மூத்த எழுத்தாளர் இரா.சந்திரசேகர சர்மா மறைவு

மூத்த எழுத்தாளர் இரா.சந்திரசேகர சர்மா அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் மறைந்த சேதி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைகின்றேன்.

2016 ஆம் ஆண்டில் எழுத்தாளர் சந்திரசேகர சர்மா அவர்கள் அவுஸ்திரேலியா வந்திருக்கும் செய்தியை எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் என்னிடம் அறிவித்த போது அவரின் சிட்னி வருகையின் போது வானொலிப் பேட்டிக்காகச் சந்தித்தேன். அந்த நாள் தொட்டு அவருடைய நேசத்துக்குரிய ஒருவராக இருந்தேன்.

ஃபேஸ்புக்கில் என் மகள் இலக்கியாவின் குறும்புகளை வாசித்து அடிக்கடி சிலாகிப்பார். என்னுடைய “அது எங்கட காலம்” நூல் யாழ்ப்பாணத்தில் என் சொந்த ஊரான இணுவிலில் வெளியிடப்பட்ட போது அவரை நூலாய்வுக்காக அழைத்தேன். விழாவுக்கு முன் கூட்டிய வந்து மகிழ்வோடு கலந்து கொண்டு விழா முடிந்த பின் என் பெற்றோருடன் பேசி மகிழ்ந்து விட்டுத்தான் போனார். பிறிதொரு பயணத்தில் அவரைச் சந்திக்க முடியாமல் போனதற்குச் செல்லமாகக் கடிந்து கொண்டார். என் நூல் வெளியீட்டு விழாவே அவரை நேரே கண்ட இறுதி நாள் என்ற வேதனை தான் வலியை எழுப்புகிறது.

வேதனையுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

இரா.சந்திரசேகர சர்மா அவர்கள் தன் வாழ்வியல் பகிர்வாக என்னிடம் பகிர்ந்து கொண்டதைத் தருகிறேன்.

ஈழத்து இலக்கிய உலகில் பத்தி எழுத்தாளராகக், கட்டுரை ஆசிரியராக, சிறுகதை ஆசிரியராக இயங்கி வரும் மூத்த எழுத்தாளர் திரு. சந்திரசேகர சர்மா அவர்கள் சிட்னி வந்திருந்த போது அவரின் இலக்கிய வாழ்வியல் அனுபவங்களை வானொலிப் பேட்டி வழியே சேமித்தேன்.

இந்தப் பேட்டியின் வழியாக திரு. சந்திரசேகர சர்மா அவர்களின் இலக்கிய அனுபவங்களின் வழியே ஒரு கால கட்டத்தில் இயங்கிய ஈழத்து இலக்கியக் களமும் பதிவு செய்யப்படுகிறது.

தீபம் நா.பார்த்தசாரதி, டாக்டர் மு.வரதராசனார் போன்றோருடன் இவருக்கிருந்த இலக்கியத் தொடர்பையும் இந்த அனுபவப் பகிர்வு வழியே கொடுக்கின்றார்.

கட்டுரைகள் வழியாக இரா.சந்திரசேகர சர்மா என்றும் இரா.சந்திரசேகரன் என்ற பெயரில் சிறுகதைகளையும் எழுதி வந்த இவர் ஈழத்து இலக்கிய உலகில் விஞ்ஞானக் கட்டுரைகள், சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான எழுத்துப் பகிர்வுகள் போன்றவற்றை எழுதி வருவதன் மூலம் தனித்துவமாக இயங்கி வருகின்றார். “விந்தைகள் செய்த விஞ்ஞானிகள்” என்ற இவரின் நூல் ஐந்து பதிப்புகளாக வெளிவந்திருக்கிறது.

வானொலி ஆளுமை திரு.சுந்தா சுந்தரலிங்கம் அவர்களோடு கிட்டிய எதிர்பாராத சந்திப்பின் வழியே இலங்கை வானொலியில் பல ஆளுமைகளோடு சம காலத்தில் இயங்கிய அனுபவமும் “கலைக்கோலம்” என்ற வானொலி நிகழ்ச்சியில் இவரின் பங்களிப்பும் இந்தப் பேட்டியில் பதிவாகியிருக்கிறது.

தற்போது “சாந்திகம்” என்ற உள வள நிலையத்தில் சமூகப் பணியாளராக இயங்கி வருகின்றார். போரினால் பாதிக்கப்பட்ட மன வடு கொண்ட உறவுகளுக்கு மனோ ரீதியான ஆறுதலைக் கொடுத்து அவர்களை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வரும் பெரும் பணியில் இவர் தன்னை ஈடுபடுத்தி வருவதை நேரடி அனுபவங்களைத் தன் அனுபவப் பகிர்வில் கொடுத்த போது நெகிழ்வாக இருந்தது.

ஆண்டவனுக்குச் சேவை செய்யும் பின் புலத்தில் பிறந்து, பின்னர் ஆசிரியப் பணியைத் தன் தொழிலாகக் கொண்டு இன்று சமூகத் தொண்டராக வாழ்ந்து வரும் இரா.சந்திரசேகர சர்மா அவர்களின் வாழ்வின் தரிசனங்களே அவரின் சிறுகதைகளாகவும், சமூக விழிப்புணர்வு சார்ந்த கட்டுரைகளாகவும் பிரசவித்திருக்கின்றன. இன்று சமூகப் பணியாளராக இயங்கி வரும் அவரின் பன்முகப்பட்ட பணி போற்றத் தக்கது.

இரா சந்திரசேகர சர்மா அவர்களின் வானொலிப் பேட்டியைக் கேட்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *