வரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது


ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா.
தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி யாழிலிருந்து வலைப்பதிவெழுதும் பகீ மூலம் அறிந்து நெஞ்சம் கனத்தது. என் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று வரதரின் இலக்கியப்பணியை அவர் குரலில் ஆவணப்படுத்துவது அது இனிமேலும் நிறைவேறாது வரதரின் மரணம் என்ற முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது.

கடந்த மார்ச், 2005 நான் யாழ்ப்பாணம் சென்றபோது சந்திக்க முனைந்த எழுத்தாளர்களில் ஒருவர் செங்கை ஆழியான், மற்றவர் வரதர்.

மார்ச் 17 ஆம் திகதி, 2005 காலை வேளை என்அப்பாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு யாழ் நகரம் போகும் போது ஆனந்தா அச்சகம் என்ற வரதரின் அச்சக நிலையம் சென்று அவரைச் சந்திக்கலாம் என்று முடிவெடுக்கின்றேன். சைக்கிளை கே.கே.எஸ் வீதியின் ஓரமாக நிறுத்தி விட்டு அச்சகம் உள்ளே நுளைகின்றேன்.


முகப்பில் இருந்த கதிரையில் இருந்து ஏதோ எழுதிக்கொண்டிருக்கின்றார் வரதர். ஒரு முறையும் சந்திக்கவில்லை என்றாலும் புகைப்படம் மூலம் ஏற்கனவே அறிமுகமாயிருந்த அவரை இனங்கண்டு,
“வணக்கம் ஐயா, நான் உங்களைப் பார்க்கவெண்டு வந்திருக்கிறன், உங்கட வரதர் வெளியீடுகள் மூலம் நிறைய வாசித்திருக்கிறன்” இது நான்.

வெள்ளைத் தும்பை மீசைக்குள்ளால் தன் வெண்பற்கள் எட்டிப்பார்க்க முறுவலித்தவாறே
“ஓ அப்பிடியே, சந்தோஷம்”, வெளியால இருந்து வந்திருக்கிறீங்களே?” இது அவர்.

“ஓம் ஐயா, நான் ஒஸ்ரேலியாவில இருக்கிறன், ஊருக்கு விடுமுறையில் வந்த போது உங்களையும் கட்டாயம் பார்க்கவேணும் என்டு வந்தனான்.” பவ்யமாக நான் சொல்லவும், எழுத்தை நேசிப்பவர்களை நானும் நேசிப்பேன் என்ற தோரணை கலந்த சிரிப்பு மீண்டும் அவரிடமிருந்து.

வரதர் வெளியீடுகளில் 95 இற்குப் பின் நான் தவறவிட்ட அவர் வெளியீடுகள், படைப்புக்களைப் பற்றி நிறையவே பேசினார். கண்ணாடிப்பெட்டிக்குள் அடுக்கியிருந்த நூல்களை எடுத்து உதறித் தட்டி ஒரு துணியால் தூசை வளித்தெடுத்து விட்டுத் தந்தார்.
“இந்தப் புத்தகங்கள் இப்போது போறது குறைவு” என்றும் அவர் சொன்னது இப்ப நினைவுக்கு வருகுது.
என்னால் வாங்கக்கூடிய அவரின் இலக்கியக் கையிருப்பை அப்படியே அள்ளிக்கொண்டேன்.

“நான் ஒஸ்ரேலியா போனதும் சனிக்கிழமை செய்யும் வானொலி நிகழ்ச்சியில் உங்களின் இலக்கியப் பணி குறித்து ஒரு நேர்காணல் செய்ய விருப்பம்” இது நான்.

“நல்ல சந்தோஷம், கட்டாயம் செய்வம்” என்றவாறே தன் தொலைபேசி இலக்கம் பொறித்த முகவரி அட்டையைத் தந்தார்.அவரைப்புகைப்படமும் எடுத்துக்கொள்கின்றேன்(மேலே இருக்கும் முதற்படம்)
ஒரு பழுத்த இலக்கியக்காரரைச் சந்தித்த நல்லனுபவத்தோடு சைக்கிளில் சவாரியை ஆரம்பித்தேன்.

வரதர் எனக்குத் தந்த தன் விலாச அட்டை

மீண்டும் நான் வாழும் நாடு வந்து வரதரோடு நேர்காணல் செய்ய முனையும் ஒவ்வொரு முனைப்பிலும் ஏதாவது தடங்கல் வந்துவிடும். நாட்டுப்பிரச்சனை கொழுந்து விட்டு எரியவும், முக்கிய பிரச்சனைகளுக்காக வானொலியில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. யாழுக்கான தொலைபேசி உரையாடலும் சீரற்று வரதர் ஐயா குறித்த என் வானொலி நிகழ்ச்சியும் கனவாயிற்று.

“இலங்கையில் உள்ள எழுத்தாளர்களுள், சமுதாயத் தொண்டர்களின் தொகைபெருகி வருகின்றது. வாழ்க்கையை உள்ளத்தால் உணர்ந்து, சிக்கல்களுக்கு மருந்து தேர்ந்து, தெளிந்து அவற்றைத் தம் கதைகளிற் படைத்துக் காட்டுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். திரு.தி.ச.வரதராசன் (வரதர்) இவ்வகையான எழுத்துத் தொண்டொன்று புரிந்து வருகின்றார்”- சொன்னவர் டாக்டர் மு.வரதராசன் (மு.வ)

தன் எழுத்தை மட்டுமே நேசித்து மற்றையவர்களில் படைப்பைப் புறங்கையால் ஒதுக்கும் இலக்கியக்காரர் மத்தியில் , தன் எழுத்துப்பணியுடன் மற்றையவர்களை எழுதத் தூண்டி வரதர் பிரசுரம் மூலம் அச்சுவாகனமேற்றும் வரதர் ஐயா உண்மையில் ஒரு ஆலமரம். அவரின் விழுதுகளாக நிலைபெற்றவை அவரின் வெளியீடுகள். வரதர் பிரசுரம் ஒன்றையாதல் வாசிக்காமல் விடுபவர் ஈழத்து இலக்கியத்தின் வாசிப்பனுபவத்தில் குறைவை விட்டுச் செல்பவர்.

“ஒரு ஆக்க இலக்கியம், எழுத்தாளனுடைய மனத்திலே ஒரு நல்ல கருத்து குடிபுக, அவன் அந்தக் கருத்தைச் சுவையான முறையிலே வெளிப்படுத்துக்கின்றான். வெளிப்படுத்தும் உருவம் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று யாரும் கட்டுப்பாடு செய்ய முடியாது. நல்ல ஆக்கமானால் அந்த ஆக்க இலக்கியம் விலை போகும். மக்களிடையே பேசப்படும். அதைப்பிறகு ஆய்வு செய்யும் இலக்கணக்காரர்கள் அந்த உருவத்துக்கு ஒரு பெயர் வைக்கட்டும்.” – வரதர்

திசை புதிது இதழ்-1 (2003) இல் வெளிவந்த வரதர் குறித்த ஆக்கம்
(எழுத்தாக்கம் கோபி)

மூத்த எழுத்தாளர் வரதர் ஈழத்தின் இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று ‘வரதர்’ என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர். ‘வரதர்’ என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார்.

சிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச – புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம்.

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் போல வரதர் எழுதத் தொடங்கியதும் ஈழகேசரி (1930-58)யிற் தான். ஈழகேசரி கல்வி அனோபந்தத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்த ‘கல்யாணியின் காதல்’ வரதரின் முதற் சிறுகதை.

தொடர்ச்சியாக எழுதி வந்த வரதர் அவரையொத்த எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களை இணைத்து ஓர் எழுத்தாளர் சங்கம் உருவாக்கும் ஆவல் வரதருள் எழுந்தது; செயல்வடிவம் பெற்றது. 1943. 06. 13 இல் ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்’ உருவானது. இந்த வகையில் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கத்திற்கு அடித்தளமிட்ட பெருமை பெறுகிறார் வரதர். இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய ‘ஓர் இரவினிலே’ எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது. தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் முதலில் ‘மறுமலர்ச்சி’ எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டது.

1946 பங்குனியில் மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சிடப்பட்டது. வரதர், கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சரசர்மா, க.ஆ.சரவணமுத்து ஆகிய ஐவருமே முதல் போட்டு மறுமலர்ச்சியைத் தொடங்கினர். மறுமலர்ச்சி யாருக்குச் சொந்தம் என்பது பிரச்சினையாகி நீதிமன்றம் வரை சென்று மீண்டே மறுமலர்ச்சி வெளியானது. மறுமலர்ச்சி வெளியீட்டாளராக நடராசன் இருந்தார். ஆசிரியர்களாக வரதரும் அ.செ.முருகானந்தனும் இருந்தனர். 18 ஆவது இதழிலிருந்து அ.செ.முருகானந்தனுக்குப் பதிலாக பஞ்சாட்சரசர்மா பணியாற்றினார். 1946 பங்குனி முதல் 1948 ஐப்பசி வரை ‘மறுமலர்ச்சி’ 24 இதழ்கள் வெளியாகின.

ஈழத்துச் சிறுகதையின் தனித்துவத்திற்கும் 50களில் ஏற்பட்ட ஈழத்து இலக்கிய எழுச்சிக்கும் அடித்தளமிட்டது மறுமலர்ச்சி தான் என்றால் அது மிகையாகாது. 1952 இல் வரதர் ஆனந்தன் எனும் சஞ்சிகையை ஆரம்பித்தார். இதுவும் ஓர் இலக்கிய இதழே. ஆரம்பத்தில் யாழ்ப்பாணனும் பின்னர் புதுமைலோலனும் ஆனந்தனின் இணையாசிரியராக இருந்தனர். 1955 இல் வரதர் மஹாகவியை இணையாசிரியராகக் கொண்ட ‘தேன் மொழி’யை வெளியிட்டார். ஈழத்தில் கவிதைகளுக்கென வெளிவந்த முதற் சஞ்சிகை தேன்மொழி. தேன்மொழி ஆறு இதழ்களே வெளியாகின.

இவை தவிர ‘வெள்ளி’ எனும் சஞ்சிகையும் ‘புதினம்’ எனும் வார இதழும் கூட வரதரால் வெளியிடப்பட்டன. பொருளாதாரக் காரணங்களால் இவையும் நின்று போயின. வரதரின் பிரசுர முயற்சிகளும் முக்கியமானவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கைலாசபதி, மஹாகவி, முருகையன், பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், காரை சுந்தரம்பிள்ளை, சோமகாந்தன், சாந்தன் முதலான பலரது நால்கள் ‘வரதர் வெளியீடு’ ஆக வெளிவந்தன.

‘வரதரின் பல குறிப்பு’ அவரது இன்னொரு முயற்சி. தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியாகின. வரதரின் இதழியற் பணியில் இன்னொரு மைல்கல் அறிவுக் களஞ்சியம். இலாப நோக்கின்றி குறைந்த விலையில் மாணவர்க்கான அறிவுத் தகவல்களைத் தாங்கி அறிவுக் களஞ்சியம் வெளியானது. செங்கை ஆழியான் இணையாசிரியராக இருந்தார். 1995 இலம் பெயர்வு வரை யாழ்ப்பாணத்தில் 3000 பிரதிகள் வரை விற்பனையாகி அமோக வரவேற்புப் பெற்றது அறிவுக் களஞ்சியம். வரதர் ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர். ஈழத்தின் முதலாவதும் முக்கியமானதுமான மறுமலர்ச்சிச் சங்கத்திற்கு கால்கோள் இட்டவர். இதழியலில் சிறந்து விளங்கியவர். முதற் கவிதை இதழ் வெளியிட்டவர். இவை தவிர ஈழத்தின் முக்கிய பதிப்பாளர். வரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு ‘சாஹித்திய இரத்தினம்’ எனும் பட்டத்தை அளித்திருக்கிறது.

வரதர் ஐயா! போய் வாருங்கள்,
மீண்டும் நீங்கள் என் தாய்நாட்டில் பிறக்கவேண்டும்
என்ற என் சுயநல அவாவுடன்


கண்ணீர் அஞ்சலிகளோடு பிரியாவிடை கொடுக்கின்றேன் உங்களுக்கு.

35 thoughts on “வரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது”

 1. வணக்கம் கானாண்ணெ,

  அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் !!!

 2. கா.பி,
  தகவலுக்கு நன்றிகள். அத்துடன் அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது சுற்றாத்தார்க்கும் , சக ஈழத்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  நான் இவரைப் பற்றிக் கடந்த வாரம் வரை அறிந்திருக்கவில்லை. பகீ அவர்களின் பதிவில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். அண்மையில் ஏதோ புதிய முயற்சி ஒன்றில் இவர் இறங்கியிருப்பதாகப் பகீ சொல்லியிருந்தார்கள். ம்ம், மிகவும் வருத்தமான செய்தி.

 3. பிரபா, வரதர் அவர்களின் மறைவுச் செய்தி மேமன்கவி அவர்களின் மடல் மூலம் இப்போதுதான் அறிந்தேன். போன ஞாயிறன்று உங்களைச் சந்தித்தபோது வரதர் அவர்களின் நேர்காணலை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். அதற்குள் காலன் அவரைக் கொண்டு போய்விட்டான். அவரது புகைப்படங்களையும் நூல்கள் விபரங்களையும் போடுங்கள்.

  அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

 4. //வெற்றி said…
  அண்மையில் ஏதோ புதிய முயற்சி ஒன்றில் இவர் இறங்கியிருப்பதாகப் பகீ சொல்லியிருந்தார்கள்.//

  //அறிவுக்களஞ்சிய நூல்வரிசை என்ற பெயரில் சிறிய புத்தகங்களை பதிப்பிக்க தொடங்கியுள்ளார். நான்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிட்டாலும் தற்போதய சூழ்நிலைகாரணமாக வெளிவிடப்படவில்லை. இது சம்பந்தமாக சிறிது கவலையாகவே உள்ளார். இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விடயம் பற்றி ஓரளவு விரிவாக எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணதேசம், பூதத்தம்பி, கிரண்பேடி, மனிதர்களின் தேவைகள் என்ற தலைப்புகளில் முதல் நான்கு புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாணதேசம் மற்றும் பூதத்தம்பி இரண்டும் கலாநிதி க. குணராசாவினாலும் மனிதர்களின் தேவைகள் சாமிஜியினாலும் கிரண்பேடி கிருஸ்ணனாலும் எழுதப்பட்டுள்ளன. இன்றைய சிறுவர்களிற்கு பொதுஅறிவை வளர்க்கும் நோக்கில் எழுந்துள்ள இந்த அறிவுக்களஞ்சிய நூல்வரிசை வெளியிடப்பட்டு தொடர்ந்து வரவேண்டும் என்பதில் வரதர் ஐயா மிக்க ஆவலாயுள்ளார். //

  இதைத்தான் பகீ தன் வலைப்பதிவில் சொல்லிருந்தார். நம் கொடுப்பினை அவ்வளவு தான்:-(

 5. பிரபா!
  இது என்ன சோதனைக்காலம் தொடர்ந்து முக்கியமானவர்களையெல்லாம் இழந்து வருகிறோமே..

  எங்கள் அஞ்சலிகள்.

 6. பிரபா,
  வழமைக்கு மாறாக நீண்டநேரம் கணினியில் இல்லாமல் உருப்படியாக ஒருவேலை பார்த்துவிட்டு இப்போதுதான் வந்து குந்தினேன். வரதர் ஐயாவின் மறைவுச்செய்தி வந்திருக்கிறது.
  நாங்களெல்லாம் ‘அறிவுக்களஞ்சியம்’ வாசித்து வளர்ந்த தலைமுறை.
  ஒரு தினசரிப் பத்திரிகையே வெளியிட முடியாத காலப்பகுதிகளில் மாட்டுத்தாள், அப்பியாசக் கொப்பி ஒற்றைகள் போன்றவற்றைக் கொண்டுகூட அறிவுக்களஞ்சியம் வெளிவந்தது.

  இந்த மாதத்தில் மட்டுமே அரசியல், இலக்கியம் என்று ஈழத்தவருக்கு எத்தனை பெரிய இழப்புக்கள்?

 7. வரதர்! ஈழ இலக்கிய உலகில் பரீட்சயமான பெயர்.நிறைகுடம் தளம்பாது என்பதற்கு உதாரணம்.ஓசைப்படாமல் சாதனை செய்து மறைந்துள்ளார்.
  அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
  யோகன் பாரிஸ்

 8. //Kanags said…
  போன ஞாயிறன்று உங்களைச் சந்தித்தபோது வரதர் அவர்களின் நேர்காணலை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். அதற்குள் காலன் அவரைக் கொண்டு போய்விட்டான். அவரது புகைப்படங்களையும் நூல்கள் விபரங்களையும் போடுங்கள்.//

  சிறீ அண்ணா

  இதோ படங்களை இணைத்து விட்டேன். அவரின் நூல்களை ஒவ்வொன்றாக அவ்வப்போது பதிவில் அறிமுகம் செய்கின்றேன். அவருடன் பேசிய போது சொன்ன வாக்குறுதி முடியாமற் போனது குறித்து என் மனது கனக்கின்றது.

 9. //மலைநாடான் said…
  பிரபா!
  இது என்ன சோதனைக்காலம் தொடர்ந்து முக்கியமானவர்களையெல்லாம் இழந்து வருகிறோமே..//

  காலன் கூட நமக்கு ஓரவஞ்சனை செய்கின்றான்.

 10. இது என்ன காலமப்பா ஒரு தலைமுறை ஓய்வெடுத்துக் கொள்ளும் காலமோ..?!

  நான் சந்தித்து பேசியிராத சிலரில் வரதர் ஒருவர்.ஆனால் அவரின் அறிவுகளஞ்சியத்தில அறிவு பெற்ற என் நண்பர்கள் நிறயச் சொல்வார்கள்.

  வளரும் தலைமுறைகான அவரின் பணியென்பது யாழ்ப்பாணத்தில் நடந்த ஆரோக்கியமன செயற்பாடுகளுக்குள் ஒன்று.

 11. //வசந்தன்(Vasanthan) said…
  நாங்களெல்லாம் ‘அறிவுக்களஞ்சியம்’ வாசித்து வளர்ந்த தலைமுறை.
  ஒரு தினசரிப் பத்திரிகையே வெளியிட முடியாத காலப்பகுதிகளில் மாட்டுத்தாள், அப்பியாசக் கொப்பி ஒற்றைகள் போன்றவற்றைக் கொண்டுகூட அறிவுக்களஞ்சியம் வெளிவந்தது.//

  மாட்டுத்தாள் பேப்பர், அப்பியாசக்கொப்பிக்காலத்தில் நானும் இருந்தவன். வரதரிடம் 2005 இல் அவரது நூல்களை வாங்கும் போது கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்து எடுத்து ஒரு துணியால் தூசை வளித்தெடுத்து விட்டுத் தந்தார். இந்தப் புத்தகங்கள் இப்போது போறது குறைவு என்றும் அவர் சொன்னது இப்ப நினைவுக்கு வருகுது. மூலப்பதிவிலும் இணைத்துள்ளேன்.

 12. /Johan-Paris said…
  வரதர்! ஈழ இலக்கிய உலகில் பரீட்சயமான பெயர்.நிறைகுடம் தளம்பாது என்பதற்கு உதாரணம்.//

  சரியாகச் சொன்னீர்கள் யோகன் அண்ணா, அவரது இலக்கிய முயற்சிகளுக்குச் சான்று பகரும் வெளியீடுகளை எந்தவொரு இக்கட்டான காலத்திலும் தொடர்ந்த முனைப்போடு பல்கிப் பெருக வெளியிட்டதும் தன் வாழ்நாளின் இறுதி மூச்சுவரை அதே சிந்தையில் அந்த நிறைகுடம் இருந்தது.

 13. இந்திய சஞ்சிகைகள் தடை செய்யப்பட்டிருந்த 90 களில் அறிவுக்களஞ்சியம், நங்கூரம் இரண்டும் தான் யாழ் மக்களின் அறிவு தாகத்தை பூர்த்தி செய்தன, அறிவுக்களஞ்சியத்தில் சில பழமொழிகளுக்கான உண்மையான அர்த்தங்களையும் வெளியிட்டுந்தார். அதுமட்டுமல்லாமல் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் முகமாக ஆக்கங்களை அனுப்புவோருக்கு சன்மானமும் அளித்திருந்தார்…..
  இது அவரது எழுத்துக்களால் பாதிக்கப்பட்ட தலைமுறையில் பிறந்தவன் என்ற முறையில் நிச்சயமாஇ இது ஒரு இழப்புதான்

 14. “நாங்களெல்லாம் ‘அறிவுக்களஞ்சியம்’ வாசித்து வளர்ந்த தலைமுறை”
  அறிவுக்களஞ்சியத்தின் முதலிதழிலிருந்து கடைசி வரை வாசித்த எழுதிய பலரில் நனும் ஒருவன். (சயந்தனும் என்று நினைக்கிறேன்) நீங்கள் தந்துள்ள திசைபுதிது கட்டுரையையும் நானே எழுதினேன். அந்தத் திசைபுதிது இதழுக்காக அவரிடம் வாங்கிய கட்டுரையின் எழுத்துவடிவத்தை ஒருமுறை எடுத்துப் பார்த்தேன். இறுதியாக யாழ் சென்ற போது நூலகத்தில் வெளியிட நூல்கள் பெற அவரைச் சந்தித்தேன். மீண்டும் சந்திக்கக் கிடைக்காது என்று அப்போது நினைத்திருக்கவில்லை…. விக்கிபீடியாவில் அவரைப் பற்றிய தகவல்களை விரிவாகத் தந்துள்ளோம். இப்பதிவில் வெளியிடப்பட்டுள்ள வரதரின் படத்தை எடுத்தவர் அதனைக் கட்டற்ற விதத்தில் பகிர அனுமதித்தால் விக்கிபீடியாக் கட்டுரையில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். நன்றி. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%9A._%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

  -கோபி

 15. ”நாங்களெல்லாம் ‘அறிவுக்களஞ்சியம்’ வாசித்து வளர்ந்த தலைமுறை”
  கானா பிரபா, வரதர் பற்றிய பல தகவல்களுடன் கட்டுரை ஒன்று விக்கிபீடியாவில் வளர்த்தெடுக்கப்படுகிறது. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%9A._%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D#.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.A4.E0.AE.B0.E0.AF.8D_.E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.80.E0.AE.9F.E0.AF.81
  இப்பதிவிலுள்ள வரதரது படத்தை எடுத்தவர் அதனைக் கட்டற்ற விதத்தில் பகிர முன்வந்தால் விக்கிபீடியாவில் பயன்படுத்தலாம். மேலும் குறித்த திசைபுதிதுக் கட்டுரையை எழுதியவன் நான். என் வாழ்க்கைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியவர் வரதர்… கடைசியாக நூலகத்தில் அவரது நூல்ளக்ளை வெளியிடுவதற்காக சென்று சந்தித்தேன். அதுவே கடைசிச் சந்திப்பாக இருக்கும் என்று நினைத்திருக்கவில்லை…

 16. கானாபிரபா, வரதரின் கயமை மயக்கம் சிறுகதைத் தொகுப்பை நூலகம் திட்டத்தில் வெளியிட நீங்களும் இணைந்து பணியாற்றலாமே. அதுபற்றி பகீயிடமும் கேட்டிருந்தேன். வரதரது சிறுகதை பட்டறிவுக் குறிப்புக்கள் சிறிய நூலாதலால் அதனைத் தனி ஒருவரால் தட்டெழுத முடியும். அது என்னிடமில்லை; பகீ முன்வரக்கூடும். கயமை மயக்கத்தைச் சிலர் சேர்ந்து விரைவில் முடிக்க முயற்சிக்கலாம். நீங்கள் நூலகம் குழுவில் உறுப்பினரெனின் நூலகத்துக்கு மடலெழுதுங்கள். கயமை மயக்கத்தை scan செய்து நூலகத்தில் ஏற்கனவே தந்துள்ளேன். உங்களிடம் அது இல்லையெனின் பதிவிறக்கித் தட்டெழுதப் பயன்படுத்தலாம். கடந்தவாரம் தெளிவத்தை ஜோசப் நூலகத்தில் வெளியிடவென வரதரது மலரும் நினைவுகளைத் தந்தார். விரைவில் அந்நூலையும் scan செய்து வெளியிட முயற்சிக்கிறேன். அவருக்கு அஞ்சலி செலுத்த வேறுவழி தெரியவில்லை….
  –கோபி–

 17. //கோபி said…
  நீங்கள் தந்துள்ள திசைபுதிது கட்டுரையையும் நானே எழுதினேன். அந்தத் திசைபுதிது இதழுக்காக அவரிடம் வாங்கிய கட்டுரையின் எழுத்துவடிவத்தை ஒருமுறை எடுத்துப் பார்த்தேன். விக்கிபீடியாவில் அவரைப் பற்றிய தகவல்களை விரிவாகத் தந்துள்ளோம். இப்பதிவில் வெளியிடப்பட்டுள்ள வரதரின் படத்தை எடுத்தவர் அதனைக் கட்டற்ற விதத்தில் பகிர அனுமதித்தால் விக்கிபீடியாக் கட்டுரையில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். நன்றி//

  வணக்கம் கோபி,

  என் பதிவில் குறிப்பிட்டது போன்று வரதர் ஐயாவைப் படமெடுத்தவன் நான் என்ற வகையில் விக்கிபீடியாவில் நீங்கள் அவர் படத்தை பயன்படுத்த அனுமதி கொடுக்கின்றேன். உங்கள் கட்டுரை செறிவாகவும் வரதர் ஐயா பற்றிய முழுமையான பார்வையாகவும் இருந்தது, நன்றிகள்.

 18. //அறிவுக்களஞ்சியத்தின் முதலிதழிலிருந்து கடைசி வரை வாசித்த எழுதிய பலரில் நனும் ஒருவன். (சயந்தனும் என்று நினைக்கிறேன்) //

  ஆம் கோபி.. அறிவுக்களஞ்சியத்ததின் இரண்டாவது இதழிலிருந்து அது என்னோடு பரிட்சையமானது. (அது ஒரு பச்சை நிற அட்டையோடு வந்தது.)

  ஒரு முறை ஆனந்தா அச்சகத்துக்கு நேரே சென்று ஒரு நகைச்சுவைத் துணுக்கினை வரதர் ஐயாவிடம் கொடுத்திருக்கிறேன். அது அவர் வெளியிட்ட புதினம் இதழுக்கானது.

  வசந்தன் சொன்னது போல நாம் அறிவுக் களஞ்சியம் வாசித்து வளர்ந்த தலைமுறை.

  எனது பெயரை முதலில் அச்சில் பார்க்கும் வாய்ப்பினை அறீவுக் களஞ்சியம் தான் அளித்தது.

  புன்னாலை என்ற பெயரை பொன்னாலை என மாற்றியவர் வரதர் ஐயா என அறிந்தேன். அது பற்றி யாருக்கு ஏதேனும் தெரியுமா

 19. //Anonymous said…
  ‘வரதர் அகராதி’யும் வெளியிட்டிருந்தார்

  December 21, 2006 9:57 PM //

  ஓமோம் பார்த்திருக்கின்றேன், தமிழ் சிங்கள அகராதியும் வந்ததாக நினைவு

 20. மேலே நண்பர்கள் பலர் குறிப்பிட்டமாதிரி, ‘அறிவுக்களஞ்சியம்’ வாசித்து வந்த தலைமுறையில் ஒருவன் தான் நான். யுத்தத்தின் நெடுக்கடிக்குள் எம்மை வாசிப்பின் பக்கம் ஆர்வத்தை ஏற்படுத்தச் செய்தது அறிவுக்களஞ்சியமும் நங்கூரமும் தான். ஈழத்து மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களின் கடைசிச் சுவடும் மறைந்துவிட்டது :-(.

 21. //சோமி said…
  வளரும் தலைமுறைகான அவரின் பணியென்பது யாழ்ப்பாணத்தில் நடந்த ஆரோக்கியமன செயற்பாடுகளுக்குள் ஒன்று. //

  வணக்கம் சோமி

  வரதரின் நீண்ட எழுத்துலக வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்து இளந்தலைமுறையினருக்கும் அவர் படைப்புக்களும் வெளியீடுகளும் தீனி போட்டிருக்கின்றன.

 22. //அருண்மொழி said…
  இந்திய சஞ்சிகைகள் தடை செய்யப்பட்டிருந்த 90 களில் அறிவுக்களஞ்சியம், நங்கூரம் இரண்டும் தான் யாழ் மக்களின் அறிவு தாகத்தை பூர்த்தி செய்தன//

  முற்றிலும் உண்மை அருண்மொழி

  அறிவுக்களஞ்சியம் ஒரு தொகுப்பாக வரவேண்டியது காலத்தின் தேவை.

 23. //சயந்தன் said…

  ஒரு முறை ஆனந்தா அச்சகத்துக்கு நேரே சென்று ஒரு நகைச்சுவைத் துணுக்கினை வரதர் ஐயாவிடம் கொடுத்திருக்கிறேன். அது அவர் வெளியிட்ட புதினம் இதழுக்கானது. //

  வசந்தன் சொன்னது போல நாம் அறிவுக் களஞ்சியம் வாசித்து வளர்ந்த தலைமுறை.

  //புன்னாலை என்ற பெயரை பொன்னாலை என மாற்றியவர் வரதர் ஐயா என அறிந்தேன். அது பற்றி யாருக்கு ஏதேனும் தெரியுமா?//

  வணக்கம் சயந்தன்

  14 வயதிலேயே அறிவுக்களஞ்சியத்தில் நீங்கள் எழுதியதாகவும், வரதருக்கு ஒரு காட்டமான கடிதத்தை அவ்வயதில் எழுதியதையும் முன் சொல்லியிருக்கிறீர்கள்.

  புன்னாலையை வரதர் பொன்னாலை ஆக்கியதை தன் மலரும் நினைவுகள் நூலின் 32 ஆம் பக்கத்தில் இப்படிச் சொல்லுகின்றார்.

  “நான் சைக்கிளில் யாழ்நகர் போகிறபோது ஒவ்வொரு சந்தியிலும் நிற்கும் மரங்களில் புன்னாலை
  இத்தனை மைல் என்று எழுதியிருப்பதைப் பார்ப்பேன், Punnalai என்று ஆக்கில எழுத்துக்களால் மட்டுமே எழுதியிரும். இந்த எழுத்துக்களில் இரண்டாவதாக இருக்கும் U என்ற எழுத்தின் மேற்பகுதியில் ஒரு சிறிய வளைவு போட்டால் O ஆகிவிடும் Punnalai புன்னாலை Ponnalai (பொன்னாலை) ஆகிவிடும்.

  யாழ்ப்பாணத்து தியேட்டரில் முதலாம் காட்சியும் இரண்டாம் காட்சியும் நண்பர்களோடு பார்த்துவிட்டு வரும் போது புன்னாலையில் இரண்டாவது ஆங்கில எழுத்தை கறுப்பு மையால் O ஆக்கிவிடுவேன். இப்படி சந்தி தோறும் உள்ள பெயரை மாற்றிவிடுவேன். அரசாங்கம் பெயர்ப்பலகை மாற்றும் போது பொன்னாலை என்றூ மாற்றியதை அப்படியே எழுதிவிட்டார்கள் எல்லாப் பலகைகளிலும். அதுவே நிலைத்துவிட்டது.

  (வரதரின் 6 பக்க இந்தக்கட்டுரையைச் சுருக்கித் தந்திருக்கின்றேன்)

 24. கானாபிரபா வரதரின் “கற்பு” சிறுகதையை http://eelamlibrary.blogspot.com/2006/12/blog-post_22.html முகவரியில் தந்துள்ளேன். அந்த வலைப்பதிவு பரவலான வாசிப்பை நோக்கமாகக் கொண்டதல்ல. ஆதலால் எங்கும் அது நிரற்படுத்தப்படுவதில்லை. எவருக்கும் அது தெரியவும் வாய்ப்பில்லை. ஆதலால் அக்கதையை உங்கள் பதிவில் இட்டு பரவலாக வாசிக்கப்பட உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். அக்கதை தொடர்பான செங்கை ஆழியான், கா. சிவத்தம்பி ஆகியோரது கருத்துக்களையும் விரைவிற் தட்டெழுதித் தருகிறேன். மேலும் விக்கிபீடியாவில் வெளியிடப்படும் படங்கள் எவரும் பாவிக்கக்கூடியவை என்பது உங்களுக்கு ஆட்சேபணை இல்லைத்தானே?

 25. வணக்கம் கோபி,

  வரதரின் சிறுகதையை நான் என் பதிவில் போடுகின்றேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போன்று அச்சிறுகதை குறித்த செங்கை ஆழியான், கா. சிவத்தம்பி ஆகியோரது கருத்துக்களையும் விரைவிற் தட்டெழுதித் தந்தீர்களால் முழு இணைப்பாகக் கொடுத்தால் சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.என் பதிவில் உள்ள படங்கள் அனைத்தினையும் நீங்கள் தாராளமாக உபயோகிக்கலாம்.

  இன்னுமொரு செய்தி, வரதரின் “யாழ்ப்பாணத்தார் கண்ணீர்” படைப்பை முழுமையாகப் பதிவிடவும் எண்ணியுள்ளேன்.

 26. வணக்கம் கானா
  வரதர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய நானும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

 27. நன்றி கானா பிரபா.

  உங்களின் பதிவின் மூலம் வரதரைப்
  பற்றிய பல விடயங்களை அறிந்து
  கொண்டேன்.நன்றிகள்
  அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

 28. வருகை தந்து அஞ்சலியைப் பகிர்ந்த
  டி.செ, பாஸ்டர் பால, சுந்தரி, கரிகாலன் உங்களுக்கு என் நன்றிகள்

 29. வணக்கம் கானா பிரபா, நீங்கள் கேட்டபடி சிறுகதை பற்றிய கருத்துக்களை இணைத்துவிட்டேன். வரதரின் “வாத்தியார் அழுதார்” சிறுகதையையும் தட்டெழுதியுள்ளேன். அதனையும் உங்கள் வலைக்குறிப்பில் வெளியிடுங்கள். மேலும் உங்களிடமுள்ள மலரும் நினைவுகள் நூலின் பதிப்பு விபரம் மற்றும் அத்தியாய, பக்க எண்ணிக்கையை எனக்கு அறியத் தாருங்கள். (kopinath’at’gmail’dot’com) ஏனெனில் என்னிடமுள்ள பதிப்பிலிருந்து நீங்கள் தந்ததன் அட்டைப்படம் வேறுபடுகிறது. இறுதிப் பதிப்பை மின்னூலாக்குவதே பொருத்தமாயிருக்கும். மேலும் யாழ்ப்பாணத்தார் கண்ணீரை நீங்கள் உள்ளிட முன்வந்தது மிக்க மகிழ்ச்சி. அதனை முழுமையாகப் பதிவிட்டபின் நூலகத்திலும் வெளியிடுங்கள்! நீங்கள் நூலகம் குழுவில் அங்கத்தவரா? வரதரின் ஏழு நூல்களிலொன்றான “நாவலர்” ஏற்கனவே நூலகத்தில் மின்வடிவமாக உள்ளது. கயமை மயக்கமும் விரைவில் இணையும். நன்றி.

 30. மிக்க நன்றிகள் கோபி, இன்னும் இரு நாட்களுக்குள் என் வலைப்பதிவில் இடுகின்றேன்.
  தனிமடலும் அனுப்புக்கின்றேன்.
  விக்கி மற்றும் நூலகத்திற்கு இதுவரை ஆதரவாளன் மட்டுமே கூடிய சீக்கிரமே பங்காளியாக இணைய விருப்பம்.

 31. இன்றுதான் இணையத்தில் நுழைந்து ஓரளவு தட்டெழுதிட முடிகிறது.

  மிகவும் சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள். அச்செடுத்து வரதர் ஐயாவின் துணைவியாரிடம் கொடுத்திருக்கிறேன்.

  கோபி நிச்சயமாய் தட்டெழுத தொடங்குகின்றேன். இப்பொழுது விரல்கள் ஓரளவு ஒத்துழைக்கின்றன.

 32. வணக்கம் பகீ

  வரதர் ஐயாவின் துணைவியாருக்கு நம் எல்லோரது இரங்கலைப் பகிர்ந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *