குட்டிக்கண்ணா போய் வா…!

குட்டிக்கண்ணன் அவரது தாய்மண் திருகோணமலை.1990ல் ஸ்ரீலங்கா படையினரின் தாக்குதல்கள் மற்றும் தமிழினச்சுத்திகரிப்பால் அவன் குடும்பம் இடம்பெயர்ந்து வன்னிக்கு வருகின்றது.

அங்கு 14 வயது அளவில் அவன் விடுதலைப்புலிகளின் கொள்கைமுன்னெடுப்புப்பிரிவு வீதி நாடகக்குழுவில் இணைந்து பாடகனாகவும் நடிகனாகவும் மாறினான்.அதில் சிறுவனான அவனின் குரலில் வந்த தெருவழிநாடகப்பாடல்கள் மக்கள் உள்ளங்களில் உணர்வேற்றின.அவனது குடும்பம் வறிய குடும்பம்.மிக வறியநிலையில் வற்றாப்பளை கேப்பாபுலவில் வாழ்ந்தது.அந்த நிலையில் அவன் நாடகங்களில் பாடகனாகவும் நடிகனாகவும் இருந்தான்.சிறுவனின் குரல் எழுச்சியாக இருந்தது.

இசைப்பாடல்களை கொள்கை முன்னெடுப்புப்பிரிவு தொகுதிகளாக வெளியிட்டபோது தெருவழி அரங்குகளில் அவன் பாடிய பாடல்களும் புதிய பாடல்களும் இடம்பிடித்தன.இசையின் நுணுக்கங்கள் இல்லாத போதும் மக்களின் உள்ளங்களில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் எழுச்சியாகப்பாடியது அவனின் வெற்றி. அவன் கண்ணன். பல கண்ணன்கள் இசையுலகில் இருக்க இவன் குட்டிக்கண்ணன் என்று பெயர்பெற்றான்.அவனின் சிறுவன் குரல் இருக்கும் வரை சிறுவனாக பாடினான்.ஆடினான் மக்கள் மனங்களை கொள்ளை கொண்டான்.

இடம்பெயர்வாழ்வில் வறுமை வாட்ட போர்நிறுத்த உடன்பாடு அவனது குடும்பத்தை தாய்மண் திருமலை நிலாவெளிக்கு செல்ல வழிவகுத்தது.அங்கு ஓரளவு வசதியுடன் வாழ்க்கை போகத்தொடங்க அவன் குட்டிக்கண்ணன் என்ற நிலையில் இருந்து குரல் மாறியது.இந்த மாற்றத்துடன் அவன் பெரிதாக பேசப்படவில்லை. திருகோணமலையில் போர்நிறுத்த காலத்தில் மீண்டும் சிங்கள அரசின் இனச்சுத்திகரிப்பு தொடங்க மீண்டும் அவன் வன்னிக்கு வந்தான். பாடசாலை மாணவனாக உயர்தரத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற நிலையில் விடுதலைப்போராட்டத்தில் இணைந்தான்.குட்டிக்கண்ணன் தகுதியை குரலில் இழந்த அவன் பெரிய கண்ணனாக பாடல் பாட தன்னை தயார்படுத்திக்கொண்டு விடுதலைப்போராட்டத்தில் இணைந்து போராளியாகி களத்தில் குதித்தான். போராளி சிலம்பரசனாக உருவெடுத்துக் கொண்டார். சிறுவனில் மக்கள் குரலால் எழுச்சிகொள்ள வைத்த அவன் விடுதலைப்போராட்டத்தகுதிக்கான வயதை அடைந்ததும் தனது பாடல்களில் ஒலித்த குறிக்கோளை களத்தில் காட்டத்தொடங்கினார்.அவ்வாறு களத்தில் எதிரியுடனான போரில் அவன் வீரச்சாவைத் தழுவினான்.

குட்டிக்கண்ணன் நினைவாக அவன் குரலில் இரு பாடல்கள்

ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டு வந்த பூமி

அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி சுற்றி வந்த வீதி

6 thoughts on “குட்டிக்கண்ணா போய் வா…!”

 1. “ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டு வந்த பூமி
  அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி சுற்றி வந்த பூமி”

  இந்த பாடலை நான் பல தடவை கேட்டிருக்கிறேன். எனினும் இந்த பாடலை பாடியது குட்டிக்கண்ணன் என்பதுவும் அவர் ஒரு போராளி என்பதுவும் புதுதகவலும்….
  சோகமான பதிவும் கூட

 2. ENB.com has left a new comment on your post “குட்டிக்கண்ணா போய் வா…!”:

  நன்றி அருமையான பாடல்கள், அழகான குரல்வளம்,நேர்த்தியான போர்க்குணம்மிக்க உச்சரிப்பு- என்றும் எமது குழந்தையாய் வாழ்வான் குட்டிக்கண்ணன், அவன் விரும்பியவை, விதைத்தவை வீண்போகா.//அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி சுற்றி வந்த (பூமி)//வீதி என்று இருக்கிறது பாடல் திருத்துங்கள்.

 3. //U.P.Tharsan said…
  எனினும் இந்த பாடலை பாடியது குட்டிக்கண்ணன் என்பதுவும் அவர் ஒரு போராளி என்பதுவும் புதுதகவலும்….
  சோகமான பதிவும் கூட//

  வணக்கம் தர்ஷன்

  குட்டிக்கண்ணனின் பாடல்களை ரசித்த அளவிற்கு அவரைப்பற்றிப் பலருக்குத் தெரியாது என்பதற்காகவே இந்த இடுகையை இட்டேன். இவரைப் போல இன்னொரு போராளிப்பாடகன் சிட்டு.

 4. //Anonymous said…
  ENB.com has left a new comment on your post “குட்டிக்கண்ணா போய் வா…!”:
  .//அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி சுற்றி வந்த (பூமி)//வீதி என்று இருக்கிறது பாடல் திருத்துங்கள்.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே, தற்போது இதைத் திருத்திவிட்டேன்.

  உங்களின் மூலப் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியை எடுத்திருக்கின்றேன். உங்களின் ஆதங்கம் நியாயமானது. இந்தப் பதிவின் திசையை மாற்றி விடும் என்பதால் எடுத்து விட்டேன்.

 5. “குட்டிக்கண்ணன்” புதிய தகவல்.
  மனதை வலுவுடன் தாக்கும் தகவல்.

  “தாய்மண் திருகோணமலை.1990ல் ஸ்ரீலங்கா படையினரின் தாக்குதல்கள் மற்றும் தமிழினச்சுத்திகரிப்பால் அவன் குடும்பம் இடம்பெயர்ந்து வன்னிக்கு வருகின்றது.”

  “இடம்பெயர்வாழ்வில் வறுமை வாட்ட போர்நிறுத்த உடன்பாடு அவனது குடும்பத்தை தாய்மண் திருமலை நிலாவெளிக்கு செல்ல வழிவகுத்தது”

  “திருகோணமலையில் போர்நிறுத்த காலத்தில் மீண்டும் சிங்கள அரசின் இனச்சுத்திகரிப்பு தொடங்க மீண்டும் அவன் வன்னிக்கு வந்தான்”

  ஒரு ஏழைச் சிறுவனின் வாழ்வை இனவாத அரசியல் எப்படியெல்லாம் பந்தாடியுள்ளது.கடைசியில் அவன் காணவிளைந்த விடியலைக் காணமலே போய்ச் சேர்ந்திருக்கிறான்.
  எத்தனையோ கண்ணன் களைப் பலி கொண்ட பூமி இன்னும் போதாதென்று வாய் திறந்து காத்திருக்கிறது.

 6. வணக்கம் சகோதரி

  குட்டிக்கண்ணனை அறிமுகப்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்ததை எண்ணுகின்றேன். நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் சுடும் நிஜங்கள்.

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *