பஞ்சலிங்கம் சேர்

எங்கள் இணுவிலூரில் பாதிக்கு மேல் குல தெய்வ சாமி கோயில் போல கொக்குவில் இந்துவில் தான் படிப்பு. எனக்கும் சித்தப்பாமாரில் இருந்து அண்ணன்மார், அக்காமார், பக்கத்து வீட்டுக்காரர் என்று நீளும்.

வெள்ளை வேட்டியும், வெள்ளை நஷனல் சேர்ட்டும், சந்தனப் பொட்டுக் குறியுமாக இணுவில் சீனிப் புளியடி பள்ளிக்கூடத்தின் அதிபர் சோதிப்பெருமாள் மாஸ்டரைக் கண்ட காலம் கடந்து மேல் வகுப்புப் படிக்க எங்களூரைத் தாண்டி கொக்குவில் இந்துக் கல்லூரிக்குப் போகிறோம்.

அயர்ன் பண்ணி மடிப்புக் குலையாத வெள்ளை சேர்ட் இன் பண்ணியிருக்க அதற்குத் தோதான வெள்ளைக் குழாய் நீள் காற்சட்டையும், கறுத்தச் சப்பாத்துமாகத் தலையில் இருந்து கால் வரை ஒழுக்கம் என்றால் இது தான், இப்படித்தான் நீங்கள் இருக்க வேண்டும் என்ற முன்மாதிரியை முதலில் கண்டோம். அவர்தான் எங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் பஞ்சலிங்கம் அவர்கள்.

ஆளைப் பார்ப்பதற்கு எண்பதுகளின் நாயகன் மோகனுக்கு வயசான தோற்றம் கட்டியது போல இருக்கும். ஒலிவாங்கி வழியாகப் பேசினாலும் அதிர்ந்து பேச மாட்டார், சிரிப்பும் அப்படியே.

ஏதும் வேடிக்கையைக் கண்டு அவர் சிரிப்பதைப் பார்த்தால் கால்வாசி வெளுத்த மீசை தான் மேலே ஏறி இறங்கும். கைகளைப் பின்னால் ஒளித்து வைத்திருப்பதைப் போல நிற்பார், நடக்கும் போது ஒரு தூக்குக் குண்டைக் குண்டெறியதல் போட்டியில் எறிய வளம் பார்க்கும் நிதானத்தோடு நடப்பார்.

கொக்குவில் இந்துவில் நாங்கள் படித்த காலத்தில் பஞ்சலிங்கம் மாஸ்டர் அதிபராகவும், உப அதிபராக மகேந்திரன் மாஸ்டரும் இருந்தார்கள். தமிழ்ப் படங்களில் வரும் இரட்டைப் பிறவிகளில் ஒருவர் சாது, இன்னொருவர் கோபக்காரர் ஆனால் இருவருமே நன்மை செய்யப் பிறந்தவர்கள் போலத் தான் பஞ்சலிங்கம் மாஸ்டரும், மகேந்திரன் மாஸ்டரும்.

வகுப்பறைகளின் பக்கமாக இரகசிய ரோந்து செல்லும் மகேந்திரன் மாஸ்டர் ஒளிச்சிருந்து பார்ப்பார் “எந்த வகுப்பில் ஆர் கதைச்சுக் கொண்டிருக்கிறான்” என்று. அப்படியே வந்து தன் ஆட்காட்டி விரலால் உரியவரைக் கூப்பிட்டு விட்டு “Enter the Dragan” புரூஸ்லீ அடிதான் விழும். அதுவும் ஒற்றைக் கையால் புரூஸ்லீ செங்கல்லை உடைப்பதைப் போல முதுகில் பாதி பிரித்து ஒரு படார்.

இது இப்படியிருக்க, பஞ்சலிங்கம் மாஸ்டர் வருகிறார் என்றார் பய பக்தியோடு கூடிய மரியாதையோடு கப் சிப் ஆகி விடும் வகுப்பு.

உயர்தர வகுப்பில் ஆசிரியர் இல்லாவிட்டால் பஞ்சலிங்கம் மாஸ்டரே களத்தில் இறங்கிப் பாடம் எடுப்பதைக் கண்டிருக்கிறேன்.

பஞ்சலிங்கம் மாஸ்டர் அதிபராகக் கடமையேற்ற பின் இந்தியாவுக்கு உயர் நிர்வாகப் பயிற்சிக்குப் போய் விட்டுத் திரும்பின நாள் தொட்டு சில மாற்றங்கள் நிகழ்ந்தன. கல்லூரி மைதானத்தில் காலை கூட்டுப் பிரார்த்தனையைத் தொடர்ந்து மாணவனோ, மாணவியோ எல்லோர் முன்னிலையிலும் ஏதாவது ஒரு படைப்பை அரங்கேற்ற வேண்டும். அது கவிதையோ, நற்சிந்தனையோ அல்லது தனி நடிப்போ ஆகக் கூட இருக்கலாம். காலை நேரத்தில் இப்படியொரு அதிரடி மாற்றம் வந்தது எங்களுக்கு இன்ப அதிர்ச்சி.

போர்ச் சூழலில் மைதானப் பக்கம் போக முடியாத சூழலிலும் “ப” வடிவ மூன்று மாடிக் கட்டிடங்களுக்கு இடையில் இருந்த திடலிலும் இந்தக் காலைப் பிரார்த்தனையையும், கலை வெளிப்பாடுகளையும் நிறுத்தியதே இல்லை. என் நண்பன் பிரதீபனின் தமையன், அப்போது உயர் வகுப்புப் படிச்சுக்கொண்டிருந்தார். அவர் சிவன் கோயிலடியில் பீப்பாய்க் குண்டு பட்டுப் பலியாக முன்னம் ஒரு சில நாட்களின் முன்பு தான் “ சொன்னதைச் செய்யும் சுப்பு” என்ற முசுப்பாத்தியான தனிநடிப்பை இதில் நிகழ்த்திக் காட்டினார்.

காலை எட்டு மணிக்கு ஒரு நிமிடம் பிந்தினாலும் பள்ளிக்கூடத்தின் முகப்புக் கதவுகள் அடைக்கப்பட்டு விடும். கூட்டுப் பிரார்த்தனை முடிந்த பின் தான் உள்ளே போகலாம். அங்கே ஏன் பிந்தி வந்ததது என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும். சட்டையைக் காற்சட்டைக்குள் திணித்து நீற் ஆக இருக்க வேணும். சப்பாத்து இல்லாத செருப்புக் கால் என்றால் செருப்பையும் தூக்கிக் கொண்டு மைதானத்தில் மூன்று சுற்று ஓட வேணும். பரதேசி மாதிரித் தலை வளர்க்கக் கூடாது. கொக்குவில் இந்துவில் இவர்கள் காலத்தில் காட்டிய ஒழுக்கத்தைப் பாடசாலையின் படலை தாண்டி வருஷங்கள் கழிந்தும் விட முடியவில்லை. நேர முகாமைத்துவம், ஒழுக்கம் போன்றவற்றின் அடிப்படைக் கல்வியைப் புகட்டினார்கள்.

கிடைக்கின்ற வளங்களோடு கல்லூரியை நடத்திய திறனோடு, போர்க்காலத்திலும் பல சவால்களை எதிர்கொண்டு திறம்படப் பள்ளிக்கூடத்தை நடத்தியவர் எங்கள் அதிபர்.

சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் ஒரு பள்ளி ஆசிரியர் இன்னொரு பள்ளிக்கு இடம் மாறுவது பொறுக்க முடியாமல் பிள்ளைகள் அழுது குழறியதை அறிந்திருப்பீர்கள். அதையெல்லாம் நாங்கள் எப்போதோ செய்து விட்டோம். கொக்குவில் இந்துவில் இருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அதிபராக மாற்றலாகப் போகும் பஞ்சலிங்கம் மாஸ்டரின் இடமாற்றத்தைப் பொறுக்க முடியாது அப்போது மாணவர்களில் இருந்து ஆசிரியர்கள் வரை கலங்கினோம்.

ஆனால் என்ன முயற்சி எடுத்தாலும் அதிபரின் இடமாற்றம் தவிர்க்க முடியாது போகவே எங்கள் பஞ்சலிங்கம் மாஸ்டருக்குப் பள்ளிக்கூடமே திரண்டு பிரியாவிடை நிகழ்வு எடுத்தது. ஆசிரியர்களில் இருந்து மாணவர்கள் வரை ஆளாளுக்கு மாலைகளோடும் பூச்செண்டோடும் மேடையில் இருக்கும் பஞ்சலிங்கம் மாஸ்டரை வாழ்த்துகிறார்கள். என் முறை வருகிறது. அப்போது என் வாழநாளில் அதுவரை செய்யாத ஒரு காரியம் செய்தேன்.

பஞ்சலிங்கம் மாஸ்டருக்கு முன்னால் நெடுஞ் சாண் கிடையாக விழுந்து வணங்கி விட்டுக் கடந்தேன்.

எனக்குப் பின்னால் வந்த மாணவர்கள் பொத்துப் பொத்தென்று விழுந்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று எங்கள் அதிபர் பஞ்சலிங்கம் மாஸ்டருக்கு 83 வது பிறந்த நாள். அவர் இன்னமும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் தான் இருக்கிறார் அதிபராக அல்ல அந்தக் கல்லூரியைத் தொடர்ந்து பேணி வளர்க்க வேண்டும் என்ற முனைப்பிலிருக்கும் தன்னார்வலர் குழுவில் முதன்மையானவராக.

கானா பிரபா

08.01.2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *