மேளச்சமா…!

“மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது” இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எட்டு நாள், அப்பிடியெண்டா இண்டைக்கு வியாழன் தேர் நடக்கும், நாளைக்கு தீர்த்தம் என்ற என்ற மனக்கணக்கைச் செய்து முடித்தேன். எங்கட மடத்துவாசல் பிள்ளையாரடி கொடியேறிவிட்டால் நடக்கிற புதினங்களை ஒரு பதிவில் சொல்லேலாது. ஆனாலும் நாளையான் தீர்த்தத் திருவிழாவை நினைச்சால் அதைச் சொல்லவும் நிறைய விசயம் இருக்கு.

மடத்துவாசல் பிள்ளையார் கோயில் பத்து நாள் உற்சவம் முடிந்து பதினோராவது நாள் தீர்த்ததுக்காக களைகட்டும். முதல் நாள் தேரோட மல்லுக்கட்டின அலுப்பெல்லாம் ஒரு பொருட்டாவே இருக்காது எங்கட பெடியளுக்கு. இரவிரவா கோயில் கிணத்தடியில் சோடிக்கத் துவங்கி விடுவினம். கிணத்தடிக்குப் பக்கத்தில் வெள்ளைக் குருமணல் தறிச்சுப் பரவின ஓலைக்கொட்டகை தான் அது நாள் வரைக்கும் திருவிழாக் காலத்தில் அரட்டைக் கச்சேரிக்கும், கச்சான் உடைச்சுத் தின்னவும் புகலிடமாக இருக்கும். ஆனால் தீர்த்த நாளன்று அந்த இடமும் வெறுமையாக்கப்பட்டு கடலைச் சரை, கச்சான் கோது எல்லாம் அகற்றி, அமைச்சர் வரும் தொகுதி மாதிரி மாறிவிடும். அரட்டை அடிக்கிற கூட்டம் தண்ணீர்ப்பந்தலுக்கு பக்கத்திலை இருக்கிற கொட்டகைக்கு இடம் பெயரும்.

கடைக்கார மணியண்ணை தான் தீர்த்தத் திருவிழா உபயகாரர். ஆளைப் பார்த்தால் வாட்டசாட்டமாக மீசை முருகேஷ் போன்று “ல” வடிவ தொக்கை மீசையோட ஆஜானுபாகுவாக இருப்பார். அவரின் தோற்றத்தை வச்சு ஆளை மட்டுக்கட்டேலாது. அவரோட பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால் “அப்பன்”, “சொல்லு ராசா” எண்டு தேனொழுகப் பேசுவார். தீர்த்தத்துக்கு தண்ணியாகப் பணத்தைச் செலவழிச்சு கொண்டாடி மணியண்ணை “மணி” அண்ணை தான் என்று கோயில் ஐயரில் இருந்து கோடியில் இருக்கும் பொன்னம்மாக்கா வரை சொல்ல வைப்பார்.

தீர்த்த நாளும் வந்திட்டுது. பின்னேரம் பொழுது படமுதலே கூட்டம் கூட்டமாய் கோயில் கிணத்தடியில் வந்து அம்மாமாரும், அக்காமாரும் இடம்பிடிச்சு இருந்திடுவினம். வந்தன் மண்டபத்தில் சுவாமியை அலங்காரம் செய்வதில் எங்கள் ஊர் பூக்காரர் நாகராசாவும், உதவியாட்களும் இருப்பினம். வெளியிலை சுவாமிமாரைக் காவும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி கயிறு பிணைக்கும் வேலைகளில் சிறீமான் அண்ணையும் பெடியளும் இருப்பினம். அங்காலை பார்த்தால் ஐங்கரன் அண்ணையாட்கள் பெரும் தொகையாகப் பறிக்கப்பட்ட பன்னீர்ப் போத்தல்களின் பின்பக்கம் ஒரு குத்து விட்டு, தக்கையை எறிந்துவிட்டு கிடாரங்களில் பன்னீரால் நிரப்புவார்கள்.

வசந்த மண்டபத்தில் பூசை புனஸ்காரங்கள் தொடங்கிவிடும். வெளியில் கிணற்றடிக்குப் பக்கத்தில் இருக்கும் பந்தலில் நாதஸ்வர, மேளகாரர் நிரம்பியிருப்பினம். அளவெட்டியில இருந்து பத்மநாதன் குழுவினர், இணுவில் தவில் வித்துவான் சின்னராஜாவும் அவரின்ர இரண்டு பெடியளும், கோண்டாவில் கானமூர்த்தி பஞ்சமூர்த்தி குழுவினர், கோவிந்தசாமியின் மக்கள் இரண்டு பேர், சாவகச்சேரியில் இருந்து பஞ்சாபிகேசன் குழுவினர், இணுவில் பஞ்சமூர்த்தி (நாதஸ்வரம்) புண்ணியமூர்த்தி (தவில்), தவில்மேதை தட்சணாமூர்த்தியின்ர மேன் உதயசங்கர் இன்னும் ஞாபகத்தில் வாராத நிறையப் பேரை அண்டு தான் காணலாம்.

அரை வட்டமாக இருந்து கொண்டு முதலில் அடக்கமாக ஆரம்பிக்கும் மேளச்சமா. பிறகு மெல்ல மெல்ல நாதஸ்வரங்களின் தனி ஆவர்த்தனம். பிறகு ஒராள் சொல்ற வாசிப்புக்கு பதில் சொல்லுமாற் போல இன்னொருவர் வாசிப்பார். மெல்ல மெல்ல ஆரம்பிச்சு பெரிய மழையடிக்குமாப் போல இந்த மேளச்சமா களைகட்டும். பக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறை ஒன்று சுருதிப் பெட்டியை வாசிக்கும், இன்னொருவர் சிஞ்சா அடிப்பார். நாதஸ்வரம் வாசித்தவர் முறுவலோடு வாசித்து விட்டு முறுவலோடு எப்படி? என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா? என்று வாசிப்பிலேயே கேட்பார். தவில்வித்துவானின் கழுத்தில் பாயும் வடச்சங்கிலி அங்கும் இங்கும் அலைந்து திரியும் வேகத்தில் அவரின் அகோர வாசிப்பு இருக்கும்.நாதவெள்ளத்தில் முழ்கியிருக்கும் போது ஒரு சில அடிகள் தவறுதலாக சிஞ்சா அடி நழுவினால் போதும் தவில் வித்துவான் சின்னராசா இருந்த இடத்திலேயே பல்லை நறுவி உறுக்குவார். பல சமயங்களில் பத்மநாதன் போல பெரிய நாதஸ்வர வித்துவான்களே தாங்கள் வாசிக்காத நேரங்களில் இருக்கும் தவில் கச்சேரிக்கு சிஞ்சா போட்டு சீரான இசையில் தங்கள் பங்களிப்பையும் கொடுப்பினம். தான் இளமையாக இருந்த காலத்தில் நடந்ததை பத்மநாதன் இப்படிச் சொல்லியிருக்கிறார், தொடர்ந்து போய்க் கொண்டிருந்த மேளக் கச்சேரி ஒன்றில் சிறுவானாக இருந்த பத்மநாதன் சஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார், ஒரு கட்டத்தில் இவர் கையில் சிராப்பு ஏற்பட்டு இருந்து ரத்தம் பெருக்கெடுக்கவும், அப்போது வித்துவானின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்று கச்சேரி முடியும் வரை தொடர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இப்படிப் பக்கவாத்தியம் வாசித்து, தமது குருவினதும், சக கலைஞர்களதும் வாசிப்பைக் கவனித்தவர்கள் தான் பிற்காலத்தில் நாதஸ்வர மேதைகளாகவும், தவில் வித்துவான்களாகவும் வந்திருக்கினம். அரை வட்ட வடிவாக அமர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் நாதஸ்வர தவில் வித்துவான்களின் வாசிப்பை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆறிலிருந்து அறுபது, எழுபது, எண்பது வரை. சிலர் கையில் தாளம் போட்டு தமக்கும் சங்கீத ஞானம் இருக்கு என்று நிரூபிக்க, இன்னுஞ் சிலரோ கண்களை மூடி தலையை மட்டும் ஆட்டுவார்கள்.“வசந்த மண்டபத்தில இருந்து சாமி வெளிக்கிட்டுதாம்” கோயிலின் உள்ளேயிருந்து வரும் மேளச்சத்ததின் தொனியை வச்சே வெளியில இருக்கிற அம்மாமார் சொல்லுவினம். பஞ்சமுக விநாயகர் நடு நாயகமாக இருக்க, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், இலக்குமி, பார்வதி சமேத நடராசப் பெருமான் என்று சுவாமிகள் வசந்த மண்டபத்தில இருந்து வெளியில் வரும். தீர்த்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உள்ள மேடையில் விக்கிரகங்கள் கழற்றப்பட்ட சுவாமிகள் இருக்கையில் அமரவும், சோமஸ்கந்தக் குருக்கள் தீர்த்த உற்சவச் சடங்குகளைத் தொடங்குவார். பகக்த்தில் உபயகாரர் மணியண்ணை குடும்பம் பவ்வியமா இருந்து பக்தியோடு பார்த்துக் கொண்டிருப்பினம்.

பக்கத்து கொட்டகையில் இருந்த நாதஸ்வர மேள கச்சேரி மெல்ல மெல்ல போட்டிகள் களைந்து ஒரே குடையின் கீழ் கூட்டணி ஆட்சியில் இருந்து வாசிப்பை தொடருவார்கள்.

சோமஸ்கந்த குருக்கள் தீர்த்தோற்வச நிகழ்வை நடத்தியதற்கு அறிகுறியாக கிடாரத்தில் இருக்கும் தீர்த்தத்தை மணியண்ணரின் தலையில் ஊற்றுவார். ஆள் கண்களை மூடிக்கொண்டு பரவசத்தொடு கைகூப்பியவாறே அமர்ந்திருப்பார். பிறகு ஐயர் சுற்றும் முற்றும் இருக்கும் சனங்களுக்கு பன்னீரால் சுழற்றி இறைப்பார். அவ்வளவு தான், சுதந்திரம் கிடைத்த திருப்தியில் பெடியள் கூட்டம் கிடாரத்தை அப்பால் தூக்கிக் கொண்டு அப்பால் நகரவும், அம்மாமார் தீர்த்தம் எடுக்க பொலித்தீன் பைகளுடன் கிணற்றடிக்கு முன்னேறுவார்கள்.

சுவாமிமார் வெளிவீதி வலம் வருவதற்காக, முன்னர் வந்த வாகனத்திலேயே ஏறி அமர, ஆளாளுக்கு ஒவ்வொரு வாகனத்தில் பிணைத்திருக்கும் மரத்தூணைக் கழுத்தில் செருகிக்கொண்டு முன்னேறவும், பன்னீர் கிடாரத்தோடு காத்திருக்கும் பெடியள் கையில் இருக்கும் அண்டாவில் நிறைத்த பன்னீரை வாரி அவர்கள் மேல் இறப்பார்கள். சுவாமிமார் ஆடி ஆடி முன்னுக்கு போவினம். பாரமான மரத்தூணில் சுவாமியை ஏற்றி அங்கும் இங்கும் ஆடுவது கழுத்துப் பகுதியை அண்டி அண்டி வலியை தூண்டும். ஆனால் அதற்கு ஒத்தடம் போடுமாற்போல பாய்ந்து வரும் பன்னீர்த் தெளியல் இதமாக இருக்கும். தண்ணீர் எறிதலும் விட்டபாடில்லை. கண்களுக்குள் பாயும் பன்னீர் இலேசான உறுத்தலைக் கொடுத்தாலும், “அரோகரா! அரோகரா” எண்டு கத்திக் கொண்டே எதையும் தாங்கி முன்னேறுவோம். அரைக்கட்டு கட்டிய வேட்டியில் பன்னீர் மழை தோய்ந்து உள்ளுக்குள் இருக்கும் நீலக்க்காற்சட்டை தெரியும். தூரத்தில் அருச்சனைச் சாமான்களுடன் ஹாப் சாறி (தாவணி)ஒண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருக்கும். கண்கள் மட்டும் அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

வானில் மேல் நோக்கிப் பாய்ந்து தோல்வியடைந்து விழும் பன்னீர் மழை ஒரு பக்கம், சுவாமிகளைத் தூக்கி ஆடும் பெடியள் ஒருபக்கம், அரோகரா அரோகரா என்ற காதைக் கிழிக்கும் பக்தர்களின் கூட்டம் ஒரு பக்கம், இன்னும் இன்னும் வேகமெடுத்து வாசிக்கும் தவில், நாதஸ்வர வித்துவான்களின் உச்சபட்ச வாசிப்பு ஒரு பக்கம் என்று ஒரு பெரும் ஊழிக் கூத்தே அங்கு நடக்கும்.

மணியண்ணையின் கண்களெல்லாம் பன்னீரையும் மீறி ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். அவற்றை வாயிலிருந்து முணுமுணுப்பாய்,

“என்ர பிள்ளையாரப்பு! எங்களையெல்லாம் காப்பாத்து”000000000000000000000000000000000000000000000

கடந்த மார்ச் மாதம் 2008 சிட்னி முருகன் ஆலய மகோற்சவத்திற்காக வருகை தந்திருந்த சிட்னி முருகன் ஆலயத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பதற்கு ஈழத்தில் இருந்து வருகைதந்த இன்னிசை வேந்தன் எம்.பி நாகேந்திரன் அவர்கள், நாதஸ்வர கான விநோதன் பி.எஸ் பாலமுருகன் அவர்கள், லய ஞான செல்வம் ஆர்.வி.எஸ் சிறிகாந்த் அவர்கள், லய ஞான பாலன் பி.எஸ். செந்தில்நாதன் ஆகியோருடனான நேர்காணலை எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் நவரட்ணம் ரகுராம் அவர்கள் செய்திருந்தார். எங்கள் படைப்பாளிகள், கலைஞர்களை ஆவணப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அந்தப் பேட்டியை ஒலிவடிவிலும், எழுத்து வடிவிலும் இங்கே தருகின்றேன்.ஒலி வடிவில் கேட்க

33 thoughts on “மேளச்சமா…!”

 1. மனதை திருப்தி அடைய செய்த பதிவு நன்றி அண்ணா!

  நாதஸ்வர ஒசை அதிகம் கேட்டே பழக்கப்பட்டிருந்தாலும், அது சார்ந்த பகுதிகளிலேயே வாழ்ந்திருந்தாலும் கூட ஏனோ இன்று பதிவிலும் ஒலியிலும் கேட்டு படித்தப்போதுதான் மனதில் மகிழ்ச்சி!

  வாழ்த்துக்களுடன் நன்றி!

 2. உங்களது பாணியிலேயே மிகவிரிவான பதிவு. ந.ரகுராம் அவர்கள் பேட்டி கண்டவிதமும் சிறப்பு.
  பூசலார் தியானத்தில் கோவில் கட்டியது போல நீங்கள் உங்கிருந்தவாறே இணுவில் தீர்த்ததிருவிழாவிற்கு அருமையான வர்ணனை தந்திருந்தீர்கள். மிக்க நன்றி.
  மடத்துவாசல் பிள்ளையார் என்று நீங்கள் சொல்வது பரராஜசேகரப்பிள்ளையாரையா?

 3. //இப்ப இந்தியாவைப் பொறுத்தவரை நிறைய நாதஸ்வர தவில் பாடசாலைகள் வந்திருக்கு. தமிழக அரசே அவைகளை நிர்ணயித்து நடத்தி வருகினம்.
  இந்தியாவில் பாடசாலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கு. அங்கும் ஆசிரியர் ஒருவர் இருந்து குருகுல முறைப்படி சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகிறார். அப்படிப் பயின்றால் தான் முழுமையாக பயில முடியும் என நான் நினைக்கிறேன். //

  உண்மைதான் ஆனாலும் பயில்பவர்களின் எண்ணிக்கை அந்தளவுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இல்லை என்பதும் உண்மை!

 4. //இந்தியாவில கும்பகோணத்தில மாயவரம் போகிற பாதையில் நரசிங்கன்பேட்டை என்ற ஒரு கிராமமிருக்கு. அந்த இடத்தில் தான் இதைச் செய்யக் கூடிய ஆச்சாரிமார் நிறைப்பேர் இருக்கிறாங்க.
  //

  ஹய் இது எங்க ஊரு பக்கத்துலதான் இருக்கே :))

 5. பிரபா
  தட்சணாமூர்த்தியின் ஒலி நாடா உங்களிடம் இருக்கிறதா?

  -தீவு-

 6. தீவண்ணை

  தட்சணாமூர்த்தி அவர்களின் தனித்தவில் கச்சேரி இறுவட்டாக்கிப் பாதுகாத்து வைத்திருக்கின்றேன். அவரைப் பற்றிய ஆவணப்படுத்தலை, அவருடன் வாழ்ந்தவர்களோடு பேசி செய்ய இருப்பது என் திட்டங்களில் ஒன்று. அது செயல்வடிவம் பெறும் போது தட்சணாமூர்த்தி அவர்களின் தவில் கச்சேரியையும் பதிவோடு இணைத்து விடுகின்றேன்.

 7. //ஆயில்யன் said…
  மனதை திருப்தி அடைய செய்த பதிவு நன்றி அண்ணா!//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன். பேட்டியை பாதுகாத்து வைத்திருந்தேன். இன்று தான் போடவேண்டும் என்று கைகூடியிருப்பது எனக்கும் மகிழ்ச்சியே.

 8. // ஆ.கோகுலன் said…
  உங்களது பாணியிலேயே மிகவிரிவான பதிவு. ந.ரகுராம் அவர்கள் பேட்டி கண்டவிதமும் சிறப்பு. //

  வாங்க கோகுலன்

  பூசலார் மாதிரி தானே புலம்பெயர் வாழ்க்கை, மடத்துவாசல் தான் பரராஜ சேகரப்பிள்ளையார். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

 9. அருமையான பதிவு பிரபா. ஊரில் கோயில் திருவிழா என்றால் சொல்லவா வேண்டும். அத்தனையும் சுவாரஸ்யமான அனுபவங்கள் தானே? ந.ரகுராம் அவர்கள் அளிக்கும் பதில் அவர் தன் துறையில் கொண்டுள்ள அளவில்லா பற்றை எடுத்துக்காட்டுகிறது.
  உண்மையில் ஈழத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டும் பதிவாக இருக்கிறது பிரபா.
  தொடர்ந்து எழுதுங்கள்

 10. //Thooya said…
  அருமையான பதிவு கானாஸ்//

  வருகைக்கு நன்றி தூய்ஸ்

  //கோபிநாத் said…
  அழகான திருவிழா பதிவு….ரசித்தேன் தல :))//

  மிக்க நன்றி தல

 11. வணக்கம் பிரபா.அடிக்கடி ஊர் ஞாபகத்தைக் கொண்டு வந்து விடுகிறீர்கள்.மனதை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே முடியவில்லை. ஏதாவது சொல்ல வேணும் போலவே இருக்கு.நானும் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலுக்கு திருவிழாக் காலங்களில் வந்திருக்கிறேன். அருமையான மேளக்கச்சேரி கேட்டு ஓய்ந்தது போல இருக்கு.என் சத்தியமூர்த்தி அண்ணாவைக் காண்பீர்களா?நான்(ரதி)கேட்டேன் என்று சொல்லுங்கள்.எத்தனையோ வருடமாச்சு பார்த்து.அவர் பார்வையில் வளர்ந்தவள் நான்.உறவுகளின் தூரம்…. நினைத்தாலே வலிக்கிறது.நீங்கள் சொன்ன வித்வான்கள் காலத்தோடேயே போச்சு நாதஸ்வரக் கலை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.அந்த அளவுக்கு வளர்ச்சி இப்போ இல்லை. பரம்பரையாகவும் உழைப்புக்காகவும் வளர்கிறதே தவிர ஆத்மார்த்தமாக நாதஸ்வரக் கலை இல்லை என்பது என் கருத்து.இன்று வெள்ளிகிழமை மனம் மங்களமாக நிறைவாக இருக்கிறது பிரபா.நிறைந்த நன்றி உங்களுக்கு.

 12. இசை கேட்க நன்றாக உள்ளது… பதிவு தான் கொஞ்சம் பெரிசா இருக்கு.. நல்ல பதிவுக்கு எவ்வளவு மெனக்கெடறிங்க.. வாழ்த்துக்கள்.

 13. very nice your work. i like very much, i am staying in france but my native place inuvil. i am a musician. vocalist in carnatic;

 14. //இறக்குவானை நிர்ஷன் said…
  அருமையான பதிவு பிரபா. ஊரில் கோயில் திருவிழா என்றால் சொல்லவா வேண்டும். அத்தனையும் சுவாரஸ்யமான அனுபவங்கள் தானே? ந.ரகுராம் அவர்கள் அளிக்கும் பதில் அவர் தன் துறையில் கொண்டுள்ள அளவில்லா பற்றை எடுத்துக்காட்டுகிறது. //

  வணக்கம் நிர்ஷான்

  நம்மூர்த் திருவிழாவில் ஒரு சிறு பகுதி தான் இது. இதைப் போல் எத்தனையோ அனுபவங்கள் இல்லையா. சகோதரர் ரகுராம் அவர்களின் விசாலமான கேள்விகள் விரிவான பல தகவல்களைப் பெற வாய்ப்பாகிவிட்டது. மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு.

 15. //ஹேமா said…
  வணக்கம் பிரபா.அடிக்கடி ஊர் ஞாபகத்தைக் கொண்டு வந்து விடுகிறீர்கள்.//

  வணக்கம் ஹேமா

  உங்களின் விரிவான பின்னூட்டம் மனநிறைவை அளிக்கின்றது. சத்தியமூர்த்தி அவர்களைக் காணும் போது நிச்சயம் சொல்வேன். போரினால் ஊரை இழந்தோம், உறவுகளை இழந்தோம், இப்படியான கலையும் அழிவது வருத்தமேற்படும் விடயம். இந்தக் கலைஞர்கள் நம்மண்ணில் வாழ்ந்தார்கள் என்பது பெருமையிலும் பெருமையான விடயம். மிக்க நன்றி.

 16. Piraba Anna,

  I like your writing style. The best writers are good at creating a vivid picture in our minds merely by using the right words ,style and dialogue format. And with new media you have taken it a step further by incorporating images and audio clips. Great work.

  Love to read more of it in the future

 17. நல்ல ஒலி ஏற்றம்.
  அப்படியே நேரிடையாக கேட்பது போல் இருந்தது.

  லினக்ஸில் சிறிது நேரம் பிடிக்குது.54 நிமிடத்தையும் முதலில் கணினியில் பிடித்துவைத்து பிறகு ஒலியேற்றுகிறது.

 18. //SanJai said…
  இசை கேட்க நன்றாக உள்ளது… பதிவு தான் கொஞ்சம் பெரிசா இருக்கு..//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சஞ்சய், பகுதிகளாகப் பிரித்தால் அவற்றின் உள்ளடக்கம் தொய்ந்து விடுமென்பதால் தான் ஒன்றாகக் கொடுத்தேன்.

  //Theivigan said…
  NICE POST PRABA ANNA..
  //

  மிக்க நன்றி தெய்வீகன்.

  //nanthaa said…
  very nice your work. i like very much, i am staying in france but my native place inuvil. i am a musician. vocalist in carnatic;//

  வணக்கம் நந்தா

  எங்களூரவரைப் பதிவொன்று இணைத்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். முடிந்தால் என் மின்னஞ்சலுக்கு ஒரு மடல் போடுங்கள். உங்கள் திறமையை ஊடகத்திற்குப் பயன்படுத்த விரும்புகின்றேன்.

  kanapraba@gmail.com

 19. அற்புதமான பேட்டி. இதுதான் தேவை பிரபா. நிச்சயமாக இந்த பேட்டியில் இசையைப் பற்றி கதைத்து கொண்டு இருந்தால் எல்லோராலும் ரசிக்க முடியாது. அதற்கு இசை பற்றிய ஞானம் வேண்டும். கேள்வி ஞானம் உள்ள எங்களால் அப்படியான பேட்டியை ரசிக்க முடியாது. அருமையான பேட்டி. ரகுராம் இடம் ஞானம் இருக்கிறது என்பதை விட, நல்ல ரசனை இருந்திருக்கிறது. உள்ள கிடக்கையெல்லாவற்றையும் கொட்டி தீர்த்திருக்கிறார். இதுதான் எங்களுக்கு வேண்டும். அதுதான் அவரின் வெற்றி.

  இதை எமக்கு தந்த பிரபா, உங்களுக்கு நன்றி. தட்சணாமூர்த்தி பற்றிய அரிய பதிவை உங்களிடம் இருந்து வெகு சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்.

  அன்புடன் விசாகன்.

 20. //Sakthi said…
  Piraba Anna,

  I like your writing style.// format.

  மிக்க நன்றி சக்தி, எழுதும் போது வார்த்தைகளைத் தேடாமல், அல்லது வாசிப்பவருக்கு அந்நியப்படாமல் என் நினைவுகளைக் கொட்டவேண்டும் என்று தான் ஓவ்வொரு தடவையும் முயல்வேன். அது உங்களைப் போன்றவர்களுக்கு திருப்தியைக் கொடுத்திருந்தால் அது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

  //வடுவூர் குமார் said…
  நல்ல ஒலி ஏற்றம்.
  அப்படியே நேரிடையாக கேட்பது போல் இருந்தது.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமார், தற்போது தரவிறக்கிக் கேட்கும் வசதியையும் கொடுத்திருக்கின்றேன்.

 21. //கதியால் said…
  அற்புதமான பேட்டி. இதுதான் தேவை பிரபா. //

  வணக்கம் விசாகன்

  திரு.ரகுராம் அவர்கள் நுட்பமாகக் கேள்விகளை அமைத்ததாலேயே கலைஞர்களிடமிருந்து முழுமையான விளக்கமான பேட்டி அமைந்திருந்தது. உண்மையில் இவற்றை ஆவணப்படுத்துவது நம் தேவை. தொடர்ந்தும் நம் கலைஞர்களைப் பொருத்தமான வேளைகளில் அறிமுகம்/ஆவணம் செய்வோம். மிக்க நன்றி.

 22. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ரகுராம்

 23. அண்ணன் நல்ல திருப்பதியான பதிவு …
  ஊர் நினைவுகள் பலதை கிளறி விட்டிருக்கிறீர்கள்…

 24. பதிவு பெரிசாக இருந்தாலும் எதையுமே விடமுடியாமல் எழுதியிருக்கிறீர்கள் எங்கடை ஊரிலயும் சுவாமி வடக்கு வீதிக்க வரும்பொழுது கட்டாயம் ஒரு சின்ன சமா நடக்கும் அது ஒரு தனி உற்சாகத்தோட இருக்கும் அந்த நேரத்தில நேயர் விருப்பங்களும் இருக்கும்… அதே மாதிரி சூரன் போர் நடக்கும் பொழுது வாசிக்கிற பாடல்கள் அதுவும் கடைசி நேரத்தில் பெடியளின்ரை களைப்பு போய் உற்சாகம் வருமளவுக்க வாசிப்பார்கள் அதெல்லாம்..ம்ம்ம்… ஞாபகப்பக்கங்களில் தனி அத்தியாயங்கள் அண்ணன் கோவில் திருவிழாக்கள்…

 25. வணக்கம் தமிழன்

  நாதஸ்வர நேயர் விருப்பம் நான் சொல்ல நினைத்து மறந்து போன விடயம், உங்கள் பின்னூட்டல் மூலம் சொன்னமைக்கு மிக்க நன்றி.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *