வாழைமரக்காலம்

யாழ்ப்பாணம், ஏப்ரல் 14, 2006, காலை 11 மணி

“வருஷப்பிறப்பு நாள், நல்ல நாள் அதுவுமா, ஒருக்கா சிவா மாமா வீட்ட போட்டு வா”, இது என்ர அம்மா. விடிய வெள்ளன நாலு மணிக்கே கோயில் எல்லாம் போன களைப்பிருந்தாலும், சிவா மாமா வீடு எண்டதும், போகவேணும் எண்ட அவா என்னை உந்தித் தள்ளியது.

“வாங்கோ அப்பன் பிரவு”, என்ர குஞ்சு வருசப் பிறப்பு அதுவுமா வந்துட்டுது, சிவா மாமாதான் நாள் கடை திறக்கப் போட்டார், என்றவாறே சிவா மாமா வீட்டை போனதும், வதனா மாமி தான் வாசலில் நின்று வரவேற்றார். காலையில் தண்ணீர் தெளித்த சீமெந்து முற்றத்தைக் காட்டி ” கவனமப்பு, பாசி வழுக்கும், கோழிப் பீச்சலும் இருக்குது, எட்டிவாணை” என்றவாறே என் கால் பதியும் தரையை கவனமாகப் பார்க்கிறா. சிவா மாமாவின்ர பிள்ளையள் ஒரு அந்நியனைப் பார்க்கும் களையில் விறாந்தையினுள் போடப்பட்ட வயர் கதிரையில் இருந்து எட்டி என்னைப் பார்க்கினம். கையோட கொண்டுபோன சொக்கிளேற் பெட்டியை கடைசிப் பிள்ளையிடம் நீட்டுகிறேன். ஓரச்சிரிப்போட வாங்கித் தன் சட்டையில் இறுக்கமா வச்சிருக்குது. ” மாமா சொக்கிளேட் தந்தால் தாங்க்ஸ் எல்லோ சொல்லோணும்” எண்டு தாய்க்காறி சொல்லவும், “தாங்க்ஸ்” என்று அமுக்கமாகச் சொல்லிவிட்டு, சீமேந்து தரையில் தன் காற்பெருவிரலால் எட்டிக் கோலம் போடுகிறது கடைசி.

தன் குடும்பப் புதினங்களைச் சொல்லியவாறே, என்ர குஞ்சு எங்களைத் தேடி வந்திட்டுது என்று அடிக்கடி சொல்லிக்கொள்கிறார் வதனா மாமி. சிப்பிப் பலகாரமும், பால் தேத்தண்ணியும் பரிமாறப்படுகிறது.

பொத்திப் பொத்தி வச்ச விஷயத்தை, அடக்கமுடியாமல் கேட்டு விடுகிறேன்.
” தேவராசா அண்ணை இருந்த வீடு இப்ப எப்பிடிக் கிடக்குது”?

“அதையேன் பறைவான் பிரவு, போன நெவம்பரில காத்திகேசு அண்ணையின்ர பெடியன் கந்தவேள் ஊருக்கு வந்தவன். சிவாமாமா , உதை உப்பிடியே விடாமை வீட்டை இடிச்சுப் போட்டு, நிலத்தை உழுது வாழைத் தோப்பு போடுங்கோவன், நான் செலவுக்காசு தாறன்” எண்டு சொன்னவன்.
வீட்டை இடிச்சு , கல்லை எல்லாம் டிரக்டரிலை ஏற்றிப் போய்ப் கிளியராக்கி, நிலமெல்லாம் உழுதாச்சு. ஒண்டரை லட்சம் ரூவாய் முடிஞ்சுது” என்றவாறே

” தம்பி! மாமாவைக் கூட்டிக்கொண்டு போய் அந்தக் காணியைக் காட்டணை” என்று மூத்தவனுக்குக் கட்டளையிடுகிறா வதனா மாமி. அவனோடு கூடப் போய் பக்கத்துக் காணியான தேவராசா அண்ணை இருந்த வீட்டைப் பார்க்கிறேன்.


நன்றாக உழுது பண்படுத்தி பாத்தி கட்டி, வாழை மரங்கள் லைனுக்கு நிக்கினம். என்ர கண்கள் தோட்டத்தை வெறித்தவாறே நிலைகுத்தி நிற்கின்றன.
இந்த வாழைக்குட்டிகளுக்கு உரமாகிப் போனவை தேவராசா அண்ணை,அவர் மனைவி, மூண்டு பிள்ளையள்.
கொஞ்ச நாள் அமைதி, பிறகு சண்டை, ஹெலியும், பொம்மரும் குண்டு போடும், தேவராசா அண்ணை குடும்பம் போலை சில குடும்பங்கள் அழியும், தென்னிலங்கைப் பேப்பர்களில இவர்கள் பயங்கரவாதிகள் போலவும் , பயங்கரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டது போலவும் செய்திவரும். தாய் தகப்பன் இல்லாத குழந்தைகள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்குப் போகும். படிப்பும் தொலைந்து வாழ்க்கையும் தொலைந்த இளைஞர் கூட்டம் போராளிகளாக உருவெடுக்கும். கொஞ்சக் காசும், வெளிநாட்டில் உறவும் இருக்கும் சிலர் காணியை விட்டு முகவரி தொலைத்தவர்களாய் வெளிநாடு போவர். இதுதான் காலாகாலமாய் நடந்து வரும் சுழற்சி. ஒரு சிலேட்டில அழிச்சு அழிச்சு எழுதுவது போலத் தான் எங்கட சனத்தின்ர வாழ்க்கை.
என் தொண்டைக்குழியை அடைப்பதுபோல சோகம் அப்பிக்கொள்ள மீண்டும் பழைய நினைவை அசைபோடுகின்றேன் நான்……

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இராணுவ நடவடிக்கைய தொடர்ந்து இடம்பெயர்ந்தவர்களில் தேவராசா அண்ணர் குடும்பமும் ஒன்று. எங்களூர் கார்த்திகேசு அண்ணர் மகள் கலியாணம் கட்டி கனடா போனவுடன் அவவுக்கு சீதனமாக் கிடைச்ச வீடு வெறுமையாக கிடக்கவும் அதில் குடியேறினார்கள் தேவராசா அண்ணர் குடும்பம்.

அவருக்கு மூண்டு பிள்ளைகள், மூத்தவள் படிப்பில் படுசுட்டி, எங்களூர் சைவப்பிரகாசா வித்தியாசாலையில் அவள் சேர்ந்த நாள் முதல் படிப்பிலும் பேச்சுப் போட்டிகளிலும் அவள் தான் முதலிடம். தன் தாயின் முன்னால் கத்தி கத்தி பேச்சு போட்டிக்கு பயிற்சி எடுப்பது இப்போதும் என்ர காதில கேட்குது.இரண்டாவது பிள்ளை லாவண்யன் அவனுக்கு அப்போது பத்து வயது இருக்கும். நான் எங்கட வைரவர் கோயில் பூசைக்கு பின்னேரம் ஆயத்தமாகும் போது அவன் தான் கூடமாட ஒத்தாசை செய்வது வழக்கம். கூட்டுவதில இருந்து தண்ணீர் கொன்டுவருவது, என்னோடு சேர்ந்து பஜனை பாடுவது எண்டு அவன் பங்கை செய்வான்.அவர்களில் கடைக்குட்டி சரியான வெக்கறை, அப்போது அவளுக்கு மூண்டு வயது இருக்கும் மதிலுக்கு பின்னால ஒளிச்சிருந்து தன்ர அண்ணன் என்னோடு வைரவர் கோயில் பூசை செய்வதை பார்த்துக்கொண்டு இருப்பாள். கிட்டவந்து எங்களோட சேர்ந்து தானும் இணைய அவளுக்கு விருப்பம் இருப்பதை அவளுடைய கண்கள் காட்டிக்கொடுத்து விடும்.தாய்க்காறி குளிப்பட்டும் போது சோப்பு நுரை கண்ணில பட்டு அவள் கத்தும் கத்து ஊரையே கூட்டிவிடும்.

தேவராசா அண்ணையும் அவருடைய மனைவியும் சண்டை பிடிச்சு ஒரு நாள் அறியன்.பிழைப்புக்காக சைக்கிள் திருத்தும் கடை வச்சிருந்தார்.இலங்கை ஆமி 95ஆம் ஆண்டு பிளேனால குண்டு போடேக்க அவர்கள் வீட்டுக்க தான் பதுங்கி இருந்தவையாம். குண்டு இலக்காக இவர்கள் வீட்ட தான் பதம் பார்த்தது. முழுக்குடும்பமும் அழிஞ்சு போச்சு.
பத்து வருடம் கழிச்சு 2005 மார்ச் கடைசியில, ஊருக்கு போனேன்.தேவராசா அண்ணர் வீடு அதே அழிபாட்டோட கிடந்தது.அதுதான் இந்தப்படம்.மூத்தவள் கத்தி கத்தி பேச்சு போட்டிக்குப் பயிற்சி எடுப்பதும், கடைக்குட்டியின் வெக்கச்சிரிப்பும், என்ர மனசுக்குள்ள ஒருக்கா அந்தநேரம் வந்து போனது.” பிரவு அண்ணா வைரவரடிக்கு போவமே” எண்டு லாவண்யன் கூப்பிடுவது போல எனக்குப்பட்டது அந்த நேரம்.

(இப்படைப்பில் வரும் அனைத்து விடயங்களும் உண்மையே)

20 thoughts on “வாழைமரக்காலம்”

 1. வணக்கம் நன்மனம்

  இதுதான் நம் சோகவாழ்வின் யதார்த்தம்

 2. வாழையடி வாழையாய் வாழ்ந்த வீடு இருந்த இடத்தில் இன்று வாழைத் தோட்டம். வாழைப்பழத்திற்காகவாவது இந்தத் தோட்டம் பிழைக்கும். வாழந்திருக்க வேண்டிய அந்தக் குடும்பம். இந்தக் கண்ணீர் வரலாறுகள் கல்வெட்டுகள் காணாமல் போகலாம். ஆனால் எங்கள் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்துதான் போகின்றன.

 3. பத்திரிக்கையில் புள்ளிவிவரங்களாக பார்த்த நிகழ்வுகள், பக்கத்திலிருந்தவர் விவரிக்கையில் மனதை வலிக்கிறது.
  என்று நிற்கும் இந்த ஹெலியும், பொம்மரும் குண்டு போடும் சண்டையும் ?

 4. வணக்கம் கானாபிரபா, மீள்பதிவாக இருந்தபோதும் படிக்கும்போது கண்கள் பனிக்கின்றன, முடிந்தளவு இந்த வாரத்தில் நிறைய எழுதுங்கள். வெளிவராத உண்மகளை இந்திய சகோதரர் பார்வையில் வையுங்கள்.

 5. நெஞ்சைத்தொடும் அனுபவம். நல்ல நடை. படங்களும் அருமை. நட்சத்திர வாரத்தின் முதல் பதிவு கலக்கல்.

 6. என் நினைவுப் பகிர்வை வாசித்துப் பின்னூட்டமிட்ட

  ராகவன், மணியன், ஈழபாரதி, சிறீ அண்ணா, நாகை சிவா
  உங்களுக்கு என் நன்றிகள்.

 7. பிரபா!
  தோட்டக்காணிகள் வீடானது சாதாரணமாக நடப்பது. ஆனால் வீடிடிந்து வாழும் நிலையற்று;மக்களும் இன்றித் தோட்டமானது. மிக வேதனையாகவுள்ளது. இன்னும் எத்தனை? வீடுகள் தோட்டமாகப் போகிறதோ!!! “ம்”
  யோகன் பாரிஸ்

 8. யோகன் அண்ணா

  இதுவே இன்றும் தொடர்கதை என்பது தான் சமரசம் செய்யமுடியாக் கொடுமை

 9. //ஒரு சிலேட்டில அழிச்சு அழிச்சு எழுதுவது போலத் தான் எங்கட சனத்தின்ர வாழ்க்கை.//

  நல்லாயிருக்கிறது…வசன நடை…இந்த ஒருவரியிலையே எமது மக்களின் வாழ்க்கையை அழகாக சொல்லியிருக்கிறியள்

 10. வாசித்துக் கருத்தைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள் சின்னக்குட்டி

 11. /தென்னிலங்கைப் பேப்பர்களில இவர்கள் பயங்கரவாதிகள் போலவும் , பயங்கரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டது போலவும் செய்திவரும்./

  தென்னிலங்கைப் பத்திரிகைகளில் மட்டுமா?

  /தாய் தகப்பன் இல்லாத குழந்தைகள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்குப் போகும். படிப்பும் தொலைந்து வாழ்க்கையும் தொலைந்த இளைஞர் கூட்டம் போராளிகளாக உருவெடுக்கும். /

  இந்த உருவாக்கத்தின் மூலவேர் எங்கே ?

 12. நினைவு மீட்டலை வாசித்த அப்டிப்போடு, மற்றும் மலைநாடான் உங்களுக்கு என் நன்றிகள்.

  //இந்த உருவாக்கத்தின் மூலவேர் எங்கே ? //

  அதுதான் புரையோடிப் போன இனவாதம்

 13. நெஞ்சைத் தொடும் பதிவு. நான் கடந்த வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது , யாழ் பல்கலைக்கழகத்திற்கும் சென்றிருந்தேன். அங்கே பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் ” தம்பி, நாங்கள் மரணத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று சொன்னார்கள். அவருடைய வார்த்தையில் உள்ள வலியை , ஈழத்திற்குச் சென்று சில வினாடிகளாவது வாழ்ந்து பார்ப்பவர்களுக்குத்தான் புரியும்.

 14. வெற்றி said…
  //சிவலிங்கராஜா அவர்கள் ” தம்பி, நாங்கள் மரணத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று சொன்னார்கள். அவருடைய வார்த்தையில் உள்ள வலியை , ஈழத்திற்குச் சென்று சில வினாடிகளாவது வாழ்ந்து பார்ப்பவர்களுக்குத்தான் புரியும். //

  வெற்றி!
  அதுதான் ஜீரணிக்கமுடியாத உண்மை

 15. வணக்கம் பொன்ஸ்

  எம் அப்பாவி மக்கள் கையைக் கட்டிக் கடலுக்குள் போட்டதுபோல அங்கிருக்கிறார்கள்.

 16. எங்கள் உணர்வைப் புரிந்துகொண்டமைக்கு நன்றிகள் குமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *