அப்புவுக்கு 100 வயசு

“நீங்கள் கல்கி சின்னத்துரை ஐயாவின்ர ஆட்களெல்லோ”

யாராவது அடையாளம் கண்டு விசாரிப்பார்கள், அப்படியொரு முகவரி அப்புவால் வந்தது.

குடும்பத்தில் மூத்த பிள்ளை, தன்னுடைய ஏழு வயதில் தகப்பனை இழந்தவர், பதுளை சென்று தன் மாமனாரான தம்பி ஐயாவிடம் தொழில் பயின்று, அப்போது சம காலத்தில் படித்துக் கொண்டிருந்த தன் தம்பியார் சிவஞானத்துட.ந் இணைந்து யாழ்ப்பாணத்தில் 1945 ஆம் ஆண்டு சின்னத்துரை அன்ட் பிரதர்ஸ் என்ற பலசரக்கு வாணிபத்தில் இறங்குகிறார்கள். மெல்ல அடுத்த முயற்சியாக திருச்சியில் இருக்கும் கல்கி பீடி ஸ்தாபனத்தாரின் ஏக விநியோகஸ்தர்கள் என்ற நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் கடை விரிக்கிறார்கள்.

இந்த நிலையில் தனது சிவஞானம் அவர்களது எதிர்பாரா இழப்பு அடுத்த சோதனையாக அமைய, தனியனாகத் தொடரும் அவருக்கு அடுத்த சோதனை அரசாங்கத்தின் அறிவிப்பு வழியாக வருகிறது. இனிமேல் பீடித் தயாரிப்பு உள்ளூரிலேயே அமைய வேண்டும் என்ற அரச அறிவிப்பைத் தொடர்ந்து, உள்ளூர் முகவர் மூலம் பீடித் தயாரிப்பு என்ற அடுத்த படி நிலையில் உள்ளுர் வேலை வாய்ப்பை விரிவுபடுத்தும் களத்தில் இறங்குகிறார்.

பின்னர் மெல்ல மெல்லத் தன் வர்த்தக முயற்சிகளைப் பன்முக நோக்கில் விரிக்கும் அவருக்கு உறுதுணையாக மகன்களும், தம்பி மகன், மருமகரும் மற்றும் நண்பர்கள் என்று கை கொடுக்க, துணி பதனிடும் ஆலை, ஆடைத் தொழிற்சாலை, அரிசி ஆலைகள், புத்தளம் மாவட்டத்தில் வெள்ளைத் தும்பு (வெள்ளைக் கயிறுj தொழிற்சாலை, கல்கி பாம் என்று பழத் தோட்டங்களையும், நெல் உற்பத்தியையும் பளையில் இருந்து வன்னி வரை வியாபித்தார். ஏற்றுமதி வர்த்தகத்திலும் வெற்றிகரமான தொழிலதிபராக அடையாளப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் அவ்வளவு பெரிய தனவந்தராக அறியப்பட்டாலும் “அப்பு” என்று நாங்கள் கூப்பிடும் அம்மாவின் சிறிய தகப்பன் செல்வத்தின் முலாம் பூசாத எளிமையானவர். அவரது வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையும் போல. படுக்கைக்குப் போகும் போது கை உள்ள பனியனும், வெள்ளைச் சாரமும், தன் தொழில் நிலையம் போகும் போது வெள்ளை வேட்டியும், வெளிர் நிற வேட்டியும் இதுதான் அப்புவின் சீருடை. யாழ்ப்பாணத்தில் தொழில் நடத்திய காலத்திலும் சரி, கொழும்புக்குப் போய் அங்கு தன் அடுத்த முயற்சியில் இறங்கியதிலும் சரி எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நாட் தப்பாமல், எந்தவொரு அலுப்போ பஞ்சியோ பாராது செய்யும் தொழிலே தெய்வம் என்றிருந்தவர். நான் அப்புவைக் கடைசியாகப் பார்த்த ஆண்டு 2003 அவருக்கு 83 வயசிலும் அப்படியே இருந்தார். அப்படியே தன் கடமைகளைச் செய்தார்.

காலை எழுந்ததும் தேக அப்பியாசம், பிறகு, கண்ணாடிப் போத்தலில் நீர் நிரப்பி வெறும் வயிற்றில் மடமடவென்று குடிப்பதை எல்லாம் ஒளிச்சிருந்து பார்த்திருக்கிறேன். அப்புவுக்குக் கிட்டப் போகப் பயம் கலந்த மரியாதை எனக்கு. ஆனால் அவர் தன் வீட்டுப் பணியாட்களிடம் கூட அதிர்ந்து பேசியதை நான் கண்டதில்லை. அப்புவுக்கு அம்மம்மாவின் மேல் பயம். அம்மம்மாவும் அப்புவோடு துணிஞ்சு பேசுவார். பதிலுக்கு ஒன்றும் பேசாமல் கண்ணடித்து விட்டுப் போவார்.

“என்ன சாப்பிட்டாச்சோ?”
அப்பு முதலில் கேட்கும் கேள்வி இதுதான். பெரும்பாலும் அவரோடு சேர்ந்து உண்ட காலங்கள் கொழும்பு வாழ்க்கையில் அதிகம் வாய்த்தது.

அந்தக் காலத்தில் வந்த தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, ஈழநாடு, The Island, Daily News என்று ஒன்றும் விடாமல் எல்லாப் பத்திரிகைகளும் அப்பு வீட்டுக்கு வரும். வேலையால் வந்து கொஞ்ச நேரம் படுக்கையில் சாயும் போது பேப்பரும் கையுமாகத் தான் இருப்பார்.
அந்த நேரம் அப்பு வீட்டில் இருந்த பத்திரிகைகளைச் சின்னப் பொடியனாக எழுத்துக் கூட்டி வாசித்த பயிற்சியில் தான் பின்னாளில் எழுதவும், கதைகளைத் தேடிப் படிக்கவும் என்னைத் தூண்டியது.

பின்னேரம் இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோயில் ஆறு மணிப்பூசை முடிஞ்சு நேராக அப்பு வீட்டு முற்றம் வந்து கூடி ஆற அமர இருந்து அமெரிக்காவில் இருந்து சுண்ணாகம் வரைக்கும் நடக்கிற விஷயங்களை அலசி ஆய்ந்து விட்டுப் போவினம் அயலில் இருந்த சொந்தக்காரர் கூட்டம். அவர்களோடு கூட இருந்து கதைத்துச் சிரிப்பார் அப்பு.

கூடவே வடை, சூடான பால் தேத்தண்ணி எல்லாம் வருவினம். றேடியோவைச் சத்தமாக வைத்து ஒன்பது மணிச் செய்தி வந்து அறிவித்தல்கள் வரும் வரை றேடியோ சத்தம் போடும். இதெல்லாம் தினப்படி நடக்கும் சமாச்சாரம். தங்கள் எல்லைகளுக்குட்பட்ட சந்தோஷம், கவலை, எதிர்பார்ப்பு எல்லாமே அந்தப் பேச்சுக் கச்சேரியில் இருக்கும். ஏதோ ஒரு மன நிறைவோடு மெல்லக் கலைவார்கள். இதெல்லாம் எண்பதுகளின் வாழ்வியல் கோலங்கள்.

எங்களூரில் முதல் தொலைக்காட்சிப் பெட்டி வந்ததும் அப்பு வீட்டில் தான், ஆபத்து அந்ததரத்துக்குத் தொலைபேசி அழைப்பென்றாலும் அப்பு வீட்டுக்குத் தான் சனம் வரும்.

திருமுருக கிருபானந்த வாரியாரில் இருந்து சீர்காழி கோவிந்தராஜன், பாலமுரளி கிருஷ்ணா, கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்ட பாட்டுக்காரர்கள் அப்பு வீட்டுக்கு வந்த போதெல்லாம் நான் சின்னப் பெடியன். ஆனாலும் மங்கலான நினைவுகளாக நெஞ்சில் தேங்கியிருக்கு.

ஒரு ஏழ்மையான சூழலில் வளர்ந்து சிறு வயதிலேயே தொழில் கற்று முன்னேறியவர் சம காலத்தில் உலக நடப்புகளையும் ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டே இருந்தவரை இப்போது நினைத்தாலும் வியப்பு.
தொண்ணூறுகளில் ஒரு முறை இந்தியாவுக்குப் போய் விட்டு வரும் போது தினத்தந்தி பேப்பர் கட்டுடன் வந்தவர்
“திரும்பிற பக்கமெல்லாம் சிவாஜியின்ர மகன் தான் நிக்கிறான்”
என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டது பிரபு நடித்து நூறாவது படமாக வெளிவந்த “ராஜகுமாரன்” படத்தின் வெளியீட்டு ஆடம்பரங்களைப் பார்த்து.

போன வருஷம் ஊருக்குப் போன போது அப்பு வீட்டில் இருந்த படங்களை எனது அண்ணா காட்டிக் காட்டி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். தந்தை செல்வாவின் மரணச் சடங்குக்கு மா.பொ.சி, நாஞ்சில் மனோகரன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் வந்த போது அப்பு வீட்டில் தங்கிப் போனதன் சுவடுகளையும், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறுவனர் தனி நாயகம் அடிகளார் போன்றோரோடு கூடிப் பேசிய படங்களையும் பார்த்துப் பிரமித்துப் போனேன்.
“இந்த உலகப் பெருமஞ்சத்தைத் திருத்தி எழுப்பத்
திருப்பணி நல்கிய சின்னத்துரை அவர்கள்”

இணுவில் கந்தசுவாமி கோயில் தைப்பூச மஞ்சம் காணும் போதெல்லாம் நேர்முக அஞ்சலைச் செய்து கொண்டிருக்கும் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுகன் அவர்களின் குரலில் வரும் அந்த நினைப்பூட்டலில் அப்பு காலம் கடந்தும் அவ்வூர் நிகழ்வில் தேங்கியிருக்கியிருக்கிறார் அப்பு.

காலங்கள் கடந்து திரும்பிப் பார்க்கும் போது அப்புவின் கடின உழைப்போடு, தன்னைச் சுற்றியுள்ளவர்களோடு எவ்வளவு இயல்பாக வாழ்ந்திருக்கிறார் என்ற விடையே கிடைக்கிறது,
அத்தோடு கால மாற்றத்துக்கேற்ப தன்னைப் புதுப்பித்து, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடாமல் ஒவ்வொரு தொழி முயற்சியாக இறங்கி அவற்றில் ஆழம் கண்டு முத்தெடுத்த கடின உழைப்பாளி அப்புவை நினைத்துப் பார்த்தால் அவர் வாழ்ந்து காட்டிய பாடம்.

இன்று அப்பு பிறந்து நூறு ஆண்டுகள்.

பிரபு என்ற கானா பிரபா14.05.2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *