வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று

இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பதிவுகளையாவது “மடத்துவாசல் பிள்ளையாரடி” தளத்தில் இட்டு வருகின்றேன். நான் வலை பதிய வந்த காலத்து நினைவுகளைக் கடந்த ஆண்டு நிறைவுப் பதிவில் நினைவு மீட்டியிருந்தேன்.

நான் பார்த்து ரசித்தவைகளோ, கேட்டவைகளோ, பாதித்தவைகளோ அனுபவப்பதிவுகளாகவும், அதே நேரம் ஈழத்துப் படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் ஈழ வரலாற்று விழுமியங்களை இயன்றவரை ஒலி மற்றும் எழுத்து ஆவணப்படுத்தலாகவும் இப்பதிவுகளை இன்று வரை எழுதி வருகின்றேன். எனது பதிவுலக முதல் ஆண்டில் நிறையவே எனது வாழ்வியல் அனுபவம் சார்ந்த பதிவுகள் வந்த அதே வேளை இரண்டாவது ஆண்டில் படைப்பாளிகளை, கலைஞர்களை ஆவணப்படுத்தும் பதிவுகள் அதிகம் இடம்பிடித்துக் கொண்டன. 2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போன போது எழுத்தாளர் வரதரைச் சந்தித்து அவரை ஒலி ஆவணப் பேட்டி காண இணக்க வைத்து விட்டால் நாடு தலைகீழாய்ப் போய் அந்தக் காரியம் கைகூடாமல் தள்ளிப் போய் கடந்த ஆண்டு டிசம்பரில் சிக்கன் குன்யாவால் வரதர் அவர்கள் நிரந்தரமாகவே தொடர்பற்றுப் போனது தான் என் இரண்டாம் ஆண்டு பதிவுகளுக்கு முதல் பதிவான சோகமும் ஆயிற்று.

துரித கதியில் காலம் தாழ்த்தாது ஆவணப்பணியை என்னால் முடிந்த அளவு திரட்ட எண்ணி, திரு.கே.எஸ்.பாலசந்திரன், திரு.தாஸீசியஸ், திரு.பாலமனோகரன், பேராசிரியர் சிவத்தம்பி என்று இயன்றவரை நம்மவர்களைக் குறித்த விபரங்களைப் பதிவாக்கினேன். கூடவே மறைந்த திரு. எருவில் மூர்த்தி, கல்லடி வேலுப்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், எல்.வைத்யநாதன், எஸ்.கே.பரராஜசிங்கம் போன்றோர் குறித்தும் பதிவுகளை ஆக்கி வைத்தேன்.

நல்லைக்கந்தன் ஆலயத்தின் 25 நாள் மகோற்சவ காலத்தில் 25 நாளும் பதிவுகளை இட்டேன். கூடவே என் நனைவிடை தோய்தலோடு, நல்ல மலையாள சினிமாக்களும் பட்டியலில் இடம் பிடித்தது.

தினக்குரல், வீரகேசரியின் மெட்ரோ பத்திரிகை, ஈழத்தின் புது வரவு “இருக்கிறம்” சஞ்சிகை, ஈழமுரசு, ஒரு பேப்பர், உதயசூரியன் ஆகிய பத்திரிகைகளில் இப்பதிவுகள் இடம்பிடித்ததோடு ஈழத்தின் நெடியதொரு பாரம்பரியமிக்க “மல்லிகை” சஞ்சிகையில் திரு. மேமன் கவி எனது வலைப்பதிவு குறித்த அவர் கருத்தும் யாழ்ப்பாணத்து வாசிகசாலைகள் என்ற ஆக்கமும் வெளிவந்திருந்தது. அத்தோடு கனடாவில் இருந்து ஜெப்ரி வழங்கும் “கலசம்” என்ற கணினி நிகழ்ச்சியிலும் என் வலைப்பதிவு குறித்த அறிமுகத்தையும் வழங்கியிருந்தார். இவற்றையெல்லாம் பெருமையாகச் சொல்வதை விட என் எழுத்துக்கான அங்கீகாரமாகச் சொல்லிப் பெருமிதமடைகின்றேன். “இருக்கிறம்” சஞ்சிகை தொடர்ந்தும் என் படைப்புக்களை வெளியிட்டு உற்சாகம் தருகின்றது. ஆனால் என்னுடன் எந்த விதமான தொடர்பாடலும் இன்றி சில தளங்களில் ( ஐரோப்பாவில் இயங்கும் ஒரு தமிழ் சங்கம் உட்பட) இப்பதிவுகளை தமது சொந்தப் பதிவாக தமது தளத்தில் இட்டிருப்பது குறித்து மிகவும் கவலையடைகின்றேன். கட்டற்ற வலைப்பதிவில் சங்கடங்களில் இதுவும் ஒன்று.

என் பதிவுகளில் ஒன்றான “அண்ணை றைற்” என்ற கே.எஸ்.பாலச்சந்திரனின் தனி நடிப்பு ஒலி மற்றும் எழுத்துப் பதிவு தான் அதிகம் பார்க்கப்பட்ட பின்னூட்டப்பட்ட பதிவு. அத்துடன் “அண்ணை றைற்” நாடகம் உட்பட்ட தனி நடிப்பு நாடகங்கள் இந்த ஆண்டு முதன் முதலில் இறுவட்டாகவும் வந்தது ரசிகனாக எனக்கு உரிமையோடு உவப்பை அளிக்கின்றது.


மடத்துவாசல் பிள்ளையாரடி தவிர்ந்து,
என் பயணப் பதிவுகளுக்காக உலாத்தல்
ஒலி மற்றும் இசைக்காக றேடியோஸ்பதி
வீடியோ காட்சித் தொகுப்புக்காக வீடியோஸ்பதி
அவுஸ்திரேலிய நடப்புக்கள் குறித்த கூட்டு வலைப்பதிவு
பாடகி பி.சுசீலாவிற்கான கூட்டு வலைப்பதிவான இசையரசி
என்றும் வலைப்பதிவுகளைக் கட்டி மேய்க்கின்றேன் 😉
தற்போது தனியாக ஒரு தளமாக கானா பிரபா பக்கங்கள் என்ற திரட்டியையும் ஆரம்பித்திருக்கின்றேன்.

இன்றுவரை என் மனதின் ஓரமாய் வலிக்கும் இழப்பு , கடந்த மாதம் விமானக் குண்டு வீச்சினால் வீரச்சாவடைந்த போராளி மிகுதனின் இழப்பு. ஓராண்டுக்கும் மேலாக என் வலைப்பதிவின் வாசகனாக இருந்து அடிக்கடி கருத்துக்களையும் விமர்சனங்களையும் தந்தவன் சொல்லாமல் போய் விட்டான். மிகுதன் என்ற போராளி இறந்ததாக செய்தி வந்ததும் அவனுக்கு மின்னஞ்சல் போட்டு சுகம் விசாரித்தேன், அவனா என்று. இன்று வரை எனக்குப் பதில் இல்லை. வெளியே சிரித்து உள்ளுக்குள் அழும் வேஷதாரி வாழ்க்கை தான் நமக்கு.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வலையுலக அரசியல், எதை எழுத வேண்டும் எழுதக் கூடாது, எத்தனை தரம் பின்னூட்ட வேண்டும் என்று கட்டளை போடும் வலையுலக நாட்டாமைகளையும், புறங்கையால் விலக்கி விட்டு என்னால் முடிந்த அளவுக்கு எழுதிக் கொண்டிருக்கின்றேன். தொடர்ந்தும் எழுத எனக்கு மனதில் உறுதி வேண்டி விடைபெறுகின்றேன். பின்னூட்டல் மூலம் இதுவரை என்னுடன் பயணித்த/பயணிக்கின்ற உறவுகளுக்கு என் நேசம் கலந்த நன்றிகள்.

2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்:
வலைப்பதிவில் ஒரு வருஷம்

2007 ஆம் ஆண்டில் நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு இது

வரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது

ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி யாழிலிருந்து வலைப்பதிவெழுதும் பகீ மூலம் அறிந்து நெஞ்சம் கனத்தது. என் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று வரதரின் இலக்கியப்பணியை அவர் குரலில் ஆவணப்படுத்துவது அது இனிமேலும் நிறைவேறாது வரதரின் மரணம் என்ற முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது.

வரதரின் படைப்புலகம்

வரதர் என்ற தி.ச.வரதராசனின் படைப்புலகப் பணியில் அவரின் அச்சுவாகனமேறிய படைப்புகளை அன்னாரின் நினைவுப் படையலாக வழங்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் கருக்கட்டியிருந்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற அவர்தம் படைப்புக்களை முன்னர் வாசித்த பலருக்கு இதுவொரு நினைவு மீட்டலாகும் அதே சமயம் வரதரின் எழுத்துலகப் பங்களிப்பின் ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியாயும் கூட இது அமையும்.

மாட்டுவண்டிச் சவாரிகள்…!

மாட்டுக்காரர் சகிதம் வெறுமையாக ஒரு மாட்டு வண்டி தாவடி நோக்கிப் போகிறது. குதூகலத்தோடு என் காற்சட்டையை மேலே இழுத்துவிட்டு, மாட்டு வண்டியின் ஓட்டதோடு என்னைத் தயார்படுத்தி நிதானமாகக் கெந்தியவாறே பின் பக்கமாக ஏறி அந்த மாட்டுவாண்டியின் ஓரமாகப் போய் இருக்கின்றேன். என்னைக் கடைக்கண்ணால் பார்த்து ஒரு முறுவலை நழுவவிட்டவாறே மாட்டுக்காரர் தன் வாகனத்திற்கு வழி காட்டுகின்றார். ஏதோ பெரிதாகச் சாதித்த களிப்பில் வண்டியின் கழியொன்றைப் பற்றியவாறே ஆடி அசைந்து செல்லும் மாட்டு வண்டியின் பயணத்தை அனுபவிக்கின்றேன்.

பாடி ஓய்ந்த பாடுமீன் ஒன்று

எருவில் மூர்த்தி” என்று திருத்திய அப்பெண் குரல் , நான் அதுவரை அறியாத அக்கவிஞரின் சிறப்பையும் சொல்லிச் சிலாகிக்கின்றார். தவற்றுக்கான மன்னிப்பைக் கேட்டுக் கொண்டே “முடிந்தால் எருவில் மூர்த்தியின் தொலைபேசி எண்ணைத் தரமுடியுமா?” என்று நான் கேட்கவும் அந்த நேயர் தருகின்றார். நவம்பர் 17 ஆம் திகதி 2004 ஆம் ஆண்டு முற்றத்து மல்லிகை நிகழ்ச்சியில் எருவில் மூர்த்தியை வான் அலைகளில் சந்திக்கின்றேன் இப்படி.

யாழ்ப்பாண அகராதி ஒர் அறிமுகம்

புத்தகத்தை வாங்கி விரிக்கும் போது ஆச்சரியமான வகையில் இருப்பது இதன் முதற்பதிப்பு. 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு யாழ்ப்பாண புத்தகச் சங்கத்தால் 10 ஷில்லிங் அல்லது 5 ரூபாய்க்கு விற்கப்பட்டதாம்.

நான் நேசிக்கும் கே.எஸ். பாலச்சந்திரன்

ஈழத்தின் நாடக, திரைப்படக்கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களைப் பற்றிய எனது பதிவை நீண்ட நாட்களாகத் தரவேண்டும் என்று முயற்சி யெடுத்திருந்தேன். அது இன்றுதான் கை கூடியிருக்கின்றது. 80 களில் நான் இணுவில் அமெரிக்கன் மிஷனில் ஆரம்பக் கல்வியைக் கற்கும் காலகட்டத்தில், காலை என் பாடசாலை நோக்கிய பயணத்தில் அடிக்கடி வருவது பாலச்சந்திரன் அண்ணையும் ஒறேஞ் நிற பஜாஜ் ஸ்கூட்டரும் தான்.

காற்றின் மொழி…..!

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

“அண்ணை றைற்”

தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றிய சிறு அறிமுகப்பதிவாக முன்னர் ஒரு பதிவைத் தந்திருந்தேன். அதில் குறிப்பிட்டது போன்று அவரின் ஒவ்வொரு நாடகத்தின் ஒலி வடிவத்தையும் தரவேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தப் பதிவு பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றது. தனியே ஒலி வடிவத்தையும் தராது அதை எழுத்துப் பிரதியாக்கியும் தருகின்றேன்.

மனசினக்கரே – முதுமையின் பயணம்

தன் காதலுக்காக 52 வருஷங்களுக்கு முன்னர் பெற்றோரை உதறிவிட்டு எங்கோ போய் , மீண்டும் பழைய ஊருக்கு வந்து எல்லா இடங்களையும் பார்த்துத் தன் நினைவலைகளை மீட்டுக் கனத்த இதயத்தோடு திரேசாக் கிழவி, ரெஜியிடம் சொல்லுவார் இப்படி,
“எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்.”
அந்த வசனத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.
எங்கட சமுதாயத்தைப் பொறுத்தவரை அண்ணன் ஒரு நாட்டில், அக்கா இன்னொரு நாட்டில, தங்கச்சி வேறோர் இடத்தில.

கல்லடி வேலரின் வாழ்வில்…!

ஆசுகவி என்னும் பட்டத்திற்கு உரியவரான இவர் கவிஞர் மட்டுமல்ல; சிறந்த உரை நடை வசனகர்த்தா.அஞ்சாமை மிக்க பத்திரிகையாளர். சிறந்த சரித்திர ஆய்வாளர். உயர்ந்த சைவத்தொண்டர். ஈழத்தில் மட்டுமல்ல இந்தியா, மலேயா போன்ற தேசத்துப் பெரியார்களாலும் ” வித்தகர்” எனப் பாராட்ட “கல்லடி வேலரின் வாழ்விலே” இடம்பெற்ற சில நிகழ்வுகள்.

மண்ணெண்ணையில் பார்த்த படங்கள்

ஜெனறேற்றர் இயக்கிக் கை வலித்துச் சோர்ந்து போன சுதா, ஏழு வருஷத்துக்கு முந்தி வெளிநாடு போகும் முயற்சியில் ஏஜென்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய எல்லையொன்றில் கொட்டும் பனிமழையில் தனியே விடப்பட்டுக் குளிரில் உறைந்த வெற்றுடல் தான் கிடைத்தது, குடும்பத்துக்கு.படம் போட்டுக்காட்டிய சுரேஷ் நாலு மாசத்துக்கு முந்தி இராணுவத்தால் சுடப்பட்டுச் செத்துப் போனான்.

யாழ்ப்பாணத்து வருசப்பிறப்பு நினைவில்

போன வருஷம் 2006 தமிழ்ப் புதுவருசம் பிறக்கும் போது நான் யாழ்ப்பாணத்தில். யுத்த நிறுத்தம் குற்றுயிராக இருந்த, நெருக்கடி நிலை மெல்ல மெல்லத் தன் கரங்களை அகல விரித்துக் கொண்டிருந்த காலம் அது. ஒரு வருசம் ஆகிய இன்றைய புத்தாண்டுப் பொழுதில் முழுமையாகவே சீர் கெட்ட நிலையில் எம் தேசம். பாதை துண்டிக்கப்பட்டு பாலைவன வாழ்க்கையில் எம்மக்கள்.
கடந்த வருசத்து நினைவுகள் பனிக்கின்றன. இந்த மீள் பதிவின் இறுதி வரிகள் நிரந்தரமாகி விடுமோ என்ற அச்ச உணர்வு பயமாகவும் சோகமாகவும் மனசை அப்பிக்கொள்கின்றது.

உயரப் பறக்கும் ஊர்க்குருவிகள்

பலுங்கு என்றால் ஆங்கிலத்தில் crystal. தற்போது வேகமாக அதிகரித்து வரும் நுகர்வுப் போக்கு, அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் மத்திய தர அல்லது கீழ்த்தட்டு மக்களின் இயல்பு வாழ்வை எப்படிச் சீரழிக்கின்றது என்பதே இந்தத் திரைப்படம் சொல்லும் சேதி.

எல்.வைத்யநாதன் – ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன்

தன் தந்தையின் மூலம் ஆரம்பமுகவரி அமையப்பெற்ற இவருக்கு இரண்டாவதும் நிரந்தரமுமான முகவரியை வயலின் வாத்தியம் தேடிக்கொடுத்தது.

அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தாலும் இசையே தன் ஜீவநாடியாகக் கொண்டு வாழ்ந்த எல்.வைத்யநாதன் தன் இசைப்பணியைப் திரைப்படைப்புக்களிலும், தனிப்பாடல் திரட்டுக்களிலும், இசைக் கலவைகளிலும் கலந்து வியாபித்து எம்மோடு வாழ்ந்துகொண்டு தான் இருப்பார்.

தாசீசியஸ் பேசுகிறார்…!

ஈழத்து நவீன நாடக வரலாற்றிலே புதிய போக்கினை நிறுவிய நாடக நெறியாளர், ஊடகர் ஏ.சி. தாசீசியஸ் அவர்கட்கு கனடிய இலக்கியத் தோட்டத்திற்கான தேர்வுக்குழு 2006ஆம் ஆண்டுக்கான இயல் விருது வழங்குகின்றது. விருது வழங்கும் நிகழ்வு 03-06-2007 ல் கனடாவில் இடம்பெற்றது. இந்த வேளையில், ‘தமிழ்நாதம்” இணையத் தளத்திற்காகச் தாசீசியஸ் அவர்கள் வழங்கிய சிறப்புச் செவ்வியின் ஒலி மற்றும் எழுத்து வடிவம் கொண்ட பதிவு.

யாழ்ப்பாணத்துச் சமையல்

குளித்து முடித்துக் குசினிக்குள் போகின்றேன், சாப்பாட்டுத் தட்டுக்கு மேல் உதயன் பேப்பர் விரிப்பில் பொன்னிறத்தில் பொரிக்கப்பட்ட இறால் துண்டுகள் குவிந்திருக்கின்றன. சோற்றுடன் கொஞ்சமாக மட்டும் இறாலைப் போட்டுச் சாப்பிடுகின்றேன்.

“ஏன் தம்பி வடிவாப் போட்டுச் சாப்பிடன், நீ ஆசைப்படுவாய் எண்டு பெரிய இறாலாப் பார்த்து வாங்கினது” இது என் அம்மா.

“என்னவோ தெரியேல்லை அம்மா, இப்ப எனக்கு கனக்கப் பசிக்கிறேல்லை”.

விளையாட்டுப் போட்டியும் வினோத உடைக்கூத்தும்

உங்கட பள்ளிக்காலத்தில் மறக்கமுடியாத நாட்கள் எவை? “
என்று யாராவது என்னைப் பேட்டியெடுத்தால் நான் விழுந்தடிச்சுச் சொல்வேன்,
“விளையாட்டுப் போட்டி நடக்கிற நாட்கள் தான்” என்று.வருடத்தின் பெரும்பாலான நாட்கள் வெறும் பீ.ரி ( physical training) வகுப்புக்குத்தான் எட்டிப் பார்க்கும் மைதானம் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் என்றால் தான் முழு நேர ஊழியனாக மாறிவிடுகின்றது.அதுவரை காலமும் தலைகுனிந்து நாணிக் கோணியிருந்த மைதானம் தலை நிமிர்ந்து நிற்க வழி சமைப்பது இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலம்.

விபுலாநந்த விலாசம்

ஈழத்தின் கிழக்குக் கோடியில் காரைதீவு என்ற சிற்றூரிலே 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். அடிகளாரின் பன்முகப் பணி குறித்த தொகுப்பு இது.

பாலச்சந்திரன் அண்ணை கதைக்கிறார்..!

கே. எஸ். பாலச்சந்திரனின் “அண்ணை றைற்” முதலான தனிநடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு இறுவட்டு (CD) வெளியீட்டை முன்னிட்டு அதனையொட்டிய சிறப்புப் படையலாக, கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் தயாரித்து வழங்கிய வாத்தியார் வீட்டில் வானொலி நாடகத்தின் ஒரு பகுதியையும், 2005 ஆம் ஆண்டில் அவருடன் நான் கண்ட ஒலிப்பேட்டியையும் தருகின்றேன்.

நிறைவான நல்லூர்ப் பயணம்

ஈழத்தின் நல்லைக் கந்தன் ஆலயத்தின் இருபத்தைந்து நாள் மகோற்சவ காலத்தில் ஒவ்வொரு நாளும் இடுகையிட்டு அமைந்த வரலாற்று, ஆன்மீக, இசையின்பம் கலந்த பதிவுகளின் தொகுப்பு. நாளாந்த வேலைப்பழுவின் மத்தியில் என்னுடைய சக்திக்கு மீறிய விடயமாக இருந்தாலும் எம்பெருமான் அருளால் கைகூடிய பதிவுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிய அன்பர்களுக்கும் நன்றியறிதல் என்றும் உண்டு.

நிலக்கிளி” தந்த அ.பாலமனோகரன்

திரு.அ.பாலமனோகரன் அவர்கள் ஈழத்தின் வன்னி மண் தந்த தரமான படைப்பாளிகளில் ஒருவர். ஆக்க இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஓவியம் என்று தன்னுடைய திறமையை விசாலமாக்கிக் கொண்டவர். திரு. பாலமனோகரனின் படைப்புப் பயண அனுபவத்தை ஒலி மற்றும் எழுத்து வடிவில் பகிரும் பதிவு.

பரா என்றதோர் ஈழத்து இசைச்சிங்கம்

ஐந்து வருடங்களாக ஈழத்து மெல்லிசைப்பாடல்களோடு “முற்றத்து மல்லிகை” என்றும் பின்னர் இப்போது படைக்கும் “ஈழத்து முற்றம்” போன்ற என் வானொலிப் படைப்புக்களுக்கும் பிள்ளையார் சுழி கூட இந்தப் பாடலில் இருந்தே ஆரம்பித்தது. இந்த நன்றிக் கடனைத் தீர்க்க எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் பதிவாக இதனைத் தருகின்றேன்.

தீவாளி வருஷங்கள்….!

தைபொங்கல், புது வருஷப்பிறப்பு போன கையோட தீபாவளி எப்ப வருகுது எண்டு, அப்பாவின்ர கட்டிலுக்கு அங்கால இருக்கிற மெய்கண்டான் கலண்டரின்ர திகதித் துண்டுகளை விரித்து எண்ணத் தொடங்கி விடுவேன். தீபாவளிக்கான நாள் நெருங்க நெருங்க, பாரதிராஜாவின்ர பாட்டுக்களில வாற வெள்ளை உடை அக்காமார் ஸ்லோமோஷனில் வருமாப் போல நானும் அந்தரத்தில பறப்பேன்.

எழுபத்தைந்தில் பேராசான் கா.சிவத்தம்பி

தமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், தலை சிறந்த விமர்சகர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்த ஆண்டு தனது எழுபத்தைந்தாவது அகவையில் காலடி வைத்திருக்கின்றார். பேராசிரியரின் பவள விழாவினையொட்டி துறைசார் அறிஞர்களையும் , அவரிடம் கல்வி கற்ற மாணாக்கரில் சிலரையும் கொண்டு ஒலிப்பகிர்வு மூலம் தயாரித்த ஒரு வானொலிப் பெட்டக நிகழ்ச்சி, எழுத்து வடிவுடன் கூடிய பதிவாக அமைகின்றது.

52 thoughts on “வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று”

 1. இரண்டு வருடப் பூர்த்திக்கு வாழ்த்துக்கள் அண்ணா . தொடர்ந்தும் இன்னும் பல ஆண்டுகள் எழுதி எம்மை மகிழ்விக்க எல்லாம்வல்ல நல்லைக்கந்தன் அருள்புரிவாராக>:D< அண்ணா இன்னொன்று “கானாபிரபா பக்கங்கள்” இனைக்கொஞ்சம் கவனியங்கள் பழைய பதிவுகளோட நிற்கிறது :-/

 2. வாழ்த்துக்கள் கானா பிரபா,
  2007 தொகுப்பு அலட்டல் இல்லாத விசயங்கள் தான். தொடர்ந்து எழுதுங்கள். ஈழத்து கலை இலக்கிய முன்னோடிகளை ஆவணப்படுத்தும் பணியும் பாராட்டிற்குரியது என்பதற்கு அப்பால் உங்களிற்கு பெருமையும், மன நிறைவையும் சேர்க்கக் கூடியது.

 3. இரண்டு ஆண்டுகளை முடித்த பிரபா அண்ணாச்சியை வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன் 🙂

 4. பிரபா!
  இரண்டு வருசம் தானா; எனக்கு ஏதோ பலவருட தொடர்பு போல் உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.
  எஸ் பொ வின் , பழையன மீட்டலுக்குப் பின், உங்கள் விரும்பிப் படிப்பேன்.

 5. அண்ணை! வாழ்த்துக்கள்!!!

  இதுதான் துரைவீதியா? எங்க ஊர் மாதிரியே இருக்கு. அப்ப நீங்கதான் துரையா 😉

  மேன்மேலும் புகழடைய வாழ்த்துக்கள்.

  சினேகபூர்வம்
  முபாரக்

 6. என் அன்புத்தோழர் பிரபா எப்போதும் தன்னுடைய தனித்தன்மையால் என்னை பொறாமை கொள்ளவைத்தவர். மேலும் அவர் பல படைப்புகளையும் ஆவணங்களையும் உலவவிட என்னுடைய மணமார்ந்த வாழ்த்துக்களையும் கைத்தட்டல்களையும் பதிப்பிக்கிறேன்.

 7. //தமிழ்பித்தன் said…
  எம்மை நாற்றமிழ் கொண்டு திணறடிக்க வாழ்த்துகிறேன்.//

  தமிழ்பித்தா

  நற்றமிழ் நாற்றமிழாப் போயிட்டுதோ நன்றி 😉

  //மாயா said…
  “கானாபிரபா பக்கங்கள்” இனைக்கொஞ்சம் கவனியங்கள் பழைய பதிவுகளோட நிற்கிறது :-///

  வணக்கம் மாயா

  இந்த மார்கழி விடுமுறையில் அந்த வீட்டை ஒழுங்காகக் கவனிக்கின்றேன்.

  //கோசலன் said…
  ஈழத்து கலை இலக்கிய முன்னோடிகளை ஆவணப்படுத்தும் பணியும் பாராட்டிற்குரியது என்பதற்கு அப்பால் உங்களிற்கு பெருமையும், மன நிறைவையும் சேர்க்கக் கூடியது.//

  உண்மை தான் கோசலன், இந்த ஆவணப்படுத்தல் மிகுந்த மனநிறைவை அளிக்கும் விடயம், இன்னும் பல வேலைகள் இருக்கின்றன.

  //ஆயில்யன் said…
  வாழ்த்துக்கள் கானா அண்ணா!//

  மிக்க நன்றி ஆயில்யன்

  //Sud Gopal said…
  இரண்டு ஆண்டுகளை முடித்த பிரபா அண்ணாச்சியை வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன் :-)///

  வாழ்த்து இருக்கட்டும், மாலையப் போடுமய்யா முதலில் 😉

 8. வாழ்த்த வயசில்லைத்தான். ஆனாலும் மனமுண்டாதலால் வாழ்த்துக்கின்றேன். தொடர்க! வளர்க!!

  நன்றி.

 9. இந்தத் தொகுப்பு போடும் முறை அமர்க்களம். விட்ட பதிவுகளை பிடிக்கவும், விடாத பதிவுகளை அசை போடவும் (முதல் வருடம் போலவே) பயனாக இருக்கிறது.

  நன்றிகள் பல

 10. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் பிரபா. இன்னும் பல சிறப்பான தகவல்களைத் தொகுத்தெழுதி சிறப்பான இடத்தில் இருக்க என்னுடைய வாழ்த்துகள்.

 11. வாழ்த்து(க்)கள் பிரபா.

  இது நல்ல ஐடியாவா இருக்கே.

  எல்லாத்தையும் தொகுத்து வழங்குனதைச் சொல்றேன்.

  நல்லா இருக்கு.

  நல்லா இருங்க!!!!

 12. கா.பி,
  வாழ்த்துக்கள்.

  /* ஆனால் என்னுடன் எந்த விதமான தொடர்பாடலும் இன்றி சில தளங்களில் ( ஐரோப்பாவில் இயங்கும் ஒரு தமிழ் சங்கம் உட்பட) இப்பதிவுகளை தமது சொந்தப் பதிவாக தமது தளத்தில் இட்டிருப்பது குறித்து மிகவும்
  கவலையடைகின்றேன். கட்டற்ற வலைப்பதிவில் சங்கடங்களில் இதுவும் ஒன்று. */

  ‘தடியெடுத்தவன் எல்லாம் சண்டியன், எழுத்தாணி பிடிச்சவன் எல்லாம் எழுத்தாளன்’ எண்டு நினைக்கிறவர்கள் போல சிலர் ரொரன்ரோவிலும் பத்திரிகைகள் வெளியிடுகிறார்கள். இவர்கள் வெளியிடும் செய்திகள் கட்டுரைகள் பல தமிழக, மற்றும் ஈழத்தில் இருந்து வரும் பத்திரிகைகள், இணையத்தளங்கள்,சஞ்சிகைகளில் வருவன.

  அண்மையில் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த போது, தமிழ் வார இதழ் ஒன்று கண்ணில் பட்டது. புரட்டிப் பார்த்தால், தமிழ்மணத்தில் சுப்பையா வாத்தியார் எழுதிய கவியரசரின் கட்டுரை.

  அதேபோல தமிழ்சசி எழுதிய ஈழம் பற்றிய கட்டுரை ஒன்றும் வேறு ஒரு வார இதழில் பார்த்த ஞாபகம்.

  இப்படி இவர்கள் செய்கிற களவுகள், திருகுதாளங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

  ஒரு படைப்பை எழுதுவதற்கு ஒருவர் எவ்வளவு சிரமப்படுவர். அப்படிச் சிரமப்படுபவர்களின் உழைப்பை களவு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேணும்.

  உண்மையில் இந்த நாட்டில் இக் கள்ளர்களைத் தண்டிப்பதற்கு சட்டங்கள் உண்டு. இப்படிச் செய்பவர்கள் மீது படைபாளிகள் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அப்ப தான் இவர்கள் திருந்துவார்கள்.

 13. கானாபிரபா

  உங்களுடைய சில பதிவுகள் என் நினைவில் இடம் பெற்றிருக்கின்றன. இப்போதெல்லாம் மாம்பழங்களை பார்க்கும் போதெல்லாம் சிறுவயதில் எத்தனையோ முறை உண்ட நினைவுகள் கூட உடனே வருவதில்லை. உங்கள் பதிவில் நீங்கள் போட்டிருந்த படமும் அதை ஒட்டி எழுதிய எழுத்துமே நினைவில் வருகிறது. இதவிட சிறப்பான ஒன்ரூ வந்தால் தவிர இது போகாது. அதேபோல பல நினைவு பதிவுகள் எனக்கு பிடித்தமானவை. வாழ்த்துக்கள்.

  கடந்த மாத விமான வெடிகுண்டு வீச்சை குறித்த முற்றுப்பெறாத நினைவொன்றும் கூட வரும். வலிநீங்க காலம் உதவட்டும்.

 14. கானா பிரபா,
  வாழ்த்து…

  உம்மட பதிவைப் பாத்த பிறகுதான் நாங்கள் மூண்டுவருச நிறைவுக்குப் பதிவெழுதாதது ஞாபகம் வந்தது.
  சரி, நாலாம் வருச நிறைவுக்கு எழுதுவம்.

  எழுதினாலும் உங்களை மாதிரி தொகுப்புப் போடத்தான் உருப்படியான பதிவுகளில்லை. ;-(

 15. அய்யனார், சின்னக்குட்டி, பகீரதன் – மிக்க நன்றிகள்
  யோகன் அண்ணா – தங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் கொடுக்கும் தகவல் பொதிந்த பின்னூட்டமும் குறித்த பதிவுகளுக்கு சிறப்புச் சேர்ப்பதையும் சொல்லி வைக்க வேண்டும்.

 16. வாழ்த்துக்கள் பிரபா. மென்மேலும் நிறைய நம் மண்ணைப் பற்றியும், இசையைப் பற்றியும் எழுதுங்கள்.

  போனால் போகுது எனக்கு மட்டும் அந்த பாவனா ரகசியத்தைச் சொல்லுங்கள்.

 17. வாழ்த்துக்கள் பிரபா. இன்னும் நிறைய நிறைய நிறைய எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்.:-)

 18. மனபூர்வமான வாழ்த்துக்கள், உங்கள் பணி தொடரட்டும்.

 19. //முபாரக் said…
  இதுதான் துரைவீதியா? எங்க ஊர் மாதிரியே இருக்கு. அப்ப நீங்கதான் துரையா ;-)//

  தல

  நான் கட்டத்துரை 😉

  //குட்டிபிசாசு said…
  மேலும் அவர் பல படைப்புகளையும் ஆவணங்களையும் உலவவிட என்னுடைய மணமார்ந்த வாழ்த்துக்களையும் கைத்தட்டல்களையும் பதிப்பிக்கிறேன்.//

  மிக்க நன்றி அருண்

  //Covai Ravee said…
  வாழ்த்துக்கள் அருமை அருமை..//

  ரொம்ப நன்றி ரவி சார்

  //மலைநாடான் said…
  வாழ்த்த வயசில்லைத்தான். ஆனாலும் மனமுண்டாதலால் வாழ்த்துக்கின்றேன். //

  எல்லாருக்கும் வயசு போட்டுது போல 😉

 20. அது (வயசு போன அம்மா)என்னோட ஆரம்பப் பள்ளி வாத்தியார் படம்.;-0
  //எல்லாருக்கும் வயசு போட்டுது போல ;-)//
  இப்ப பாருங்க எனக்கு வயசு போகல:-)))

 21. வாழ்த்துக்கள் பிரபா அண்ணா. உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் பணி நன்றே தொடரவும், தொடரக்கூடிய சக்தியை உங்களுக்கு இறைவன் வழங்கட்டும் என்று வேண்டியும் வாழ்த்துகின்றேன்.
  நம்மில் சிலரெல்லாம் (நானும் தான்) எழுதத் தொடங்கி விட்டு தொடர்ச்சியாக ஒரு ஆக்கங்களையும் வழங்குவதில்லை… வழங்குவதற்கு மனமிருந்தும் நேரப்பிரச்சனை… ஆயினும் தங்களுக்கு இறைவன் தொடர்ந்து எழுதக்கூடிய மனத்தையும் சுற்றாடலையும் ஏற்படுத்தித் தந்திருக்கின்றான்… வானொலி… வேலை… வீடு என்று அனைத்து அலுவல்களின் மத்தியிலும் தங்கள் பணி நின்றுவிடக்கூடாது… நம் நாட்டு மக்கள் படும் அவலங்கள்… உங்கள் அனுபவங்கள் பேன்றனவற்றையும் நீங்கள் போன்றவர்கள் எழுத வேண்டும் என்பது எனது அவா…
  தொடர்க உங்கள் பணி….

 22. வாழ்த்துக்கள் கானா பிரபா அண்ணை. உங்களின் அனைத்து பதிவுகளையும் வாசிப்பவன் நான். இருந்தாலும் பின்னூட்டம் போட இயலுவதில்லை. (எனி அடுத்த வருச பதிவுக்குத்தான் வந்து பின்னூட்டம் போடுவன்.)

 23. //Boston Bala said…
  இந்தத் தொகுப்பு போடும் முறை அமர்க்களம்.//

  வணக்கம் பாலா

  சொதப்பும் புளக்கரில் எனக்கும் இந்தப் பதிவுகளை மீண்டும் சென்று பார்க்கவும் இந்தத் தொகுப்பு உதவும் என்பதும் ஒரு காரணம். மிக்க நன்றி

  இளா, ஜி.ராகவன், துளசிம்மா

  தங்கள் அன்புக்கு நன்றி

 24. //வெற்றி said…
  இவர்கள் வெளியிடும் செய்திகள் கட்டுரைகள் பல தமிழக, மற்றும் ஈழத்தில் இருந்து வரும் பத்திரிகைகள், இணையத்தளங்கள்,சஞ்சிகைகளில் வருவன.//

  வணக்கம் வெற்றி அண்ணை

  படைப்பைப் போடும் போது ஒரு மடல் கொண்டு உறுதிப்படுத்தினால் எவ்வளவு நல்லது. காரணம் எம்மிடம் குறித்த படைப்பை வாங்கும் சஞ்சிகைகளுக்கோ திருட்டுப் பட்டம் கிடைக்காதல்லவா?
  சொல்லாமல் கொள்ளாமல் முன்பே எடுத்துப் போடுவதால் இந்தச் சிக்கல் வரும்.

  //பத்மா அர்விந்த் said…
  அதேபோல பல நினைவு பதிவுகள் எனக்கு பிடித்தமானவை. வாழ்த்துக்கள்.//

  வணக்கம் பத்மா அர்விந்

  -நினைவுப்பதிவுகள் தான் நம்மை உயிர்ப்பிக்கும் மருந்தாக இருக்கின்றன. இவற்றைப் பகிர்வதோடு மீண்டும் வாசிப்பதால் ஒரு ஆறுதலும் கிடைக்கின்றது.

  //வசந்தன்(Vasanthan) said…
  கானா பிரபா,
  வாழ்த்து…

  உம்மட பதிவைப் பாத்த பிறகுதான் நாங்கள் மூண்டுவருச நிறைவுக்குப் பதிவெழுதாதது ஞாபகம் வந்தது.
  சரி, நாலாம் வருச நிறைவுக்கு எழுதுவம்.

  எழுதினாலும் உங்களை மாதிரி தொகுப்புப் போடத்தான் உருப்படியான பதிவுகளில்லை. ;-(//

  அண்ணை

  நீங்களே இப்படிச் சொல்லலாமே? எத்தனையோ நல்ல தொகுப்புக்களை உங்களிடமிருந்து வாசித்திருக்கின்றேனே

 25. செல்லியக்கா

  புரெபைலில் இருக்கும் உங்கள் படம் இளமைக் காலத்தில் எடுத்ததா 😉
  வாழ்த்துக்கு நன்றி

  தயானந்தா அண்ணா, வெயிலான், ஹரன், காசி அண்ணா தங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  மதுலா

  நீங்களும் கூடிய சீக்கிரம் தமிழ்மணத்தில் இணையுங்கள்.

  பகீ

  போன வருசம் ஆண்டுப்பதிவுக்கும் உப்பிடித் தான் சொன்னனீங்கள், நீங்கள் வலைக்கு வாறதே பெரிய விசயமெல்லோ.

 26. பிரபா, உங்கள் பதிவுகள் அனைத்துமே முத்தானவை. தொடர்ந்து தாருங்கள். வாழ்த்துக்கள்.

 27. //செல்லியக்கா
  புரெபைலில் இருக்கும் உங்கள் படம் இளமைக் காலத்தில் எடுத்ததா ;)//

  அது என்னோட வாத்தியாற்ர படமல்லோ. அந்த அழகுதான் எங்கட யாழ்ப்பாண அம்மாக்களின் யதார்த்தமான தோற்றம்.
  பார்க்க வடிவில்லை எண்டதுக்காக dye அடிச்சு இங்கத்தைய அம்மாக்களைப்போல படம் போட முடியுமா, என்ன?
  அந்த அழகு உண்மை
  இந்த அழகு போலி

  இங்கு ஊருக்கு புதுசானதால இப்போதைக்கு நான் ஓரமா நிக்கிறேன்.ஆனா ஒரு நாளைக்கு உங்கள் எல்லாரையும் ஒருமுறை சிட்னி வந்து சந்திப்பேன்.

 28. பிரபா,

  இரண்டாண்டு நிறைந்ததற்கு வாழ்த்துக்கள். ஈழத்தமிழர்களின் இலக்கிய, வரலாறு மற்றும் சமூக பாரம்பரியங்களை உங்கள் பதிவின் மூலமாகத்தான் அறியப் பெற்றேன். இங்கே ஒரு ஈழக்குடும்பத்தினர்க்கு உங்கள் நல்லூர் கந்தன் பதிவைக் காட்டினேன். அவர்கள் கண்களில் நீர் தளும்பி கணனியின் முன்னே சேவிக்க இருந்தனர்.

  போரினால் ஒரு சமூகம் எப்படியெல்லாம் சிதறுண்டு போகிறது என்பதையும் உங்கள் பதிவுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் இழந்த நண்பர்கள், குண்டு வீச்சில் சிதைந்த வீடுகள், கோயில்கள் படித்து மனதில் வலி.

  தொடரட்டும் உங்கள் அற்புதமான சேவை.

 29. வணக்கம் நாகு

  தங்களின் பின்னூட்டல் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அந்த ஈழச் சகோதரங்களுக்கு என் அன்பைத் தெரிவித்து விடுங்கள்.

  நான் புலம்பெயர்ந்து 10ஆண்டுக்குப் பின் தான் என் பெற்றோரைச் சந்திக்க முடிந்தது. நான் வெளிநாடு வரும் போது பெற்றோரின் அரவணைப்பில் இருக்கவேண்டிய வயதில் தான் வந்தேன். இப்படி எத்தனையோ இளைஞர்கள் தம் வாழ்வைத் தொலைத்து நாற்திசையும் சிதறுகின்றார்கள்.

  ஒவ்வொரு வருசமும் நன்றாக வாழ்ந்த குடும்பமும் நாற்சந்திக்கு வரும் நிலை. எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் காணாமல் போனோராகவும், பயங்கரவாதியாகவும் தொலைந்து போயினர்.

  இந்த நிலையில் வலை என் மன ஆதங்கங்களுக்கு ஒரு வடிகாலே. உங்களைப் போன்ற உறவுகளைச் சம்பாதிததது தான் இப்போதய ஆறுதல்.

 30. தலைவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))

  விரைவில் ராஜாவுக்கு தனியாக ஒரு பக்கத்தை ஆரம்பிக்க வேண்டுகிறேன்..;))

 31. அன்பு பிரபா!

  நான் உங்கள் மடத்துவாசல் பிள்ளையாரடிக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன.
  அவ்வப்போது தங்கள் பழைய பதிவுகளையும் புரட்டிப் பார்க்கிறேன்.

  வாழ்வின் சகல பக்கங்களையும் தொட்டுச் செல்கின்ற தங்கள்
  எழுத்துக்கள் எல்லோரது மனங்களையும் ஈர்க்கின்றவகையில் அமைந்திருப்பது உங்கள் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியே.

  இந்த ஆர்வமும் விடாமுயற்சியும்
  என்றும் இனிதாய் இளமையாய்த் தொடர இதய பூர்வமாய் வாழ்த்துகிறேன்.

  அன்புடன்
  உங்கள்
  இந்துமகேஷ்

 32. //கோபிநாத் said…
  தலைவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))

  விரைவில் ராஜாவுக்கு தனியாக ஒரு பக்கத்தை ஆரம்பிக்க வேண்டுகிறேன்..;))//

  மிக்க நன்றி தல

  ராஜாவின் புகழ் பாடும் பதிவு என்பது என் கனவு. நிச்சயம் உங்களைப் போன்ற நண்பர்களுடன் இணைந்த குழுப்பதிவாக அது வரும்.

 33. // இந்துமகேஷ் said…
  அன்பு பிரபா!

  வாழ்வின் சகல பக்கங்களையும் தொட்டுச் செல்கின்ற தங்கள்
  எழுத்துக்கள் எல்லோரது மனங்களையும் ஈர்க்கின்றவகையில் அமைந்திருப்பது உங்கள் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியே.//

  வணக்கம் அண்ணா

  என்னைப் பொருத்தவரை மென்மேலும் எழுத வடிகாலாக இருந்தது/இருப்பது இந்த வலைப்பதிவுலகமே. நான் பேச நினைப்பதை அப்படியே கொடுக்கும் சுகமும் இதில் இருக்கின்றது. அவற்றை விட நான் பெருமையாக நினைப்பது உங்களைப் போன்ற பண்பட்ட எழுத்தாளர்களின் கவனத்தை ஈர்த்தது என்பது நான் பெற்ற பெரும் பேறு என்றே வெளிப்படையாகச் சொல்வேன்.

 34. வாழ்த்துக்கள் அண்ணாச்சி
  இப்ப தான் பார்த்தேன் ஒங்க தனி வலை தளத்தை!
  எனக்கு ரொம்ப பிடிச்ச சைக்கிள் வண்டியை முகப்பில் பார்த்தவுடன்…கிராமத்து நினைவுகள் எல்லாம் ஓடி வந்து விட்டன!

  நீங்களே ஒரு சைக்கிள் பதிவைப் போடுறீங்களா? இல்லை நான் போட்டுறட்டுமா-ன்னு செல்லமா பயமுறுத்துகிறேன்! 🙂

  ஈழம், இசை, இலக்கியம், நினைவுகள்-ன்னு பயணம் இனிதே தொடரட்டும்! உங்க பயணத்தில் நாங்களும் தானே பக்கப் பாதையில் வருகிறோம்! வாழ்த்துக்கள்! 🙂

 35. வாங்க சகோதரா

  ஈழத்துப் பதிவுகளைச் சமரசமின்றி எழுதவேண்டும் என்று இப்பதிவுகளைப் பதிகின்றேன். என்னோடு கூடவே வரும் உங்களைப் போன்ற உறவுகளை இணையம் வழி பெற்றது பெருமை.

  சைக்கிள் பதிவு நிச்சயம் வரும், எழுத வேண்டும் என்று இதுவரை நினைத்ததில்லை, இப்போது எழுதத் தூண்டி விட்டீர்கள் 😉

 36. வணக்கம் டொக்டர்

  தங்களைப் போன்ற பெரிய எழுத்தாளர்களின் வாழ்த்தைப் பெறுவது எனக்குப் பெருமை. தொடர்ந்து உங்கள் நேரவசதிக்கேற்ப என் பதிவுகளைப் படித்து உங்கள் கருத்தையோ/விமர்சனத்தையோ தருமாறு வேண்டுகின்றேன். மிக்க நன்றி

 37. இரண்டு வருடப் பூர்த்திக்கு வாழ்த்துக்கள் கானா அண்ணா……தொடர்ந்து எழுதுங்கள்

  elakkiya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *