பிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா

இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ஈழத்தின் ஓவிய மரபில் நீண்டதொரு தடம் பதித்த ஓவியர் ஆசை இராசையா அவர்கள்

ஈழத்தில் புகழ் பூத்த ஓவிய ஆளுமைகளில் ஒருவரான மாற்கு மாஸ்டர் எமது கல்லூரியில் சித்திர வகுப்பு ஆசிரியர். பள்ளிக் கூடத்தில் அவருடைய சித்திரக் கூடம் முழுதும் ஓவியங்கள் பொதிந்த அட்டைகளும், மேசை பரவி பாதி வேலையில் இருக்கும் களிமண் சிற்பங்களுமாக நிறைந்திருக்கும். அந்த நேரத்தில்

சிங்களக் கலையுலகம் வரை போற்றப்பட்ட ஆளுமையாக விளங்கிய மாற்கு மாஸ்டரின் அருமை பெருமையைப் பள்ளி மாணவர் நமக்கோ புரிந்து கொள்ளக் கூடிய வல்லமை இல்லாதிருந்தது. பின்னாளில் திரு பத்மநாப ஐயர் “தேடலும் படைப்புலகமும்” என்று ஈழத்தின் அனைத்து ஓவியர்களின் வாழ்வனுபவங்களையும் திரட்டி வெளிவந்த “தேடலும் படைப்புலகமும்” என்ற நூலை எமது கொக்குவில் இந்துக் கல்லூரியில் பெரும் விழா எடுத்துக் கொண்டாடிய போது சிறப்புப் பிரதி வாங்கிய மாணவர்களில் ஒருவன் நான். அந்த வகையில் அந்தக் காலத்தில் எப்படி அம்புலிமாமா காலத்தில் இருந்து மெல்ல மெல்ல ஈழத்து எழுத்தாளர்கள் பக்கம் திசை திரும்பி அவர்களின் எழுத்துகளை அள்ளியெடுத்துப் படித்தேனோ அது போலவே ஈழத்து ஓவியர்களின் படைப்புகளையும் விரும்பி ரசித்துப் பார்க்கும் வழக்கம் உண்டாயிற்று. ஓவியர் ரமணி, பயஸ் போன்றோர் ஈழத்துப் பத்திரிகைகளில் அடிக்கடி ஓவியம் போடுவார்கள். தவிர ரமணியின் ஓவியம் தாங்கிய ஈழத்து நாவல்கள், சிறுகதைகள் என்று வந்து கொண்டிருக்கும். இது ஒருபுறம் இருக்க எங்களையறியாமலேயே இன்னாரென்று தெரியாமல் அவருடைய ஓவியங்கள் நம் பாடப் புத்தகங்களில் இருந்ததை ரசித்துப் பார்த்து வாழ்ந்திருக்கிறோம். அவர் தான் ஓவியர் ஆசை இராசையா.

ஓவியர் ஆசை இராசையா அவர்களை இன்னும் நெருக்கமாக அணுக வைத்தது பெருமதிப்புக்குரிய எழுத்தாளர் அமரர் அநு.வை.நாகராஜன் எழுதிய “காட்டில் ஒரு வாரம்” என்ற சிறுவர் நவீனம். அந்த நாவலுக்கு ஆசை இராசையா அவர்கள் தான் ஓவியம்.என் பதின்ம வயதில் என்னுடைய படிக்கும் ஆர்வம் கண்டு “காட்டில் ஒரு வாரம்” நாவலுக்கு அணிந்துரை எழுத வைத்தவர் அமரர் நாகராஜன் அவர்கள். அந்த வகையில் என் எழுத்து வந்த நூலுக்கும் ஆசை இராசையா அவர்களின் சித்திரம் வந்ததைப் பெருமையோடு நினைவு கூர்வேன். இந்த நூல் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் வெளியீடு கண்ட போது முகப்பு ஓவியம் குறித்தும் அன்றைய மூத்த எழுத்தாளர்கள் பேசியது நினைவுக்கு வருகிறது. இது குறித்து நான் முன்னர் எழுதிய போது ஆசை இராசையா அவர்கள் இவ்வாறு கருத்திட்டிருக்கிறார்.

“பலாலி ஆசிரிய கலாசாலையில் நான் 1973/1974 ம் ஆண்டுகளில் பயிலுனராக இருந்த காலகட்டம். பயிற்சி நிறைவில் நான் கொ/றோயல் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகப் பணிக்கப்பட்டிருந்தேன். இலங்கையில் மிகப் பெரிய கல்லூரி. (1983ம் ஆண்டு இக் கலூ.ரியின் மாணவர் தொகை : 8000. ஆசிரியர் தொகை 350.) கல்லூரி வளாகத்தில் கால் எடுத்து வைக்கவே உதறல் எடுக்கும். இக்கலூரியில் வாயப்புக் கிட்டியதே அதிர்ஷ்டம் என்று பலரும் வற்புறுத்தியதன் நிமித்தம் வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டேன். அங்கே சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார் அநு.வை.நாகராஜன். பின்புதான் தெரிந்துகொண்டேன் அவர்தான் நான் அக் கல்லூரிக்கு ஆசிரியப்பணிக்கு வரக் காரணமானவரென்று. அப்பொழுது ஏற்பட்டதுதான் அவருடனான நட்பு. காட்டில் ஒரு வாரம், அவன்தான் பெரியன் ஆகிய இரு நூல்களுக்கும் நானே ஓவியம் வரைந்தவன். நல்ல ஆற்றொழுக்கான நடையில் எழுதும் ஆற்றல் உள்ளவர். சிறுவர் இலக்கியங்கள் மட்டுமல்ல சமய நூல்கள் கட்டுரைகள் பலதும் எழுதியுள்ளார். சுவைபட உரையாடுவதிலும் வல்லவர். எனது சுகவீனம் காரணமாக நீண்ட தூரம் பயணிக்க முடியாததால் சந்திக்கமுடியவில்லை. அவருடைய இறுதிப் பயணத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாதது இன்றும் வேதனையே.”

ஆசை இராசையா அவர்கள் குறித்து விக்கிப்பீடியா இவ்வாறு பகிர்கிறது. இவர் ஆகஸ்ட் 16, 1946 இல் பிறந்தவர். நூல்களின் வடிவமைப்பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் இருக்கின்றார். இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவர். இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை இவர் வரைந்துள்ளார்.

இவர் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்சமயம் யாழ். பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்கும் மாணவர்களுக்கு வருகை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.

ஓவியர் ஆசை இராசையா குறித்த நீண்ட விரிவான பதிவுளை மேலும் படிக்க

4TamilMedia வில் ஓவியர் ஆசை இராசையா அவரின் ஓவியத்தின் மீதான காதல் பற்றி, மகள் காயத்திரியுடன் உரையாடுகிறார்.

பாகம் ஒன்று

http://www.4tamilmedia.com/speci…/…/1110-2016-08-12-00-06-00

பாகம் இரண்டு

http://www.4tamilmedia.com/special/yard/1111-2

பாகம் மூன்று

http://www.4tamilmedia.com/special/yard/1112-3

ஈழத்து நூலகத்தில்“தேடலும் படைப்புகலமும்” என்ற

ஓவியர் மாற்கு சிறப்பு மலரில்

அ. இராசையா: உயிர்கொண்ட நிலக்காட்சிகள் – அரூபன் (பக்கம் 157)

http://www.noolaham.org/…/தேடலும்_படைப்புலகமும்_(ஓவியர்_மாற…

Our Jaffna இணையம்

பதிவை அலங்கரிக்கும் ஓவியங்கள் திரு ஆசை இராசையா அவர்களால் வரையப்பட்டது.

ஓவியர் ஆசை இராசையா நிழற்படம் நன்றி Our Jaffna இணையம்

கானா பிரபா

16.08.2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *