எனக்குப் பிடித்த என் பதிவுகளில் ஒன்று

“எல்.வைத்யநாதன் என்கிற வைத்தி மாமா கிட்ட நிறையவே நாங்க கற்றிருக்கின்றோம், காலைலே அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சு பத்து மணிக்கும் அவரோட கிளாஸஸ் போகும், அவர் சொல்லிக் கொடுக்கும் போது அதை ஒரு பிரவாகம் மாதிரி அதை எடுப்பார். ஆனந்த பைரவி ராகத்தை எடுத்தாருன்னா இன்னிக்கு ஒரு மாதிரியும், அடுத்த நாள் வேறோர் அணுகுமுறையில் அதைக் கொடுப்பார். அவர் ஒரு பெரிய மாமேதை, அவர்க்கிட்ட கத்துக்கிற ஒரு வாய்ப்புக் கிடைச்சது ஒரு பெரிய பாக்கியம். “

இப்படியாக தனது மாமனார் வயலின் மேதை எல்.வைத்யநாதன் குறித்து புகழ்பெற்ற வயலின் சகோதரிகள் எம்.லலிதா, எம்.நந்தினி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் என்னுடன் பகிர்ந்து கொண்ட வானொலிப் பேட்டியில் சொன்ன கருத்துக்கள் அவை.

மே மாதம் 17 ஆம் திகதி இவ்வுலகை விட்டுப் போன எல்.வைத்யநாதன் இறந்த செய்தி இரு நாள் கழித்துத் தான் எனக்குத் தெரிந்தது. எமது குடும்பத்திலே இருந்த ஒருவரைப் பிரிந்த துயரம், இந்தச் செய்தியைக் கேட்ட கணமே என்னுள் தொற்றிக் கொண்டது. என்னைப் பொறுத்தவரை இசையில் முறையான தேர்ச்சியை நான் கொண்டிராவிட்டாலும் வைகை தொகையில்லாமல் எல்லா வகையான இசை, எல்லா மொழியிலும் வரும் இசை என்று கேட்டுப் பழக்கப்படுத்திக் கொண்டவன். எனவே இசைத்துறையில் நான் அவதானிக்கும் ஒவ்வொரு விடயங்களுமே என்னைப் பாதிப்பவை.

எல்.வைத்யநாதன் இப்போது புகழ்பெற்றிருக்கும் எந்த ஒரு இசையமைப்பாளர்களின் திறமைக்கும் கொஞ்சமும் சோடைபோனவரில்லை. ஆனால் இவரால் சினிமாத் துறையிலோ அல்லது அதை விடுத்த சங்கீத மேடைகளிலோ இன்னும் அதிகம் கெளரவப்படுத்தப்படவில்லை என்பது சகித்துக் கொள்ளவேண்டிய ஒரு உண்மை. எனவே நான் நேசித்த எல்.வைத்யநாதனுக்கு ஓர் அஞ்சலியாக அவரின் பெருமைகளையே கட்டியம் கூறும் “எல்.வைத்யநாதன் – ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன்” என்ற இவரின் மரணச் செய்தி கேட்ட நாளிலேயே தகவல்களைத் தேடித் திரட்டி எழுதி முடித்தேன். இந்த பதிவுக்கே தனித்துவமாக , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளராக இருந்த திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் தந்த தகவற் குறிப்புக்கள் பேருதவியாக அமைந்தன.
இந்தப் பதிவை எழுதி முடித்து வலையேற்றிய பின்னர் இந்தச் சோகச் சேதியைக் கொஞ்சமேனும் ஆற்றிய நிறைவு கொடுத்தது. பின்னூட்டல் வாயிலாகவும், தமிழ்நாதம் இணையத்தளம், இருக்கிறம் சஞ்சிகை போன்றவற்றின் மூலமும் இசையார்வலர்கள் இப்பதிவுக்குக் கொடுத்த கருத்துக்கள் என்னால் முடிந்த அளவில் எல்.வைத்யநாதன் அவர்களின் பெருமையைக் கொண்டு சேர்த்த மன நிறைவையும் அளித்தது.

இந்தப் பதிவு போட்டு இரு மாதங்கள் கழித்து சிட்னி முருகன் கோவிலின் சைவ மன்ற நிகழ்ச்சிக்காக வயலின் சகோதரிகள் எம்.லலிதா மற்றும் எம்.நந்தினி சகோதரிகள் வருகின்றார்கள் என்ற சுவரொட்டிகள் இலங்கை இந்திய மளிகைக்கடைகளில் தென்பட்டன. எல்.வைத்யநாதனை நான் சந்திக்கவில்லை, இவரின் வழித்தோன்றல்களான இந்த சகோதரிகளையாவது சந்தித்து எல்.வைத்யநாதன் குறித்துப் பேச வழி கிடைக்குமா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
இந்தச் சகோதரிகள் இசை நிகழ்ச்சிக்காக சிட்னிக்கு வந்து விட்டார்கள் என்ற செய்தியும் கிட்டியது. நிகழ்ச்சி நடப்பதற்கு மூன்று நாள் முன்னர் எமது வானொலியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு எனக்கு வருகின்றது. “பிரபா, வயலின் சகோதரிகள் ரண்டு பேர் வந்திருக்கினம், வானொலிப் பேட்டி ஒன்று உங்களால் செய்ய முடியுமா? ” என்பதே அது. நான் நினைத்ததுக்கு மேல் பேட்டியே செய்யக் கிடைக்கின்றதே என்ற மகிழ்வில் இந்த இரு சகோதரிகளையும் வானொலியில் நேரடிப் பேட்டியும் எடுத்துக் கொண்டேன். பேட்டி முடிந்த பின்னர் அவர்களுக்கும் பரம திருப்தி. தங்களின் இசைப் பாரம்பரியத்தையும், பின்னணியையும் மனம் விட்டு இவ்வளவு விரிவான நேரத்தில் பேசக் கிட்டியதே என்று அடிக்கொரு தடவை தம் நன்றியையும் வெளிப்படுத்தினர். கூடவே நான் என் வானொலி அனுபவத்தில் சந்தித்திராத ஒரு அனுபவமும் கிட்டியது. அதாவது தமது பேட்டி நிறைவு பெறும் தறுவாயில் கர்நாடக சங்கீத இசையையும் நேபாளப் பண்பாட்டு இசையும் கலந்து Fusion இசையை நேரடியாகவே தம் வயலினில் வாசித்து உண்மையிலே உள்ளம் குளிர வைத்தார்கள். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இந்த ஒலிப்பேட்டியைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.

எம்.லலிதா, எம்.நந்தினி வழங்கிய வானொலிப் பேட்டி இதோ

கர்நாடக இசையோடு நேபாளப் பண்பாட்டு இசையைக் கலந்து அவர்கள் கொடுத்த Fusion வடிவத்தைக் கேட்க

இசை நிகழ்ச்சி முடிந்ததும் இந்தச் சகோதரிகள் தம்மை வந்து சந்திக்குமாறு அன்பு வேண்டுகோளை ஏற்று அவர்களைச் சந்தித்தேன். தங்களின் பாட்டனார் இலங்கையில் இருந்த காலந்தொட்டு தம் இசைகுடும்பம், எல்.வைத்யநாதன் என்று நிறையவே பேசி வைத்தார்கள். எல்.வைத்யநாதனுக்கு அஞ்சலி செலுத்திய அதே ஆண்டில் அவரின் தரிசனத்தை இவர்களில் கண்டேன்.

பிற்குறிப்பு: காமிரா கவிஞர் சிவிஆரின் அன்புக் கட்டளைப் பிரகாரம் 2007 இல் நாம் எழுதியவற்றில் எனக்குப் பிடித்த பதிவு என்ற விளையாட்டில் ஆடியிருக்கின்றேன். பொதுவாகவே எனக்குப் பிடித்தமானவற்றையே இப்பதிவில் எழுதவே ஆரம்பிப்பேன் என்பதால் எனக்கு நான் எழுதிய ஒவ்வொரு பதிவுமே திருப்தியைக் கொடுத்தவை. அவற்றில் பொறுக்கி எடுத்த பதிவாக “எல்.வைத்யநாதன் – ஓய்ந்து விட்ட வாத்தியக்காரன்” பதிவை இங்கே தந்திருக்கின்றேன். வாய்ப்புக்கு நன்றி.

12 thoughts on “எனக்குப் பிடித்த என் பதிவுகளில் ஒன்று”

 1. சூப்பரு!!
  தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை வைத்து நீங்கள் மதிக்கும் ஒருவரின் பெயருக்கு மதிப்பு சேர்க்க நீங்கள் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது!!
  ஃப்யூஷன் இசை அமர்க்களம்!!
  வானொலி நிகழ்ச்சி இன்னமும் கேட்க வில்லை!!
  அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு மிக்க நன்றி அண்ணாச்சி!! 🙂

 2. தல

  பல எதிர் கட்சிகளின் சதியை கடந்து பேட்டியும் முடிவில் வரும் இசையையும் கேட்ட முடிந்தது.

  தன்னடக்கம் என்ற வார்த்தைக்கு இனி கானா என்று சொன்னால் அது மிகை இல்லை 😉 அழகான பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தல 😉

  Fusion இசை எனக்கு வரவில்லை தல ;(

 3. பிரபா!!!
  இவர்கள் இருவர் நிகழ்ச்சி இன்னும் நேரே கேட்கவில்லை. ஆனால் ஒலிப்பதிவுகள் கேட்டுள்ளேன்.
  கண்ணை மூடிக் கேட்டால்; இவர்கள் மாமா, எல்.சுப்பிரமணியம் கச்சேரி கேட்டது போல் இருக்கும்;
  அந்தப் பாணி அவர்கள் குடும்பப் பாணிபோலும்.
  இவர்கள் தற்போது லண்டனில் மேற்கத்திய இசை மேற்படிப்பு கற்பதாக அறிந்தேன்.
  சர்வதேச மேடைகளில் பிரகாசிக்க இவர்கள் குடும்பப் பாரம்பரியம் மிக உதவுகிறது. அதனால்
  இவர்கள் பல வகை இசைகளை கலந்து தருபவர்களாக இருக்கிறார்கள்.
  ஒலி ஒளி கிடைக்கவில்லையா???

 4. //CVR said…
  சூப்பரு!!
  தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை வைத்து நீங்கள் மதிக்கும் ஒருவரின் பெயருக்கு மதிப்பு சேர்க்க நீங்கள் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது!!
  //

  வாங்க காமிரா கவிஞரே

  உங்களின் அழைப்பைக் கூடிய சீக்கிரமே நிறைவேற்றியதில் எனக்கும் திருப்தி. சைக்கிள் கேப்பில் இன்னொரு பதிவாவும் இது அமைஞ்சிட்டுது 😉

  // ׺°”˜`”°º×துர்கா׺°”˜`”°º× said…
  எனக்கு அவங்க வாசித்த fusion இசை மிகவும் பிடித்து இருந்தது.அப்போ என் பேட்டி பிடிக்கல்லையான்னு கேட்டக கூடாது :))//

  தங்கச்சி

  அந்தக் கேள்வி கேட்கமாட்டேன். இன்னொன்னு கேட்கட்டா?

  எம்மா உனக்கு இந்தக் கொல வெறி? 😉

 5. இசைக்கோர்வையைக் கேட்டேன். இதே போன்ற இசையை சிக்கிம்மில் கேட்டிருக்கிறேன். ரும்டெக் மானெஸ்ட்ரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது கேட்டிருக்கிறேன்.

  எல்.வைத்தியநாதன் அவர்களின் இசையறிவு பற்றிச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. நல்ல பொருத்தமான பதிவிட்ட உங்களுக்கும் பாராட்டுகள்.

 6. //கோபிநாத் said…
  தல

  பல எதிர் கட்சிகளின் சதியை கடந்து பேட்டியும் முடிவில் வரும் இசையையும் கேட்ட முடிந்தது.

  Fusion இசை எனக்கு வரவில்லை தல ;(//

  வாங்க தல

  நீங்க பேட்டியின் இறுதியில் கேட்ட இசையைத் தான் மீண்டும் கீழே உள்ள பிளேயரில் கொடுத்திருந்தேன். ஆக நீங்க எதையும் இழக்கவில்லை. உங்கள் ஊக்குவிப்புக்கு மீண்டும் ஒரு நன்றி 😉

 7. பிரபா!
  தமிழகக் கலைஞர்கள் பேட்டியெனில்,தமிங்கிலத்தில் குதறுவார்கள். இவர்கள் 95% தமிழ் பேசி அசத்திவிட்டார்கள்.(தேவையான இடத்தில் ஆங்கிலச் சொல் கலந்து)
  அவர்களைப் பேசவைத்ததற்கு பாராட்டுகள்.
  அவர்கள் இசைப் பிரவாகம்போல்
  பேச்சிலும் குறைவில்லை.
  நல்ல பேட்டி.

 8. வணக்கம் யோகன் அண்ணா

  இந்தச் சகோதரிகள் மேற்கத்தேய இசைய வி.எஸ்.நரசிம்மனிடமும் வெளிநாட்டிலும் பயின்றிருக்கின்றார்கள். ஒலிப்பேட்டியைக் கேட்ட போது அவற்றின் விபரங்களைத் தெரிந்திருப்பீர்கள். ஒளிவடிவம் கிட்டவில்லை.

  இவர்கள் சரளமாக அழகு தமிழில் பேசியதும் நல்லதொரு பண்பாட்டைக் காட்டியது.

 9. யோகன் பாரிஸ்(Johan-Paris) said … (January 17, 2008 9:59 AM) :
  பிரபா!
  தமிழகக் கலைஞர்கள் பேட்டியெனில்,தமிங்கிலத்தில் குதறுவார்கள். இவர்கள் 95% தமிழ் பேசி அசத்திவிட்டார்கள்.(தேவையான இடத்தில் ஆங்கிலச் சொல் கலந்து)
  அவர்களைப் பேசவைத்ததற்கு பாராட்டுகள்.
  அவர்கள் இசைப் பிரவாகம்போல்
  பேச்சிலும் குறைவில்லை.
  நல்ல பேட்டி.
  //

  அதேதான்… ரிப்பீட்டு

 10. //G.Ragavan said…
  இசைக்கோர்வையைக் கேட்டேன். இதே போன்ற இசையை சிக்கிம்மில் கேட்டிருக்கிறேன். ரும்டெக் மானெஸ்ட்ரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது கேட்டிருக்கிறேன்//

  வாங்க ராகவன்

  தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *