ஈழத்தில் பொருளாதாரத் தடை காலம் கொடுத்த பயிற்சி

இப்போது கொரானா வைரஸின் தாக்கத்தை விட, Toilet Paper எங்கு கிடைக்கும் என்ற கவலை தான் சிட்னி மக்களை ஆட்டிப் படைக்கிறது. Toilet Paper syndrome என்ற புது வகை நோய்க்கூறு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வார இறுதியில் இலங்கை, இந்திய மளிகைக் கடைக்குப் போனேன், அங்கு ரசப் பொடிப் பெட்டிகள் எல்லாம் காலி. கொரானாவைத் தீர்க்கும் அரு மருந்து என்று அதையும் மக்கள் விட்டு வைக்கவில்லை. ஈழத்தில் எண்பதுகள், தொண்ணூறுகளைக் கழித்தவர்களுக்கு இந்தப் பொருட் தட்டுப்பாடு குறித்துப் பூரண அனுபவத்தைப் பெற்றிருப்பர்.

அந்தக் காலத்தில் ஈழ நாடு, ஈழ முரசு, உதயன் போன்ற நாளேடுகளில் தமிழர் பகுதிகளில் எடுத்து வரத் தடையாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சால் பட்டியலிட்ட பொருட்கள் தலைப்புச் செய்திகளாகவோ அல்லது இரண்டாம் பக்கச் செய்தியாகவோ இருக்கும். மண்ணெண்ணெய், பெற்றோல், டீசல், பற்றறி (Battery), கற்பூரம் என்று கிட்டத்தட்ட ஐம்பத்துச் சொச்சம் பொருட்களைப் பட்டியலிட்டிருப்பார்கள்.
இவையெல்லாம் வெடி பொருட்களைப் பாவிக்க ஏதுவானவை என்று பாதுகாப்பு அமைச்சின் நம்பிக்கை. ஆனால் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் வேறு வழியால் (கடலாலோ தரையாலோ) வந்து சேருவதால் அவர்களுக்கு இந்தத் தடையெல்லாம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

யாழ்ப்பாணம் போகும் வீதியின் இரு மருங்கும் புதிது புதிதாக மண்ணெண்ணைக் கடைகள் வந்து விட்டன. ஒரு லீட்டர், இரண்டு லீட்டர் சோடாப் போத்தல்களில் வெண் சிவப்புத் திராவகங்களாக மண்ணெணெய் நிரப்பப்பாட்டு விற்பனையாகும். மண்ணெணையில் ஓடும் மோட்டார் வாகனங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்களை ஜெனரேட்டராக மாற்றிப் பாவித்தல் என்று மக்களும் மாற்றீடுகளைத் தேடத் தொடங்கி விட்டார்கள். மண்ணென்ணைக் கடைப் பணக்காரர்கள் ஒரு புறம், இன்னொரு புறம் இந்த மண்ணெண்ணைக் கடைகளில் தீ பரவிக் காயப்பட்டோரும், இறந்தோரும் உண்டு.

சைக்கிள் டைனமோ வழியாகப் பாட்டுக் கேட்ட கதைகள் எல்லாம் தனியாக எழுத வேண்டியவை.

பொருளாதாரத் தடை ஒரு பக்கம், இன்னொரு பக்கம் கடும் போர்ச் சூழலால் தென்னிலங்கையில் இருந்து வடக்குப் பிரதேசம் நோக்கிப் பொருட்களை எடுத்து வர முடியாத சூழல் இன்னொரு புறம் என்று இரண்டு பக்கமும் வேல் பாய்ச்சியது.

சோப்பைச் சின்னச் சின்னத் துண்டாக்கிப் பாவிப்பது, துணியில் சுருட்டிப் பாவிப்பது என்று சிக்கன நடவடிக்கைகள் அரங்கேறின. கொஞ்ச நாளில் இருப்பில் இருந்த எல்லா சோப்பும் கடைகளில் காலியாகின.

சுரக்காயைக் காய வைத்து அதன் உள் எலும்புக் கூட்டை எடுத்தால் ஸ்பொன்ச் மாதிரி இருக்கும். அதற்குள் சோப்புத் தண்ணியைக் கரைத்து ஊற்றி வெது வெதுவாக்கி குளிக்கும் போது சோப்புப் போடுவது போலப் போட்டுத் தேய்த்துக் குளிப்போம்.
பனம் பழச் சாற்றை எடுத்து விட்டு முடியால் சூழப்பட்ட கிழவன் போன இருக்கும் அந்தப் பனங்கொட்டையைத் தேய்த்துக் குளிப்போரும் உண்டு.பனஞ்சாற்றை எடுத்து உடுப்புத் தோய்ப்போம். பூ, செவ்வரத்தம் இலையை ஊறப்போட்டு அது நொய்ந்து ஒரு நெகிழ் கலவையாக வந்த பின்னர் அதைப் போட்டு உரஞ்சிக் குளிப்போரும் உண்டு.

எரிபொருளுக்கு மட்டுமல்ல எரிக்கும் பொருட்களுக்கும் அப்போது தட்டுப்பாடு. விறகு தேடி ஊரூராய் அபைந்து, வெட்டிய விறகுகளைத் தம் சைக்கிள் கரியரில் கட்டிக் கொண்டு கூவிக் கூவி விற்பர். இந்தத் தொழிலில் விமானக் குண்டு வீச்சில் எரிந்து விறகோடு விறகாய்ப் போனவரும் உண்டு.

செங்கை ஆழியான் தனது “யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று” என்ற குறு நாவலில், தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்து வாழ்வியலில் வன்னிப் பக்கம், அது தடைப்பட தென்மராட்சி என்று விறகு தேடிச் சைக்கிளின் பின் கரியரில் ஒரு ஆள் நீளத்துக்குக் கட்டி எதிர்க்காற்றுக்கு முகம் கொடுத்து வலித்து வலித்து ஓடி, எதிர்ப்படும் போர் விமானங்களைக் கண்டு போட்டது போட்டபடி விட்டு விட்டு மறைவாக ஓடி, அல்லது அந்த விமானங்களின் குண்டுக்கு அந்த இடத்திலேயே இரையாகிப் போன மனிதர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

மின்சாரம் இல்லாத அந்த ஐந்து ஆண்டு வாழ்க்கையை, குப்பி விளக்கில் படித்த காலத்தை இங்கே எழுதியிருக்கிறேன்.

http://www.madathuvaasal.com/2013/01/blog-post_17.htmi

பேப்பருக்கும் தட்டுப்பாடு. அதனால் ஒற்றை றூல், இரட்டை றூல் கொப்பிலளின் தாள், அதுவும் தட்டுப்பாடாகி விட, தடித்த அட்டைகளில் தான் பத்திரிகைகள், நாவல்கள், சஞ்சிகைகள் அச்சிடப்பட்டன.

அண்ணா கோப்பி என்பது உள்ளூர் உற்பத்தியாகப் பிரபலமாக இருந்த காலத்தில் ஜீவாகாரம் என்ற சத்துணவு, இனிப்பு வகைகள் தயாரிப்பு என்று தம் தொழிலை விரிவுபடுத்தினர்.
அப்போது சீனி, சர்க்கரை தட்டுப்பாடு நிலவியபோது “அண்ணா இனிப்பு” தான் அப்போது இணுவிலைத் தாண்டி எல்லா மூலையில் இருந்து வந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிப் போகும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது. அப்போது அண்ணா கோப்பி நிறுவனர் திரு நடராஜா நினைத்திருந்தார் அந்த உற்பத்திகளை முடக்கிக் கொள்ளை இலாபம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இருப்புத் தீரும் வரை அது தேடி வந்தோருக்குப் போய்ச் சேர்ந்தது.

“பதுக்காதே பதுக்காதே
பொருட்களைப் பதுக்காதே”

என்று பதுக்கல் வியாபாரிகள் மீதும்,

“அரசே! உன் பொருளாதாரத் தடையை
அப்பாவி மக்கள் மீது விதிக்காதே”

என்று அரசாங்கத்தைச் சாடியும் ஊர்வலங்கள் போவோம். விடுதலைப்புலிகளின் தமிழீழக் காவல்துறையும் இந்தப் பதுக்கல் வியாபாரிகளைக் கண்காணித்துத் தண்டனை கொடுத்தது.

தடை செய்யப்பட்ட பொருட்களைக் கண்காணிக்க வவுனியா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சோதனைச் சாவடி ஒன்றும் போடப்பட்டிருக்கும். அந்த வழியால் கள்ளமாகப் பொருட்களை எடுத்து வருபவர்களுக்கு அந்தப் பொருட்களின் வீரியத்தைப் பொறுத்துத் தண்டனையும் கிடைக்கும். கற்பூரம் கடத்தினவரை அந்த இடத்தில் வைத்து முழுக் கற்பூரப் பெட்டிகளையும் சூடம் ஏற்றிக் கரைத்த ஆமிக்காறன் கதை எல்லாம் உண்டு.

அப்போது நடந்த உண்மைச் சம்பவத்தை நினைத்து இப்போதும் சிரிப்பேன்.
அந்தக் காலத்துச் சண்டியனாக இருந்தவர், மூப்படைந்து கிழப்பருவத்திலும் பற்றறி (Battery) கடத்திக் கொண்டு போனால் ஊரில் நல்ல விலைக்கு விற்கலாம் என்று தன் வேட்டிக்குள் வைத்துக் கடத்தினார். வவுனியா ஆமிக்காறனிடம் அகப்பட்டு விட்டார்.
முதியவர் என்றும் பாராமல் செமத்தியான அடி விழுந்தது. அடித்துப் போட்டு ஆமிக்காறன் ஓடு என்று கலைத்து விட்டான். அந்தக் கிழவர் விட்டரா?

“சரி அடிச்சுப் போட்டாய் தானே
இனி பற்றறியைத் (Battery) தா?

என்று கேட்டாரே பார்க்கலாம்.

கானா பிரபா
09.03.2020

ஈழ நாடு பத்திரிகைப் படம் நன்றி : ஈழத்து நூலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *