கவிஞர் இ.முருகையன் நினைவில்…!

போய் வா என் ஆசானே போய் வா
விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது
போய் வா என் ஆசானே போய் வா

மனம் நெகிழ வழியனுப்பும்
வாழ்வியலின் ஒரு நிகழ்விது
இருபத்தியொரு வருடங்களுக்கு முன்னர்
கல்லறை மேலான காற்றில் என்
நினைவுச் சிதறல்களுக்கு நீ கொடுத்தது தானே
என் பேனாவுக்குக் கிடைத்த முதல் முத்தம்

உனது எழுத்துகளை மட்டுமல்ல
உன்னையும் அதிகம் வாசித்தவன் நான்
நீயும் சோ.பா வும் எங்கள்
“பா”ப்பிள்ளைகளுக்கு
ஏடு தொடக்கியதால் தானே -இன்று
அவற்றுக்கு எழுதப்படிக்கத் தெரிகிறது
போய் வா என் ஆசானே போய் வா

நெருப்பைக் கூடப் பதற்றப்படாமல்
கருக்கிவிடப் பழக்கியவனே போய்
கொள்கைகளை முழங்கிவிட்டு
கொல்லைப்புறத்தால்
கொடுக்கல் வாங்கல்கள்
செய்பவர் மத்தியில்
வாழ்க்கைமுறையால்
கொள்கைகளை வரைந்து
வரைந்து காட்டியவன் நீ

வட்டங்களாய் சதுரங்களாய்
வடிவான முக்கோணங்களாய்
அமைப்புகளெல்லாம் உன்னை
தமக்குள் அடைக்கமுயன்ற போதும- நீயோ
வானத்தை வளைத்து
உனக்கு வேலியாய் வைத்தவன்

மாடும் கயிறுகள் அறுக்கும் என்று – நீ
மனிதர்களுக்குச் சொன்னதால் தானே
எங்கட மண்ணும் விடியலைப்
பார்க்க விருப்பப்பட்டது

சிரேஷ்ட உதவிப்பதிவாளனாய்
பெயருக்குத் தான் நீயிருந்தாய்
உன் பார்வையின் கூர்மையல்லவா
யாழ் பல்கலைக்கழகத்தை
நிர்வாகம் செய்தது

மென்மையாக நீ நடக்கையில்
இராமநாதன் மண்டபத்தின் மரத்தளங்கள்
இசைத்த அந்த மாறாத தாள ஒலி
என் மனசுக்குள் இப்போதும் கேட்கிறது
கலைவாரத்தில் களைகட்டுவது – உன்னைத்
தலையாகக் கொள்ளும் கவியரங்கமும்
விவாதமும் தானே

கணீரென்று காதுகளுக்குள் நீ
இறக்கிவிட்டவை தான்
நித்திரையாய் கிடந்தவரையெல்லாம்
நிமிர்ந்து உட்கார வைத்தது

கூன் விழுந்த மனங்களுக்கு – உன் குரல்
முதுகில் முள்ளந்தண்டிருப்பதை
ஞாபகப்படுத்தும்

மைதானப்புல்லும் மலைவேப்பமரக்கிளையும்
குலை குலையாய்ப் பூக்கும் கொன்றைகளும்
வேப்பம் துளிர்களும் யூக்கலிப்டஸ் இலைகளும்
நிழல் விரித்த வாகைகளும் உன்
நெஞ்சிருந்த அந்த வளவும்

மெளனங்கள் ஓசையாக ஓசைகள் மெனமாக
விடைதருகிறது எனதருமை ஆசானே
நீ போய் வா

உறவுகளுக்கு மட்டுமல்ல ஊருக்கும் உலகுக்கும்
உன்னதமாகிப் போனவனே போய் வா
நீ விசிறியவை ஆயிரமாயிரம் பேனாக்களில் விழுந்து
மகரந்த மணிகளாய் உயிர்க்கின்றன
உனது விரல் நரம்புகள் இன்று
ஏராளம் விரல் நரம்புகளில் அசைகின்றன
போய் வா என் ஆசானே போய் வா

விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது
மனம் நெகிழ வழியனுப்பும்
வாழ்வியலின் ஒரு நிகழ்விது
போய் வா என் ஆசானே போய் வா

ஈழத்தின் மூத்த படைப்பாளி முருகையன் அஞ்சலிப்பகிர்வினை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகத் தயாரித்த போது அவர்தம் மாணவன் கவிஞர் சடாகோபன் வழங்கிய கவிதை அது.

அதன் ஒலிவடிவம் இதோ

ஈழத்தின் குறிப்பிடத்தக்க மூத்தபடைப்பாளி் முருகையன் அவர்கள் நேற்று சனிக்கிழமை 27 யூன் 2009 காலமாகியிருக்கின்றார்.

இவர் குறித்து யாழில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக் குறிப்பில்,
ஈழத்தின் தமிழ் இலக்கியத்துறையில் நாடறிந்த மூத்த கவிஞரும் நாடக எழுத்துருப் படைப்பாளியுமான கலாநிதி இ.முருகையன் தனது 74 வது வயதில் நேற்று கொழும்பில் காலமானார்.

1935 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரியின் கல்வயல் பகுதியில் பிறந்த இவர் சாவகச்சேரி இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். விஞ்ஞானமாணிப் பட்டதாரியான இவர் ஆசிரியர், அரசகரும மொழித் திணைக்கள மொழிபெயர்ப்பாளர், ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர், கல்வித் திணைக்கள கல்விப்பணிப்பாளர் மற்றும் யாழ் பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் ஆகிய அரச பதவிகளை வகித்து ஓய்வு பெற்றவர்.

யாழ் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ கலாநிதிப்பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது. திருமணத்தின் பின்னர் நீர்வேலியில் வசித்து வந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாராவார்.

மாணவனாக இருந்த காலம் முதல் தமிழ் நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு காட்டிச் செயற்பட்டு வந்த இவர் ஒரு தலைசிறந்த கவிஞராகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்.

24 நாடகங்களையும் ஏராளமான கவிதைகளையும் எழுதியுள்ள இவரது நாடகம் மற்றும் கவிதைகளில் சமூகத்து மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களே உள்ளடக்கமாக அமைந்துள்ளன.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பைக் கெளரவிக்கும் முகமாக இலங்கை அரசு 2006 ஆம் ஆண்டுக்கான “சாகித்ய ரத்னா” விருது வழங்கிக் கெளரவித்தது.

கவிதைத்துறையுடன் ஆய்வு இலக்கியம், நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளிலும் ஆழத்தடம்பதித்த முருகையனது “வெறியாட்டு’, “மேற்பூச்சு’, “சங்கடங்கள்’, “உண்மை’ போன்ற நாடக நூல்கள் மிகப் பிரசித்தமானவை. “ஆதிபகவன்’, “வந்துசேர்ந்தன்’, “அது அவர்கள்’, “மாடுகளும் கயிறுகள் அறுக்கும்’, “நாங்கள் மனிதர்’ போன்ற கவிதை நூல்களையும், “இன்றைய உலகில் இலக்கியம்’ எனும் ஆய்வு நூலையும் எழுதிய இவர், மறைந்த கவிஞர் மஹாகவியுடன் இணைந்து “தகனம்’ எனும் காவிய நூலையும் பேராசிரியர் கைலாசபதியுடன் “கவிதைநயம்’ எனும் நூலையும் எழுதியுள்ளார்.

முருகையனது கவிதைகள் போன்று அவர் பங்களிப்புச் செய்த ஏனைய படைப்புகளும் தெளிவும் ஆழமும் மிக்கவைகளாக விளங்கின. அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் ஒரு மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 3 மணிக்கு பொரளை, கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். (ஞாயிறு தினக்குரல்)

000000000000000000000000000000000000000000000000

ஈழத்துப் படைப்பாளி முருகையன் குறித்து அஞ்சலிப்பகிர்வுகளைத் தொகுத்து அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக செய்ய விழைந்த போது அன்னாரின் சக நண்பர்கள் தற்போது அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் தாமதப்படுகின்றது. முதலில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களைத் தொடர்பு கொண்ட போது அவர் வழங்கிய அஞ்சலிப்பகிர்வு இதோ

ஒலியில் கேட்க

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் அஞ்சலிப்பகிர்வு எழுத்து வடிவில்
நண்பர் முருகையன் காலமாகிவிட்டார் என்ற செய்தி இன்று காலை எட்டிற்று. கொழும்பிலே அவர் மகள் வீட்டுக்கு வந்தபோது அவர் காலமாகியிருக்கிறார்.
உண்மையில் பாரதிதாசனுக்குப் பிறகு தமிழ்க் கவிதையுலகுக்கு, ஈழத்தமிழ்க் கவிதையுலகுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமான தமிழ்க் கவிதையுலகுக்கு மஹாகவியின் மறைவும், முருகையன் மறைவும் பாரதூரமான இழப்புக்களாகும்.

முருகையனுடைய கவிதைகளின் சிறப்பு யாதெனில் அவர் உணர்ச்சி நிலைப்பட்ட கவிஞர் அல்லர். நான் அடிக்கடி சொல்வதுண்டு அவர் ஒரு intellectual poet என்று, அதாவது புலமைத்துவ நிலையில் இருந்த ஒரு கவிஞர். அவருடைய கவிதைகளை நீங்கள் வாசித்தால் அது வெறுமனே உணர்ச்சிகளின் வெளிப்பாடாக மாத்திரம் இல்லாமல் ஆழமான சிந்தனைகளைத் தூண்டுகின்ற கவிதைகளாக அவரது பாணி அமைந்திருக்கும்.

“இரண்டாயிரம் ஆண்டு பழைய சுமை எங்களுக்கு” என்ற அவரது கவிதை மிக அற்புதமான கவிதை அது இப்பொழுது எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. முருகையன் முதலிலே விஞ்ஞானப்பட்டதாரியாக இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில் இருந்து புறப்பட்டு சாவகச்சேரி இந்துக்கல்லூரி சென்று ஆசிரியராக இருந்தார். பின்னர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினுடைய பதிப்பாளராக, எடிட்டராக கொழும்புக்கு வந்திருந்தார். அப்போது அவர் பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களைப் பதிப்பிக்கின்ற விடயங்களிலே ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

முருகையனுடைய கவிதைகளின் முழுத் தொகுதியும் இன்னும் வரவில்லை. ஆனால் முருகையனைப் பற்றி நாம் பேசுகின்றபோது மறக்கக் கூடாதது என்னவென்றால் அவருடைய கவிதை நாடகங்களாகும். வந்து சேர்ந்தன, தரிசனம் போன்றவை மிக அற்புதமான கவிதை நாடகங்கள். துரதிஷ்டவசமாக அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர அவை எல்லாமே இன்னும் வெளிவரவில்லை. அது எங்களுக்குப் பெரிய நட்டம் என்றே நான் கருதுகின்றேன்.

முருகையனிடம் இருந்த பண்புகளில் ஒன்று விடயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவார். தனக்குத் தான் தெரியும் என்று அடித்து ஒருகாலமும் சொல்ல மாட்டார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலே கைலாசபதியும் இவரும் நண்பர்களாக இருந்தார்கள். கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு வந்தபோதுதான் என்னை அவருக்கு தெரிந்தது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பதிப்பாளர் பதவிக்கு இவர் வந்தபோது அப்போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினுடைய 1967 ஆம் ஆண்டு விழாவை நடத்துகிறோம், அந்த விழாவிலே கவிதை நாடகத்தைப் போடவேண்டும் என்று முருகையனைக் கேட்டபோது “குற்றம் குற்றமே” என்னும் நக்கீரன் விவாதத்தையொட்டிய நாடகத்தை எழுதியிருந்தார். முருகையன் அவர்களது உடல்நிலைச் சீர்கேடு காரணமாக அவர் அண்மைக்காலத்தில் அதிகம் எழுதவில்லை. அவரின் தொகுதிகள் கூட இன்னும் வெளிவரவில்லை. இது தமிழுக்குப் பெரும் நஷ்டம் என்பேன். முருகையனுடைய நண்பர்கள் அவரது கவிதைகள் எல்லாவற்றையும் தொகுத்து “முருகையன் கவிதைகள் என்ற தொகுப்பாகக் கொண்டுவர வேண்டுமென்பது என் விருப்பம். அது முடியுமானால் அந்த முருகையன் கவிதைகள் தொகுப்பு இந்தியாவிலும் வெளிவர வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் வெளிவருகின்ற போது தான் பாரதிதாசனுக்குப் பிறகு intellectual poet ஆக இருந்த ஒரு முக்கியமான கவிஞர் இழப்பு தெரியவரும். இது என் காலத்தில் வரவேண்டும் என்பது என் அவாக்களிலே ஒன்று.
00000000000000000000000000000000000000000000000000

மானிடம் மேம்பட வேண்டும் என்ற உறுதியுடன் பாடிய மாபெரும் கவிஞர் அமரர் முருகையன்
ஞாயிறு தினக்குரலில் அனுதாபச் செய்தியில் பேராசிரியர் தில்லைநாதன்

“அவலங்களும் அழுக்குகளும் மேடு பள்ளங்களும் சுரண்டலும் ஒழிந்து மானிடம் மேம்பட வேண்டும் என்ற உறுதியுடன் பாடிய ஒரு மாபெரும் கவிஞர் அமரர் முருகையன் ‘ என பேராசிரியர் எஸ். தில்லைநாதன் தெரிவித்துள்ளார்.

கவிஞர் முருகையனின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

கவிஞர் முருகையன் உண்மையிலேயே உயர்ந்த, பரந்த பார்வை கொண்டவராக திகழ்ந்தார்.

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னா சொல் போன்றவற்றை அவரிடம் நான் என்றுமே கண்டதில்லை.

உள்ளத்தில் உண்மை ஒளி பெற்றிருந்ததால் அவரது வாக்கு ஒளி பாய்ச்சுவதாக இருந்தது. வசன நடையிலும் அவர் பல கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

அவரது நாடகங்களும் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளும் மொழி பெயர்ப்பு பற்றிய நூல்களும் பெறுமதி மிக்கவை. அவரது நடையில் காணப்பட்ட தெளிவும், செறிவும், தர்க்க ரீதியான ஒழுங்கும் இலேசில் கைவிடத்தக்கவை அன்று.

அபிப்பிராயங்களை பட்டவர்த்தனமாக கேட்போர் உள்ளங்களில் பசுமரத்தாணி போல் பதியும் வகையில் வெளிப்படுத்திய எழுத்தாளர். எல்லாவற்றுக்கும் மேலாக மானிட பரிவுமிக்க நல்லதொரு மனிதருமாவர்.

நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எனது ஆட்டோகிராபை கொடுத்த போது “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று கவிஞர் முருகையன் எழுதிக் கொடுத்தது என் நினைவில் பசுமையாகவுள்ளது.

தமிழுக்கு சேவையாற்றிய கவிஞர் முருகையனை தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் மறப்பதில்லை எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0000000000000000000000000000000000000000000000000

ஈழத்து மெல்லிசைப் பாடல் உலகிலும் கவிஞர் முருகையனின் செழுமையான பங்களிப்பு இருக்கின்றது என்பதற்குச் சான்றாக அவர் எழுதிய பாடலை வரிகளோடும், ஒலிப்பகிர்விலும் தருகின்றேன்.

பாடல் வரிகள்: கவிஞர் முருகையன்
பாடியவர்கள்: எஸ்.கே பரா மற்றும் கோகிலா சிவராஜா
இசை: எம்.கே.ரொக்சாமி

கங்கையாளே… கங்கையாளே…
காடு கழுவி வரும் கங்கையாளே!
எங்குமோடி….. எங்குமோடி…..
ஈழம் குளிரவைக்கும் கங்கையாளே!

நுவரெலியா முதலான உயரமலை
பயிலும் கங்கையாளே…!
தவறாத வளமுடைய….
தன்மை பொழியும் எங்கள் கங்கையாளே…!
கங்கையாளே… கங்கையாளே……

கந்தளாயும்….மூதூரும்….
காத்து வரவேற்கின்ற கங்கையாளே….
வந்து சேர்வாய் திருமலைக்கே..
மாகடலில் போயிறங்கும் கங்கையாளே…!

கங்கையாளே… கங்கையாளே…
காடு கழுவி வரும் கங்கையாளே!
எங்குமோடி….. எங்குமோடி…..
ஈழம் குளிரவைக்கும் கங்கையாளே!

000000000000000000000000000000000000000000

நூலகம் இணைய வழி ஈழத்து மின்னூலாக்கத் திட்டத்தில் “மரணத்துள் வாழ்வோம்” என்ற கவிதைத் தொகுதியினை இணைத்திருக்கின்றார்கள். அதில் முருகையன் அவர்களின் இரு கவிதைகள் பகிரப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று,

வாயடைத்துப் போனோம்

‘என் நண்பா, மெளனம் எதற்கு?’
என்று கேட்டிருந்தாய்.
வாயடைத்துப் போனோம்; வராதாம் ஒரு சொல்லும்.
‘திக்’ கென்ற மோதல் –
திடுக்கிட்டுப் போனோமே!

பொய் வதந்திக் கொள்ளி பொசுக்கென்று போய்ப்பற்ற
ஏற்ற வகையில்
இதமான நச்செண்ணெய்
ஊற்றி
அதில் ஊற வைத்த உள்ளங்கள் இல்லாமல்
இத்தனை தீய எரிவு நடைபெறுமா?

எத்தனை தீய எரிவு -தலையுடைப்பு,
குத்துவெட்டு, பாயும் குருதிக் குளிப்பாட்டு?

சற்று முன்னர் மட்டும் சகஐமாய்ச் சாதுவாய்ப்
பேசி இருந்த பிராணி
சடக்கென்று
வாரை இடுப்பாற் கழற்றி,
மனங்கூசாமல்
ஓங்கி விளாச ஒருப்பட்ட சிந்தையதாய்
மாறிவிட்ட விந்தை மருமம் என்ன?
சுர்ரென்று
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?
கொள்ளை, திருட்டு, கொலைகள், கடையுடைப்பு,
பிள்ளை அரிவு, பிடுங்கல், வதை
புரிந்து
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?

ஒன்றும் எமக்குச் சரியாய் விளங்கவில்லை.
‘திக்’கென்ற மோதல் – திக்கிட்டுப் போனோம் நாம்.
வாயடைத்துப் போனோம்;
வராதாம் ஒரு சொல்லும்.

(1978 / மல்லிகை)

000000000000000000000000000000000000000000000000000

ஈழத் தமிழ் அரங்கில் மகத்தான அற்புதங்களை எதிர்வுகூற முடியவில்லை

ஆதங்கப்படுகின்றார் கவிஞர் முருகையன்

கூத்தரங்கத்துக்காக நேர்கண்டவர் தே.தேவானந்த்

கலாநிதி இ.முருகையன் நாடறிந்த மூத்த கவிஞர், நாடக எழுத்துருப்படைப்பாளி. யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவபிரகாச வித்தியாசாலை, சாவகச்சேரி இந்துக் கல்லூரிகளில் கற்றார். இரண்டாம் நிலைக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர். 1956ம் ஆண்டு Bsc பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர், கடந்த காலங்களில் ஆசிரியராக, அரச கரும மொழித்திணைக்கழத்தில் மொழி பெயர்ப்பாளராக, ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராக, கல்வித் திணைக்களத்தின் கல்விப்பணிப்பாளராக, பல்கலைக்கழகத்தில் உதவிப்பதிவாளராக கடமையாற்றியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ஈழத்துப் பிரபலமான நாடகக்காரர் சிவானந்தனின் சகோதரர் இவர். 1965ல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பிள்ளைகள். தற்போது யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை இடைவரவு விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். அவர் கூத்தரங்கத்துக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வி இது.

கே: கலாநிதி இ.முருகையன் அவர்களே நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே உங்களை ஈழத்தமிழ் நாடக உலகில் ஒரு நாடக எழுத்தாளராக அறிகிறோம். நீங்கள் நாடகங்களை எழுத ஆரம்பித்த படிமுறையை எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ப: முதன் முதலில் நான் நாடகம் என்று நினைத்து எழுதியது ‘சிந்தனைப் புயல்’. அது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் படித்த காலத்திலே, விடுதிச்சாலை மாணவர் நடத்திய ஒரு தவணை முடிவுக் கதம்ப நிகழ்வில் நடிக்கப்பட்டது. அது எழுத்தாளர் அகிலன் எழுதியிருந்த கதையொன்றைத் தழுவி எழுதியது. அதில் நானே கதாநாயகியாக நடித்தேன். அது ஒரு சிறு விளையாட்டு.

murukaiyan.jpgஇலங்கைப் பல்கலைக்கழகத்திற் சேர்ந்த பிறகு ஒரு கவிதை நாடகத்தை நான் எழுதினேன். அது இலங்கை வானொலியில் ஒலிபரப்பானது. திருச்சி றேடியோவில் ஒவிபரப்பான ஒரு நாடகத்தைச் செவிமடுத்ததின் தூண்டுதலால் அதை எழுதினேன். பல மாதங்கள் கடந்தபின் மிகுந்த தயக்கத்தோடு வானொலிக்காரர்கள் அதை ஒலிபரப்பினர் தொடர்ந்து சில நாடகங்களை எழுதக்கூடிய சூழ்நிலைகள் தோன்றின.

முதலில் நான் எழுதிய நாடகங்களைத் தயாரித்தவர்கள் வானொலிக்காரர்கள்தான். பின்பு ஒரு காலகட்டத்திலேதான் மேடை நாடகங்களை எழுதும் நாட்டமும், சூழல்களும், வாய்ப்புகளும் கிட்டின. அது வேறு கதை.

கே: ஈழத்தமிழ் நவீன நாடக உலகில் அறுபதுகளும், எழுபதுகளும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது. இக்காலத்தில் நீங்களும் நாடகத்துறையில் ஈடுபட்டவர் என்ற வகையில் இந்தக் காலத்தின் நாடக முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

ப: அறுபதுகளிலும் எழுபதுகளிலும் புதிய முன்னெடுப்புக்களும் எழுச்சிகளும் தலையெடுத்தது மெய்தான். அந்தக் காலகட்டத்தில் நான் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராய் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். பள்ளி மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தேவையான பாட நூல்களை மொழிபெயர்த்து வெளியிடும் பணியைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஆற்றிக் கொண்டிருந்தது. அந்தத் திணைக்களத்திலே கல்வி நூல்களில் மட்டுமன்றி, கலை நூல்களிலும் ஆர்வமும் அக்கறையும் கொண்ட அறிஞர்கள் பலர் பணியாற்றினர். அவர்களுள் நாடகத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள் பலரும் இருந்தனர். இவர்கள் இனம்சார்ந்த அறிஞர்களிடையேயும் கலைஞர்கள் இடையேயும் பெருமளவு கலந்துறவாடல்கள் இருந்தன. கொடுக்கல் வாங்கல்கள் இருனந்தன. கருத்துப் பகிர்வுகள் இருந்தன. வெளியுலகில் இனப் பகைமையும் வெறுப்பும் நீறு பூத்தநெருப்புப்போல இருந்திருக்கலாம். ஆனால் உயர்கலைஞர்கள் மத்தியில் நல்லுறவும் ஆரோக்கியமான- ஆனால் இலேசான போட்டி மனப்பான்மையும் நிலவியது என்று சொல்லலாம்.

நான் பணியாற்றிய திணைக்களத்தில் மட்டுமல்லாமல் வேறு வட்டங்களிலும் கூட, இந்த விதமான பண்பாட்டுத் தேடலும் செயலூக்கமும் இருந்தன.

இந்தக் காலகட்டத்திலேதான் தேசிய நாடக உருவாக்கமும் அரங்கியல் முன்னெடுப்புகளும் தொடங்கலாயின. நாடகவியலை ஒரு கற்கை நெறியாக வடிவமைக்க வேண்டும் என்ற ஆர்வமும் தேவையும் உத்வேகமும் உருவாயின. கொழும்பு தேஸ்ற்றன் றோட்டில் அமைந்திருந்த பல்கலைச் சூழலில், ‘நாடகமும் அரங்கியலும்’ பற்றிய ஆலோசனைகள் மும்முரமாக இடம்பெற்றன் பாடநெறிகள் வரையப்பட்டன.

என்னைப் பொறுத்தவரையில், நான் இவற்றிலே நேரடியாக ஈடுபட்டிருக்கவில்லை. ஆனால் கா.சிவத்தம்பி முதலியோர் அவர்களோடு தொடர்புடைய நா.சுந்தரலிங்கம், அ.தாசீசியஸ், வே.சங்கரசிகாமணி, இ.சிவானந்தன் முதலியவர்களும், சின்னையா சிவநேசன், சோ.நடராசா போன்றோரும் நாடகவியல் அக்கறையும் விழிப்பும் கொண்டவர்களாகத் தலை நிமிர்ந்தனர். இந்த வட்டத்தில் உள்ளவர்களிற் சிலர் க.கைலாசபதி அவர்களின் ஆலோசனைகளை நாடுவோராகவும் அதனால் கலையியல் இலாபங்களைப் பெற்றவர்களாயும் அமைந்தனர். இந்தக் காலகட்டத்திலே தான் ‘நாடகமும் அரங்கியலும்’ என்னும் பாடநெறிக்கான திட்ட முன்வரைபும் உருவாகியது.

இந்தப் பாடநெறியை உருவாக்கவென நடைபெற்ற பரிசீலனைகளும் முனைவுகளும் சிங்களக் கலை வட்டாரங்களிலும் தமிழ்க் கலை வட்டாரங்களிலும் அபரிமிதமான தேடல்களையும் புதுப் புனைவுகளையும் தோற்றுவித்தன. அரங்கியல் என்பது என்ன? அரங்கியற் செயற்பாடுகள் ஏன்? எப்படி? எதற்காக என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளைக் கண்டறியும் உந்துதலையும் ஊக்கத்தையும் தந்தன. தமிழர் தரப்பில் ‘கூத்தாடிகள்’, ‘அரங்கு’, ‘மன்றாடிகள்’, ‘எங்கள்குழு’ என்றவாறு நாடக மன்றங்கள் தோன்றி, இயங்க முன்வந்தன. இவற்றின் பேறாக நாடக எழுத்துருக்கள் தோன்றின. நடிகர்கள் உருவாயினர், நாடகங்கள் மேடையேறின – நவீன நாடகங்கள் மாத்திரமல்லாமல், கூத்தியல் தழுவிய எழுச்சிகளும் தலைதூக்கின. சி.மௌனகுரு, சு.வித்தியானந்தன் முதலியோர் நாட்டுக்கூத்துக்கு மெருகூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். நவீன நாடக அரங்குகளிற்கூட, கூத்தியற் கூறுகளை அளவறிந்து கலந்து பயன்படுத்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆம், இந்த எழுச்சிகள் பலவும் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இடம்பெற்றவை என்று சொல்லலாம்.

கே: நீங்கள் இதுவரை எழுதிய நாடகங்கள் எத்தனை? அவற்றின் பெயர்களைத் தாருங்கள்.

ப: நான் இதுவரை எழுதிய நாடகங்கள் 24. அவற்றின் பெயர்கள, ‘நித்திலக் கோபுரம்’, ‘அந்தகனே ஆனாலும்’, ‘வந்து சேர்ந்தன’, ‘தரிசனம்’, ‘கோபுரவாசல்’, ‘கடூழியம்’, ‘செங்கோல்’, ‘கலைக்கடல்’, ‘கொண்டு வா தீயை கொளுத்து விறகை எல்லாம்’, ‘சுமசும மகாதேவா’, ‘அப்பரும் சுப்பரும்’, ‘கந்தப்ப மூர்த்தியர்’, ‘வழமை’, ‘அந்தகனே ஆனாலும்’, ‘இடைத்திரை’, ‘குனிந்த தலை’, ‘வெறியாட்டு’, ‘பொய்க்கால்’, ‘குற்றம் குற்றமே’, ‘தந்தையின் கூற்றுவன்’, ‘இரு துயரங்கள்’, ‘கலிலியோ’, ‘உயிர்த்த மனிதர் கூத்து’, ‘எல்லாம் சரி வரும்’.

கே: உங்கள் நாடகங்களின் பாடுபொருள் பற்றி குறிப்பிடுங்கள்?

ப: ‘பாடுபொருள்’ என்று நீங்கள் குறிப்பிடுவது அந்த நாடகங்களின் உள்ளடக்கத்தை என்று நினைக்கிறேன். நாடகத்தில் மாத்திரமல்ல, கதை, கவிதை முதலான எந்தக் கலைப்படைப்புக்கும் உள்ளடக்கமாய் அமைவது மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள்தான். அந்த அனுபவங்கள் சிற்சில தருணங்களிலே தான் நமக்குத் திருப்தியைத் தருகின்றன. மற்ற வேளைகளில் அனுபவங்கள் நம்மைக் குழப்புகின்றன. குடைகின்றன, கலக்குகின்றன, கவலை தருகின்றன. சலனமும் சஞ்சலமும், சில வேளைகளில் உற்சாகமும் உல்லாசமும் தரும் வாழ்க்கை அனுபவங்களை மாற்றுருத் தந்து புதுக்கப் படைக்கும் முயற்சியே கலையாக்கம் என்பது. அவ்வாறு புதுக்கப் படைக்கும்போது அதில் ஒரு விதமான விளையாட்டுத்தனமும் புகுந்து கொள்ளகிறது. இதனாலே தான் நாடகங்களை ‘பிளேய்’ என்றும் ‘ஆடல்’ என்றும் நாம் சொல்வதுண்டு.

வேறொரு விதத்திலே பார்க்கும்போது வாழ்க்கையில் நாங்கள் படும் ‘பாடுகளை’ மூலதனமாகக் கொண்டுதான் நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைகளும் ஆக்கம் பெறுகின்றன.

ஆனால், வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே- எந்திரப் பாங்கிலே படம் பிடித்துத் தருவது உயிர்ப்புடைய நாடகமாய் அமையாது. வாழ்க்கையிலே பல பிரச்சினைகள் இருக்கின்றன, பல வியப்புகள் இருக்கின்றன, பல முரண்கள் இருக்கின்றன, முரண் போலிகள் இருக்கின்றன. இவைகள் எல்லாம்தான் என் நாடகங்களின் ‘பாடு பொருள்கள்’ ஆகின்றன.

இவைகளை அப்படியே படம்பிடிப்பது மட்டுமே கலைஞர்களின் பணி என்று நான் கருதவில்லை. வாழ்க்கையின் உள்ளோட்டங்களை நுழைந்து பார்த்து வியப்பதும், சீறுவதும் கண்டனம் செய்வதுங் கூட நாடகக் கலையின் பண்பும் பணியும் ஆகலாம். ஆனால் எனது நாடகங்களில் பிரசாரப் பண்பு அல்லது பரப்புரைப் பண்பு துருத்திக் கொண்டு (முந்திரிக் கொட்டை போல) தனித்து வெளிநீட்டி நில்லாமல் அடக்கமாக உள்ளிசைவு பெற்று நிற்கவேண்டும் என்பது என் விருப்பமாய் அமைந்துள்ளது.

இனி, நாடகப் பாடுபொருள்களை உடனடியான அண்மைச் சூழல்களிலும், இடத்தாலும் காலத்தாலும் தூர உள்ள சூழல்களிலிருந்தும் நான் பெற்றுக் கொள்கிறேன். அன்னியமான சூழல்களிலிருந்து பெறும் பொருள்களை உசிதம் போல உருமாற்றியும் உரு மாற்றாமலும் தழுவலாக்கம் செய்தும் அமைத்துக் கொள்வதுண்டு.

எது எவ்வாறிருந்தாலும் நமது மக்களின் உடனடிப் பிரச்சினைகளிலிருந்து வெகுதூரம் விலகிச் செல்வது என் வழக்கமோ பழக்கமோ அல்ல.

கே: உங்களது நாடக எழுத்துருப் படைப்பாக்கப் படிமுறைகள் பற்றி விரிவாகக் குறிப்பிடுங்கள்?

ப: நான் சற்று முன் கூறியதுபோல என் ஆரம்பகாலப் படைப்புகள் வானொலி நாடகங்களாக இருந்தன. அவை பெரும்பாலும் என்னுள்ளிருந்து, என் சொந்த ஆளுமையின் படைப்புகளாய் இருந்தன. இவற்றை எழுதும் போது அவை என் படைப்பாக்கம். வேறு யாருடைய ஆலோசனைகளையும் வேண்டி நின்று பெறவேண்டிய நிலை இருக்கவில்லை. அவை எனது சொந்தக் கற்பனையிலிருந்துதான் பெரும்பாலும் தோன்றின என்று சொல்லிவிடலாம். அடுத்து வந்த காலங்களிலே எழுந்த மேடை நாடகங்களின் ஆக்கமும் பெரும்பாலும் சுயேச்சைப் போக்கிலேதான் நிகழ்ந்தன. ஆனால், கால கதியில் மேடை நாடகங்களை எழுத முற்பட்டபோது தயாரிப்பாளர் அல்லது நெறியாளரின் ஆலோசனைகளுக்குச் செவிமடுக்கும் தேவையும் பழக்கமும் ஏற்படலாயின.

குறிப்பாக நா. சுந்தரலிங்கம் என் நா கங்கள் சிலவற்றைப் பொறுப்பேற்று நெறியாள்கை செய்த போது எழுத்தாக்கத்துக்கு முன்பே, சில வேளைகளில், கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுண்டு. ஆனால், அவை மிக விரிவான கலந்துரையாடல்களாக இருந்தது குறைவு. இது தொடக்க காலத்து நிலைமை.

ஆனால், நமது அரங்கியற் செயற்பாடுகள் விரிந்து விருத்தியாகிச் செல்லச் செல்ல முன்பை விட, கலந்துரையாடால்களின் தேவை அதிகமதிகமாக அவசியமாகின என்பதை உணரக் கூடியதாய் இருந்தது. இந்தக் கலந்துரையாடல்கள், நாடக எழுத்தாளராகிய எனக்கும் நெறியாளர்களுக்குமிடையே தான் பெரும்பாலும் இடம்பெற்றன. காலம் செல்லச் செல்ல, நடிகர்களையும் நெறியாளரையும் ஒருங்கே சந்தித்துத் திட்டமிடும் முறைமை முளைகொண்டு தலை தூக்கியது என்று சொல்லவேண்டும்.

குறிப்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சூழலிலே, எண்பதுகளில் மேற்படி நடைமுறை அதிகமதிகம் விருத்தி அடைந்தது என்று கூறுவேன். ‘உயிர்த்த மனிதர் கூத்து’ என்னும் நாடகம் உருவாகிய சமயத்தில், திட்டமிடலிற் பெரும் பகுதி அறிஞர் பலரின் கூட்டு முயற்சியாகவே இருந்தது. ஏலவே வகுக்கப்பட்ட திட்டத்துக்கு அமைய, உரையாடல்களையும் கவிதைகளையும் பாடல்களையும் எழுதும் பணி மாத்திரமே என்வசம் இருந்தது. அப்பொழுது என்னிடம் அமைந்திருந்த கருத்திசைவு காரணமாகவும் உணர்வொருமை காரணமாகவும் அந்த நாடகம் எனக்கு மட்டுமன்றி, மற்றும் பலருக்கும் மன நிறைவு தரும் ஒரு படைப்பாகவும் அமையலாயிற்று.

இதற்குப் பிறகும்கூட, சிதம்பரநாதன், தேவானந்த் முதலியோருடனும் சிவயோகன், குழந்தை முதலானோருடனும் ஒத்திசைந்து நிறைவேற்றிய அரங்கியற் பங்களிப்புகள் மனநிறைவு தருவனவாய் அமையலாயின.

கே: அண்மைக் காலமாக நீங்கள் நாடகங்களை எழுதுகின்ற போது நெறியாளருடன் களத்தில் நின்று அவரது எண்ணங்களை காட்சிகளாகக் கண்டு பின் எழுதுகிறீர்கள்? இந்த வகைப் படைப்பாக்க அனுபவம் பற்றித் தெரிவியுங்கள்?

ப: மெய்தான். இந்த விதமாக, களத்தில் நின்று நெறியாளரின் கற்பனைகளையும் காட்சிகளாகக் கண்டு எழுத்துருக்களைப் படைக்கும் முறையில் சாதகமான அம்சங்கள் பல உண்டு, பாதகமான அம்சங்கள் சிலவும் இருக்கின்றன.

இதிலுள்ள சாதகமான அம்சங்களுள் பிரதானமானது எழுத்தாளருக்கும் நெறியாளருக்குமிடையே நிகழும் கலந்துறவு. இந்த விதமான கலந்துறவுப் பரிசீலனையில் நான் இறங்கியது க.சிதம்பரநாதன் நெறியாள்கை செய்த ‘உயிர்த்த மனிதர் கூத்து’ என்பதன் போதுதான். இந்த நாடகம் ஒரு பெரிய கூட்டு முயற்சி. நாடகத்தின் கருத்துருவும் அதன் உட்பிரிவுகளும் கற்றறிவாளர் பலர் கொண்ட ஒரு பெருங் குழுமத்தினாலே மிகவும் சாவதானமாகத் திட்டமிடப்பட்டது. அந்தத் திட்டத்துக்கமைய நாடகத்தின் கூறுகள் கற்பனை செய்யப்பட்டன. இசையும் கூத்தும் சமானியமான வாழ்க்கைக் கூறுகளும் சேர்ந்த ஒரு சங்கமமாகத்தான் ‘உயிர்த்த மனிதர் கூத்து’ உருவாக்கப்பட்டது. இந்த நாடகத்துக் குரிய பாடல்களை நானே இயற்ற வேண்டும் என்று முடிவாயிற்று.

இசைச் சார்புடைய செய்யுள்களாகவே இந்த நாடகப் பாடல்கள் அமைய வேண்டும் என்பது பொதுக் கருத்தாய் இருந்தது. பாடல்கள் அல்லது உரையாடல்கள் வரவேண்டிய சந்தர்ப்பங்களைச் சுட்டும் குறிப்புகளை ஒவ்வொரு நாளும் சிதம்பரநாதன் கொண்டுவந்து தந்து விளங்கப்படுத்துவார். நான் இரவோடிரவாக வீட்டில் இருந்து (மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலே) எழுத்துருவை அமைத்து முடிப்பேன். மறுநாள் இது சிவத்தம்பி அவர்களின் பார்வைக்குப் போகும். அவர் அதைப்படித்து ரசித்து இசையமைப்பாளரின் பங்களிப்புக்காக அனுப்பி வைப்பார். இசையமைக்கப்பட்ட பகுதிகளை வைத்துக்கொண்டு தான் நாடக ஒத்திகைகள் கட்டம் கட்டமாக நடைபெறும். இதுதான் ‘உயிர்த்த மனிதர் கூத்தின்’ உற்பத்தி வரலாறு.

இதன் பின்னரும் வேறு சூழ்நிலைகளில் ‘பொய்க்கால்’, ‘நாம் இருக்கும் நாடு’ என்பன போன்ற நாடகங்களும் நெறியாளர் – எழுத்தாளர் ‘கலந்துறவு’ முறையிலே தயாரிக்கப்பட்டன. இந்த முறையிலே உள்ள நன்மை என்னவென்றால் கலையாக்கத்தின்போது ஒன்றுக்கு மேற்பட்ட மூளைகளும் கற்பனா சக்திகளும் தொழிற்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட கலைநோக்குகள் ஒன்றையொன்று சந்தித்துக் கைகோர்த்துச் சங்கம் ஆகின்றன. கூட்டுப் பொறுப்பும் கொடுக்கல் வாங்கல்களும், இன்றியமையாத அம்சங்கள் ஆகிவிடுகின்றன.

ஓர் எழுத்தாளன் ‘தனித்திருந்து வாழும் தவமணி’ ஆகி, தன் மனம்போன போக்கிலே எதையாவது படைத்துவிட்டு, பின்னர் தயாரிப்பாளர்களைத் தேடி ஓடிக் காணாது களைத்து விழுவதை விட, மேற்சொன்ன விதமான கூட்டுப்படைப்பாக்கம் மேலானது அல்லவா? கூட்டுப் படைப்பாக்கத்திலே ‘தேவானந்த்’ ஆகிய நீங்களும் கணிசமாக ஈடுபட்டுள்ளீர்கள் ஈடுபட்டு வருகிறீர்கள். அந்த விதத்திலே உங்களுக்கும் இந்தவிதமான கலந்துறவுப் படைப்பாக்கம் பற்றிச் ‘சிலபல’ கருத்துக்கள் இருக்கும்.

இனி, கலந்துறவுப் படைப்பாக்க முறையில் உள்ள பாதகமான அம்சங்களுள் ஒன்றைப்பற்றிச் சொல்லலாம் என நினைக்கிறேன். நான் எழுதி வெளியிட்ட நாடகங்களுள் ‘அப்பரும் சுப்பரும்’ என்பது ஒரு சிறந்த எழுத்துரு என்று நான் நினைக்கிறேன். புத்தக வடிவில் வந்த எழுத்துருவை வாசித்த விமரிசகர்கள் சிலரும் அதை மெச்சியிருக்கிறார்கள். ஆனால், தயாரிப்பாளர் அல்லது நெறியாளர் எவராயினும் அதை அரங்கேற்ற முயலவில்லை. முன்வரவில்லை. உண்மையில் அது பாராளுமன்றத் தேர்தல் முறையில் நிகழும் அரசியல் பற்றிய கிண்டலும் கேலியும் நிரம்பிய நல்லதொரு நாடகம் என்பது என் கணிப்பு. ஆனால், அரங்கச் செயற்பாட்டில் ஈடுபட்ட எந்த ஒரு குழுவின் கண்ணிலும் அது படவில்லை. இது ஏன் என்று நான் சில வேளைகளில் நீள நினைந்து யோசித்துப் பார்ப்பதுண்டு. அந்த நாடகத்தின் உள்ளடக்கம் பாராளுமன்ற அரசியலின் போலித்தனங்களை ஆழமாக நோக்கியும் தோலுரித்தும் காட்டுகிறது. சுவாரசியமான காண்பியங்களையும் உருவாக்கிச் சுவைபட மேடையேற்றுவதற்கும் தாராளமாக இடம் கொடுப்பது. ஆனால் சற்று நீளமானதுதான். என்றாலும், தக்க நெறியாளர் ஒருவரும் கிடைக்கவில்லையே என்ற மனக்குறை எனக்கு உண்டு.
கலந்துறவுப் போக்கிலான செயலூக்க அரங்கியற் கலைஞர்களிடம் அது செல்லவில்லையே, இது ஏன் என்று நானும் என் நண்பர்கள் சிலரும் அவ்வவ்போது நினைத்துப்பார்ப்பதுண்டு.

கே: நீங்கள் ஒரு நாடக ஆசிரியர் என்ற வகையில் ஈழத்தமிழ் அரங்கத் துறையின் செல்நெறி பற்றி என்ன கருதுகிறீர்கள்?

ப: ஈழத்தமிழ் அரங்கத் துறையின் செல்நெறி என்று பார்க்கும்போது எங்கள் உடனடி வருங்காலத்தில் மகத்தான அற்புதங்கள் எவற்றையும் என்னால் எதிர்வுகூற முடியவில்லை. இன்று நம் கல்வியுலகில், பல்கலைக்கழக மட்டத்திலே ‘நாடகமும் அரங்கியலும்’ ஒரு கற்கைநெறியாய் இருக்கிறது. ஆண்டு தோறும் நமது பல்கலைக்கழகத்திலிருந்து, இப்பாடத்திலே தேர்ச்சி பெற்றவர்கள் வெளியேறுகிறார்கள். இவர்களில் எத்தனை பேர் தாம் கற்றவற்றைப் போற்றிப் பேணி வருங்காலத் தலை முறையினரிடம் கையளிக்கும் ஆர்வமும் வேட்கையும் பெற்றவர்களாய் அமையப் போகிறார்கள்?

நாங்கள் அவ்வப்போது சென்றடையும் சாதனைகளின் உச்சங்கள், தொடர்ந்து பேணிப் பாதுகாத்திடக் கூடிய சாத்தியப்பாடுகள் எப்படி உள்ளன?

இந்தப் போக்கிலே சிந்தித்துப் பார்க்கும்போது எங்கள் முன் உள்ள வருங்காலம் அவ்வளவு ஒளிமயமானதாய் இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

அவ்வப்போது மகோன்னதமான சில காரியங்களை நாம் செய்து விடுகிறோம். அது மெய்தான். ஆனால் அந்த அபூர்வ சாதனைகளை மீண்டும் மீண்டும் செய்து ஆன்ம நிறைவு கொள்வதற்குப் போதிய தைரியமும் துணிவும் மூலவளங்களும் நம்மிடையே இல்லையோ என்றுதான் யோசிக்க வேண்டி இருக்கிறது.

கலைகள் என்பதை வெற்றுவெளியிலே தோன்றி, அந்தரத்தில் நின்று நிலைப்பவை அல்ல. ஓரளவுக்காயினும் உறுதியும் சமநிலையும் கொண்ட சூழலிலேதான் கலைகள் செழித்தோங்கி வளர்ந்து நிலைக்க முடியும். அவ்வாறான சூழ்நிலைகள் எப்போதுதான் வருமோ? தளராத நன்னம்பிக்கையோடு இடையறாது முயல்வதுதான் ஒரே ஒரு வழி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000

கவிஞர் முருகையன் குறித்த நூல்களைத் தேடிய போது “தான்தோன்றிக் கவிராயர்” சில்லையூர் செல்வராசன் எழுதிய ஊரடங்கப் பாடல்கள் தொகுதியில் கவிஞர் முருகையன் எழுதிய கவிதை ஒன்று சில்லையூரார் பற்றி
மான் தோன்றி ஓட, மயில் தோன்றி ஆட, மரபு வழித்
தேன் மூன்று பானைப் புளிச்சலைப் போற் கவி செய்தறியாய்,
தான்தோன்றி என்று தகுதி உணர்ந்தோர் தரம் அறிந்தோர்
தேர்ந்தூன்றி ஆய்ந்து பயின்று நயக்கும் திறலவனே!

நாளாந்த வாழ்வினிடையே இழையும் நளினம் எலாம்
நீள்சாந்த இன்ப நறும் தமிழ் வார்த்தையில் நீ பொதிவாய்!
வாள் ஏந்தி நின்று சமரிடும் உன்மொழி வையம மிசைத்
தேள் போன்ற நஞ்சக் கொடுக்கர் அநீதிகள் சிந்திடவே!

பம்மாத்து வாழ்க்கையர் பண்பின்மை சாடிப் பகடி பண்ண
எம்மாத்திரம் ஐய. உந்தமிழ் நுட்பம் எழுத்தி பெறும்!
கைம்மாற்று வாங்கா திருப்பினும் தேவை கடுமை எனிற்
சும்மா கொடுப்பாய் இலவச நக்கல் சுடச்சுடவே!

மேடைகள் எத்தனை உன்னால் இசையால் விழுப்பம் எய்திச்
சோடை படாது பழுதின்றித் தப்பின! சொல் வலிமைப்
பீடுடுடையாய்! சுழல் பேச்சுடையாய்! பெரியோர் விரும்பும்
ஏடுடையாய்! இந்த நாடுடையாய் என ஏத்துவனே!

000000000000000000000000000000000000000000000000

உறவுகளுக்கு மட்டுமல்ல ஊருக்கும் உலகுக்கும்
உன்னதமாகிப் போனவனே போய் வா
நீ விசிறியவை ஆயிரமாயிரம் பேனாக்களில் விழுந்து
மகரந்த மணிகளாய் உயிர்க்கின்றன
உனது விரல் நரம்புகள் இன்று
ஏராளம் விரல் நரம்புகளில் அசைகின்றன
போய் வா என் ஆசானே போய் வா

விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது
மனம் நெகிழ வழியனுப்பும்
வாழ்வியலின் ஒரு நிகழ்விது
போய் வா என் ஆசானே போய் வா

நன்றி:
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
கவிஞர் சடாகோபன்
யாழ் உதயன் நாளிதழ்
சிட்னி தமிழ் அறிவகம்
ஞாயிறு தினக்குரல்
கூத்தரங்கம் இதழ் வலைத்தளம்
கே.எஸ்.றெக்கோர்ட்ஸ்

படம் உதவி:
தமிழ்ப்பூங்கா http://tamilgarden.blogspot.com/
கூத்தரங்கம் இதழ் வலைத்தளம் http://koothharangam.wordpress.com

30 thoughts on “கவிஞர் இ.முருகையன் நினைவில்…!”

 1. தமிழன்-கறுப்பி… has left a new comment on your post "கவிஞர் இ.முருகையன் நினைவில்…!":

  மற்றுமொரு நல்ல ஆவணம்,

  பதிவுக்கு நன்றி அண்ணன்

 2. தமிழன்

  வருகைக்கு மிக்க நன்றி

  உங்கள் பின்னூட்டம் தவறுதலாக அழிக்கப்பட்டு மீளப் பதியப்பட்டிருக்கின்றது.

 3. மறக்க முடியாததொரு கவிஞனின் இழப்பு!! தமிழ் உள்ளங்களின் இத் துயரப் பகிர்வில நானும் இணைகிறேன்,

 4. நல்ல ஆவணப் பதிவுபிரபா. இது போன்ற ஆவணப்படுத்தல்கள் எம் மூத்த படைப்பாளிகள் பலருக்கு இல்லாமல் போய்விட்டது தான் வேதனைக்குரியது.
  இனியாவது முழுமைப் படுத்துவோம்…. இது எமது கடமை அல்லவா?

 5. இளையதம்பி தயானந்தா said…
  மறக்க முடியாததொரு கவிஞனின் இழப்பு!! தமிழ் உள்ளங்களின் இத் துயரப் பகிர்வில நானும் இணைகிறேன்,//

  வருகைக்கு நன்றி தயான‌ந்தா அண்ணா

 6. வருத்தம் தரும் செய்தி.

  விரிவான தகவல்களுடன் முருகையனை நினைவுபடுத்தியமைக்கு நன்றியும்.

 7. வாசுகி said…

  நிறைய விபரங்கள் தொகுத்து தந்துள்ளீர்கள்.
  நன்றி.//

  மிக்க நன்றி வாசுகி

 8. மிக நல்ல கனதியான பதிவு பிரபா. பாராட்டத்தக்க முயற்சி. ஈழத் தமிழ் இனம் தொடர்ந்து சோகச் செய்திகளையே கேட்டு வருவதுதான் உறுத்துகிறது. முருகையன் கூத்தரங்கம் நாடக இதழுக்கு வழங்கிய பேட்டியை ஒரு வலைப்பூவில் பார்த்தேன். அதனையும் உங்கள் தொகுப்பில் இணைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
  Link: http://www.koothharangam.co.nr/

 9. //அருண்மொழிவர்மன் said…
  நல்ல ஆவணப் பதிவுபிரபா. இது போன்ற ஆவணப்படுத்தல்கள் எம் மூத்த படைப்பாளிகள் பலருக்கு இல்லாமல் போய்விட்டது தான் வேதனைக்குரியது.
  இனியாவது முழுமைப் படுத்துவோம்…. இது எமது கடமை அல்லவா?//

  வணக்கம் அருண்மொழிவர்மன்

  இவர்கள் வாழும் காலத்தில் ஒலியாவணப்படுத்தவேண்டும் என்று நினைப்பது பல வேறு காரணங்களால் தடைப்பட்டுவிடும். இவற்றை நாம் பரந்து பட்ட அளவில் செய்யவேணும்.

  வருகைக்கு மிக்க நன்றி டிஜே

  வந்தி

  அப்பாவின் நண்பர் என்றால் இவர் பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்குமே, பதிவை எதிர்பார்க்கின்றேன்.

 10. எம்.ரிஷான் ஷெரீப் said…

  நிறைய விடயங்கள் அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பரே !//

  வருகைக்கு நன்றி நண்பா

  //Prem said…

  மிக நல்ல கனதியான பதிவு பிரபா. பாராட்டத்தக்க முயற்சி//

  வணக்கம் பிரேம்

  உண்மையில் இந்தக் கனதியான பேட்டியை கூத்தரங்கம் வாயிலாக அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி, இப்பொழுதே இதனை இங்கே சேர்த்து விடுகின்றேன்.

 11. அன்பின் கானா பிரபுவுக்கு.
  முருகையன் பற்றிய பதிவு அபாரம்.

  எனக்குத் தங்களுடன் தனிப்பட்டமுறையில் ஒரு விசயம் கேக்கவேணும்
  pls mail me n I mail u back
  sooryavinothan@gmail.com.
  thx.

 12. தங்கள் வலைப் பதிவில் முதுபெரும் கவிஞர் இ.முருகையன் அவர்களுக்கு உரிய சமயத்தில் உயரிய அஞ்சலியினைச் செலுத்தியுள்ளீர்கள்.
  70 பதுகளில் பட்டதாரி மாணவனாக இருந்தபோது அவரது கவியரங்கம் தேடிச் சென்று செவியுற்ற நினைவு மனதில் பசுமையாக நிலைத்திருக்கிறது.ஈழத்துக் கவிதையுலகினுக்கு இது பேரிழப்பே!அவர் வாழ்ந்தபோது எண்ணியவை யாவும் தமிழர் வாழ்வில் கிட்ட நாம் பாடுபடுவதொன்றுதான் நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

 13. வருகைக்கு மிக்க நன்றி சந்தனமுல்லை

  soorya said…

  அன்பின் கானா பிரபுவுக்கு.
  முருகையன் பற்றிய பதிவு அபாரம்.//

  மிக்க நன்றி தங்கள் வருகைக்கு

 14. நிறைய விபரங்கள் தொகுத்து தந்துள்ளீர்கள் தம்பி.

  மூத்த கவிஞன் முருகையன்.
  ——————-
  முருகையன் ஈழ்த்தின் முதன்மைக் கவிஞர்களுள்
  அருமைச் சீராடல் அனைத்திற்கும் அமைந்தவரே!
  பெருமைப் படுமளவு பாட்டாளி வர்க்கத்தின்
  உரிமைக்காய்க் குரல்கொடுக்கும் தாயகத்தின் வாயிலாக
  ஒருமைப்பட்ட இதயத்துடன் ஒத்துழைப்பும் வழங்கி
  சரியான பார்வையுடன் சரித்திரக் கவிதைகள்…
  வரிசையில் முற்போக்கு வதனத்தில் ஓரமைதி
  பரிபாலன சேவையாம் பல்கலைக் கழகப்பதிவாளர்
  தெரிவுசெய்த மார்க்கமது முற்போக்குச் சிந்தனைகள்..
  பெரியோன் இவரென்று எல்லோரும் போற்றுவரே!
  * * *
  அல்லும் பகலும் தேசியகலை இலக்கியச்
  சொல்லும் செயலும் சுடரான சிந்தனையும்
  வல்லவராம் இருமொழியில் தாய்மொழிக்குத் தனியிடமாம்
  எல்லையில்லாத கவிதைகள் ஆயிரம் ஆயிரம்
  நல்ல கருத்துடன் நயம்பட வடித்தகவி
  அத்தனையும் மானிடத்தின் அரிய விடியலுக்கு
  சத்தமில்லா எதிர்கால விழிப்புணர்வுச் சூரியனாய்
  திங்களென்ற குயிலித் திருமகளும் மங்காத்
  தங்கமகன் கண்ணன் மாநிலத்தில் கண்மணிகள்…
  முல்லைச் சிரிப்பும் முறுவலித்த முகமுமாய்..
  இல்லையே இவனென்று நினைக்க முடியவில்லை!
  * * *
  மானிடன் அழிவதுண்டு மானிடம் அழிவதில்லை
  நானிலத்தே வாழுகையில் நலிந்தோர்க்குக் குரல்கொடுத்து
  இறுதிமூச்சு இருக்கும்வரை என்னிதயக் கருத்துக்களை
  அறுதியாக உரைபேனென அரும்பெரும் கவிதைகளில்
  வடித்து வைத்துச் சென்றதெல்லாம் மக்களின்
  துடிப்பை வெளிக்காட்டும் துல்லியப் பளிங்குபோல
  அடியொற்றி வாழ்வோரின் அடிமனதில் ஒளிவிடும்
  விடிவெள்ளி ஆனவருள் முருகையன் முதற்கவிஞன்.
  ——————

  திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம். சிங்கப்பூர்

 15. தமிழ் எழுத்துலகம் இழந்துவிட்ட ஈழத்து தமிழ் கவிஞரின் ஆன்மா சாந்தியடையட்டும்.தமிழ் உள்ளங்களின் இத் துயரப் பகிர்வில நானும் இணைகிறேன்..

  நல்லதொரு ஆவணப் பகிர்வு பிரபா
  மிக்க நன்றி

 16. தோழருக்கு,ஈழதேசத்து மூத்த கவிஞன், முதன்மைக்கவிஞன் கவிஞர் முருகையனின் இழப்பு என்பது ஈடுசெய்யமுடியாதது.இத்துயரப் பகிர்விற்கு நன்றி.
  தமிழ்சித்தன்

 17. முருகையன்-தமிழ் இலக்கியத்திற்கு அரை நூற்றாண்டுக்கு மேலாக சசலப்பின்றி இறைத்துப்போன அருவி..
  அன்னாரின் மின்னூல்களையும் இணைத்தால் மிகச்சிறந்த பதிவாக இதை மாற்றலாம்

 18. அன்பின் நிலாமாறன், சர்வசித்தன்

  மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

 19. திருமதி வள்ளியம்மை சுப்ரமணியம்

  இந்த மாபெரும் கவிஞனுக்கு நீங்கள் கொடுத்த கவி அஞ்சலி சிறப்பைச் சேர்க்கின்றது, மிக்க நன்றி.

  ஜீவராஜ்

  மிக்க நன்றி

  //ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said…

  தோழருக்கு,ஈழதேசத்து மூத்த கவிஞன், முதன்மைக்கவிஞன் கவிஞர் முருகையனின் இழப்பு என்பது ஈடுசெய்யமுடியாதது.//

  மிக்க நன்றி நண்பரே

  //வி.பராபரன் said…

  அன்னாரின் மின்னூல்களையும் இணைத்தால் மிகச்சிறந்த பதிவாக இதை மாற்றலாம்//

  வணக்கம் பராபரன்

  மின்னூல்கள் நூலகம் இணைப்பில் ஆவணப்படுத்தப்படுகின்றன. புதிதாகச் சேரும் போது அவற்றின் இணைப்பைத் தரமுயல்கின்றேன்.

  //vannionline said…

  மிக்க நன்றி.//

  வருகைக்கு நன்றி நண்பரே

 20. மிகச்சிறுவயதில் கவிஞர் இ.முருகையன் அவர்கள் தலைமையேற்ற கவியரங்கம் ஒன்று பார்த்ததாக நினைவு. நிச்சயமாக இன்று ஈழத்தில் இருக்கின்ற இளம் கவிஞர்களில் அநேகம் பேர் முருகையனிடமே யாப்பிலக்கணம் படித்து மிகச்சிறந்தவர்களாக மிளிர்கின்றனர். உலகில் போற்றப்படாமலேயே மீண்டும் ஒரு தடவை ஈழம் இழந்த அதி உன்னத படைப்பாளி. மறைந்த முருகையன் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்பதோடு, அன்னாரின் குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவிக்கும் வேளை, அன்பான தமிழ் கூறும் நல்லுலகே…! இனியாவது இந்த ஈழத்து படைப்பாளிகளை வெளிக்கொணர தாங்கள் ஆவன செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…!

 21. நன்றி பிரபா, மீண்டும் ஒரு தடவை உங்களால்தான் முடிந்திருக்கிறது. தொடரட்டும். உங்களின் இந்தப்பணிதான் ஈழத்தின் படைப்பாளிகளை இன்னமும் காத்துக்கொண்டு இருக்கிறது. எம்மால் என்ன என்ன உதவிகள் செய்ய முடியுமோ அத்தனையும் உங்களுக்காக மட்டுமல்ல ஈழத்தின் விழுமியங்களை, விழுதுகளை காப்பாற்றவும் செய்ய காத்திருக்கிறோம்.

 22. அன்பின் விசாகன்

  இப்படியான படைப்பாளிகளின் திடீர்ப்பிரிவை உண்மையில் எதிர்பார்க்க முடியாக் கவலை ஏற்படுத்தி விடும். எங்களால் முடிந்தவரை இவர்களை ஆவணப்படுத்துவோம். சிவத்தம்பி அவர்கள் சொன்னது போல நூலுருவில் இவர் படைப்புக்கள் வெளிவர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *