மூங்கில் பூக்கள் – குணசீலன் – கூடெவிடே


“டேய் குணசீலன்!
எருமை….எருமை….
இஞ்சை வாடா எருமை”

பலமான குரலை எழுப்பித் தன் வாயை நறுவியவாறே கிட்டு மாஸ்டர் தன்னுடையை சமூகக்கல்விப் பாடத்தில் ஒட்டாமல் வேறு உலகத்திற்குத் தன் மனத்தை ஏற்றிவிட்டு தாடையில் கையூன்றி யோசித்துக் கொண்டிருந்த குணசீலனை அழைத்து, தன் சமூகக் கல்விப் புத்தகத்தாலேயே நாலைந்து அடி விட்டு விட்டு அவனைத் துரத்துகின்றார். முகத்தில் ஒரு அசட்டுத் தனத்தை வரவழைத்துக் கொண்டே குணசீலன் தன் வாங்கில் போய் அமர்கின்றான். கொக்குவில் இந்துக்கல்லூரியில் “E” வகுப்பு மாணவர் என்றாலே பொம்பிளைப் பிள்ளைகளோடு சேர்ந்து கலவன் வகுப்பு படிக்கும் “B” வகுப்பு மாணவர்களில இருந்து எல்லோருக்குமே ஒரு இளப்பம் தான் எப்போதும். அதுவும் குணசீலன் போன்ற மாணவர்கள் “E” வகுப்பின் முன்னோடிகளாக இருப்பதும் தொடர்ந்து தன் தரத்தைத் தக்க வைக்கும் செயல். கொக்குவில் இந்துவில் நான் சேர்ந்து ஆறாம் ஆண்டில் இருந்து பத்தாம் ஆண்டு வரை ஒரே வகுப்பில் என்னோடு சேர்ந்து ஈ ஓட்டியவன் இந்தக் குணசீலன். இவனுக்கு எங்கள் வகுப்பின் எல்லாப் பாடங்களும் எடுக்கும் ஆசிரியர்களோடு ஏதோ வகையில் எட்டாப் பொருத்தமோ என்னவோ அவர்களின் அடி வாங்காமல் அவன் தப்புவதில்லை. “களவு செய்யோணும், ஆனா பிடிபடக்கூடாது” இது எங்கட பொலிசி. ஆனா குணசீலனைப் பொறுத்தவரை குழப்படியைத் த வீரமாகவே கொஞ்சம் வெளிப்படையாகவே செய்து விடுவது தான் அவன் குணம். ஓவ்வொரு வகுப்பும் ஏற ஏற அதே ஈ வகுப்பு மாணவர்களோடே படிக்க வேண்டிய நிர்ப்பந்தம். எனவே அவனின் நட்பும் என்னோடு கூடவே வந்தது. ஒன்பதாம் ஆண்டில் படிக்கும் போது தான் “கிட்டு” மாஸ்டர் என்று செல்லமாக அழைத்த மாஸ்டர் வகுப்பாசிரியராக வருகின்றார். குணசீலன் வீட்டுக்குப் பக்கத்து வீடு என்பது இன்னும் அவருக்கு உரிமை எடுக்க வசதியாகப் போனது.

“டேய் மணியம்! (குணசீலனின் தந்தை பெயர் அது), இந்த முறையும் உனக்கு மார்க்ஸ் எடுக்க விருப்பமில்லைப் போல” பல்லை நறுவியவாறே பாடங்களுக்கான புள்ளிப் பெறுபேறு பதிந்துள்ள றிப்போர்ட்டை எறியாமல் எறிகிறார் கிட்டு மாஸ்டர்.

கடைசியாக அவனோடு நான் பழகிய நாள் இன்றைக்கும் நினைப்பிருக்கு. எண்பத்தேழாம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதிப் படையாக வந்த நேரம் அது. சண்டைகள் எதுவும் அப்போது ஆரம்பிக்கவில்லை. என்னதான் குணசீலன் குழப்படி என்றாலும் உள்ளுக்குள் பயம் கலந்த பாதுகாப்பான குளப்படிக்காரராக இருந்த என்னை அவனுக்கு பிடித்ததில் வியப்பில்லை. காரணம் இரண்டு பேருக்கும் பொதுவான ஒற்றுமை போரடிக்கும் பாட நேரத்தில் ராணி காமிஸ் வாசிப்பது. பெரிய இங்கிலீஷ் பாடப் புத்தகத்துக்குள்ளை 007 ஜேம்ஸ் பொண்ட் படிப்பதில் இருக்கும் த்ரில் வேறு என்னத்திலை இருக்கு. எனக்கோ காமிக்ஸ் புத்தகங்கள் வந்தவுடனேயே விலைகொடுத்து வாங்கிப் படிக்கவேணும். குணசீலனுக்கோ தன்னிடம் இருக்கும் ஏதாவது பொருளை லஞ்சமாகத் தந்து அதை என்னிடம் வாங்கிப் படிக்கவேணும். அப்படி எனக்கு கிடைச்ச பொருள் தான் சாய்பாபாவின் படம் போட்ட வட்ட வடிவமான, பின்னால் காந்தம் பொருத்திய ஒரு பொருள் அது. அந்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கு. புத்தகங்களை மளமளவென்று படித்து விட்டு, என் கையில் சாய்பாபா ஸ்டிக்கரைத் தந்து விட்டு தன் அடுத்த குளப்படியைத் தொடர்ந்தான்.

“இஞ்சை ஒருக்கால் வாரும் தம்பி, ஏன் பாடம் நடத்திற நேரத்தில் கன்ரீன் பக்கம் போனனீர்” ஹெட்மாஸ்டர் குணசீலனை அன்பாக அழைத்து அவனுடைய கைகளையே வாங்கி அவன் கன்னத்திலேயே திரும்ப அடிக்க வைத்து
“ஓடும், இனிமேல் இப்படி ஏதும் செய்யாமல் இரும்” என்று உறுக்கி விட்டு அனுப்புகின்றார். இரண்டு கன்னங்களும் செயற்கையாகச் சிவக்க அதே அசட்டுச் சிரிப்புடன் வாங்கில் வந்து உட்கார்கின்றான் குணசீலன்.

88888888888888888888888888888888888888888888888888888888888888888888888

மலையாளத் திரைப்படங்களில் இருந்து கதையை எடுத்து காலா காலமாக தமிழ் சினிமாக்கள் பல மீள் வடிவம் பெற்று வருகின்றன. கேரளத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள் தகழி சிவசங்கரன் பிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றோரின் படைப்புக்களும் மலையாள சினிமாவாகின்றன. ஆனால் தமிழ் நாவல் ஏதாவது மலையாளத்தில் படமாகியிருக்கின்றதா என்ற என் தேடலின் முடிவில் கிடைத்ததே வாஸந்தி எழுதிய “மூங்கில் பூக்கள்” நாவல்.

“நான் மீஜோராமில் இரண்டு வருடங்கள் இருந்திருக்கின்றேன். மீஜோக்களுடன் நெருங்கிப் பழக முயன்றிருக்கின்றேன். இந்திய வடகிழக்குப் பிரதேசத்தில் வாழும் எல்லாப் பழங்குடி மக்களிடையேயும் உள்ள பிரச்சனைகள் பொதுவானவை. அவர்களது பிரச்சனைகளுக்கெல்லாம் மிக ஆழமான காரணங்கள் உண்டு. அவறறையெல்லாம் விவாதிப்பதோ அலசுவதோ என் நோக்கமுமில்லை- அதற்கு அவசியமுமில்லை” என்று தன் முன்னுரையைக் கொடுத்து எழுதியிருக்கின்றார் வாஸந்தி.

தஞ்சாவூரில் பிறந்து தன் பெற்றோரை சிறுவயதிலேயே இழந்து பின் இராணுவத்தில் வேலை பார்க்கும் தன் ஒரே அண்ணனோடு மீஜோரம் வந்துவிட்டவள் ஷீலா. அண்ணனும் மலேரியாவால் செத்துப் போக தன்னந்தனியனாக ஆசிரியையாக மீஜோராமில் வாழும் ஷீலாவின் ஒரே நட்பு ராஜீவ் என்னும் அண்ணனின் சகபாடி. அவனும் தமிழன் தான். தன் உறவுகளைத் தொலைத்து மொழி தெரியாத பிரதேசத்தில் வாழ்க்கைப்பட்ட அவளுக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் இந்த ராஜீவ். இது நட்பா காதலா, நட்பென்றால் இவ்வளவு நெருக்கம் எதற்கு என்று குழப்பத்தோடு தொடரும் பந்தம் ராஜீவ் ஷீலாவுடையது.

மீஜோராம் பழங்குடிகள் வெளியாட்கள் தம்மூரூக்கு வந்தால் பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள், பயங்கரமானவர்கள் என்றதொரு எண்ணம் நிலவும் அவ்வேளை ஷீலாவின் வகுப்பில் சேர்கின்றான் சுங்கா என்னும் பையன். அவன் வெறு யாருமல்ல மீஜோக்களே பயப்படும் அண்டர்கிரவுண்ட் பயங்கரவாதி லால் கங்காவின் மகன்.ஒரு பயங்கரவாதியின் மகன், அதுவும் தாயை துர்மரணத்தில் பறிகொடுத்த சுங்காவை அரவணைத்து அன்பு பாராட்டுகின்றாள் ஷீலா. ஷீலா டீச்சரின் தூய நட்பின் தன் தாயைக் காண்கின்றான் சுங்கா.

மீஜோ இனப் பெண் பணத்துக்காக எதையும் செய்வார்கள், இவர்களைப் போகப் பொருளாக்கலாம் என்று வாழும் ராஜீவின் சுயரூபம், சுங்காவால் ஷீலாவுக்கு அடையாளப்படுத்தப்படுகின்றது. ராஜீவுக்கும் இந்த ஷீலா டீச்சர் சுங்காவின் களங்கமில்லா நட்பில் சந்தேகம் வருகின்றது. அதைத் தொடர்ந்து வரும் அனர்த்தங்கள், ஷீலா எடுக்கும் முடிவு என்ற கதைப்பின்னலோடு போகின்றது மூங்கில் பூக்கள். ஒரு சிறு நாவலே என்றாலும் வாசித்து முடித்த பின்னரும் ஒட்டிக் கொள்ளும் மீஜோராம் மானிலத்து கதைக்களமும், ஷீலா டீச்சர் சுங்காவின் நட்பும், அவர்களின் உரையாடலும் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கின்றது. அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தினை இன்னும் அடக்கிப் பார்க்க நினைக்கும் மனிதர்கள். நூலாசிரியர் சொல்வது போல் “மக்களின் பார்வையும் கண்ணோட்டமும், சிந்தனையும் மாறவேண்டும்” என்ற தொனியில் பழங்குடி மக்கள் சமுதாயத்தின் ஒருமுகத்தை இந்த நாவல் காட்டுகின்றது.

நாவலின் இறுதியில் பயங்கரவாதியும் சுங்காவின் தந்தையுமான லால் கங்காவின் ஆள் ஷீலா டீச்சரிடம் சொல்லும் வசனம் வருகின்றது இப்படி

“சுங்கா பிரியம் வைத்த ஒரே ஒரு ஆள் நீங்கள் தான். தன்னால் சாதிக்கமுடியாததை நீங்கள் சாதித்தீர்கள் என்று அவருக்குத் தெரியும்…..”

“உலகத்தின் எந்த மூலையிலும் மிக விசித்திரமானது மனிதனின் மனசு தான் என்று உணர்கையில் கண்களில் நீர் நிறைந்தது.

இந்த மூங்கில் பூக்கள் நாவலை மலையாளத் திரையுலகின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பத்மராஜன் (தன்மத்ரா, காழ்ச்சா திரைப்படங்களைத் தந்த பிளெஸ்ஸியின் குருவும் கூட) இந்த மூங்கில் பூக்கள் நாவலை மலையாளத்தில் “கூடெவிடே 9In Search of a Nest)” என்ற பெயரில் படமாக்கியிருக்கின்றார். இந்தப் படத்தில் மம்முட்டி, சுஹாசினி மற்றும் அறிமுக நாயகனாக மீசையில்லாத ரஹ்மான் ஆகியோரும் நடித்திருக்கின்றார்கள். நாவலை வாசித்த கணம் இப்படத்தினையும் எடுத்துப் பார்க்கவேண்டும். இப்படத்தில் நாவலை எப்படிப் படமாக்கியிருக்கின்றார்கள் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஆகஸ்ட் 1981 இல் வெளிவந்த இந்த நாவல் 1983 இல் வெளியாகியிருக்கின்றது.

நாவல் திரைப்படமானபோது மீஜோராம் மானிலத்துக்கு பதில் ஊட்டி மலைவாசஸ்தலம் கதைக்களமாகின்றது. அத்தோடு ஒரு பழங்குடி இனப்பயங்கரவாதியாக நாவலில் சித்தரித்த விடலைப் பையன் இங்கே எம்.பி சேவியர் புத்தூரனின் மகனாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றான்.
இந்தப் படத்தில் ஊட்டிப் பள்ளி ஆசிரியையாக சுஹாசினியும் அவரின் அண்ணனின் நண்பனாக மம்முட்டியும், ஆசிரியரின் அன்பைப் பெற்று நல் மாணவன் ரவியாக ரஹ்மானும் நடித்திருக்கின்றார்கள். நாவலின் ஆரம்பமே அநாதையாக வாழும் டீச்சராக காட்டினாலும் திரைப்படமாக எடுத்தபோது அண்ணன் பாத்திரமும் இருந்து பின் இறப்பதாகக் காட்டுகின்றார்கள். மூங்கில் பூக்கள் நாவலின் சிறப்பே அது கொண்டிருந்த மீஜோராம் பகுதிக் கதைக்களன், அதைச் சுற்றிய பழங்குடிகளின் வாழ்வியில். அது கூடெவிடே படத்தில் பிரதிபலிக்காதது பெரும் குறை. இந்த நாவலை அப்படியே படமாக்கி இருந்தால் இன்னும் சிறப்பாகப் பேசப்பட்டிருக்கும். மம்முட்டி கொடூரனாக மாறுவதும் கூட இப்போது இப்படத்தைப் பார்க்கும் போது நெருடலாக இருக்கின்றது, ஆனால் அந்தக் காலகட்டத்தில் அவரின் இப்பாத்திரத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். சுஹாசினிக்கு அந்தக் காலகட்டத்தில் கிடைத்த மிகச்சிறப்பான பாத்திரங்களில் இப்படமும் ஒன்று என்பதை அழுத்தமாக நிரூபிக்கின்றது இப்படம். மிகவும் கச்சிதமான தேர்வாக அவர் பாத்திரம் இருக்கின்றது. அறிமுக நாயகனாக பள்ளிப்பையனாக வரும் ரஹ்மானுக்கும் கூட இப்படம் நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்திருக்கின்றது.

ஆனாலும் இப்படத்தினை எடுத்த அளவில் சிறப்பாக எடுத்ததனால் கேரள அரசின் சிறந்த திரைப்படம், சிறந்த கதை, சிறந்த இயக்கம் ஆகிய விருதுகள் இப்படத்திற்குக் கிடைத்தது.

888888888888888888888888888888888888888888888888888888888888888888888

87 ஆம் ஆண்டு நாட்டில் கொஞ்ச நாள் இருந்த அமைதியும் கலைந்து போர் மேகங்கள் மீண்டும் சூழ ஆரம்பித்தது. கடும் யுத்தகாலம், இடப்பெயர்வு, மரணங்கள், தொலைதல்கள் என்று இன்னொரு சுற்று ஆரம்பம். பள்ளிக்கூடங்களும் திறக்கப்படாது அகதிமுகாம்களாகி நாலைந்து மாதங்கள் இருக்கும். பல மாதங்கள் கழித்து மீண்டும் பள்ளிக்குப் போன போது ஷெல்லடி பட்டு இறந்த சடலங்களை மயானத்துக்குப் போய் அடக்கம் செய்ய வழியற்று விளையாட்டு மைதானத்தின் ஒரு பக்கத்திலேயே அடக்கம் செய்த மண் திட்டியும், காற் சப்பாத்தினையே பதம்பார்க்கும் பரந்து விரவியிருந்த முட் பற்றைகள் கண்ட மைதானமும், மழை ஒழுக்கில் நெய்ந்து போன புத்தகங்களின் கிழிசல் துண்டுகளும், விறகுக்காக உடைத்துப் போடப்பட்ட மேசை கதிரைகளின் எச்சங்களும் இருக்க,

குலசேகரம் மாஸ்டரின் வழிகாட்டலில் ஒவ்வொரு பக்கமாக பள்ளிக்கூடத்தின் பக்கங்களை மீண்டும் துடைத்தெடுக்கும் போது

“எங்க இவன் குணசீலன்” கல்வியங்காட்டில் இருந்து வந்து படிக்கும் ரமேஷிடம் கேட்கிறேன்.
“அவன் இயக்கத்துக்குப் போய் கன நாளாச்சு”

குணசீலன் இல்லாமல் எங்கள் எஞ்சிய பள்ளி வாழ்க்கை கழிந்தது. குணசீலன் குறித்து அந்தக் காலகட்டத்தில் அதிகம் எங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.

ஒரு சில மாதங்கள் கழித்து அவன் மாவீரனாய் போன செய்தி மட்டும் கிடைத்தது. அதுவும் எங்கள் பள்ளிக்கூட மதிலில் இரவோடு இரவாக ஒட்டியிருந்த குணசீலனின் வீரமரணம் குறித்த நோட்டீஸ் தான் அதையும் சொல்லியது. குழப்படிகார குணசீலன் நாட்டுக்காக உயிர்கொடுத்த தியாகி என்ற பெருமையோடு போய்ச் சேர்ந்தான்.

இன்றும் குணசீலனின் குழப்படிகளையும், அவன் தந்த சின்னச் சின்னப் பரிசுகளையும் என் நினைவின் பெட்டகத்தில் அகற்றாமல் அடிக்கடி அவனை நினைத்துப் பார்த்து என் மனத்திரையின் தூசியைத் தட்டிக் கொண்டிருக்கின்றேன், என் இறப்பு வரை இது தொடரும்.

888888888888888888888888888888888888888888888888888888888888888888888
“மூங்கில் பூக்கள்
இயல்பாக வெகுளித்தனமாகப் பூக்கும் மூங்கில்கள்.
எத்தனைப் பெரிய பஞ்சத்துக்கு அவை காரணமாகிப் போகின்றன!

பஞ்சத்துக்குப் பூக்கள் காரணமா?
அவைகளைத் தின்னும் எலிகள் அல்லவா காரணம்?” – ஷீலா டீச்சர்

“இவையெல்லாம் இயற்கை ஏற்படுத்தும் பஞ்சங்கள், மிஸ்.
மனுஷனால் ஏற்படும் பஞ்சம் தான் ரொம்ப ஆபத்தானது” – சுங்கா
வாஸந்தி எழுதிய “மூங்கில் பூக்கள்” நாவலின் 117 ஆம் பக்கம்

7 thoughts on “மூங்கில் பூக்கள் – குணசீலன் – கூடெவிடே”

 1. //இன்றும் குணசீலனின் குழப்படிகளையும், அவன் தந்த சின்னச் சின்னப் பரிசுகளையும் என் நினைவின் பெட்டகத்தில் அகற்றாமல் அடிக்கடி அவனை நினைத்துப் பார்த்து என் மனத்திரையின் தூசியைத் தட்டிக் கொண்டிருக்கின்றேன், என் இறப்பு வரை இது தொடரும்//

  தேசத்துக்காய் மரித்த ஜீவனின்

  நேசத்தினை மறக்காது வாழும் அண்ணா!

  வார்த்தைகள் இல்லை அந்த மாவீரனை பற்றி சொல்ல…!

 2. //உலகத்தின் எந்த மூலையிலும் மிக விசித்திரமானது மனிதனின் மனசு தான் என்று உணர்கையில் கண்களில் நீர் நிறைந்தது.//

  மெய்யாய் உணர்கிறேன்!

 3. நினைவுகள் வலிக்கின்றன.

  குறிப்பிட்ட திரைப்படம் தூர்தர்ஷனில் முன்பு திரையிடப்பட்டது. (அப்போது ஒரே சானல்). நாவலை படித்ததில்லை. ஆவல் ஏற்படுத்தியுள்ளீர்கள்.

 4. // ஆயில்யன் said…

  தேசத்துக்காய் மரித்த ஜீவனின்

  நேசத்தினை மறக்காது வாழும் அண்ணா!

  வார்த்தைகள் இல்லை அந்த மாவீரனை பற்றி சொல்ல…!//

  உண்மை தான் ஆயில்யன்
  என் சின்ன வயதில் என்னைச் சுற்றி ஏற்பட்ட இழப்புக்களில் இவனும் ஒருவன்.

 5. //முரளிகண்ணன் said…
  நினைவுகள் வலிக்கின்றன.

  குறிப்பிட்ட திரைப்படம் தூர்தர்ஷனில் முன்பு திரையிடப்பட்டது. (அப்போது ஒரே சானல்). நாவலை படித்ததில்லை. ஆவல் ஏற்படுத்தியுள்ளீர்கள்.//

  வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி முரளிக்கண்ணன்

  முன்னர் தூரதர்ஷன் பார்த்த காலத்தில் இப்படியான பிராந்திய மொழிப்படங்களைப் பார்த்த அனுபவம் எனக்கும் இருக்கின்றது.

 6. அன்பின் பிரபா

  “இவையெல்லாம் இயற்கை ஏற்படுத்தும் பஞ்சங்கள், மிஸ்.
  மனுஷனால் ஏற்படும் பஞ்சம் தான் ரொம்ப ஆபத்தானது” – சுங்கா”

  மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட இடர்தான் குணசீலனையும் கொண்டு போனது.
  குணசீலன் பற்றிய நினைவு மீட்டல் மனதை வெகுவாகப் பாதிக்கிறது.

  1988 களில் இந்தப் படம் குறித்து எதுவும் நாங்கள் அறிந்திருக்கவில்லை.அக்கால கட்டத்தில் ரஹ்மான் மீது பெரிய்ய்ய்ய் அபிமானம் கொண்டவர்கள் எங்கள் வகுப்பில் இருந்தனர். “நிலவே மலரே”படத்தை ரஹ்மானுக்காகவே பல தடவைகள் பார்த்திருக்கிறார்கள்.

  இந்தப் பதிவைப் பார்த்தபின்னர் “மூங்கில் பூக்கள் ” நாவலைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகைத்துள்ளது.(இந்தப் படத்தையும் தான்)

 7. வணக்கம் சகோதரி

  குணசீலன் போன்ற இழப்புக்களை மனதுக்குள் புதைத்து வாழ்கின்றோம்.
  என்ன செய்வது இழப்புக்களோடு வாழும் வாழ்வு தானே எம் சமூகத்துக்கு கிடைத்திருக்கின்றது.

  ரகுமானை ஒரு காதல் நாயகனாக தெரிந்த தமிழ் உலகத்தை போல் மலையாளத்தில் இப்படியான சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கியதும் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *