வீடும்…. வீடுகளும் !

“மனிதனின் கண்டுபிடிப்புக்களிலேயே மிகச்சிறந்தது சினிமா தான். ஆனால் அதை வர்த்தக சூதாடிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்” –
சொன்னவர் பிரபல எடிட்டர், இயக்குனர் லெனின்

முள்ளை முள்ளால் எடுப்பது போலத் தரங்கெட்ட சினிமாப் படைப்பை மறக்க வைக்கவும், நல்ல சினிமா எடுப்பதிலும், அதைப் பார்ப்பதிலும் நிவர்த்தி செய்யலாம் என்பது என் எண்ணம்.

தன் படைப்புக்களை விருது என்ற ஒரே நோக்கிலன்றி சினிமா ரசிகனின் ரசனைக்கும் விருந்தக்கலாம் என்ற வகையில் சினிமாப்படைப்புக்களைத் தரும் இயக்குனர்களில் பாலு மகேந்திராவும் ஒருவர் என்பதை நான் சொல்ல வேண்டுமென்றில்லை.

அந்தவகையில் அண்மையில் நான் ரசித்த படங்களில் ஒன்று பாலு மகேந்திராவின் ” வீடு” வெளிவந்த ஆண்டு 1988). அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர், பானுசந்தர், பசி சத்யா ஆகியோர் நடித்தது. நடிகை அர்ச்சனாவிற்குச் சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் கொடுத்தது இப்படம். படத் தயாரிப்பாளர் கனடா வாழ் குடிமகன் நாராயணசாமி.

பெற்றோரை இழந்து தன் தங்கையுடனும் தாத்தாவுடனும் வாழும் நாயகி, அவளின் ஒரே சம்பளத்திலும் தாத்தாவின் பென்ஷன் பணத்திலும் தான் இவர்களின் குடும்ப வாழ்வை நகர்த்த வேண்டிய நிர்ப்பந்தம். இந்த நிலையில் வாடகைக்கு வீடு தேடிக் களைத்துப் போய், அவளின் தாத்தாவின் எதிர்ப்பையும் மீறி சொந்த வீட்டைக் கட்டவேண்டும் என்று அவள் தீர்மானிக்கும் போது சந்திக்கும் சோதனைகள் தான் இப்படம்.

தன் குடும்ப பட்ஜட்டைக் கணக்குப் பார்த்து ஐநூறு ரூபாய் தான் வாடகைக்கு முடியும் என்று தீர்மானித்து வாடகைக்கு வீடு தேடி அலைவது, பின்னர் வீடு கட்டுவது என்று முடிவெடுத்துத் தனிமனுஷியாகத் தன் அலுவலக வேலையும் பார்த்து அதே நேரத்தில் கட்டுமான மேற்பார்வையையும் பார்த்து, தன் குடும்பத்தையும் சுமக்கும் அர்ச்சனாவின் பாத்திரம் நூறு வீடு கட்டக்கூடிய கொன்கிறீற் கற் சுமைக்குச் சமனானது.
வீட்டு லோன் வாங்க அலைவது, வீடு கட்டப் பணம் தருகிறேன் பேர்வழி என்ற தோரணையில் தன் சபலப் புத்தியைக் காட்டும் அலுவலக மேலதிகாரியின் செயல் கண்டு வெம்பிக் கலங்குவது, மழை வெள்ளம் வந்து அந்த நாட்கட்டுமானப் பணி குழம்பிநாட்கூலியைக்கொடுக்கும் நிர்ப்பந்ததில் தன் மனச் சோர்வபடுவது, கடன்கேட்டுப் போய்த்தன் அலுவலக நண்பியின் வீட்டில் அவமானப்பட்டு நிற்பது, கட்டட ஒப்பந்தக் காரரின் சில்லறைத் திருட்டுக்களைக் கண்டு புளுங்குவது, ஒரு கட்டத்தில் கட்டட ஒப்பந்தக்காரர் வீட்டுக் கட்டுமானப் பணியிலிருந்து ஒதுங்கும் போது நிர்க்கதியாய் இருப்பது,குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமான காணியை வாங்கி ஏமாற்றப்பட்டு இடிந்து போவது என்று, அப்பப்பா இந்த நடிகையின் நடிப்பில் எத்தனை பரிமாணங்கள். இவருக்குத் தேசியவிருதை விட இன்னும் ஏதாவது உயர்ந்த விருது கொடுத்தாலும் தகும். நடுத்தரவர்க்கத்து நாயகி வேடத்திற்குப் பொருத்தமாக, முகத்திற்கும் அவர் நடிப்பிற்கும் அரிதாரம் போடத்தேவையில்லாத சிறந்த நடிகை இவர்.
தன் தங்கைக்குப் புதுச்சட்டை வாங்கித் தர முடியாத தன் இயலாமை, தன் காதலன் தந்த பிறந்த நாள் சேலைக் குப் பதில் பணமாகவே வைத்திருந்தால் வீடு கட்டும் செலவோடு சேர்த்திருக்கலாமே என்ற ஆதங்கம் இவையும் மனதிலிருந்து விடுபட முடியாத காட்சிகள்.

அர்ச்சனாவின் அலுவலக நண்பராகவும் காதலனாகவும் வரும் பானுச்சந்தர் ஜோல்னாப் பையும் கண்ணாடியுமாக வந்து அர்ச்சனாவின் ஏழ்மைக்குத் தானும் சளைத்தவர் இல்லை என்பது போலவும், தன் தங்கைக்குச் சேர்த்து வைத்த பணத்தை அர்ச்சனாவிற்குத் தெரியாமல் அர்ச்சனாவின் வீட்டுக் கட்டிடப் பொருட்களுக்குச் செலவழிப்பதும் பின்னர் அது தெரிந்து அர்ச்சனா கோபங்கொள்ளும் போது தன் உதவிபை அவள் ஏற்கவில்லையே என்ற ஆதங்கத்தில் சினம் கொள்வதும், பின் அவளுக்கு ஆறுதலாகத்தன் தோள் கொடுப்பதுமாக அவர் நிறைவாகவே தன் பாத்திரப் படைப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஏழைக்கு ஏழைதான் உதவி என்பது போல, வீட்டுக் கட்டுமானங்களில் இடையூறு வரும் போது அர்ச்சனாவிற்கு ஆறுதலாகவும், உதவியாகவும் தோள் கொடுக்கும் கட்டிடத்தொழிலாளியாக வரும் “பசி” சத்யாவின் பாத்திரமும் மிக இயல்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றது.

இளையராஜாவின் இசை பாலுமகேந்திராவின் ஒன்றிரண்டு படங்களைத்தவிர எல்லாப் படங்களிலும் பயன்பட்டிருக்கிறது. இப்படியான கலைப் படைப்புக்களுக்குப் பின்னணி இசை தான் முக்கிய தூண். இந்தப்படத்திற்கென்று தனியாக இசையமைக்காமல் “How to name it “என்ற இளையராஜாவின் தனி இசைத்தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுப் பின்னணி இசை பயன்பட்டிருக்கிறது. பலவீனமும் அதுதான். சில இடங்களில் காட்சியோடு ஒட்டாது இசை ஒருபக்கமாக எங்கோ போய்க் கொண்டிருக்கின்றது. நல்ல இசை என்றாலும் பொருத்தமான இடத்தில் வரும் போதுதானே இன்னும் ரசிக்கமுடியும். இசையில்லாத சில காட்சிகளே நல்ல பின்னணியாகவும் கைகொடுத்திருக்கின்றன.

நடுத்தரவர்க்கத்துச் சமுதாயக் கதைகளைப் படைக்கும் போது அவர்களின் வாழ்வியலைப் போலவே வெளிறிப்போன பார்வையில் படத்தின் ஒளிப்பதிவு அமைந்திருப்பது இன்னும் அணி சேர்க்கின்றது. இப்படியான ஒளியமைப்பின் மூலம் தான்சொல்லவந்த கதையை இன்னும் மெருகேற்றலாம்.

சில்க் சுமிதா, அனுராதா காலத்தில் வந்த படம் என்றாலும் நல்லவேளை அவர்களின் கால்ஷீட் இப்படத்தில் பயன்படாதது அவர்கள் இப்படியான கலைத்துவம் மிக்க சினிமாவிற்குச் செய்த பெரிய சேவை.

இப்படத்தைப் பற்றிப் பேசும் போது தவிர்க்கமுடியாத அல்லது தவிர்க்கக் கூடாத இன்னொரு பாத்திரம் அர்ச்சனாவின் தாத்தாவாக வரும் சொக்கலிங்கபாகவதர்.
வாடகைவீடு தேடி அலையும் போது ஒரு வீட்டில் மடிசார் மாமியக்கண்டு ” பிராமின் பாமிலி” என்று அர்ச்சனாவின் காதுக்குள் கிசுகிசுக்கும் தோரணை, ஒரு வாடகை வீடு இவர்களுக்குப் பிடித்துப் போய் வீட்டுச் சொந்தக்காரன் அடுத்த நாள் வந்தால் முடிவு சொல்வதாகச் சொல்லும் போது மறுநாள் சீககிரமே எழும்பி கடவுளை நன்றாகக் கும்பிட்டு விட்டு வெள்ளைச் சட்டை வேஷ்டியுடன் தன் குடையை விரித்து அதன் நிழலில் மிடுக்காக நடந்து கொண்டே “வேயுறு தோளி பங்கன்” என்று உரக்கப் பாடிக்கொண்டு அந்த வீட்டுக்காரனைப் பார்க்கச் செல்வது, ஆனால் அந்த வீடு கைநழுவிவிட்டது தெரிந்து மீண்டும் தன்வீடு நோக்கி நகரும் போது தலையத்தொங்கப் போட்டபடி தன்குடையை விரிக்காது தள்ளாட்டமாகச் சுருங்கிய முகத்துடன் நடப்பது , என்று இந்தக்காட்சியில் அவரின் முழுப்பரிமாணமுமே வெளிப்படுகின்றது.

தன் சகபாடி இறப்பது கண்டு அவசர அவசரமாக உயில் எழுதி வைப்பது, வீட்டுக்கு வரும் பானுச்சந்தரிடம் ” கண்டிப்பா அவளைக் கட்டிப்பியா” என்று ஆதங்கத்துடன் கேட்பது, அரைகுறையாகக் கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்குத் தன் தள்ளாமையிலும் தனியாகப் போய் வெளி வாசலில் செருப்பைப் பவ்யமாகக் கழற்றி வைத்து விட்டு உள்ளே போய் ஒவ்வொரு சிமெண்ட் கல்லாகத் தடவிப் பார்ப்பது, மொட்டை மாடி ஏறிப்போய் பூரிப்பாகத் தங்கள் அரைகுறைப் புதிய வீட்டைப்பார்ப்பது என்று இன்னும் அவர் நடிப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

குடையைத் தொலைத்து விட்டு தங்கள் அரைகுறையாகக் கட்டப்பட்ட வீட்டைப் பார்த்த திருப்தியில் வெளியே வந்து நடு றோட்டில் இறக்கிறது இந்தப் பாத்திரம். சொக்கலிங்கபாகவதர் பற்றி இன்னும் பல செய்திகளோடு தனிப் பதிவு ஒன்றில் போட இருக்கின்றேன்.

பாலுமகேந்திராவின் உதவியாளாரக இருந்த பிரபல இயக்குனர் பாலா இப்படிக் குறிப்பிடுகின்றார்.

காட்சி என்ன என்பதை விவரித்தார் டைரக்டர். ஒரு மிடில்கிளாஸ் குடும்பம்… நிறைய சிரமத்திற்கிடையில் ஒரு வீடு கட்ட ஆசைப்படுகிறார்கள். அஸ்திவாரம் போட குழி வெட்டியிருந்தால்… மறுநாள் மழை வந்து குழியெல்லாம் தண்ணீர்.
இப்ப ரெண்டு செலவாகிப் போச்சே என்று அர்ச்சனாவும் பானுசந்தரும் புலம்புவது போலக் காட்சி. அவர்கள் எப்படி நடிக்க வேண்டுமென்று அவரே செய்து காட்டினார். கண்கொள்ளாக் காட்சி அது! நான் அவரை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்தேன். அந்த ஆளுமை என்ன ஆக்கிரமித்தது!

வீடு படம் ரிலீஸ்!
அரசு வரிச்சலுகை அறிவித்துவிட, தினம் தினம் படம் பார்த்தேன். மொத்தம் முப்பத்தேழு முறை பார்த்தேன்.
அது எப்படிப் படமாகியிருக்கிறது என்று ஒரு முறை.. எந்தெந்த காட்சிகள் எப்படியெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்றொரு முறை… காமிரா எங்கிருந்து எப்படியெல்லாம் நகர்கிறது என்பதைக் கவனிப்பதற்காக ஒரு முறை என்று அந்தப் படத்தை ஒரு பாடம் போலப் படித்தேன்.
இப்போது கேட்டாலும் அந்தப் படம் பற்றி ஆர்டரிலேயே சொல்ல முடியும். அந்தப் படம் என் மனக்குள் ஓடிக் கொண்டேயிருக்கிறது.
‘வீடு’ படத்துக்காக டைரக்டர் நிஜமாகவே ஒரு வீடு கட்டினார். படத்தின் க்ளைமைக்ஸில் அந்த இடம் மெட்ரோ வாட்டருக்குச் சொந்தம் என்று அவர்கள் கையகப்படுத்தி விடுவார்கள். முக்கால் வாசி முடிந்த நிலையில் நின்றுவிடும் அந்த வீடு. இப்போதும் நிஜமாகவே அந்த வீடு முழுமையாக கட்டிமுடிக்கப்படாமல் நிற்கிறது தெரியுமா?

எங்கட ஆச்சி வீடு பள்ளக்காணி என்பதால மழை வெள்ளத்தில இருந்து பாதுகாக்கத் தரை மட்டத்தில இருந்து சற்றே உயரமாக அத்திவாரம் எழுப்பப்பட்டு சுண்ணாம்புக் கல்லால கட்டப்பட்டது.எங்கட அக்கம் எண்பதுகளுக்குப் பின்னால தான் கல் வீடுகள் (சிமெந்தினால் கட்டப்பட்ட வீடு) அதிகமாக் கட்டப்பட்டன. எங்கட பாதகன் புலக்குறிச்சியில எங்கட வீடும் இன்னும் ஒருசில வீடும் தான் கல்வீடாக மாறின.

தனம் சித்தி வீடு மண் வீடு. வெள்ளிக்கிழமை, மற்றும் விரத நாட்களில மாட்டுச் சாணத்தைக் கரைச்சு நிலம், மற்றும் குந்துகளில மெழுகுவா. மொழுகிக் காயயும் வரைக்கும் வெளியில வச்சுத்தான் சைமயல் சாப்பாடு எல்லாம். மீறி ஆரும் உள்ளுக்க போனா, பிறகு தனச்சித்தி எப்பிடிப்பட்டவ எண்டு அறிஞ்சு கொள்ளலாம். பல நாட்கள் அவையின்ர வீட்டுத்திண்ணையில இருந்து பொழுதைப் போக்கியிருக்கிறன். போன வருசம் ஊருக்குப் போன போது இன்னும் அந்த வீடு அப்பிடியே மண்வாசனை (?)யோடு இருந்தது பாக்கச்சந்தோசமாக் கிடந்துது. வருசப்பிறப்பு பொங்கல் காலங்களில தான் அவையள் பெரிய அளவில் வீட்டைத் திருத்துவார்கள். புதுக்கிடுகு வாங்கி அந்தக்காலத்தில தான் மாத்தி வேய்வினம்.

தன்ர கவுண்மென்ற் சம்பளத்தில வாத்தியாரா வேவை செய்து கொண்டு தான் கல்வீடு கட்டின சிரமங்களை அப்பா அடிக்கடி சொல்லுவார். அவருக்கு மட்டுமில்ல எங்கட் ஈழத்தில பெரும்பாலான வீடுகள் கல்வீடுகளாகக் கட்டும் வரையும் கட்டினாப் பிறகு கடனைக்கட்டும் அவஸ்தையும் சொல்லி மாளாது. எங்கட வீடு கட்டி உடன வெள்ளையடிச்சுக் கனநாளா மேற்பூச்சு இல்லாமலே இருந்தது.
சுவாமி அறைக் கதவு நிலையில அப்பா சோக்கட்டியால புகையிலை தோட்டத்து இறைப்புக் கணக்கு எழுவது இண்டைக்கும் ஞாபகம் இருக்கு.

ஆனா ஆவன்னாப் படிக்கேக்க எங்கட வெள்ளையடிக்கப்பட்ட சுவரில ஒயில் பென்சிலால நான் கிறுக்கின எழுத்துக்களும் படங்களும் அங்கீகரிக்கப்படாத நவீன ஓவியங்களாக (modern art) இருந்திருக்கின்றன.
வெளிநாட்டு வாழ்க்கையில வீட்டைக் கட்டிப் போடு மாஞ்சு மாஞ்சு உழைக்கோணும். பெரும்பாலும் படுக்கிற நேரம் தான் வீடாக இருக்கும். என்ர நண்பர் சொன்னார் ” வீடு வாங்கும் வரை பெட்ரூமில படுத்தனான், இப்ப லோன் கட்டுறத்துக்காக ரண்டு வேல செய்யோணும், அதால காருக்குள்ள படுக்கிறன் எண்டு”.

போனமுறை பலாலி விமான நிலயத்தில இருந்து பஸ்ஸின்ர யன்னல் பக்கம் இருந்து வழி நெடுகே பார்த்து வந்தேன். சனநடமாட்டமில்லாத இராணுவ முற்றுகைக்குட்பட்ட காணிகளுக்குள்ள மரப்புதர்களேட இடிபாடான வீடுகள் இருந்தன. சில வீடுகள் ஆமிக் காம்ப் ஆகவும், கட்டாக்காலி ஆடு மாடுகளின் உறைவிடங்களாகவும் காட்சி தந்தன.
இந்த வீடுகள் எத்தனையோ குடும்பங்களின் கதை சொல்லும், தன்னுடைய வாழ்விடமும், நிலபுலமும் இழந்து ஓடி எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு குடும்பத்தின் கதை சொல்லும் ஒரு வீடு, ஷெல் விழுந்து தன்வீட்டுகுள்ளேயே சமாதியான இன்னொரு குடும்பத்தின் கதை சொல்லும் இன்னொரு வீடு. இப்படி எத்தனை…எத்தனை… கதைகள். சிலகதைகளை இங்கே நான் இணத்துள்ள படங்கள் சொல்லும்.
(படங்கள் உதவி : நண்பர் குப்பிழான் அரவிந்தன்)

எங்கட நாட்டில உப்பிடி வாயையும் வயித்தையும் கட்டிக் கட்டின எத்தின வீடுகள் இண்டைக்கு காடுகளாகக் கிடக்குது. ஆமி ஊரைப் பிடிக்கேக்க ஓடு ஒளிவதும் பிறகு வீடு பாக்க வரும் போது ஆமியின்ற சூடு பட்டு சாகிறது, மிதிவெடியில அகப்பட்டுக் கால் போறது எண்டு எத்தினை அவலம்.
வீடு ஒரு சடப்பொருள் எண்டாலும் எங்கட ஆக்களுக்கு அதில் இருக்கிற ஏதோ ஒரு இனம் புரியாத நேசம் தான், இப்பிடி எங்கோ இடம்பெயர்ந்து இருந்தாலும் தன் வீட்டைத் தேடி ஓடிப் போகச் செய்கிறது.

ஈழத்துக் கவிஞர் ” மகாகவி” உருத்திர மூர்த்தியின் கவிதை ஞாபகத்துக்கு வருகுது.

” சிறு நண்டு கடலோரம் படம் ஒன்று கீறும் சிலவேளை அதைவந்து அலை கொண்டு போகும்”.

இதுதான் எங்கட வாழ்க்கை…..

34 thoughts on “வீடும்…. வீடுகளும் !”

 1. மிகவும் ஓர் அருமையான படத்தைப் பற்றி, மிகவும் ஓர் அருமைப் பதிவு. வாழ்த்துக்கள்.

  நான் இந்தப்படம் பார்த்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அதன் குறுந்தகடை ஒரு கடையில் நான் கேட்டபோது, கடைக்காரர்கூட என்னை ஏளனமாகப் பார்த்தார்.

  ஒரே முறைதான் பார்த்தேன். படம் முடிந்தவுடன், கடைசிகாட்சி அதிர்ச்சியில் இருந்து நான் மீள சில மணிநேரங்கள் ஆகின.

  எனக்கும் மிகப் பிடித்த காட்சி, உயில் எழுதும் காட்சிதான்.

  -ஞானசேகர்

 2. உங்களிடமிருந்து வழக்கம் போல வந்த அருமையான பதிவு. ‘வீடு’ படம் பற்றிய பார்வையும், அதைத் தொடர்ந்த ஈழத் தமிழர்களின் ‘வீடு பேறு’ அவலமும் நெஞ்சைத் தொடுவதாக உள்ளது.

  பதிவுக்கு நன்றி!

 3. வீடு படத்தைப்பற்றிப் படிக்கும்வரைக்கும் மனதில் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் என்ற உணர்வு இருந்தது. அதற்குப்பிறகு நம்மட வீடுகளைப்பற்றி எழுதினதைப்படிச்சபிறகு என்ன எழுதோணும் எண்டே நினைக்கமுடியேல்ல. எங்கட வீட்டுப் படங்களும் என்னட்ட இருக்கு. எல்லாம் உடைஞ்சு கிடக்கிற படங்கள்..

  மிக்க நன்றி கானா.பிரபா.

  -மதி

 4. உங்களுடைய இந்த இடுகையைத் திறக்கும்போது தோழியிடமிருந்து தொலைபேசி வந்தது. வீடு பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று சொன்னபடி உங்களுடைய ஏனைய திரைப்பட இடுகைகளையும் பற்றிப் பேசினோம். தொடர்ந்து வீடு, சொக்கலிங்க பாகவதர், பாலுமகேந்திரா, பாலா என்று பேசிவிட்டு இடுகையைத் தொடர்ந்து வாசித்தால் நீங்களும்..

  -மதி

 5. முதலில் ஒரு கருத்து.
  படம் பற்றிய பதிவை முதலாவதாகவும், மிகுதிப் பகுதியை அடுத்த பகுதியாகவும் இரு பதிவுகளாகப் போட்டிருக்கலாம்.
  *******************************
  ஞானசேகருக்கு நடந்தது தான் எனக்கும் நடந்தது. வீட்டோடு கூடவே ‘சந்தியா இராக”த்தையும் கேட்டதால் இன்னும் கொஞ்சம் அதிகம் சங்கடப்பட்டேன்.

  நீங்கள் சொக்கலிங்க பாகவதரைப் பற்றி எழுதுவதற்கு முன் கட்டாயம் ‘சந்தியா இராகம்” பார்க்க வேண்டும். அதுவும் பாலுவின் படம்தான். பாலா அதிலும் உதவி இயக்குநர் என்று அறிகிறேன்.

  வீடு, சந்தியா இராகம் இரண்டையும் பார்த்த நண்பர்களிடமிருந்து நான் வாங்கிய நக்கல்களில் ஒன்று இது.
  “டேய்! ஒரு படத்தின்ர முதல் சீடியப் போட்டுப் பாத்திட்டு அடுத்த படத்தின்ர ரெண்டாவது சீடியப் போட்டுப் பாத்தாக்கூட படத்தில ஒரு வித்தியாசமும் தெரியாதுடா”

  காட்சிகளுக்கூடாக வேண்டா வெறுப்பாக படம் பார்ப்பவர்கள் மட்டில் இது உண்மை போலவே படுகிறது.
  சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனா உட்பட அதே நடிகர் நடிகைகள்.
  அதே தெரு.
  அதே சந்தை.
  அதே குச்சொழுங்கை.
  அதே வீடு.
  அதே மாடி.
  அதே கமராக் கோணங்கள்.
  இரண்டு படத்திலும் பல ‘அதே’க்கள்.

  எனக்கு வீடு அர்ச்சனாவை விட ‘சந்தியா இராக’ அர்ச்சனாதான் பிடித்திருந்தது.
  வயோதிபரொருவரை நாயகனாக வைத்து வேறு யாராவது தமிழில் படமெடுத்திருக்கிறார்களா தெரியவில்லை.

  வீடு, சந்தியா இராகம் என்ற இரு படங்களையுமே படம் முடியுமட்டும் அவற்றோடு ஒன்றிப் பார்ப்பதற்கே கொஞ்சம் திமிர் தேவைப்படுகிறது.
  அப்படியான இருபடங்களை இயக்கி தமிழர்களுக்குக் கொடுக்க பாலுமகேந்திராவுக்கு எவ்வளவு திமிரும் ஆணவமும் இருந்திருக்க வேண்டும்?
  பாலாவுக்கு அதில் சிறுதுளியாவது இல்லாமற் போய்விடுமா? (சேது, நந்தா, பிதாமகனைப் பார்த்தால் மெல்லிய திமிரொன்று தெரியும்)

 6. //வீடு, சந்தியா இராகம் என்ற இரு படங்களையுமே படம் முடியுமட்டும் அவற்றோடு ஒன்றிப் பார்ப்பதற்கே கொஞ்சம் திமிர் தேவைப்படுகிறது.
  அப்படியான இருபடங்களை இயக்கி தமிழர்களுக்குக் கொடுக்க பாலுமகேந்திராவுக்கு எவ்வளவு திமிரும் ஆணவமும் இருந்திருக்க வேண்டும்?//

  நல்லாச்சொன்னீங்க வசந்தன்.

  //பாலாவுக்கு அதில் சிறுதுளியாவது இல்லாமற் போய்விடுமா? (சேது, நந்தா, பிதாமகனைப் பார்த்தால் மெல்லிய திமிரொன்று தெரியும்)//

  hope so. hope so.

  -Mathy

  -மதி

 7. பின்னூட்டமிட்ட ஞானசேகர், தங்கமணி, மதி, வசந்தன் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
  எழுதிகொண்டே போய்விட்டேன் பக்கம் கணக்கின்றி,
  வசந்தன், நீங்கள் குறிப்பிட்டது போலத் தற்போது இருபதிவுகளாகப் பிரித்துள்ளேன்.

 8. யாழ் இடப்பெயர்வின்போது தாம் கட்டி வாழ்ந்த வீட்டை விட்டு பிரிய மனமில்லாது அங்கேயே இருந்து இறந்த பல வயோதிபர்களின் கதையும் வீட்டின் ஆத்மாவின் அருமையை விளக்கும்.

  //வீடு வாங்கும் வரை பெட்ரூமில படுத்தனான், இப்ப லோன் கட்டுறத்துக்காக ரண்டு வேல செய்யோணும், அதால காருக்குள்ள படுக்கிறன் //

  🙂

 9. //படம் பற்றிய பதிவை முதலாவதாகவும், மிகுதிப் பகுதியை அடுத்த பகுதியாகவும் இரு பதிவுகளாகப் போட்டிருக்கலாம்//

  கானா பிரபாவின் எழுத்துகளில் உள்ள தனித்துவமே அது தான் வசந்தன். எந்த இடுகையயும் தனது மண்வாசனையுடன் முடிப்பது.

  வீடு படத்தை இனித்தான் பார்க்க வேண்டும். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

 10. நன்றி சிறிஅண்ணா

  நான் பதிவுகளை எழுதத்தூண்டுவதே குறிப்பிட்ட ஒருவிடயம் என் எதோ ஒரு தாயக நினைவை மீண்டும் தட்டியெழுப்பினால் மட்டுமே. அதனால் தான் இப்படியான பாணியில் எழுதுகின்றேன்.

 11. வணக்கம் தீவு

  தங்களின் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்.

  “யாழ் இடப்பெயர்வின்போது தாம் கட்டி வாழ்ந்த வீட்டை விட்டு பிரிய மனமில்லாது அங்கேயே இருந்து இறந்த பல வயோதிபர்களின் கதையும் வீட்டின் ஆத்மாவின் அருமையை விளக்கும்”

  உண்மை, இப்படிப் பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன நம் தேசத்தில்.

 12. //தன் படைப்புக்களை விருது என்ற ஒரே நோக்கிலன்றி சினிமா ரசிகனின் ரசனைக்கும் விருந்தக்கலாம் என்ற வகையில் சினிமாப்படைப்புக்களைத் தரும் இயக்குனர்களில் பாலு மகேந்திராவும் ஒருவர் என்பதை நான் சொல்ல வேண்டுமென்றில்லை. //

  அது வேற பாலு. இப்போ இருப்பது வேறு பாலு.

  சீனு.

 13. “அது வேற பாலு. இப்போ இருப்பது வேறு பாலு.”

  அது ஒரு கனாக்காலம் என்கிறீர்களா 😉

 14. அன்பு பிரபாவுக்கு!
  பாலு மகேந்திராவின் “வீடு “ஒரு உன்னத தயாரிப்பு என்பதில் எவருக்கும், மாற்றுக் கருத்து இருக்காது.அவர் ஓர் ஈழத்தவரென்றபடியால் தான் இந்த கதையை இவ்வளவு ,யதார்த்தமாகச் சொல்ல முடிந்ததோ! என நான் எண்ணுவதுண்டு. ஈழத்தவரின் கல்வீட்டுக் கனவோ அலாதியானது. அதன் துல்லியமான வெளிப்பாடே ” வீடு”.
  2004ல் ஊர் சென்ற போது, இந்த வீடுகள் ,கனவுகள் பட்டுள்ளபாடு…… என் வீடும் கூட; அதைக் கட்ட
  தன்னைத் தேய்த்த என் தாய் இன்றில்லை. இருந்தால் இரத்தக்கண்ணீர் வடிப்பார். மேற்கூரையின்றி ஆகாயத்தை நோக்கி நீண்டிருந்த சுவர்கள் ,எனக்கு அவை “ஆண்டவனிட முறையிடுவது போல் இருந்தது.அவ் வீடு கட்டும் பொழுது, என் பாட்டனார், எதிர்காலத்தில் படங்கள் கொழுவ ஆணி அடித்தால் சுவர் பலம் கெட்டுவிடுமேன, கட்டும் போதே உரிய இடங்களில்; கப்பிக்கொழுக்கிகள்,வைத்துக்
  கல்லடுக்கும் படி கூறிச் செய்வித்தார்; அந்தக் கம்பிக்கொழுக்கிகள்; இருந்தன.உடன் வந்த என் மருமகனுக்கும், குறிப்பிட்டுக் காட்டினேன். இப்படி எல்லாம் யோசித்தா? கட்டினார்கள். என ஆச்சரியப்
  பட்டார்.” அது ஒரு கனாக்காலம்”
  மேலும், உருத்திரமூர்த்தி அவர்களின், கவிதை, கதைகள் எங்கே? கிடைக்குமேனக் கூறமுடியுமா?
  நன்றி
  யோகன்
  பாரிஸ்

 15. நீங்கள் சினிமாவையும் வாழ்க்கையையும் சேர்த்துச் சொல்வது அருமையாகப் பதிவாகிறது.
  நீங்கள் அடுத்து எந்தப் படத்தைப் பற்றி எழுதப் போகிறீர்கள்?
  அன்புடன்
  சாம்

 16. வணக்கம் யோகன்

  தங்களின் கல்வீட்டுக்கதை சுவாரஸ்யமாக இருந்தது, சுவற்றில் ஆணி அடிப்பதற்கு
  நிறையத் தரம் கெஞ்ச வேண்டும்:-)

  மகாகவியின் படைப்புக்கள் மீள்பதிப்பு செய்யப்படவில்லை என நான் நினைக்கிறேன், கடந்த ஆண்டு ஈழத்தில் இருக்கும் போதும் தேடினேன், கிடைக்கவில்லை. அவரின் மகன் தான் கனடாவில் வாழும் கவிஞர் சேரன், தெரியுமென்று நினைக்கிறேன்.

 17. வணக்கம் சாம்

  தங்களின் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்,
  அடுத்த பதிவு என்ன என்பது எனக்கும் தெரியவில்லை, நிறைய நல்ல படங்கள் மனதுக்குள் வந்து அலைக்கழிகின்றன. ஒரு வாரம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

 18. இப்பத்தாங்க உங்க பதிவுகளைப் பார்த்தேன். எல்லாம் அருமையோ அருமை. இவ்வளவுநாளா எப்படித் தப்பவிட்டேன்றதுதான்
  புரியாத புதிர்.

 19. வணக்கம் துளசி கோபால்

  தங்கள் வருகைக்கு நன்றிகள், தொடர்ந்தும் வாசித்துத் தங்கள் பின்னூட்டத்தைத் தாருங்கள்.

 20. பிரபா!
  ஈழத்தமிழர்களில் குறிப்பாகயாழ்ப்பாணத்துத் தமிழர்களின் வீடு குறித்த மனப்பாங்கு, மற்றைய தமிழர்களைவிடச் சற்று வித்தியாசமானதே. புலம்பெயர் மண்ணிலும், வீடு குறித்த அவர்கள் அபிலாஷை மாற்றமடையவில்லை என்றே கருதுகின்றேன்.
  திரைப்படத்தில் இவ்வளவு ஆர்வமுள்ள நீங்கள் கட்டாயம் சேதுமாதவனின் ‘மறுபக்கம் ‘ பார்த்திருப்பிர்கள் என்று நினைக்கின்றேன். அல்லாவிடின் தவறாது பாருங்கள். அதுபற்றிய தங்கள் பார்வையையும் பதிவாக எதிர்பார்த்திருக்கின்றேன்.
  நன்றி!

 21. இரண்டு சிறப்பான அர்ச்சனாவின் படங்கள்
  பிறவி (மலையாளம்)
  தாசி (தெலுகு)

  சாஜி கருணின் பிறவியின் பிரேம்ஜீ-அர்ச்சனா தந்தை-மகள் வீடு படத்தின் சொக்கலிங்கபாகதவர்-அர்ச்சனாவினை ஞாபகப்படுத்துவார்கள். அதுவும் 1988 இலே வந்த படமேதான். ஆனால், பிறவி போன்ற ஒரு படம் மலையாளத்திலே அல்லது பெங்காலியிலே மட்டுமே சாத்தியமாகும்.

  தாசி ஒரு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னாக ஒரு சிற்றரசனின் அரசிலே தாசியாகப் படுகிறவளின் கதை.

  நமக்கெல்லாம் மணிரத்தினத்தின் மசாலாதான் லாயக்கு

 22. வணக்கம் மலைநாடான்

  யாழ்ப்பாணத்தமிழரிடையே வீடு குறித்த நேசம் அதிகம் இருக்கக்காரணம் பலர் சொந்தவீடு வைத்திருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

  1990 ஆம் ஆண்டு வெளிவந்து தேசியவிருது பெற்ற மறுபக்கம் சேதுமாதவன் இயக்கத்தில் சிவகுமார், ஜெயபாதுரி நடித்தது, நல்ல படம், மீண்டும் பார்த்துவிட்டுப் பதிவைத்தருகிறேன்.

 23. வணக்கம் அநாமோதய நண்பரே

  நீங்கள் குறிப்பிடும் அர்ச்சனாவின் பிறவி, தாசி படங்களும் நல்ல படைப்புக்கள் என்று முன்னரும் சஞ்சிகை ஒன்றில் விமர்சனம் படித்த அனுபவம் இருக்கிறது. அவற்றைப் பார்க்க ஆசை தான்.

 24. கானா பிரபா அவர்களே. நல்ல பதிவு. திறமையாக வீடு படத்தை திறனாய்வு செய்துள்ளீர்கள். தங்களின் மண்வாசனையும் போற்றுதற்குறியது. வாழ்த்துக்கள். என்னுடைய தற்போதைய பதிவும் அதே.

 25. அடைக்கலராசா அவர்களே

  தங்களின் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்.

 26. வீடு படத்தை இனித்தான் பார்க்க வேண்டும். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்…

 27. வணக்கம் ஷண்முகி

  தங்களின் பின்னூட்டத்தை அளித்தமைக்கு என் நன்றிகள்.

 28. நிறையத் தகவல்களுடன் வீடு படம் பற்றி எழுதியிருக்கின்றீர்கள். பாலுமகேந்திராவின் படங்களில் எனக்குப் பிடித்த படங்களில் இதுவுமொன்று.

  பட விமர்சனத்தின் கீழ் யுத்தத்தினால் சிதைந்த வீடுகள் பற்றி எழுதியிருக்கின்றீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படி துயர நினைவுகள் மறக்க முடியாமலேயிருக்கும்.

  இந்தக் குறிப்பை படித்தபோது எனக்கு வீடுகள் தாண்டி வேறு ஞாபகங்களும் வந்தன.

  யுத்தகாலத்திற்கு முன்பே சாதிவெறியர்களால் எரிக்கப்பட்ட குடிசைகள், தங்க வீடில்லாமல் கோயில் காணிகளிலும், கடைகளுக்கு முன்பாகவும், வளவுகளிலும் படுத்துறங்கிய/வாழ்ந்த மனிதர்கள், தங்க இடம் ஊருக்குள் மறுக்கப்பட்ட நிலையில் சுடலைகளில் வாய்ந்த மனிதர்கள் என்று துயர நினைவுகள் வந்து போகின்றன.

  எனது பாடசாலை நண்பரொருவர் எங்களைத் தன் வீட்டுக்கு அழைப்பதைத் தவிர்த்து வந்தார். பாடசாலை இறுதி நாளில் தனக்கு நெருக்கமான நண்பர்களை அழைத்துக் கொண்டுபோனார். அவரின் வீட்டைப் பார்த்து திகைத்துப் போனோம். கறள் பிடித்த கார்க் கதவு, தகரங்கள், பலகைகள் கொண்டு அந்த “வீடு” அமைக்கப்பட்டிருந்தது. அதனுள்ளே படுக்கையறை/சமையலறை/படிக்கும் அறை என்று எந்தப் பிரிவும் இல்லை. அந்த வீடிற்குள் 2 குமர் பிள்ளைகள் உட்பட் 6 பேர் வாழ்ந்த்து வந்தார்கள்.

  யுத்த நிலமைக்கும் முன்பும், பின்னரும், இப்பொதும் இந்த மனிதர்களின் வீடுகளுக்கு இடம் கிடைப்பதில்லை. அவை பொருட்படுத்தப்படுவதில்லை. இவை பற்றி “படங்களுடன்” நினவுகூர்வதற்கான வசதிகளும் அவர்களுக்கு இல்லை.

  உங்கள் பதிவை படித்தபோதுதான் எனக்கும் இந்த நினைவு தட்டுப்பட்டது.

 29. வணக்கம் பொறுக்கி

  நீங்கள் குறிப்பிடும் விடையங்கள் கசப்பான உண்மைகள், எமது சாதிவெறிக்குக் கிடைத்த பரிசு தான் சிங்கள இனவாதிகளின் கொடூரத்தனங்கள், அதில் அகப்பட்டது எல்லாருமே…..

 30. மிகப்பிரமாதமான விவரணை பாஸ்… அருமையான படம்… இவன் தான் பாலாவைப் வாசித்து விட்டுத்தான் நானும் இந்தப்படத்தைப் பார்த்தேன்… பாலுமகேந்திராவின் படைப்புகளில் ஆகச்சிறந்த படைப்பென இதனைக் கொள்ளலாம்..

  ஒரே ஒரு இடத்தில் உங்களிடமிருந்து நான் மாறுபாடு கொள்வது பிண்ணனி இசை பற்றிய குறிப்பில்தான்…

  "How to Name It" இசையே பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அது தனி துருத்தலாகத் தெரியவில்லை. கதையோடியைந்ததாதகவே இருந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *