எல்.வைத்யநாதன் – ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன்

முன்பொரு காலகட்டத்திலே இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு துறைசார் வல்லுனர்கள் பலர் தற்காலிகமான தங்கலில் வந்து தம் தொழில் ரீதியான கற்கையைப் புகட்டிவந்தனர். இவர்களில் ஆசிரியர்கள் (உ-ம்: சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற சீதா ராமசாஸ்திரிகள், ராமசாமி சர்மா) எழுத்தாளர்கள் ( உ-ம்: வீரகேசரி ஹரன்), விஞ்ஞானிகள் ( உ-ம்: டாக்டர் கோவூர்), சங்கீத விற்பன்னர்கள் (உ-ம்: மணி பாகவதர்) என்று பல்துறை விற்பன்னர்கள் தம் ஆளுமையைப் புகட்டும் களமாக அக்காலகட்டம் விளங்கியது. இவர்கள் வரிசையில் இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு வந்தார் பிரபல வயலின் வித்துவான் லஷ்மி நாராயணா, கூடவே சங்கீதக்கலைஞரான இவர் மனைவி சீதாலஷ்மி. லஷ்மி நாராயணா தன் விரிவுரைகளை யாழ்ப்பாணக்கல்லூரியில் நிகழ்த்திவந்தார்.

லஷ்மி நாராயணா, சீதாலஷ்மி என்ற சங்கீதத் தம்பதிகளுக்கு மகனாக வைத்யநாதன் 1942 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவருக்கு பிருகந் நாயகி, சுப்பு லஷ்மி, கான சரஸ்வதி, சுப்ரமணியம், ஷங்கர் என்று உடன்பிறந்தோர் இருந்தார்கள். தம் பெற்றோர் மட்டுமன்றி தன் உடன்பிறப்புக்களும் இசையை மேலோங்கக் கற்றுத் தேர்ச்சிபெற்ற சூழலில் தான் வைத்யநாதனின் தொட்டில் தொடங்கிய பிறப்பும் வளர்ப்பும் இருந்தது. ஈழத்தில் வைத்யநாதனின் சிறுபிராயத் தகவல்களைக் கேட்டறிய, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றுத் தற்போது சிட்னியில் வாழ்ந்துவரும் திருமதி ஞானம் இரத்தினம் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் தந்த தகவல்களின் படி, வைத்யநாதனின் சகோதரிகள் பிருகந் நாயகி, சுப்புலக்ஷ்மி ஆகியோர் இலங்கை வானொலியில் அன்றைய காலகட்டத்தில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும், வைத்ய நாதனின் இளமைப் படிப்பு அவர் வாழ்ந்த நுகேகொட என்ற இடத்தில் இருந்த நுகேகொட மகாவித்தியாயலத்தில் அமைந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும் திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் கல்வி ஒலிபரப்புப் பணிப்பாளராக இருந்த காலகட்டத்தில் அகில இலங்கை ரீதியான வெண்பாப் போட்டிகள் நடைபெற்றதாகவும், அதில் 10 வயதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்ட மாணவர் பிரிவில் 13 வயசான வைத்யநாதனும் பங்குபெற்றியதாகவும் குறிப்பிட்டார். இந்த வெண்பாப் போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்கள் பலர் இன்று நாடறிந்த இசைக்கலைஞர்களாகப் புகழ்பெற்றதையும் குறிப்பிடத்தவறவில்லை. அவர்களில் அமரர் எஸ்.கே.பரராஜ சிங்கம், திருமதி குலபூஷணி கல்யாணராமன் , லண்டனின் வாழும் திருமதி மாதினி சிறீஸ்கந்தராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

எல்.வைத்யநாதனின் இளமைப் பராயம் ஈழத்தில் கழிந்தது. தொடர்ந்து தந்தை வழியில் தனயனும் தன் இசையறிவை விருத்தி செய்துகொண்டார். இவருக்கு செஞ்சு லஷ்மி என்ற பெண்மணி வாழ்க்கைத்துணையாக வந்து சேர, எல்.வி.கணேஷன், எல்.வி.முத்துக்குமாரசுவாமி ஆகிய புதல்வர்களை பிறந்தனர். இசையுலகில் இவரின் சேவையைப் பாராட்டி 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிக் கெளரவித்தது.

எல்.வைத்திய நாதன், எல்.சுப்ரமணியம், எல்.ஷங்கர் சகோதரர்கள் music trio என்று போற்றிப் புகழும் அளவிற்கு வயலின் வாத்திய வாசிப்பில் மேதைகளாக இருந்தார்கள். பல பொது மேடைகளில் தனித்தும் சகோதரர்களோடும் தன் இசைப்பணியாற்றிவந்தார். பல இசைத்தொகுப்புப் பேழைகளையும் இவர் உருவாக்கி அளித்தார்.


சகோதரர் எல்.சுப்ரமணியம்


கடைசிச் சகோதரர் ஷங்கர்


சகோதரி சுப்புலஷ்மியின் மகள்கள் எம்.லதா, எம். நந்தினி

எல்.வைத்யநாதனின் இசைத் தொகுப்புக்கள் சில

இசைத்துறையில் தன் தந்தை லஷ்மி நாராயணாவைக் குருவாகப் பெற்ற இவர், சினிமாத்துறையில் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக இணைந்து கொண்டார். இதன்மூலம் தனித்த இசைரசிகர்களைக் கடந்து திரையிசை ரசிகர்களையும் எல்.வைத்யநாதனின் இசை சென்றடைந்தது. வாழ்த்துக்கள் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படத்தில் “அருள் வடிவே” என்ற அருமையான பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். ஒருகாலகட்டத்து இலங்கை வானொலி ரசிகர்களின் காதில் தேனாய் ஒலித்த பாடல் இது.
பாடலைக் கேட்க

ஏழாவது மனிதனைத் தொடர்ந்து எல்.வைத்யநாதனை அடையாளம் காட்டிய பல படங்கள் ஏதோ ஒருவிதத்தில் எதிர்பாராமல் தனித்துவமான படங்களாக அமைந்துவிட்டன. உதாரணமாக சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமலஹாசன் நாயகனாகத் தோன்றிய பேசும் படம் , வசனங்கள் இல்லாத படமாக இசைமட்டுமே ஒலிப்பொருளாக அமைந்திருந்தது. இயக்குனர் பாலுமகேந்திரா, இசையமைப்பாளர் இளையராஜா இல்லாமல் படங்களை இயக்கமாட்டார் என்பதற்கு விதிவிலக்காய் அமைந்த படங்களில் ஒன்று சலீல் செளத்திரி இசையில் வந்த “அழியாத கோலங்கள்”, மற்றையது எல்.வைத்யநாதன் இசையில் வந்த தேசியவிருதுப் படமான “சந்தியா ராகம்”. இந்திரா பார்த்தசாரதியில் உச்சிவெயில் நவீனம் ஜெயபாரதியால் “மறுபக்கம்” (தேசியவிருதுப் படம்) என்று படமாக்கப்பட்ட போது அதற்கும் இசை இவரே. யூகி சேதுவின் “கவிதை பாட நேரமில்லை” படமும சொல்லிவைக்கலாம்.

பிரபல இந்திய எழுத்தாளர் ஆர்.கே நாராயணன் புனைவுக்கிராமம் ஒன்றை வைத்து எழுதிய ” மால்குடி டேஸ்” என்ற புதினத்தைக் கன்னடத்தின் பிரபல இயக்குனர் சங்கர் நாக் இயக்கி , எல்.வைத்யநாதனின் இசையில் தூர்தர்ஷனில் தொடராக அரங்கேற்றினார்.
மணிரத்னத்தின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி இயக்கி மணிரத்னமே ஆலயம் நிறுவனம் பெயரில் தயாரித்த “தசரதன்” திரைப்படத்திற்கும் இவர் இசை வழங்கியிருந்தார்.

தமிழீழ எழுச்சிப்பாடல்களுக்கு இந்திய இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் போது தேவேந்திரன், போன்றோரோடு எ.வைத்ய நாதனின் இசையிலும் பாடல்கள் இருக்கின்றன. “பாசறைப்பாடல்கள்” போன்ற பாடற்தொகுப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.

கி.ராஜநாராயணனின் நாவல், அம்சன் குமாரின் இயக்கத்தில் “ஒருத்தி” என்ற திரைப்படமான போதும், தெலுங்கில் கே.என்.டி.சாஸ்திரியின் இயக்கத்தில் வெளிவந்து சிறந்த திரைப்படத்திற்கான தேசியவிருது பெற்ற “தில்லாடனம்” (thillaadanam)திரைப்படத்திற்கும், தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் தயாரிப்பில் ஹரிஹரன் இயக்கத்தில் வந்த “Current”, கன்னடப் படவுலகின் தலைசிறந்த இயக்குனர் கிர்ஷ் காசரவள்ளியின் இயக்கத்தில் வந்த “Ek Ghar” ,மற்றும் கிரிஷின் இயக்கத்தில் வந்து இந்திய சினிமாவின் அதி உயர் விருதான தங்கத்தாமரை விருது பெற்ற “Tabarana Kathe” போன்ற படங்களையும் எல்.வைத்யநாதனின் இசை தான் கலந்து வியாபித்தது.

எல்.வைத்யநாதனின் இசையில் வந்த சில படங்கள்

நான் முன்னர் குறிப்பிட்டது போன்று எல்.வைத்யநாதனுக்குக் கிடைத்த பெரும்பாலான படங்கள் தனிமுத்திரை கொடுத்த படங்கள் என்பதற்கு மேலே சொன்ன படங்கள் சில உதாரணங்கள். நல்ல இயக்குனர்கள் எந்த மொழியில் இருந்தாலும் இவரைத் தேடிப் போய்த் தம் மாசுகெடாத கலைப்படைப்புக்களில் நிறைவாகப் பயன்படுத்தியிருப்பது அவற்றின் தரத்திலும் கிடைத்த வெற்றியிலும் தெரிகின்றது. ஏனெனில் ஒரு விருதுப்படத்திற்கு அச்சாணியாக இசை பெரும்பங்கு வகிக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. இசைமூலம் சொல்லவந்த சேதியின் ஆழத்தைத் துலத்தமுடியும் என்பதோடு, நல்ல இசை என்பது குறிப்பிட்ட அந்தப் படைப்பைச் சேதாரமில்லாமலும் பார்த்துக்கொள்ளும். அப்படிப்பட்ட இசைப்படைப்புக்கள் தான் எல்.வைத்யநாதனின் சிறப்பை வெறும் எழுத்து நிரப்பல்களை விட அதிகப்படியாகப் பறைசாற்றுகின்றன.

தன் தந்தையின் மூலம் ஆரம்பமுகவரி அமையப்பெற்ற இவருக்கு இரண்டாவதும் நிரந்தரமுமான முகவரியை வயலின் வாத்தியம் தேடிக்கொடுத்தது.

அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தாலும் இசையே தன் ஜீவநாடியாகக் கொண்டு வாழ்ந்த எல்.வைத்யநாதன் தன் இசைப்பணியைப் திரைப்படைப்புக்களிலும், தனிப்பாடல் திரட்டுக்களிலும், இசைக் கலவைகளிலும் கலந்து வியாபித்து எம்மோடு வாழ்ந்துகொண்டு தான் இருப்பார்.

மால்குடி டேஸ் ஆரம்ப இசை

ஏழாவது மனிதன் திரைப்படத்திலிருந்து சில பாடல்கள்

உசாத்துணை:
எல்.வைத்யநாதன் சிறுபிராயத் தகவல்கள்: திருமதி ஞானம் இரத்தினம்
அருள் வடிவே பாடல்: தூள் தளம்
மால்குடி டேஸ் இசை: செந்தில்குமார் வலைப்பதிவு
புகைப்படம்: ஆனந்த விகடன்

33 thoughts on “எல்.வைத்யநாதன் – ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன்”

 1. நல்ல பதிவு. மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள அவரது மருமக்களில் ஒருவரான நந்தினி இப்போது லண்டனில்தான் வசிக்கிறார் – நானறிந்த வரையில். மாமன்களைப் போலவே மிகச் சிறந்த வயலின் விற்பன்னர் இவர்.

  வைசா

 2. அன்பின் கானாபிரபா அவர்களே, எப்படியிருக்கீங்க?. இந்த பதிவு மிகவும் அருமை, எல்.வைதியனாதன் சாரின் பல தகவல்கள் தெரிந்துகொண்டேன். ஏழாவது மனிதனில் பாலு அவர்கள் ஒரு பாடலைதான் பாடியிருக்கிறார். இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். பாடும் நிலா பாலுவில் ஒரு வருடத்திற்க்கு முன் பதிவு செய்தேன். பாலு சிரிக்கும் அந்த சிரிப்புக்கே பல உள்ளங்கள் அடிமையாகிவிட்டன. எத்தனை விதமான சிரிப்புகள் அடேங்கப்பா இப்ப கேட்டாலும் புல்லரிக்குது சார். எல்.வைத்தியநாதன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பாலு ரசிகர்கள் சார்பாக ப்ரார்த்திக்கொள்கிறேன். பதிவுக்கு மிக்க நன்றி.

 3. //வைசா said…
  நல்ல பதிவு. மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள அவரது மருமக்களில் ஒருவரான நந்தினி இப்போது லண்டனில்தான் வசிக்கிறார்//

  வணக்கம் வைசா

  எல்.வைத்தியநாதன் சனிக்கிழமை காலமான செய்தி இன்று காலை தான் அறிந்து மிகவும் துக்கமடைந்தேன்.
  அவரின் தந்தையாரின் வழியில் வழித்தோன்றல்கள் அனைவருமே வயலின் விற்பன்னர்களாக இருப்பது மிகச்சிறப்பு, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

 4. //கோவை ரவீ said…
  அன்பின் கானாபிரபா அவர்களே, எப்படியிருக்கீங்க?.

  ஏழாவது மனிதனில் பாலு அவர்கள் ஒரு பாடலைதான் பாடியிருக்கிறார். இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். பாடும் நிலா பாலுவில் ஒரு வருடத்திற்க்கு முன் பதிவு செய்தேன். பாலு சிரிக்கும் அந்த சிரிப்புக்கே பல உள்ளங்கள் அடிமையாகிவிட்டன. //

  வாங்க ரவி

  நான் நலம், அதுபோல் உங்கள் சுகமும் இருக்கவேண்டும். இசைப்பிரியர்கள் நாம் வலைப்பதிவுகளூடாகச் சந்திப்பது மட்டற்ற மகிழ்ச்சி. பாலுவின் சிரிப்பின் சிறப்பை நீங்கள் தான் சிறப்பாகச் சொல்லுவீர்கள். உங்களின் அந்தப் பதிவை வாசித்ததாக எனக்கும் ஞாபகம்.

  எல்.வைத்யநாதன் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

 5. பிரபா!
  சிறப்பான தொகுப்பு பாராட்டுக்கள்!!!
  87 ல் ;எல் .சுப்பிரமணியம் அவர்கள் வயலினிசையைப் பாரிசில் கேட்டு அவர் பக்தனானேன். அவருடன் அளவளாவியபோது அவர் குடும்பம் வட்டுக்கோட்டையில் வாழ்ந்தது; தந்தையார் பின் இலங்கைவானொலியில் கடமை புரிந்தது; 1958 கலம்பகத்தின் பின் சகலதையும் விட்டுச் சென்றதென
  சொன்னார்.நான் ஈழத்தவன் அதுவும் வட்டுக்கோட்டையையும்; யாழ் கல்லூரியைத் தெரிந்தவன் என்றதும் ஆசையுடன் அளவளாவினார்.
  அதன் பின் இக்குடும்ப இசைப்பின்ணனி பற்றித் தேடிப்படித்தேன்.இசையையும் தேடிக் கேட்டேன். ஒரு சில படமானாலும் வைத்தியனாதன் இசையமைத்த படங்கள்; இசையால் சிறந்த படங்கள்.
  அன்னார் ஆத்மா சாந்தியடையட்டும்.

 6. மஹாராஹபுரம் சந்தானம் – இராமநாதன் கல்லூரி
  வ.ரா. – வீரகேசரி

 7. நன்றி பிரபா,
  நிறையத் தகவல்கலை அறிந்து கோண்டேன். நண்பர் சீனிவாசன் இஅரண்டு தினங்களுக்கு முன்னர் எல்.வைத்தியநாதன் இறந்த செய்தியச் சொன்ன போது ஒரு பதிவிடலாம் என்று நினத்தேன்.நகுலன் இறந்து போனதல் அவர் குறித்த பதிவினை முத்லில் இடுகை செய்தேன்.
  ஒரு அற்புத கலைஞனை நன்றாக அறிமுகம் செய்துள்ளேர்கள்.

  அவர் பாடல்கள் அழியாது வாழும்.சீன வயசில் ரூபவாகினியில் மால்குடி நாட்கள் தொடரின் ஆரம்ப இசை நினைவிருக்கா?

 8. பிரபா!

  முதலில் சிரத்தையெடுத்து, ஒரு கலைஞனின் சாதனைகளை விரிவாகப் பதிவு செய்தமைக்குப் பாராட்டுக்களும், நன்றிகளும்.

  தமிழில் தங்கத்தாமரை விருது பெற்ற படமான, “மறுபக்கம்” திரைப்படத்திலிருந்துதான், எல்.வைத்தியநாதனை நான் ரசிக்கத் தொடங்கினேன். அந்தப்படத்தின் நாயகிக்கு நடனத்தில் பிரியம். படத்தில் பாடலே இல்லை. ஆனால் படம் முடிவடையும்போது, எத்தனையோ பாடல்களும், நடனங்களும், எம் மனத்திரையில் ஓடும். அத்தகைய ஒரு அற்புதமான இசைக்கலைஞர். இந்த மேதை எங்கள்மண்ணில் பிறந்தார், வாழ்ந்தார், என்பது எமக்கும் பெருமையே.

  அன்னாரின் ஆத்மா இனிதுறங்கட்டும்.

 9. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said…
  பிரபா!
  சிறப்பான தொகுப்பு பாராட்டுக்கள்!!!
  87 ல் ;எல் .சுப்பிரமணியம் அவர்கள் வயலினிசையைப் பாரிசில் கேட்டு அவர் பக்தனானேன்.//

  யோகன் அண்ணா

  முன்பொரு முறை எல்.சுப்ரமணியம் தன் பேட்டியில், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலம் பற்றிக் குறிப்பிட்டபோது இயல்பான ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் நம் எழுச்சிப்பாடல்களை எல்.வைத்யநாதன் இசையமைத்ததும் ஏழாவது மனிதன் பாடல்களும் அவர் பால் அதீத மரியாதைய ஏற்படுத்திவிட்டது, நேற்று அவர் இறந்த சேதியறிந்து மிக்க கவலையடைந்தேன் 65 வயசில் இறந்தவர் இன்னும் 20 வருஷங்களாவது இருந்திருக்கலாம்.
  உங்களின் மேலதிக தகவல்கள் பதிவை முழுமையாக்குகின்றன.

  எல்.சுப்ரமணியத்தின் வேறு புகைப்படங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன், வாசிக்கும் யாராவது இந்த மின்மடலுக்கு அனுப்பினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

  kanapraba@gmail.com

 10. //Anonymous said…
  மஹாராஹபுரம் சந்தானம் – இராமநாதன் கல்லூரி
  வ.ரா. – வீரகேசரி //

  உப குறிப்புக்களுக்கு நன்றி நண்பரே

  //சோமி said…
  அவர் பாடல்கள் அழியாது வாழும்.சீன வயசில் ரூபவாகினியில் மால்குடி நாட்கள் தொடரின் ஆரம்ப இசை நினைவிருக்கா? //

  வணக்கம் சோமி

  மால்குடி டேஸ் ஐ நான் ரூபவாஹினியில் பார்க்கவில்லை, கடந்த வருடம் பெங்களூர் சென்றபோது தற்செயலாக மால்குடி டேஸ் தளம் கண்டு இந்த டி.வி.டி ஐப் பெற்றேன். கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்.

 11. // மலைநாடான் said…
  படம் முடிவடையும்போது, எத்தனையோ பாடல்களும், நடனங்களும், எம் மனத்திரையில் ஓடும். அத்தகைய ஒரு அற்புதமான இசைக்கலைஞர். இந்த மேதை எங்கள்மண்ணில் பிறந்தார், வாழ்ந்தார், என்பது எமக்கும் பெருமையே.//

  வணக்கம் மலைநாடான்

  எத்தனையோ உயர்ந்த சினிமாக் கலைப்படைப்புகளுக்கு எல்.வைத்யநாதன் தன் இசையால் உயிர்கொடுத்திருக்கின்றார். அவரின் படைப்பை நன்கு ரசித்திருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. எங்கள் வீட்டுப் பிள்ளையாக அவரின் ஆரம்ப காலம் அமைந்தது எமக்கும் பெருமையே. கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

  //Haran said…
  நல்ல ஒரு பதிவு பிரபா அண்ணா… //
  வருகைக்கு நன்றிகள் ஹரன்

 12. நல்ல பதிவு பிரபா,.
  அவரது இசையைக் கேட்டு மன அமைதியில் திளைத்த நாட்கள் அநேகம்.

  அவர் பற்றிய இவ்வளவு தகவல்கள் இப்போதுதான் தெரியும்.
  மிகமிக நன்றி.

 13. பிரபா!
  எல்.சுப்பிரமணியத்தின் “பாரிஸ் கச்சேரி” விளம்பரம் என் சுவரை அலங்கரிக்கிறது. அதை படமாக்கி அனுப்புகிறேன். சரிவருகுதா எனப் பார்க்கவும்.(வார இறுதியேனில் வசதிப்படும்)

 14. வணக்கம் பிரபா அண்ணா.நல்ல ஒரு பதிவு. நிறையத் தகவல்கலை அறிந்து கோண்டேன். பாராட்டுக்களும், நன்றிகளும்.
  கிருஸ்ண

 15. //வல்லிசிம்ஹன் said…
  நல்ல பதிவு பிரபா,.
  அவரது இசையைக் கேட்டு மன அமைதியில் திளைத்த நாட்கள் அநேகம்.//

  வல்லிசிம்ஹன்

  வாசித்துக்கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

  //யோகன் பாரிஸ்(Johan-Paris) said…
  பிரபா!
  எல்.சுப்பிரமணியத்தின் “பாரிஸ் கச்சேரி” விளம்பரம் என் சுவரை அலங்கரிக்கிறது. அதை படமாக்கி அனுப்புகிறேன். சரிவருகுதா எனப் பார்க்கவும்.(வார இறுதியேனில் வசதிப்படும்) //

  வார இறுதி வரை பொறுக்கிறேன் அண்ணா, அனுப்புங்கள். மிக்க நன்றி

  //Anonymous said…
  வணக்கம் பிரபா அண்ணா.நல்ல ஒரு பதிவு. நிறையத் தகவல்கலை அறிந்து கோண்டேன். பாராட்டுக்களும், நன்றிகளும்.
  கிருஸ்ண //

  வருகைக்கு நன்றிகள் கிருஷ்ணா

 16. மறைந்த கலைஞனுக்கு அஞ்சலி!

  தகவல் தந்த பிரபாவுக்கு நன்றி!

 17. அஜீவன்,
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

  வெங்கடேஷ்

  இசையில் தீராக் காதல் கொண்ட உங்களைப் போன்றவர்களின் கருத்தை உளமார ஏற்றுக்கொள்கின்றேன். மிக்க நன்றிகள்.

 18. வணக்கம் சந்திரவதனா அக்கா

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

 19. அற்புதமான அஞ்சலிக் கட்டுரை, கானாபிரபா.

  சகோதரர்களுக்குச் சற்றும் குறைவில்லாத இசையறிவைக் கொண்டிருந்தாலும் சுப்ரமண்யத்தைப் போலவோ சங்கரைப் போலவோ உலகளாவிய புகழைப் பெறாமல் எல்.வி மறைந்துவிட்டது சோகம்.

  சேவை இரண்டில் பல காலைகளில் அருள்வடிவே பாடலைக் கேட்டு மெய்மறந்திருக்கிறேன். அதிகம் பேசப்படாத அவருடைய படமான லாட்டரி டிக்கெட்டில் “பூந்தேரே சின்னச் சின்னக் காலெடுத்து வா” என்று ஒரு எஸ்.பி.பியின் துள்ளல் பாடல் இருக்கும். உங்கள் பதிவு பழைய நினைவுகளுக்கு இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது.

 20. 7வது மனிதனில் இடம் பெற்ற பாரதி பாடல்களில், சுசீலா குரலில் அமைந்த ” செந்தமிழ் நாடெனும் போதிலே” நான் பல வருடங்களாக அலுக்காமல் கேட்டு வரும் பாடல்…ஏனென்று தெரியவில்லை.

  ஏசுதாஸ் பாட்டுகள் முக்கால்வாசி நன்றாக இருக்கும், குறையாக அவர் குரலில் தென்படும் நடுக்கத்தைத் தவிர்த்து. நடுக்கம் ஏதுமில்லாமல், ” போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே,, நாதவடிவானவளே நல்ல உயிரே-கண்ணம்மா” என இவரை பாட வைத்த எல்.வைத்யநாதனுக்கு அஞ்சலிகள்.

  நன்றி கானா.

 21. //Venkat said…
  உலகளாவிய புகழைப் பெறாமல் எல்.வி மறைந்துவிட்டது சோகம்.

  சேவை இரண்டில் பல காலைகளில் அருள்வடிவே பாடலைக் கேட்டு மெய்மறந்திருக்கிறேன்.
  //

  வணக்கம் வெங்கட்
  மற்றைய சகோதரர்களைப் போல உலகளாவிய ரீதியில் அதீத அங்கீகாரத்தை இவர் பெறாத குறித்து எனக்கும் அதிக மனத்தாங்கல். நம் தமிழ்ப்பத்திரிகைகள் கூட இறப்புச் செய்தியோடு நின்றுவிட்டன.

  அருள் வடிவே பாடல் இடையில் வரும் வயலின் இசை இழந்தோட பக்திப்பரவசத்திற்கு இன்றும் இட்டுச் செல்லும் அருமையான பாடல். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

 22. பிரபா, இவரைப் பற்றி அதிகம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. விபரமான தகவல்களுடன் கூடிய பதிவுக்கு நன்றிகள். அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  //தமிழக அரசு இவருக்குக் கலைமாணி விருது வழங்கிக் கெளரவித்தது//
  கலைமாமணி என்றிருக்க வேண்டுமா?

 23. //வாசன் said…
  7வது மனிதனில் இடம் பெற்ற பாரதி பாடல்களில், சுசீலா குரலில் அமைந்த ” செந்தமிழ் நாடெனும் போதிலே” நான் பல வருடங்களாக அலுக்காமல் கேட்டு வரும் பாடல்…ஏனென்று தெரியவில்லை.//

  வணக்கம் வாசன்

  ஏழாவது மனிதன் பாடல்கள் இன்றும் அதே புத்துணர்வோடு கேட்டு மகிழக்கூடிய தரத்தில் இருப்பதே அவற்றின் சிறப்பில்லையா? தங்களின் ரசனைப்பின்னூட்டலுக்கு நன்றி

  //I am in Melbourne. Wonderful article. I met L.Subramaniam during the Commonwealth games and he mentioned about Jaffna days.

  Keep in touch.

  Shasi//

  வணக்கம் சசி

  உங்களை எனக்குத் தெரியும் போல இருக்கின்றது, நீங்கள் நிச்சயம் இசைக்கலைஞர் என்று நினைக்கின்றேன். நான் முன்னர் குறிப்பிட்டது போன்று எல்.சுப்ரமணியம் தன் பேட்டிகளிலும் ஈழத்தில் வாழ்ந்த காலத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். உங்கள் மடலைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

 24. //Kanags said…
  பிரபா, இவரைப் பற்றி அதிகம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. விபரமான தகவல்களுடன் கூடிய பதிவுக்கு நன்றிகள்.//

  வணக்கம் சிறீ அண்ணா

  இவரது சகோதரர்களை விட அதிகம் வெளி உலகுக்கு அறியப்படாதவர் இவர். ஆனால் இவர் இசையில் பல பாடல்களைக் கேட்டிருக்கின்றோம். கலைமாமணி தான் சரி, தட்டச்சானுக்கும் என் விரலுக்கும் நடந்த மோதலில் “மா” தொலைந்துவிட்டது, சுட்டிக்காட்டியதற்கு நன்றி அண்ணா

 25. வணக்கம் கானா பிரபா!
  உங்களைப் போன்றவர்களால்தான் இன்னும் சில சுவடுகள் அழியாமல் மீண்டும் மீண்டும் தடம் பதித்துக் கொண்டு இருக்கின்றன. உங்கள் சீரிய பணி தொடர வேண்டும். எப்படி நண்பரே இப்படி எல்லாம் சிந்திக்கிறீர்கள். மிகவும் பயனுள்ள தகவல்கள். வாழ்துக்கள்.

 26. வணக்கம் நண்பரே

  இலக்கியத்திலும், கலையிலும் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்திவிட்ட நம் தமிழர்களின் புகழை ஏதோ எம்மால் இயன்றவகையில் கெளரவப்படுத்துவதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் கைமாறு. தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.

 27. அழகான பதிவு.

  மால்குடி டேஸில் பின்னணி இசை தனியா அழகா தெரியும்.
  ஏழாவது மனிதனும் பெரிய ஹிட்டாச்சே.

  அதிகப் படம் இவர் பண்ணாமப் போனது நமது துர்பாக்கியம்.

 28. வணக்கம் சர்வேசன்

  காலம் கடந்தாலும் பதிவை வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள். நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகச்சரியானவை.

 29. அன்பரே வணக்கம்.

  நீங்கள் குறிப்பிட்டுள்ள வாழ்த்துங்கள் திரைப்படத்தின் அருள் வடிவே, பரம் பொருள் வடிவே என்ற பாடலை எழுதியவர் என்னுடைய தந்தையார் தெள்ளூர் மு. தருமராசன். எல் வைத்தியநாதனை அறிமுகப்படுத்தியவர்.

  நீங்கள் குறிப்பிட்டுள்ள படி, ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் பல முறை இசைக்கப்பட்ட பாடல். அந்த பாடல் உங்களிடம் இருக்குமா? எனக்கு கிடைக்கும் பட்சத்தில், அதற்கு மறு உயிரூட்ட முயற்சிப்பேன்.

  என் மின்னஞ்சல் முகவரி… djr12345@gmail.com
  நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *