ஆகாச வாணியும் விவித் பாரதியும்….!


“என் அத்தானின் வயலினிலே அருவி போல் தண்ணீரு பாயுதே, பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமே இது”.
முதல் அடிகளைப் பெண்குரலும் இரண்டாவது அடியை ஆண்குரலுமாகப் பாடும் சென்னை வானொலியின் விவசாய நிகழ்ச்சியின் விளம்பரப்பாடல் தான் அது. 16 வருடங்கள் கழிந்தும் என் ஞாபகமூலையின் ஓரமாய் ரீங்காரமிடும் பாடலாக இன்றும் இருக்கின்றந்து. இன்றைய கணக்கில் பினலெக்ஸ் பைப்புக்கள் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கின்றதோ என்னவோ தெரியவில்லை, ஆனால் ஆண்டாண்டு கடந்தும் இந்த வர்த்தக விளம்பரம் மட்டும் என் மனசில் பசையாக ஒட்டிக்கொண்டு விட்டது.

தொண்ணூறுகளில் பிரேமதாச சிறீலங்கா அதிபராக வந்து, வழக்கம் போல ஓவ்வொரு ஆட்சியாளரும் புதிதாக ஆட்சிக்கு வரும் போது செய்யும் ஒப்புக்குச் சமாதானப் பேச்சுவார்த்தைத் தேனிலவை முடித்து வைத்த, யுத்தமேகங்கள் கருக்கட்டிய காலம் அது.

சுன்னாகம் மின் வழங்கியிலிருந்து கொஞ்சக்காலம் சுழற்சி முறையில் மின்சாரம் கிடைத்தது. பின், வழக்கம் போல் அரசின் திறமையான போர் உபாயம் மூலம் தமது அரசுடமைகளையே அழித்துத் திருப்திப்பட்ட வகையறாக்குள் சுன்னாகம் மின் நிலையமும் விமானக்குண்டு வீச்சில் காவுகொள்ளப்பட்டது. மின்சாரம் போனதும் பதிலீடாகாக் கிடைத்தது கடைகளில் பதுங்கியிருந்த எவரெடி (eveready) பற்றறிகள் தான். அந்தக்காலகட்டத்தில் எமது உறவினர் பெரும் வர்த்தகராக இருந்த புண்ணியத்தில் எனது பங்குக்கும் சில பெரிய சைஸ் பற்றறிகளும் சில பென் ரோச் (AA SIZE) பற்றறிகளும் கிடைத்தன. அன்றைய காலகட்டத்தில் என் பள்ளிப்பருவப் பொழுதுபோக்காக கதைபடிப்பதும் பாட்டுக்கேட்பதும் இரு கண்களாக இருந்தன ( ஏன் இப்ப மட்டும் என்ன குறைச்சலே??)

மின்சாரம் இல்லாத அந்தக் காலப்பகுதியில் பாட்டுக் கேட்பதற்கு, எனக்குக் கிடைத்த அந்த பற்றறிகள் தான் உபயோகமாக இருந்தன. ஆனால் எங்கள் வீட்டில் இருந்த வானொலிப் பெட்டியோ 6 பெரிய சைஸ் பற்றறிகளை விழுங்கினால் தான் பாடுவேன் என்று அடம்பிடித்தது. கையிருப்பில் இருந்தவறைத் திணித்து ” நீ பாடினால் போதும் சாமி” என்று என் மனசைச் சமாதானப் படுத்திக்கொண்டேன்.

அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியில் ஈ.பீ.டீ.பீ காரன்கள் ” மக்களின் குரல்” என்ற ஒரு நிகழ்ச்சி செய்துகொண்டு சிறீலங்கா அரசின் சில்லறைத்தனமான பொய்பிரச்சாரங்களைச் செய்துவந்தது என் போன்ற வானொலிப்பிரியர்களுக்கு விசனததை ஏற்படுத்தி இலங்கை வானொலிப் பக்கம் எமது காது போகாமல் பார்த்துக்கொண்டது. லங்கா புவத் லங்கா புழுவத் என்று பெருமையாக அழைக்கப்பட்ட காலமது. இலங்கை வானொலியைப் புறக்கணித்த எனக்குச் செவிக்குணவு படைத்தது சென்னை வானொலி.

சென்னை வானொலியில் இரவு ஏழுமணிக்கு வரும் விவசாய நிகழ்ச்சியில் கூட எனக்கு அப்போது ஈர்ப்பிருந்தது. பாமர ஜனங்களுக்குப் புரியும் வகையில் மொட்டைக்கருப்பன் உள்ளிட்ட அரிசி ஜாதிகளையும், பூச்சி கொல்லி மருந்துகளைப் பாவிக்கும் விதத்தையும் குறு நாடங்களாகவும் ஓரங்க வானொலி நாடகங்களாகவும் படைப்பார்கள். எனக்கு எவ்வளவு தூரம் இது உபயோகமாக இருந்தது என்பது ஒருபுறம் இருந்தாலும் தமிழ்நாட்டின் மூலாதாரமான விவசாயப் பெருமக்களுக்கு இந்த நிகழ்ச்சி பெருஞ்சேவை செய்திருக்கும் என்பதை அதன் படைப்பாற்றலை இப்போது அசை போடும்போதும் உணர்கின்றேன்.

என் பள்ளிகூட நாட்களில் காலை பள்ளிக்குப் போக முன் 7.33 இற்கு வரும் தென்கச்சி சுவாமிநாதனின் “இன்று ஒரு தகவல்” கேட்பதற்காக விறுவிறெனக் குளித்து முடித்துச் சீருடை அணிந்து காலை ஆகாரமும் உண்டு காத்திருப்பேன்.சுவாமிநாதனும் வழக்கம் போல் ஒரு அறிவுரை சார்ந்த கதையையும் , நடைமுறை யதார்த்தத்தில் வரும் நகைச்சுவைத் துணுக்கையும் பொருத்தமாக இணைத்துப் படக்கென தன் ஸ்டைலில் நிறுத்தும் போது வானொலியின் வாயை என் கைகள் மூட, கால்கள் ஏஷியா சைக்கில் மேல் தாவிப்போகும்.

சனி, ஞாயிற்றுக்கிழமை என்றால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி வரும் ஏனென்றால் பகலிலும் விசேடமாகப் பாடல் கேட்கலாமே என்பது தான். காலை 9 மணிக்கு புதுச்சேரி வானொலி நிலையத்திற்கு அலைவரிசை பிடித்தால் போதும் திரை கானம் என்ற பெயரில் முத்தான திரையிசைப்பாடல்கள் வந்து விழும். வானொலிப் பெட்டி என் படிப்பு மேசையில் இருக்கும். அதற்கு அருகில் எவ்வளவுக்கெவ்வளவு நெருக்கமாக என் தலையைச் சாய்த்துவைத்திருக்கமுடியுமோ அவ்வளவுக்கு நெருக்கமாக மேசையில் என் தலை கவிழ்ந்திருக்கப் பாடல் கேட்பது என் வழக்கம்.

“உவன் ஒரு இடமும் உலாத்தாமல் வீட்டில இருக்கிறதே போதும்” என்ற நிம்மதியில் குசினிக்குள் (சமையலறை) என் அம்மா.
“புதுச்சேரி வானொலி நிலையம் , திரையிசைப்பாடல்களில் அடுத்துவருவது, ஈரமான ரோஜாவே படத்திலிருந்து இசைஞானி இளையராஜா இசையில் மனோ பாட்டியது” …..என் காதை இன்னும் உன்னிப்பாய்த் தீட்டிக்கொண்டு பாடலைக் கேட்க ஆயத்தமாவேன். மனோ ” அதோ மேக ஊர்வலம் ” பாடலைப் பாடிக்கொண்டிருக்கச் சரணத்தில் “ஆ” என்ற ஹம்மிங்கை சுனந்தா ஆலாபனை செய்ய, குசினிக்குள் ஈரவிறகோடு போராடும் அம்மா எட்டிவந்து ” சோக்கான பாட்டு” என்று சொல்லிவிட்டு மறைவார்.

ஞாயிற்றுக்கிழமை கோயிலடிப்பக்கம் இருந்தாலென்ன, சுதா வீட்டுப்பக்கம் யார்ட் விளையாட்டு விளையாடினால் என்ன அந்த இடத்தை விட்டு என்னை நகர்த்தி என் வீட்டு வானொலிப் பக்கம் வரவைப்பது மாலை 4 மணிக்கு வரும் சென்னை வானொலி நிலைய நேயர் விருப்பம். இந்த நேயர்விருப்பம் நிகழ்ச்சிக்கு அடிக்கடி பாடல் கேட்கும் நேயர் பட்டியல் எனக்கும் பாடமாய் ஆகும் அளவிற்கு வந்த நாட்கள் அவை. எமக்கும் பிடித்த பாடல்களை ஒலிப்பதிவு செய்யவும், திரையில் பார்க்கவும் முடியாத அன்றைய யுத்தகாலத்தில் , இந்த நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையின் கடைகோடியில் இருக்கும் சகோதரனோ, சகோதரியோ நான் விரும்பிக்கேட்க விரும்பிய பாடலைத் தாமும் கேட்க அது ஒலிபரப்பாக, அந்த எதிர்ப்பாராத இன்ப அதிர்ச்சிச் தருணங்கள் வார்த்தைகளால் வடிக்கமுடியாதவை. அடிக்கடி அன்று பாடல் கேட்கும் சென்னை நேயர்கள்
லல்லு, சத்யா, ரேவதி, நீங்கள் இப்போது எங்கிருக்கிறீர்கள்? இன்னும் சென்னையிலா? இன்னும் அந்த உங்கள் விருப்பம் இன்னும் வருகின்றதா? அதில் இன்னும் பாடல் கேட்கின்றீர்களா என்று கேட்க எனக்கு அல்ப ஆசை.

இன்று வரை என்னை இளையராஜாவின் இசைமோகத்திலிருந்து விலகிவிடாமல் பார்த்துக்கொண்டதில் சென்னை வானொலிக்கும் முக்கிய பங்கு பெற்றிருக்கிறது. தேன் கிண்ணம், நேயர்விருப்பம், திரை இசை, திரை கானம் என்று எத்தனையோ த்லைப்பிட்டுப் பாடல் நிகழ்ச்சிகள் வந்தாலும் ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர, சில சமயம் அதுவுமில்லாமல் எல்லாமே ராசாவின் ராக ராஜ்ஜியம் தான். மனோஜ் கியானின் இசையில் இணைந்த கைகளில் வரும் ” அந்தி நேரத் தென்றல் காற்று, சந்திர போஸின் இசையில் பெண் புத்தி முன் புத்தி படத்தில் வரும் ” கொலுசே கொலுசே” பாடல், தேவாவின் இசையில் வைகாசி பொறந்தாச்சு படத்திலிருந்து “சின்னப்பொண்ணுதான்”
போன்ற விதிவிலக்குகள் தவிர, பச்ச மலப்பூவு (கிழக்கு வாசல்), இரண்டும் ஒன்றோடு ( பணக்காரன்), ஈரமான ரோஜாவே படத்தின் அனைத்துப்பாடல்களும், தானா வந்த சந்தனமே (ஊரு விட்டு ஊர் வந்து) என்று ஒவ்வொரு நேயர்விருப்பத்திலும் ராஜா தான் ஹீரோ.

நான் வீட்டில் வானொலி கேட்ட காலத்தை வீதிக்குக் கொண்டுவந்தது திண்டுக்கல் வானொலி நிலையம். 92 ஆம் ஆண்டு வாக்கில் ஒருநாள் யதேச்சையாக வானொலியின் அலைவரிசை முள்ளு விலகியபோது கேட்டது அந்த திண்டுக்கல் வானொலி நிலையப் பண்பலை வரிசையின் பரீட்சார்த்த ஒலிபரப்பு. என் அண்ணன் கொழும்பிலிருந்து கொண்டுவந்து பெட்டிக்குள் வைத்திருந்த வாக்மென்னுக்குள் (Walkemen) என்னிடம் அடைக்கலம் புகுந்த மற்றைய பென்ரோச் வகை பற்றறிகளைப் பொருத்திச் சைக்கிளில் போகும் போதும், சிவலிங்க மாமா வீட்டுத் திண்ணையில் இருந்த மாலைப் பொழுதுகளும் திண்டுக்கல் வானொலி நிலையத்தின் துல்லியமான பரீட்சார்த்த ஒலிபரப்பின் பாடல்களே கதியென்று இருந்தேன். எங்களூரில் வாக்மென்னின் வாசனை பிடிபடாத காலமது. என் பாட்டுக்குப் பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும் போது சுப்பையா குஞ்சியப்பு
” உவனுக்கென்ன காதில குறைபாடோ ?” (செவிட்டு மெஷின்?) என்று எட்டிப் பார்த்துப் போவார்.
தேவாவின் இசையில் “சோலையம்மா” படப்பாடல்கள் முழுவதையும் மூச்சுக்கு முன்னூறு தரம் ஒலிபரப்பி என் சாபத்தை வாங்கினாலும், ராஜாவின் இசையில் பாண்டி நாட்டுத் தங்கத்தில் வரும் ” உன் மனசில பாட்டுத்தான் இருக்குது” போட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டார்கள் திண்டுக்கல்லுக்காரர்கள்.

இடைக்கிடை வந்து போக்குக் காட்டியும், சீன மற்றும் மற்றைய மொழி அலைவரிசை வகையறாக்குள் சிக்கிப் பாடல் பாதி இரைச்சல் பாதியாக வந்து போன தூத்துக்குடி வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்டு வளர்ந்த காலம் அது. பாடசாலைகளும் ஒழுங்காக இயங்காமல் , நிலைமை சீர்கெட்ட காலத்தில் வந்த “எங்கிருந்தோ வந்தான்”……. “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேனோ” என்று மனதுக்குள் நன்றி போட வைத்த நண்பர்கள் இந்த வானொலிகள்.

“நிர்மா… நிர்மா வாஷிங் பெளடர் நிர்மா”, “சொட்டு நீலம் டோய்…. ரீகல் சொட்டு நீலம் டோய்”, “அஞ்சால் அலுப்பு மருந்து” இத்தியாதி விளம்பரங்களுக்க்குள் வந்து போகும் வானொலி நிகழ்ச்சிகள். “ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது” என்றவாறே சரோஜ் நாராயணஸ்வாமி வந்து போவார்.

விறுவிறுவெனப் படித்து முடித்து சாப்பாட்டு இடைவேளைக்காக நான் தேர்ந்தெடுப்பது இரவு 8 மணியை. அப்போது தான் ஹிந்தி நிகழ்ச்சிகள் முடிந்து தேன் கிண்ணத்தோடு வரும் “விவித் பாரதியின் வர்த்தக சேவை”. புத்தம் புதுப் படங்களின் விளம்பரங்களை அரை நிமிடத்துக்குள்ளோ ஒரு நிமிடத்துக்குள்ளோ இலாவகமாக அடக்கிச் செய்யும் அந்த அறிவிப்பாளர்களின் திறமை வெகுசிறப்பானது. வைகாசி பொறந்தாச்சு பட வெற்றி பல புதிய அறிமுகங்களைத் தமிழ்த்திரைக்குக் கொண்டுவந்ததை விவித் பாரதியைக் கேட்டதன் மூலம் ஊகித்துக்கொண்டேன். ஆத்தா உன் கோவிலிலே, தாயம்மா, வசந்த காலப்பறவை, மதுமதி போன்ற விவித்பாரதியின் பட விளம்பரங்கள் நீளும்.
அன்றைய காலகட்டத்துப் படங்களின் இசையமைப்பாளர்களையும் பாடல்களையும், கூகுள் போன்ற உலாவிகள் துணையின்றி என் ஞாபக ப்ளொப்பியில் இருந்து அவ்வப்போது எடுக்க விவித் பாரதிதான் கைகொடுத்தது. விவித் பாரதியின் வர்த்தகசேவை இன்னும் இருக்கிறதா தெரியவில்லை.

சிறு புல்லாங்குழல் ஓசை நெருடலோடு இலேசான சிரிப்புடன் எஸ்.பி.பி பாடும் “மண்ணில் இந்தக் காதல் இன்றி” என்ற பாதி வரியோடு வசந்த் இன் “கேளடி கண்மணி” பட விளம்பரம் வரும் போது இந்தப் பாடலை நான் முழுமையாகக் கேட்கும் காலம் எப்போது என்று மனசுக்குள் ஏக்கம் வரும்.
அதையும் மீறி, குலவை ஒலியைப் பெண்கள் இசைக்க,
“குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே ” என்று சொர்ணலதா பாடவும், ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் இன்
” என் ராசாவின் மனசிலே” என்று சனமற்ற குரலில் ஒரு பெண் அறிவிப்பு வந்து இந்தப் பாடலின் மேல் வெறி கொள்ளவைத்தது. ஆனது ஆகட்டும் என்று அடுத்தமுறை கணக்காய் ” குயில் பாட்டு ஓ ” என்ற பாடல் ஆரம்பிக்கும் தறுவாயில் என் வானொலியின் வாய்க்குள் கிடந்த ஒலிநாடாவில் பதிவு செய்ய விசையை அழுத்தினேன். அங்கு தான் மோசம் போனேன்,சாதாரண வானொலி கேட்பதை விட கசற் பிளேயரைக் கேட்பதற்கு வலு அதிகம் என்பதால் வானொலி என் பற்றறிகளைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டது.

சீமெந்துத் தரையில் பற்றறிகளை எறிந்து விட்டு மீண்டும் எடுத்துப் பாவித்தால் அதிகவலு அந்த பற்றறியில் ஏறி வானொலியும் பாடும் என்று பக்கத்து வீட்டு விஞ்ஞானி சுரேஸ் சொன்னான். அப்படியே ஆகட்டும் என்று அதன்படியே செய்து வானொலியின் முதுகில் பற்றறிகளைப் பொருத்தி கசற்றை மீண்டும் போட்டால் ” குயில் பாட்டு ஓஓஓ” அப்படியே சுவர்ணலதாவின் குரலை ஓவர்டேக் செய்து கோழி கூவுது படத்தில் அண்ணே அண்ணே பாடிய சாமுவேல் கிறப் பின் குரலாகத் தாவியது. இனிமேல் என் வானொலி கேட்கும் வேலை அவ்வளவு தான் என்று மனமொடிந்து பற்றறிகளை வீசியெறிந்தேன்.

அப்போது புதுமையான மின்பிறப்பாக்கியோடு சித்திமகன் சுதா வந்த கதை இன்னொரு சந்தர்ப்பத்தில்.

47 thoughts on “ஆகாச வாணியும் விவித் பாரதியும்….!”

 1. அருமையான பதிவு!

  இக்கரைக்கு அக்கரை பச்சை..நாங்கள்லாம் இந்திய வானொலிகளை புறக்கணித்துவிட்டு இலங்கை வானொலியே கதியென்று கிடந்தோம் .நீங்கள் தலை கீழாய்..ஹும்!

 2. வருகைக்கு நன்றி ஜோ

  இலங்கை வானொலியில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும், வானொலியின் தமிழ் மக்கள் மீதான விரோத நடவடிக்கையால் பின்னாளில் வெறுப்பைத்தான் சம்பாதித்தது.

 3. அற்புதமான பதிவு. ஜோ சொன்ன மாரி நாங்க கொழும்பு வானொலிய விரும்பிக் கேப்போம். ஆனாலும் காலயில திருநெவேலி வானொலியோட தான் அன்னய தினம் ஆரம்பிக்கும். வந்தே மாதரம், பக்தி பாடல்கள், மாநிலச் செய்தி, ஆஹாசவானி செய்திகள், அப்புறம் திரை இசைன்னு பொழுது ஓடும்.

  உங்கள மாரியே நேயர் விருப்பம் என்க்கும் ரொம்ப புடிக்கும். அதுக்காக பழியாக் காத்து கெடந்த காலமெல்லாம் உண்டு.

  90-களின் ஆரம்பம் வரைக்கும் வானொலி தான் நல்ல நண்பனா இருந்தது. ஆனா அப்புறம் இந்த செயற்கக் கோள் தொலைகாட்சி வந்ததும் எல்லாம் அடியோட மாறிப் போயிட்டுது.

  இப்ப எல்லாம் வானொலி கேக்குதது ரொம்பக் குறைவாயிட்டுது. அப்படியே கேட்டாலும் பண்பலை வானொலியத் தான் கேக்குதாக.

  பழசயெல்லாம் நியாபகப் படுத்தி விட்டுட்டீக…..

 4. வணக்கம் நெல்லைக்கிறுக்கன்

  எத்தனை செயற்கைக்கோள் தொலைக்காட்சி வந்தாலும் வானொலியின் பங்கை அழித்துவிடமுடியாதல்லவா? தொலைக்காட்சி பார்த்துச் சலித்து வானொலிப்பக்கம் ஜனங்கள் வரும் காலம் வரும்.

 5. //இக்கரைக்கு அக்கரை பச்சை..//
  உண்மைதான். இலங்கை வானொலி புகழ் பெற்றிருந்த காலத்திலும் சரி, பின்னரும் சரி, சென்னை, திருச்சி வானொலிகளின் பல நிகழ்ச்சிகளை இலங்கையில் விரும்பிக்கேட்போம். அவற்றில் நீங்கள் குறிப்பிட்ட விவசாய நிகழ்ச்சியும் ஒன்று. விவித் பாரதி விளம்பரங்களும் அன்று (!!) கேட்பதற்கு இனிமையானவை. கொழும்பில் திருச்சி வானொலியை விட சென்னை வானொலி தெளிவாகக் கேட்கும்.

  நல்லதொரு பதிவு.

 6. வணக்கம் சிறீ அண்ணா

  தங்கள் வருகைக்கு என் நன்றிகள். திருச்சி வானொலி நிலையம் என்று சொல்லும்போது லூஸ்மாஸ்டர் பகிடியில் வரும் திரிச்சீலை விடுங்கோ என்று சொல்ல றேடியோவுக்குள் திரிச்சீலை விட்டகதை ஞாபகத்துக்கு வருகின்றது.

 7. ஓ..நீங்களும் சரோஜ் நாராயணசுவாமி ரசிகரா? அவரது செய்தி வாசிப்பின் தனித்துவம் இன்றும் என் நினைவில் அவரது குரலை ஞாபகத்தில் வைத்திருக்கத் துணைசெய்கிறது.

  பாராட்டுக்கள் பிரபா! அருமையான நினைவுப்பதிவு.

 8. வணக்கம் மலைநாடான்

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள். செய்திவாசிப்பு என்பது ஒரு கலை. இலங்கை வானொலியில் கூட இதற்கெனத் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களுமே இருந்தார்கள். இந்திய வானொலியில் அப்பங்கினை நிறைவாகத் செய்திருந்தார் சரோஜ் நாராயணசுவாமி. பூர்ணம் விஸ்வநாதன் கூட ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்திருந்தார் என்பது உஙகளுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

 9. பிரபா

  இன்று காலையில் தான் செய்திவாசிப்பை பற்றி வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம்..அதற்கு காரணம்..என் தந்தையாரும் ஒரு காலத்தில் தில்லியில், தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்தார்..பூர்ணம் விஸ்வநாதன், அவருடைய சதோதரி லக்ஷ்மி, ஆகியோருடன் சேர்ந்து பணியாற்றியவர். உங்கள் பதிவை படிக்க சொல்லி என் தாய்க்கு தொலை பேசியில் சொன்னேன்…படித்துவிட்டு தந்தையின் நினைவுகள் வந்து விட்டதென கண்ணீர்வடித்தார்..

  நல்ல பதிவு பிரபா..

  மங்கை

 10. பழையவற்றை மீட்டிப் பார்க்கையில் மனதிற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. யாழில் செயற்கைக் கோள் வானொலி வசதியோ, தொலைக்காட்சி வசதியோ இல்லாத காலம் அது… பற்றறிகளை எவ்வளவு கவனமாகப் பாவித்த காலம் அது… வெயிலில் போட்டு மீண்டும் அதன் சக்தியினை கொஞ்சம் புதிப்பிப்பதோ அல்லது பற்றறியினைக் கடித்து அதனை மீண்டும் பாவிப்பதும்… பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தியதற்கு எனது நன்றி பிரபா அண்ணா.
  -கெளரிகரன்

  1. இந்த டிஜிட்டல் உலகத்துல மீண்டும் அகில இந்திய வானொலி நிலையங்களை செவிமடுக்க விரும்புகிறீர்களா?

   Simply Go and Download Tamil FM Radio App From Google Play Store

   Link Below👇👇👇

   https://play.google.com/store/apps/details?id=com.tamilfmradio.tamilfmsongs

   Re-Live Your Glory Moments again

   பி.கு:- நான் பிறந்தது 1996 நான் இப்போதும் AIR ரசிகன்

 11. தூத்துக்குடி அடிக்கடி ஒலிபரப்பும் “கருத்த மச்சான் ” பாடலை விட்டு விட்டீர்கள்
  இதே காலப்பகுதியில் நான் கொக்குவில் எடிசன் கல்வி நிலையத்தில் படித்ததால் ஊர் ஞாபகம் மீட்க நான் உங்கள் பதிவுகளை படிப்பது வழக்கம்

 12. வணக்கம் மங்கை

  தங்கள் மடல் என்னை நெகிழ வைக்கின்றது. உங்கள் தாயாரின் நினைவு மீட்டலுக்கு நான் ஒரு சிறு உந்துசக்தியை என் பதில் தந்தது தான் காரணம். சிரமம் இல்லையென்றால் தங்கள் தந்தையின் பெயரை அறியத்தரமுடியுமா? எனெனில் சரோஜ் நாராயணசுவாமி தவிர மறந்துவிட்ட பல செய்திவாசிப்பாளர்களின் செய்திப்படைப்பின் தீவிர இரசிகன் நான்.

 13. //Gowreharan said…
  பழையவற்றை மீட்டிப் பார்க்கையில் மனதிற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது.//

  வணக்கம் கெளரிகரன்

  பற்றறிகளை வெயிலில் சூடாக்கிப் பாவிப்பும் பழக்கம் எனக்கும் இருந்தது. அக்காலகட்டத்தில் வீடுகளின் திண்ணையில் வெய்யில் படும் இடத்தில் பற்றறிகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பது சர்வ சாதாரணம் இல்லையா?

  செயற்கைகோள் தொலைக்காட்சிகள் இல்லாமல் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும், இந்த மாதிரி நல்ல அனுபவங்கள் கிடைக்கும் அல்லவா.

  தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.

 14. //அருண்மொழி said…
  தூத்துக்குடி அடிக்கடி ஒலிபரப்பும் “கருத்த மச்சான் ” பாடலை விட்டு விட்டீர்கள்//

  அதுமட்டுமா அருண்மொழி

  அதே படத்தில் பூப்பூபூ பூப்பூத்த சோலை, தர்மதுரையில் அனைத்துப் பாடல்களும், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். என் காலத்தைத் சேர்ந்த ஒத்த ரசனை கொண்ட உங்களைக் காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  எடிசன் கல்வி நிலையத்தில் படித்த பலர் என் பள்ளித் தோழர்கள்.

 15. பிரபா!
  எங்கள் வீட்டார் நமது பாரம்பரிய இசைரசிகர்களாக இருந்ததால்; நானும் மிகரசித்ததால் ;தென்னிந்திய அன்றைய மதராஸ்;திருச்சி;பாண்டிச்சேரி வானொலி இரசிகனாகவே ! வளர்ந்தேன். என் இசைப்பசிக்குச் சளைக்காமல் தீனி போட்ட இந்த வானொலிகளை மறக்க முடியாது. இத்துடன் எங்கள் இலங்கை வானொலியின் தேசிய சேவை;வர்த்தகசேவை மறக்கக் கூடியவை அல்ல.
  திருச்சி வானொலியின் “பளிங்குத் தெளிவான” ஒலிபரப்பில்; இசைக்கச்சேரிகள்;பட்டிமன்றங்கள்;கவியரங்கங்கள்;திரைப்பட இசை;நாடகங்கள் எனக் கேட்டு மகிழ்ந்த காலம்; இத்தனை வானொலிகள் வந்தும் மீளமுடியவில்லை.
  83ல்;கலவர நேரத்தில் மாநிலச் செய்திகளுக்காகத் தவமிருப்போம். மற்ராஸ் பின்பு சென்னை;திருச்சி;திருச்சிராப்பள்ளி எனவும் மாற்றம் கண்டது; அன்றைய “திருச்சி- கூத்தபிரான் எனும் அறிவிப்பாளர் பெயர் ஞாபகத்தில் உள்ளது. பொங்கல்;தீபாவளி,புதுவருடப்பிறப்பு;;சிறப்பு நேயர் விருப்பம் மாலை 3மணிமுதல் ஒருமணி நேரம் ஒலிபரப்புவார்கள்; ஒருதடவை நடிகர் திலகம் பாடல்களை வெகுஅழகாகத் தொகுத்து வழங்கியது. மறக்க முடியாது.
  செய்தி டெல்லி அஞ்சலாக வரும் போது; ஒரு வித இரைச்சல் அத்துடன்” ஆகாஷ் வாணி- செய்திகள்-வாசிப்பது ,சரோஸ் நாரயணசுவாமி” மறக்கத்தான் முடியுமா??? விஜயா கூட; இசை விழா;தியாகராஜ சுவாமிகள் உற்சவம் என்றால் மார்கழி;தை எமக்குக் கொண்டாட்டமே! அன்றைய செம்பொன்குடி சீனிவாசையர்,செம்பை வைத்தியநாத பகவதர்;எம் எஸ் எஸ்;வசந்தகுமாரி,பட்டம்மாள்;பாலமுரளி கிருஸ்ணா;மதுரை சோமு,சீர்காழி கோவிந்தராஜன்.;;;கச்சேரி இரவு 12 மணி வரை நேரடி அஞ்சல் செய்வார்கள்.அப்பபா!!!;நள்ளிரவின் பின்பும் மண்டபத்தில் கச்சேரி தொடரும்,ஆனால் வானொலி;;நிறுத்துமுன்.;;;இது வரை இசைவிழாவில் தமிழிசைச்சங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்;திரு.சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கச்சேரியில் இருந்து;ஒரு பகுதியை அஞ்சல் செய்யக் கேட்டீர்கள்; இத்துடன் இந்த ஒலிபரப்பை முடித்துக் கொண்டு நிலையம் திரும்புகிறோம்” என அறிவிக்கும் போது ;ஒருங்கே” ச்” கொட்டுவார்கள்;மிகுதிக் கச்சேரி கேட்கமுடியாத கவலையில்.
  எங்கள் வானொலியிலும் காலையில் பொங்கும் பூம்புனல்; இரவின் மடியில்; மறக்க முடியாதவை!
  எழுதிக் கொண்டே இருக்கலாம்! மறக்க முடியுமா???அது வாழ்வில் ஓர் அங்கம்
  யோகன் பாரிஸ்

 16. thanks பிரபா

  நிஜமாவே அப்பாவை நினைக்க வைச்சது உங்க பதிவு.. அப்பாவின் பெயர் SriRamachandran.. உங்களுக்கு தெரியுமான்னு சந்தேகம் தான்.. ஏனென்றால் அவர் நான் பிறப்பதற்கு முன்பே செய்தி வாசிப்பாளராக இருந்தார் .. எனக்கே அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை..
  பூர்ணம்விஸ்வநாதன் மட்டும் இன்றும் எங்களுடன் நட்புடன் பழகி வருகிறார்
  வித்தியாசமான அதே சமயம் ரசிப்புத்தன்மையுடன் பதிவு இட்டு வருகிறீர்கள்..வாழ்த்துக்கள்

  நன்றி பிரபா

  மங்கை

 17. வணக்கம் யோகன் அண்ணா

  வழக்கம் போல் உங்கள் காலத்துப் பதிவை வாசிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இலங்கை வானொலி நிகழ்ச்சிகளின் தனித்துவம் பற்றியும் சொல்லவா வேண்டும். ஆனால் அது பொற்காலமாகிவிட்டது.

 18. வணக்கம் மங்கை

  தங்கள் தந்தையரின் காலத்தில் வானொலி கேட்கும் பாக்கியம் பெறவில்லை என்றாலும், தங்கள் மூலம் இத்தகவல்கள் அறிவதையிட்டு மனம் மகிழ்கின்றேன்.

 19. வணக்கம் கானா பிரபா!

  உங்களைப் போலதான் நானும் ஒரு
  வானொலி வெறியன் தான்.எனது அனுபவங்களும் உங்களதுடன் பொருந்திப்போகின்றன.நான் மலேசிய,
  சிங்கப்பூர் வானொலிகள் கூட கேட்பேன்.96க்கு பிற்பட்ட காலப்பகுதியில் சக்தி எப்.எம்,சூரியன்,
  சுவர்ணஒலி( இப்போது இல்லை) கேட்பற்காக அன்ரனா கூரையில் பொருத்தி கீழே விழுந்து இப்படி பல
  அனுபவங்கள்.இப்போது யாழ்ப்பாணத்தில் அவை தெளிவாக கேட்கின்றன.

  அருணா இசைக்குழு கூட தமது நிகழ்ச்சிக்கு இடையில் “என் அத்தானின்
  வயல் தனிலே”பாடியது ஞாபகத்துக்கு
  வருகிறது.

 20. அற்புதமான நினைவுவலை மீட்பு பிரபா.
  தொலைகாட்சிக்கு முந்தைய நாட்களில்
  வானொலி மற்றும் புத்தகங்களின்
  உலகம் மறக்கமுடியாதது.
  ———————-

  முன்னொரு பதிவில் நான் இட்ட பின்னூட்டம் கீழே
  //அசெஸ் பைரில்லம் –நீலப் பச்சைப்பாசி ??
  (நீலப் பச்சப்பாசி…. .நம்ம நிலத்தில் விளையும் ஈசி…என்று ஒரு பாட்டு
  கூட போட்டதாய் ஞாபகம்)
  பாக்டம்பாஸ் 20-20-0-15 மற்றும்
  ஸ்பிக் டிஏபி – ஸ்பிக் யூரியா (டிஏபி -Di Ammonium Phospate ??)
  எவ்வளவு முக்கியம் என்பதையும் அதில் எவ்வாறு தேவையான அளவு தழைச்சத்து, மணிச்சத்து , சாம்பல் சத்து ,உள்ளது என்று எடுத்து வழங்குவார்.//

  http://myspb.blogspot.com/2006/06/blog-post_04.html

 21. வணக்கம் கரிகாலன்

  மலேசிய சிங்கப்பூர் வானொலிகளைக் கடல்கடந்து வந்து தான் கேட்டு மகிழ்கின்றேன். வானொலியின் அன்ரெனாவை அங்கும் இங்கும் சுழற்றிக் கேட்ட காலத்தை மறக்கமுடியுமா?
  வருகைக்கு என் நன்றிகள்.

 22. வணக்கம் கானா பிரபா…

  உங்கள் பினோலக்ஸ் பைப்பு போல எனக்கு

  ” தலைவலியா இல்லை முதுகுவலியா..

  அனசின் போதும் அனசின்..”

  ரசித்தேன் இந்த பதிவு.

 23. //கார்திக்வேலு said…
  அற்புதமான நினைவுவலை மீட்பு பிரபா.
  தொலைகாட்சிக்கு முந்தைய நாட்களில்
  வானொலி மற்றும் புத்தகங்களின்
  உலகம் மறக்கமுடியாதது.//

  வணக்கம் கார்திக்

  எங்கள் வானொலி சுகானுபவத்தில் விடுபட்டது கோவை வானொலி நிலையம். விவசாய விஞ்ஞானிகள் பாமர ஜனங்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் அழகே தனி. இப்போதெல்லாம் அதைக் காதுகொடுத்துக் கேட்க ஆள் இருக்கிறார்களா தெரியவில்லை.

 24. வானொலி அண்ணாவாக நீங்கள் மாறி விட்டீர்களா! 🙂

  சின்ன வயதில் எங்கள் வீட்டில் வானொலி இருந்ததுதான். ஆனால் அதிகம் கேட்டதில்லை. காரணம் தொலைக்காட்சி. எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இருக்கவில்லை. தூத்துக்குடியில் புதுக்கிராமத்தில் புரொபசர் மார்க்கசகாயம் அவர்கள் வீட்டில் டீவி இருந்தது. அங்குதான் டீவி பார்ப்பது. சென்னை நிலையம் ஏது? இலங்கை ரூபவாஹினிதான்.

  அதில் வரும் நிகழ்ச்சிகளும் விளம்பரங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆய்புவன் என்று தொடங்கும் செய்திகளைக் கூட புரியாமல் பார்ப்பேன்.

  நிகழ்ச்சியில் பேசுகிற தமிழின் வசீகரம், லலிதா நகை மாளிகை விளம்பரம், நெஸ்டோமால்ட் பால் பவுடர் விளம்பரம், சிக்னல் டூத் பேஸ்ட், இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். நான் சொல்வதெல்லாம் மிகச் சிறிய வயதில். பிறகு இலங்கையின் பிரச்சனை தீவிரமடைய அடைய ரூபவாஹினி புள்ளிவாஹினியாய்ப் போனது.

  ஜோ சொல்வது போல இலங்கை வானொலி மிகப்பிரபலமாக இருக்கும். தூத்துக்குடிப் பக்கமெல்லம் நிறைய சொல்வார்கள்.

 25. //செந்தழல் ரவி said…
  வணக்கம் கானா பிரபா…

  உங்கள் பினோலக்ஸ் பைப்பு போல எனக்கு

  ” தலைவலியா இல்லை முதுகுவலியா..

  அனசின் போதும் அனசின்..”//

  வணக்கம் ரவி

  வானொலி விளம்பரங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். நரசுஸ் காபி, கோபல் பற்பொடி, அஞ்சால் அலுப்பு மருந்து, சொட்டு நீலம் என்று கேட்காதீர்கள் ரீகல் சொட்டு நீலம் என்று கேட்டு வாங்குங்கள் இப்படி நீளுமல்லவா..

 26. // G.Ragavan said…

  சின்ன வயதில் எங்கள் வீட்டில் வானொலி இருந்ததுதான். ஆனால் அதிகம் கேட்டதில்லை.//

  வணக்கம் ராகவன்

  வானொலியின் பெருமைகளை அருகே இருந்தும் கேட்காத குற்றத்துக்காக உங்களைத் தண்டிக்கவேண்டும்:-)

 27. வணக்கம் கானபிரா ..நன்றிகள் நல்லதொரு நினைவு மீட்டலை தந்தமைக்கு….இரவில் கடல் அலைகளின் ராகங்களுடன் இணைந்து வருகின்றதோ என்ற பிரமையை ஏற்படுத்தவைக்கும் ஆகாசவாணி செய்திகளும் விவித்பாரதி ஒலிபரப்புகள் இன்றும் நினைவுகளில் இருக்கின்றன…

  இந்திய டெஸ்ற் கிரிக்கட் பேட்டி கொமன்றிகளை…. சென்னையில் நடப்பவை மட்டும் தமிழில் கேட்கலாம்

  மற்றவை எல்லாம் ஆங்கிலத்திலும் கிந்தியிலும் மாறி மாறி போட்டு கொண்டிருப்பார்கள்..நல்லாய் கிரிக்கட் போய்க்கொண்டிருக்கும் போதே சிலவேளை கிந்திக்கு வர்ணணை மாறிவிடும்…தனக்கு புரியாத விரும்பாத ஹிந்தியை கேட்க வேண்டிய கட்டாயம்… அந்த பழக்கத்தில் சில கிந்தி சொற்கள் பழக்கமாகி விட்டது…. அவையாவன… ஏக் தோ தீன் சாரங்கலியே….. ஓன்று இரண்டு மூன்று பவுண்டிரியாம்

 28. வணக்கம் சின்னக்குட்டியர்

  ஹிந்தி நிகழ்ச்சிகளுக்காகத் தமிழ் நிகழ்ச்சிகள் துண்டாடப்படுவது தூரதர்ஷன் தொலைக்காட்சியிலும் உண்டு. இருப்பினும் அந்தத் தமிழ்தேன் வந்து காதில் பாய்ந்த நாட்கள் இனிமையானவை.

 29. வணக்கம் டி சே

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

 30. கானா பிரபா
  உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வாசிக்கிறேன். தூத்துக்குடி வானொலி அடிக்கடி ஒலிபரப்பும் கருத்த மச்சான், மெதுவா தந்தி அடிச்சானெ பாடல்களை மறந்து விட்டீர்களே,

  எனது முதல் பதிவிற்கு மறுமொழிந்ததுக்கு நன்றிகள், நீங்கள் இணுவில் என்பதால் கொக்குவில் பற்றி நான் எழுதிய புதிய பதிவையும் பாருங்கள்
  http://solvathellamunmai.blogspot.com/

 31. வணக்கம் அருண்மொழி

  இப்படி நிறைய நம் நெஞ்சையும் காதையும் நிறைத்தபாடல் கேட்டகாலம் உண்டு.

 32. நல்ல நினைவுப் பதிவு பிரபா. நானும் இலங்கை வானொலியுடன் வேறெங்கெல்லாம் பாடல்கள் கேட்க முடியுமோ அங்கெல்லாம் அலைவரிசையில் அலைவேன். வெரித்தாஸ், பிபிசி எதையும் விட்டு வைப்பதில்லை. பல ஞாபகங்களைக் கிளறியுள்ளது உங்கள் பதிவு.

 33. வணக்கம் சந்திரவதனா அக்கா

  இந்திய வானொலிகள் தவிர்த்தும் நம் காதுகள் தேடியலைந்த வானொலிகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

 34. இதே காலப்பகுதியில் எனது கதையும் இவ்வாறுதான் இருந்தது.
  பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப் பட்டிருந்தன.இரவு நேரங்களில் தான் இந்திய அலைவரிசை கேட்பேன்.
  உங்கள் பதிவைப் பார்த்த பின்னர் தான் அந்த விளம்பரங்கள் நினைவுக்கு வந்தன.”கேளடி கண்மணி….” ஒலிக்கும் போது எங்கிருந்தாலும் வானொலிக்கருகே ஓடி வரும் காலம் அது.
  எங்கள் பகுதியில் ஜே.வி.பி. இயக்கத்தினர் மின்பிறப்பாக்கிகளைத் தகர்த்திருந்தனர்.மின் கலங்களை அடுப்பின் அருகே வைத்துச் சூடாக்குவது தான் எனது உபாயமாக இருந்தது.(யார் சொல்லித்தந்தார்கள் என்பது நினைவில் இல்லை)
  வானொலி நிகழ்ச்சிகள் தான் எனக்குறிய நேரஅட்டவணைகளை வகுத்துத் தந்திருந்தன.
  குளிக்கும் நேரம்,விளையாடும் நேரம்(வானொலியைப் போட்டு சத்ததைக் கூட்டி வைத்துக் கொண்டு),அம்மம்மா வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு choper சைக்கிளில் போய்வர எடுக்கும் நேரம் … என பாடல்களின் உலகில் வாழ்ந்த காலம் அது.
  உங்கள் பதிவைப் பார்த்த போது மீண்டும் அந்தப் பொற்காலத்தை அனுபவித்தது போன்றிருந்தது.

 35. வணக்கம் பஹீமாஜஹான்

  என் சமகாலத்தில் என்னைப் போலவே நீங்களும் அனுபவித்து வானொலியைக் கேட்டிருக்கின்றீர்கள் என்பதை அறியும் போது அகம் மகிழ்கின்றது. வானொலி நிகழ்ச்சிகளை வைத்து நேர அட்டவணை அமைவதாகச் சொல்லியிருந்தீர்கள். உண்மை தான் அதே பாங்கில் தான் என் அன்றைய வாழ்வும் இருந்தது.

 36. அற்புதமான பதிவு கானா பிரபா.. நீங்கள் கேட்ட நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் எல்லாமும் நானும் கேட்க விரும்பி வானொலியே கதியாகக் கிடந்த நாட்களை நினைவுப் படுத்திவிட்டீர்கள்..

  தென்கச்சி சுவாமிநாதனுக்காக, காலை அம்மாவும் அப்பாவும் அப்போது செய்து கொண்டிருக்கும் சமையல், சண்டை, மிக்ஸி, எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் அப்படியே நிறுத்திவிட்டு வானொலி கேட்க காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்வார்கள் – நாங்களும் தான்..

  நேயர் நேரத்தில், ஒலி பரப்பும் பாடலைப் பாடியது SPBயா, மனோவா என்று எனக்கும் அண்ணனுக்கும் போட்டியே நடக்கும். சின்னச் சின்ன குரல் வேறுபாடுகளில் அது யாரென்று கண்டுபிடித்து, நிகழ்ச்சி தொகுப்பாளரும் நாம் சொல்வதையே சொல்லும் போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே..!!

  இப்போதும் வேலை நேரத்தில் கூட FM தான். ஆனா, 24 மணிநேரம் பாட்டு கேட்டுக் கேட்டு கேட்பதில் அத்தனை ஆர்வமில்லாமலேயே ஏதோ ஓடுகிறது என்ற உணர்வில் வேலையும்..

  என்ன இப்படி, மடத்துவாசல் மொத்தமாக மாறிவிட்டது??!! 🙂 நன்றாக இருக்கிறது..

 37. ம் கானாபிரபா அண்ணா விவித்பாரதியில் 8.30 க்கு நாடகம்போடுவார்கள் அதைநானும்விரும்பி கேட்பேன் அந்த றீகல் சொட்டு நீல விளம்பரம் எனது பேவரிட் ஆ இருந்தது ஆனா பிறகு கொஞ்சநாள்ள நிண்டிருச்சில்ல ஏன்?
  அதற்காக கவலைப்பட்டிருக்கிறேன்
  அன்புடன்
  த.அகிலன்

 38. //பொன்ஸ் said…
  அற்புதமான பதிவு கானா பிரபா.. நீங்கள் கேட்ட நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் எல்லாமும் நானும் கேட்க விரும்பி வானொலியே கதியாகக் கிடந்த நாட்களை நினைவுப் படுத்திவிட்டீர்கள்..//

  தங்கள் கருத்துக்கு நன்றிகள் பொன்ஸ்

  இப்படியான நம் பால்யகாலத்து சந்தோஷங்கள் நாம் வாழும் போதே கனவுகளாய் மாறுவதோ அல்லது புதிய ரசனைகள் வந்து புகுந்து கொள்வதோ காலமாற்றம் என்றாலும் கூட ஜீரணிப்பது கஷ்டம் தானே. அந்த நாளில் இப்படி அனுபவிச்சுக் கேட்ட/மகிழ்ந்த விஷயங்களும் அப்படித் தானே.

  எனது டெம்ளேட்டிற்கு மாற்றம் தேவைப்பட்டது. ஆனாலும் டெம்ப்ளேட் மாற்றுவதில் நீங்கதான் கில்லாடி:-)

 39. // த.அகிலன் said…
  அந்த றீகல் சொட்டு நீல விளம்பரம் எனது பேவரிட் ஆ இருந்தது ஆனா பிறகு கொஞ்சநாள்ள நிண்டிருச்சில்ல ஏன்?//

  வணக்கம் அகிலன்

  ரீகல் சொட்டு நீலம் விளம்பரம், ஏ.ஆர் ரஹ்மான் விளம்பரப்படங்களுக்கு மட்டுமே இசையமைத்த காலத்தில் அவரின் இசையில் மால்குடி சுபா பாடியது.
  ரீகல் சொட்டு நீல அதிபர் தன் மனைவி பேரப்பிள்ளையுடன் சில மாதம் முன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது கவலையான செய்தி.

 40. வணக்கம் பிரபா. அருமையானதொரு பதிவு. நினைவுகளை எங்கோ கொண்டு சென்று விட்டீர்கள் . சென்னை வானொலியில் செல்வராஜ் என்றொருவர் இருந்தார். மாநில செய்திகள் வாசிபபதற்காக. எவ்வளவோ நினைவுகள் மலரும் நினைவுகள் நன்றி.

  பரதன்

 41. வணக்கம் பரதன்

  நம் நினைவுமீட்டலை ஒத்த ரசனை கொண்ட ஒருவர் சமகாலத்தில் அனுபத்திருப்பதைக் கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. செல்வராஜ்ஜின் வாசிப்பை நானும் கேட்டு ரசித்திருக்கின்றேன். குறிப்பிட்ட மறந்துவிட்டேன். தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள்.

 42. மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் பிரபா. அதுவும் விவசாய நாடகம் பற்றி எழுதி இருக்கிறீர்கள் பாருங்கள் .நான் கூட அதை ரசிப்பேன்.

 43. வணக்கம் பிரபா அண்ணை
  எவறஸ்ற் பாலா வாத்தி காலத்தில் என் இ சி எனவே இயங்கியது என்று நினைக்கின்றேன் அதாவது புதிய கல்வி நிலையம் என்றாக்கும்
  அங்குதான் வாணிவிழாவில் முதன் முதலாக அழகிய பொன் வீணையே என்ற பாடலை கேட்டு ரசித்த ஞாபகம் உண்டு

  விஜுி

 44. வாங்கோ விஜி

  நீண்ட நாளைக்கு முன் போட்ட பதிவை வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி, பழைய நினைவுகள் தான் எங்களை உயிர்ப்பிக்கின்றன.

 45. எவ்வளவு அருமையான நினைவலைகள்.

  திருச்சியில் இருந்தபொழுதுகளிலும், பிறகு சென்னைக்கு வந்தபிறகும் எனக்கும் அந்த நான்குமணி நிகழ்ச்சிகள் பிடிக்கும். அனேகமாக எல்லாமே புதிய பாடலாக இருந்தது முக்கிய காரணம். அப்புறம் "புவனலோஜனை" 🙂

  நீங்கள் குறிப்பிட்ட அனேக நினைவுகளை இப்பொழுதும் இங்கு அனுபவித்துணரலாம், ஆனால் பண்பலையே பெரிதும் ஆக்கிரமித்துக்கொள்கிறது. ஏனெனில், தனி வானொலிப்பெட்டி இதற்குத்தேவையில்லை.

Leave a Reply to admin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *