வடக்கும் நாதன்

சில திரைப்படங்களைப் பார்க்கும் போது எந்தவிதமான பெரியதொரு உணர்வையும் ஏற்படுத்தாது. ஆனால் மனசின் ஓரத்தில் அந்தப் படம் உட்கார்ந்து அசைபோடவைக்கும். அப்படியானதொரு உணர்வை ஏற்படுத்தியது தான் “வடக்கும் நாதன்” மலையாளத்திரைப்படம். இந்த ஆண்டு பெங்களூரில் வேலைத்திட்டம் தொடர்பாகச் சென்றிருந்த காலத்தில், மே 31 ஆம் திகதி Bangalore Forum சினிமாவில் அன்றைய இரவுப்பொழுதைக் கழிக்க நான் தேர்ந்தெடுத்த பொழுதுபோக்குச் சமாச்சாரமாக இப்படம் அமைந்திருந்தது.

நான் முதல் பந்தியில் சொன்னது போன்று “வடக்கும் நாதன்” படம் பார்க்கும் போது படத்தின் இசை, மோகன்லாலின் நடிப்பு தவிர வேறு எதுவுமே சட்டென ஈர்க்கவில்லை. ஆனால் நாளாக…நாளாக மனசின் ஓரமாக இருந்து அசை போட வைக்கின்றது இந்தப்படம். எனவே VCD ஒன்றை எடுத்து மீண்டும் இப்படத்தைப் பார்த்துவிட்டு எழுதுகின்றேன் இப்போது.

வடக்கும் நாதன், நீண்டகாலமாகத் தயாரிப்பில் இருந்த படம், படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் இசையமைப்பாளர் ரவீந்திரன் இறந்துவிட்டார். சாஜன் கார்யல் இயக்கத்தில் வெளிவந்திருந்தது.நம் கண்முன்னே பேரும் புகழுமாக வாழும் ஒருவர் திடீரென எல்லாவற்றையும் உதறிவிட்டு உலக வாழ்க்கை நடைமுறைகளில் இருந்து விலகி வாழ்ந்தால் எப்படியிருக்கும்? இவர் ஏன் இப்படியானார் என்று நாம் சிந்திப்பதை விடுத்து மனநோயாளி என்று ஒதுக்குவது தான் நடைமுறை யதார்த்தம். இதைத் தான் வடக்கும் நாதன் சித்தரிக்கின்றது. குடைக்குள் மழை, அந்நியன் திரைப்படவகையறாக்கள் போலல்லாது முற்றிலும் யதார்த்த பூர்வமாக இப்பிரச்சனையைச் சொல்ல முற்படுகின்றது இப்படம். படத்தின் பலமும் அதுதான் பலவீனமும் அதுதான்.

பாரத் பிசாரோதி (மோகன் லால்) வேதாந்த அறிவில் கரைகண்டவர், இளவயதிலேயே தன் தொடர்ந்த வேதாந்த ஆராய்ச்சியிலும் சமஸ்கிருத அறிவிலும் துறைபோன இவர் காலடி, சிறீ சங்கராச்சாரிய பல்கலைக்கழகப் பேராசிரியர். இவரின் ஆழ்ந்த புலமையைக் கல்வியுலகே வியந்து போற்றும்.இவரின் முறைப்பெண்ணும் மாணவியுமான மீராவுக்கும் (பத்மப்ப்ரியா) கல்யாண நாள் குறித்துத் திருமண நாளும் நெருங்குகின்றது. தடல்புடலான மணநாள் அன்று மணமகன் பாரத் “இந்தப் பந்தங்களைக் கடந்து, நான் போகின்றேன்” என்று எழுதிவைத்துவிட்டுத் தொலைந்து போகின்றார். தொடர்ந்த ஐந்து வருடங்களும் பாரத் இறந்துவிட்டார் என்றே ஊரும் நினைக்கின்றது. ஐந்து வருடங்கள் கழித்து பரத்தின் வயதான தாயும், தம்பியும் (பிஜுமேனன்) வடக்கின் புண்ணியஸ்தலங்களை நோக்கிய யாத்திரை போகின்றார்கள். தன்மகன் இன்னும் உயிரோடு இருப்பான் என்ற அல்ப ஆசையில் அந்த தாய் மனம். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஹரித்வாரின் கங்கை நதியில் முக்கிக்குளித்து எழும்புகின்றது ஓர் உருவம். ஆம் அது சாட்சாத் பாரத் பிசாரோத்தியே தான். கல்வியில் துறை போய், குடும்பத்திலும் களிகொண்டாட வாழ்ந்த இவன் எல்லாவற்றையும் கடாசிவிட்டு ஹரித்வாரில் பிச்சையெடுத்து ஆண்டிப் பிழைப்பு எடுக்க என்ன காரணம்? விடை கூறுகின்றது வடக்கும் நாதன்.

இந்தப் பட ஆரம்பமே “அதி பரம்பொருளே” என்ற வடக்கு நோக்கிய யாத்திரிகளின் பயணப்பாட்டுடன் ஆரம்பித்து, தொடர்ந்துவரும் காட்சிகள் பாரத் என்ற பேராசிரியரின் வாழ்வில் ஏற்படும் மர்மமுடிச்சுக்களை இன்னும் அதிகப்படுத்தி ஒன்றரை மணி நேரக் காட்சிமுடிவில் மர்மம் விலகி, அதனால் எதிர்நோக்கும் சிக்கல்களைக் களையும் கோர்வையாக அமைகின்றது. அந்த வகையில் இயக்குனரின் (சாஜூன் கார்யல்) படமெடுத்த நேர்த்தி பாராட்டத்தக்கது. அத்தோடு இறுதிக்காட்சி தவிர அனைத்தையும் பிடிவாதமாக யதார்த்தபூர்வமாக அணுகியிருப்பதையும் சொல்லவேண்டும்.

மகனைக் காணாது தேடும் தாயின் பரிதவிப்பு, பேராசிரியர் பாரத்தின் வாழ்க்கையில் சூழும் மர்மம், பாரத் சந்திக்கும் கீழ்ப்பள்ளி நாராயண நம்பி யார்? தடைப்பட்ட திருமணத்தைக் காட்ட, கொட்டிக்குவித்திருக்கும் சோற்றுக் குவியலை நாய் தின்னுவது, திருமணம் தடைப்படும் போது ஏற்படும் குடும்பச்சிக்கல்கள்,பாரத், மீரா ஜோடிகள் திசைமாறிய பறவைகளாய்த் தொலைந்து பின் சந்திக்கும் காட்சிகள், ஒரு மனச்சிதைவு கண்டவன் சந்திக்கும் சோதனைகள் இந்த யதார்த்தபூர்வமான காட்சியமைப்புக்கு நல்லுதாரணங்கள்.

ஆனால் வழக்கமான மலையாள நகைச்சுவைப் பாத்திரங்களின் காட்சிகள் அற்ற, முழுக்கமுழுக்க படத்தின் மையக்கருத்தோடே மெல்ல நகரும் காட்சிகளைப் பார்க்க அசாத்திய பொறுமை வேண்டும். மோகன் லாலின் தம்பி பிஜு மேனன், பத்மப்ப்ரியா, தங்கையாக வரும் காவ்யா மாதவன், மாமனாராக வரும் முரளி ,வினீத் தவிர வரும் அனைத்தும் எனக்குப் பரிச்சயமில்லாத நடிகர்கள். “நம்ம காட்டுல, மழை பெய்யுது” பட்டியல் பாட்டுக்குக் குத்தாட்டம் போட்ட அதே பத்மப்ரியா தான் மோகன்லாலின் முறைப்பெண்ணாக வருகிறார். ஆரம்பத்தில் கலகலப்பாகவும்,பின்னர் திருமணம் தடைப்பட்டு வெள்ளுடைச் சமூக சேவகியாக ஒடுங்கிப்போவதுமாக இரு மாறுபட்ட நடிப்பில் இவரைப் பார்த்தபோது “தவமாய்த் தவமிருந்து” உட்படத் தமிழ்த் திரையுலகம் பத்மப்ரியாவை இன்னும் பயன்படுத்தவில்லை என்று தெரிகிறது. மோகன்லாலின் சமஸ்கிருதப் பாடவகுப்பில் தூங்கி வழிந்து அடிவாங்குவது, பின் குறும்புத்தனமாக வளையவருவது, இன்னும் பாடற்காட்சிகள் என்று பத்மப்ரியா மின்னுகின்றார்.
படத்தின் பெரிய பலம் மோகன்லாலே தான். இந்தப் பாத்திரத்திற்கு இவரை விட இன்னொருவரை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒரு கண்ணியமான ஒழுக்க சீலராக உலகம் போற்றும் கல்விமான் பாரத், பின் கஞ்சா அடித்துக்கொண்டே மனநிலை பிறழும் நிலைக்குத் தன்னை உட்படுத்தும் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். தன்மத்ராவிற்குப் பிறகு கிட்டத்தட்ட அதே சாயலில் மோகன்லால் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலி மீராவுடன் நடு இரவில் சந்திக்கும் போது சட்டென மனநிலை பிறழ்ந்து கத்துவது, தன் நோயினை உலகம் அறியாதிருக்கக் கஞ்சாப் போதையென நடிப்பது, பதியிரவில் தன் தங்கை கிணற்றில் விழுந்துவிட்டாள் என்று கத்திக்கொண்டே ஓடிபோய்க் கிணற்றில் விழுந்து சுற்றிச் சுற்றித் தேடுவது, தன் மனநோயினால் தங்கையின் திருமணமும் தடைபடும் போது தங்கையின் முன்னால் சென்று கைகூப்பி இறைஞ்சிக் கொண்டே காலில் விழுவது என்று மோகன் லால் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் அவரின் தனிப்பரிமாணம் வெளிப்படுகின்றது. ட்றங்குப் பெட்டிக்குள் அடைத்திருந்த தன்னைப் பற்றிய மர்மம் வெளிப்படும் போது ஊரார் முன்னிலையில் அசட்டுச் சிரிப்போடு ” வரம்போரமாக நடக்கும் போது சில சமயம் கால் இடறிவிழுவதில்லையா, அது போலத் தான் என் மனப்பிறழ்வு” என்று மோகன்லால் சொல்லும் காட்சி பண்பட்ட நடிப்புக்கோர் சான்று. படத்தின் பாதிக்கு மேல் புதிராக இருக்கும் மோகன்லால் மேல் வரும் விசனம், பின்னர் உண்மை வெளிப்படும் போது அனுதாபமாக மாறுகின்றது.

இப்படம் வெளிவரும் முன்பே இசையமைப்பாளர் ரவீந்திரன் இறந்துவிட்டதால் பின்னணி இசையை ஒசப்பச்சன் கவனித்திருக்கிறார். சொல்லப் போனால் ரவீந்திரன் என்ன பாணியில் இப்படத்துக்கு இசை கொடுப்பாரோ என்று எண்ணி இவர் செயற்பட்டிருப்பார் போலும். உதாரணத்துக்கு, மோகன்லால் தன் காதலியின் முன் கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பிறழும் போது செண்டை மேளப் பின்னணியைக் கொடுத்துக் கொண்டே கதகளி உக்கிரத்துக்குக் கொண்டுவருவது நல்லதொரு எடுத்துக்காட்டு.

“பாகி பரம்பொருளே”, “ஒரு கிளி”, “கங்கே….” என்று படத்தின் அனைத்துப் பாடல்களும் ரவீந்திரனின் சாகித்தியத்தின் உச்சம் என்று சொல்லவேண்டும். மறைந்த ரவீந்திரனுக்குச் சமர்ப்பணமாக அமைந்த, இவரின் இறுதிப்படமான வடக்கும் நாதன் ரவீந்திரனின் பேர் சொல்லவைக்கும். இந்த நேரத்தில் ரவீந்திரனைப் பற்றியும் சொல்லியாகவேண்டும். கே.ஜே யேசுதாஸோடு ஒன்றாக சுவாதித் திருநாள் இசைக்கல்லூரியில் இசை பயின்றவர் ரவீந்திரன். பின்னர் ஜேசுதாசின் சிபாரிசில் 1979 இல் சூலம் என்ற மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு வந்து தன் நண்பன் ஜேசுதாசுக்கு அந்த நன்றிகடனாகவோ என்னவோ, நிறைய நல்ல பாடல்களைப் பாடக்கொடுத்தவர். அதில் முத்தாய்ப்பாக இருப்பது “ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா”வில் வரும் “ப்ரமதவனம் வீண்டும்” பாடல் இன்றும் தனித்துவமானது. தமிழில் ரசிகன் ஒரு ரசிகை (எழிசை கீதமே, பாடி அழைத்தேன்) படம் உட்பட 450 படங்களுக்கு 1500 பாடல்களைத் தந்தவர். ரவீந்திரனின் இசையைச் சிலாகிப்பவர்கள் உணரும் ஒரு விஷய்ம், இவரின் பாடல்களில் இழையோடும் கர்நாடக இசை மற்றும் பாடகர்களின் வரிகளைச் சிதைக்காமல் பாடல் வரிகளுக்குச் சுதந்திரம் கொடுக்கும் அதே வேளை சம நேரத்தில் இதமான வாத்திய ஆலாபனையையும் கொண்டு வருபவர். தொண்ணூறுகளில் இந்திய இசையில் அதிகம் ஆக்கிரமித்த சாபக்கேடான மேற்கத்தேய இசையில் தொலைந்துபோனவர்களில் ஒருவர்.மார்ச் 4, 2005 ஆம் ஆண்டு தனது 61 ஆவது வயதில் இறந்த ரவீந்திரனை நினைவு கூர்ந்து அப்போது ஒரு அஞ்சலி நிகழ்ச்சியையும் வானொலியில் செய்திருந்தேன்.

வழக்கமாக நம் சினிமாப் படங்களில் நாயகனுக்கோ நாயகிக்கோ புதியதொரு வியாதியின் பெயர் சொல்லி கதைத் திருப்பத்துக்கு உதவும். இந்த “வடக்கும் நாதன்” படத்தில் சொல்லப்படும் Bipolar disorder வியாதி உண்மையிலேயே இருக்கின்றதா என்ற அல்ப ஆசையில் இணையத்தில் மேய்ந்த போது இந்த Bipolar disorder நோயின் அறிகுறியாக பின்வரும் குறிப்புகள் உள்ளன.வாழ்வில் நம்பிக்கையின்மை, எதிலும் நாட்டமில்லாமை, ஞாபகப் பிறழ்வு, தீர்மானம் எடுக்கக் குழம்புவது,அதீத நித்திரை அல்லது சுத்தமாக நித்திரை வராமை, இறப்பில் ஆர்வம், தற்கொலை முயற்சி, குற்றவுணர்வு, தாழ்வுமனப்பான்மை.இந்தப்படத்தில் மையமாகச் சொல்லப்படும் ஆன்ம பலம் தான் இந்த நோயினைத் தீர்க்கும் அருமருந்துகளில் தலையாயது.

என் பள்ளிப்பருவத்தில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்வகுப்பு படித்த காலம் நினைவுக்கு வருகின்றது. சிலர் காலுக்கு அடியில் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தை வைத்துப் படிப்பது. அதிகாலை நாலு மணிக்கு எழும்புவதாக நினைத்து ஒரு மணி நேரத்தூக்கத்தின் பின் நடு நிசியில் கைவிளக்கை ஏற்றி (மின்சாரம் இல்லாத காலம்)படித்த காலமும் நினைவுக்கு வருகின்றது. என்னதான் ஆசிரியையாக என் அம்மா இருந்தாலும், ” கனக்கப் படியாதை, மூளை மக்கரிச்சுப் போகும்” எண்டு சொன்னது தன் பிள்ளை மேல் இருந்த கரிசனையால் தான் என்பது இப்போது விளங்குகின்றது.

எங்களூரில் “ஹலோ” என்ற மனநோயாளி இருந்தான். தன் கண்ணிற் படும் ஆட்களை “ஹலோ, ஹலோ” என்று விளிப்பது இவன் வழக்கம். படிப்பில் படு சுட்டியாக இருந்த இவன், வேலை பார்க்கும் போது உயர்பதிவு ஒன்று கைநழுவிய வருத்ததில் புத்தி பேதலித்ததாக ஊரில் சொல்வார்கள். ஊர்ச் சின்னனுகள் இவனைக்கண்டால் “ஹலோ, ஹலோ” என்று வேடிக்கை பண்ணுவது அவர்களின் பொழுபோக்கு.உள்ளூரில் இருந்த இருந்த ரியூட்டிரிக்கு எந்தவிதமான அனுமதியில்லாமலும் வரும் இவன் கரும்பலகையில் சோக்கட்டியால் கடினமான கணக்கு ஒன்றைப் எழுதிவிட்டு, தீர்க்கமுடியாமல் ஆவென்று வாய் பிளக்கும் மாணவர் கூட்டத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் தன்பாட்டில் ஏதோ சொல்லிக்கொண்டே போய்விடுவான். இந்திய இராணுவ காலத்தில் கொல்லப்பட்டு, அநாதரவாக றோட்டில் கிடந்த பயங்கரவாதிகளில்(?) இவனும் ஒருவன்.

“நாம் எல்லோருமே ஒரு வகையில் மனநோயாளிகள் தான், நோயின் அளவு தான் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகின்றது” என்று யாரோ சொல்லி, எங்கோ படித்தது நினைவுக்கு வருகின்றது. புகைப்பட உதவி: musicindiaonline.com & nowrunning.com

31 thoughts on “வடக்கும் நாதன்”

 1. //” கனக்கப் படியாதை, மூளை மக்கரிச்சுப் போகும்”// ரொம்ப படிச்சு மூளை குழம்பினக் கேசுன்னு சொல்ல கேள்விப்பட்டிருக்கோம், அது மாதிரி தான்!

 2. நல்ல விமர்சனம்…ஞானச்செறிவுடன் நடைபோடும் லாலின் முதல் பாதி நடிப்பு மிக அருமை.என்னைக் கவர்ந்த பாடல்:”கலபம் தராம்…”

 3. //“நாம் எல்லோருமே ஒரு வகையில் மனநோயாளிகள் தான், நோயின் அளவு தான் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகின்றது” என்று யாரோ சொல்லி, எங்கோ படித்தது நினைவுக்கு வருகின்றது//

  உண்மை தான்.. எல்லோரும் ஏதோ வகையில் கொஞ்சமோ கூடவோ உள பிறழ்வு அடைந்த நிலையில் இருக்கிறார்கள்..குறிப்பிட்ட வீத நிலையை தாண்டியவர்கள் சமூகத்தின் ஓட்டத்தில் இருக்க முடியாதவர்கள் ஆகிறார்கள்

  பிரபா..நல்ல. மலையாள படங்களை பார்ப்பதை பழக்க படுத்தீங்கள்
  போலை…கொடுத்து வைச்சனீங்கள்

  கமலகாசனை விட மோகன்லால், ஜ தான் இந்தியாவிலையே திறமான நடிகன் என சில திரைபட விமர்சர்களிடம் கணிப்புண்டு

 4. //வெளிகண்ட நாதர் said…
  ரொம்ப படிச்சு மூளை குழம்பினக் கேசுன்னு சொல்ல கேள்விப்பட்டிருக்கோம், அது மாதிரி தான்! //

  வணக்கம் வெளிகண்ட நாரதர்

  ஆனால், இதை அறிவியல் ரீதியாக எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளலாம் என்று தெரியவில்லை. படிக்கப் படிக்க ஊறும் அறிவு என்றும் சொல்வார்கள்.

  தங்கள் வருகைக்கு நன்றிகள்

 5. பிரபா,

  நல்ல விமர்சனம். நீங்கள் குறிப்பிட்டிருந்த நோயின் சரியான பெயர் Bipolar Disorder. மிகுந்த உற்சாகமும், கவலையும் மாறி மாறி வரக்கூடியதாக இருக்கும் மன நோய்.

  மேல் விபரங்களுக்கு இந்நோய் குறித்த விக்கிபீடியாவின் சுட்டி இதோ . பெங்களூர் நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் இந்நோய்க்கான சிகிச்சையில் நிபுணத்துவம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

 6. வணக்கம் ரா சு

  தங்கள் வருகைக்கு என் நன்றிகள். நல்ல மலையாளப்படங்களை நீங்கள் முன்னர் பதிவாகத் தந்திருந்தீர்கள் அதுவும் தொடரவேண்டும்.

 7. //சின்னக்குட்டி said…

  பிரபா..நல்ல. மலையாள படங்களை பார்ப்பதை பழக்க படுத்தீங்கள்
  போலை…கொடுத்து வைச்சனீங்கள்

  கமலகாசனை விட மோகன்லால், ஜ தான் இந்தியாவிலையே திறமான நடிகன் என சில திரைபட விமர்சர்களிடம் கணிப்புண்டு //

  வணக்கம் சின்னக்குட்டியர்

  நல்ல கதையம்சம் உள்ள மலையாளப் படங்களைப் பார்ப்பதே ஒரு சுகம். உண்மையில் தமிழில் மோகன்லாலைக் கூட இன்னும் சரிவரப் பயன்படுத்தவில்லை.

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

 8. //“நாம் எல்லோருமே ஒரு வகையில் மனநோயாளிகள் தான், நோயின் அளவு தான் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகின்றது”//

  இக் கூற்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றே எண்ணுகின்றேன்.

  பிரபா படம் பார்த்தது போன்றிருந்தது தங்கள் பதிவு.
  நன்றி!

 9. //இலவசக்கொத்தனார் said…
  பிரபா,

  நல்ல விமர்சனம். நீங்கள் குறிப்பிட்டிருந்த நோயின் சரியான பெயர் Bipolar Disorder. மிகுந்த உற்சாகமும், கவலையும் மாறி மாறி வரக்கூடியதாக இருக்கும் மன நோய்.//

  இலவசக்கொத்தனாரே

  தவறைத் திருத்தியமைக்கும், மேலதிக செய்திகளைப் பகிர்ந்துகொண்டமைக்கும் என் நன்றிகள்.

 10. // ramachandranusha said…
  பிரபா, நன்னி, பார்த்துட வேண்டியதுதான் //

  வணக்கம் உஷா

  நீங்கள் இருக்கும் அமீரகத்தில் இப்படியான படங்கள் உடனேயே எடுக்கலாமே, பாத்துட்டு சொல்லுங்க படம் எப்படி என்று.

 11. //துளசி கோபால் said…
  இன்னும் படம் கிடைக்கலை(-: //

  வணக்கம் துளசிம்மா

  முன்னமே தெரிஞ்சிருந்தா வலைப்பதிவாளர் சந்திப்பில் ஒரு சீடி சுட்டுக் கொண்டுவந்திருப்பேனே:-(

 12. //மலைநாடான் said…
  //“நாம் எல்லோருமே ஒரு வகையில் மனநோயாளிகள் தான், நோயின் அளவு தான் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகின்றது”//

  இக் கூற்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றே எண்ணுகின்றேன்.

  பிரபா படம் பார்த்தது போன்றிருந்தது தங்கள் பதிவு.
  நன்றி!//

  வணக்கம் மலைநாடான்

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

 13. பிரபா, இந்தப் படத்தின் பாடலை…கங்கே கங்கே பாட்டுதான் தொலைக்காட்சியில் பார்த்தேன். மிகவும் மாறுபட்ட பாடல். பிடித்ததா பிடிக்கலையா என்றே உறுதியாகச் சொல்ல முடியாத பாடல். சேனலை மாற்றத் தோணியும் பார்த்துக் கொண்டிருப்பேன். பிறகு படக்கென்று மாற்றி விடுவேன். ஏனென்று இப்பொழுது புரிகிறது. :-))))

  மலையாளத்திலும் இப்பொழுது ஓரிரண்டு படங்கள்தான் இப்படி வருகின்றன. நம்மைப் பார்த்துக் கெட்டுப் போய் விட்டார்கள் அவர்களும்.

  மனச்சிதைவு நோய் பற்றி தமிழிலும் ஒரு அருமையான படமுண்டு. அக்கினி சாட்சி. அதை ஏற்றுக் கொள்வது பெரும்பாலானோர்க்கு மிகக் கடினம். அழகான பாட்டுகளும் உண்டு. கனாக்காணும் கண்கள் மெல்ல பாட்டு கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  கீழ்வானம் சிவக்கும் என்றொரு படம். அதில் ஒரு நோய் வரும். லிம்ஃபோசர்கோமா (lymphosarcoma) என்று. அப்படியொன்று இருக்கிறதா என்று நெட்டில் தேடினேன். படத்தில் சொல்வது போலவே அது பெருங்கொடிய நோய் என்று தெரிந்தது. அது போல நீங்களும் தேடியிருக்கின்றீர்கள். 🙂

 14. //ஒருவர் திடீரென எல்லாவற்றையும் உதறிவிட்டு உலக வாழ்க்கை நடைமுறைகளிலில் இருந்து விலகி வாழ்ந்தால் எப்படியிருக்கும்? இவர் ஏன் இப்படியானார் என்று நாம் சிந்திப்பதை விடுத்து மனநோயாளி என்று ஒதுக்குவது தான் நடைமுறை யதார்த்தம்.//

  நல்ல விமர்சனம்…
  இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலினை தூண்டுகின்றது உங்கள் விமர்சனம்.

 15. வணக்கம் ராகவன்

  அக்னி சாட்சி அருமையான படம், புதுக்கவிதையில் பாடல் போட்ட படமல்லவா.
  மன அழுத்தம் குறித்த திரைப்படங்கள் மிகக்குறைவாகவே வந்திருக்கின்றன.
  இப்படியான படங்கள் மூலம் புதுப்புது வியாதிகளையும் அறியமுடிகின்றது:-)

 16. //shanmuhi said…
  நல்ல விமர்சனம்…
  இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலினை தூண்டுகின்றது உங்கள் விமர்சனம். //

  வணக்கம் ஷண்முகி

  பதிவை வாசித்துக் கருத்துச் சொன்னமைக்கு என் நன்றிகள்

 17. கிழக்கும் கீதன் எண்ட படம் வடக்கும் நாதனை விட நல்ல படம் எண்டது என்ர தாழ்மையான கருத்து

 18. //கொழுவி said…
  கிழக்கும் கீதன் எண்ட படம் வடக்கும் நாதனை விட நல்ல படம் எண்டது என்ர தாழ்மையான கருத்து//

  ஓமோம் கொளுவி , நீர் நடிச்ச படமெல்லோ, கேள்விப்பட்டனான்,
  வீ சீ டீ அனுப்பிவிடுமன்:-)

 19. பிரபா! ராகவன்!

  அக்னிசாட்சியின் தொடக்கத்தில், இன்னுமொரு கண்ணகி எனும் ஒரு நவீன நாடகம் ஒன்று வரும். என்னை வெகுநாள் பாதித்திருந்த ஒரு படைப்பு. ஞாபகம் இருக்கிறதா?

 20. பிரபா!
  இப்படி ??மலையாளப் படங்களைப் பற்றிச் சொன்னால் ; நான் பாக்க எங்க போவன். ஆனாலும் நாம் எல்லோரும் மனநோயாளிகளே!!!ஒரு வகையில்; அது மெத்தச் சரி.
  நிர்வாணிகள் ஊரில் உடுப்பு உடுத்தியவன் கதியே!!!
  யோகன் பாரிஸ்

 21. //மலைநாடான் said…
  பிரபா! ராகவன்!

  அக்னிசாட்சியின் தொடக்கத்தில், இன்னுமொரு கண்ணகி எனும் ஒரு நவீன நாடகம் ஒன்று வரும். என்னை வெகுநாள் பாதித்திருந்த ஒரு படைப்பு. ஞாபகம் இருக்கிறதா? //

  ஆமாம்

  நீங்கள் சொல்லும் கதாபாத்திரம் போல பாலச்சந்தரின் ஒவ்வொரு படத்திலும் ஒரு படைப்பைப் பார்க்கலாம். இருகோடுகளில் வரும் நவீன பாரதியும் அடக்கம்.

 22. //Johan-Paris said…
  பிரபா!
  இப்படி ??மலையாளப் படங்களைப் பற்றிச் சொன்னால் ; நான் பாக்க எங்க போவன். ஆனாலும் நாம் எல்லோரும் மனநோயாளிகளே!!!ஒரு வகையில்; அது மெத்தச் சரி.
  நிர்வாணிகள் ஊரில் உடுப்பு உடுத்தியவன் கதியே!!!
  யோகன் பாரிஸ்//

  வணக்கம் யோகன் அண்ணா

  மலையாளப்படங்கள் பாரிசிலும் இருக்கும் தானே. தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.
  பட்டினத்தார் பாடல் தான் நினைவுக்கு வருகின்றது இப்போது.

 23. பிரபா
  படத்தைப்பற்றி நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
  ஹலோ வின் மனநோயும் அவனது மரணதின் நிலைமையும் மனதை உருக்குகிறது.

 24. படத்தை பார்க்க தூண்டும் விதமாய்
  உங்களின் பதிவு அருமை பிரபா.

  ACHUVINTE AMMA

  இயக்கம் Sathyan Anthikkadu
  இசை இளைரஜா

  இந்த படத்தை ஒருதடவை பார்த்து
  விட்டு ஒரு பதிவு போடுங்கள் பிரபா
  எனக்கு உங்களவுக்கு எல்லாம் அழகாக
  விமர்சிக்க வராது மிக அருமையான
  படம். ஊர்வசி மீராஜமின் சுனில்
  மூன்று பேரும் போட்டி போட்டு
  நடித்திருக்கிறார்கள்.

 25. இந்த ரவீந்திரன் இசையமைத்து
  k.j ஜேசுதாஸ் பாடிய பாடல் சாகரங்களே (சாகரங்கள்படம்) இந்த
  பாடலுக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது
  ஜேசுதாஸ்க்கு.

  உங்கள் ஊர் ஹலோ போன்று எங்கள்
  ஊரிலும் ஒரு மனநோய்குளம்பிய
  பெண் இருந்தாள்(பைத்தியம்)உடம்பு
  எல்லாம் நிறைய துனிகளை அள்ளி
  போர்த்தியபடி நாற்றமடிக்க பிச்சை
  எடுத்து திரிந்தாள் ஓர் நாள் இரவு
  அவளது அலறல் கேட்டு எங்கள் கடையின் மேலிருந்து (மேலறையிருந்து)
  கீழேஎட்டிபார்த்தேன் எங்கள் கடை
  வரண்டாவில் வைத்து இந்தியா
  இரணுவத்தினர் அவள் கதறக்கதற
  கற்பழித்துக் கொண்டிருந்தனர்.

 26. வணக்கம் சதானந்தன்

  நீங்கள் குறிப்பிட்ட “அச்சுவின்ட அம்மா” சில மாதங்களுக்கு முன் பார்த்திருக்கின்றேன். அதைப்பற்றியும் எழுத விருப்பம். சத்தியன் அந்திக்காடுவின் இயக்கத்தில் வெளிவந்த ரச தந்திரம் படம் பற்றிய என் பதிவு இதோ:
  http://kanapraba.blogspot.com/2006/07/blog-post_115188773395994139.html

  நீங்கள் குறிப்பிட்ட அவலங்கள் போல ஒவ்வொரு ஊரிலும் பல கறை படிந்த பக்கங்கள் இருக்கின்றன. வெளிவராமல் இன்னும் பல சோகங்கள் புதைந்திருக்கிறன.

 27. பிரபா
  பாரதீயமொடேண்பிறின்ஸ்
  வடக்கும் நாதன் பற்றி உங்க பதிவில் பார்த்த பின் எனக்கு பின்னூட்டமிடும் போது பின்வருமாறு எழுதியிருந்தார்
  //’வடக்கும் நாதன்’ பற்றியகானா பிரபாவின் blogஐ வாசித்தேன். பிரபாவிற்கு நன்றி!//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *