வாக்மெனுக்கு வயசு நாப்பது ?

“எடி மேனை!

உவனுக்குக் காதில ஏதும் குறைபாடோ?”

மீனாட்சி அன்ரியிடம் எட்டிக் கேட்டார் சுப்பையா குஞ்சியப்பு.

றோட்டில் போனவர் மீனாட்சி அன்ரி வீட்டின் முகப்புத் திண்ணையில் இருந்து வாக்மென் (Walkman) கேட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்ததும் கிட்ட வந்து மீனாட்சி அன்ரியிடம் இரகசியமாகக் விட்டுப் போனார். சுப்பையா குஞ்சியப்பு நினைத்தார் நான் காது குறைபாடுள்ளோர் பொருத்தும் மெஷினை மாட்டியியிருக்கிருக்கிறேன் என்று. இது நடந்தது தொண்ணூறுகளின் முற்பகுதியில்.

நான் வீட்டில் வானொலி கேட்ட காலத்தை வீதிக்குக் கொண்டுவந்தது திண்டுக்கல் வானொலி நிலையம். 92 ஆம் ஆண்டு வாக்கில் ஒருநாள் யதேச்சையாக வானொலியின் அலைவரிசை முள்ளு விலகியபோது கேட்டது அந்த திண்டுக்கல் வானொலி நிலையப் பண்பலை வரிசையின் பரீட்சார்த்த ஒலிபரப்பு. என் அண்ணன் கொழும்பிலிருந்து கொண்டுவந்து பெட்டிக்குள் வைத்திருந்த வாக்மென்னுக்குள் (Walkman) என்னிடம் அடைக்கலம் புகுந்த மற்றைய பென்ரோச் வகை பற்றறிகளைப் பொருத்திச் சைக்கிளில் போகும் போதும், மீனாட்சி அன்ரி வீட்டுத் திண்ணையில் இருந்த மாலைப் பொழுதுகளும் திண்டுக்கல் வானொலி நிலையத்தின் துல்லியமான பரீட்சார்த்த ஒலிபரப்பின் பாடல்களே கதியென்று இருந்தேன். எங்களூரில் வாக்மென்னின் வாசனை பிடிபடாத காலமது.

தேவாவின் இசையில் “சோலையம்மா” படப்பாடல்கள் முழுவதையும் மூச்சுக்கு முன்னூறு தரம் ஒலிபரப்பி என் சாபத்தை வாங்கினாலும், ராஜாவின் இசையில் பாண்டி நாட்டுத் தங்கத்தில் வரும் ” உன் மனசில பாட்டுத்தான் இருக்குது” போட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டார்கள் திண்டுக்கல்லுக்காரர்கள்.

அப்போது வாக்மெனில் பாட்டுக் கேட்கும் சுகம் அலாதியானது. அப்போது நீண்ட வளையத் தண்டாக இருக்கும் ஹெட்போனுடன் தான் அமைந்திருக்கும்.

குறிப்பாக ப்ரியா படப் பாடல்களைக் கேட்கும் போது காதில் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனை வரை இசை பாயும் அனுபவத்தை ரசித்து உணரலாம். நட்ட நடுத்தலையடியில் ஒரு ஓசை, இடப் பக்கக் காதில் ஒரு வித ஓசை, இன்னொரு பக்கம் வலது காதடியில் வியாபிக்கும் ஒலி என்று ஸ்டீரியோ நுணுக்கங்களை அனுபவ ரீதியாக உணர்ந்த காலமது.

கைக்கு அடக்கமாக இந்த வாக்மென் இருப்பதால் எந்தப் பாட்டுக்கு forward செய்து நிறுத்த வேண்டும் எந்தப் பாட்டை rewind பண்ணிக் கேட்க வேண்டும் என்று துல்லியமாகக் கணித்துத் தேர்ச்சி பெற்றிருந்தேன். இது ஒரு வித்தை மாதிரி எனக்குள்ளே ஒரு பெருமை.

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்பது போல எத்தனையோ தொழில் நுட்பம் வந்தாலும் றேடியோ பெட்டியில் பாட்டுக் கேட்ட காலம், வாக்மெனில் கசெற் போட்டுக் கேட்ட காலம் எல்லாம் மறக்க முடியாது.

அப்போதெல்லாம் றெக்கோர்டிங் பாரில் தேர்ந்த பாட்டுகளை எல்லாம் பதிவு பண்ணி ஒவ்வொரு கசெற்றிலும் மணி மணியாக எழுதி வைத்துக் கேட்பேன். இன்றைக்குப் பாடல்களை இவ்வளவு தூரம் அணுக்கமாக ரசிக்க முடிகிறதென்றால் அதற்கு வாக்மென் வாழ்க்கை தான் காரணம்.

“உன் மனசுல பாட்டுத்தான்”, “சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி”, “நின்னுக்கோரி வர்ணம்” என்று இந்தப் பாடல்களையெல்லாம் இழுத்து வைத்துத் திரும்பத் திரும்பக் கேட்ட் காலமது.

ஒருக்கால் கேட்டுட்டுத் தாறன் எண்டு குஞ்சு குருமான்கள் வரிசையில் நிற்கும்.

இந்த வாக்மெனுக்குள் கசெற்றின் ஒலிநாடா சிக்காமல் பொருத்திக் கேட்க வேண்டும். சிக்கினால் நூதனமாக player இன் மேற் பஞ்சுக்குச் சேதாரம் இல்லாமல் எடுத்துப் பேனா ஒன்றில் கசெற்றைப் பொருத்தி அந்த ஒலிநாடாவைச் சரி செய்ய வேண்டும். கொஞ்சம் இசகு பிசகானால் அந்த கசெற்றே பாழாகி விடும்.

பொருளாதாரத் தடையால் தொண்ணூறுகளில் பற்றரிக்குத் தடை வந்த போது தான் இடையில் சில காலம் இந்த வாக்மெனில் பாட்டுக் கேட்கும் வாய்ப்புத் தடைபட்டு, சைக்கிள் ரிம் சுத்தி டைனமோவில் மின் பிறப்பாக்கிப் பாட்டுக் கேட்ட யுகத்துக்குப் போக வேண்டி இருந்தது. பின்னர் கொழும்புக்கு வந்த பின்பும், ஏன் அவுஸ்திரேலியாவுக்கு வந்த போதும் கூட என்னோடு பயணப்பட்டது இந்த வாக்மென்.

அப்போது மெல்பர்னில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது என்னுடைய கைப்பையைக் கீழே வைத்து விட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். சாப்பிட்டு முடிந்து கீழே பார்த்தால் கைப்பையையும் காணோம் அதற்குள் இருந்த வாக்மென் ஐயும் காணோம். அந்த நேரம் நான் அடைந்த துக்கத்துக்கு அளவே இல்லை. தாயகத்தில் இருந்து என்னோடு கூட வந்த, என் தனிமைக்குத் தீனி கொடுத்த உற்ற நண்பனை இழந்த கவலை அது. பின்னர் காசு சேர்த்து வேறொன்றை வாங்கிக் கொண்டேன்.

பின்னாளில் CD உடன் இயங்கும் வாக்மென் வந்த போது அதையும் வாங்கிக் கேட்டாலும், கசெற்றில் கேட்ட காலம் போல வரவில்லை. இன்று புதுக்கார்களில் CD ஐ இயக்கும் முறைமை இல்லை. இதனால் Portable CD player ஐ வாங்கிப் பொருத்தலாமோ என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.

காலங்கள் மாறினாலும் வாக்மென் இன் தேவை ஏதோ ஒரு விதத்தில் தொடர்ந்தும் வேண்டிக் கொண்டே இருக்கிறது.

ஜூலை 1, 1979 இல் Sony நிறுவனம் தனது முதல் Walkman ஐ அறிமுகப்படுத்தி இப்போது நாற்பது ஆண்டுகளைத் தொட்டு நிற்கின்றது. நம் காலத்தவருக்கு உற்ற தோழனாக விளங்கிய வாக்மென் நினைவுகள் மனசில் எப்போதும் நடை போடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *