புலம்பெயர் வாழ்வில் பொங்கல்…!

இன்று தைப்பொங்கல் காலையாக விடிகின்றது. வேலைக்கு விடுப்பெடுத்து ஆலய தரிசனம் செல்ல முன் எங்கள் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிலையக் கலையகம் செல்கின்றேன். காலையில் நேயர்களோடு இணைந்து நேரடி வாழ்த்துப் பரிமாறல்களோடு சிறப்பு வானொலி நிகழ்ச்சியாகக் கழிகின்றது. ஊரைப் பிரிந்து வாழும் உறவுகளின் மனத்தாங்கல்களோடும், வாழ்த்து நிகழ்ச்சி மலரும் நினைவுகளாகவும் அமைந்தது அந்த நிகழ்ச்சி. இத்தைப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பகிரப்பட்ட இரண்டு கவிதைகள் வழக்கத்துக்கு மாறாக இத்தைப்பொங்கல் நாளுக்குப் புது அர்த்தம் கற்பிக்கின்றன.
எல்லோருமே, எல்லாச் சமயங்களுமே கொண்டாடவேண்டிய பொது நாள் என்ற அடி நாதமாய் இக்கவிதைகளின் வரிகள் அமைந்திருக்கின்றன. அவற்றை உடனேயே அந்தப் படைப்பாளிகளின் அனுமதியைப் பெற்று உங்களுக்காகத் தருகின்றேன்.

எனது ஊர் நினைவு தாங்கிய “வெடிகொழுத்தி ஒரு ஊர்ப்பொங்கல்

மேலே படத்தில் இருப்பது புலம்பெயர்ந்தோர் தம் வீட்டின் பின்புறம் கொண்டாடும் பொங்கல் காட்சி. (லண்டனில் இருக்கும் எனது அண்ணன் வீட்டில் போனவருஷம் எடுத்தது)

உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்

முன்னை நாள் இலங்கை வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிப்படைப்புக்களின் ஆலோசகர்களில் ஒருவருமாகிய வானொலி மாமா மகேசன் அவர்கள் தரும் கவிதையை முதலில் தருகின்றேன். புலம்பெயர்ந்த உங்களுக்கு என்ன பொங்கல் வேண்டியிருக்கு என்று கேட்கும் புலச்சிறுவனுக்கு, அவன் தந்தை தைப்பொங்கல் நாளினை ஏன் கொண்டாடுகின்றோம் என்பதை புதிய சிந்தையில் விதைக்கின்றார்.

பொங்கலோ பொங்கல்
புத்துணர்வுப் பொங்கல்

சிட்னியில் வாழ்கின்ற செந்தமிழன் நானென்ற
மட்டற்ற மகிழ்ச்சியென் மனத்திலே இருந்தாலும்
சித்தத்தில் பலஎண்ணச் சிக்கல்கள் வந்தெழுந்து
நித்தலும் கலக்குகின்ற நேரத்தில் பொங்கலென்ற
சத்தமும் வீட்டினிலே சாடையாய்க் கேட்டிடவே
மெத்தவே மகிழ்ச்சியுடன் மேலென்ன செய்வோமென்று
கடைக்கு விரைந்தோடிக் கற்பூரம் சாம்பிராணி
படைக்கப் பழவகைகள் பச்சரிசி சக்கரையும்
பாக்கோடு வெற்றிலையும் பாலோடு தேன் வாங்கி
தூக்கிப் பணங் கொடுத்துத் துரிதமாய் வீடுவந்து
விடியப் பொங்கலென்று வீட்டின் பின்புறத்தில்
அடித்துச் சீமேந்தால் அமைந்த தரை நாம்கழுவி
காலையிலே மாக்கோலம் காஸ் அடுப்புப் பானையென்று
வேலைகள் பலவும் நான் விரித்து மனைவியுடன்
பேசித் தெழிந்து பெருநாளை எதிர்நோக்க
வீசிப்பந்தடித்து விளையாடும் என்மைந்தன்
அப்பா பொங்குவது அவசியம்தானோவென்று
சப்பாத்துக் காலோடே சடபுடென்று ஓடிவந்து
எறிந்தான் ஒரு கேள்வி என்முகந்தான் வியர்த்திடவே

அறிந்த வகையில்நான் அவனுக்குத் தைப்பொங்கல்
எதற்கு என்பதனை இனிமையாய் சொல்லிமிக
விதந்து பேசிமிக வித்தகம் செய்வமென்று
சிந்தித்துப் பார்த்தேன் சிந்தையிலே பலசிக்கல்
எந்தக் கருத்தைநான் எடுத்தியம்ப அவனுக்கு
செந்நெல் விளைவித்த செழுமிகு வேளாளர்
முன்னர் போரடித்து முதல்நெல்லை வீட்டுக்குக்
கொண்டுவந்து சேர்த்துக் குளிர்காலம் போனதென்றும்
பண்டம் விளைவிக்கப் பகலவன் துணைநின்றதனால்
அந்த இறைவனுக்கு அருள் நன்றி தெரிவிக்க
வந்தனத்தை முதற்தேதி வைப்பார்கள் பொங்கலென்று
சொல்லிவாய் மூடவில்லைச் சுறுக்குடனே அவன்கேட்டான்
புல்லரித்துப்போய் நான் புதுக்குழப்பம் என்னவென்றேன்

அப்பாநீர் களத்தினிலே அடித்திரோ போரொருநாள்
தப்பாமல் நெல்விதைத்துத் தண்ணீர்தான் இறைத்தீரோ
இப்போது போரடிக்கும் இளசுகளை விட்டு விட்டு
இப்பாலைக் கோடிவந்து இருந்துகொண்டு தைப்பொங்கல்
பொங்கிப் படைப்போம் புத்தரிசி குத்தியென்று
அங்கிங்கு ஓடி ஆரவாரம் செய்வதேனோ?
என்று கேட்டென்னை இடிச்சபுளி ஆக்கிவிட்டான்.
நன்றே அவனுக்கோர் நயமான பதிலைச்சொல்லச்
சிலாகித்துப் பார்த்தேன் சிந்தையின் கீறலாய்
வந்த கருத்தைச் சில வார்த்தையில் வடித்துச்சொன்னேன்.

எல்லோரும் கமத்தொழிலை இந்நாளில் செய்வதில்லை
பல்தொழில்கள் பார்த்துப் பணம்சேர்க்கும் காலமிது
முன்நாளைப் போல மூவேந்தர் நாடில்லை
இந்நாளில் தமிழரெல்லாம் இங்குமங்கும் பரந்துபட்டு
உலகில் எங்கணுமே உறைகின்ற தன்மையினால்
நலமாக எமக்குமோற் நல்ல கலா சாரமொன்று
வேண்டிக் கிடப்பதனால் வேர்தளைக்க வேண்டுவதால்
கையிற் பொங்குவதைத் தமிழர் திருநாளென்று
வைப்போம் ஒருந்தி வாழ்வோம் ஒருங்கிணைந்து
செய்யுந் தொழிலே தெய்வமென்ற பண்பினிலே
வையத்துத் தமிழரெல்லாம் வாழ்விலென்ன செய்தாலும்

அத்தொழிலின் பலன்நல்கும் ஆண்டவனை நன்றி சொல்ல
வைத்திடுவோம் தைமுதலை வணக்கத்தின் நாளாக
எல்லாத் தமிழர்களும் எச்சமயம் சார்ந்தாலும்
நல்லாய் மனம்திருந்தி நாம் தமிழர் ஒன்றுபடத்
தைப்பொங்கல் நாளைத் தமிழர்திரு நாளென்று
வைப்போம் விதியொன்று வாழ்வோம் ஒருங்கிணைந்து.
மதங்களால் விரிந்தாலும் மக்கள் நாம் பிரியாமல்
உலகத் தமிழரெல்லாம் ஒன்றிணையும் நாளாக
நிலத்தில் தைத்திருநாள் நிலைக்க வழிசெய்வோம்.
பொங்கிப்படைத்துப் பூப்போட்டு வணக்குதற்குத்
தங்கள் மதங்கள் தரவில்லை இடமென்றால்
அந்தத் தைப்பிறப்பை அன்புவழித் திருநாளாய்
பந்து சனங்களுடன் பகிர்ந்துண்ணும் நாளாக
இன்புற்றுக் கொண்டாடி இனத்தின் ஒற்றுமையை
அன்புற்றே வளர்த்திடுவோம் ஆரிதனைக் குற்றமென்பார்?

குத்துவிளக்கும் கோலமும் தோரணமும்
முத்தத்தில் நிறைகுடமும் முன்வாசல் வாழைகளும்
கற்றைக் குழல் முடித்துக் காரிகையார் பூச்சூடி
நெற்றியிற் பொட்டிட்டு நேரிழையார் சேலைகட்டும்
அத்தனையும் மதங்களின் அடிப்படையில் வந்ததல்ல
முத்தமிழர் கலாசாரம் முன்னோர்கள் வாழ்க்கைநெறி
அதுபோன்றே தைப்பொங்கல் அனைவருக்கும் பொதுத்திருநாள்
இது உணர்ந்து மனங்கொண்டு இனிமேலைக் காயிடினும்
தைப்பொங்கல் நாளைத் தமிழர் திருநாளென்று
வைப்போம் ஒருந்தி வருங்காலச் சந்ததிக்கு
என்றுநான் சொல்ல என்மகனோ முகமலர்ந்து
நன்றப்பா அதுவானால் நடக்கட்டும் பொங்கல்
அப்போது தானுண்டு அர்த்தம் பொங்கலுக்கு
இப்போது நான்வருவேன் எங்கள்தமிழ் பொங்கலுக்கு

என்றவன் சொல்லி எந்தனுக்கு உதவிசெய்து
நின்றான் அதுகண்டு நிம்மதியாய் என்னுள்ளே
அன்பு பொங்கட்டும் அருள்நெறிகள் பொங்கட்டும்
இன்பம் பொங்கட்டும் இன் தமிழே பொங்கட்டும்
மங்கலம் பொங்கட்டும் மன அமைதி பொங்கட்டும்
எங்கும் தமிழர்கள் இணைந்துநலம் பொங்கட்டும்
பொங்கலோ பொங்கல் புத்தொளியின் பொங்கல்
பொங்கலோ பொங்கல் புத்துணர்வுப் பொங்கலென்றேன்.

அடுத்து சகோதரி திருமதி மனோ ஜெகேந்திரன் அவர்கள் அளித்திருந்த கவிதை. இந்தத் தைத்திருநாள் அனைத்து மதத்தினருக்கும் பொதுநாள் என்ற கருத்துத் தொனியில் அவர் தன்னைப் பாட்டியாக உருவகப்படுத்தித் தன்பேரனுக்குப் பொங்கலின் பெருமையைச் சொல்கின்றார் இப்படி….

பாட்டிக்கும் பேரனுக்கும் பொங்கலோ பொங்கல்

கட்டுமஞ்சள் தான் அரைத்து
கதிர்விலக முன் குளிர்நீராடி
பட்டுப்புடவை பிரித்து எடுத்து
பளபளக்கக் கட்டிக் கொண்டு
மொட்டுவிட்ட முல்லை ஆய்ந்து
மொய்குழலுக்குக் கோர்த்துச் சூட்டி
வட்டவடிவப் பொட்டு வைத்து
வார்த்தெடுத்து விழிக்கு மைதீட்டி
சட்டென்று பெட்டி திறந்து
சந்தோஷமாய் நகைநட்டுப் போட்டேன் !

வண்ணமாய்ப் புள்ளி போட்டு
வாசல்பூராக் கோலம் இட்டு
கிண்ணம் நிறையப் பாலெடுத்து
கிளைந்துநெல் அரிசிப்பொங்கல் செய்து
அண்ணல்அடிக்குப் பாத்தொகுத்து
அன்னை மரிக்குப் பூப்படைத்து
உண்ண வாழை இலைநறுக்கி
உவகையாய்ப் பலகாரமுடன் பரிமாறி
எண்ணம் அது மீண்டும்வர
ஏனோபடுக்கையென எழுப்பினேன் பேரனை !

ஏன்பாட்டி எழுப்புகிறாய் என்னை
எமக்கேது பொங்கல் பண்டிகை
பூணூல் போடும் இந்துக்களல்லோ
பூர்வீகமாய்க் கொண்டாடும் தினம்அது
நான்போடும் தூக்கத்தை வந்து
நாலரை மணிக்கேன் குழப்புகிறாய்
தேன்கன்னல் பொங்கல் மட்டும்
தீரமுன் என்பங்கு எடுத்துவைபோதுமென
சாணேற முழம்சறுக்கும் பேரன்
சந்தேகமாய் எனைக் கேட்டான் !

கத்தையாகப் பணம் சேர்க்க
காலைமாலை ஆலாய்ப் பறக்கும்
வித்தை கற்றஎன் மகனது
விளக்கிடப்போது இல்லாக் குறைபோக்க
பொத்தி வளர்க்கும் பேரனுக்கு
பொறுமையாக எடுத்து உரைத்தேன்
புத்தம்புது விதை விதைத்து
பூமித்தாய் அவளிற்கு நீர்பாய்ச்சி
மெத்த வழங்கும் உழைப்பதனால்
மேம்படும்நாளே உழவர் திருநாள் !

பக்குவமாய் விளைச்சல் ஆய்ந்து
பகலவனுக்கு முதற் படைத்து
தக்கமுறையாய் நன்றி சொல்லி
தமிழ் இந்துக்கள் வழிபடுவர்
சொக்கத் தங்க மனத்தோடு
சுவைக் காய்கனியாம் முதற்பயனை
மிக்ககனிவு அன்போடு ஆபேல்
மெய்யிறைக்கு அளித்த காணிக்கையில்
தொக்கிநிற்கும் பொருள் கூறத்
தொல் விவிலியத்தின் துணைகொண்டேன் !

இந்துவாய்ப் பிறந்தால் என்ன
இறைகிறீஸ்துவில் நிறைந்தால் என்ன
எந்தமதத்து வழிமுறை ஆயினும்
எம்இனத்துக் கோட்பாடு ஒன்றாம்
தந்த கொடை அத்தனைக்கும்
தற்பரனடிக்கே முதலுரித்தாம் நன்றி
சிந்தை குளிரக் கொண்டாடுவதே
சீர்தமிழர் திருநாள் பண்பாடென்றதும்
விந்தையுற்ற பேரன் எழுந்து
விழிபூத்திடப் பொங்கலோபொங்கல் என்றான் !

21 thoughts on “புலம்பெயர் வாழ்வில் பொங்கல்…!”

 1. வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும். தமிழன் எங்கு இருந்தாலும் அவன் தன் கலாச்சாரத்தை மறக்க வில்லை. என்பதற்க்கு இது ஒரு சான்று.

 2. திருமதி மனோ ஜெகேந்திரன் அவர்கள் அளித்திருந்த கவிதை நன்றாக இருக்கிறது.

 3. வணக்கம் தாசன்

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

 4. “முத்தமிழர் கலாசாரம் முன்னோர்கள் வாழ்க்கைநெறி
  அதுபோன்றே தைப்பொங்கல் அனைவருக்கும் பொதுத்திருநாள்
  இது உணர்ந்து மனங்கொண்டு இனிமேலைக் காயிடினும்
  தைப்பொங்கல் நாளைத் தமிழர் திருநாளென்று
  வைப்போம் ஒருந்தி வருங்காலச் சந்ததிக்கு” கிட்டத்தட்ட என் மகனிடம் நான் சொன்ன வார்த்தைகள்.. எல்லோர்க்குமான சமநிலை உணர்வுகளைக் காட்டுகிறது.. பொங்கல் வாழ்த்துக்கள்

 5. //U.P.Tharsan said…
  திருமதி மனோ ஜெகேந்திரன் அவர்கள் அளித்திருந்த கவிதை நன்றாக இருக்கிறது.//

  வணக்கம் தர்சன்

  உங்களின் பாராட்டு அவரை இப்போது சென்றடைந்திருக்கும். உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

 6. //திகழ்மிளிர் said…
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்//

  வணக்கம் திகழ்மிளிர்

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

 7. பிரபா!
  அனைவருக்கும்,இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
  இவையல்லோ கவிதைகள்….
  பொருளும் ;சுவையும் நிறைந்துள்ளது.
  உண்மை இது உழவர் திருநாளேன்பதிலும் ;தமிழர் திருநாளே பொருத்தம்.

 8. // கிருத்திகா said…
  கிட்டத்தட்ட என் மகனிடம் நான் சொன்ன வார்த்தைகள்.. எல்லோர்க்குமான சமநிலை உணர்வுகளைக் காட்டுகிறது.. பொங்கல் வாழ்த்துக்கள்//

  உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கிருத்திகா
  கவிதை உங்கள் உணர்வையும் ஒத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

 9. // யோகன் பாரிஸ்(Johan-Paris) said…
  பிரபா!
  அனைவருக்கும்,இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
  இவையல்லோ கவிதைகள்….
  பொருளும் ;சுவையும் நிறைந்துள்ளது.
  உண்மை இது உழவர் திருநாளேன்பதிலும் ;தமிழர் திருநாளே பொருத்தம்.//

  மிக்க நன்றி யோகன் அண்ணா
  உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

  // கண்மணி said…
  பொங்கல் வாழ்த்துக்கள் கானா பிரபா//

  உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகுக

 10. தல

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ;))

  அருமையான கவிதைகள் கொடுத்து எங்கள் பொங்கலை புது பொங்கலாக செய்த தலக்கு நன்றியோ நன்றி 😉

  அந்த பாட்டி கவிதை அட அட சூப்பர் தல 😉

  \நான்போடும் தூக்கத்தை வந்து
  நாலரை மணிக்கேன் குழப்புகிறாய்
  தேன்கன்னல் பொங்கல் மட்டும்
  தீரமுன் என்பங்கு எடுத்துவைபோதுமென
  சாணேற முழம்சறுக்கும் பேரன்
  சந்தேகமாய் எனைக் கேட்டான் !\

  ஆகா…எங்க பாட்டிக்கிட்ட பேசுற மாதிரியே இருக்கு..;)

 11. உயர்ந்த பொருள் பதிந்த, உயர் தரமான கவிதைகள். எழுதியவருக்கு பாராட்டுகள்.

  பொங்கல் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை இன்னும் பலர் அறியாதிருப்பது வியப்பளிக்கத்தான் செய்கிறது.

  உங்களுக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

 12. //கோபிநாத் said…
  தல

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ;))//

  Arun said…
  பொங்கல் நல்வாழ்த்துகள்>
  //

  வணக்கம் தல மற்றும் அருண்

  உங்களுக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள்

 13. // John Peter Benedict said…
  உயர்ந்த பொருள் பதிந்த, உயர் தரமான கவிதைகள். எழுதியவருக்கு பாராட்டுகள்.//

  வருகைக்கு நன்றிகள் ஜான், உங்களின் பாராட்டுக்கள் படைப்பாளிகளைச் சென்றடந்திருக்கும்.
  உங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

 14. வணக்கம் தஞ்சாவூரான், முத்துலெட்சுமி மற்றும் தங்ஸ்

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
  உங்கள் பாராட்டுக்கள் அந்தப் படைப்பாளிகளுக்கு இப்போது ஒரு நிறைவை ஏற்படுத்தும். மிக்க நன்றி.

Leave a Reply to முத்துலெட்சுமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *