பொதுவாக ஒரு நாவலுடைய முழுத்தோற்றத்தையும் பிரதிபலிக்கக்கூடியது அதன் அட்டைப்படம், அப்படியானதொரு அட்டைப்படத்தை நீங்கள் அமைக்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்த பொழுது எந்த ஓவியர் இந்த நாவலுக்கு பொருத்தமானவர் என்று நினைத்தீர்கள்?

சயந்தன் ஏற்கனவே ஒரு இணையத்தளத்திலே குறிப்பிட்டிருந்தார். அதாவது ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முந்திய ஒரு கதை, கதைக்களம் எங்கள் யாழ்ப்பாண மண். இவற்றுக்குப் பொருத்தமான ஒரு ஓவியர் ஏறக்குறைய அந்தக் காலகட்டத்திலே வாழ்ந்த, அப்படியான நாவல்களுக்கு அட்டைப்படம் வரைந்த ஓவியராக இருக்கவேண்டும். ஏனென்றால் எங்கள் மண்ணின் முகங்களை அவர் சிறப்பாக வரைந்து தருவார் என்ற நம்பிக்கையை சயந்தனும் எனக்குத் தந்தார். எனவே தான் நான் இந்திய ஓவியர்களைப் பயன்படுத்தியிருக்கலாம், அது
சுலபமான காரியமாக முடிந்திருக்கும். இருந்தாலும் கூட இந்த நாவலுக்கு குறிப்பாக எங்கள் மண்ணின் ஓவியர் ஒருவர் வரைவதுதான் பொருத்தமாக இருக்கும் என நினைத்து, எனக்கு நண்பராக ஒரு காலத்திலே இருந்த, தொடர்பு அற்றுப் போய் விட்ட சிறந்த ஓவியர் ரமணி அவர்களைத் தொலைபேசி மூலம் அழைத்து இப்படியான ஒரு நாவலுக்கு நீங்கள் தான் அட்டைப்படம் வரைய வேண்டும் என்று கேட்டு, இந்த நாவலின் கதையை அவருக்கு அனுப்பி வைத்து அதைக் கொண்டு அவர் இந்த நாவலுக்கான சிறப்பான ஓவியத்தை
வரைந்து தந்தார். உண்மையிலேயே யாழ்ப்பாணம் ரமணி அவர்களுடைய ஓவியம் இந்த நாவலுக்கு அணி சேர்க்கும் சிறப்பாக நான் அதைக் கருதுகிறேன்.

நிச்சயமாக இந்த “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நாவலின் அறிமுகம் இணையத்தளங்களிலே வெளியிடப்பட்ட போது இந்த அட்டைப்படத்தைப் பார்க்கக் கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது. உண்மையிலேயே புலம்பெயர்ந்த எமது படைப்பாளிகள் தமது எழுத்துக்களை வெளிக்கொணரும் போது ரமணி போன்ற எமது தாயக மண்ணின் பிரதிபலிப்பைக் காட்டக் கூடிய ஓவியர்களை இதுவரை தேர்ந்தெடுத்ததில்லை என்று தான் என்னுடைய அறிவுக்கு எட்டியவரை எண்ணுகின்றேன். உண்மையிலேயே உங்களுடைய நாவலுக்கு ரமணியின் அட்டைப்படம் சிறப்புச் சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது.

இந்த கரையைத் தேடும் கட்டுமரங்கள் என்ற நாவல் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தைச் சுற்றி நடக்கின்ற கதையா, அல்லது முழுமையான அந்த கடலோர வாழ்வியலைப் பிரதிபலித்து அதிலே வருகின்ற பாத்திரங்கள் எல்லாவற்றுக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றதா?

உண்மையில் இந்தக் கதையில் ஒரு பிரதான பாத்திரம், அவரைச் சுற்றிய சம்பவங்கள் என்று இருந்தாலும் கூட அவர் சார்ந்த மற்றைய பாத்திரங்கள் அனைத்துக்கும் ஏதோ ஒருவகையில் முக்கியத்துவம் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டேன். வழக்கமாக இந்த முரண்பாடுகளை வைத்துத்தான் அனேகமான படைப்புக்கள் வருவதுண்டு. அதாவது பாத்திரங்களுக்கிடையே, உறவுகளுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள், முதலாளி – தொழிலாளி பேதங்கள் இப்படிப் பலவிதமான பிரச்சனைகளைத்தான் ஆதாரமாகக் கொண்டு நாவல்களை அமைப்பதுண்டு. அப்படியில்லாமல் யதார்த்தமாக அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை நான் அப்படியே வழங்க முயற்சித்திருக்கின்றேன். இதில் வில்லன் பாத்திரம் என்று யாரும் இல்லை. ஆனால் எல்லோருமே கதாநாயகர்களாக இருக்கிறார்கள்.

இந்த நாவலுக்கு அணி சேர்க்கும் வகையிலே நாவல் குறித்த விதந்துரையைப் பகிர்ந்தவர் யார் என்று குறிப்பிடுங்களேன்

இந்த நாவலுக்கான முன்னுரையை எழுதியவர் தமிழ் கூறும் நல்லுலககெங்கும் அறியப்பட்ட ஒரு சிறந்த அறிவிப்பாளரும், கலையுலகின் ஒரு சிறப்பான கலைஞனும் என்னுடைய சமகாலக் கலைஞனுமான பி.எச்.அப்துல்ஹமீத் தான் இந்த நாவலுக்கான முன்னுரையை, என்னைப் பற்றிய அறிமுக உரையை இணைத்து வழங்கியிருக்கின்றார்.

நான் அவரை அணுகியதற்குக் காரணம் அவருடைய ரசனை எப்படியென்று எனக்குத் தெரியும். எமது நாடகங்களிலே நாங்கள் நடிக்கும் பொழுது அவர் பல நாடகங்களை இயக்கியிருக்கின்றார். அவரை அறிவிப்பாளராக அறிந்தவர்கள் ஒருபுறமிருக்க அவர் ஒரு நாடகத் தயாரிப்பாளராக, ஒரு பாடலாசிரியராக, இறைதாசன் என்ற பெயரிலே நிறையப் மெல்லிசைப் பாடல்களை எழுதியிருகின்றார். அப்படி அவருக்கு இன்னுமொரு பக்கம் இருக்கிறது. அவருக்குக் கலை மீது மாத்திரமல்ல எழுத்துத்துறையின் மீதும் அக்கறையும், திறனும் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும் என்ற அதே ஆவலுடன் என் கலையுலகத்தைப் பற்றி, என் வாழ்வைப் பற்றி மிகவும் அறிந்த அந்த நண்பரே என் நாவலுக்கும் முன்னுரை எழுத வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதில் தவறில்லை என்று நான் நினைக்கிறேன்.

“கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நாவல் நூல் வெளியீடு குறித்த விபரங்களைத் தாருங்களேன்

என்னுடைய நாவல் கனடாவிலே ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு Agincourt Community Centre என்ற இடத்திலே வெளியிடப்பட இருக்கின்றது. அதைப்போல மற்றைய இடங்களிலே விழா என்ற ரீதியில் நடைபெற முடியாவிடினும் நிச்சயமாக அறிமுகப்படுத்தப்படும், அறிமுக விழாக்களிலே அதுவும் இடம்பெறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. வெளிநாடுகளிலே வாழுகின்ற அன்பர்கள் இந்த நாவலை வடலி பதிப்பகத்தின் இணையத்தளத்தின் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

எமது வாழ்வியலின் பிரதிபலிப்பாக இருக்கும் இந்த நாவல் உலகளாவிய ரீதியிலே பெரும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையோடு நிறைவாக நீங்கள் உங்கள் ரசிகர்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன?

ஒரு நீண்ட காலக் கலை வாழ்க்கையிலே பலவிதமான சந்தோஷங்களை, வெற்றிகளை, தோல்விகளைக் கூட சம்பாதித்திருந்தாலும் அவ்வப்போது ஏதோவொரு நிகழ்வு என் நெஞ்சில் பதியும் வகையிலே சிறப்பாக அமைவதுண்டு. அந்த வகையிலே வானொலி நாடகங்களிலே தணியாத தாகமும், திரைப்படங்களிலே வாடைக்காற்றும், தனி நபர் நடிப்பு என்ற வகையிலே அண்ணை றைற்றும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற வகையிலே வை.ரி.லிங்கம் ஷோவும் இப்படிப் பல வெற்றிகள் என்னை அணுகிய போதும் எழுத்துத் துறையிலே எனக்கு மிகுந்த ஒரு வெற்றியைத் தரக்கூடிய ஒரு படைப்பாக “கரையத் தேடும் கட்டுமரங்கள்” என்ற நாவல் மீது நான் அபரீதமான நம்பிக்கையை வைத்திருக்கிறேன். நிச்சயமாக உலகளாவிய ரீதியில் வாழும் என்னை நேசிக்கும் ரசிகர்கள், எனது இன்னொரு முகத்தைத் தரிசிக்கும் வகையிலே எனது நாவலுக்கும் ஆதரவுக்கரம் நீட்டு அதே வேளை நாவல் பற்றிய விமர்சனங்களை என்னோடு பங்கிட்டுக் கொள்வார்கள். என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களே ! மீண்டும் எமது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் இப்போது உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கின்றோம்

இந்த நேர்காணலை அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் நெஞ்சங்கள் கேட்கும் வகையிலே ஒலிபரப்புச் செய்யும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் என்னை நேர்காணல் செய்த அன்புச் சகோதரன் கானா பிரபாவிற்கும் அனைத்து நேய நெஞ்சங்களுக்கும் எனது அன்பான, பணிவான வணக்கங்களைக் கூறி விடைபெறுகின்றேன்.

9 thoughts on “கே.எஸ்.பாலச்சந்திரனின் “கரையைத் தேடும் கட்டுமரங்கள்””

 1. அருமையான பேட்டி பல தகவல்கள் குவிஞ்சு கிடக்கின்றன. நன்றி பிரபா சார். கோவை ரவி

 2. நலதொரு பேட்டி. பல விஷயங்களையும் அறியத் தந்து..
  கே.எஸ். அவர்களை நேரில் சந்தித்து பேசிய உணர்வு.. அண்ணே ரைட்.. 🙂

  நன்றி பிரபா அண்ணா.

 3. மீண்டுமொரு கானா பிரபாவின் முத்திரைப் பதிவு. நாம் நிறைய அடையாளங்களை இழந்து நிற்கும் இந்தவேளையில் இப்படித்தான் உண்மையாக இப்படியான விடயங்கள்தான் தேவை. நிறைய விடயங்களை அறிந்து கொண்டோம். தொடரட்டும் வாழ்த்துக்கள். திருவாளர். பாலச்சந்திரன் அவர்களும் தொடர்ந்து பல படைப்புகளைத்தந்து வாழ்வாங்கு வாழட்டும்.

 4. நல்லதொரு பேட்டி பலவிடயங்களை அறியக் கிடைத்தது. புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்.

 5. கதியால் said…

  மீண்டுமொரு கானா பிரபாவின் முத்திரைப் பதிவு.//

  மிக்க நன்றி நண்பா

 6. வாழ்த்துக்கள். பிரபா உங்களின் பணி தொடரட்டும். எங்கள் சமுகத்தின் வரலாற்றின் பல பகுதிகள் பிரிந்திருக்கிறது. கே.எஸ். பாலச்சந்திரன் போன்றவர்கள் எமக்குச் சொல்லித்தர வேண்டியது நிறைய இருக்கு..

 7. சந்ரு மற்றும் சோமி

  பதிவினை வாசித்து/கேட்டு கருத்திட்டமைக்கு நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *