பதேர் பாஞ்சாலியும் பெரிய மாமியும்

போன கிழமை பல்லின மக்களுக்கானதொலைக்காட்சி ஒண்டில அதிகாலை ஒரு மணிக்கு பிரபல இயக்குனர் சத்யஜித் ரேயின் “பதேர் பாஞ்சாலி” என்ற படம் போடுவதாகச் செய்தி கிடைச்சது.

பொதுவா இந்த தொலைக்காட்சியை இரவு பத்து மணிக்குப் பின்னால பார்ப்பது அறிஞ்சால் மெல்பனில இருக்கிற என்ர கூட்டாளி தாஸ் கொடுப்புக்குள்ள சிரிப்பான். ஏனெண்டால் பத்து மணிக்கு மேல அவங்கள் போடுற படங்கள் மொழி வித்தியாசமில்லாம வெளிப்படையான பாலியல் காட்சிகளை வாரி இறைக்கும். இந்தமாதிரி விசயத்தில பிரென்சு படம் என்றாலும் சீனப் படம் என்றாலும் அவங்கட கொள்கை ஒண்டு தான்.

இருந்தாலும் அத்தி பூத்தப் போல இப்பிடி ” பதேர் பாஞ்சாலி” போலப் படங்களும் வருவதுண்டு.
நீண்ட நாளாத் தமிழ்ப் பலசரக்கு கடையள்ள “மெட்டி ஒலி”, ” அண்ணாமலை” இத்தியாதி கசற் மலைகளுக்க தேடினாலும் கிடைக்காத இப்பிடியான படங்களைப் பார்க்க இதுதான் சந்தர்ப்பம் எண்டு, படத்தைப் பதிவு பண்ணி அடுத்த நாள் பார்க்க முடிஞ்சுது. சரி இனிப் படம் எப்பிடி எண்டு பார்ப்பம்.

1955 ஆம் ஆண்டு பதேர் பாஞ்சாலி” வங்காள மொழியில் வந்தது. பாட்டு, சண்டை, குழு நடனம் அல்லது குலுக்கல் டான்ஸ் போன்ற சராசரி இந்திய மசாலா சினிமாச் சமையலுக்குத் தேவையான ஒரு ஐட்டமும் இதில கிடையாது ( அடச் சீ, இவ்வளவும் இல்லாமப் படம் பாக்கோணுமோ எண்டு தாஸ் முணுமுணுப்பது போல ஒரு பிரமை). படம் 115 நிமிசம் கறுப்பு வெள்ளையில ஓடுது.
பதேர் பாஞ்சாலி என்பதன் தமிழ் விளக்கம் ” சின்னஞ் சிறு வீதியின் பாட்டு” (Song of the Little Road)
சரி, இனி இப்படத்தின் கதையைச் சொல்லுறன்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலச் சூழலில் ஒரு மிகப் பின் தங்கிய பெங்காலிக்கிராமம்.
அந்தக் கிராமத்தில் வாழும் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம், குடும்பத்தலைவன் ஹரிகர் , அவன் மனைவி சர்பஜயா, மூத்த மகள் துர்கா, இளையவன் அபு, இவர்களின் வறுமை வருமானத்திலும் பங்கு போடும் ஹரிகரின் வயதான சகோதரி. இவர்களின் ஆசைகள், நிராசைகள், எதிர்பார்ர்புகள், ஏமாற்றங்கள் தான் கதைக் கருவை ஆக்கிரமிக்கிறது.

தன் கணவன் ஹரிகரின் அப்பாவித்தனத்தால், ஏமாற்றப்பட்டு தம் சொத்தை இழக்கும் இயலாமை,
ஏமாற்றிய குடும்பம் வைத்திருக்கும் தம் காணியில் மகள் துர்கா கொய்யாப்பழம் திருடுவதும், வீட்டுக்காரி வந்து கூச்சலிடும் போது மகளுக்காகப் பரிந்து பேசுவது, பின் அவள் போனதும் துர்க்காவைத் தண்டிப்பது, கணவன் வந்ததும் தம் இயலாமையை நொந்து கொள்வது என்று சர்பஜா பாத்திரத்தில் வரும் கருணா பனர்ஜி ஒரு சராசரி இந்திய அல்லது ஈழத்துக் குடும்பத்தலைவியை நினைவு படுத்துகிறார். குடும்பத்தலைவன் ஹரிகர் இந்தக்குடும்பத்தை விட்டு அடிக்கடி வேலைதேடி நாட் கணக்கில் அலையும் போது தான் ஒருத்தியாக அவள் போராடுவதும் வெகு இயல்பு.

கொய்யாப் பழம் திருடுவது, தாயிடம் எவ்வளவு ஏச்சும், அடியும் வாங்கினாலும் தன் பால்யப் பருவத்துக்கே உரிய ஆசைகளை அடக்க முடியாத துர்க்கா பாத்திரம். திருடிய கொய்யாப்பழத்தை அப்படியே தன் முதிய மாமியாரிடம் (அப்பாவின் சகோதரி) கொடுப்பதும், மாமியார் தன் தாயிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டுப் போகும் போது கையில் பிடித்துக்கூட்டி வருவது, ரயிலைக் காட்டும் படி கேட்ட தன் தம்பியின் கைபிடித்து நெல் வயல் வெளியே கொண்டு காட்டுவது என்று அவளின் பல பரிமாணங்கள் காட்டப்படுகின்றன.

பிபூதி பூஷன் பானர்ஜி இன் மூலக்கதையும், ரவி ஷங்கரின் இசையும் படத்திற்கு மிகப்பலம்.
செல்வந்த வீட்டில் களவான முத்து மாலையைத் துர்கா தான் திருடினாள் என்று பழிச்சொல் வரும் போது அவளுக்காக நாமும் பரிந்து பேசத் தோன்றுகின்றது. ஆனால் அவள் இறந்த பின்னர் அவள் தம்பி அபு தற்செயலாகக் காணுவதும், பின் யாரும் பார்க்காமல் இருக்க அதை நீரோடையில் வீசுகின்றான்.
அந்தக் காட்சி காட்டப்படும் போது, முத்து மாலை பொத்தென விழுவதும், சிறிய சலசலப்பின் பின் சலனமற்றுத் தோன்றும் நீரோடை ஒரு அழகான கவிதை

.இந்தப் படத்தைப் பார்த்த போது ஒரு விசயம் சிந்தனைக்கு வந்தது. நல்ல படைப்பாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையின் பரிமாணங்களைச் செயற்கை இல்லாமல் அப்படியே தந்திருக்கிறார்கள். தோல்விகண்டவர்கள் பலர் மிதமிஞ்சிய செயற்கையைக் கொடுத்து அடையாளம் இழந்து போனார்கள்.
ஆக, தன் படைப்பில சுயத்தை இழப்பவன் தன் முகவரிய இழக்கிறான்.

எல்லாம் இழந்து தனிமரமாக இருக்கும் குடும்பத்தலைவியும், மகன் அபுவும் வேலை தேடி உழைத்த பணத்துடன் வரும் கணவன் வந்ததும் ஊரைவிட்டு போக முடிவெடுக்கும் போது தான் ஒதுங்கி இருந்த அயலவர்கள் உதவுவதுபோல வருகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து வந்த துன்பச் சறுக்கல்களோடு பெனாரஸ் நகர் நோக்கி புதிய வாழ்க்கை ஒன்றுக்காக அவர்களின் கட்டி வண்டி பயணிக்கின்றது.

விமர்சனத்தின் இறுதிக்கு வரும் முன்னர் இன்னொரு பாத்திரத்தையும் பார்ப்போம்.
அது படத்தில் வரும் வயதான கிழவி (துர்காவின் தகப்பனின் சகோதரி) ஊனமான கண்ணுடன் இடுக்குப் பார்வை பார்த்துக்கொண்டே தன் தம்பி வீட்டில் களவெடுத்துத் தின்பதும், தம்பியின் மனைவியின் வசவுகளைக் கேட்டுப் பழிப்புக்காட்டுவதும், கோபித்துக்கொண்டு அவர்களின் வீட்டை விட்டு வெளியேறி இன்னொரு வீட்டில் அடைக்கலம் போகும் போது ” கொஞ்ச நாளைக்குத்தான்” என்று இரஞ்சுவதும் மிக இயல்பு. சண்டி பாலா தேவி என்ற முதுபெரும் நடிகை சிறப்பாகவே அதைச் செய்திருக்கிறார்.

தம்பியின் மனைவி துரத்திய போதும் அவர்களுக்குப் பிள்ளை பிறந்த போது தன் வைராக்கியத்தையும், அவமானத்தையும் மூட்டை கட்டி விட்டு எதுவும் நடக்காதது போல், மீண்டும் வந்து குழந்தையை கொஞ்சுவதும், தன் வாழ்வின் இறுதி நிமிடங்களில் நைந்து போன சேலையைப் போல கேட்பாரற்று காட்டில் இறப்பதும் நம் இதயத்தை ஊசியால் குத்துவது போல…
தமது அந்திம காலத்தில் சொந்தங்களை இறுகப் பற்றி வாழ நினைக்கும் முதுமையும்
அவர்களின் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளாத சமுதாயமும் ஒரு சக்கரம் போல. அதே நிலை இவர்களுக்கும் இவர்களின் முதுமையின் விளிம்பில் வருவது தவிர்க்க முடியாத உலக நியதி.

இந்தப் படத்தில் வரும் வறட்டு வைராக்கியம் உள்ள அந்தக் கிழவிப் பாத்திரத்தைப் பார்த்த போது என் பெரிய மாமியின் குணாதிசயம் நினைவுக்கு வந்தது.
என்ர அப்பாவின் மூத்த சகோதரியான அவர் நான்கு இளைய சகோதரிகளின் வாழ்வுக்காக அப்புவுடன் சேர்ந்து தன் இளமையில் இருந்தே தோட்ட வேலைகளிலும், வறுமையின் போராட்டத்திலும் பங்கு போட்டவர். தன்ர திருமண வாழ்விலையும் குறுகிய கால அனுபவம் தான் அவவுக்குக் கிடைச்சது. மல்லிகைப் பூ வாசனைய விட அவர் அதிகம் மணந்தது எங்கட தோட்டத்தான் கோடா போட்ட புகையிலையாத் தான் இருக்கும். அவவின்ர வயதில முக்கால்வாசிப் பாகம் ஆச்சியைக் (அவரின் அம்மா)
கவனிப்பதிலேயே கழிந்தது. இப்படியான தொடர்ச்சியான போராட்டமும், வாழ்வின்ர நெருக்கடிகளும் அவரை ஒரு போர்க்குணம் மிக்க மனுசியாக மாற்றி விட்டது.
நான் ஊரில் இருந்த காலத்தில ஆச்சி வீட்டை போக இலேசான பயம் எப்பொழுதும் அடி மனசில இருக்கும். தப்பித் தவறி ஏதாவது என் சிறுவயதுக்கே உரிய குறும்புத்தனங்களைச் செய்தால் போதும், ” இனி இஞ்ச ஒருத்தரும் வரத்தேவேல்லை” என்று தொடங்கி வார்த்தைகள் அனல் பறக்கும். தடுக்க வரும் ஆச்சிக்கும் ” ஆச்சி நீ சும்மா இரணை” என்று தொடங்கி சரமாரியான சொல் கணைகள் வந்து விழும். என்ர அப்பாவுடன் இடைக்கிடை அவருக்கு வரும் கோபதாபங்களிலும் பலிகடா நாங்கள் தான். ஆக மொத்ததில் என்ர இளமைப் பிராயத்து மன விம்பத்தில ஒரு பயங்கரமான இடம் அவருக்கு இருந்தது.

காலம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. ஆச்சியும் போய்விட்டா.
கொழும்பில் இருந்த 2 வருசங்களையும் புலம் பெயர்வில் 10 வருசங்களையும் தின்றுவிட்ட காலங்களையும் கடந்து இந்த ஆண்டு ஊருக்குப் போனேன். பெரியமாமி எப்படி இருப்பா, இப்பவும் அப்பிடியா என்று மனதுக்குள்ள நினைச்சுக்கொண்டு ஏஷியா பைக்கை தாவடியை நோக்கி மிதித்தேன்.

ஆச்சி வீடுப் படலையைத் திறந்தேன்.

“என்ர அப்பு வந்திட்டானோ” என்று ஒரு குரல் கேட்டது.
எட்டிப் பார்த்தேன். காலம் கொடுத்த பரிசான வில் போன்ற கூன் முதுகுடன் என் பெரியமாமியே தான்.
அவரின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்து வரவா என்று கேட்பது போல இருந்தது.
என்ர கன்னத்தைத் தடவி ஒரு குழந்தையைப் போல அழகு பார்த்தார்.
என்னை அந்த மண் திண்ணையில் இருத்தி, தளர்ந்த அவரின் நரம்பு விழுந்த கை என்கையைப் இறுகப் பிடித்துக் கொண்டது. என்ர வெளிநாட்டுப் புதினங்களை கேட்கும் பாவனையில் தன் பாவனையை ஏற்படுத்திக்கொண்டார். என் உள் மனதுக்குத் தெரியும் அவர் என்னுடைய புதினங்களை கேட்பதை விட என் அருகாமை தான் அவருக்குத் தேவைப்பட்டது.
” போட்டு வாறன் பெரிய மாமி” என்ற போது ” ஓமப்பு, நல்லா இரு மேனை”என்று அவரின் உதடும் ” போகாதை” என்பது போல அவரின் மனம் சொல்லுவதைக் கண்ணும் வெளிப்படுத்தியது.

முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், விலகிப் போன பந்தங்களையும் தேடி அது ஒடுகின்றது, கிடைக்காத பட்சத்தில் கழிந்து போன வாழ்வியலின் நினைவுகளை அசை போட்டு எஞ்சிய அந்திம காலத்தை அது கழிக்கின்றது.

வாழ்க்கைப் பயணம் என்பது ஒரு பதேர் பாஞ்சாலி, அதாவது எங்கட எண்ணங்கள் போட்ட சின்னஞ்சிறு பாதையில் வரும் பாட்டு அது.

19 thoughts on “பதேர் பாஞ்சாலியும் பெரிய மாமியும்”

 1. வணக்கம் பிரபா, சிட்னியில் இருந்து தூய யாழ்ப்பாணத் தமிழில் கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்கள். மிகவும் அருமை. உங்கள் வெற்றிகரமான கருத்துக்களம் இங்கும் தொடரட்டும். வாழ்த்துக்கள். தமிழ் மணத்தில் இன்னும் சேரவில்லையா?

 2. நன்றி அண்ணா, தமிழ் மணத்தில் சேர்வதற்கு மூன்று இடுகை இருக்க வேண்டும், மீண்டும் நான் முயற்சி செய்கிறேன்.

 3. ரே அவர்களின் அருமைப் படைப்பான பாதர்பாஞ்சாலியை உங்கள் வாழ்வோடும் இணைத்து வரிகளை வடித்திருக்கிறீர்கள்.

  பாராட்டுகள்.

  திறமையான பல படைப்பாளிகள்
  திசை தெரியாமலே புதைந்து போனார்கள்………..

  சத்யஜித்ரே உலகுக்கு மாபெரும் சொத்து……….

  நன்றி.

 4. மறைந்த மாபெரும் திரைமேதை சத்யஜித்ரே அவர்களது

  பாதர் பாஞ்சாலியை
  மிக அருமையாக உங்கள் வாழ்வோடு இணைத்து எழுதியிருக்கிறீர்கள்.

  நன்றி.

  வாழ்த்துக்கள் கானபிரபா.

 5. சத்யஜித்ரேவின் படத்தைப்பற்றி நீங்கள் விவரிக்கும்போதே மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. உங்களுடைய பெரிய மாமியைப்பற்றிச் சொல்லி அவரது புகைப்படத்தையும் போட்டது இன்னும் கஸ்டமாக இருக்கு.

  நல்லா எழுதுறீங்க பிரபா.

  -மதி

 6. உங்க யாழ்பாண தமிழ படிக்க கெடச்சதுக்கு சத்யஜித் ரேக்கு ஒரு நன்றி 🙂

  ரேவோட அப்பு பற்றின மூனு படங்கள தப்பான வரிசைல பாத்துகிட்டு வரேன். முதல்ல அபுர் சன்சார், அப்பறம் அபராஜிதோ. இன்னும் பதேர் பாஞ்சாலிய பாக்கல. கூடிய விரைவுல பாக்கனும்.

  விமர்சனத்துக்கு நன்றி தோழர்.

 7. சித்தார்த், நீங்கள் எனது பதிவுகளுக்கான பின்னூட்டங்களை அளித்த வேளை உங்களிடமிருக்கும் பதிவுகளைக் காண நேர்ந்தது, பதிவுகளில் நல்ல நேர்த்தியும், விமர்சனங்களிள் முதிர்ச்சியும் இருக்கின்றது, வாழ்த்துக்கள்.

 8. பிரபா, மிகவும் அருமை. மிகவும் அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள் சோகத்தை. அப்பப்பா!

  பதேர் பாஞ்சாலி படம் எடுப்பதற்குள் சத்யஜித்ரே படாத பாடு பட்டுவிட்டார் தெரியுமா? தொடர்ந்து படமெடுக்க முடியாத நெருக்கடி. பணமின்மை. கொஞ்சம் கொஞ்சமாக பணம் கிடைக்கும் பொழுதெல்லாம் எடுத்தார். படம் ஒருவழியாக முடிந்தது. அதற்குப் பின் நடந்தது எல்லாருக்கும் தெரியும். ஒருவேளை இந்தப் படம் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் நாம் ஒரு நல்ல கலைஞனை இழந்திருப்போம்.

  மாயஜாலப் படம் கூட எடுத்திருக்கின்றார் ரே. குபி காயன் பகா பாயன் (Gupi Ghayan Bhaga Bayan) என்ற பெயரில். அதுவும் வித்தியாசமாக. புது அனுபவம் கிட்டும். அதில் வேதாளம் பாடும். அதற்கு ரேயே பாடியிருக்கின்றார். அதாவது பாடலைப் பதியும் பொழுது ரெக்கார்டிங் டேப்பின் வேகத்தைக் குறைத்துப் பதிந்தார். பின்னர் அதை ஓட்டும் பொழுது கொஞ்சம் வேகமாகக் கேட்கும். தமிழில் இதுபோல விஸ்வநாதனும் செய்திருக்கின்றார். “முத்தமோ மோகமோ” என்ற எம்ஜியார் படப்பாடல் நல்ல எடுத்துக்காட்டு. இன்னும் சில பாடல்களிலும் கேட்டுள்ளேன்.

  இதே போல பஞ்ச்சரமேர் பாகன் (Bancharam-er Bhagan) என்ற படம் (ரே இயக்கியது அல்ல) மிகவும் அருமையாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள். இந்தக் கதையைத் தமிழ்ப் படுத்தி நாவலாக வெளிவிட வேண்டுமென்று எனக்கும் ரொம்ப நாளாக ஆவல். ம்ம்ம்..என்றைக்கு நிறைவேறுகின்றதோ!

 9. நன்றி ராகவன்.

  தங்களின் தளததையும் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பன்முகப் பார்வை கொண்ட உங்கள் முயற்சிக்கு என் வாழ்துக்கள்.
  நீங்கள் குறிப்பிட்டது போன்று ரே தன் முதல் படைப்புக்காக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.
  ஒரு உதாரணம் படத்தின் ஆரம்பத்தில் வரும் கலைஞர் விபரங்கள்(titles) வெள்ளைத் துணி மீது பதியப்பட்டுப் பின் படமாக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அத்துணியின் கசங்கல் திரையிலும் தெரிகின்றது.

 10. ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன் தனது ஹிந்தி படம் ஒன்றை ஒரு தியேட்டரில் திரையிட முயன்றார். தியேட்டர் முதலாளியும் சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்டார். ஆனால் அப்போது அந்த தியேட்டரில் ஒரு பெங்காலிப் படம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு புக் செய்யப்பட்டிருந்தது. இருந்தாலும் அதை தூக்கி விட தியேட்டர் முதலாளி முடிவு செய்தார்.

  வாசன் முதலில் அந்தப் படத்தைப் பார்த்தார். அதுதான் பதேர் பாஞ்சாலி. உடனே சத்யஜித் ரே அவர்கள் தங்குமிடத்திற்கு சென்று அவரிடம் அப்படத்தைப் பாராட்டி பேசினார். பிறகு அப்படத்தைத் தூக்கி விட்டு தன் படத்தை போட அவர் ஒத்து கொள்ளவில்லை.

  இப்பின்னூட்டம் என்னுடைய இந்த தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க:

  http://dondu.blogspot.com/2005/12/2.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 11. இப்படம் 85ல் ,இந்திய ஆண்டுக் கொண்டாட்டங்களின் போது பாரிசில் திரையிட்டுப் பார்க்க கிடைத்தது. உபதலைப்பை வாசிப்பதா, நடிகர்களைக் கவனிப்பதா? என எனக்கு அக்கப்போராக இருந்தது.வேற்று மொழிப் படங்களை ஆழ்ந்து புரிந்து கொள்ள மொழி தேவையாக உள்ளது. என்நிலை. 20 வருடங்களுக்கு முன் பார்த்த பிரென்ஸ் படங்களை இப்போ பார்க்கும் பொழுது;அப்போ எவ்வளவோ விடயங்கள் புரியவில்லை;என்பதை உனர்கிறேன்; பலருக்கு இந்த அனுபவம் இருக்கலாம்.
  அடுத்து, பதர் பஞ்சலி எனும்பொழுது, எனக்கு “துலாபாரம்” படம் தான் ஞாபகம் வந்தது.துலா பாரம் இயக்குனர் அதை எடுக்கு முன் “பதர் பஞ்சாலி” பார்த்திருப்பார்.நான் துலாபாரம் பார்த்த பின்பே பதர் பஞ்சாலி பார்த்தேன். ஏதோ எனக்கு அந்த” வறுமைகள் நினைவு வந்தது.இந்தியாவின் வறுமையைக் காட்டுவதனால் தான்,அவரை வெளிநாட்டார் அதிகம் புகழ்கிறார்கள் எனும் விமர்சனமும் அவர் மேல் உண்டு.
  மேலும்” என்ர அப்பு வந்திட்டானோ???” அந்த வெற்றிலை வாய்த் தமிழ்;தான் ஆக்கத்தைத் தூக்கி நிறுத்தியது
  மிக நன்று தொடரவும்.
  யோகன்
  பாரிஸ்

 12. வணக்கம் யோகன்

  தொடர்ந்தும் என்பதிவுகளை வாசித்துத் தங்கள் கருத்துக்களோடு, படம் பார்த்த அனுபவங்களையும் பகிர்வதற்கு என் நன்றிகள்.

 13. உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது.

  நண்பர் செல்வன் என்னை நாலு என்ற சங்கிலிப் பதிவில்
  சேர்த்திருக்கிறார். நான் வரும் போது நால்வரில் ஒருவராக உங்களை அழைக்கப்போகிறேன்
  கண்டிப்பாக வாருங்கள்.

  அன்புடன்
  சாம்

 14. பிரபா!
  முதலில் உங்கள் தளத்தின் பெயரே என் மனதைத் தொட்டது. மடத்துவாசல் பிள்ளையாரடி எனக்கும் மிக நெருக்கமானதே.
  பதேர்பாஞ்சாலி பார்த்தபின் சில தினங்கள் என்னுள் நிறைந்த மெளனம், இன்று உங்கள் பதிவிலும், உங்கள் பெரிய மாமி தந்தா.
  பிரபா!
  யாழ்ப்பாண சமுகத்தில் இத்தகைய பெண்கள் சற்று அதிகமென்றே நினைக்கின்றேன்.
  பாராட்டுக்கள்!

 15. வணக்கம் சாம்

  தங்களின் பின்னூட்ட்த்திற்கு என் நன்றிகள்.
  தங்களின் நாலு என்ற அப்பதிவில் என்னையும் இணையுங்கள், என் மின்மடலும் இந்த இணைய புளொக்கில் உள்ளது.

 16. மலைநாடான்

  தங்களின் பின்னூட்ட்த்திற்கு என் நன்றிகள்.
  மடத்துவாசல் பிள்ளையாரடி உங்களுக்கும் நெருக்கமே என்று சொல்லியிருக்கிறீர்கள், தங்களைப் பற்றி மேலும் அறிய ஆவல்.
  “யாழ்ப்பாண சமுகத்தில் இத்தகைய பெண்கள் சற்று அதிகமென்றே நினைக்கின்றேன்.”
  இது மிகவும் உண்மை.

 17. இண்டைக்குத்தான் இந்தப் பதிவு வாசிக்கக் கிடைச்சுது. 1995 , 1996 காலப்பகுதியில் பார்த்த படம். அப்ப நான் வலு இளைஞன். அனால் என்னைத் தவிர மற்ற நண்பர்களுக்குப் படம் பிடிக்கவில்லை. என்னடா, ஒரு கிழவி, பெடியன், பெட்டை, மீன் தின்னுற ஐயர் என்று அலுத்துக் கொண்டாங்கள். போதாக் குறைக்கு நான் தான் வழக்கமாகப் "பிரெஞ்ச்" படம் காட்டும் "ஆர்ட்ஸ் தியேட்டர்" இற்கு எல்லோரையும் தள்ளிக் கொண்டு போனது !. நீண்ட நாட்களுக்குப் பிறகு என் ஞாபகங்கள் இன்னும் பசுமையாக பதர் பதஞ்சலியில். நன்றி பிரபா.

Leave a Reply to AJeevan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *