இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்

சற்று முன்னர் இணுவையூர் திருச்செந்திநாதன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன்.

ஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்த ஆக்க இலக்கியக்காரர்களில் கே.எஸ்.ஆனந்தன் மற்றும் இணுவையூர் திருச்செந்திநாதன் ஆகியோர் எங்கள் மண்ணின் வாழ்வியலை அதே வாசனையோடு நாவல்களாகவும், சிறுகதைகளாகவும் தம் எழுத்தில் கொண்டு வந்தவர்கள்.

எண்பதுகளில் அம்புலிமாமா காலத்தில் இருந்து வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த போது செங்கை ஆழியானைத் தொடர்ந்து சிதம்பர திருச்செந்திநாதனின் எழுத்துகள் எனக்கு அறிமுகமான போது நிகழ்ந்த சம்பவமொன்று இன்றும் நினைவில் தங்கியிருக்கிறது. அப்போது ஈழநாடு வார மலரில் ஒரு தொடர் நாவலை அவர் எழுதிக் கொண்டிருந்தார்.

பத்திரிகையில் வந்த அவரின் பாஸ்போர்ட் சைஸ் படமொன்றைப் பார்த்து ஆளை அடையாளம் கண்டு கொண்டேன் எங்கள் இருவருக்கும் பொதுவான உறவினர் வீட்டுத் திருமணமொன்றில்.

“நீங்கள் தானே இணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன்” என்று தயங்கித் தயங்கிக் கேட்ட சிறு பையன் என்னைப் பார்த்து “ஓமோம்” என்று சிரித்துக் கொண்டே தலையாட்டியது இன்றும் நினைவில் இருக்கிறது. அப்போது அழகானதொரு வாலிபர் அவர். பின்பு அம்மாவிடம் இதை வந்து சொன்ன போது

“அவை எங்களுக்குச் சொந்தம் எல்லோ” என்று சொன்ன போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை.

வெளிச்சம் சஞ்சிகை உட்பட இவரின் எழுத்துகள் இடம்பிடித்த போது ஈழ தேச விடுதலையில் மிகுந்த தீவிரப் போக்கோடு இயங்கியவர். போர்க்காலத்தில் வன்னிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்தும் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். போர் முற்றிய காலத்தில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தவர் போர் முடிவுற்ற பின்னர் சமீப ஆண்டுகளில் “தளவாசல்” என்ற கலை இலக்கியக் காலாண்டிதழை வெளியிட்டு வந்தவர்.

இணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன் அவர்களுடைய ஆரம்பக காலத்து எழுத்துலக நட்பு அருண் விஜயராணி அக்கா என்னிடம் “பிரபா! திருசெந்தி நாதன் குறித்த சிறப்பு நூல் “பதிவும் பகிர்வும்” என்று வருகுதாம் ஏதாவது எழுதிப் பகிரக் கேட்டார் உங்களால் முடியுமோ?” என்று கேட்டார். அப்போது விஜயராணி அக்காவும் கடும் சுகயீனமுற்றிருந்த வேளை அது. நானும் அவரின் சிறுகதைகளை மீளப்படித்து ஒரு பகிர்வு எழுத ஆரம்பித்தாலும் குறித்த நேரத்தில் கொடுக்க முடியாத கவலை இருந்தது. விஜயராணி அக்காவும் அடுத்த சில மாதங்களில் இறந்தது பெருங்கவலை.

சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் தன்னுடைய அருமை மனைவியின் திடீர் இழப்பில் அவரை மையப்படுத்தி “மருத்துவர்களின் மரணம்” என்ற நூலை இறுதி எழுத்தாகக் கொண்டு வந்தவர் இன்று தன் மனைவியின் அடி தேடிப் போய் விட்டார்.

இவரைச் சந்தித்துப் பேச வேண்டும் இவரின் வாழ்வியல் அனுபவங்களை இவர் குரலில் பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது அந்த வாய்ப்பு நிரந்தரமாகக் கிட்டாத துயர் தான் என்னிடம் இப்போது.

உதயன் பத்திரிகைப் பகிர்வு

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த சிதம்பர திருச் செந்திநாதன் இன்று தனது 66 ஆவது வயதில் காலமானார்.

இவர் ஈழப்பத்திரிகைகளின் பிரபல எழுத்தாளராக நீண்டகாலம் கடமையாற்றியுள்ளார். இவர் ஈழத்தின் அவலங்கள் தொடர்பில் பல புத்தகங்களையும் எழுதி வெளியீட்டுள்ளார்.

இணுவில் கிழக்கைச் சேர்ந்த இவர் தம்மையா சிதம்பரநாதன் என்பவரின் மூத்த புதல்வராவார். இணுவில் சைவமகாஜன வித்தியாசாலையில் கற்கும் போதே எழுத்துலகில் பிரவேசித்தவர். நாளேடுகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதிப் பிரபலமடைந்தவர்.

யாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசங்களில் எழுத்தாளராக மிளிர்ந்த இவர், சிறுகதைகள் பலதையும் எழுதியுள்ளார். இவரது இலக்கிய ஆக்கங்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டமை சிறப்பு அம்சமாகும்.

ஈழத்து நூலகத்தில் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் குறித்த குறிப்பு மற்றும் நூல்கள்

சிதம்பர திருச்செந்திநாதன் யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஒரு வணிகவியல் பட்டதாரி. 1972 ஆம் ஆண்டிலிருந்து இவர் வீரகேசரி, ஈழநாதம், சுடர், சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதி வந்துள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது கதைகளை வீரகேசரியில் மாத்திரம் எழுதியுள்ளார். இவர் 1985களில் யாழ்ப்பாணக் கலாச்சாரக் குழு வெளியிட்ட எக்காளம் சஞ்சிகை, 1986 இல் வெளியான ஈழமுரசு வாரமலர், அமிர்தகங்கை போன்றவற்றில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

http://www.noolaham.org/wiki/index.php/பகுப்பு:சிதம்பர_திருச்செந்திநாதன்

கானா பிரபா

15.10.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *