பாலச்சந்திரன் அண்ணை கதைக்கிறார்..!

ஈழத்து நாடக உலகில் தனி நடிப்புத் துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்த கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களைப் பற்றி ஏற்கனவே இரண்டு இடுகைகளைத் தந்திருந்தேன்.
கடந்த 2006 ஆம் ஆண்டோடு இவர் கலைத்துறைக்கு வந்து நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில், கனேடிய தமிழ் கலைஞர்கள் கழகம்
பாரதி புறொடக்சன்ஸ் வழங்கும் கே. எஸ். பாலச்சந்திரனின் “அண்ணை றைற்”
முதலான தனிநடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு இறுவட்டு (CD) வெளியீட்டு விழா வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)
மாலை 5.30க்கு, Scarborough Civic Centre மண்டபத்தில் (150 Borough Drive
(North-west corner of McCowan Road and Ellesmere Road))இடம்பெறவிருக்கின்றது.
தொடர்புகளுக்கு: (416)529-2821

அதனையொட்டிய சிறப்புப் படையலாக, கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் தயாரித்து வழங்கிய வாத்தியார் வீட்டில் வானொலி நாடகத்தின் ஒரு பகுதியையும், 2005 ஆம் ஆண்டில் அவருடன் நான் கண்ட ஒலிப்பேட்டியையும் தருகின்றேன்.

வாத்தியார் வீட்டில்

வேலாயுதச் சட்டம்பியார், தனது மனைவி செல்லம்மா, மகன் வசீ, மகள் உமாவுடன் உங்களைச் சந்திக்க வருகின்றார்.

பங்கு கொள்ளும் கலைஞர்கள்
கே.எஸ்.பாலச்சந்திரன்.ஏ.எம்.சி.ஜெயஜோதி, கலிஸ்டா திருச்செல்வம், ஆர் யோகராஜா.

கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் கலைத் துறைக்கு வந்த பின்னணி குறித்த ஒலிப் பேட்டியையும் அதன் எழுத்து வடிவையும் இப்போது தருகின்றேன். ஏப்ரல் மாதம் 2005 ஆம் ஆண்டு நான் எடுத்திருந்த இவ்வொலிப் பேட்டி மூலம் பாலச்சந்திரன் அவர்களது குரலியேயே தன் நடிப்புத் துறை ஆரம்பம் மற்றும் அனுபவங்களின் பகிர்வைக் கேட்கலாம்.

வணக்கம் திரு பாலச்சந்திரன் அவர்களே!
ஈழத்து நாடகப் படைப்புக்கள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் உங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருக்கும்,அந்த வகையில் இந்த நாடக உலகில் உங்களுக்கு ஈடுபாடு எப்படி வந்தது என்று சொல்லுங்களேன்?

எனது சொந்தக் கிராமம் கரவெட்டி, அந்தக் கிராமத்தில் ஆரம்பத்திலே நான் கல்லூரி மாணவனாகப் படித்துக்கொண்டிருக்கும் போதே
நாடகத் துறையில் நான் ஈடுபடத் துவங்கினேன். அதற்குப் பிறகு நான் வேலை நிமித்தம் கொழும்பிற்கு இடம்பெயர்ந்த பின்னர்
அங்கு என்னோடு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலே பணியாற்றிய திரு கணேசபிள்ளை என்ற நாடகக் கலைஞரே என்னை நாடகத் துறையிலே ஈடுபடுத்தினார். அதன் பிறகு நான் நாடகத்துறையிலே என் காலைப் பதிக்கத் துவங்கினேன்.

நீங்களே தயாரித்து நெறியாள்கை செய்த முதல் நாடகம் பற்றி?

மேடையில் என்பதை விட, நான் எழுதிய நாடகங்கள் வானொலியில் தான் முதன்முதலில் அரங்கேறின. ஆனால் மேடையில் என்பதில் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஏறக்குறைய எழுபதுகளிலே இலங்கை ஆயுர்வேதக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாடகம் போடவேண்டும் என்று ஆசைப்பட்ட போது நகைச்சுவை நாடகம் ஒன்றை எழுதி “வாத்தியார் வீட்டில்” என்று நினைக்கிறேன், அந்த நகைச்சுவை நாடகத்தை அவர்கள் மேடையேற்றி நடித்தார்கள். அதுவே நான் எழுதி இயக்கிய மேடை நாடகம்.

அந்த “வாத்தியார் வீட்டில்” என்ற நாடகத் தொடர் பின்னர் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஒலியிழைப்பேழைகளில் வெளிவந்தது இல்லையா?

ஆமாம், இலங்கை வானொலியிலே நான் தொடந்து அந்தப் பாத்திரங்களையே முக்கியமாக வைத்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஞாயிறு தோறும் ஒலிபரப்பாகிய அந்த நாடகங்களை எழுதி அதில் முக்கிய பாத்திரத்திலும் நடித்தேன். அதன் பின்னரே நீங்கள் சொன்னது போல ஒலியிழை நாடாக்களாக வெளிவந்தன.

அதே போல உங்களுடைய நாடகத் தயாரிப்புக்கள் அனைத்துமே உங்களுடைய சொந்தக் கற்பனையிலே உதித்தவையா அல்லது மற்றைய படைப்பாளிகளின் நாடகப் பிரதிகளையும் பயன்படுத்திக்கொண்டீர்களா?

அனேகமாக தொண்ணூறு வீதம் அல்ல அல்லது அதற்குச் சற்று அதிகமானவை எனது சொந்தப் படைப்புக்கள் தான் எனது நாடகங்களாக வானொலியிலும், மேடையிலும், தொலைக்காட்சியிலும் பின்னர் அவை திரைவடிவம் பெற்றுத் திரைப்படங்களாகவும் வெளிவந்தன.
இரண்டொன்று நான் மேடையேற்றியவை மொழிபெயர்ப்பு நாடகங்கள். அந்த வகையில் பார்த்தால் கூட எனது படைப்புக்கள் தான் அரங்கேறியிருக்கின்றன.

“அண்ணை றைற்” மூலம் தனிநடிப்புத்துறையில் உங்கள் முத்திரையைப் பதித்திருக்கின்றீர்கள், அந்தப் படைப்பு உருவானது பற்றி?

எழுபதுகளிலே என்று நினைக்கின்றேன். இலங்கை வானொலியிலே மக்கள் முன்னிலையிலே ஒலிப்பதிவு செய்யப்படுகின்ற ஒரு நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் வந்திருந்தார்கள். இலங்கை வானொலியிலே சானா என்பவர் தான் அப்போது தயாரிப்பாளர்.
தயாரிப்பாளர், நடிகர்கள் நாங்கள் எல்லோரும் தயாராக இருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக அன்று நாங்கள் நடிக்க இருந்த பிரதிகள் அனைத்துமே தரமானவையாக இருக்கவில்லை. சுவையானவையாகப் படவில்லை. எனவே தயாரிப்பாளர் எங்களை அழைத்து உங்களுக்கு ஒரு மணித்தியால அவகாசம் தருகின்றேன். அதற்கிடையில் நீங்கள் எல்லோரும் உங்கள் உங்கள் இடங்களுக்குச் சென்று தனியிடங்களில் இருந்து கொண்டு ஏதாவது யோசித்துப் பிரதிகளை ஆயத்தப்படுத்திச் செய்யுங்கள் என்றார். நான் கலையகக் கன்ரீனிலே இருந்து கொண்டு இந்தப் பிரதியை எழுதி மேடையேற்றினேன். மேடையேற்றினேன் என்று நான் சொல்வதற்குக் காரணம் மேடையிலே ரசிகர்கள் முன்னிலையிலே ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பதுதான் இந்த நிகழ்ச்சி. இவ்வாறாக “அண்ணை றைற்” என்ற தனிநடிப்பை நான் வானொலி மூலமாக ரசிகர்களிடம் எடுத்துச் சென்றேன். இது இலங்கையின் பல பாகங்களிலும், உலகத்தின் பல நகரங்களிலும் இந்த நிகழ்ச்சியை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அதே போல உங்களுடைய நாடகங்களை எடுத்துக் கொண்டால் நகைச்சுவை அம்சம் பொருந்தியவையாகவே இருக்கும், இப்படியான நகைச்சுவைக் கருப்பொருளை மையப்படுத்தி இவற்றை நிகழ்த்தியமைக்கு ஏதாவது காரணம்?

நகைச்சுவை என்பது மக்களைச் சென்றடைவது சாத்தியம் அதிகம். மக்களைக் கவர்வது என்பதில் நகைச்சுவை முக்கியமான ஒரு இடத்தைப் பெறுகின்றது. அதேவேளையில் மக்களைச் சிரிக்கவைப்பது என்பது சந்தோஷமான விடயம் தானே? ஏனென்றால் சோகங்களைச் சொந்தங்களைச் சுமந்து கொண்டிருக்கும் எங்கள் மக்கள் கொஞ்ச நேரமாவது சிரிக்க வைக்க முயற்சிப்பது என்பது சந்தோஷமான ஒரு அனுபவம். அந்த வகையில் நான் ஒரு நகைச்சுவைக் கலைஞனாக இனங்காணப்படுவது பெரிய வெற்றி என்று நினைக்கின்றேன்.

ஈழத்துத் திரைப்படங்கள் பலவற்றிலே உங்கள் பங்களிப்பு இருந்திருக்கின்றது, அதைப் பற்றியும் சொல்லுங்களேன்?

ஈழத்துத் திரைப்படங்களின் வரலாற்றிலே முக்கியமான ஒரு திருப்புமுனையாக எங்களது மண்வாசனை வீசும் படைப்பாக வெளிவந்த வாடைக்காற்று என்ற திரைப்படத்திலே ஒரு முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த வாடைக்காற்றுத் திரைப்படம், செங்கை ஆழியான் எழுதிய ஒரு நாவலைத் தான் படமாக எடுக்கப்பட்டது. எழுபத்து எட்டு என்று நினைக்கிறேன், அந்த நாட்களிலே இந்தியப் பாணியில் அமைந்த ஈழத்துத் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. விதிவிலக்காக எங்கள் மொழி வழக்கு வேண்டி, யாழ்ப்பாண மொழி வழக்குப் பேசும் ஒரு திரைப்படமாக வெளிவந்த போது “விருத்தாசலம்” என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்ததோடு, அந்தத் திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் பணியாற்தறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது மிகவும் மனதுக்கு இதமான ஒரு அனுபவம்.

அந்த வாடைக்காற்று என்ற நாவலைத் திரைக்கதையாக்கும் போது கே.எம்.வாசகர் என்ற வானொலிக் கலைஞரின் பங்களிப்பு இருந்தது இல்லையா?

கே.எம்.வாசகர் அவர்கள் அப்பொழுது இலங்கை வானொலியிலே நாடகத் தயாரிப்பாளராக இருந்தார். செங்கை ஆழியான் அவர்கள் எழுதிய அந்த நாவலைத் ஒரு திரைப்படப் பிரதியாக எழுதுவதில் செம்பியன் செல்வன் என்ற ஒரு எழுத்தாளரின் பங்கும் இருந்தது. இருந்தாலும் கூட அதைத் திரைக்கதையாக எழுதியதில் முக்கியமான பங்கு திரு.கே.எம்.வாசகர் அவர்களுக்கே உரித்தானது.

அதே போல வேறு எந்தெந்த ஈழத்துத் திரைப்படங்களிலே நீங்கள் நடித்திருக்கின்றீர்கள்?

இலங்கையில் வெளிவந்த “அவள் ஒரு ஜீவநதி”, “நாடு போற்ற வாழ்க”, “ஷார்மிளாவின் இதய ராகம்” போன்ற தமிழ்ப்படங்களிலும், Blendings என்ற இலங்கையில் தயாரான கூட்டுத்தயாரிப்பான ஒரு ஆங்கிலத் திரைப்படத்திலும் நான் நடித்தேன்.நாடகம், திரைப்படம் என்பவற்றைத் தவிர உங்களுடைய கலை பற்றியதான ஈடுபாடு வேறு எந்தெந்தத் துறைகளிலே இருக்கின்றது?

தொலைக்காட்சி நாடகங்களிலே ஏராளமாக இலங்கையிலும், தற்போது கனடாவிலும் நிறையத் தொலைக்காட்சிப் படைப்புக்களை உருவாக்கிக் கொண்டு வருகின்றேன். எனவே எனது முயற்சிகள் பல்வேறு துறைகளைத் தொட்டுச் செல்லும் முயற்சிகளாகவே எனக்குப் படுகின்றன.

“தெனாலி” என்ற தமிழ்த்திரைப்படத்திற்காக நடிகர் கமலஹாசன் உங்கள் நாடகங்களை வசனப்பயிற்சிக்காகப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகின்றது. அந்தப் பயிற்சியின் போது அவர் உங்களை அணுகியிருந்தாரா?

உண்மையில் என்னுடைய நாடக ஒலி நாடாக்களை எனது நண்பர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் கமலஹாசனிடம் கொடுத்து, யாழ்ப்பாணத் தமிழ் பேசுவதானால் இவற்றைப் பயன்படுத்திப் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தாராம். அவர் அதனைப் பயிற்சி செய்து நடித்ததன் பின்னர் கனடாவிற்கு வந்த பொழுது தற்செயலாக நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம்.
அப்பொழுது தான் இருவரும் அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். என்னோடு கமலஹாசன் அவர்கள் பேட்டி ஒன்றில் பங்கெடுத்தபோது “பாலச்சந்திரனின் ஒலி நாடாக்களைக் கேட்டுத்தான் நடித்தேன்” என்று மக்களுக்குச் சொன்னார்.

பெருமையாக இருந்தது, காரணம் என்னவென்றால் கமலஹாசன் என்னால் மதிக்கப்படும் ஒரு தரமான நல்ல கலைஞன். அவரிடம் தேடல் இருக்கின்றது, நிறைய விஷயங்களை அறியவேண்டும் என்ற ஆவல் இருக்கின்றது. புதிதாக ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. அந்த வகையிலே யாழ்ப்பாணத் தமிழை முயன்று ஓரளவாவது சரியாகப் பேசவேண்டும் என்று அவர் முயன்றிருக்கின்றார்.
எவ்வளவு தூரம் வெற்றி கண்டிருக்கின்றார் என்பது மற்றவருடைய அபிப்பிராயம் எப்படியோ தெரியாது . இருந்தாலும் கூட நான் நினைகிறேன், அவர் முயன்றிருக்கின்றார்.

தற்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகின்றீர்கள், அங்கே நீங்கள் முன்னெடுத்து வரும் முயற்சிகள் குறித்து?

கனடாவிலே நான் கனேடியத் தமிழ் கலைஞர்கள் கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவி ஏராளமான கலைஞர்களை என்னால் இயன்ற வகையில் பயிற்றுவித்து அவர்களைக் கொண்டு ஏராளமான மேடை நாடகங்களை நான் மேடையேற்றியிருக்கின்றேன். புதிய புதிய நாடகங்களை எழுதி மேடையேற்றியிருக்கிறேன். தொடர்ந்து அந்த நாடகளில் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்துத் திரைப்படங்களாக அதாவது Tele films என்று சொல்லக்கூடிய வடிவில் ஆனால் திரையரங்கில் திரையிடக்கூடிய “எங்கோ தொலைவில்”, “மென்மையான வைரங்கள், “உயிரே உயிரே” போன்ற திரைப்படங்களையும் வெளியிட்டு , மூன்று திரைப்படங்கள் இப்பொழுதும் தயாரிப்பில் இருக்கின்றன. வானொலித் துறையிலே எனது பங்களிப்புச் சற்றுக் குறைவு. இருந்தாலும் கூட இந்த வகையிலே என் முயற்சிகள் தொடர்கின்றன.

நீங்கள் எதிர்காலத்திலே ஒரு திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும் என்ற முயற்சியிலே இருக்கின்றீர்களா? அதாவது குறித்த ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் எங்கின்ற முனைப்பு இருக்கின்றதா?

என்னைப் பொறுத்தவரையிலே படைப்புத் துறை என்ற வகையிலே நாடகத்துறையில் தான் என்னால் இயன்றவரையில் நிறையச் சாதித்திருக்கின்றேன். அவற்றை எழுத்து வடிவிலே ஒரு பதிவாகக் கொண்டு வரவேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கின்றது. இதை விட நாடகத்தைத் தவிர சிறுகதைகள், நாவல் போன்றவற்றையும் எழுதியிருகின்றேன். அவை கூட வெகு விரைவில் புத்தக வடிவில் வெளிவர இருக்கின்றன. அதை விட இந்தக் கலைஞர்களை ஊக்குவித்து, அவர்களிடம் எனது பணியைக் கையளித்து அவர்கள் தொடர்ந்தும் இந்த நாடகத்துறையில், சினிமாத்துறையில் என்னால் முடிந்தவரை ஈடுபட என்னால் இயன்ற வகையில் துணை புரிய வேண்டும். ஒரு வழிகாட்டியாக ஓரளவுக்காவது இயங்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.


கலைத்துறையில் நீங்கள் வெள்ளிவிழா ஆண்டைத் தாண்டிவிட்டீர்கள் இல்லையா?

தொண்ணூறுகளில் கொழும்பிலே எனது வெள்ளிவிழாவை ராமதாஸ், ராஜகோபால், பி.எஸ்.அப்துல்ஹமீத், செல்வசேகரன் ஆகியோர் சேர்ந்து பிரமாண்டமாக நடாத்தினார்கள். இப்போது வெள்ளிவிழாவைக் கடந்து அடுத்த ஆண்டு (2006) நாற்பது ஆண்டுகள் கலைத்துறையில் கடக்கவிருக்கின்றேன்.

எம் உறவுகளே! இவ்வளவு தூரம் நாட்டை விட்டுப் பிரிந்து வாழ்ந்தாலும் கூட ஜெயபாலன் என்ற கவிஞன் சொல்லுவார்

“யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்பேட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்
ஒஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில்
விதிக்குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?”

என்று பரந்து வாழ்கின்றோம், வாழ்ந்தாலும் கூட எம்மொழியை மறக்காமல், எங்கள் பண்பாடுகள், கலைவடிவங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு நீங்கள் துணை புரிய வேண்டும் அதற்கு உங்களுக்கு இறைவனின் ஆசி கிடைக்கவேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

புகைப்படங்கள் உதவி: கே.எஸ்.பாலச்சந்திரனின் பிரத்தியோகத் தளம்

17 thoughts on “பாலச்சந்திரன் அண்ணை கதைக்கிறார்..!”

 1. வணக்கம்!
  வரணியூரான், ராமதாஸ், அப்புக்குட்டி இராஜகோபால், முகத்தார் ஜேசுரட்ணம், பாலச்சந்திரன் போன்றவர்கள் வானொலி நாடகத்தைப் பொறுத்தளவில் புதிய பரிமாணத்துக்கு இட்டுச் சென்றவர்கள் என்றால் மிகையாகாது.
  பாலச்சந்திரன் அவர்களது பதிவைப் போல, இயன்றளவு ஏனைய கலைஞர்களது பதிவுகளையும் இட வாழ்த்துக்கள்!!

  ‘சோழியான்’

 2. மிக்க நன்றி அண்ணா . . .
  //வரணியூரான், ராமதாஸ், அப்புக்குட்டி இராஜகோபால், முகத்தார் ஜேசுரட்ணம், பாலச்சந்திரன் போன்றவர்கள் வானொலி நாடகத்தைப் பொறுத்தளவில் புதிய பரிமாணத்துக்கு இட்டுச் சென்றவர்கள்//

  நிச்சயமாக . . .
  ராமதாஸ் இப்பொழுதும் வானொலிகளுக்கு நாடகங்கள் எழுதுகிறார்

 3. // சின்னக்குட்டி said…
  வணக்கம் பிரபா பதிவுக்கும் ஒலி வடிவில் தந்தமைக்கும் நன்றிகள் //

  சின்னக்குட்டியர்

  உங்களைப் போல ரசிகர்களுக்கு விருந்தாக இந்தத் தனி நடிப்புக்கள் சீடியில் வருகின்றன. நாம் கேட்டு ரசித்து, தற்போதைய கவலை சூழ் ,மன இறுக்கத்திலிருந்து விடுபட ஒரு சிரிப்பு மருந்தாகஒ பாவிக்கலாம்.

  வாத்தியார் வீட்டில் நாடகத்தை இணைத்திருக்கின்றேன். நம்மூர்ப் பேச்சுவழக்கில் அமைந்த ஒரு சிறந்த படைப்பு

 4. வணக்கம் சோழியான்

  நீங்கள் குறிப்பிடும் கலைஞர்கள் குறித்த முழு விபரங்களோடு அவர்களின் படைப்பின் பாகமும் எதிர்வரும் காலத்தில் வெளியிடவுள்ளேன். அந்த வகையில் அடுத்து ஒலிபரப்பாளர், மெல்லிசைப் பாடகர் எஸ்.கே.பரராஜசிங்கத்தின் ஆளுமை குறித்த பதிவு வர இருக்கின்றது.

  தங்கள் கருத்துக்கு நன்றிகள்.

 5. //மாயா said…

  நிச்சயமாக . . .
  ராமதாஸ் இப்பொழுதும் வானொலிகளுக்கு நாடகங்கள் எழுதுகிறார்//

  வணக்கம் மாயா

  தாயகத்தில் இருந்து எழுதும் அருமையானதொரு வாய்ப்பைப் பெற்றிருக்கின்றீர்கள். எம் தாயகக் கலைஞர்கள் தொடர்பான விபரங்களைத் தேடிப்பிடித்து உங்கள் வலைப்பதிவிலும் எழுதுங்கள்.

  இது கட்டளை இல்லை வேண்டுகோள் 😉

 6. பகிர்ந்தமைக்கு நன்றி.
  தொடரட்டும் உங்கள் பணி.

  //நாம் கேட்டு ரசித்து, தற்போதைய கவலை சூழ் ,மன இறுக்கத்திலிருந்து விடுபட ஒரு சிரிப்பு மருந்தாகஒ பாவிக்கலாம்.//

  அதுசரி, சின்னக்குட்டி, உங்களுக்கெல்லாம் அப்பிடியென்ன ‘கவலை சூழ் மன இறுக்கம்’?

 7. //அதுசரி, சின்னக்குட்டி, உங்களுக்கெல்லாம் அப்பிடியென்ன ‘கவலை சூழ் மன இறுக்கம்’? //

  அண்ணை !

  அனுபவிக்கணும், ஆராயக்கூடாது 😉
  பேட்டியில் அவர் குறிப்பிட்டது போல் நாட்டு நிலமைகளால் கவலை நம் எல்லோருக்கும் உண்டு, அதைத் தற்காலிகமாகத் தள்ளி வைக்கும் மருந்து இந்தச் சிரிப்பு

 8. நிச்சயமாக அண்ணா . . .

  முதற்கட்டமாக இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களின் பட்டியலை எனது பலிபீடம் ! Blog
  இல் பதிவு செய்துள்ளேன் {http://palipedam.blogspot.com/}பர்த்திருப்பீர்களென நினைக்கிறேன்

  அதேபோல் எம் தாயகக் கலைஞர்கள் தொடர்பான விபரங்களைத் பற்றியும் பதிவு செய்ய எண்ணி உள்ளேன்

  நன்றி

 9. அண்ணையை மீண்டும் ரசித்துச் சிரித்தேன்!
  பேட்டியின் மனதைத் தொட்ட வரிகள்!
  //நகைச்சுவை என்பது மக்களைச் சென்றடைவது சாத்தியம் அதிகம். மக்களைக் கவர்வது என்பதில் நகைச்சுவை முக்கியமான ஒரு இடத்தைப் பெறுகின்றது. அதேவேளையில் மக்களைச் சிரிக்கவைப்பது என்பது சந்தோஷமான விடயம் தானே? ஏனென்றால் சோகங்களைச் சொந்தங்களைச் சுமந்து கொண்டிருக்கும் எங்கள் மக்கள் கொஞ்ச நேரமாவது சிரிக்க வைக்க முயற்சிப்பது என்பது சந்தோஷமான ஒரு அனுபவம்.//

  அனுபவித்து ,உணர்ந்து சொன்ன வார்த்தைகள்.
  யாவுக்கும் நன்றி!

 10. அருமையான பதிவும் , ஒலிப்பதிவும் பிரபா, பழைய ஞாபகங்களை ஊட்டிவிட்டீர்கள். விரைவில் நானும் எனது நினைவுக்குறிப்புக்களையும், எனது நாடக ஒலிப்பதிவுகளை வலையில் இடலாம் என நினைக்கிறேன்.

 11. //நெல்லைக் கிறுக்கன் said…
  பிரபா,
  பாலச் சந்திரனைப் பற்றி இந்த பதிவு மூலமா நெறயத் தெரிஞ்சுக்கிட்டேன்.
  தகவல்கள் தந்ததுக்கு நன்றி//

  வணக்கம் நெல்லைக்கிறுக்கரே

  உங்களைப் போன்ற தமிழகச் சகோதரர்களிடம் நம்மூர்க் கலைஞர் குறித்த விபரங்கள் போய்ச் சேருவது குறித்து நானும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்

 12. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said…
  அண்ணையை மீண்டும் ரசித்துச் சிரித்தேன்!//

  யோகன் அண்ணா

  பாலச்சந்திரன் அண்ணை கூறிய வார்த்தைகளை மெய்ப்பிக்கின்றது அவரது படைப்புக்கள். மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு

 13. //உடுவை said…
  விரைவில் நானும் எனது நினைவுக்குறிப்புக்களையும், எனது நாடக ஒலிப்பதிவுகளை வலையில் இடலாம் என நினைக்கிறேன். //

  வணக்கம் ஐயா

  அதுகுறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைவதில் நானும் ஒருவனாக இருப்பேன். இன்றும் மல்லிகை அட்டைப்படக்கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருந்த பொழுது உங்களைக் குறித்த கட்டுரையை மீளவும் வாசித்தேன். தங்கள் எழுத்தாற்றலை மட்டுமே நுகர்ந்த எனக்கு உங்களின் வானொலிப்படைப்புக்களைக் கேட்கும் நல்வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றேன்.

  ஒலிப்பதிவு ஏற்றல் தொடர்பில் ஏதாவது சிக்கல் இருந்தால் எனது தனி மடலான kanapraba@gmail.com இற்குத் தொடர்பு கொள்ளுங்கள்.

 14. நானும் பல தடவை K.S பாலச்சந்திரனின் அண்ணை றைட் பார்த்திருக்கின்றேன். வரணியூரானின் நாடகங்கள் பல பார்க்கின்ற வாய்ப்புகள் சிறிய வயதில் கிடைத்தது. ஈழத்து கலைஞர்கள் எங்கு வாழ்ந்தாலும் தேடிப்பிடித்து தகவல்களை கோர்த்து கொடுப்பதையிட்டு மகிழ்ச்சி.
  வாழ்த்துக்கள்.

 15. வணக்கம் காரூரான்

  வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *