புகைப்பட அல்பம் கிளப்பிய ஞாபகம்

2006 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் என்ற மாயை மெல்ல விலகிக் கொண்டிருந்த நேரம் மெல்ல என் ஊரில் காலடி வைத்தேன். ஆங்காங்கே காணாமல் போதல்களும்,அடுத்த நாள் காலை சுடப்பட்டு வீதிகளில் அனாதரவாக விடப்படுகின்ற மரணப் பொதிகளுமாக மெல்ல மெல்ல ஆரம்பிக்கின்ற பொழுது அது. எனக்குப் புரிந்து விட்டது மீண்டும் ஒரு கோரத்தாண்டவத்துக்கு எங்கள் தேசம் தயாராகின்றது என்று. இனிமேல் இந்தச் செம்பாட்டு மண்ணுக்கு எப்போது வருவேனோ என்ற கவலையும், பயமும் அன்று என் நெஞ்சில் கவ்விக் கொண்டது, இன்னமும் அது விடாமல் தொடர்கின்றது விறுவிறுவென்று மூன்று வருஷங்கள் ஓடோடி விட்டபோதும். நேற்று என் ஊரில் இந்த நண்பர்கள் மெல்ல மெல்லமாகத் தொலைந்து போகின்றார்கள், அல்லது தேசங்களைக் கடந்து போகின்றார்கள். பத்து வருஷங்கள் கழித்து ஊருக்குப் போன போது ஊரில் இருந்த காலத்தில் நான் 4 – 5 வயசில் கூட்டி விளையாடிக் களித்திருந்த சின்னனுகள் எல்லாம் நெடு நெடுவென்று பனைமரக் கணக்காய் வளர்ந்து முழுநீளக் குழாய் ஜீன்ஸும் போட்டுக் கொண்டு, என்னை ஒரு அந்நிய வஸ்துவாய் பார்த்து விலகிப் போனபோது எனக்கு ஏற்பட்ட அந்தக் கண நேர அவஸ்தையை எனக்கு மட்டும் தான் புரியும்.

சாமியறையில் போர்வை போர்த்தப்பட்டு 20 வருஷங்களுக்கும் மேலாக குமரி போலப் பளிச்சிட்ட சின்ன அலுமாரியை நோண்டுகிறேன். கிழிந்தும் கிழியாமல் ஒரு புகைப்பட அல்பம் கண்ணில் படுகின்றது. இணுவில் பிள்ளையாரடி அகதி முகாம், அண்ணா கோப்பி அகதி முகம், சாவகச்சேரி இடப்பெயர்வு என்று எல்லா இடப்பெயர்வுகளிலும் எங்கள் வீட்டுக்காரரோடு கூடவே பயணித்த ஞாபகச் சாட்சியம் அது.
கைக்குழந்தையாய் மேசையின் மேல் என்னைக் கிடத்தி எடுத்த படத்தில் இருந்து 21 வயசு கீ பேர்த் டேக்கு எடுத்த படங்கள் வரையும், அம்மா ஆசிரியர் கலாச்சாலையில் ஏதோ ஒரு அரச நாடகத்தில் மீசை ஒட்டி வேஷம் கட்டிய கறுப்பு வெள்ளைப் படங்களும், வெள்ளை வெளேர் நாஷனல் சேர்ட்டில் கிளீன் ஷேவுடன் இப்போது நான் இருக்கும் முகஜாடையில் அப்போது இருந்த அப்பாவின் சின்ன சைஸ் போட்டோவும், அண்ணன்மாரின் கல்லூரி வாழ்க்கையின் ஆட்டோகிராபுமாக நிறைந்திருக்கின்றது அந்த ஆல்பம். இன்னும் விரிக்கின்றேன் அதை, ஒரு காலத்தில் எங்களூருக்கு வந்து எங்கள் பாட்டனார் முறையானவர் வீட்டில் தங்கி கோயில்களில் கச்சேரி செய்த சுந்தராம்பாள், சீர்காழி கோவிந்தராஜன், கிருபானந்த வாரியார், மதுரை சோமு, பாலமுரளி கிருஷ்ணா என்று விரிகின்றது அது.

“அம்மா! இதை நான் கொண்டு போகட்டா?”
“ஓ! தாராளமாக் கொண்டு போங்கோ, இங்கை என்ன,எப்ப நடக்கும் எண்டு ஆருக்குத் தெரியும், உங்களிட்ட கிடந்தால் உது பாதுகாப்பா இருக்கும்” தான் படிப்பிக்கும் பிள்ளைகளை கூட நீ நான் என்று ஒருமையில் பேசாத அம்மா எனக்கும் அந்த கெளரவத்தை அவ்வப்போது கொடுப்பதுண்டு.

குறுகிய காலப் பயணத்துக்கு கொழும்புக்கே வருவதற்கு பெரும் பிரயாசம் கொள்ளும் அம்மா, அப்பாவை கூட அழைத்துக் கொண்டு என்னோடு சேர்ந்து வாழவைப்பதில் இருக்கும் பகீரதப்பிரயத்தனங்கள் எல்லாம் பிழைத்தப் போயிற்று. அவர்களோடு எஞ்சி இருப்பதையாவது ஆறுதலுக்காக எடுத்துச் செல்லலாமே என்ற நப்பாசையும் ஒரு காரணம்.

00000000000000000000000000000000000000000000000000000

இன்று விடிகாலையில் ஒரு தொலைபேசி அழைப்பு.
“நல்லா இருந்த மனுஷன், லண்டனுக்கு போய் பேத்தியின் சாமத்தியச் சடங்குக்குப் போட்டு ஊர் திருவிழாவுக்கு வர இருந்தவர், திடீரெண்டு செத்துப் போனாரப்பா” மறுமுனையில் எனது நண்பன் எனது மாமா முறையானவரின் முந்தைய நாள் மரணச் செய்தியைச் சொல்லி விட்டு வைத்தான். நெஞ்சில் மீண்டும் ஒரு 25 கிலோ பாரம் ஏற்றி வைக்கப்படுகிறது. இன்னொரு தடவை ஊருக்குப் போகும் வாய்ப்பு வருமா, வந்தால் இன்னும் எத்தனை பேர் எஞ்சியிருப்பினம்?

என்னைக் கடத்திக் கொண்டு போய் வெறுமையும், தனிமையும் உள்ள வனாந்தரம் ஒன்றில் தள்ளி விட்டு வந்தது போல இருக்கு. சூட்கேசில் பத்திரமாக வைத்திருந்த அந்த அல்பத்தைத் தேடி எடுத்து ஒவ்வொரு படமாக நின்று நிதானித்துப் பார்க்கின்றேன்.

பின்னேரம் ஆறு மணிப்பூசை முடிஞ்சு நேராக எங்கட பாட்டனார் வீட்டு முற்றம் வந்து கூடி ஆற அமர இருந்து அமெரிக்காவில் இருந்து சுண்ணாகம் வரைக்கும் நடக்கிற விஷயங்களை அலசி ஆய்ந்து விட்டுப் போவினம் அயலில் இருந்த சொந்தக்காரர் கூட்டம். கூடவே வடை, சூடான பால் தேத்தண்ணி எல்லாம் வருவினம். றேடியோவைச் சத்தமாக வைத்து ஒன்பது மணிச் செய்தி வந்து அறிவித்தல்கள் வரும் வரை றேடியோ சத்தம் போடும். இதெல்லாம் தினப்படி நடக்கும் சமாச்சாரம். தங்கள் எல்லைகளுக்குட்பட்ட சந்தோஷம், கவலை, எதிர்பார்ப்பு எல்லாமே அந்தப் பேச்சுக் கச்சேரியில் இருக்கும். ஏதோ ஒரு மன நிறைவோடு மெல்லக் கலைவார்கள். பிளேன் குண்டு மழையும், ஷெல் அடியும் மட்டும் இருக்காது இதெல்லாம் எண்பதுகளில் இந்தியன் ஆமிக்காலத்துக்கு முதல் இருந்த காலத்துக்கு முதல் இருந்த வாழ்வியல் கோலங்கள்.

பிறகு தானே எல்லாம் மாறிப் போச்சு, ஆளாளுக்கு திக்குத் திக்கா தேச எல்லைகளைக் கடந்தவர்கள் ஒரு பக்கம், குண்டுவீச்சில் செத்துப் போனவை ஒருபக்கம், இதுகளை எல்லாம் பார்த்து வருத்தம் வந்து திடீர் திடீரெண்டு மேலை போனவை ஒருபக்கம், இண்டைக்கும் நடைப்பிணமாய் எஞ்சிய வாழ்வை கடனே என்று கழிக்கும் சிலர் ஒருபக்கம் எண்டு அந்தக் கூடு கலைஞ்சு போச்சு.

2006 ஆம் ஆண்டில் நான் இந்த வீடு இருக்கும் கோலம் இது தான். இப்போதெல்லாம் அங்கே யாரும் வருவதில்லை, யாருக்கும் யாரும் காத்திருப்பதில்லை, ஏனெண்டால் முன்னிருந்தோரில் ஒண்டு ரண்டு பேரத் தவிர மற்றெல்லோரும் தொலைந்து போனார்கள். ஆறுமணிக்கு முன்பே ஊரும் அடங்கி விடும், ஒன்பது மணிச் செய்தியையும் அவரவர் வீட்டில் சன்னமாகத் தான் வச்சுக் கேட்டுக் கொண்டிருப்பினம், ஆமிக்காரன் எல்லாம் ஊர் முழுக்க.

பாலமுரளிகிருஷ்ணாவும், கிருபானந்தவாரியாரும், கே.பி சுந்தராம்பாளும் வந்த ஊருக்கு பின்னர் கூர்க்காப் படையும், தலைப்பாய் கட்டிய சீக்கிய வீரனும், காலையில் ஜாக்கிங் போய்க் கொண்டு மாலையில் உள்ளூர் இளைஞர்களைப் பதம் பார்த்த அனில் அந்த மலையாளி காப்டனும் வந்து வேட்டையாடியதை எல்லாம் அந்த 80களில் வீட்டு முற்றத்தில் பேசிச் சிரித்த கூட்டம் கனவிலும் நினைச்சிருக்காது. பாட்டுக் கச்சேரி கொடுக்க வந்த கூட்டம் போய் ராடரும், ஆலோசனையும் கொடுக்கும் கூட்டம் வருமெண்டும் சத்தியமா நினைச்சிருக்க மாட்டினம். எல்லாமே தொலைந்து போய், இன்னும் இழந்து கொண்டும் இருக்கின்றது மேலே படத்தில் கம்பிகள் பிடுங்கப்பட்ட, கண்ணாடி உடைக்கப்பட்ட சன்னல் சாளரங்கள் போல எம்மவர் வாழ்க்கை.

அல்பத்தில் பாலமுரளிகிருஷ்ணாவின் பிம்பம் வரும் கணம் கணக்காய் கணினியின் வாயில் இருந்து ஏதோ ஒரு வானொலியில் வழியாக எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு பாலமுரளிகிருஷ்ணா “அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு” சினிமாப் பாடல் பாடிக்கொண்டிருக்கின்றார். பாலமுரளி கிருஷ்ணா மீண்டும் வந்து விட்டார், எங்கட அந்த அழகிய பழைய வாழ்வு மட்டும் மீண்டு வராது……

அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கைசேரும் போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு

வாடகை வீடு என்று
வாடினால் ஏது இன்பம்
பூமியே நமக்கானது
சோகமே வாழ்க்கை என்று
சோர்வதால் ஏது லாபம்
யாவுமே இயல்பானது

மாறாமல் வாழ்வும் இல்லை
கேளாமல் ஏதுமில்லை
நம்பிக்கை விதையாகுமே
கலைகின்ற மேகம் போலே
காயங்கள் ஆறிப்போக
மலரட்டும் எதிர்காலமே

பாசமே கோயில் என்று
வீட்டிலே தீபம் வைத்தால்
கார்த்திகை தினந்தோறுமே
நேசமே மாலை என்று
நெஞ்சிலே சூடிக்கொண்டால்
வாசனை துணையாகுமே

கூடினால் கோடி நன்மை
சேருமே கையில் வந்து
வாழ்ந்திடு பிரியாமலே
ஏணியே தேவையில்லை
ஏறலாம் மேலே மேலே
தோல்விகள் வெறுங்கானலே

அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கைசேரும் போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு

25 thoughts on “புகைப்பட அல்பம் கிளப்பிய ஞாபகம்”

 1. எல்லாம் சூனியமாகிவிட்ட காலம்…! துள்ளத்திருந்த அந்தக்காலம் எல்லாம் இனி எங்கே??

 2. அல்பத்தில் பாலமுரளிகிருஷ்ணாவின் பிம்பம் வரும் கணம் கணக்காய் கணினியின் வாயில் இருந்து ஏதோ ஒரு வானொலியில் வழியாக எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு பாலமுரளிகிருஷ்ணா “அன்பாலே அழகாகும் வீடு
  ஆனந்தம் அதற்குள்ளே தேடு” சினிமாப் பாடல் பாடிக்கொண்டிருக்கின்றார். பாலமுரளி கிருஷ்ணா மீண்டும் வந்து விட்டார், எங்கட அந்த வாழ்வு மட்டும் மீண்டு வராது.///

  :((

  நினைவுகள் பகிர்ந்து கொண்டது மனதில் கனத்தினை ஏற்றியது போல இருக்கின்றது!

  இழந்த வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள் மனத்தினை பாரமாக்கி இருக்கின்றன.

 3. உம்ம்ம்ம்
  விடிவு வருங் காலை, உங்கட இந்த வீட்டுக்கு என்னையும் கூட்டிப் போகணும் காபி அண்ணாச்சி! பதிவை, ஏனோ தெரியலை, நாலைஞ்சு முறை வாசித்தாகி விட்டது!

  //21 வயசு கீ பேர்த் டேக்கு எடுத்த படங்கள் வரையும், அம்மா ஆசிரியர் கலாச்சாலையில் ஏதோ ஒரு அரச நாடகத்தில் மீசை ஒட்டி வேஷம் கட்டிய கறுப்பு வெள்ளைப் படங்களும், வெள்ளை வெளேர் நாஷனல் சேர்ட்டில் கிளீன் ஷேவுடன் இப்போது நான் இருக்கும் முகஜாடையில் அப்போது இருந்த அப்பாவின் சின்ன சைஸ் போட்டோவும்//

  சேமித்த படங்களை உங்களிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்!

 4. :((

  நினைச்ச எதுவுமே எழுத முடியல தல.. எழுதுனத எல்லாத்தையும் அழிச்சுட்டு திரும்ப யோசிச்சு மறுபடி அழிக்கறது ரொம்ப கஷ்டம். ரொம்ப வலிக்குதுன்னு மாத்திரம் சொல்லிக்கிறேன்.

 5. 🙁
  மனம் கனத்து போகிறது கானா பிரபா! ஒன்றும் சொல்ல இயலவில்லை…விரைவில் நீங்கள் எதிர்நோக்கி இருக்கும் அந்த விடியல் வருமென்று சொல்வதைத் தவிர!

 6. இன்னொரு தடவை ஊருக்குப் போகும் வாய்ப்பு வருமா, வந்தால் இன்னும் எத்தனை பேர் எஞ்சியிருப்பினம்?

  ?????
  தெரியவில்லை
  பல நாடுகளின் சாம்ராஜ்யத்துக்கான கனவுகளுக்காக பறிக்கப்படுகிறது என் உறவுகளின் உயிர்கள்.

 7. கானா பிரபா, ஞாபகங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இது உங்கள் ஞாபகங்களில் ஒரு நொடிப் பொழுதில் வந்த ஒன்றெனவே அவதானிக்கின்றேன். முழுமையும் படைக்க நேரம் நிறைய நேரம் வேண்டும்.

 8. // Mayooresan said…

  எல்லாம் சூனியமாகிவிட்ட காலம்…! துள்ளத்திருந்த அந்தக்காலம் எல்லாம் இனி எங்கே??//

  அந்தக் காலம் மீண்டு வராது மயூரேசன் 🙁

  //ஆயில்யன் said…

  நினைவுகள் பகிர்ந்து கொண்டது மனதில் கனத்தினை ஏற்றியது போல இருக்கின்றது!//

  வருகைக்கு நன்றி ஆயில்யன்

 9. // kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  உம்ம்ம்ம்
  விடிவு வருங் காலை, உங்கட இந்த வீட்டுக்கு என்னையும் கூட்டிப் போகணும் காபி அண்ணாச்சி! பதிவை, ஏனோ தெரியலை, நாலைஞ்சு முறை வாசித்தாகி விட்டது!//

  வாங்க கண்ணபிரான்

  அந்தத் திருநாள் எப்போ வரும் என்றே 3 வருஷங்கள் ஓடிவிட்டது

  // சென்ஷி said…

  :((

  நினைச்ச எதுவுமே எழுத முடியல தல.. எழுதுனத எல்லாத்தையும் அழிச்சுட்டு திரும்ப யோசிச்சு மறுபடி அழிக்கறது ரொம்ப கஷ்டம்.//

  உங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா

 10. //பாட்டுக் கச்சேரி கொடுக்க வந்த கூட்டம் போய் ராடரும், ஆலோசனையும் கொடுக்கும் கூட்டம் வருமெண்டும் சத்தியமா நினைச்சிருக்க மாட்டினம்.//

  :((

 11. //ஆளாளுக்கு திக்குத் திக்கா தேச எல்லைகளைக் கடந்தவர்கள் ஒரு பக்கம், குண்டுவீச்சில் செத்துப் போனவை ஒருபக்கம், இதுகளை எல்லாம் பார்த்து வருத்தம் வந்து திடீர் திடீரெண்டு மேலை போனவை ஒருபக்கம், இண்டைக்கும் நடைப்பிணமாய் எஞ்சிய வாழ்வை கடனே என்று கழிக்கும் சிலர் ஒருபக்கம் எண்டு அந்தக் கூடு கலைஞ்சு போச்சு.//

  🙁

  நெஞ்சு கனக்கிறது. மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஏதாவது விபத்திலோ, வியாதியாலோ மறைந்தாலே தாங்கமுடிவதில்லை. அனைத்து திசைகளில் சிதறிய கூடின் வலியை எப்படி தாங்குவது. எப்பொழுது முடியும் இத்துயரம்? முடிந்தாலும் நீங்கள் சொல்வதுபோல் அந்த நாள் திரும்ப வராது. இந்த மாதிரி பதிவிலும், எழுத்திலும், புகைப்படத்திலும்தான் பார்க்கமுடியும்.

 12. //சந்தனமுல்லை said…
  🙁
  மனம் கனத்து போகிறது கானா பிரபா! ஒன்றும் சொல்ல இயலவில்லை…//

  வருகைக்கு நன்றி சந்தனமுல்லை

  // த.ஜீவராஜ் said…
  இன்னொரு தடவை ஊருக்குப் போகும் வாய்ப்பு வருமா, வந்தால் இன்னும் எத்தனை பேர் எஞ்சியிருப்பினம்?

  ?????
  தெரியவில்லை
  பல நாடுகளின் சாம்ராஜ்யத்துக்கான கனவுகளுக்காக பறிக்கப்படுகிறது என் உறவுகளின் உயிர்கள்.
  //
  ஜீவராஜ்

  உணர்வைப் பகிர்ந்தமைக்கு நன்றி

 13. அண்ணா,
  மாதத்திற்கு ஒரு பதிவு போட்டாலும் மனதை தொடுகிற மாதிரி போடுறீங்கள்.
  நன்றி.

 14. //John ஜான் போஸ்கோ said…
  கானா பிரபா, ஞாபகங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இது உங்கள் ஞாபகங்களில் ஒரு நொடிப் பொழுதில் வந்த ஒன்றெனவே அவதானிக்கின்றேன். //

  வாங்க ஜான், நேற்றைய தனிமையிலும், துயரிலும் தோன்றிய பதிவே இது, இன்னும் சுமக்கும் நினவுகள் ஏராளம்.

  ரிஷான் மிக்க நன்றி உங்கள் வருகைக்கு

  //டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said…
  “எங்கட அந்த அழகிய பழைய வாழ்வு மட்டும் மீண்டு வராது……” இந்த ஏக்கம் உங்களது மட்டுமல்ல.
  //

  உண்மைதான் டொக்டர் 🙁

 15. வருகைக்கு நன்றி அருண் மற்றும் கோபி

  //நாகு (Nagu) said…

  🙁

  நெஞ்சு கனக்கிறது. மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஏதாவது விபத்திலோ, வியாதியாலோ மறைந்தாலே தாங்கமுடிவதில்லை. //

  வணக்கம் நாகு

  எம்மவருக்கெல்லாம் அளந்து அளந்து கொடுப்பது போலத் தான் உறவும் பிரிவும், நட்பும் , சந்தோசமும் எதுவுமே நீண்டு நிலைப்பதில்லை.

 16. “”அன்பாலே அழகாகும் வீடு
  ஆனந்தம் அதற்குள்ளே தேடு””
  உங்கள் அர்த்தம் பொதிந்த உணர்வுடன் கூடிய உங்கள் பதிவு
  மனதை தொட்ட பதிவு

  அன்புடன் கரவைக்குரல்

 17. கண்ணாடி உடைக்கப்பட்ட சன்னல் இல்லாத வீடாவது உங்களின் நினைவுகளின் எச்சமாய் இருகிறதே ..
  எங்கள் வீடு இப்போது பாசி படிந்த கல்லுக் கும்பியாய் புகைப்படத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் மட்டுமே கிடைத்தது பிரபா .. 🙁 எத்தனையோ கதைகள் அதற்குள்ளும் இருக்கும் என்ன…… ?

 18. வணக்கம் பிரபா,
  உணர்வுகளை தட்டி எழுப்பும் ஒரு பதிவு

  //நெஞ்சில் மீண்டும் ஒரு 25 கிலோ பாரம் ஏற்றி வைக்கப்படுகிறது. இன்னொரு தடவை ஊருக்குப் போகும் வாய்ப்பு வருமா, வந்தால் இன்னும் எத்தனை பேர் எஞ்சியிருப்பினம்//
  இந்த மரணம் தாண்டிய வேதனையை நானும் அனுபவித்திருக்கின்றேன். மரண்ங்கள் மலிந்த பூமியாய் எம் நிலம் மாறிய பின்னர் பத்திரிகைகளில் வரும் மரணா அறிவித்தல்களை கூட வாசிப்பதை தவிர்த்து விட்டேன். மரணத்தின் வாசனையை கூட என்னால் சகிக்க முடியவில்லை….

  நீங்கள் சொன்ன அந்த பாடல் பசங்க திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தின் இசையில் அமைந்த பாடல். என் நாளாந்த கடமைகளில் ஒன்றாக இந்த பாடலை கேட்பதும் மாறி சில வாரங்களாகி இருக்கின்றது

 19. // வாசுகி said…
  அண்ணா,
  மாதத்திற்கு ஒரு பதிவு போட்டாலும் மனதை தொடுகிற மாதிரி போடுறீங்கள்.
  நன்றி.//

  வருகைக்கு நன்றி வாசுகி, என் மனச்சுமையை இறக்கி வைக்க ஒரு வாய்ப்பாகவே இதை நான் பயன்படுத்துகின்றேன்.

  //Sakthy said…
  ‘எங்கள் வீடு இப்போது பாசி படிந்த கல்லுக் கும்பியாய் புகைப்படத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் மட்டுமே கிடைத்தது பிரபா .. 🙁 //

  //கூடிய உங்கள் பதிவு
  மனதை தொட்ட பதிவு

  அன்புடன் கரவைக்குரல்//

  மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

  வணக்கம் சக்தி

  உடைந்த வீடுகளுக்கும் அங்கிருக்கும் மனிதர்களுக்கும் ஒரே ஒற்றுமை தான் இல்லையா 🙁

  // அருண்மொழிவர்மன் said…
  வணக்கம் பிரபா,
  உணர்வுகளை தட்டி எழுப்பும் ஒரு பதிவு//

  உங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா

 20. பதிவு நெஞ்சை கனக்க வைக்கிறது, என் நெஞ்சின் கனமும் ஏக்கமும் உங்கள் எழுத்துக்களில்………..

 21. மிக்க நன்றி சிவா, எல்லாப் புலம் பெயர் தமிழரின் நிலையும் இதுதானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *