புலிகளின் குரல் – “வரலாறு திரும்பும்”

வழக்கம் போல கணினிக்கு முன்னால் வந்து அமர்ந்து வேலை பார்க்கும் போது அருகில் இருந்த Sagem இணைய வானொலிக் கருவியை முடுக்கி விடுகின்றேன். அதில் வானொலி விருப்பப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு தமிழ் வானொலியாக வந்து “புலிகளின் குரல்” வானொலியில் வந்து நிற்கின்றது. அதுவரை ஒவ்வொரு ஸ்டேஷனாக மாற்றும் போது விதவிதமான குரல்களையும், பாடல்களையும் அந்தந்தக் கணத் துளிகளில் பாய விட்ட வானொலிப் பெட்டி இப்போது வெறும் மயான அமைதியை மட்டும் காட்டிக் கொண்டிருக்கிறது.

தொண்ணூறாம் ஆண்டுப் பகுதி, அப்பவெல்லாம் ஆல் இந்தியா ரேடியோவும், இன்னொரு பக்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமுமாக மட்டுமே செவிக்குணவு கிடைத்தது. அதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சொல்லவே வேண்டாம். மத்தியானம் பிளேனால் குண்டு போட்டு அதில் செத்துப் போன கிழவர்களையும், குழந்தைகளையும் மாலைச் செய்தியில் புலிகளின் லெப்டினெண்ட் கேர்னல் தரத்துக்கு பதவி உயர்த்திப் பட்டியலிட்டுப் பயங்கரவாதிகள் ஆக்கிச் செய்தி படிக்கும். இது போதாதென்று “மக்களின் குரல்” என்ற மகா மட்டமான வானொலித் தயாரிப்பொன்றை வழங்கித் தன் தலையில் மண்ணள்ளிப் போடும்.

இந்த நேரம் முளைத்தது தான் புலிகளின் குரல். ஆரம்பத்தில் இரவு எட்டு மணியில் இருந்து ஒன்பது மணி வரை மட்டுமே தன் இருப்பை வைத்திருந்தது. பிரேமதாசா அரசின் தேனிலவுக்காலத்தில் வாங்கி வைத்து கொஞ்சக் காலம் ஒப்பேற்றிய பற்றறிகளும் தீர்ந்து விட எமக்குக் கிடைத்த அடுத்த மின்சக்தி உபகரணம் கார் பற்றறிகள், அதுவும் எல்லா இடமும் தீர்ந்து விட, அடுத்து வந்தது சைக்கிள் டைனமோ. சைக்கிளைத் தலைகீழாகக் குத்தி விட்டு ஒருவர் சைக்கிள் பெடலைச் சுழற்ற டயரில் மோதும் டைனமோ பிறப்பிக்கும் மின்சாரம் வயர் வழியே பாய்ந்து வானொலியை உயிர்ப்பிக்கும்.

அந்த இரவு நேரங்களின் நிசப்தத்தைக் கலைத்து எல்லா வீடுகளிலும் இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணி வரை புலிகளின் குரல் பாயும். அந்த ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு நிமிடத்துளிகளையும் போராளிகளின் வீரச்சாவு, களம் கண்ட கதைகள், குறு நாடகங்கள் , செய்திகள், தாயக எழுச்சிப்பாடல்கள் விபரணச் சித்திரங்களாகச் செதுக்கித் தந்தது இந்த வானொலி. அது தவிர மாவீரர் வாரம் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது நேர நீடிப்புச் செய்து பகல் வேளைகளிலும் தன் ஒலிபரப்பை அது தரும். புலிகளின் குரல் வானொலிப் பணிமனை

யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டிலும், தட்டாதெருச் சந்தியிலும் என்று முக்கியமான கேந்திரங்களில் பெரும் ஒலிபெருக்கி பொருத்தி இந்த வானொலி தன் ஒலிபரப்பை எல்லோருக்கும் காற்றலையில் தவழ விடும்.

புலிகளின் குரல் வானொலிக் கலையகத்தினுள்

சந்தனக்காடு போன்ற பல பிரபலமான நாடகங்களைப் பிரசவித்துப் பின்னர் இந்த நாடகம் வெளிநாடுகளில் வேறு ஆட்களால் மேடையேற்றிப் போடும் அளவுக்குப் பிரபலத்தை உருவாக்கியது இந்த வானொலி நிகழ்ச்சிகளின் தரம். புலிகளின் குரல் வானொலியில் இடம்பெற்ற பாடல்களை ஒலிப்பதிவு செய்து பின்னர் வவுனியாவில் பெடியளோடு குருமன்காட்டில் கொஞ்ச நாள் இருந்த போது கேட்ட நினைவுகள் நேற்று போல இருக்கிறது. வவுனியாவிலும் ஒலிபரப்பு வருகுதாம் என்று களவாக மீட்டர் பிடிச்ச 93 ஆம் ஆண்டும் சாகும் வரை மறக்கமுடியாது. புலிகளின் குரல் வானொலியின் பரிமாணம் எத்தகையது என்பதை எனது தாயக வாழ்வியலுக்குப் பின் அதிக காலம் இருந்த சக நண்பர்கள் நிறையவே சொல்லுவார்கள்.

என்னதான் யதார்த்தம் பேசினாலும் அற்ப மனம் விடாது இல்லையா, அடிக்கடி புலிகளின் குரல் தளத்துக்குப் போய்ப் பார்க்கும் அவா விடாது போல. ஆனால் அதுவோ மே ஒன்பதாம் திகதிக்குப் பின்னர் அழுக்குடையோடு மெளனமாய் நிற்கிறதே 🙁

எங்கோ பிறந்து, சுற்றிச் சுழன்று நானும் வானொலிப் பணிக்கு வரவேண்டும் என்ற தலையெழுத்தின் நிமித்தம் 11 ஆண்டுகளைக் கழித்து விட்டாயிற்று. இந்த இடைப்பட்ட காலத்தில் நான்கு வருஷங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் புலிகளின் குரல் வானொலி நாடகங்கள் இரண்டு. அதில் ” வரலாறு காத்திருக்கும்” என்ற நாடகத்தை ஒலிப்பேழையில் இருந்து கணினிக்கு மாற்றி உங்களோடு பகிர்கின்றேன். அந்த ஒலிப்பேழையில் குறுகலாகத் தன் பேனா எழுத்துக்களில் நிரப்பியவரும் சரி, இந்த நாடகத்தில் பங்கு கொண்டவர்களும் சரி இன்னும் இருக்கிறார்களா, மீண்டும் வருவார்களா எதுவும் தெரியாத நிலையில்
நாடகத்தை எழுதியவர்: போராளி தமிழ்க்கவி
நாடகத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள்
மூதாட்டி: வனஜா
கமலம்: கலையரசி
சிறுவயது சேய் – டிலானி
மதன் – கண்ணன்
செந்தூரன் – ரதன்
வளர்த்த சேய் – விதிகுகன்
நிகழ்ச்சித் தயாரிப்பு
க.சிவராசா
கப்டன் துஷான்
போராளி ஜீவகன்
கலையரசி

“வரலாறு திரும்பும்” நாடகத்தைக் கேட்க


கடந்த நவம்பர் 2007 இல் புலிகளின் குரல் பணிமனை அழிக்கப்பட்ட போது

புலிகளின் குரல் வானொலிப் பணிமனை, வானொலிக் கூடம் படங்களைப் பிரத்தியோக ஆல்பத்தில் இருந்து தந்துதவிய நண்பர் சயந்தனுக்கு நன்றி.

26 thoughts on “புலிகளின் குரல் – “வரலாறு திரும்பும்””

 1. புலிகளின் குரல் சில நாட்களுக்கு முன்பு ஒரு முறை ரியல் பிளேயரினை திறந்தப்போது தானாகவே ஏற்றம் ஆகி மவுனமாகிப்போன சத்தம் மட்டுமே கேட்டு மவுனமாகிப்போனேன்! முன்பு ஒரு முறை இயக்க படபாடல்களை கேட்க வேண்டி என் ஈழத்துநண்பரின் விருப்பமாய் இருந்தது !

  🙁

 2. 90 களின் தொடக்கத்தில் தளிர்கள் என்ற நிகழ்ச்சியில் சிறுபையனாக குரல்கொடுத்து – 96 களில் கவிதை வாசித்து – பிறகும் அவ்வப்போது தொடர்பில் இருந்தது இந்தவானொலி. கடந்தவருடம் நடுப்பகுதியில் எரியும்நினைவுகள் அறிமுகமொன்றை புலிகளின் குரலுக்கு செய்திருந்தேன். வாராவாரம் இப்படியொன்றை செய்யச்சொல்லி – கேட்டபோது காலம்சரியாகட்டும். கண்டிப்பாகச் செய்வோம் என்றிருந்தேன். ஆங்காங்கே சில வானொலிகளில் குரல்வெளிவந்துவிட்டபோதும்.. நீண்ட 12 வருடத்திற்குபிறகு. – அந்த தாயக காற்றலைகளில் குரல் வந்ததென்பது அன்று முழுமைக்குமான மகிழ்ச்சியாக இருந்தது.

  pulikalinkural என்ற பெயரிலும் . nilavan arivan என்ற பெயரிலும் இரண்டு மெசஞ்சர் ஐடிகள் பச்சையாய் இப்போது மின்னுவதில்லை. மே.. 12 அதிலொன்று பிரியாவிடை தாங்கோ எனச்சொல்லி ஸ்மைலி போட்டதை மறக்கமுடியாது.

  இந்தப்படங்களை 2002 – புலிகளின்குரல்வானொலியை விரிபுபடுத்திய போது சென்று எடுத்திருந்தேன்.
  எந்த கணணி வசதியும் அற்று – 96 ம்வருடம் இன்ன மாதம் இன்னதிகதி என அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே அதனை எடுத்துதந்த – தரமான ஆவணக்காப்பகம்..

  எல்லாம் போயின..

 3. 90 களின் ஆரம்பத்தில ஒரு சைக்கிளில் சுற்றி வானொலி கேட்கும் வழக்கமாக கொண்டிருந்தனர். நான் தமிழீழ வானோலிதான் அதிகம் கேட்பதுண்டு அதில் வியாழன் தோறும் நடைபொறும் பொது அறிவு வினாவிடை நண்பர்களாக சேர்ந்து கேட்பதுண்டு பின்னர் சமாதான காலத்திலும் புலம்பெயர்ந்த பின்பு இணையத்திலும் கேட்டு வந்தேன் இன்று 🙁

 4. பதிவை வாசித்து முடித்த போது மனம் வெறுமையாகிவிட்டது.
  எவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைந்த வானொலி எம் கண்ணுக்கு முன்னால் இல்லாமல் போய்விட்டது என்பதை மனம் ஏற்றுக்கொள்ளுதில்லை.
  அறிவிப்பாளர்களது குரலை கேட்பதுக்காக நாம் ஒவ்வொரு நாளும் எப்போது 8 மணி
  வரும் என காத்துக்கொண்டு இருப்போம்.
  செய்திக்கு முன் போடப்படும் இசை இப்பவும் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

  டைனமோவை சுற்றி வானொலி கேட்ட அனுபவங்கள் மறக்கமுடியாதவை.

 5. //சைக்கிள் டைனமோ. சைக்கிளைத் தலைகீழாகக் குத்தி விட்டு ஒருவர் சைக்கிள் பெடலைச் சுழற்ற டயரில் மோதும் டைனமோ பிறப்பிக்கும் மின்சாரம் வயர் வழியே பாய்ந்து வானொலியை உயிர்ப்பிக்கும்.
  ..//
  இந்த நாட்களை மறக்க முடியுமா ? சைக்கிள் பெடலைச் சுழற்றும் வேலை எப்போதும் என் தலையில் தான் விழும் .. என்னை ஏமாற்றி சுத்த வைத்து விடுவார்கள் என் சகோதரன்கள் 🙁

  மீண்டும் நிச்சயமாய் எழுவோம் …வரலாறு திரும்பும்!

 6. பிரபா முடியல பிரபா..
  எனக்கு நாடகத்தை கேட்கவே முடியல…3 நிமிடம் தாண்டுவதற்க்குள் நாடகம் தாண்டி பறந்த நினைவுகள்…வெடித்துக்கிளம்ப ஒவென்று அழ வேண்டும் போல இருக்கிறது. இப்ப 3 மணி அதிகாலை….கனவிலும் நினைக்காத கொடுரம் யார் இருக்கிறார்கள் இல்லை..
  என்னாயிற்று எம் மக்களுக்கும் தேசத்திற்க்கும். புலிகளின் குரலின் எப்போது போனாலும் கிடைக்கும் இரச்சிகறியும் சோறூம் என் நண்பர்கள்..அய்யோ பிரபா…

 7. மனம் கனக்கிறது பிரபா , புலிகளின் குரல் கேட்டு அதில் அறிமுகப்படுத்தும் இயக்கப் பாட்டு கேட்டு மறுநாள் பாடசாலையில் அதைப் பற்றி உரையாடுவது ஹ்ம்ம் , அதன் பிறகு தமிழீழ வானொலி ….
  ஹ்ம்ம் எல்லாவற்றையும் இழந்து விட்டோமா ?

 8. //pulikalinkural என்ற பெயரிலும் . nilavan arivan என்ற பெயரிலும் இரண்டு மெசஞ்சர் ஐடிகள் பச்சையாய் இப்போது மின்னுவதில்லை. மே.. 12 அதிலொன்று பிரியாவிடை தாங்கோ எனச்சொல்லி ஸ்மைலி போட்டதை மறக்கமுடியாது.//
  🙁

 9. நான் ஈழத் தமிழன் இல்லை.

  இருப்பினும் வரலாறு திரும்பும் என்னைக் கவர்கிறது.

  வரலாறு திரும்ப வேண்டும் என்று மனது ஏங்குகிறது.

 10. நண்பரே,

  இந்த நாடகத்தை எம்பி3 வடிவத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் தர முடியுமா?

  அன்புடன் ஒளிர்ஞர்

 11. உயிர்நேயம் said…

  நண்பரே,

  இந்த நாடகத்தை எம்பி3 வடிவத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் தர முடியுமா?

  அன்புடன் ஒளிர்ஞர்//

  வணக்கம் நண்பரே

  kanapraba@gmail.com இற்கு தனிமடல் ஒன்று இடுங்கள் மின்னஞ்சல் வழி அனுப்பி வைக்கிறேன்.

 12. ஆரம்பித்த நாளிலிருந்து எத்தனை இடப்பெயர்வுகள்.. எத்தனை இழப்புக்கள்.. ஆயினும் ஓர் நாள் கூட மௌனிக்காத புலிகளின் குரல் இன்று மௌனமாகி மயான அமைதியுடன்….

 13. புலிகளின் குரல் முன்பெல்லாம் எமக்கு பரிச்சயப்பட்ட வானொலி. பின்னர் இடப்பெயர்வுகள் மூலம் நாமும் அதனை பிரிந்துவிட்டோம். இப்போது இணையம் எம்மையும் புலிகளின் குரலையும் இணைத்துள்ளது. அந்தக்காலத்தில் சில நிகழ்ச்சிகள் எப்போதும் மனத்தில் பதிபவையே. களத்தில் இருந்து, மாவீரர் நினைவாக, நாடகங்கள், வில்லிசை, கருத்துக்களம் என எல்லாமே இன்னும் மனதிலே பதிந்தே உள்ளன. எமது விடுதலை வேட்கை உண்மையானது. அது வரலாறினை மீண்டும் கொணரும். அதுவரை காத்திருப்போம். முகாம்களில் வாடும் மக்களுக்காயும், சரணடைந்து அவஸ்தை படும் மகளிர் மற்றும் ஆண் மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.

  கானா பிரபா. நன்றி. மீண்டும் நினைவு படுத்தினீர்கள்.

 14. சத்தியா, ரட்ணா, திருமாறன், இன்னும் இன்னும் அவர்களுடனும் நிதர்சனம் வீரா, குயிலினி, பிரமிளா என்ற அன்பு உறவுகளுடனும் சேர்ந்து உறவாடிய பொழுதுகள். அவர்களின் ஆற்றல் கண்டு வியந்த கணங்கள். உண்டு களித்த நிமிடங்கள், பயணம் செய்த பாதைகள் எதுவுமே என்னை விட்டு அகலவில்லை. இப்பொழுது எங்குற்றீரோ தெரியா? எங்கிருந்தாலும் உங்களுக்காக இங்கே இதயங்கள் கனத்துக்கொண்டுதான் இருக்கும். ஊரை விட்டு வந்து யாழ் பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் இருந்த போது மணிக்குரல் விளம்பர ஒலிபெருக்கி மூலம் தொடங்கியது புலிகளின் குரலின் நேசம். செய்திக்கு முன்னதாக வரும் குறியிசை வீரமணி ஐயா அவர்களின் உருவாக்கம். எல்லாம் இப்படி ஆகிவிட்டதே…….!

 15. பிரபா அண்ணா, எங்கட வீரமணி ஐயர் போட்ட புலிகளின் குரல் செய்தி அறிகையிண்ட தொடக்க இசையை மறக்கேலுமோ?

 16. ஞாபகங்கள் மழையாகும்
  ஞாபகங்கள் குடையாகும் (ஏதோ ஒருபடத்தில் வந்த பாடலொன்றின் இந்த வரிகள் போல எல்லாம் ஞாபகங்களாகத் தேங்குகிறது.

  சாந்தி

 17. //Anonymous சயந்தன் said…
  pulikalinkural என்ற பெயரிலும் . nilavan arivan என்ற பெயரிலும் இரண்டு மெசஞ்சர் ஐடிகள் பச்சையாய் இப்போது மின்னுவதில்லை. மே.. 12 அதிலொன்று பிரியாவிடை தாங்கோ எனச்சொல்லி ஸ்மைலி போட்டதை மறக்கமுடியாது. //

  இப்படி எத்தனையோ ஸ்கைபிகளும் இல்லாமல் அவர்கள் வருவார்களா என்ற எதிர்பார்புகளோடு நிறையவே நினைவுகள்…….

  சாந்தி

 18. மனம் கனக்கின்றது பதிவை படித்தவுடன்…

  பதிவின் தலைப்பு தான் பலரின் அவாவும்…
  நம்புவோம்….

 19. வரலாறு திரும்பும்..
  http://pulikalinkural.com/

  எதிர்வரும் யூலை 5ம் திகதி முதல் மீண்டும் ஒலிக்கிறது புலிகளின்குரல் இணையத்திலும் செயற்கைகோளிலும்..

 20. //எதிர்வரும் யூலை 5ம் திகதி முதல் மீண்டும் ஒலிக்கிறது புலிகளின்குரல் இணையத்திலும் செயற்கைகோளிலும்..//

  Thanks for the information

 21. நான் ஈழ தமிழனாக இல்லாவிட்டலும் தமிழ்நாட்டிலிருந்து 1988 களில் புலிகளின் வானொலியய் சிற்றலை வரிசயில் கேட்பேன் . அந்த அழகான தமிழ் உச்சரிப்புக்க்காகவும் , நிகழ்ச்சிகளை தொகுத்து அளிக்கும் சிறப்புக்கும் எந்த வானொலிகளும் ஈடாகாது .சிற்றலை வரிசை என்பதால் ஒலி ஏற்றம் இறக்கம் இருந்தாலும் அப்போது கேட்டதை இப்போதும் பசுமையாய் என் நினைவை விட்டு அகலாமல் உள்ளது . அப்போது சிலசமயம் சைத ஒலிபதிவை உங்களுக்கு mp3 வடிவில் மினஞ்சலில் அனுப்பி வைக்கிறேன் .தமிழ் தட்டச்சு தெரியாது . தவறு இருக்கும் . மன்னிக்கவும் . எழில் மாறன். பெங்களூர் ezilmaran@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *