அடுத்த பிறவியில் பூனையாய் பிறப்போம்!

மூன்று வாரங்களுக்கு முந்திய ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு.
இலக்கமற்ற பிரைவேட் நம்பர் ஒன்றின் மூலம் என் கைத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகின்றது. “கொட்டி (புலி)” என்று ஆரம்பித்து ஏதேதோ சிங்களத்தில் வசவு வார்த்தைகளாக வந்து விழுகின்றது. நான் நிதானிப்பதற்குள் அந்தத் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது.

இது நடந்து அடுத்த ஞாயிறு காலை உடற்பயிற்சி நிலையத்துக்குக் காலை செல்லும் போது அதுவரை அணைத்திருந்த கைத் தொலைபேசியை விழிக்க வைக்கிறேன். முந்திய சனி இரவு 11.09 இற்கு என் கைத் தொலைபேசியில் ஒரு மெஜேச் பதிவாகியிருக்கிறது, அதுவும் சிங்களத்தில். நேரே சிங்களம் தெரிந்த நண்பர் வீட்டுக்கு என் காரைச் செலுத்தி, அவர் முன் அந்த கைத் தொலைபேசியில் பதிவான தகவலை ஒலிக்க விடுகின்றேன்.
“உங்களை எல்லாம் கொல்லாமல் விட மாட்டோம், சரியா?” இது தான் அந்தச் சிங்களப் பேச்சின் சாராம்சம்.

எனது கைத் தொலைபேசியின் நிறுவனத்துக்கு அழைக்கிறேன். எல்லாவற்றையும் விபரமாகக் கேட்ட மறுமுனை வாடிக்கையாளர் சேவைக்காரர் “இந்தப் பிரச்சனைக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்” என்று தொடங்கி ஏற்கனவே பாடமாக்கியிருந்ததை கிளிப்பிள்ளை போல ஒப்புவிக்கிறார்,
1. உங்கள் தொலைபேசி இலக்கத்தை மாற்றுங்கள் (இலக்கத்தை மாற்றினால் மட்டும் என் புது இலக்கத்தைத் தேடி எடுப்பது அவ்வளவு கஷ்டமா என்ன?)
2. பொலிசாருக்கு ஒரு புகார் கொடுத்தால் அவர்களுக்கு இந்த அனாமோதய அச்சுறுத்தல் யாரால் வந்தது என்ற விபரங்களைக் கொடுப்போம்.

இதை விட வேறு ஏதாவது உதவி தேவையா என்று தேனாகப் பேசுகிறது மறுமுனை. இதுவே போதும் என்று வெறுப்போடு தொலைபேசியின் வாயை மூடுகிறேன்.

ஆற்றாமை, கோபம் எல்லாம் கிளப்ப நேரே எங்கள் பிராந்தியப் பொலிஸ் நிலையத்துக்குக் காரைச் செலுத்துகின்றேன்.
ஒரேயொரு இளம் பொலிஸ்காரர் அங்கே கடமையில் இருந்தார்.
இதுவரை வந்த அநாமோதய அழைப்புக்களைப் பற்றிய விபரங்களையும் சொல்லி, ஏற்கனவே பதிவான அந்தத் தகவலையும் ஒலிக்க விடுகிறேன். எல்லாவற்றையும் கேட்ட அந்த பொலிஸ்காரர்,
“சரி நான் ஒரு புகாரைப் போடுகிறேன் ஆனால் என் மேலதிகாரி தான் ஏதாவது செய்யவேணும், ஆனால் இது மாதிரி புகாருக்கெல்லாம் நடவடிக்கை எடுப்பாரா என்பது சந்தேகமே” என்று சொல்லி வைத்தார்.

“தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், இந்த நாட்டில் இப்படியான கேவலமான காரியங்களைச் செய்பவர்களைக் கண்டித்து வையுங்கள், எனக்கு இந்த நபர் யார் என்று சொல்லத் தேவையில்லை” என்று இறைஞ்சுகிறேன்.

“ஒகே பார்க்கலாம்” என்று என் நேரம் முடிந்ததாகக் குறிப்பால் உணர்த்துகிறார் அந்தப் பொலிஸ்காரர்.

வீட்டுக்கு வந்து இரு மணி நேரம் கழித்து மீண்டும் அந்த பொலிஸ் நிலையத்துக்கு போனில் அழைக்கிறேன். அதே பொலிஸ்காரர் தான் மறுமுனையில்
“என் புகாரில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா சேர்” என்று வினவுகிறேன்.

“என் மேலதிகாரி சொல்லிவிட்டார் இதுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாதாம்”

“ஏன் என்று அறியலாமா”

“இது மாதிரி ஒரு நாளைக்கு நூறுக்கு மேல் புகார் வருது, இதுக்கெல்லாம் நாங்கள் எங்கள் நேரத்தை செலவிட முடியாது”

“ஆனால் எனக்கு இரண்டாவதாக வந்தது கொலைப் பயமுறுத்தல் ஆயிற்றே”

“இப்படி போனில் பேசுபவன் எல்லாம் கொலை செய்ய மாட்டான்”

“ஒருக்கால் அடுத்த முறை அவன் சொன்னதை செய்து காட்டினால் என்னவாகும்?”

“திரும்பவும் சொல்கிறேன், சொல்பவன் எல்லாம் செய்ய மாட்டான்”

“சேர்! நான் கடந்த 12 வருஷகாலமாக இந்த நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட குடிமகன், என்னைக் காப்பது இந்த நாட்டின் காவலர்கள் உங்கள் வேலை இல்லையா”

“லுக்! என் நேரத்தை விரயமாக்க வேண்டாம், பயமாக இருந்தால் வந்து எங்கள் பொலிஸ் ஸ்ரேசனில் வந்து தங்கு”

“சரி! நான் கொடுத்த புகார் மனுவின் விபர இலக்கத்தை எடுக்கலாமா?”

ஒரு ஐந்து நிமிடம் கழித்து “இதோ எழுதிக் கொள்” என்று அப்போது தான் புகாரைத் தயார் பண்ணியது போலச் சொல்லி முடிக்கிறார்.

எனது ஆற்றாமை ஓயவில்லை. எமது பிரதேசத்தைக் கட்டுப்படுத்தும் காவல்துறை கண்காணிப்பு மேலிடத்துக்கு தொலைபேசுகிறேன். மறுமுனையில் இன்னொரு பொலிஸ்காரர்.
மீண்டும் ஆரம்பத்தில் இருந்து எல்லாம் சொல்லி முடிக்கிறேன். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டு விட்டு அவர் சொல்கிறார் இப்படி,
“உனக்கு முதலில் அந்த பொலிஸ்காரர் சொன்னாரோ அதுதான் எங்கள் பதிலும்”

“உங்கள் மேலதிகாரி யாருடனாவது பேசமுடியுமா சேர்?”

“காத்திரு”

மீண்டும் ஒரு சுழற்சிக்குப் பின் என் தொலைபேசி போய்ச் சேர்ந்த இடம் அந்த ஆரம்பத்தில் புகார் கொடுத்த பொலிஸ்காரருக்கே மாற்றப்படுகிறது. என் குரலைக் கண்டு கொண்ட அவர்
“முதல் என்ன சொன்னேனோ அவ்வளவு தான், இந்தப் புகாருக்கெல்லாம் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு நேரமில்லை”.

மேலே சொன்ன சம்பவம் எல்லாம் இப்போது தாயகத்தில் நடக்கும் நிகழ்வுகளோடு ஒப்பிடும் போது கால் தூசி பெறும். ஆனால் சிறீலங்கா இனவாதம் இப்போது நகர்ந்திருப்பது சிறீலங்காவுக்கு வெளியே என்பது போல இதை விட எத்தனையோ சம்பவங்கள் அரங்கேற ஆரம்பித்து விட்டன. மெல்பனில் கார்ப்பவனியில் போன தமிழர்களை நோக்கி சிங்கள இளைஞர்கள், யுவதிகள் நடத்திய காடைத்தனம், சென்ற வாரம் மெல்பனில் ஒரு இந்தியத் தமிழரை ஈழத்தமிழர் என்று நினைத்து சிங்களவர்கள் தாக்கிய கொடூரம், சிட்னியில் உணர்வெழுச்சி நிகழ்வுக்குப் பயணித்த இளைஞர்களை சிஙகளக் காடையர் தாக்கியது (ஆதாரம்), சிங்களவர் கடைகளை சிங்களவர்களே உடைத்து விட்டு பழியை ஏதிலித் தமிழன் மீது போடுவது என்று இப்போது இந்த எல்லை தாண்டிய இனவாதம் கனகச்சிதமாக ஆரம்பித்திருக்கிறது.

ஈழத்தமிழன் அவுஸ்திரேலியப் பிரஜை என்றால் என்ன, அமெரிக்க பிரஜை என்றால் என்ன நீ பூனையை விடக் கேவலம், அதுக்கும் ஒரு சம்பவம் இருக்கே.

2005 ஆம் ஆண்டில் ஒரு நாள், நான் இருக்கும் நகரத்துக்கு அடுத்த நகரமான செவன் ஹில்சில் நான்கு விடலைப் பையன்கள் சேர்ந்து ஒரு பூனையைத் துன்புறுத்தியதற்காக $22,000 அவுஸ்திரேலிய வெள்ளிகள் தண்டப்பணமும், 2 வருஷ சிறைத் தண்டனையும் கிடைத்தது. ஆதாரம்

ஆண்டவா! அடுத்த பிறவியிலாவது என்னைப் பூனையாகப் பிறக்க வை.

000000000000000000000000000000000000000000000000000000000000000000

1995 ஆம் ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒரு நாள். இருபதுகளின் ஆரம்பத்தில் என் வயது அப்போது. அவுஸ்திரேலியா வந்து ஒரு சில வாரங்கள் கடந்திருக்கும். அதுவரை அண்ணன் அனுப்பிய பணத்தில் படிக்க ஆரம்பித்துப் பின் குற்றவுணர்வு உறைக்க ஆரம்பித்த நாள் அது. அப்போது இங்கே வேலை தேடித் தர அரசாங்கத்தின் முகவர் நிறுவனமாக C.E.S என்ற அமைப்பே இருந்தது. அந்த அமைப்புக்குப் போய் வேலைவாய்ப்புப் பட்டியலைப் பார்க்கின்றேன். எல்லா வேலைகளுக்குமே “experience required” என்று அடியில் ஆப்பு வைக்கப்பட்டிருந்தது. தேடிச் சலித்த என் கண்களுக்கு ஒரு வேலை விபரம் கண்களைக் குளிர வைத்தது.
“ஒரு சிறீலங்கன் மளிகைக் கடைக்கு ஆள் தேவை, சிறீலங்கனாக இருப்பது விரும்பத்தக்கது”
அவ்வளவு தான் பக்கென்று அந்தக் கடை குறித்த விபரங்களை வேலைவாய்ப்பு அலுவலகரிடம் பெற்றுக் கொண்டு அடுத்த நாள் அந்தக் கடைக்குப் போகின்றேன்.

நான் வருவது குறித்து ஏற்கனவே அந்த வேலைவாய்ப்புப் பணியகம் அந்தக் கடைக்காரரிடம் சொல்லி வைத்தது போல. கல்லாப் பெட்டிக்குப் பக்கத்தில் நின்ற அந்த நபர் தான் கடை முதலாளி என்று எழுதி ஒட்டாமலே தெரிந்தது. கையோடு கொண்டு போன என் விபரத்தைக் கொடுக்கிறேன்.

என் விபரங்கள் எல்லாவற்றையும் முழுசாகப் பார்த்து முடித்து விட்டு
“அதோ அங்கே நிற்கிறாரே அவர் தான் முதலாளி என்று ஆங்கிலத்தில் பேசி கடையின் உட்புறம் மூட்டைகளை அடுக்கிக் கொண்டு நின்ற ஒரு வயதான பெனியன் மட்டும் அணிந்த கிழவரைக் காட்டுகிறார்.
நான் போய் அவர் முன்னால் நிற்க, அந்தக் கிழவரோ ஏன் இவன் எனக்குப் பக்கத்தில் நிற்கிறான் என்று தெரியாமல் விழிக்க, நான் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கிறேன். அவர் விழுந்து விழுந்து சிரித்து விட்டு குறும்பாக, முன்னே கல்லாப்பெட்டிக்குப் பக்கத்தில் நின்ற அந்த முதலாளியைப் பார்த்து முறுவலிக்கிறார்.

நான் அதை உணர்ந்தது போல அசட்டுச் சிரிப்புடன் மீண்டும் அவரை நோக்கிப் போகின்றேன்.

“நான் சிறீலங்கன் விரும்பத்தக்கது என்று அந்த விளம்பரத்தில் போட்டது சிங்களவராக கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தான்” என்று சொல்லிச் சிரித்து வழியனுப்பாமல் அனுப்புகிறார் அந்தக் சிங்களக் கடைமுதலாளி.

“ஓ சிறீலங்கன் எண்டா சிங்களவன் மட்டுமாம், சரி” மனசுக்குள் சொல்லியவாறே மீண்டும் வேலைவாய்ப்புப் பணியகம் நோக்கி நடையில் பயணிக்கிறேன்.
மேலே இருந்து சூரியன் சிரித்துக் கொண்டிருந்தான்.

(மேலே சொன்ன சம்பவங்கள் யாவும் உண்மையே)

34 thoughts on “அடுத்த பிறவியில் பூனையாய் பிறப்போம்!”

 1. என்ன அண்ணா,
  வாசிக்க கவலையாக இருக்கிறது.
  தமிழரைக் காப்பாற்ற கடவுளாலும் முடியாதா?
  எவ்வளவு வேதனைகள்.
  அவமானங்கள்.

 2. தலைவர் பிரபாகரன் இல்லை என நினைத்து கொண்டு சிங்கள நாய்கள் ஊழமிடுகிறது . இதன் வழியை சிங்களம் ஒரு நாள் தெரிந்து கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது

 3. கவலை தரும் நிகழ்வுகள்.
  காவல்துறை ஓரளுவுக்கு மேல் செய்வதற்கு ஆற்றல் இல்லை என்பது பெரும்பாலன நாடுகளில் இருக்கும் நிலையே.

 4. “ஓ சிறீலங்கன் எண்டா சிங்களவன் மட்டுமாம், சரி”//

  ம்…
  நிலமை…

  அந்த நாட்டுக்கு முதலில் குடியேறியவன் ஒரு தமிழன் என்று தெரியாதோ என்னவோ…

 5. வா பகையே… வா…
  வந்தெம் நெஞ்சேறி மிதி.
  பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
  வேரைத் தழித்து வீழ்த்து.
  ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
  நினைவில் கொள்!”

  ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
  ஆயினும் போரது நீறும், புலி
  ஆடும் கொடி நிலம் ஆறும்.
  பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
  பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
  பைகளும் ஆயுதம் ஏந்தும்.
  மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
  மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
  சிங்கள கூட்டங்கள் ஓடும்.

  Paaya Theriyum.Pathunga Theriyum. Payapada Theriyaathu.

  Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

  ( Nile Raja )

 6. முதல் சம்பவத்தை விட 2வது சம்பவம் மிகப் பெரும் கொடுமை.

  //நான் அதை உணர்ந்தது போல அசட்டுச் சிரிப்புடன் மீண்டும் அவரை நோக்கிப் போகின்றேன்.
  //

  என்னால் இந்த வலியை மிகச் சரியாக உணர முடிகிறது சகோதரா.
  எதற்கோ தெரியவில்லை .. ஆனால் கேட்கத் தோன்றுகிறது : ”மன்னித்துவிடு” 🙁

 7. இதயம் கனத்துப் போகிறது. இவ்வளவுநாட்களாக உங்கள் மனதிற்குள் இது கனன்றுக் கொண்டிருந்திருக்கிறது என்றெண்ணும்போது….நிச்சயம் உங்கள் மனஉறுதி வெல்லும் நாள் தொலைவில் இல்லை!!

 8. கொடுமை கொடுமை. எல்லா இடத்துலேயும் சிங்களவர்கள் ஒரே மாதிரியா இருக்காங்களே. அவர்களுக்குள்ள ஒரு பேதமே இல்லையா?

 9. கானா,

  சிறீலங்கத்(ஈழ) தமிழர்களுக்கு எவ்விதத்திலும் ஒத்துழைக்கவேண்டாமென அவுஸ்திரேலிய அரசாங்கம் வாய்வழியாக பொலிசாருக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். என்னுடைய நண்பரும் முன்னாள் மேயருமான ***** மூலமாக…என்னால நம்ப முடியவில்லை காரணம் அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி அந்த மாதிரி.

  ஆனால் தற்போது, அதாவது கிரிபில்லி அமைதிப்போராட்டத்தின்முதல் நடைபெறும் சம்பவங்களைப்பார்க்கும் போது நம்பாமல் இருக்கமுடியவில்லை. இவ்வாறான நிலையில் நீங்கள் அணுகவேண்டியது மக்கள் உரிமைக்கான டிரைபூனல் மட்டுமே. பொலிசாரை நோவதில் ஏதும் நடக்காது மேலும் இப்பதிவை ஆங்கிலத்தில் போடுவது நல்லது. ஒரு முறை ஃபேர்ஃபீல்டில் நடந்த(சிங்களவனுக்கும் இந்திய தமிழர்களுக்கும்) வன்முறையின் போது கூட ஒரு சீருடையணிந்த பொலீஸ் கூறிய வாக்கியங்கள் இவை.
  You black ppl come here and fight each other spoiling the tranquility and peace of our country. இதற்காகவேனும் அவர் மீது ரேஸிஸ்ட் குற்றம் சுமத்தியிருக்கலாம் ஆனால் அன்றைய தினத்தில் இருந்த சூழ்நிலை சார்ஜ் செய்யாமல் விட்டால் போதுமென்பதேயாகும்.

 10. “ஓ சிறீலங்கன் எண்டா சிங்களவன் மட்டுமாம், சரி”…..ம்ம்ம்ம்ம்

  சமிபத்தில் என் நண்பி (தன் ஏழு வயது மகனுடன் ) கொழும்பில் கடை தெருவுக்கு போன போது ,சிங்கள இளையர்கள் மிகவும் கேலி செய்ததாகவும் ,இனி உங்களுக்காக யார் வரப் போகினம் என்று சொல்லியதாகவும் ..கூடவே மறந்து போய் “பொட்டு” உடன் போய்விட்டன் நான் எனவும் சொன்னாள்… எம் சுய அடையாளத்தை கூட சிங்களவனுக்காய் மறைக்க வேண்டியுள்ளது ..

  பூனையாய் பிறப்பது எவ்வளவோ மேல் என்று தான் தோன்றுகிறது …எந்த மிருகமும்,தன் இனத்தையே அழித்து வெற்றி கொண்டாடுவதில்லையே ..

 11. இந்த இரண்டு மூன்று நாட்களாக அமெரிக்காவில் இருக்கும் எனக்கு முகவரி தெரியாமல் வரும் மின்னஞ்சல்கள் பல. இறந்த உடல், முகம், இனி உங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம். இலங்கைக்கு வரலாம். Let’s celebrate என்றெல்லாம். எங்கள் மனப் பாரங்களில் அமைதியாகக் கண்ணீர் உகுக்கும் எங்களைச் சீண்டி விடுவதில் என்ன ஆனந்தம் காண்கிறார்களோ? இன்னும் இப்படி எத்தனையோ…

 12. அவமானபடுத்தப்படும் போது ஏற்படுகின்ற வலி நான் அறிவேன் பிரபா ..உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது

 13. என்ன சொல்வது? எப்படி சொல்வது?

  ஏன் என்று தெரியவில்லை குற்ற உணர்ச்சி அதிகமாகிறது நண்பா!

 14. என்ன கானா பிரபா! சின்னப் பிள்ளை மாதிரி? இங்கு நாம் இலங்கையில் எப்படியோ அதுபோலத்தான்!
  இரண்டாந்தரத்தினர்! அங்கு மொழி – இன அடிப்படையில் வேறுபாடு – இங்கு நிற அடிப்படை அவ்வளவு தான்! கோபப் படாதீர்கள் – நாங்கள் என்ற போது ஒட்டு மொத்தமாக மனிதர்கள் – மனிதர்களாக இல்லை – இது தான் உண்மை – அது சிங்களவனாக இருக்கட்டும் – தமிழனாக இருக்கட்டும் – அமெரிக்கா வாகட்டும் -ஐ.நாவாகட்டும்.
  நீங்கள் விஜய் தொலைக்காட்சியில் பிரபுதேவா பகுதி 5இல் பிரேம் கோபால் சொன்னது போல – நேரு மாமாவின் புறாவுக்கு கிடைக்கும் உரிமை – ஈழத் தமிழருக்குண்டா? அவரது தங்கையும் தாயும் குறிப்பிட்டதை பார்த்திருப்பீர்கள் இதில் நாம் என்ன செய்ய முடியும் அவர்களை மிஞ்சி? ……..

 15. —————–
  நான்கு விடலைப் பையன்கள் சேர்ந்து ஒரு பூனையைத் துன்புறுத்தியதற்காக $22,000 அவுஸ்திரேலிய வெள்ளிகள் தண்டப்பணமும், 2 வருஷ சிறைத் தண்டனையும் கிடைத்தது. ஆதாரம்

  ஆண்டவா! அடுத்த பிறவியிலாவது என்னைப் பூனையாகப் பிறக்க வை
  —————–
  “ஓ சிறீலங்கன் எண்டா சிங்களவன் மட்டுமாம், சரி” மனசுக்குள் சொல்லியவாறே மீண்டும் வேலைவாய்ப்புப் பணியகம் நோக்கி நடையில் பயணிக்கிறேன்.
  மேலே இருந்து சூரியன் சிரித்துக் கொண்டிருந்தான்
  —————–

  உண்மையை உடைத்து சொல்லி இருக்கிறீர்கள்..

  தமிழனை உலகம் உணரும் காலம் விரைவில் வரும்….

 16. மனது கனக்கிறது; வலிக்கிறது. தமிழர்கள் மிக கேவலமானவர்கள் ஆகிவிட்டனர் ஈழத்தில். என்று மாறும் இந்த நிலை? 🙁

 17. பூனையாக தமிழ் நாட்டில் பிறக்க வேண்டும். எனென்றால் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் மிகவும் நல்லவர்கள். அப்பாவி மீனவர்களைக் கொல்லும் சிறிலங்கா அரசுக்கு ஆயூத உதவிகளை வழங்கும் காங்கிரசுக் கூட்டணிக்கு வாக்குப் போட்டவர்கள். எவ்வளவு அடித்தாலும் கோபப்படமாட்டார்கள் . மிகவும் நல்லவர்கள்.

 18. வணக்கம்
  தங்களது சிறிலங்கன் அனுபவம் வரலாற்றுச் சான்று. இப் பதிவை எனது வலைப்பதிவிலிடலாமா?
  – தங்களது வலைப்பதிவை எனது விருப்பத்துக்குரியதாக எனது வலைப்பதிவில் இணைக்கிறேன்.
  -முகிலன்

 19. //mukilan முகிலன் said…

  வணக்கம்
  தங்களது சிறிலங்கன் அனுபவம் வரலாற்றுச் சான்று. இப் பதிவை எனது வலைப்பதிவிலிடலாமா?//

  வணக்கம் முகிலன்

  தாராளமாக மீள் பதிவிடுங்கள் மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *