தாசீசியஸ் பேசுகிறார்…!

ஈழத்து நவீன நாடக வரலாற்றிலே புதிய போக்கினை நிறுவிய நாடக நெறியாளர், ஊடகர் ஏ.சி. தாசீசியஸ் அவர்கட்கு கனடிய இலக்கியத் தோட்டத்திற்கான தேர்வுக்குழு 2006ஆம் ஆண்டுக்கான இயல் விருது வழங்குகின்றது. விருது வழங்கும் நிகழ்வு 03-06-2007 ல் கனடாவில் இடம்பெற்றது. இந்த வேளையில், ‘தமிழ்நாதம்” இணையத் தளத்திற்காகச் தாசீசியஸ் அவர்கள் வழங்கிய சிறப்புச் செவ்வியின் ஒலி வடிவம்

Download பண்ணிக் கேட்க
எழுத்து வடிவத்தினையும் கீழே தருகின்றேன்.
திரு தாசீசியஸின் நேர்காணலை எழுத்துலக தர்மப்பிரகாரம் சுருக்கியளிக்க என் மனம் இடங்கொடுக்கவில்லை. எமது படைப்பாளிகளின் வாழ்வியல் தரிசனத்தை ஆவணமாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, இதனை எந்தவிதமான வெட்டல் கொத்தல்களுமின்றி அப்படியே சமர்ப்பிக்கின்றேன்.
கானா பிரபா: ஈழத்திலே நவீன நாடக வரலாற்றை நிறுவி, ஒரு புதிய போக்கை நிறுவி ஒரு சாதனையைப் படைத்திருக்கின்றீர்கள். இந்த வேளையிலே, நாடகத்துறையிலே உங்களுடைய ஆரம்பம் எப்படி இருந்தது என்று கூறுவீர்களா?
தாசீசியஸ்: நவீன நாடகத்துறையிலே ஒரு புதிய போக்கை நிறுவினேன் என்று நீங்கள் கூறும்போது, அது முதன்முதலில் என்னிடமிருந்து தோன்றியது என்கிற ஒரு மாயையை ஏற்படுத்திவிடக்கூடாது. ஒரு தொடர்நடவடிக்கையின், ஒரு சங்கிலிக்கோர்வையின் அங்கமாக, வளையமாக இடையிலே சேர்ந்தவன் நான். என்னுடைய அந்தப் பங்களிப்புக் காத்திரமானதாக, துடிப்புமிக்கதாக இருந்திருக்கலாம், அவ்வளவேதான்! நாடகத்தில் எனது பிரவேசம் என்பது, சிறுபிராயத்தில் எனது ஊரில் நான் பார்த்த நாட்டுக் கூத்துக்கள்தான். அவைதான் எனக்குள் அந்த அறிமுகத்தைத் தந்தன. நாடகங்கள் பழகுவதும், மேடையேற்றுவதும் கிராமச்சூழலில் தொடர்ச்சியாக நடந்துகொண்டு வருபவை. அவை எம் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிடுகின்றன.

நான் பிறந்த காலத்தில், அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதில், கிராமத்தில் வானொலியோ, திரைப்படமோ பெரிதாக இருந்ததில்லை. அவற்றிற்கு நாங்கள் நகரங்களுக்குத்தான் செல்லவேண்டும். ஆகவே, நாட்டுக்கூத்துக்கள், நாட்டுப்பாடல்கள்தான்; மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களோடு எங்களை இணைத்தன. அவர்கள் பாடும் பாடல்களைக் கவரவைத்தன. இங்கேதான் என்னுடைய நாடக ஆர்வம் தொடங்கியது. பள்ளிக்கூடத்தில், குறிப்பாக, இளவாலை புனித ஹென்றிஸ் கல்லூரி ஆசிரியர்கள் என்னுடைய நாடக ஆர்வத்தை வளர்த்தார்கள். அங்கு ஆண்டுதோறும், தவணைதோறும் நாடகங்கள் நடைபெறும். அவற்றில்; நான் பங்கெடுப்பேன். என்னுடைய அந்த ஆசிரியர்களை இப்போ நினைவுகூருகின்றேன். என்னுடைய நாடக இயக்கத்தின் ஆரம்பத்தில் எனக்கு வழிகாட்டிய அண்ணாவிமார்களை, ஆசிரியர்களை, என்னோடு இணைந்து நடித்தவர்களை எல்லாம் நான் நினைவுகூருகின்றேன்.

கனடாவிலே எனக்கு இந்த விருது வழங்குவதுபற்றி அறிவித்த அன்று, அந்த அறிவித்தலுக்குச் சற்று முன்னர்தான் எங்கள் ஊர்ப்பகுதியில் விமானம் குண்டுகள் பொழிந்து, வீடுகள் நாசமாக்கப்பட்ட செய்தியும் கிடைத்திருந்தது. அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறபொழுது, இந்தச் செய்தியும் வந்ததில், உடனடியாக கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி எனக்கு இருக்கவில்லை. ஓர் அதிர்ச்சியோடு இருந்த எனக்கு, ஏதோ ஒரு செய்திபோல்தான் இவ்விருதுச் செய்தி பட்டது. யாருக்கோ கூறப்படும் செய்தியாக அதை உள்வாங்கப் பலமணி நேரம் எனக்குப் பிடித்தது. நாடகத் தொடக்கம் அதிர்வுகள்தான். அதுபோல், இந்தச் செய்திகூட எனக்கு அதிர்வுதான். அந்த அதிர்வும் ஒரு வழிகாட்டியாக, ஒரு ஈடுபாட்டை எனக்குத் தருவதாக சொல்லலாம்.
கானா பிரபா: இதே வேளை ஈழத்திலே ஒரு மரபு ரீதியான ஒரு நாடகக் கலாசாரம் வளர்ந்து கொண்டிருந்த வேளையிலே நவீன நாடகங்களைத் தேடிப்போய், அவற்றை உள்வாங்கி மேடையேற்ற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?
தாசீசியஸ்: குறிப்பாக அதைப்பற்றிப் பேசுவதானால் நாடகத்துக்கென்று ஒரு மரியாதை அன்று இருக்கவில்லை. ஆனால், பள்ளிக்கூடங்களில் ஆங்கில நாடகம் என்றால் அதற்கு ஒரு மரியாதை இருந்தது. ஏனென்றால், அந்தக்காலம் ஆங்கிலச் சூழல்தானே. ஆகவே அந்த ஆங்கில நாடகங்களில் ஈடுபடும் பொழுது அதில் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு பயிற்சிமுறை அங்கு இருந்தது. அதை எங்களுடைய தமிழ் நாடகங்களில் புகுத்தவேண்டும் என்று நான் கருதினேன். ஆனால், எல்லாவற்றையும் மிஞ்சி எங்களுடைய நாட்டுக்கூத்துக்கள், அவற்றுள் உள்ள செழுமை, அது உடைக்கமுடியாத ஒரு அழகைக்காட்டியது. ஆனால், நான் வளர்ந்துகொண்டிருக்கும்போது, முழு இரவு நாடகங்களைக் காணத் தொடர்ந்து எவ்வளவு காலம் மக்கள் வருவார்கள் என்ற ஐயம் என்னுள் எழுந்தது. ஆகவே, அவற்றைச் சுருக்கவேண்டும் என்று நான் எண்ணியபொழுது சின்னச் சின்னக் காட்சிகளாக அமைக்கவேண்டும் என்று விரும்பிய பொழுது, பேராசிரியர் சரத் சந்திர என்ற சிங்கள நாடகாசிரியரும், தமிழ்ப் பகுதியில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களும் நாட்டுக்கூத்துக்களை ஒரு புதுமெருகோடு தரத் தொடங்கியிருந்தார்கள். அவர்களோடு எனக்கு ஏற்பட்ட நேரடி அறிமுகம், அவர்களுடைய ஆதரவு, நட்பு இவைகளெல்லாம் என்னுடைய முயற்சியில் என்னை ஊக்கப்படுத்தின.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் சேர்ந்தபொழுது. அங்கே Dramsoc என்ற ஆங்கில நாடகக்குழு ஒன்று இருந்தது. பேராசிரியர் அஷ்லி ஹல்ப்பே ஆதரவில் அது இயங்கிக் கொண்டிருந்தது. அங்கே சென்று உடனடியாக அதில் இணைந்துகொண்டேன். பேராசிரியர் வித்தியானந்தன், அந்த அமைப்பில் – Dramsocஇல் – நான் நன்றாகப் பயிலவேண்டும் என்பதில் மிக அக்கறையாக இருந்தார். அவர் தமிழ் நாடகங்களை, தமிழ் நாட்டுக்கூத்து முயற்சிகளைத் தொடங்கியபோது நான் அதிலும் இணைந்துகொள்ளவே விரும்பினேன்.

ஆனால், அவர் என்னைக் கண்டதும் கூப்பிட்டு, ‘கிளம்பு, ஓடு, இங்க இருக்காத, Dramsocஇல் போய் இரு. ஏன் என்றால், நீ இங்கையும் வந்து அங்கையும் வந்தால் படிப்பைக் கைவிட்டு விடுவாய், ஆகவே, அதை அங்கே நேர்த்தியாகக் கற்றுக்கொள். பின்னொரு காலத்திலே நீ தமிழ் நாடகங்களில் ஈடுபடலாம்’ என்றார். அந்த நேரம் அவர் எனக்கு வழிகாட்டி, படிப்பிலும் நாடகத்திலும் ஈடுபடத் தூண்டியது என் வாழ்நாள் முழுவதும் அப்படியானதொரு கொள்கையை நாடகத்துக்கும், என்னுடைய குடும்பத்திற்கும், சமூகக் கடமைக்கும் பிரித்துப் பிரித்து ஒதுக்கக்கூடியதாக இருந்தது.

நான் கொழும்பு வந்தபின் எனக்கு முழுமுதல் வழிகாட்டியான ‘ஏர்னஸ்ற் மக்கின் ரைர்’ அவர்களிடம் கற்கத்தொடங்கினேன். அவர் லயனல்வெனற் தியெட்டரில் ஒரு முக்கிய பங்கை வகித்தார். அந்தத் தியெட்டரின் ஆளுமை முழுவதும் அவரிடம்தான் இருந்தது. அவருடைய ஆளுமைக்கும் கட்டுப்பட்டேதான் ஆங்கில நாடகம் அங்கே வளர்ந்தது. அந்த ஆங்கில நாடகப் பயிற்சிகளில் கற்றவர்கள்தான் சிங்கள நாடகங்களையும் சிறப்பாகச் செய்யத்தொடங்கினார்கள். இப்படி மக்கின் ரைர் வழியாக சிங்கள, தமிழ் நாடகங்கள் மேடையேற்றலைக் கற்றுக்கொண்டேன். அவரிடம் நீண்டகாலம் கற்ற ஒரு மாணவன் நான். அதேபோல இன்று ஐராங்கினி சேரசிங்ஹ. அவர்களிடமிருந்து உளப்பயிற்சி, உடற்பயிற்சி நாடகப்பயிற்சி போன்றவற்றை எல்லாம் கற்க முடிந்தது. இவற்றைக் கற்றுக்கொண்டிருந்த நான், இந்த நவீன நாடகத்தை எப்படித் தமிழ்ப் பகுதிக்கு கொண்டுவர முடிந்தது என்பதைக் கூறவேண்டும்,

நான் கொழும்பில் இருந்து ஒவ்வொரு கிறிஸ்மஸ் விடுமுறைக்கும் வீட்டுக்கு போவது வழக்கம். அப்பொழுது அங்கே, நான் கொழும்பில் என்னென்ன நாடகங்கள் தயாரித்திருந்தேன். என்னென்ன நாடக முயற்சியில் ஈடுபட்டேன் என்பது பற்றி என்னுடைய அம்மாவிற்கு விளக்கமாகக் கூறுவேன். சமையற்கட்டில் இருந்து அம்மாவிற்கு நான் அதைக்கூறிக் கொண்டிருக்கும்பொழுது அம்மா சமைத்துக்கொண்டிருப்பா. அம்மா ஒரு தடவை கேட்டா, ‘சரி, நீ போடுகிற நாடகங்கள் எல்லாம் ஆங்கிலம் பேசுகிறவர்களுக்குப் புரியும். என்னைப் போன்றவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய நாடகங்களை எப்போது போடப் போகிறாய்’ என்று. அது எனக்கு சுருக்கென்று தைத்தது. கொழும்பு திரும்பியபின் இதை நான் ஏர்னஸ்ற் மக்கின் ரைரிடம் கூறினேன். அவர் கேட்டுச் சிரித்துவிட்டு, பிறகு ஒருநாள் கூட்டம் ஒன்று வைத்தார். அந்தக் கூட்டத்தில் சொன்னார்: ‘இனிமேல் ஆங்கில நாடகங்களை நான் இங்கே வைத்துக் கொள்கிறேன். நீங்கள் எல்லாரும் நிறையத் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். சிங்களப் பிரிவினர் சிங்கள நாடகங்களைச் செய்யுங்கள், தமிழ்ப் பிரிவினர் தமிழ் நாடகங்களைச் செய்யுங்கள். ஆங்கில நாடகங்களில் உங்கள் பங்களிப்பு எனக்குத் தேவைப்படும்பொழுது உங்களைக் கூப்பிடுகிறேன்’ என்றார். அப்போதுதான் முதற் தடவையாக அங்கிருந்து பிரிந்து, தமிழ் நாடகங்கள் செய்யவேண்டும் என்ற ஒரு தேடலில் ஈடுபட்டேன். அப்பொழுது திருகோணமலை வழக்கறிஞர் க.சிவபாலன் அவருடைய நண்பர் வழக்கறிஞர் சச்சிதானந்தன், முத்துலிங்கம் இப்படியானவர்கள் சேர்ந்து நாங்கள் ‘நாடோடிகள்” என்றதொரு அமைப்பை உருவாக்கினோம். நாடகம் போடுவதற்கு நாடகப் பிரதித் தேடுதலில் ஈடுபட்டோம். ஒரு நேர்த்தியான நாடகக் கற்கைநெறியோடு நான் இருந்தபடியால், எங்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கத் தகவல் நிலையம், ஜேர்மன் கலாசார நிலையம் இங்கிருந்தெல்லாம்கூட பயிற்சியாளர்கள் வந்து பயிற்சிகளை அளித்தனர். இவர்கள் மூலம் நவீன நாடகங்கள் குறிப்பாக ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்த அன்றைய நாடகங்களை கற்கைநெறியோடு முழுமையாகக் கற்ககூடியதாக இருந்தது. ஒரு துணிச்சல் வந்தது. அதோடு தமிழ் நாடக முயற்சிகளில் இறங்கினோம். அப்போதுதான் க.சிவபாலன் போன்றோருடைய துணையோடு நாங்கள் முதலில் ‘கோடை’ நாடகத்தைத் தயாரித்தோம்.
கானா பிரபா: மஹாகவியினுடைய கோடை மற்றும் புதியதொரு வீடு போன்ற நாடகங்களை, அதாவது அந்தப் பிரதிகளை நாடக வடிவமாக்கியிருக்கின்றீர்கள் நீங்கள். அப்படி நாடக வடிவமாக்கும்பொழுது அதிலே எவ்விதமான மாற்றங்கள் செய்யப்பட்டன அல்லது எவ்வாறு நீங்கள் மேடையேற்றத்திற்கு கொண்டுசென்றீர்கள்?

தாசீசியஸ்: கோடை, வானொலிக்கென்று மஹாகவி எழுதிய நாடகம். அந்த நாடகத்தை நான் தயாரிப்பதற்காக எடுத்தபொழுது மஹாகவி மன்னாரில் மாவட்ட காணி அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். எங்கள் இருவருக்கும் இடையில் அவ்வளவாகத் தொடர்புகள் ஏதும் இருக்கவில்லை. என்றாலும், அந்த நாடக்தைத் தயாரிக்க முற்பட்டபொழுது அதில் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டுவர நான் விரும்பவில்லை. காரணம் மஹாகவி ஒரு பெரிய கவிஞன். அந்தக் கவிஞனுடைய கவிதையை நான் ஊறுபடாத வகையில் தயாரிக்கவேண்டும். ஆதலால் கோடையை நான் தயாரிக்கப் போகின்றேன் என்று அவருக்குக் ஒரு கடிதம் எழுதினேன். அவர் சொன்னார் ‘சரி, நீங்கள் தயாரிக்கத் தொடங்குங்கள். தயாரிப்பின் நடுவில் நான் வந்து பார்க்கின்றேன். அதுவரையும் நான் வரவில்லை. ஏனென்றால், இதைத் தயாரிக்க முற்பட்டவர்கள் பலர் இடையிலே கைவிட்டுவிட்டார்கள். நீங்கள் நாலாவதோ ஐந்தாவதோ ஆள்’ என்று எனக்குக் கூறியிருந்தார். நாங்கள் தயாரிக்கத் தொடங்கினோம். ஆனால், அதை மிகக் கவனமாக எடுத்து மேடைப்படுத்தினேனேயொழிய அதில் நான் எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை. எழுத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால், நான் அந்த நாடகத்தைத் தயாரிப்பதற்கு ஆறு மாதங்கள் ஆயின.

மூன்றாவது மாதத்தில் மஹாகவி வந்து பார்த்தார். பிரதியின்படி ஒரு நாள் காலை தொடங்கி மறுநாள் காலை முடிவடையும் அந்த நாடகத்தில் எங்கள் மேடை முயற்சி பற்றி அவருக்கும் சில ஐயப்பாடுகள் இருந்தன. ஏனென்றால் நான் கவிதையைக் கையாண்ட விதம். ஆனால், ஒரு அரைமணி நேர உரையாடலுக்குப் பிறகு அவர் எமது கையாளல் முறையை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அந்த நாடகத்தை நாங்கள் மேடை ஏற்றிய பொழுது ஒரு காத்திரமான பார்வையாளர்கள் அங்கே வந்திருந்தார்கள். கவிதை நாடகம் என்றபடியால் கவிஞர்கள் நிறையப் பேர் வந்திருந்தார்கள். நாடகம் முடிந்த பிற்பாடு சில வினாக்களை அவர்கள் என்னிடம் தொடுத்தார்கள். கைலாசபதி கூட அங்கேயிருந்தார். என்னுடைய வளர்ச்சிக்கு கைலாசபதியின் உறவு ஒரு பெரிய பங்களிப்பு என்றே நான் கூறுவேன். அவர் முன்னிலையில் பல கவிஞர்கள் பேசும்போது கேட்டார்கள். நீங்கள் கவிதையை ஊறுபடுத்திவிட்டீர்கள். கவிதை கவிதையாக வரவில்லை. அதாவது நாடகம் தொடங்குவதே இப்படித்தான்: ‘தம்பி எழும்பு தலையைப் பார். பற்றையாய் செம்பட்டை பற்றிக்கிடக்கு. போய்ச்சீவையா, கொப்பர் வெளிக்கெழுந்து போன பொழுது முதல் இப்படியே சும்மா இதையேன் அடிக்கிறாய்.” என்றுதான் தொடங்குகின்றது. அந்த நாடகக்தில் நான் பழக்கியிருந்த முதல் கூற்று பேச்சோசையில் இப்படித்தான் அமைந்திருந்தது. ஆனால் அதைக் கவிதையில் சொல்வதாகயிருந்தால் வேறுவிதமாகத்தான் சொல்லவேண்டும். முழுக்க முழுக்க அகவலில் எழுதப்பட்ட நாடகம் அது. அதை நாங்கள் கவிதையாகப் பேசுவதாக இருந்தால் பேச்சோட்டம் குறைந்துவிடும். நாடகம் என்பது ஓர் இலக்கண, இலக்கிய இரைச்சலாக இருந்தால் அந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதோடு யாழ்ப்பாணப் பேச்சு, பேச்சுவழக்கு ஒரு செப்பநோக்கு. அது அகவலிலேதான் அமைந்து இருக்கிறது. ஆகவேதான் நீங்கள் எங்கே எடுத்துப் பார்த்தாலும் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு அப்படியே இருப்பதை நீங்கள் காணலாம். அந்த அழகை நாங்கள் நாடகம் என்ற பெயரால், அல்லது நவீனத்துவம் என்ற பெயரால் அல்லது கவிதையென்ற பெயரால் கெடுக்க முடியாது. அதாவது கவிதை, இணைந்தோடியிருக்கிற ஓசைதான் பேச்சு. அதை நாங்கள் மறந்து விடுகின்றோம். படிச்சவுடனே நாங்கள் நினைக்கின்றோம் அதற்கென்று ஒரு அழகைக் கொடுக்கவேண்டும். அதைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று. சாமி எங்களுடைய மனதிலதான் இருக்கிறார். சமயம் எங்களுடைய வாழ்க்கையிலதான் இருக்குது. அது போன்று கோயில்களுக்குள்ள நாங்கள் குட்டி குட்டி சடங்குகளோட ஒட்டினவுடனே அது ஒரு பிரமிப்பைத்தான் தருது. அது அன்பை அல்லது நேசத்தைத் தரவில்லை. அப்பிடித்தான் நான் பார்க்கிறன். ஆனபடியால் நான் அதை அப்படியே தரலாம் என்று நினைத்தேன். அங்கு பல கவிஞர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அப்ப கைலாசபதியவர்கள் கேட்டார். தம்பி ஒரு உதாரணம் சொல்லடா நீ ஆங்கிலத்திலும் கற்றுவந்தனி அப்படியென்று. நான் உடனடியாக சேக்ஸ்பியரில் இருந்து ஒரு உதாரணத்தைச் சொன்னேன். எப்படி லோறன்ஸ் ஒலிவியர் என்கிற அந்த நாடக வல்லுனர், பெரும் நடிகர் சேக்ஸ்பியரின் வசனத்தை எவ்வாறு சாதாரண மொழியாக அதை மாற்றி அமைத்தார் என்று. உதாரணமாக அது முன்பெல்லாம் To be or not to be என்ற மாதிரிக் கேட்டார். ஆனால் அவர் வந்து அதை உடனடியாய் இப்படி மாற்றினார். சாதாரணமாக அங்க கவிதையில் இருக்கிற எழுத்து கூறுபடவில்லை. அது பேச்சோசையாக மாறியது. இலக்கணச்சிதைவு இல்லை. சொற்சிதைவு இல்லை. எழுத்துச் சிதைவு இல்லை. நாடகம் அப்படித்தான் வரவேணும். நாடு, அகம் இரண்டும் சேர்ந்தது நாடகம் என்பார் பேராசிரியர் வித்தியானந்தன். உள்ளதை அப்படியே பிரதிபலிப்பது. அதன் உள்ளத்தை அப்படியே பிரதிபலிப்பது. அதுதான் நாடக வசனமாய் இருக்கவேண்டும். எங்களுடைய கோடை வெற்றியாக அமைந்தது. அதுவே உடனடியாக இளைய பல கவிஞர்கள் கவிதை நாடகங்களை எழுதுவதற்கு ஒரு தூண்டுகோலாகவும் அமைந்தது.

அடுத்தது புதியதொரு வீடு பற்றிக் கேட்டீர்கள். புதியதொரு வீடு எழுதும் போது அங்கே மஹாகவி முதலில் வெறும் உரையாடலை மட்டும்தான் எழுதியிருந்தார். அந்த உரையாடலை நாங்கள் தனியே கடற்கரை பகைப்புலத்தில் மட்டுமல்ல எந்த பகைப்புலத்திலும் வைத்து பார்க்கக்கூடிய நாடகமாக அது இருந்தது. ஆனால் மீனவ கிரமத்துச் சூழலை வைத்து அவர் எழுதியிருந்ததால், அந்த மீனவச் சூழலை அழகாக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக நான் பல தடவை நான் அவரிடம் சென்று அவரோட உட்கார்ந்து உரையாடி இருக்கிறேன். புதியதொரு வீடு தயாரிக்கும் பொழுது அவர் உதவி அரசாங்க அதிபராக மட்டக்களப்பில் இருந்தார். அதற்காக நான் இரண்டு மூன்று தடவைகள் போகவேண்டியிருந்தது. அவரும் என்னிடம் இரண்டு மூன்று தடவைகள் வந்தார். அந்த நாடகத்தை கொஞ்சம் நீட்டியெழுதி, அவரிடம் நான் பேசிவிட்டு வந்துவிட்டால் அடுத்த வாரமே அவருடைய எழுத்துக்கள் என்னிடம் வந்துவிடும். ஆனபடியால் இரண்டு நாடகங்களிலும் ஒரு சொல்லைக்கூட மாத்தவில்லை. எல்லாமே மகாகவியினுடையவை. புதியதொரு வீடு தயாரித்து முடித்ததன் பின்னர் சில விமர்சகர்கள் ஒரு துன்பம் தரக்கூடியதொன்றைக் கூறினார்கள். அதாவது இந்த நாடகத்தின் வெற்றிக்கு பாதிப் பங்கு மஹாகவிக்கென்றால் பாதி பங்கு தார்சீசியசுக்கென்று. அவருடைய உட்புகுத்தல்கள் வெற்றியை கொண்டு வந்தது என்று. நான் அதில் ஒன்றுமே செய்யவில்லை. ஒரு நாடகாசிரியன் ஒரு கதாசிரியனைப் படிக்காமல் அவனுடைய ஆத்மாவை உணராமல் எதையும் செய்ய இயலாது. நான் அவனுடைய ஆத்துமாவைப் புரிந்து கொண்டு எழுத்துருவில் உள்ள உயிரோட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப வடிவம் கொடுத்தேன் அவ்வளவுதான். அதைத்தான் ஒரு நாடக நெறியாளன் செய்யலாம் செய்ய வேண்டும். ஒரு நாடக ஆசிரியனுடைய மூலத்தில் அவனுடைய பிரதியில் கை வைக்கும்போது அது ஒரு அடக்குமுறை என்றுதான் எனக்குப் படுகின்றது. அதே நேரத்தில் ஒரு நெறியாளனுக்கு திறமையில்லை என்பதையும் காட்டுகின்றது. ஆனபடியால் அந்த இரண்டு நாடகங்களும் என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஒரு பெரிய படிக்கல்லாக அமைந்தது. அதே நேரத்தில் எனக்கு நிறையக் கற்றும் தந்தது. சொற்செறிவாக, அர்த்தமுள்ளதாக நாடகங்களை இயக்குவதற்கும், என்னுடைய வாழ்நாள் முழுவதும் நாடகங்களில் நான் கவனமாக இருப்பதற்கும் எனக்கு உதவி புரிந்தவை இந்த இரண்டு நாடகங்கள், என்றுதான் நான் கூறுவேன். நவீனத்துவம் எனும் பொழுது அதாவது ஒரு பார்வையாளனுக்கு அவனது கவனத்தைக் குறைக்கும் வகையில் அல்லது குலைக்கும் வகையில் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் நவீனத்துவம். அதைத் தவிர வேறொன்றும் இல்லை. நாங்கள் புதிதாக எதனையும் வானத்தில் இருந்து கொண்டு வருவதில்லை. நேர்த்தியாக, சத்தியமாக மன சுத்தத்தோடு அதைச் செய்யும் போது அது நவீனத்துவம் பெறுகிறது. அப்படித்தான் நான் பார்க்கிறேன்.

கானா பிரபா: இதே வேளை இன்னும் பல மேடையேற்றங்கள் குறிப்பாக எந்தையும் தாயும், சிறிசலாமி போன்ற நாடகங்களையும் மேடையேற்றியிருக்கின்றீர்கள். அந்த அனுபவங்களையும் சொல்லுங்களேன்.?
தாசீசியஸ்: குறிப்பாக நான் இலங்கையிலே எடுத்துக்கொண்டால் ஞானம் இலம்பேட்டின் ‘பிச்சைவேண்டாம்’ ரசியத் தழுவல் நாடகம். அதை மேடையேற்றும் பொழுதும் கவனமாகத்தான் இருக்கவேண்டி இருந்தது. ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் சிங்கள நாடகங்கள் எல்லாம் தழுவல் நாடகங்களையும், மொழிபெயர்ப்பு நாடகங்களையும் மேடையேற்றிக் கொண்டு தங்களுடைய சுயத்தை இழந்த காலமாக இருந்தது. ஆனால் தமிழ் நாடகங்கள் அப்படியல்ல, எங்களுடைய நாடகங்களில் நவீனத்துவம் இல்லை, மேடைநிகழ்ச்சிகள் இல்லை என்றாலும் கூட எங்களுடைய சுயம் தமிழ் மக்களுடைய நாடகங்களின் சுயம், நாங்கள் கடன் வாங்காத ஒரு நிலை எங்களிடம் இருந்தது. தமிழ் நாடகங்களில் ஏதோ ஒரு வகையில் அவை பேணி காப்பாற்றப்பட்டு வந்தன. ஆதலால் ஒரு தழுவல் நாடகத்தையோ அல்லது ரசிய நாடகத்தையோ கையாள்வதில் மிகக் கவனமாக நாங்கள் இருக்க வேண்டியதாக இருந்தது. நமது மொழி, மேடையமைப்பு இவற்றில் கூட எங்களுடைய வடிவங்களுக்கூடாகத்தான் மேடையேற்ற வேண்டியிருந்தது. ஏனென்றால் ரசிய கலாச்சார அதிகாரி அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக வந்தவர் கூறினார். நாங்கள் பல இலட்சம் கொட்டி மேடையேற்றுகின்ற ஒரு நாடகத்தை நீங்கள் நாலு தடிகளுடன், இரண்டு சாக்குத் துண்டுகளுடன், இரண்டு மூன்று படுக்கை விரிப்புக்களுடன் மிக அழகாக நடத்திவிட்டீர்கள். இந்த நாடகத்தை எங்கேயும் கொண்டு போகலாம். மேடைப் பொருட்களைக்கூட மடிச்சு ஒரு வண்டியில் வைத்துக் கொண்டுபோகலாம். நாங்கள் அங்கே பெரிய லொறிகளைப் பிடித்துத்தான் கொண்டுபோக வேண்டும். மிக நேர்த்தியாக இருந்தது என்று அவர் கூறியிருந்தார்.

அதன்பிறகு எனக்கு ஒரு பெரிய திறவுகோலாக என்னுடைய நாடக வாழ்க்கையில் உதவி புரிந்தது ‘கந்தன் கருணை’. அது என்.கே. ரகுநாதனுடைய மூலக்கதை. அம்பலத்தாடிகளுக்காக இளையபத்மநாதன் காத்தவராயன் மெட்டில் எழுதிய அந்நாடகத்தை அனைவரும் பார்க்கக்கூடிய, இரண்டு மணித்தியாலத்திற்கு நடக்கக்கூடிய ஒரு மேடை நாடகமாக சுருக்கி அமைப்பதற்கு அவர்கள் அனுமதியைத் தந்தார்கள். அந்த நாடகத்தில்தான் நான் ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்தேன். அதாவது யாழ்ப்பாணக் கூத்து வடிவில் வடபாங்கு, தென்பாங்கு மன்னார் மாதோட்ட வடபாங்கு வடிவம், மட்டக்களப்பு வடிவங்கள், காத்தவராயன், மலையக வடிவங்கள் இவைகள் எல்லாவற்றையும் கலந்து கண்டிய நடனத்தையும் சேர்த்து எங்கட கூத்தாட்டங்களையும் சேர்த்து நாடகத்தை தயாரித்தேன். அங்கே மௌனகுருவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவர் நடிகனாக வந்தபொழுது அதாவது அந்நாடகத்தில் அவர் கந்தனாக நடித்தார். அவர் எங்களுக்குத் தந்த ஆட்டப் பயிற்சியை, எல்லோரும் கற்றோம். இதில் அவர் பாடல்களும் எழுதினார், அத்துடன் முருகையன் எழுதினார். கவிஞர் சிவானந்தன் எழுதினார். நா.சுந்தரலிங்கம் எழுதினார், இளையபத்மநாதன் எழுதினார், சண்முத்துலிங்கம் எழுதினார், தாசீசியஸ் எழுதினார். இப்படியெல்லாரும் கூடி நாங்கள் கட்டுக் கட்டாக எழுதி நாடகத்தைக் கொண்டுவந்த பொழுது பலர் இந்த நாடகம் சரிவருமா என்று கேட்டார்கள். நான் அவர்களுக்குகூறியது எதிர்காலத்தில் நாடகம் தனியொருவர்தான் அமர்ந்து எழுதவேண்டும் என்றில்லை. நாடகம் எழுதும்போது ஒரு பிரிவாக, கூட்டாகச் சேர்ந்திருந்து எழுதும்போது தான் மிகவேகமாக நாடகங்கள் வரும் என்றேன். அந்த நேரத்தில் நான் கூறியதை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கந்தன் கருணை அதை வெற்றியென்று காட்டியது. அங்கே மட்டக்களப்பு ஆட்டவடிவம், மன்னார் ஆட்டவடிவம், யாழ்ப்பாணத்துச் ஆட்டவடிவம் இன்னும் காத்தவராயன் நடை இவைகள் எல்லாம் வந்து சேர்ந்தது. கண்டிய நடனம் வந்து சோந்தது. இவைமூலம் ஒரு தேசிய நாடக வடிவத்துக்கான ஆரம்ப புள்ளியிடப்பட்டது என்றும் விமர்சகர்கள் கூறினார்கள். அது எனக்கு ஒரு கண் திறப்பாக இருந்தது. என்னுடைய நாடக வளர்ச்சிக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பொறுத்தது போதும் என்ற நாடகம். அந்த நாடகம் நான் எழுதியதுதான். நான் தயாரித்ததுதான். அது ஐனாதிபதி விருது, நடிகர்களுக்கான விருது பிரான்சிஸ் ஜெனம் இப்படியாக பல விருதுகளை அந்த நாடகம் பெற்றது. ஒரு நவீனநாடகத்தின் வழியே ஒரு கருத்தைச் சொல்லுவதற்கு எங்களுடைய கூத்து வடிவங்களை எவ்வளவு சிறப்பாக கையாளலாம் என்பதை காட்டியது. இவைகளை மனதில் வைத்துக்கொண்டுதான் நான் எழுதினேன். அது சிறப்பாக வந்ததோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது. அல்லது என்ன பாதிப்பை ஏற்படுத்தியதோ என்றும் எனக்குத் தெரியாது. ஆனால் விருதுகளைப் பெற்றது அது ஒன்றுதான். அதேவேளையில் எங்களின் காத்திரமானதொரு நாடகப் பண்புகளை, மரபான கூத்துப் பண்புகளை மிகச் சிறப்பாக ‘புதியதொரு வீட்டிலும்’ கையாண்டேன். ஏனென்றால் அந்த நாடகத்தை நாங்கள் திருகோணமலையில் மேடையேற்றியபோது கைலாசபதியும் அங்கே விடுமுறைக்காக வந்திருந்தார். புதியதொரு வீட்டை நாங்கள் எத்தனை தடவை கொழும்பில் மேடையேற்றினாலும்கூட அவருடைய துணைவியார் கட்டாயமாக வருவார். அவர் விடுமுறையில் அங்கிருந்தததால் கணவரையும் இழுத்துக்கொண்டு நாடகத்திற்கு வந்திருந்தார். கைலாசபதிக்கு பின்னால் இருந்த யாரோ ஒருவர். ‘ஆ நாடகத்தில் ஏணித்தரு வந்திட்டுது பிறகென்ன பிரச்சனைக்கு தீர்வு சொல்லப்போயினம்” என்றார். இது கைலாசபதிக்கு கேட்டுட்டுது. நாடகம் முடிந்தவுடன் அவரைக் கூப்பிட்டு அதென்ன ஏணித்தரு என்று எதோ சொல்லுறியள் என்று கேட்டிருக்கிறார். ‘ஏணித்தரு வந்துதே எண்டால் நாடகத்தில் ஒரு தீர்ப்பு வரும்தானே. காத்தவராயன் கூத்தை எடுத்துப் பாருங்கள், கத்தோலிக்க மரபு கூத்தை எடுத்துப்பாருங்கள், காலா காலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற நாடக வடிவங்களை எடுத்துப் பாருங்கள், சைவநாடக வடிவங்களை எடுத்துப்பாருங்கள் ஏணித்தரு வந்திட்டது எண்டால் தீர்ப்பு வந்துவிடும். இப்ப ஏணித்தரு வந்து போட்டுது” என்றிருக்கிறார். உண்மையிலேயே அந்த நாடகத்தில் கல்யாணத்தை முடித்து வைக்கிற தீர்ப்பு அந்த இடத்தில் வருவதற்காக நான் அந்த ராகத்தை போட்டிருந்தேன். கைலாசபதி என்னைக் கூப்பிட்டுக் கேட்டார் ‘தம்பி நீ உந்த ராகம் உதுக்காகத்தான் போட்டனியோ அல்லது தற்செயலாக வந்ததா?” என்று உடனே சொன்னேன் ‘கூத்து மரபில் இருந்து வருகின்றவன். ஆனபடியால் பாடலாக வருகிற நேரத்தில, அதை அப்படித்தான் போடவேணும். அப்போதுதான் எங்களுடைய கூத்தின் சிறப்பு. அந்தக்கூர்மை வெளியில வரும். அதற்காகத்தான் அதை தேர்ந்து எடுத்தேன்’ என்று சொன்னேன். ‘இதுகளையெல்லாம் எங்களுக்கு முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே, நாங்கள் இதைப்பற்றிப் பேசும்போது மற்றவர்களுக்கும் சொல்லியிருக்க வாய்ப்பாயிருக்குமே’ என்றார். நான் சொ ன்னேன் ‘இல்லை என்னுடைய வேலை ஒரு பொருளைப் படைப்பது. அதை விமர்சிப்பது, அதைச் சந்தைப்படுத்துவது, அதற்குப் பேர் சூட்டுவது உங்களுடைய வேலை. விமர்சகர்களுடைய வேலை. அதைக் கற்கவேண்டியது உங்களுடைய வேலை. என்னுடைய தேவைக்கு நான் கற்றேன். உங்களுடைய தேவைக்கு நீங்கள் கற்கவேண்டும்’ என்றேன். அவர் என்னுடைய ஆசிரியர் என்றாலும் ஒரு நண்பர் போல என்னால் அதை மனம்விட்டு அவரிடம் சொல்ல முடிந்தது. இப்படி நவீனங்களை நாங்கள் புகுத்துகிறோம் என்றால் வேணுமென்று நாங்கள் புகுத்துவதில்லை. தேவை கருதித்தான். வயித்துக் குத்துக்கு மருந்து என்னும்போது காணியில உள்ள புல்லு பூண்டுகளை கொண்டுபோய் மருந்து என்று கொடுக்கமுடியாது. அதே போலதான் எங்களுடைய ஒவ்வொரு நாட்டுக் கூத்துகளில் உள்ள பண்புகள் வேறு வேறு நவீனத்துவங்களுக்கு வேறு வேறு மாதிரியாக கருத்துக்களைச் சிறப்பாக கூறுவதற்கு உதவியாக இருக்கும். அதைப் புரிந்துகொண்டு நாங்கள் அதைச் செய்ய வேண்டும்.

அடுத்து நீங்கள் கேட்டீர்கள் இங்கே புலம்பெயர்ந்ததின் பின்னென்று, புலம்பெயர்ந்ததின் பின் வேரறுந்து வந்தவன் நான். அகதியாக வந்தவன் நான். அகதியாகத்தான் என்னுடைய மக்கள் இங்கே வாழ்கிறார்கள், வாழ்ந்தார்கள். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குப் போக முடியாத நிலை. ஜேர்மனியில் எல்லாம் ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்குப் போகமுடியாது. அப்படியான ஒரு இறுக்கத்துக்குள்தான் எங்களுடைய மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இங்கே வந்த பின் நாடகப் பயிற்சிகளை இலண்டனில் ‘களரி’ என்றதொரு அமைப்பின் மூலமாக நடத்திக் கொண்டிருந்தேன். அதை சிறப்பாக நான் நடத்திக் கொண்டிருந்தேன் என்பதைவிட அதில் ஈடுபட்ட இளைஞர்கள் குறிப்பாக சுந்தரம் சிறிஸ்கந்தராஜா, நாவரசன், விக்னராஜா, கோபு இப்படியானவர்கள் சிறப்பாக ஒழுங்குபடுத்தி நடத்திக்கொண்டிருந்தார்கள். அதே போல பாலேந்திரா ஒரு பக்கத்தில் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார். தொடர்ச்சியாக பெரிய நாடகங்களில் மிக அருமையாக தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற ஒரு பெருங் கலைஞன் அவர். இன்றும் நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார். நாங்கள் வேறு வேறு துறைகளுக்குப் போய்விட்டோம். இங்கு வந்து ‘சிறிசலாமி’ என்ற நாடகம் சுவிற்சிலாந்தில் போடவேண்டிய ஒரு தேவை இருந்தது. ஏனென்றால் இங்கிலாந்து போன்ற நாடு அல்ல சுவிற்சிலாந்து. இங்கிலாந்தில் உள்ளவர்ளுக்கு இலங்கை, இந்தியா அவர்களின் குடியேற்ற நாடுகளாக இருந்த படியால் தொடர்பு இருந்தது. சுவிற்சிலாந்து மக்களுக்கு வெள்ளைத் தோலைத் தெரியும், கறுப்புத்தோலைத் தெரியும் இடையில உள்ள ஒரு பிறவுண் நிறத்தோலைத் தெரியாது. பிறவுண் நிறம் என்பது ஊத்தையோ என்றுதான் அவர்கள் தமிழ் மக்களைக் கேட்டார்கள். ஏன் நீங்கள் குளிக்கவில்லையா ஏன் இப்படியிருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டார்கள். அப்பிடியான சுவிற்சிலாந்து மக்களுக்கு நாங்கள் எவ்வகையான பாரம்பரியத்தில் இருந்து வந்திருக்கிறோம். ஏன் நாங்கள் இங்க ஓடிவந்தோம் என்பதைக் கூறவேண்டிய ஒரு தேவை இருந்தது. அதைக் கூறுவதற்கு கலைவடிவம்தான் சிறந்த வடிவம் என்பதைக் கண்டார்கள். குறிப்பாக அன்ரன் பொன்ராஜா அங்கே இருந்தார். அவர் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரியில் என்னுடைய மாணவராக இருந்தவர். குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் திருநெல்வேலியில் நடத்துகிற அந்த நாடகப்பள்ளியில் மாணவராக இருந்தவர். அங்கே கற்றுத்தேர்ந்தவர். அவர் சுவிற்சிலாந்தில் இருந்து ஒரு அழைப்பை அனுப்பினார்.
அந்த சிறிசலாமி நாடகம் தமிழ் மக்களுடைய பாரம்பரியத்தையும் அவர்கள் ஏன் ஓடிவந்தார்கள், ஏன் உலகம் பூராவும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் ஒரு நாடகம். அந்த நாடகம் முதலில் தமிழில் எழுதி அடுத்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து பிறகு சுவிஷ்-ஜேர்மன் மொழியில் அதை வடித்தோம். அந்த நாடகத்தைப் பார்க்க ஐந்து சதவிகிதம்கூட தமிழ் மக்கள் வரவில்லை. அது போடப்பட்டது முழுக்க முழுக்க சுவிஸ் மக்களுக்காக. முப்பத்தியாறு மேடைகளில் அரங்கேற்றப்பட்டது. அரங்கம் நிறைந்த மேடைகள். அதன் பின்னர் தமிழ் மக்கள் பற்றிய கருத்து சுவிஸ் மக்களிடையே மாறத் தொடங்கியது. அவர்களை அன்போடு பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் ஓடிவந்தது பொருளாதாரத் தேவைகளுக்காக அல்ல உயிரைக் காப்பாற்றிக் கொள்ள என்பதைப் புரிந்து கொண்டார்கள். அங்கே ஒரு இனக் கருவறுப்பு நடப்பதைப் புரிந்து கொண்டார்கள். அவர்களை அனைத்து வேலைகளிலும் அமர்த்தத் தொடங்கினார்கள். இன்று சுவிற்சலாந்தில் ஒவ்வொரு மாநிலமும் வெளியிடுகின்ற ஆண்டறிக்கையைப் பார்த்தால் தமிழ் மக்களின் பங்களிப்பு, அவர்களுடைய பணி நேர்த்தி, நம்பகத்தன்மை இவற்றைப் பற்றியெல்லாம் போற்றி எழுதுகிறார்கள். அவர்களுக்காக தொழிலதிபர்களே குரல்கொடுக்கிறார்கள்.

சுவிற்சிலாந்தில் அதனை அடுத்து ‘புரூடர் கிளவுஸ் உண்ட் பிறின்சென் பாண்டவாஸ்” (பாண்டவர்களும் கிளவுஸ் முனிவரும்) என்ற இன்னுமொரு நாடகம், அதுவும் மூன்று மொழிகளில் வெளியானது. பொதுவாக புலம்பெயாந்த நாங்கள் தமிழ் மக்களுக்குத்தான இங்கே நாடகம் போடுகின்றோம். ஆனால் சுவிற்சிலாந்தைப் பொறுத்த மட்டில் அது ஒரு புறைநடையானது என்றே சொல்லவேண்டும். அந்த ஒரேயொரு நாடுதான் தனது மெயின் ஸ்ரிம் தியட்டர்கள் மூலம் தனது நாட்டு மக்களுக்காக தமிழ் நாடகங்களை மேடையேற்றுகிறது. இப்போ அன்ரன் பொன்ராஜா அவர் அங்கே நாடகப் பள்ளியொன்றையும் அமைத்துள்ளார். அவர்; தொலைக்காட்சியிலும் ஒரு நடிகர். சுவிஸ் நடிகராகவே அவர் அங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார். தமிழ் நடிகராக அல்ல. கடந்த ஆண்டு அவர் லுத்ஷான் நகர விருதும் ஒரு நாடகத்திற்காக பெற்றிருந்தார். அதன் பின்னர் முழுக்க முழுக்க டொச் மொழியிலான ‘கப்பி பேத்டே வில்லியம்ரெல்” என்ற நாடகத்தில் இறுதிப் பகுதியில் இருபது நிமிடம் ஈழத்துக் கூத்து வடிவங்கள், தெருக்கூத்து ஆடைகள், ஆட்டங்களைச் சேர்த்து செய்தார். தமிழும் டொச்சும் சேர்ந்தே நாடகத்தில் வந்தாலும் அந்த நாடகத்திற்குள்ளே இறுதிப் பகுதி இருபது நிமிடமும் தமிழுக்கென்றே ஒதுக்கியிருந்தார்கள். வில்லியம் ஜேம்ஸின் கதையை தமிழில் கூத்தாகப் பாடிக் கொடுக்கும் அந்தப் பகுதியை நெறிப்படுத்துவதற்காகவும் அலங்காரப்படுத்துவதற்காகவும் நானும் அன்ரன் பொன்ராஜாவோடு சேர்ந்து போயிருந்தேன். நான் அந்த நவீனத்துவ நாடகக் கல்வியைக் கற்றதால் மேலைநாட்டு அரங்குகளில் அவர்களுக்கு சலிப்பூட்டாத வகையில், அவர்கள் பார்த்து நயக்கும் வகையில், நாடகங்களை கொண்டு வருவதற்கு உதவியாக இருந்தது. அதுதான் நவீனத்துவ நாடகக் கல்வியைக் கற்றதால் எனக்குக் கிடைத்த பயனென்று நான் நினைக்கிறேன்.
கானா பிரபா: ஈழத்திலும் சரி, நீங்கள் புலம்பெயர்ந்து வந்த பின்னரும் சரி நீங்கள் மேற்கொண்ட நாடகமுயற்சிகளுக்கு உங்களோடு கூட வந்தவர்கள் உங்களுடைய எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கக்கூடியவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் இல்லையா?
தாசீசியஸ்: ஓம் அப்படி நீங்கள் என்னோடு கூடிவந்தவர்கள் என்று குறிப்பிட்டால் நான் முதலில் எனக்கு இந்த நாடகங்களைப் பார்க்க, கற்றுத்தந்த அண்ணாவிமார்கள் நாடக நடிகர்கள் இவர்கள் எல்லாரையும் குறிப்பிடவேண்டும். இன்னும் குறிப்பாக நாடக நெறியாட்சி என்று வந்தால் உமையார் கவி என்று இருந்தார் அவர் இறந்து விட்டார். வளமிக்க கலைஞர். அதன் பின்னர் நா.சுந்தரலிங்கம் இருந்தார். மௌனகுரு இருக்கிறார்; இப்பொழுது அவுஸ்திரேலியாவில் இருக்கும் இளையபத்மநாதன், நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல சிவபாலன் இப்படிப் பலர் வேறு வேறு தொழில்நுட்பங்களோடு உதவினார்கள். இனி இங்க வந்த பிற்பாடு அன்ரன் பொன்ராஜா. இந்தியாவில்கூட எனக்கு தங்களுடைய எழுத்தால் தங்களுடைய முயற்சியால் வழிகாட்டிய பேராசிரியர் ராமானுஐன், நா.முத்துசாமி இன்னும் அந்த குழந்தை நாடகக் கலைஞன் ஆழிப் பட்டறை வேலுசரவணன். இவர்கள் எல்லாம் என்னை ஆகர்சித்தவர்கள். இவர்கள் எல்லாம் எனக்கு தமிழ் நாடகத்துறையில் இருந்து வழிகாட்டியவர்கள். இனி பேராசிரியர் வித்தியானந்தன்.
கானா பிரபா: இதே வேளை புலம்பெயர்ந்த நாடுகளிலே தமிழர்கள் வாழக்கூடிய நாடுகளிலே நாடகப் பயிற்சிப் பட்டறைகளை வழங்கியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டில்கூட உங்களுடைய நாடகப் பயிற்சிப் பட்டறையை வழங்கியிருக்கிறீர்கள். சமகாலத்தில் முத்துச்சாமி போன்றவர்களால் வீதி நாடகங்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் செயல் திட்டத்தை பரவாலாக மேற்கொண்டிருக்கிறார்கள். இவற்றில் உங்களுடைய நாடகப் பயிற்சிப் பட்டறையும் உள்வாங்கப்பட்டு செயற்படுத்தப்பட்டனவா? அவற்றுக்கான அங்கீகாரம் எவ்வாறு இருந்தது.?
தாசீசியஸ்: நீங்கள் பயிற்சிப் பட்டறை என்று குறிப்பிடுகிற நேரம் முத்துசாமி என்று குறிப்பிட்டிருந்தீர்கள் அவர் வீதிநாடகங்களை அல்ல தெருக்கூத்து முயற்சிகளையே மேற்கொள்கிறார். வீதிநாடகங்களில் இருந்து அது கொஞ்சம் வித்தியாசம். பிரளயன்தான் நிறைய வீதிநாடகங்களை அங்கே செய்துகொண்டிருக்கிறார். நான் பார்த்த நாடகங்களில் மற்றவர்களும் இருக்கிறார்கள். இவருடைய நாலு அல்லது ஐந்து நாடகங்களை நான் நேரிலே போய்ப் பார்த்தேன். நா.முத்துச்சாமி செய்த பங்களிப்பு ஒரு மிகப் பெரிய பங்களிப்பு. நான் அவரை ஒரு யோகியாக, ஒரு ஞானியாக, ஒரு தவம் இயற்றுகிறவராகத் தான் பார்க்கின்றேன். அவர் கூத்துப்பட்டறையைத் தொடக்கியபோது மற்றவர்களிடத்தில் இருந்து அப்புறப்படுத்தி இதற்கென தன்னை அர்ப்பணித்தார். அவர் ஒரு வளமான நாடக எழுத்தாளர். சிறுகதை எழுத்தாளர் கட்டுரை எழுத்தாளர், சிந்தனையாளர். ஆனால் கூத்துப்பட்டறைக்கு என்று தன்னை அர்ப்பணித்த தொண்டு பெரிய விருட்சமாக வளர்ந்துவிட்டது. அவர் என்னைக் கவர்ந்துகொண்ட ஒரு மனிதர். நான் நேராக அவர்களுடைய தயாரிப்புகளை பார்க்க முடியாமல் போனாலும் எழுத்துக்களால் அவரிடமிருந்து நிறைய விடயங்களை நான் கற்றுக்கொண்டேன். இனி பேராசிரியர் ராமனுஐம் தமிழ்நாடு இழந்த கேரளம் பயன்பெற்ற ஒரு தமிழ்ச் சொத்து, நாடகச் சொத்து. அவர்களுடைய எழுத்துக்கள் எல்லாம் என்னைக் கவர்ந்தன.
பயிற்சிப் பட்டறைகளைப் பொறுத்தவரையில் நான் ‘ஸ்ரனிஸ் லாவ்ஸ்க்கி” ஆளுமையால் கவரப்பட்டவன். அதாவது ஒரு கருவை உள்வாங்கிப் பிறகு உமிழ்வதாக கொடுப்பதென்றால் நடிகன் தன்னைத் தயார்ப்படுத்த வேண்டும். அப்படி நடிகனைத் தயாரிக்கும் ஒரு பாங்கில் என்னுடைய பயிற்சி நெறிகளை நான் வழங்கினேன். அவைகளை நான் முழுக்க முழுக்க மேற்குலகநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளவில்லை. நிறைய நிறைய எங்களுடைய நாடுகளில், எங்களுடைய அண்ணாவிமாரிடம் சித்தவைத்தியர்களிடம் இருந்து நான் கற்றவைகள் நிறைய. குறிப்பாக ‘ஈரப் பெரியகுளம்” வவுனியாவில் ஒரு புறத்தில் இருக்கிறது. அந்த இடத்தில் ஒரு முறிவு – தெறிவு வைத்தியரை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கே அந்த முறிவு – தெறிவு வைத்தியர் கண்டியரசனுடைய மருத்துவராக இருந்தவர். நான் வவுனியாவில் ஒரு தடவை குன்றின் மேல் நின்று என்னுடைய பயிற்சிகளைச் செய்து கொண்டிருக்கும் காலைவேளையில் அவரும் அங்கு மூலிகைகளை பறிப்பதற்காக வந்திருந்தார். என்னுடைய பயிற்சிகளைப் பார்த்துவிட்டு என்னோடு உரையாடினார். அப்பொழுது நான் தனிமையைத் தேடி அந்தப் பயிற்சிகளை செய்கிறபோது, சில பயிற்சிகளைக் கற்றுத் தந்தார். அது முழுக்க முழுக்க தமிழ் வடிவங்களே என்று ஓலைக்கற்றைகளைக் கூடக் காட்டினார். இவைகள் எல்லாம் ஒருவனைக் கட்டுப்படுத்தி அதே நேரம் ஒரு சின்ன இடத்துக்குள் இருந்து கொண்டு எப்படி தன்னையொரு பெரிய ஆளாக காட்டுவதற்கு, ஒரு சிறிய புள்ளி ஒரு பெரிய பிரமிப்பாக காட்டுவதற்கு, தனிய நிக்கிற ஒரு நடிகன் மேடை முழுவதையும், அரங்கம் முழுவதையும் நிறைக்கக்கூடிய வகையில் எவ்வாறு செய்துகொள்ளலாம் என்பதையெல்லாம் அவர் எனக்குக் காட்டினார். அதே போல மன்னாரில் நறுவிலிக் குளம் என்ற இடத்தில் ‘மொத்தம் போல்’ என்ற ஒரு ஆசிரியர், வைத்தியர் அவர் எனக்கு கற்றுத் தந்தவைகளும் நிறைய. அந்ந சித்த மருத்துவர்களும் எனக்கு நிறையக் கற்றுத் தந்தவர்கள் தான். அப்பிடி மட்டக்களப்பிலும் நிறைய மருத்துவர்களையும் அண்ணாவிமார்களையும் சந்தித்தேன். அவர்களிடம் கற்றதெல்லாம் நிறைய இவைகள் எல்லாவற்றையும் சேர்த்து திரட்டி ஒரு பயிற்சி நெறியை நான் உருவாக்கியிருந்தேன். ஆனபடியால்தான் நானும் தம்மயாகொட இவரும் இணைந்து இலங்கையின் பல பாகங்களில் நாடகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தியிருந்தோம். தமிழ்ப் பகுதிகளிலல்ல சிங்களப் பகுதிகளில். நாங்கள் தமிழ்ப்பகுதிகளில் அந்தகாலத்தில் அந்தப் பயிற்சிகளை காட்டியபோது எங்களை அவர்கள் வேடிக்கையாகப் பார்த்தார்களே ஒழிய, யாரும் வரவேற்றதாகத் தெரியவில்லை. ஆனால் சிங்களக் கலைஞர்கள் அப்படியல்ல. நாங்கள் போகாத சிங்கள ஆங்கிலக் கல்லூரிகள் இல்லையென்றே சொல்லலாம். நாங்கள் பயிற்சி கொடுப்பதற்காக, நாங்கள் மூச்சுப் பயிற்சி, நடிப்புப் பயிற்சி இப்படி பலவிதமான பயிற்சிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தோம். இவற்றுக்கெல்லாம் நான் நன்றியாக இருப்பது ஏர்னஸ்ற் மக்கின் ரைர், ஐராங்கனி சேரசிங்க போன்ற பெரும் கலைஞர்களுக்கு. அவர்கள் தாங்கள் மேற்கு நாடுகளில் கற்றதை எங்களுக்கு கற்றுத்தர, அதை நன்றாகக் கற்றுவிட்டு எங்களுடைய கிராமம் கிராமமாகச் சென்று நான் தமிழ் சித்த வைத்தியர்களிடம் கற்றதையும் கலந்து செய்ததையே இங்கே நான் மேற்குநாடுகளுக்கு கொண்டுவரக்கூடியதாக இருந்தது. நான் கொண்டு வந்தவற்றை மேற்கு நாடுகளின் சாயலே இல்லாமல் எங்களுடைய சாயலாக அதை இங்குள்ளவர்கள் கண்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் போது, ஒவ்வொரு செயலுக்கும் பயிற்சிக்கும் விளக்கம் கொடுக்கும்போது நான் என்னுடைய சித்த வைத்தியர்கள் எனக்குக் கற்றுத் தந்த அந்த வழிமுறைகளைத்தான்; தெளிவாக, உறுதியாக என்னால் கொடுக்க முடிந்தது. ஆகவே அந்த பயிற்சிகளோடு நான் இங்கே வெவ்வேறு நாடுகளுக்குச் செல்லவும் மட்டுமல்ல, பயிற்சி கொடுக்க மட்டுமல்ல நான் ஊதியம் பெறவும்கூட எனக்கு முடிந்தது.
கானா பிரபா: அதாவது நீங்கள் கற்றுக் கொடுத்ததை உள்வாங்கியவர்கள் மேடையேற்றங்கள் எதாவது செய்திருக்கின்றார்களா..? அல்லது உங்களது தலைமையிலோ அல்லது உங்களுடைய நெறியாள்கையிலோ அப்படியான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனரா..?
தாசீசியஸ்: நான் நினைக்கிறேன் தொட்டம் தொட்டமாக இங்கே பயிற்சிகளை பலரும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அதிலிருந்து ஓரளவிற்கு விலகிவிட்டேன் என்று கூறலாம். ஆனால் நான்கோ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விவேசய்க் கலையகத்திற்கு நான் போயிருந்த போது ஒரு பலஸ்தீனக் குழு ஒன்று வந்திருந்தது. அவர்கள் நாடகத்திற்கு முதல் தங்களுடைய சில விடயங்களை தொட்டம் தொட்டமாக போட்டு எப்படிப் பயிற்சி எடுப்பதென்று காட்டினார்கள். அப்பொழுது என்னுடைய பயிற்சிக்கு இங்கே வந்து கற்ற ஒரு பலஸ்தீனியன் ஒருவருடைய மாணவரும் அந்தக் நாடகக் குழுவில் இருந்தார். அவர் இது தமிழ்முறை என்று சொல்லி அங்க இருந்தவர்களுக்கு விளங்கப்படுத்தினார். நான் சந்தோசமாக கேட்டுவிட்டு எழும்பி வந்தேன். ஏனென்றால் என்னுடைய மாணவருடைய மாணவர் அங்கே வந்த இது தமிழ்முறை என்று நாடகங்களைப் போட்டுக் காட்டியபோது சந்தோஷமாக இருந்தது. எங்களுடைய ஆட்ட வடிவங்களையும் அவர் போட்டுக் காட்டியிருந்தார். ஆனால் பயிற்சிப் பட்டறைகள் பலபேர் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். பாலேந்திரா கூட நடாத்திக் கொண்டிருக்கிறார். நாடகம் தொடர்பாக எவர் எவரிடமிருந்து எது வந்தது என்பதை என்னால சொல்ல முடியாது. என்னுடைய நாடகப் பயிற்சியால்தான் என்றெல்லம் அப்பிடி என்னால் சொல்ல முடியாது. என்னிடம் இல்லாததை மற்றவர்கள் கற்றுத்தந்தார்கள் என்பதல்ல ஒவ்வொருத்தரும் தங்களிட்டை உள்ளதை மெருகூட்டினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் ஆர்வத்தோடை வந்தபடியால் அவர்களைக் கொஞ்சம் திருத்தி விட்டானான் என்றுதான் நினைக்கிறேன். அப்படித்தான் இங்கே பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இங்கே யார் நாங்கள் கர்தாக்களாக, பிரமாக்களாக உரிமை பாராட்டுறதுக்கு. இவை தொன்று தொட்டு வருபவை. இடையில நாங்கள் ஒரு சின்னப் பங்களிப்பைச் செய்து போட்டு போகிறோம். அப்பிடித்தான் நான் இந்த நாடகப் பயிற்சிகளைப் பார்க்கிறேன். அதனால் என்னால் உரிமை பாராட்ட முடியேல உரிமை பாராட்டக் கூடாது.
கானா பிரபா: தமிழ் நாடகத்துறை என்பது இன்றைக்கு வரக்கூடிய தொலைக்காட்சி நாடகங்களால் கொஞ்சம் ஆட்டம் கண்டிருப்பதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டிருக்கிறது. அதேவேளை நவீன நாடகம் என்பது நீங்கள் குறிப்பிட்டது போன்று தமிழ் பேசும் மக்கள் தவிர்ந்த மேலத்தேயவர்களாலும் போற்றக்கூடிய அளவிற்கு மற்றவர்களாலும் உள்வாங்கங்கூடிய அமைப்பிலே அந்த நவீன நாடகத்தினுடைய பாணி அல்லது அவற்றை வெளிப்படுத்தும் தன்மை அமைந்திருக்கின்றது. இல்லையோ..?
தாசீசியஸ்: ஓம் நவீன நாடகம் எனும் பொழுது நாங்கள் ஒன்றை மறக்கக்கூடாது. நவீனம் என்பது மெருகூட்டப்பட்டதே ஒழிய ஏதோ புதிதாக வந்தது என்பது அல்ல. எல்லாமே மெருகூட்டப்பட்ட வடிவங்கள்தான். பாரம்பரியத்தில் இருந்து வருபவை, அவை மெருகூட்டப்பட்டவை என்ற அர்த்தத்திலேதான் கொள்ளவேண்டும். அபந்த நாடகங்களை எடுத்துக் கொண்டாலும்கூட அதுவும் எங்களுடைய மூலப்பாரம்பரியத்தில் இருந்து திருப்பித் திருப்பி காட்டுவதாக அதாவது ஒரு நடனம் ஒன்று தொடங்கும் போது அந்த நடனத்தின் முதல் அசைவை இடையிலே நிறுத்தி அதை பிறீஸ் பண்ணி, அதன் பின்னர் அது தொடரும் பின்னர் அதனை பிறீஸ் பண்ணி அதாவது வந்து சாலிச் சப்பிளீன் நடைபோல நேரில்லாமல் டக் டக் டக் என்று எட்டி எட்டி வைச்சு நடக்கிறது. பிறகு கோர்த்து விட்டுப் பார்த்தால் முழு நடையாக இருக்கும். அப்படியான அபத்த வடிவங்கள் கூட பாரம்பரிய வடிவங்களில் இருந்துதான் வருகின்றது. நீங்கள் இரண்டு கேள்விகளைக் கேட்டீர்கள். தொலைக்காட்சி வருவதற்கு பின் எற்பட்ட பாதிப்பு, மற்றது நவீனத்துவம் தருகிற அந்த மெருகூட்டல். தொலைக்காட்சி வந்ததற்கு பிற்பாடு என்றால் முக்கிய காரணம் அது மட்டுமல்ல. நாங்கள் புலம்பெயர்ந்து அகதிகளாக வந்த எங்களுக்கு நேரமில்லை, மாதக்கணக்கிலை ஒரு நாடகத்தைப் பயிற்சி எடுத்து அதைச் செய்வதற்கு. உதாரணமாய் நாங்கள் இலங்கையில் இருந்த போது கோடை நாடகத்தை மேடையேற்ற ஆறுமாதப் பயிற்சி செய்தோம். ஆறுமாதப் பயிற்சிக்குப் பின்னர் தான் அந்த நாடகம் மேடையேறியது. மேடையேறும் அந்த நாடகத்தை நான் வெளியில் இருந்தபடியே எத்தனையாவது நிமிடம் என்ன நடக்குது என்று கூறக்கூடியதாக இருக்கும். நாடகம் தொடங்கின உடன நான் வெளியால் போய்விடுவேன். நாடகம் முடிவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்தான் நான் உள்ள வருவேன். எனக்கு தெரியும் நான் திரும்பி வருகிற இரண்டு நிமிடத்தில் நாடகம் முடியுமென்று. ஆனால் இங்கே அப்படியல்ல புலம்பெயர்ந்து வந்தனாங்கள் எங்களுக்குத் தேவைகள் நிறைய, இனி நாடக பயிற்சிக்கு இடவசதி கிடையாது, அதனால் நாடகங்களுக்கான முழுமையான பயிற்சிக்கு இங்க இடமில்லை தொலைக்காட்சியில் பிழைகளை மீளத்திருத்தி திருத்தி எடுத்துப் போடலாம். ஆனால் மேடையில செய்தால் செய்ததுதான், பேர் கெட்டால் கெட்டதுதான்.
நவீனத்துவம் இங்க என்ன மாதிரி பயன்படுகிறது என்று கேட்டீர்கள். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நாங்கள் புலம்பெயர்ந்து வாழுகிற மக்கள், எங்களுக்கு தொடர்ச்சியாக நாடகப் பயிற்சி எடுக்க முடியாது. ஆனபடியால் என்னுடைய நவீனத்துவ அறிவினை நாடகங்களுக்குப் பயன்படுத்தி அகதி மக்களுக்கிடையில் அதனை நன்றாகப் பிரயோகிக்க முடிந்தது. உதாரணமாக இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை நாங்கள் இங்கே மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்பும் போது அவற்றை நாங்கள் நாடகமாக்கினோம். பத்து நிமிட, பதினைந்து நிமிட, ஐந்து நிமிட, மூன்று நிமிட சின்னச் சின்ன துண்டுகளாக ஆனால் அதை நாடகத் தன்மைப்படுத்தி சம்பவங்களை விவரித்தோம். அதை நாங்கள் நாடகப் படுத்தும் போது ஒரே இடத்தில நாங்கள் ஒரு பதினைந்து, இருபது நிமிட துண்டுகளைக் கொண்டுபோய் மண்ணில் நடந்தவை அல்லது களத்தில் நடந்தவை என்ற தலைப்பில் அவர்களுக்கு நாடகங்களாகப் போடுவோம். அப்ப உடனடிச் செய்திகளைக் கூறுவதற்கும், மக்களுக்கு அங்க நிகழும் உண்மை நிகழ்வுகளைக் காட்டுவதற்கும் நவீனத்துவ முறையில நாங்கள் இந்த விடயங்களை நாடக மூலம் உடனடியாகச் சொல்லக் கூடியதாக இருந்தது. அதற்கு இந்த நவீனத்துவ நாடக முறைகள் நிறையப் பயன்பட்டன. அதாவது எங்களுடைய பயிற்சிகள் குறிப்பாக நவீனத்துவ பயிற்சிகளுக்கு வந்த எங்களது பிள்ளைகள் பதினொரு வயதில இருந்து இருபத்தியெட்டு வரை இருந்தார்கள். நாங்கள் பயிற்சிகளை எடுத்துவிட்டு இப்படியான விடயங்களை விவாதித்து விட்டு ஆளுக்காள நாங்கள் உடனடியாக பாத்திரங்களை பகிர்ந்து கொண்டு பாத்திரங்களையும் அந்தக் கதைகளையும் வைத்துக்கொண்டு பயிற்சிகளை நாங்கள் உடனடியாக நடத்துவம். ஓவ்வொரு நாளும் ஐந்து ஆறு விடயங்களை எடுத்துக் கொண்டு பயிற்சிகளை நடத்துவம். அன்று மாலையே நாங்கள் ஏதாவது நிகழ்ச்சிக்குச் செல்வதாக இருந்தால்; அங்க ஐந்து அல்லது ஆறு நாடகங்களை நாங்கள் போடுவம். எங்களுக்கு ஒரு மணித்தியாலம் ஒதுக்கினால் சில வேளைகளில் சின்னச் சின்ன நாடகங்களாக பத்து நாடகங்கள் போடுவோம். அல்லது ஆறு நாடகங்கள் போடுவோம். இப்படியாக ஒரு அகதி நிலைப்பட்ட மக்களுக்கு நாடகத்தன்மையை சுவை குன்றாத வகையில், மக்களுக்கு விடயங்களைத் தெரிவிக்கும் வகையில் எங்களால் நாடகங்களை நிகழ்த்த முடிந்தது. அப்பிடிப் பார்த்தால் மண்ணில் நிகழ்ந்தவை அல்லது களத்தில் நிகழ்ந்தவை என்று ஆறு ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருநூறு அல்லது முந்நூறு நாடகத் துண்டுகள் நாங்கள் போட்டிருப்போம். அவற்றுக்கெல்லாம் நாடகப் பயிற்சியிலும், நாடகக் கல்வியிலும் எங்களுக்கு இருந்த அந்தத் தன்னம்பிக்கைதான் காரணம். ஒரு பயிற்சி முறையால் அதன் பலத்தை அறிந்து அதைப் பிரயோகிக்கலாம் வெல்லலாம் என்ற தன்னம்பிக்கை எங்களுக்கு இருந்தது.
கானா பிரபா: இதேவேளை நவீன நாடகம் மற்றும் அவற்றினுடைய செயற்பாடுகள், நீங்கள் உள்வாங்கி அவற்றை வெளிப்படுத்திய விதம் போன்ற பல அம்சங்களைத் எமக்குத் தொட்டுக் காட்டியிருக்கின்றீர்கள். நாடகத்துறை தவிர்ந்து ஊடகத்துறையிலேயும் உங்களுடைய கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறீர்கள். அதைப் பற்றியும் சொல்லுங்களேன்.?
தாசீசியஸ்: ஊடகத்துறை என்னும்போது நான் திரும்பவும் மண்ணுக்குத்தான் போக வேண்டும். அங்கே இலங்கை வானொலியில் தமிழ்ப் பிரிவில்; நாடக மேடைப்பாடுகள் என்ற ஒன்றை கே.எம்.வாசகர் அறிமுகம் செய்தார். கூத்துப்பாடல்களை விளக்கி அவற்றை மேடையேற்றுவதற்கு எனக்கு இடமும் தந்தார். ஒரு நாலு ஐந்து ஆண்டுகள் நான் அதை தொடர்ச்சியாகச் செய்துகொண்டு வந்தேன். அதற்காக நான் போகாத கிராமங்கள் இல்லை என்றே கூறலாம். தமிழீழத்தில் வடக்கிலும் கிழக்கிலும் சுற்றியுள்ள பகுதிகளெல்லாம் சென்றேன். அதேபோல சிங்களப் பகுதிகளுக்கும் குறிப்பாக புத்தளம், சிலாபம் நீர்கொழும்பு இங்கெல்லாம் சென்றேன். ஏனெனில் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடக வடிவங்கள் அங்கும் இருந்தன. ஆகவே அந்தப் பகுதிகளுக்குக்கெல்லாம் நான் போயிருந்தேன். வடிவங்களைத் திரட்டினேன். பயன்படுத்தினேன். அப்பொழுது ஊடகம் எனக்கு தந்த அறிமுக உதவியால் நான் இங்கே லண்டன் வந்ததும் பி.பி.சியில் பணிபுரிய வாய்பளித்தது. அப்பொழுது தனியாக ஒரு வானொலியைத் தொடக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கவில்லை. நான் இலண்டன் வந்த பொழுது கிட்டு அவர்கள் இங்கிருந்துதான் தனது அனைத்துலகப் பணியை ஆரம்பித்தார். அப்ப அவரோட நட்புக் கிடைத்தது. நானும் அவரும் ஒரு விழாவில் சந்தித்தோம். அங்கே எங்களுடைய களரி குழுவினர் ஒரு பாடலை நாடக வடிவில் கொடுத்தார்கள். பாடல் எனும்போது நாங்கள் எப்பொழுதும் எங்களுடைய பாரம்பரிய பாடல் வடிவங்களுக்குத்தான் நான் போவது வழக்கம். அந்தப் பாடல் வடிவில் ஒரு பெரிய விடயத்தை அங்கே பாடியவர்கள் விளக்கினார்கள். அடுத்தநாள் முதல்முறையாக தமிழ்நாட்டில் இருந்து தமிழ் அகதிகளை கப்பலில் ஏற்றி திருப்பி அனுப்ப இருக்கிறார்கள். முதல்நாள் இந்த நிகழ்ச்சியில் திரும்பிப் போகப் போகிற அந்த அவல நிலையை, உயிருக்காக அங்க ஒடினதுகளை திருப்பி அனுப்புற நிலையை நாங்கள் மன்னார் பாடல்வடிவத்தில் எடுத்து வழங்கினோம். அந்த அரங்கில் மன்னார் மக்கள் தான் கூடுதலாக இருந்தனர். அங்க கூடியிருந்த மக்கள் அழுதார்கள். அரங்கம் அழுதது. கிட்டுக் கூட தேம்பியபடி இருந்தார். நான் எங்கள் பாடலுக்காகச் இதைச் சொல்லவில்லை. அந்தச் சூழல் அப்படி இருந்தது. அதாவது அடுத்தநாள் எங்கடை மக்கள் போகப் போகிறார்கள் என்பதைக் கூறுவதற்கு எங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பம் தானொழிய எங்களின் பாட்டுத்தான் அங்க வெட்டி விழுத்தினது என்றில்லை. அந்தச் சந்தர்ப்பத்திற்கு எங்கள் பாடல் பொருந்தியது அவளவுதான். அன்றிரவு நிகழ்ச்சி முடிந்ததன் பின்னர் நானும் கிட்டுவும் நீண்ட நேரம் அந்த இடத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். அவர் அந்தப் பாடலால் நிறையக் கவரப்பட்டிருந்தார் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் அவர் எங்களுக்கு கட்டாயாமாக ஒரு வானொலி ஒன்று வேணும் என்று சொன்னார். மக்களிடம் கொண்டு செல்வதற்கு நல்லதொரு ஊடகம் வேணும் என்றார். அந்த நேரம் எங்களிடம் வசதிகள் இருக்கவில்லை. பிறகு கிட்டுவும் மறைந்து போனார். அதற்குப் பிறகு இந்த இணையம் வந்து வசதிகள் எல்லாம் ஏற்பட்ட பிற்பாடுதான் தொண்ணூற்றியேழில் குறைந்த செலவில ஒரு வானொலியை தொடக்கலாம் என்று முடிவுக்கு வந்தேன். அப்பொழுது என்னுடைய சில நண்பர்களையும், ஞானரட்னசிங்கம் விக்கினராஜா ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு ஐ.பி.சி தமிழ் வானொலியைத் தொடக்கினோம். ஐரோப்பாவில் இலவசமாக அந்த வானொலி ஒலிபரப்பானது. அது இலங்கையையும் எட்டியது. இந்த வானொலி ஐரோப்பாவில் ஒரு தனித்துவத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்றுதான் கூறுவேன். பி.பி.சியை பொறுத்தமட்டிடல் சங்கரண்ணா, அவர் எனக்குத் தந்த பயிற்சி ஒரு ஊடகத்தில் பேசுவதற்கான பயிற்சி அது மிகச் சிறந்தது. இனி தமிழ் என்று எனக்கு நல்ல கற்பித்தலைத் தந்தது என்றால் என்னுடைய பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன் பேராசிரியர் செல்வநாயகம் பேராசிரியர் சதாசிவம் இவர்கள் எல்லாம் வருகிறார்கள். கவித்துவத் தமிழ் எனக்குத் தந்ததென்றால் முதலில் மகாகவி, முருகையன், சில்லையூர் செல்வராஐன். அதன் பின்னர் நாடகத் தமிழோடு எனக்கு நல்லறிவைத் தந்த மதிப்புக்குரிய கண்ணியவான் குழந்தை சண்முகலிங்கம்;. இனி நான் இந்தியாவில் இருந்த காலத்தில் அதாவது அலுவலக வேலையாக பி.பி.சி நிறுவனத்திற்காக நான் அங்க போயிருந்தேன். அப்பொழுது ஐந்து ஆறு மாத காலத்தில் என்னோடு கூடி எனக்கு நிறைய உதவி புரிந்த மங்கை, ரி.ஆர்.எஸ்.வி இவர்களெல்லாம் எனது மொழியைத் துலக்கினார்கள். எனது பேச்சு வழக்கை துலக்கினார்கள் எனது சிந்தனையை துலக்கினார்கள். அதன் பின்னர் நான் சிறிது காலம் ரி.ரி.என் தொலைக்காட்சியில்கூட அதன் பணிப்பாளராக இருந்தேன். தயாரிப்புத்துறைப் பணிப்பாளராக. அதன் பின்னர் இப்பொழுது தமிழ்க் குடில் என்னும் இணைய வானொலி. ஐ.பி.சி யால் வெளியே வந்த பின்னர் தமிழ்க் குடிலைத் தொடக்கினேன். ஆனால் அதனை தொடர்ந்து என்னால் நடாத்திக் கொண்டிருக்க முடியவில்லை ஏனென்றால் நான் சுவிற்சிலாந்துக்குப் அவர்களுடைய தயாரிப்பில் உதவுவதற்காக போகவேண்டியிருந்தது. அதன் பின்னர் உலகம் பூராவும் புலம்பெயர்ந்த தமிழ்ப் பிள்ளைகளுக்காக பள்ளிப்பாட நூல் ஒன்றைத் தயாரித்தார்கள். அந்த நூற்பணி ஆக்கத்திலும் நான் நான்கு ஆண்டுகள் கலந்து கொண்டேன். இப்படிப்பல. இயல்பீடத்தினர் இந்த விருதைத் தந்தபோது எதற்காக இந்த விருதைத் தருகிறார்கள். நாடகத்துக்காக தருகிறார்களா அல்லது ஊடகத்திற்காகவா என்று ஒரு கேள்வி எனக்குள் இருந்தது. அவர்கள் கூறினார்கள் நாடகத்திற்காகத்தான் என்று. ஆனால் இன்று நான் முழுக்க முழுக்க ஈடுபட்டிருப்பது ஊடகத்துறையில்.
கானா பிரபா: தொடர்ந்தும் தமிழ்க் குடில் வாயிலாக நீங்கள் எந்தெந்த முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றீர்கள்..?
தாசீசியஸ்: தமிழ்க் குடில் என்னுடைய கனவென்றே சொல்லலாம். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்குமோ தெரியாது. இந்த தமிழ்க் குடிலை தமிழ் ஊடகர்களின், தமிழ்க் கவிஞர்களின் குடிலாக நான் மாற்றியமைக்க விரும்புகிறேன். முதலில் இதை இருபத்திநான்கு நேர வானொலியாக ஆக்க முனைகிறேன். வேவ்வேறு நாடுகளில் உள்ள வானொலிகள். வேவ்வேறு நாடுகளில் உள்ள ஒலிபரப்பாளர்கள் அவர்கள் சிறிது சிறிது நேரமெடுத்து இதில் பங்கெடுத்துக்கொண்டால் இதை இருபத்திநான்கு நேர வானொலியாக மாற்றலாம். ஏனென்று சொன்னால் நீயூசிலாந்தில் இருந்து அமெரிக்கா வரையில் உள்ள நாடுகளில் எங்களுடைய மக்கள் வாழ்கிறார்கள். அங்கே கலைஞர்களும் வாழ்கிறார்கள், ஒலிபரப்பாளர்களும் வாழ்கிறார்கள். ஒலிபரப்பில் ஆர்வமுள்ளவர்களும் இருக்கிறார்கள். இப்பொழுது எல்லோருடைய வீடுகளிலும் கணனி இருக்கிறது. அதில் இருந்து தங்கள் குரலைக் கொடுப்பதற்கு ஒரு மைக் ஒன்றுதான். அதைத் தமிழ்க் குடிலோடு இணைத்துவிட்டால் இருபத்திநான்கு மணிநேரமும் அந்தச் செய்தி போய்க்கொண்டே இருக்கும். அதற்கான ஒரு திட்டத்தை நாங்கள் அழகாக தயாரித்து வைத்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாங்கள் வானொலியாளர்களோடு தொடர்பு கொண்டிருக்கிறோம். உங்களிடம்கூட நான் பகிரங்கமாக இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். நீங்கள் நிறைய எங்களுக்கு உதவி செய்யலாம். ஏனென்றால் இது எங்களுக்காக அல்ல இது தமிழ் மக்களுக்காக. இன்னுமொன்று அதில் செய்ய விரும்புகிறேன். பள்ளிப் பிள்ளைகள் தொடக்கம் பெரிய கலைஞர்களாக உள்ளவர்கள் தங்களுடைய ஆக்கங்களை, தங்களுடைய குரலில் பதிந்து வெளியிடுவதற்கான ஒரு தளமாக இந்த தமிழ்க் குடிலை நாங்கள் ஆக்கவேண்டும். ஒரு கவிஞனுடைய குரலிலே அவனுடைய கவிதை இங்கு பதியப்பட வேண்டும். அதற்கான திட்டங்களையும் இப்போது செய்துகொண்டிருக்கிறேன். பிரான்ஸில் இருந்து கலைஞர்களையும், பள்ளிப் பிள்ளைகளையும் திரட்டித் தருவதற்கு பரா என்ற நெல்லியடி பெருங் கலைஞர் முன் வந்திருக்கிறார். கனடாவிலும் ஒரு சிலர் முன் வந்திருக்கிறார்கள். ஒன்று இரண்டு வானொலிகள் ஓமென்று இருக்கிறார்கள் அவர்களும் இணைந்து கொண்டால் நாங்கள் தமிழ்க் கலைஞர்களை ஒன்று திரட்டும் ஒரு தளமாக அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தமிழ்க் குடிலுக்குள் ஒவ்வெருவருடைய குரலும் வரவேண்டும் அவர்களுடைய ஆக்கங்களும் வரவேண்டும். இனி குறிப்பாக வளரும் பிள்ளைகளுடைய ஆக்கங்கள் அவர்கள் கற்கும் மொழிகளில் ஜேர்மன் மொழியில், பிரஞ்சு மொழியில், ஆங்கிலத்தில் இவைகள் கூட வரவேண்டும். ஏனென்றால் அவர்களை நாங்கள் தூண்டிவிட்டால் அடுத்த கட்டமாக அவர்கள் தமிழிலும் தரத் தொடங்குவார்கள். இதற்கெல்லாம் உங்களைப் போன்றவர்கள் அனுபவசாலிகள், இந்தத் துறையில் ஈடுபட்டவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து ஒரு நல்ல தமிழ்க் குடிலாக அமைக்க உதவவேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதே போலத்தான் நான் ‘நாராய் நாராய்’ என்னும் நாடகப் பணயணத்தை களரி உறுப்பினர்களோடு பத்தாண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் மேற்கொண்டேன். அதன் நோக்கம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடப்பது போன்று உலகத் தமிழ் நாடகக் கூட்டமும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறவேண்டும். அப்படியான ஒரு திட்டத்தையும் அன்ரன் பொன் ராஜா வளர்த்து எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த திட்டத்தில்கூட கலைஞர்கள் பங்கெடுக்க வேண்டும். அங்கே நாங்கள் ஒன்றுகூட வேண்டும். அந்த ஒன்றுகூடல் பெரிய ஒரு சக்தியாக மாறவேண்டும். புலம்பெயர்ந்த இடங்களுக்குப் போகும் போது அடுத்த கட்டத்துக்கு எங்களை நகர்த்திச் செல்ல உதவியாக இருக்கும். அப்படித்தான் பல மொழிகளில் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது வசதிகள் பெருகிக்கொண்டிருக்கும் போது தமிழ்மொழியில் நாங்கள் ஏன் செய்யக்கூடாது என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை, என்னுடைய வேண்டுகோள் என்னுடைய கனவு. உங்களைப் போன்றவர்களுடைய உதவியோடு அது நிறைவேறும் என்பது என்னுடைய எண்ணம்.

இந்த நேர்காணலைக் காண உதவிய தமிழ்நாதம் இணையத்தளம் மற்றும் எழுத்துவடிவினைச் சீர்செய்து மீள் பதிப்பித்த அப்பால் தமிழ் இணையத்தளத்திற்கும் என் நன்றிகள்.

நீண்டதொரு நேர்காணலைத் தன் வேலைச் சுமைகளுக்கும் மத்தியில் தட்டச்சுப் பணியை அளித்த வசீகரன் சிவலிங்கத்திற்கும் என் மேலான நன்றிகள்.

5 thoughts on “தாசீசியஸ் பேசுகிறார்…!”

  1. வணக்கம் நண்பரே

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்து மண் சுமந்த மேனியர் நாடகத்தில் பணியாற்றிய கலைஞர்களைத் தேடித் தொடர்புகொண்டு அவர்களின் இந்த நாடக அனுபவத்தை ஒலிவடிவில் பதியும் முயற்சியோடு மண் சுமந்த மேனியர் நாடகத்தின் ஒலி வடிவையும் தரும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்திருக்கின்றது.

    இதுவரை என் கைவசம் அது கிடைக்காவிட்டாலும் நிச்சயம் கிடைக்கும் சாத்தியம் இருக்கின்றது. விரைவில் முழுமையான தகவல்களைத் தருகின்றேன்.

  2. good work . congrats. If you have any documents related to the School of Drama and Theatre (Naadaka arangak kallooti) please share with me as i am tttached to that institute and work with it.

  3. good work. continue. Do you have any documents related to the "school of drama and Theater (naada arangak kallooti) to share, as i m attached and work with it in jaffna.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *