கந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் – பத்தாந் திருவிழா

தற்போதய நல்லூர்க் கந்தன் ஆலயம் பழைய இடத்தில் கட்டப்பட்டிருப்பதாகக் கூறமுடியாது. அவ்வாறு கூறக்கூடிய அளவிற்கு இலக்கிய ஆதாரங்களோ அன்றித் தொல்லியற் சான்றுகளோ காணப்படவில்லை. நல்லூரில் இருந்த இதன் ஆரம்ப கால ஆலயமும் ஏனய ஆலயங்களைப் போல் போர்த்துக் கேயரால் இடிக்கப்பட்டதாகும்.

இது பற்றிக் குவேறோஸ் சுவாமிகள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
“யாழ்ப்பாணத்தை இறுதியாக வென்ற போர்த்துக்கேயத் தளபதி பிலிப்டி ஒலிவீரா 1620 ஆம் ஆண்டிலே நல்லூருக்குச் சென்றான். அங்கிருந்த பெரிய கோயிலிலே (கந்தசாமி கோயில்) கிறீஸ்தவர்கள் அல்லாதவர் (சைவர்) மிக்க ஈடுபாடு உடையவர்கள். அவர்கள் அதனை அழியாது விட்டுச் சென்றால் அவன் விரும்பிய எல்லாவற்றையும் வழங்குவதாகவும், அவனுக்கு வீடு கட்டித் தருவதாகவும் பலமுறை வாக்குறுதி செய்து வந்தனர். ஆனால் அவன் மதப்பற்று மிக்க கத்தோலிக்கன் ஆகையால் அவர்களின் நடவடிக்கை அக்கோயிலை அழிக்க அவன் கொண்டிருந்த விருப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. எனவே அதன் அத்திவாரத்தையும் இல்லாது அழிக்கக் கட்டளையிட்டான்”. இக்கூற்றை யாழ்ப்பாண வைபவமாலையும் உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறு போர்த்துக் கேயரால் இடிக்கப்பட்ட பழைய கந்தசாமி கோயிலானது தற்போது முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலைக்கு முன்புள்ள கிறீஸ்தவ ஆலயத்தை அண்டியுள்ள பகுதியில் இருந்துள்ளதென்பதற்குச் சில தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன. இப்பகுதியில் பல அத்திவாரங்களின் அழிபாடுகள் கிறீஸ்தவ ஆலயத்தைச் சுற்றியும் அதன் கீழாகவும் செல்வதையும் அவதானிக்கலாம். இக்கட்டிட அழிபாடுகளுக்கு வடக்கே புனித யமுனா ஏரி அமைந்துள்ளது இக்கருத்தினை மேலும் உறுதிப்படுத்துகின்றது. இப்பழைய அத்திவாரமுள்ள இடத்திலே ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் போது ஆரம்பத்தில் களிமண்ணாலான கிறீஸ்தவ தேவாலயம் இருந்ததாக அக்காலத்தில் கிறீஸ்தவ சமயப் பணி புரிந்து வந்த போல்டேயஸ் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக கத்தோலிக்க மதம் பரப்பிய போர்த்துக்கேயர் இந்து ஆலயங்களை இடித்து அந்த அமைவிடங்களில் அல்லது அவற்றுக்கு அருகிலேயே தமது தேவாலயஙகளை அமைத்திருக்கின்றன. அதே போல் கந்தசாமி ஆலயம் இருந்த இடத்தில் அக்காலத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றையும் அமைத்தனர். அக்கிறீஸ்தவ தேவாலயம் இன்றும் அதேயிடத்தில் இருந்துவருகின்றது.

தற்போதைய மந்திரி மனைக்குள் சில மந்திகளின் வேலை

இராசதானியில் இருந்த நான்கு எல்லைக் கோயில்களுக்கு இக்கந்தசுவாமி கோயில் மையக் கோயிலாகவும் பெருங்கோயிலாகவும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அக்கோயில் இருந்த இடத்தை அடுத்து அரச அரண்களுக்குரிய சான்றுகள் காணப்படுவதால் இதை ஓர் அரச கோயிலாகவும் கருதுகின்றனர்.

போர்த்துக்கேயர் இக்கோயிலை இடிப்பதற்கு முன்னர் சிலகாலம் தமது பாதுகாப்பு அரணாகவும் இதனைப் பயன்படுத்தியிருக்கின்றனர். சுவாமி ஞானப் பிரகாசர் ” போர்த்துக் கேயருடனான போரில் தோல்வியுற்ற செகராசசேகரன் என்னும் மன்னன் அரண்மனைத் திரவியங்களை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குத் தீயிட்டு விட்டு ஓடிய பின் போர்த்துக்கேயர் எரிந்த அரணையும் கைப்பற்றிய ஆலயத்தையும் சுத்தம் செய்து அவற்றிலோர் ஸ்தோத்திர பூஜை செய்து மகிழ்ந்தனர்” எனக்கூறுகின்றார்.

இக்கோயிலைத் தமது கட்டுப்பாட்டில் போர்த்துக்கேயர் வைத்திருக்கும் காலத்தில் தஞ்சாவூரில் இருந்து படையெடுப்புக்கள் இரண்டை எதிர்கொண்டதாகவும் , மூன்றாம் தடவை மேற்கொண்ட படையெடுப்பில் அப்படைத்தலைவனுக்கு இக்கோயிலில் வைத்தே தண்டனை கொடுத்ததாகவும் சுவாமி ஞானப்பிரகாசர் கூறுகின்றார். இவ்வாறு சில காலம் அரணாகப் பயன்படுத்தப்பட்ட இக்கோயில் 2.2.1621 இல் அழிக்கப்பட்டதாக குவேறோஸ் கூறுகின்றார்.

உசாவ உதவியவை:

1. “யாழ்ப்பாணச் சரித்திரம்”, நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 – ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை

2. “ஈழத்தவர் வரலாறு” இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 – கலாநிதி க.குணராசா

3. “யாழ்ப்பாண இராச்சியம்”, தை 1992 – பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்

மந்திரி மனை பட உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை

6 thoughts on “கந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் – பத்தாந் திருவிழா”

 1. பிரபா!
  இன்று மஞ்சத்திருவிழா! முத்துக்குமார சுவாமி திருவுலா வரும் நாள்!!!(இந்த முத்துக்குமரனில் எனக்கு மாறாப் பிரியம்; அழகொழுகும் சிலை)
  இந்த நாளில் முதல் முதல் தங்கரதம் இழுத்த அன்று;( ஆண்டு நினைவில்லை.) சுவாமி வெளி வீதி சுற்றி வந்து , தேர் முட்டியடியில் திரும்பிக் கோவிலைப் பார்த்துக் கொண்டு ;தேரில் இருந்து இறங்கத் தயார் நிலையில் நிற்கும் போது; இன்குழல் வேந்தன் என்.கே. பத்மநாதன் குழலில் இருந்து ;பீறிட்டு வந்தது.
  கலைக் கோவில் திரைப்படத்தில் இடம் பெற்ற பாலமுரளி கிருஸ்ணா பாடிய “தங்கரதம் வந்தது நேரிலிலே.. என்ற பாடல் . எல்லோர் முகமும் ஓரத்தே ஒதுங்கி நின்று சகலதையும் அவதானிக்கும் கோவில் அறக்காவலர் குகதாஸ் மாப்பாண முதலியார் பக்கமே திரும்பியது. அவர் முகத்திலோ சிறு குறு நகை… திரையிசைப் பாடலுக்கே இடமில்லாத (பக்திப் பாடலெனினும்)நல்லூர்க் கந்தனாலயத்தில்; வித்துவான் மறுப்புச் சொல்லமுடியாவண்ணம் சந்தர்ப்பத்துக்கு ஏற்பவாசித்து விட்டாரே; சட்டத்தையே தகர்த்து; விதி விலக்கு அளிக்க வைத்துவிட்டாரே என்பதாக நினைத்தாரோ!! யாரறிவார்.
  வித்துவானுமோ சுரப் பிரயோகங்களுடன் அழகு சேர்த்து மிக விஸ்தாரமாக வாசித்து; இசை ரசிகர்களை மகிழ்வித்தார்.
  அந்த நாள் நான் வாழ்வில் மறக்கமுடியாதநாள்.
  இத்தருணத்தில் அதை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்.
  என் விருப்பமாக இப்பாடலையும் இப்பதிவில் சேர்க்கவும்.
  மேலும் கந்தன் சரித்திரம்…எத்தனை இன்னலைக் கண்டுள்ளான். எம் கந்தன் என எண்ண வைக்கிறது.

 2. நல்லூர்த் திருவிழா மஞ்சத்தோட
  களைகட்டத் தொடங்கீடும்.

  எல்லாம் கனவு போலிருக்கிறது.

  தமிழினம் நனவுலகில் வாழ
  கந்தன் கருணைமழை பொழிய
  வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

 3. இப்படியெல்லாம் நாடு பிடித்து பண்பாட்டு கலாச்சாரங்களை அழித்த இந்த போர்த்துகீசிய மடையர்கள்தான் இன்று அய்ரோப்பிய கூட்டமைப்பில் இருக்கும் பிச்சைக்கார நாடுகளில் ஒன்று. இவ்வமைப்பு இவர்களும் தூக்கி எறியும் பணத்தில்தான் இவர்கள் நாடுகளில் புதிதாக பாலங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அகல விரைவு பாதைகளை கட்டி வருகின்றனர். அய்ரோப்பா தொடர்ந்து ஐந்து வருடத்திற்கு இந்த பண உதவிகளை நிறுத்தினால், பாக்கிஸ்தானை விட கேவல நிலைக்கு வந்துவிடுவார்கள். இன்றைய தேதிக்கு பொருளாதார நோட்டத்தில் இவர்கள் இந்தியாவைவிட பின் தங்கியவர்களே. பிரான்சில் இவர்கள் அதிகம் வீடு கட்டுமான பணிகளில் உள்ளனர். அதிகம் படிப்பறிவில்லாத மக்கள்.

  அய்ரோப்பாவிலே அதிக கடவுள் பக்தி கொண்டவர்கள் இவர்கள்தான்.

  இவர்கள் அதிக நிற மற்றும் இன வெறி கொண்ட கர்வ குணம் பிடித்த மக்களும் கூட.

  என்றாலும், இன்றைய தேதிக்கு இவர்களும் அடிமைகளே!

  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

 4. வழமையா மஞ்சத்தோட நல்லூர்த் திருவிழா களைகட்டத் தொடங்கீடும்.

  இந்த முறை என்ன மாதிரியோ தெரியேல்ல , , , , ,

 5. வணக்கம் யோகன் அண்ணா

  அழகான உங்கள் நினைவுப் பகிர்வை ஒரு பதிவாகவே இட்டுள்ளேன். எல்லாம் வல்ல முருகப் பெருமான் எம் உறவுகளுக்குச் சுபீட்சமானதொரு வாழ்வினைத் தரப் பிரார்த்திப்போம்.

  //Anonymous said…

  தமிழினம் நனவுலகில் வாழ
  கந்தன் கருணைமழை பொழிய
  வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். //

  வருகைக்கு நன்றி நண்பரே

 6. வணக்கம் மாசிலா

  விரிவான தங்கள் பகிர்வுக்கு நன்றி, வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போர்த்துக்கீசருக்கும் பொருந்தியிருக்கு.

  வணக்கம் மாயா

  பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *