செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் – “சிவபூமி” வழி பன்முகப்பட்ட அறப்பணிகள்

செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகவும், சிவபூமி என்ற சிறுவர் மன வளர்ச்சிப் பாடசாலைகள், சிவ பூமி முதியோர் இல்லம், கீரிமலைச் சிவபூமி யாத்திரிகர் மடம், நாவற்குழியில் திருவாசக அரண்மனை, ஆதரவற்ற நாய்களைப் பேணும் காப்பகம் போன்ற அற நிலையங்களை நிறுவி அவற்றைக் கொண்டு நடத்துபவராகவும் இயங்கி வருகிறார். தன் வாழ்வைச் சைவத்துக்கும் அறப் பணிகளுக்காகவும் அவரை நினைக்கும் போதெல்லாம் வியப்பும், பெருமையும் எழும்.

நம்மால் ஒரு சிறு துரும்பை எடுக்கக் கூட ஆயிரம் சாட்டுச் சொல்லும் வாழ்வியலில் அவரின் பன்முகப்பட்ட அறப்பணிகள் நம் ஈழச் சமூகத்துக்குக் கிட்டிய பெரும் பேறு.
தாயகத்துக்குப் போகும் தோறும் என்னை அவரின் வாகனத்தில் இருத்தித் தன் சமூக ஸ்தாபனங்களின் இயக்கத்தைக் காட்டி வருவார்.

ஆறு திருமுருகனின் “சிவபூமி” அறச் செயற்பாடுகளை அவுஸ்திரேலிய மக்களின் பார்வைக்கு எட்டும் வண்ணம் ஒரு ஆவணப்படத்தை எடுக்க வேண்டும் என்று நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் நினைத்த போது அதற்குச் செயல் வடிவம் தந்தவர் சகோதரன் ஜெரா. 
இப்படியான பட வேலைகளுக்கு இரண்டு, மூன்று கமெராக்கள் தேவைப்படும் சூழலில் ஒரே கமராவை வைத்துக் கொண்டு, நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கத் தானே தன் குரலில் ஒலிச் சேர்க்கை செய்து திறமானதொரு ஆவணப்படத்தை ஆக்கியளித்தார். அவருக்கு உறுதுணையாக விளங்கிய சகோதரர்கள்
யோ ரவீந்திரன், காண்டீபன் இப்பட உருவாக்கத்தில் இணைந்துள்ளார்கள்.
இவ் ஆவணப்படம் சிட்னியில் ஆறு திருமுருகன் அவர்கள் கலந்து கொண்ட நிதி சேகரிப்பு ஒன்று கூடலிலும் திரையிடப்பட்டது.

இந்த ஆவணப் படம் சிவபூமி என்ற சமூக இயக்கத்தின் பன்முகச் செயற்பாடுகளை விரிவாகக் காண்பிக்கின்றது.

இன்று பிறந்த தினத்தைக் கொண்டாடும் பெரு மதிப்புக்குரிய செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் பல்லாண்டு காலம் நோயற்ற வாழ்வும், குறைவற்ற தன் அறச் செயற்பாட்டோடும் உழைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இன்றைய நாளில்
“ஈழத்தில் சிவபூமியின் அறப்பணிகள்” என்ற ஆவணப்படத்தை உங்கள் பார்வைக்காகவும் பகிர்கின்றேன்

அன்புடன்

அப்புவுக்கு 100 வயசு

“நீங்கள் கல்கி சின்னத்துரை ஐயாவின்ர ஆட்களெல்லோ”

யாராவது அடையாளம் கண்டு விசாரிப்பார்கள், அப்படியொரு முகவரி அப்புவால் வந்தது.

குடும்பத்தில் மூத்த பிள்ளை, தன்னுடைய ஏழு வயதில் தகப்பனை இழந்தவர், பதுளை சென்று தன் மாமனாரான தம்பி ஐயாவிடம் தொழில் பயின்று, அப்போது சம காலத்தில் படித்துக் கொண்டிருந்த தன் தம்பியார் சிவஞானத்துட.ந் இணைந்து யாழ்ப்பாணத்தில் 1945 ஆம் ஆண்டு சின்னத்துரை அன்ட் பிரதர்ஸ் என்ற பலசரக்கு வாணிபத்தில் இறங்குகிறார்கள். மெல்ல அடுத்த முயற்சியாக திருச்சியில் இருக்கும் கல்கி பீடி ஸ்தாபனத்தாரின் ஏக விநியோகஸ்தர்கள் என்ற நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் கடை விரிக்கிறார்கள்.

இந்த நிலையில் தனது சிவஞானம் அவர்களது எதிர்பாரா இழப்பு அடுத்த சோதனையாக அமைய, தனியனாகத் தொடரும் அவருக்கு அடுத்த சோதனை அரசாங்கத்தின் அறிவிப்பு வழியாக வருகிறது. இனிமேல் பீடித் தயாரிப்பு உள்ளூரிலேயே அமைய வேண்டும் என்ற அரச அறிவிப்பைத் தொடர்ந்து, உள்ளூர் முகவர் மூலம் பீடித் தயாரிப்பு என்ற அடுத்த படி நிலையில் உள்ளுர் வேலை வாய்ப்பை விரிவுபடுத்தும் களத்தில் இறங்குகிறார்.

பின்னர் மெல்ல மெல்லத் தன் வர்த்தக முயற்சிகளைப் பன்முக நோக்கில் விரிக்கும் அவருக்கு உறுதுணையாக மகன்களும், தம்பி மகன், மருமகரும் மற்றும் நண்பர்கள் என்று கை கொடுக்க, துணி பதனிடும் ஆலை, ஆடைத் தொழிற்சாலை, அரிசி ஆலைகள், புத்தளம் மாவட்டத்தில் வெள்ளைத் தும்பு (வெள்ளைக் கயிறுj தொழிற்சாலை, கல்கி பாம் என்று பழத் தோட்டங்களையும், நெல் உற்பத்தியையும் பளையில் இருந்து வன்னி வரை வியாபித்தார். ஏற்றுமதி வர்த்தகத்திலும் வெற்றிகரமான தொழிலதிபராக அடையாளப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் அவ்வளவு பெரிய தனவந்தராக அறியப்பட்டாலும் “அப்பு” என்று நாங்கள் கூப்பிடும் அம்மாவின் சிறிய தகப்பன் செல்வத்தின் முலாம் பூசாத எளிமையானவர். அவரது வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையும் போல. படுக்கைக்குப் போகும் போது கை உள்ள பனியனும், வெள்ளைச் சாரமும், தன் தொழில் நிலையம் போகும் போது வெள்ளை வேட்டியும், வெளிர் நிற வேட்டியும் இதுதான் அப்புவின் சீருடை. யாழ்ப்பாணத்தில் தொழில் நடத்திய காலத்திலும் சரி, கொழும்புக்குப் போய் அங்கு தன் அடுத்த முயற்சியில் இறங்கியதிலும் சரி எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நாட் தப்பாமல், எந்தவொரு அலுப்போ பஞ்சியோ பாராது செய்யும் தொழிலே தெய்வம் என்றிருந்தவர். நான் அப்புவைக் கடைசியாகப் பார்த்த ஆண்டு 2003 அவருக்கு 83 வயசிலும் அப்படியே இருந்தார். அப்படியே தன் கடமைகளைச் செய்தார்.

காலை எழுந்ததும் தேக அப்பியாசம், பிறகு, கண்ணாடிப் போத்தலில் நீர் நிரப்பி வெறும் வயிற்றில் மடமடவென்று குடிப்பதை எல்லாம் ஒளிச்சிருந்து பார்த்திருக்கிறேன். அப்புவுக்குக் கிட்டப் போகப் பயம் கலந்த மரியாதை எனக்கு. ஆனால் அவர் தன் வீட்டுப் பணியாட்களிடம் கூட அதிர்ந்து பேசியதை நான் கண்டதில்லை. அப்புவுக்கு அம்மம்மாவின் மேல் பயம். அம்மம்மாவும் அப்புவோடு துணிஞ்சு பேசுவார். பதிலுக்கு ஒன்றும் பேசாமல் கண்ணடித்து விட்டுப் போவார்.

“என்ன சாப்பிட்டாச்சோ?”
அப்பு முதலில் கேட்கும் கேள்வி இதுதான். பெரும்பாலும் அவரோடு சேர்ந்து உண்ட காலங்கள் கொழும்பு வாழ்க்கையில் அதிகம் வாய்த்தது.

அந்தக் காலத்தில் வந்த தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, ஈழநாடு, The Island, Daily News என்று ஒன்றும் விடாமல் எல்லாப் பத்திரிகைகளும் அப்பு வீட்டுக்கு வரும். வேலையால் வந்து கொஞ்ச நேரம் படுக்கையில் சாயும் போது பேப்பரும் கையுமாகத் தான் இருப்பார்.
அந்த நேரம் அப்பு வீட்டில் இருந்த பத்திரிகைகளைச் சின்னப் பொடியனாக எழுத்துக் கூட்டி வாசித்த பயிற்சியில் தான் பின்னாளில் எழுதவும், கதைகளைத் தேடிப் படிக்கவும் என்னைத் தூண்டியது.

பின்னேரம் இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோயில் ஆறு மணிப்பூசை முடிஞ்சு நேராக அப்பு வீட்டு முற்றம் வந்து கூடி ஆற அமர இருந்து அமெரிக்காவில் இருந்து சுண்ணாகம் வரைக்கும் நடக்கிற விஷயங்களை அலசி ஆய்ந்து விட்டுப் போவினம் அயலில் இருந்த சொந்தக்காரர் கூட்டம். அவர்களோடு கூட இருந்து கதைத்துச் சிரிப்பார் அப்பு.

கூடவே வடை, சூடான பால் தேத்தண்ணி எல்லாம் வருவினம். றேடியோவைச் சத்தமாக வைத்து ஒன்பது மணிச் செய்தி வந்து அறிவித்தல்கள் வரும் வரை றேடியோ சத்தம் போடும். இதெல்லாம் தினப்படி நடக்கும் சமாச்சாரம். தங்கள் எல்லைகளுக்குட்பட்ட சந்தோஷம், கவலை, எதிர்பார்ப்பு எல்லாமே அந்தப் பேச்சுக் கச்சேரியில் இருக்கும். ஏதோ ஒரு மன நிறைவோடு மெல்லக் கலைவார்கள். இதெல்லாம் எண்பதுகளின் வாழ்வியல் கோலங்கள்.

எங்களூரில் முதல் தொலைக்காட்சிப் பெட்டி வந்ததும் அப்பு வீட்டில் தான், ஆபத்து அந்ததரத்துக்குத் தொலைபேசி அழைப்பென்றாலும் அப்பு வீட்டுக்குத் தான் சனம் வரும்.

திருமுருக கிருபானந்த வாரியாரில் இருந்து சீர்காழி கோவிந்தராஜன், பாலமுரளி கிருஷ்ணா, கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்ட பாட்டுக்காரர்கள் அப்பு வீட்டுக்கு வந்த போதெல்லாம் நான் சின்னப் பெடியன். ஆனாலும் மங்கலான நினைவுகளாக நெஞ்சில் தேங்கியிருக்கு.

ஒரு ஏழ்மையான சூழலில் வளர்ந்து சிறு வயதிலேயே தொழில் கற்று முன்னேறியவர் சம காலத்தில் உலக நடப்புகளையும் ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டே இருந்தவரை இப்போது நினைத்தாலும் வியப்பு.
தொண்ணூறுகளில் ஒரு முறை இந்தியாவுக்குப் போய் விட்டு வரும் போது தினத்தந்தி பேப்பர் கட்டுடன் வந்தவர்
“திரும்பிற பக்கமெல்லாம் சிவாஜியின்ர மகன் தான் நிக்கிறான்”
என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டது பிரபு நடித்து நூறாவது படமாக வெளிவந்த “ராஜகுமாரன்” படத்தின் வெளியீட்டு ஆடம்பரங்களைப் பார்த்து.

போன வருஷம் ஊருக்குப் போன போது அப்பு வீட்டில் இருந்த படங்களை எனது அண்ணா காட்டிக் காட்டி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். தந்தை செல்வாவின் மரணச் சடங்குக்கு மா.பொ.சி, நாஞ்சில் மனோகரன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் வந்த போது அப்பு வீட்டில் தங்கிப் போனதன் சுவடுகளையும், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறுவனர் தனி நாயகம் அடிகளார் போன்றோரோடு கூடிப் பேசிய படங்களையும் பார்த்துப் பிரமித்துப் போனேன்.
“இந்த உலகப் பெருமஞ்சத்தைத் திருத்தி எழுப்பத்
திருப்பணி நல்கிய சின்னத்துரை அவர்கள்”

இணுவில் கந்தசுவாமி கோயில் தைப்பூச மஞ்சம் காணும் போதெல்லாம் நேர்முக அஞ்சலைச் செய்து கொண்டிருக்கும் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுகன் அவர்களின் குரலில் வரும் அந்த நினைப்பூட்டலில் அப்பு காலம் கடந்தும் அவ்வூர் நிகழ்வில் தேங்கியிருக்கியிருக்கிறார் அப்பு.

காலங்கள் கடந்து திரும்பிப் பார்க்கும் போது அப்புவின் கடின உழைப்போடு, தன்னைச் சுற்றியுள்ளவர்களோடு எவ்வளவு இயல்பாக வாழ்ந்திருக்கிறார் என்ற விடையே கிடைக்கிறது,
அத்தோடு கால மாற்றத்துக்கேற்ப தன்னைப் புதுப்பித்து, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடாமல் ஒவ்வொரு தொழி முயற்சியாக இறங்கி அவற்றில் ஆழம் கண்டு முத்தெடுத்த கடின உழைப்பாளி அப்புவை நினைத்துப் பார்த்தால் அவர் வாழ்ந்து காட்டிய பாடம்.

இன்று அப்பு பிறந்து நூறு ஆண்டுகள்.

பிரபு என்ற கானா பிரபா14.05.2020

எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”

எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”#ஈழத்தவர்_கதை_கேட்போம்

சிறுகதை ஒலிப்பகிர்வு

ஒலி வடிவம் : சங்கீதா தினேஷ் பாக்யராஜா

ஈழத்து எழுத்தாளர்களது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை அவர்களது எழுத்தின் தனித்துவத்தைக் காட்டவெண்ணிக் குரல் பகிர்வுகளாகத் தொடரும் முயற்சியின் அடுத்த படைப்பு இது,

எழுத்தாளர் சுதாராஜ், இவரின் இயற்பெயர் சிவசாமி இராஜசிங்கம் என்பதாகும். ஈழத்தின் மிக முக்கியமான சஞ்சிகைகளான சிரித்திரன், மல்லிக்கை உள்ளிட்டவைகளிலும், வீரகேசரி உள்ளீட்ட பல்வேறு பத்திரிகைகளிலும் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

எனது வாசிப்பு அனுபவத்தில் 1987 ஆம் ஆண்டில் இந்திய இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து மடத்துவாசல் பிள்ளையாரடியில் இருந்த காலத்தில் இவரின் “இளமைக் கோலங்கள்” என்ற நாவல் தான் இவரை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியது. இவர் எழுத்தில் இருந்த வித்தியாசமான நடை, தொடர்ந்தும் என்னைச் செங்கை ஆழியான் தாண்டி சுதாராஜ்ஜின் எழுத்துக்களையும் வாசிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது.

வித்தியாசமான களங்களைத் தன் சிறுகதைகளுக்குத் தேர்ந்தெடுப்பது, அல்லது ஒரே களத்தில் வித்தியாசமான கதைக்கருக்களைத் தேர்ந்தெடுப்பது, இவரின் பலங்களில் ஒன்று. இவரின் ஒரு சிறுகதையை வாசித்து முடித்தால் கிடைக்கும் திருப்தி.

இங்கே குரல் பகிர்வாகத் தரும் “அடைக்கலம்” சிறுகதை, 1991 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடாத்திய வைர விழா சிறுகதைப் போட்டியில் பரிச பெற்றது.அப்போது நான் ஈழத்தில் இருந்தேன். யாழ்.பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து ஆனந்தவிகடனை வாங்கி, தீராத ஆவலால் இணுவிலிற்குச் சென்று வாசிக்கவிரும்பாமல், ஒரு ஒரமாகச் சைக்கிளை நகர்த்தி , சைக்கிள் பாரில் இருந்தபடியே நான் வாசித்துத் தீர்த்த சிறுகதை இது. ஆனந்த விகடனால் “ஒரு மெளனத்தின் அலறல்” என்ற தொகுப்பிலும் இடம்பிடித்தது இந்தச் சிறுகதை.

இந்தச் சிறுகதையை ஒலி வடிவில் தரவேண்டும் என்று பேராவல் கொண்டபோது அன்புக்குரிய சுதாராஜ் அவர்கள் உடனேயே அனுமதி தந்தார். தனிப்பட்ட ரீதியின் என் நேசத்துக்குரிய வட்டத்தில் இருப்பவர் என்ற பெருமையும் எனக்குண்டு.

அடைக்கலம் சிறுகதையைத் தன் வழக்கமன பேச்சாற்றலால் சங்கீதா தினேஷ் பாக்யராஜ் உயிரோட்டமான திரைச் சித்திரம் போலப் படைத்திருக்கிறார். அவர் இதற்கு முன் படைத்த குரல் பகிர்வுக்கு இன்னமும் பல நண்பர்கள் பாராட்டி வருவது இம்முயற்சிக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

இந்தப் பகிர்வுக்கு உறுத்தாத மேலதிக இசைச் சேர்க்கையையும் இட்டிருக்கிறேன்.

இதோ “அடைக்கலம்” ஒலி வடிவைக் கேளுங்கள்.

செங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு

செங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்”

குரல் பகிர்வு : சங்கீதா தினேஷ் பாக்யராஜா

வீடியோஸ்பதி காணொளி வலைத் தளமூடாக ஒரு புதிய முயற்சியை முன்மெடுக்க வேண்டி, ஈழத்தின் முது பெரும் எழுத்தாளர்களில் இருந்து சம காலத்தவர் வரை அவர்களது சிறுகதைகளை ஒளி, ஒலி வடிவில் வெளிக் கொணரும் தொடரை ஆரம்பிக்க முனைந்தேன்.

ஆனால் இதை ஒரு கூட்டு முயற்சியாக, இலக்கிய வாசகர்களின் வழியாகவே பகிரும் நோக்கில் வரும் முதல் படைப்பு இது.ஈழத்தின் மிக முக்கியமானதொரு சிறுகதை, நாவல் படைப்பாளி, வரலாற்றாசிரியர் செங்கை ஆழியான் அவர்களது சிறுகதையான “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” என்ற சிறுகதையை டொமினிக் ஜீவா அவர்களது மல்லிகை தனது 200 வது இதழில் (ஜூலை, 1986) இல் பகிர்ந்தது. அப்போது நான் பள்ளி மாணவன். அந்தச் சிறு வயதிலேயே என்னுள் ஒரு பெரிய அதிர்வலையை உண்டு பண்ணிய சிறுகதை இது.

செங்கை ஆழியான் “மல்லிகைச் சிறுகதைகள்” தொகுப்பை டொமினிக் ஜீவா அவர்களது பவள விழாச் சிறப்பு நூலாக வெளியிட்ட போது மல்லிகை இதழில் வெளிவந்த முக்கியமான சிறுகதைளை, அவை ஏன் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முக்கியமாகக் கொள்ளப்படுகின்றன என்ற ஆய்வுக் கண்ணோட்டத்தோடு தொகுத்து வெளியிட்டிருந்தார். அதில் இந்தச் சிறுகதையையும் அவர் இனம் காட்டியதில் இருந்து இதன் கனம் புரியும்.ஈழத்தின் போர் தின்ற சனங்களின் ஒரு முகம் இந்தச் சிறுகதை.

ஈழத்து வானொலி ஊடகப் பரப்பில் நீண்ட அனுபவமும், ஆற்றலும் கொண்ட சகோதரி சங்கீதா தினேஷ் பாக்யராஜா அவர்களிடம் வீடியோஸ்பதியின் தொடர் முயற்சியைக் குறிப்பிட்டு இந்தச் சிறுகதையை நேற்று முன் தினம் தான் பகிர்ந்திருந்தேன். முழு மூச்சில் படித்து விட்டு சிறுகதையை சிலாகித்து விட்டு உடன் குரல் பகிர்வைச் செய்து பகிர்ந்தார். இவரின் திறமையில் எனக்கு அபார நம்பிக்கை இருந்தாலும் குரல் பகிர்வைக் கேட்டதும் திகைத்து விட்டேன். அப்படியே செங்கை ஆழியானுக்கு உருவம் கொடுத்தது போல அபாரமான உரையாடல் ஏற்ற இறக்கங்களுடன், ஒரு மிகச் சிறந்த குறும்படம் போல உருவாக்கி விட்டார்.

இந்தச் சிறுகதையை வெளியிட அனுமதி கோரிய போது பெரு மதிப்புக்குரிய செங்கை ஆழியான் (க.குணராசா)“அப்பாவின் எழுத்துக்கள் மூலமாக அவர் சிரஞ்சீவியாக வாழ்வது பெரு மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்”என்று அவர்கள் சொன்ன போது நெகிழ்ந்து போனேன்.
இன்று உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள். இந்த நாளில் இந்தப் புதிய முயற்சியை ஆரம்பிக்க உதவிய எம் செங்கை ஆழியான் குடும்பத்தினருக்கும், சங்கீதா தினேஷ் பாக்யராஜாவுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

YouTube இணைப்பு

கானா பிரபா

அப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்

இன்று விடிகாலை தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்ததுமே அப்போலோ 13 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு இன்றோடு (ஏப்ரல் 11) ஐம்பது ஆண்டுகள் என்ற செய்தி ஓடிக் கொண்டிருந்தது. விண்ணுலகத்தை உரசிப் பார்த்த விண்வெளி ஆய்வுகளில் தோல்விகரமான முயற்சி இந்த அப்போலோ 13. விண்ணில் ஏவப்பட்ட இந்தக் கலம் ஆக்சிஜன் கலன் வெடித்ததால், நிலவில் மிதிக்காமல் மீண்டும் பூமிக்கே திரும்பி வந்தது. போனவர்கள் பத்திரமாகத் திரும்பினார்கள். 13 ஆம் இலக்கம் இங்கேயும் தன் ராசிக்கே உரிய துரதிர்ஷ்ட விளையாட்டைக் காட்டி விட்டதோ என்று எண்ணுவதுண்டு.

நிலவைக் காட்டிச் சோறுண்ட காலம் போய் எங்கள் காலத்தில் வானத்தில் தினம் தினம் நிலவோடு போட்டி போடும் ஒளிக் கொத்துகள் தோன்றுவதுண்டு. அவை போர்க்காலத்தில் இலங்கை விமானப் படையினர் இரவிரவாக தாக்குதல் நிலைகளைக் கண்கணித்துக் குண்டு போடுகிறேன் பேர்வழி என்று வானத்தில் மேலே எறிந்து வெளிச்சம் பாய்ச்சும் வெளிச்சக் குண்டுகள். நிலவைப் பார்த்துக் கவிதை பாட முடியாது, எப்ப ஹெலிக்காரனும், பொம்மர் காரனும் வாறான் என்று மேலே பயந்து பயந்து பார்த்த காலங்கள். உலக விடயங்களையும் உள்ளூர் சமாச்சாரங்களோடு பொருத்தி நினைவில் வைக்கும் எனக்கு அப்போலோ என்றதும் நினைவுக்கு வந்தது அப்போலோ சுந்தா என்ற முத்திரைப் பெயரையும் பெற்ற எங்கள் சுந்தா அங்கிள். ஒலிபரப்பாளராகப் பல சாதனைகள் புரிந்த சுந்தா சுந்தரலிங்கம் என்ற அவருக்குக் கிட்டிய மணி மகுடம் அந்த வாய்ப்பு. அப்போலோ 11 என்ற விண்கலம் விண்ணில் ஆளேறிய முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெறுவது. அந்த விண்கலம் பயணித்த நாள் ஜூலை 16, 1969 ஆம் ஆண்டு, தனது பணியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஜூலை 24, 1969 இல் திரும்பியது. அப்படியானால் சந்திரனில் மனிதன் காலடி வைத்து ஐம்பது ஆண்டுகளை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

சுந்தா சுந்தரலிங்கம் அங்கிளின் மன ஓசை புத்தகத்தில் மனிதன் சந்திரனில் காலடி வைத்த கணங்களை ஒலிபரப்பிய தன் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் என்ற ஞாபகம் தப்பவில்லை. புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன். தொடர்ந்து சுந்தா அங்கிள் பேசுகிறார்.

அப்போலோ சுந்தா

என் ஒலிபரப்பு அனுபவக் களத்திடை மகிழ்ச்சியும், புகழும் தேடித் தந்த அப்போலோ வர்ணனை பற்றிய நினைவுகள் என்றும் இனிமையானவை.

அப்பொழுது நான் இலங்கை வானொலியில் இருந்து இலங்கைப் பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன். அன்றைய இலங்கை வானொலி இயக்குநர் நாயகம் நெவில் ஜயவீர அவர்களிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. சந்திர மண்டலத்துக்கு மனிதன் பயணிக்கப் போகிறான். வாய்ஸ் ஒப் அமெரிக்கா என்ற அமெரிக்க வானொலி நிலையம் தொடர்ச்சியாக வர்ணனை செய்யவுள்ளது. தொடர்ச்சியாக என்றால் ஓரிரு நாட்கள் அல்ல, மூன்று நான்கு நாட்கள். வாய்ஸ் ஒப் அமெரிக்கா ஒலிபரப்பை இயர்போன் மூலம் காதில் வாங்கியபடி உடனடியாகத் தமிழிலும், சிங்களத்திலும் தர முடியுமா? என்று அவர் கேட்டார். என்னோடு பாராளுமன்றத்தில் இருந்த சிங்கள அறிவிப்பாளர் அல்பிரட்டும் கூட இருந்தார்.

பெரியதொரு சவாலாக இது எமக்கு இருந்தது. இரண்டு பேருமே “நிச்சயம் முடியும்” என்று உறுதி கூறினோம். அவர் உடனேயே ஏற்பாடு பண்ணி கொழும்பிலே உள்ள அமெரிக்கன் தூதரகத்துக்கு அனுப்பி வைத்தார். ஏற்கனவே இத்திட்டம் போல ஜெமினி என்றொரு விண்வெளிக்கலத்தை வானுக்கு அனுப்பிப் பரீட்சித்துப் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. அதற்குரிய படங்களையெல்லாம் அவர்கள் திரைப்படங்களாக வைத்திருந்தார்கள். அவர்களே ஏற்பாடு பண்ணி எங்கள் இருவருக்குமாகத் திரையிட வைத்தார்கள். திரையிடும் போது தான் உண்மையாகவே எப்படி இது நடக்கப் போகிறது, எப்படி அவர்கள் பேசப் போகிறார்கள், என்ன என்ன விடயம் எல்லாம் தேவை என்பது எங்களுக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்தது. பொறுப்பு மிக அதிகம் என்பதும் புரிய ஆரம்பித்தது. ஆங்கிலத்தில் பேசுவதைத் தமிழிலோ, சிங்களத்திலோ மொழி பெயர்ப்பது ஒன்று, ஆனால் மறு பக்கத்திலோ அமெரிக்கன் ஆங்கிலம் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கர்கள் பேசுகின்ற முறையும், ஆங்கிலத்தை அவர்கள் பேசினாலும், அதை உச்சரிக்கும் முறையும் இந்த மாதிரியான வான் வெளிப் பிரயாணத்துக்கான சேவையிலே இருக்கின்ற அந்தத் திட்டத்திலே வேலை செய்கின்றவர்கள் பேசுகின்ற சொற் பிரயோகங்களும் பிரயோகித்த சொற்களும் வேறு விதமாக இருந்தன. இதனைப் படங்கள் பார்த்த பின்னர் தான் நாம் அறிந்தோம். சாதாரணமாகப் பாராளுமன்றத்தில் பேசுகின்ற ஒரு உரையினைத் தமிழிலோ சிங்களத்திலோ கொடுப்பது போன்றதல்ல இது என்று எங்களுக்குத் தெரியும். அமெரிக்கர்களின் இந்தப் பேசும் முறை, அவர்கள் பேசும் மொழி, அவர்களது ஆங்கில உச்சரிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வான்வெளிக்களங்களில் என்ன மாதிரியான சொற்களை எல்லாம் பிரயோகிக்கிறார்கள் என்ன மாதிரியாக அது இருக்கும் என்பதெல்லாம் எங்களுக்குப் புதிதாக இருந்தது. ஆனால் அமெரிக்கன் தூதரகம் மிகவும் ஒத்தாசையாக இருந்து அந்தப் படங்களை எங்கள் வசதிப்படி எங்களுக்கு எப்பப்போ தேவையோ அப்பப்போ எல்லாம் போட்டுக் காட்டினார்கள். ஒருவகையில் எங்களுக்குப் பயிற்சி அளித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இத்தனை உதவிகளையும், ஒத்தாசைகளையும் செய்தவர்கள் இவர்கள் இந்த நிகழ்ச்சி தரமாக அமைய வேண்டும், மக்களுக்குத் தெளிவாக இவை புரிய வேண்டும் என்பதற்காக எங்களுக்கு உதவியாக மேலும் நான்கு பேரை ஆயத்தம் செய்தார்கள். பேராசியர் குலரத்தினம், இவர் புவியியல் பேராசிரியராகப் பல்கலைக்கழகத்தில் இருந்தவர். பேராசிரியர் ஏ டபிள்யூ மயில்வாகனம், இவர் பெளதீகவியல் பேராசிரியராக இருந்தவர். ஆனந்த சிவம் என்றொரு இளைஞர். அவர் ஒரு விஞ்ஞானி. இவர்களை விட கோபாலபிள்ளை மகாதேவா என்னும் ஒரு விஞ்ஞானி, , பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராக இருந்த திரு குமாரசாமி இப்படியாக ஐந்து பேரை அவர்கள் ஆயத்தம் செய்திருந்தார்கள். வொய்ஸ் ஒப் அமெரிக்கா தருகின்ற விடயங்களுக்கு இடையிடையே விளக்கம் கொடுப்பதற்கும், அதே வேளையிலே நாம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்க முடியாது, இன்னும் உதவியாளர்கள் தேவை என்பதற்காக இவர்கள் ஒழுங்கு செய்யப்பட்டனர். அவர்களது உதவியும் எமக்குத் தேவையாக இருந்தது.

எங்களுடைய ஒலிபரப்பு எவ்வளவு வெற்றிகரமாக முடிந்தது என்பதற்குச் சான்றாகச் சில விடயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இலங்கை வானொலிக்கு அதுவும் தமிழ்ப் பணிக்கு ஒரு தனிப்பட்ட வசதி இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

அதாவது நேயர்களைப் பொறுத்த மட்டிலே இலங்கையில் உள்ளவர்கள் மட்டுமல்ல தென்னிந்தியாவில் உள்ளவர்களும் எமது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு வசதியாக இருக்கின்றது. அப்பொழுதும் இருந்தது. ஆக முக்கியமாக சந்திர மண்டலம் தொடர்பான இந்த ஒலிபரப்பை ஆல் இந்தியா ரேடியோ எங்களைப் போல வர்ணனையாகத் தரவில்லை என்பதனாலும், தமிழிலே அது தொடர்பான எந்தவித நிகழ்ச்சிகளும் இருக்கவில்லை என்பதனாலும் எமது நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு அன்று இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். முன்பின் தெரியாதவர்கள் கூட எங்களுக்குக் கடிதம் எழுதினார்கள். முக்கியமாக இந்த நிகழ்ச்சியைப் பற்றி லட்சம் பேர் என்று சொல்லலாம். அவ்வளவு கடிதங்கள் வந்தன. ஒரு நாள் நான் இலங்கை வானொலி நிலையத்துக்குப் போயிருந்த போது சுந்தரலிங்கம் வந்தால் இங்கே வரச் சொல்லுங்கள் என்று திரு நெவில் ஜெயவீர சொல்லி வைத்து இருந்தாராம். அவரின் அழைப்புக் கிடைத்ததும் அவரிடம் போனேன். அவர் மெல்லியதொரு புன்முறுவலுடன் தன் உதவியாளரைக் கூப்பிட்டு அந்த சாவியை எடுத்து வரச் சொன்னார். என்னையும் கூட்டிக் கொண்டு அவருடைய காரியாலயத்துக்குப் பக்கத்திலே இருந்த ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று அதைத் திறக்கச் சொன்னார். சிறிய அறை அது. கதவைத் திறந்ததும் ஆயிரக் கணக்கான போஸ்ட் கார்ட் கடிதங்கள் குவிந்து வீழ்ந்தன. அதைப் பார்த்துக் கொண்டு அவர் என்னைக் கட்டித் தழுவி இவை தான் உமக்கும் எங்களுக்கும் கிடைத்த பரிசு என்று மிகவும் பெருமையுடன் சொன்னார். இவ்வளவு கடிதங்களும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவை என்பது தான் முக்கியம். அவ்வளவு கடிதங்களையும் அவர் பிரித்துப் படித்து, அவருக்குத் தமிழ் ஓரளவு தான் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் எல்லாவற்றையுமே அவர் பார்த்துக் கணக்கெடுத்து இவ்வளவு கடிதங்கள் எங்களுக்குத் தென்னிந்தியாவில் இருந்தே வந்திருக்கின்றன என்று சொன்ன போது பெருமையாகத் தான் இருந்தது. அவர் பின்னர் இலங்கையிலே உள்ள பத்திரிகைகளுக்கு எழுதி விஷயத்தை விளக்கி எங்களுக்கு இவ்வளவு நண்பர்கள் தென்னிந்தியாவிலே இருக்கிறார்கள் என்று விளம்பரப்படுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி அப்பொழுது இலங்கை வானொலி செய்த இந்தச் சேவையைப் பாராட்டி அல்பிறெட் பெரேரா என்ற நண்பருக்கும் எனக்கும் தனது கைப்படக் கடிதங்கள் எழுதியிருந்தார். கூடவே அமெரிக்க வரலாறு தொடர்பான ஆங்கில நூல் ஒன்றும் ஜனாதிபதி கையெழுத்துடன் அன்பளிப்பாக இணைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் எனது நண்பர்கள் கூட “அப்போலோ சுந்தா” என்று அழைக்க ஆரம்பித்தார்கள் ! இது எனது வாழ்க்கையிலே கிடைத்த பெரும் அனுபவம். பெரும் பாராட்டென்று சொல்வேன்.
மூத்த ஒலிபரப்பாளர் சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் தனது “மன ஓசை” நூல் வழியே எழுதியதை மேலே தட்டச்சும் போது கண்கள் பூத்து ஒரு சொட்டுக் கண்ணீர் வந்து வந்தும் விட்டது. எப்பேர்ப்பட்ட சாதனைகளை நிகழ்த்திக் காட்டி விட்டு மெளனமாகப் பயணித்து விட்டார்கள் நம் ஊடகத்துறை முன்னோர்கள்.

கானா பிரபா

11.04.2020

படம் நன்றி : ஈழத்து நூலகம்

கலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)

ஈழத்தவரால் மரபுக் கலைகள் பேணிப் பாதுகாக்கப்பட்டு, நிகழ்த்திக் காட்டிய தருணத்தில் வில்லிசைக் கலை என்பது பள்ளிக்கூடத்தில் இருந்து கோயில்கள், வாசிகசாலைகள் என்று கடைக்கோடி ரசிகர்கள் வரை கட்டியெழுப்பப்பட்ட மரபாக விளங்கியது.

அந்த வகையில் இந்த வில்லிசைக் கலைக்குப் பெருமை சேர்த்தவரில் நாச்சிமார்கோயிலடி இராசன் அவர்களின் பங்கு புலம் பெயர் சூழல் வரை தடம் பதித்தது.

இன்று எங்களின் பெருமை மிகு ஈழத்துப் படைப்பாளி நாச்சிமார்கோயிலடி இராசன் அவர்களது பிறந்த நாளில் அவர் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம நிதிக்கான வில்லிசை நிகழ்வு நடத்த அவுஸ்திரேலியாவுக்கு 2011 ஆம் ஆண்டில் வருகை தந்தபோது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் நான் எடுத்த பேட்டியைப் பகிர்கிறேன்.

🥅🥅🥅🥅🥅🥅🥅🥅🥅🥅🥅🥅

அன்புச் சகோதரர் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்) அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கானா பிரபா

ஈழத்தில் பொருளாதாரத் தடை காலம் கொடுத்த பயிற்சி

இப்போது கொரானா வைரஸின் தாக்கத்தை விட, Toilet Paper எங்கு கிடைக்கும் என்ற கவலை தான் சிட்னி மக்களை ஆட்டிப் படைக்கிறது. Toilet Paper syndrome என்ற புது வகை நோய்க்கூறு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வார இறுதியில் இலங்கை, இந்திய மளிகைக் கடைக்குப் போனேன், அங்கு ரசப் பொடிப் பெட்டிகள் எல்லாம் காலி. கொரானாவைத் தீர்க்கும் அரு மருந்து என்று அதையும் மக்கள் விட்டு வைக்கவில்லை. ஈழத்தில் எண்பதுகள், தொண்ணூறுகளைக் கழித்தவர்களுக்கு இந்தப் பொருட் தட்டுப்பாடு குறித்துப் பூரண அனுபவத்தைப் பெற்றிருப்பர்.

அந்தக் காலத்தில் ஈழ நாடு, ஈழ முரசு, உதயன் போன்ற நாளேடுகளில் தமிழர் பகுதிகளில் எடுத்து வரத் தடையாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சால் பட்டியலிட்ட பொருட்கள் தலைப்புச் செய்திகளாகவோ அல்லது இரண்டாம் பக்கச் செய்தியாகவோ இருக்கும். மண்ணெண்ணெய், பெற்றோல், டீசல், பற்றறி (Battery), கற்பூரம் என்று கிட்டத்தட்ட ஐம்பத்துச் சொச்சம் பொருட்களைப் பட்டியலிட்டிருப்பார்கள்.
இவையெல்லாம் வெடி பொருட்களைப் பாவிக்க ஏதுவானவை என்று பாதுகாப்பு அமைச்சின் நம்பிக்கை. ஆனால் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் வேறு வழியால் (கடலாலோ தரையாலோ) வந்து சேருவதால் அவர்களுக்கு இந்தத் தடையெல்லாம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

யாழ்ப்பாணம் போகும் வீதியின் இரு மருங்கும் புதிது புதிதாக மண்ணெண்ணைக் கடைகள் வந்து விட்டன. ஒரு லீட்டர், இரண்டு லீட்டர் சோடாப் போத்தல்களில் வெண் சிவப்புத் திராவகங்களாக மண்ணெணெய் நிரப்பப்பாட்டு விற்பனையாகும். மண்ணெணையில் ஓடும் மோட்டார் வாகனங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்களை ஜெனரேட்டராக மாற்றிப் பாவித்தல் என்று மக்களும் மாற்றீடுகளைத் தேடத் தொடங்கி விட்டார்கள். மண்ணென்ணைக் கடைப் பணக்காரர்கள் ஒரு புறம், இன்னொரு புறம் இந்த மண்ணெண்ணைக் கடைகளில் தீ பரவிக் காயப்பட்டோரும், இறந்தோரும் உண்டு.

சைக்கிள் டைனமோ வழியாகப் பாட்டுக் கேட்ட கதைகள் எல்லாம் தனியாக எழுத வேண்டியவை.

பொருளாதாரத் தடை ஒரு பக்கம், இன்னொரு பக்கம் கடும் போர்ச் சூழலால் தென்னிலங்கையில் இருந்து வடக்குப் பிரதேசம் நோக்கிப் பொருட்களை எடுத்து வர முடியாத சூழல் இன்னொரு புறம் என்று இரண்டு பக்கமும் வேல் பாய்ச்சியது.

சோப்பைச் சின்னச் சின்னத் துண்டாக்கிப் பாவிப்பது, துணியில் சுருட்டிப் பாவிப்பது என்று சிக்கன நடவடிக்கைகள் அரங்கேறின. கொஞ்ச நாளில் இருப்பில் இருந்த எல்லா சோப்பும் கடைகளில் காலியாகின.

சுரக்காயைக் காய வைத்து அதன் உள் எலும்புக் கூட்டை எடுத்தால் ஸ்பொன்ச் மாதிரி இருக்கும். அதற்குள் சோப்புத் தண்ணியைக் கரைத்து ஊற்றி வெது வெதுவாக்கி குளிக்கும் போது சோப்புப் போடுவது போலப் போட்டுத் தேய்த்துக் குளிப்போம்.
பனம் பழச் சாற்றை எடுத்து விட்டு முடியால் சூழப்பட்ட கிழவன் போன இருக்கும் அந்தப் பனங்கொட்டையைத் தேய்த்துக் குளிப்போரும் உண்டு.பனஞ்சாற்றை எடுத்து உடுப்புத் தோய்ப்போம். பூ, செவ்வரத்தம் இலையை ஊறப்போட்டு அது நொய்ந்து ஒரு நெகிழ் கலவையாக வந்த பின்னர் அதைப் போட்டு உரஞ்சிக் குளிப்போரும் உண்டு.

எரிபொருளுக்கு மட்டுமல்ல எரிக்கும் பொருட்களுக்கும் அப்போது தட்டுப்பாடு. விறகு தேடி ஊரூராய் அபைந்து, வெட்டிய விறகுகளைத் தம் சைக்கிள் கரியரில் கட்டிக் கொண்டு கூவிக் கூவி விற்பர். இந்தத் தொழிலில் விமானக் குண்டு வீச்சில் எரிந்து விறகோடு விறகாய்ப் போனவரும் உண்டு.

செங்கை ஆழியான் தனது “யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று” என்ற குறு நாவலில், தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்து வாழ்வியலில் வன்னிப் பக்கம், அது தடைப்பட தென்மராட்சி என்று விறகு தேடிச் சைக்கிளின் பின் கரியரில் ஒரு ஆள் நீளத்துக்குக் கட்டி எதிர்க்காற்றுக்கு முகம் கொடுத்து வலித்து வலித்து ஓடி, எதிர்ப்படும் போர் விமானங்களைக் கண்டு போட்டது போட்டபடி விட்டு விட்டு மறைவாக ஓடி, அல்லது அந்த விமானங்களின் குண்டுக்கு அந்த இடத்திலேயே இரையாகிப் போன மனிதர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

மின்சாரம் இல்லாத அந்த ஐந்து ஆண்டு வாழ்க்கையை, குப்பி விளக்கில் படித்த காலத்தை இங்கே எழுதியிருக்கிறேன்.

http://www.madathuvaasal.com/2013/01/blog-post_17.htmi

பேப்பருக்கும் தட்டுப்பாடு. அதனால் ஒற்றை றூல், இரட்டை றூல் கொப்பிலளின் தாள், அதுவும் தட்டுப்பாடாகி விட, தடித்த அட்டைகளில் தான் பத்திரிகைகள், நாவல்கள், சஞ்சிகைகள் அச்சிடப்பட்டன.

அண்ணா கோப்பி என்பது உள்ளூர் உற்பத்தியாகப் பிரபலமாக இருந்த காலத்தில் ஜீவாகாரம் என்ற சத்துணவு, இனிப்பு வகைகள் தயாரிப்பு என்று தம் தொழிலை விரிவுபடுத்தினர்.
அப்போது சீனி, சர்க்கரை தட்டுப்பாடு நிலவியபோது “அண்ணா இனிப்பு” தான் அப்போது இணுவிலைத் தாண்டி எல்லா மூலையில் இருந்து வந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிப் போகும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது. அப்போது அண்ணா கோப்பி நிறுவனர் திரு நடராஜா நினைத்திருந்தார் அந்த உற்பத்திகளை முடக்கிக் கொள்ளை இலாபம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இருப்புத் தீரும் வரை அது தேடி வந்தோருக்குப் போய்ச் சேர்ந்தது.

“பதுக்காதே பதுக்காதே
பொருட்களைப் பதுக்காதே”

என்று பதுக்கல் வியாபாரிகள் மீதும்,

“அரசே! உன் பொருளாதாரத் தடையை
அப்பாவி மக்கள் மீது விதிக்காதே”

என்று அரசாங்கத்தைச் சாடியும் ஊர்வலங்கள் போவோம். விடுதலைப்புலிகளின் தமிழீழக் காவல்துறையும் இந்தப் பதுக்கல் வியாபாரிகளைக் கண்காணித்துத் தண்டனை கொடுத்தது.

தடை செய்யப்பட்ட பொருட்களைக் கண்காணிக்க வவுனியா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சோதனைச் சாவடி ஒன்றும் போடப்பட்டிருக்கும். அந்த வழியால் கள்ளமாகப் பொருட்களை எடுத்து வருபவர்களுக்கு அந்தப் பொருட்களின் வீரியத்தைப் பொறுத்துத் தண்டனையும் கிடைக்கும். கற்பூரம் கடத்தினவரை அந்த இடத்தில் வைத்து முழுக் கற்பூரப் பெட்டிகளையும் சூடம் ஏற்றிக் கரைத்த ஆமிக்காறன் கதை எல்லாம் உண்டு.

அப்போது நடந்த உண்மைச் சம்பவத்தை நினைத்து இப்போதும் சிரிப்பேன்.
அந்தக் காலத்துச் சண்டியனாக இருந்தவர், மூப்படைந்து கிழப்பருவத்திலும் பற்றறி (Battery) கடத்திக் கொண்டு போனால் ஊரில் நல்ல விலைக்கு விற்கலாம் என்று தன் வேட்டிக்குள் வைத்துக் கடத்தினார். வவுனியா ஆமிக்காறனிடம் அகப்பட்டு விட்டார்.
முதியவர் என்றும் பாராமல் செமத்தியான அடி விழுந்தது. அடித்துப் போட்டு ஆமிக்காறன் ஓடு என்று கலைத்து விட்டான். அந்தக் கிழவர் விட்டரா?

“சரி அடிச்சுப் போட்டாய் தானே
இனி பற்றறியைத் (Battery) தா?

என்று கேட்டாரே பார்க்கலாம்.

கானா பிரபா
09.03.2020

ஈழ நாடு பத்திரிகைப் படம் நன்றி : ஈழத்து நூலகம்

பாலா மாஸ்டரின் தமிழ் வகுப்பும் நளவெண்பாக் காதலும் ❤️

பெடியள் எல்லாம் நிறை கொள்ளாக் காதலோடு

அமர்ந்திருப்போம் பாலா மாஸ்டரின் வகுப்பில். இல்லையா பின்ன, அந்தக் காலத்தில் இதயம் படத்தைப் பார்த்து விட்டு “பொட்டு வச்ச ஒரு வட்ட நிலா” பாடிக் கொண்டும், வைரமுத்துவின் கவிதைகளில் காதலை மட்டும் அன்னப் பட்சி போலப் பிரித்துப் பருகியும், மு.மேத்தாவின் நந்தவன நாட்கள், ஊர்வலம் போன்ற கவிதைத் தொகுதிகளையும் அலசிப் போட்டு அவற்றில் இருக்கும் காதல் கவிதை நறுக்குகளைச் சிலாகித்து எடுத்து வைத்து எப்படா அவளுக்குக் காயிதம் (காதல் கடிதம்) கொடுக்கலாம் என்று சமயம் பார்த்த கழுத்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாத ஒன்று உருண்ட பள்ளிக்கூடக் காதல் காலகட்டம் அது.

“ஆயிரமாயிரம் சபைகளில் தேடுகிறேன்

அறிமுகமில்லாத உன் முகத்தை”

என்று நிரம்பி வழிந்த அந்த ரியூஷன் சென்ரரில் அவள் எங்கே இருக்கிறாள் என்பதைத் தேடவும் மு.மேத்தா தான் மனசுக்குள் முணுமுணுப்பார்.

“தேசங்களையெல்லாம்

சுற்றி வந்தாலும்

என் கால்கள்

உன் தெருவிற்கே

வந்து சேருகின்றன”

ரியூசன் முடிந்து திரும்பும் சைக்கிள் பாரிலும் மு.மேத்தா தான் குந்தியிருப்பது போல, கடந்து போகும் அவளின் சைக்கிள் திருமுகத்துக்காக மனப் பாடம் செய்த “கண்ணீர்ப் பூக்கள்” கவிதை தான் உசார்ப்படுத்தும்.

இப்படி வகுப்புக்கு வெளியே புதுக்கவிதைகளைத் தேடிப் பிடித்துக் காதலோடு பொருத்திய காலத்தில் வகுப்புக்குள்ளேயே காதல் பாடம் நடத்தினால் எப்படியிருக்கும்?

“என்ன பிரபு!

புகழேந்திப் புலவர் என்ன மாதிரிக் காதலைச் சொல்லியிருக்கிறார் பாரும்”

பாலா மாஸ்டர் நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே புகழேந்திப் புலவரின் “நளவெண்பா” பாடமெடுப்பார்.

தமிழ்ப் பாடமெடுத்த பாலா மாஸ்டரின் வகுப்பில் மட்டுமல்ல பாரபட்சமில்லாமல் கணிதம், விஞ்ஞானம் படிப்பிச்ச அருட்செல்வம் மாஸ்டர், வணிகக் கல்வி படிப்பிச்ச மகேஸ் மாஸ்டர் என்று எல்லா வகுப்பிலும் குழப்படிகாறப் பெடியன் என்றால் நான் தான். குழப்படி என்றால் அதிக பட்சம் ஆண், பெண் பாராமல் கலாய்ப்பது, கூச்சல் போடுவது அதுக்கு மேல் நாகரிகத்தின் எல்லையை நானும் தாண்டவில்லை. ஆனால் நளவெண்பா வந்ததில் இருந்து நானும் அமைதியாகி விட்டேன்.

நாற்குணமும் நாற்படையா வைம்புலனும் நல்லமைச்சாம்

ஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா – வேற்படையும்

வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்

ஆளுமே பெண்மை யரசு.

தன் புருவத்தில் மை தீட்டி, கறுத்தப் பொட்டும், இரட்டைப் பின்னலுமாக நளாயினி நடந்து வரும் போது அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக்குள் தமயந்தி வருவது போல ஒரு பிரமையில் திக்கித்து நிற்பேன். அந்த நேரம் நளாயினி மேல் ஒரு மானசீகமான காதல் வந்து சேர்ந்தது. அதற்கு நளவெண்பா தான் உடந்தை. மானசீகக் காதல் என்று நான் சொல்லக் காரணம் உலக அழகி ஐஸ்வர்யா என்னதான் கவர்ச்சிகரமாக உடுத்தினாலும் அவர் மேல் ஒரு காமப் பார்வை வந்ததில்லை. அது போலத் தான் நம் பள்ளிக்காலத்துக் காதலிகளும்.

“டேய் பிரபு! நளன் வாறாண்டா”

நளாயினியை நளன் ஆக்கி என்னைத் தமயந்தி ஆக்கி விட்டார்கள் அருட்செல்வம் மாஸ்டரின் வகுப்பில் படிக்க வரும் பெடியள். நமுட்டுச் சிரிப்போடு அவர்கள் சொல்ல, A5 அளவு தமிழ் இலக்கியப் புத்தகத்தைப் பாதி மறைத்துக் கொண்டே அவளைப் பார்ப்பேன்.

நளாயினி இந்த உலகத்தில் இருந்து நிரந்தரமாக விடை பெற்று விட்டார், ஆனாலும் நளவெண்பா என்ற சொல்லைக் கேட்டாலேயே அவர் தான் நினைப்புக்கு வருவார்.

அருட்செல்வம் மாஸ்டர் வீட்டின் அதிகாலை ஆறு மணி வகுப்பு ஒன்றில் அருட்செல்வம் மாஸ்டரின் வகுப்பாக இருக்கும், இல்லாவிட்டால் பாலா மாஸ்டரின் தமிழ் வகுப்பாக இருக்கும். பாலா மாஸ்டர் மானிப்பாயில் பிற்ஸ்மன் என்ற கல்வி நிறுவனத்தைத் தன் தம்பி பிரபாகரனோடு இணைந்து நடத்திக் கொண்டிருந்தார். இப்பவும் அது தொடர்கிறது என்றே நினைக்கிறேன். பாலா மாஸ்டரின் தம்பி பிரபாகரன் கணக்கியல் பாடமெடுப்பவர். அவர் கொஞ்ச நாள் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டிலும் வந்து படிப்பித்தவர்.

அருட்செல்வம் மாஸ்டர் வீட்டில் ஒரு வாணி விழாவுக்காகப் பாட்டுக் கச்சேரி வைத்தோம். நான் தான் தொகுப்பாளர். அரவிந்தன், குபேரன் எல்லாம் பாடினார்கள். அதைப் பார்த்து விட்டுத் தங்கள் பிற்ஸ்மன் நிறுவன வாணி விழாவிலும் எங்களை அரங்கேற்றினார் பாலா மாஸ்டர். இசை மேடை அனுபவத்தை அப்பவே எனக்குத் தொடக்கி வைத்தது.

சுருள் முடி கேசமும், கொழுத்த முகமுமாக பாலா மாஸ்டரைப் பார்க்கும் போதே ஒரு பாகவதர் போலத் தோற்றம் கொண்டவர்.

அருட்செல்வம் மாஸ்டர் சோக்கட்டி பிடிப்பதே ஸ்டைலாக இருக்கும். டஸ்டரைக் கூடக் கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும் வைத்து இலாகவமாக எடுத்துத் துடைப்பார். ஆனால் பாலா மாஸ்டரின் கை முழுக்க சோக்கட்டித் தூள் படர்ந்து கை முழுக்க மெஹந்தி போட்டது போலப் படையாக இருக்கும். அவருக்கு சோக்கட்டித் தூள் அலர்ஜி வேறு. இடைக்கிடைத் தும்முவார்.

“பிள்ளையள்! போன கிழமை என்னத்திலை விட்டனான்?

“சேர்!

பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமள்தான்

மாமனைவாய் வாழும் மயிற்குலங்கட் – காமன்

படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள்பாத

நடைகற்பான் வந்தடைந்தே யாம்”

முந்திரிக் கொட்டையாக எழுந்து நின்று சொல்வேன்.

“பாத்தியளே பிரவுக்கு நளவெண்பா எண்டால் காணும்”

என்று குலுங்கிச் சிரித்து விட்டு நளவெண்பாவின் அடுத்த பாடலுக்குச் சொல் விளக்கம் கொடுப்பார்.

எங்களது உயர் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் புகழேந்திப் புலவர் எழுதிய “நளவெண்பா”, உமறுப் புலவர் எழுதிய “சீறாப் புராணம்”,

சுவாமி விபுலானந்தர் தன் நண்பர் கந்தசாமிப்பிள்ளையின் பிரிவால் வாடி எழுதிய “கங்கையில் விடுத்த ஓலை” , நாலடியார் என்று மூன்றுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத, வெவ்வேறு காலகட்டத்து இலக்கியங்கள். ஆனால் அவற்றைச் சுவை பட விளக்கி, மனப் பாடமே செய்யாமல் மனதில் பதிய வைத்து, பொருளைக் கூடப் பாடமாக்காமல் இயல்பாகவே புரிந்து எழுத வைக்கக் கூடிய ஆற்றலைக் கொடுத்தது பாலா மாஸ்டரின் கற்பித்தல் முறைமை தான்.

ஈழத்தின் தலை சிறந்த தமிழ் இலக்கண ஆசிரியர் பண்டிதர் சு.வே (சு.வேலுப்பிள்ளை) யின் மாணவர் பாலா மாஸ்டர். அதனால் தமிழ் இலக்கண வகுப்பில் சு.வே எழுதிய இலக்கணப் பாட நூலைத் தான் கையில் வைத்திருப்பார். அத்தோடு அடிக்கடி தன் குருவின் பெருமையைப் பேசுவார் பாலா மாஸ்டர்.

தமிழ் வகுப்பில் ஆர்வத்தோடு (!) முன் வாங்கில்

இருந்து படித்த என் மீது பாலா மாஸ்டரின் பரிவும் நாளாக நாளாக அதிகரித்தது. அதுவரை நான் செய்த குழப்படி, கூச்சலைக் கடைசி வாங்கில் இருக்கும் பெடியள் யாராவது செய்தால்,

“பிரபு! உவங்களுக்குச் சபைப் பழக்கம் தெரியாது போல” என்று சினந்து குரல் கொடுப்பார். அந்த நேரம் பாட்ஷா ஒரு மாணிக்கமாக மாறிய மன நிலையில் இருப்பேன்.

“பிள்ளையள்! இஞ்சை பாருங்கோ” என்று மிகவும் அன்பொழுகப் பேசிக் கொண்டே அடுத்த பாடலை விபரிப்பார் பாலா மாஸ்டர்.

கூர்ந்து அவதானித்தால் ஒரு சுவையான பண்டத்தை ரசித்து உண்டு பொச்சடித்துக் கொண்டே பேசுவது போல இருக்கும்.

பாலா மாஸ்டரால் தான் நான் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் “இந்து நாகரிகம்” பாடத்தை எடுத்தேன் என்று இன்று அவருக்கு நான் சொல்லவில்லை. அவர் அந்த நேரம் என் மீது நிறைய நம்பிக்கை கொண்டிருந்தார். பெறுபேறுகள் வந்த போது

“பிரபுவுக்கு நல்ல றிசல்ட் வந்திருக்குமே” என்று ஆவலோடு கேட்டிருந்தார். கொக்குவில் இந்துவில் படித்த இரண்டு பேர் திறமைப் புள்ளிகளை எடுத்திருந்தார்கள். அதில் ஒருவன் நான்.

பல்லாண்டுகளுக்குப் பிறகு

கம்போடியாவின் இந்துக் கோயில்களையும், பாலித் தீவின் இந்துப் பண்பாட்டைத் தேடி மேய்ந்த போது கூடவே பாலா மாஸ்டர் நடந்து வருவது போல இருக்கும். அவர் படிப்பித்த சோழ, நாயக்கர், பல்லவர் காலத்துக் கட்டடக் கலை அசரீரியாக் கேட்பது போல இருந்தது பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்த அந்தக் கட்டடக் காடுகளுக்குள்ளும், கோயில்களுக்குள்ளும் நின்ற போது.

“சேர்!

நான் கம்போடியா போய் இந்துத் தொன்மங்களை ஆராய்ந்து ஒரு நூல்

எழுதினனான்” என் “கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கிக் கொடுத்தேன், அப்போது 2010 இல் தாயகத்தில் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டில் அவர் படிப்பித்துக் கொண்டிருந்தார். ஆசையோடு வாங்கிக் கட்டியணைத்துக் கொண்டார்.

அடுத்த தாயகப் பயணத்தில் மீண்டும் அதே அருட்செல்வம் மாஸ்டர் வீட்டில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பாலா மாஸ்டரைச் சந்திதேன்.

“நான் படிப்பிச்ச பிள்ளை எழுதின புத்தகம்” என்று பெருமையோடு தன் மாணவர்களுக்கு என் புத்தகத்தைக் காட்டியதாகச் சொன்னார் பாலா மாஸ்டர்.

அந்த இடத்தில் அவருக்கு நான் குரு தட்சணை கொடுத்த மன நிறைவில் இருந்தேன்.

கானா பிரபா

04.03.2020

பொப்பிசைத் திலகம்” எஸ்.ராமச்சந்திரன் நினைவில்

“ஆடாதே ஆடாதே சூதாட்டம் ஆடாதே…..கூடாதே கூடாதே… கூட்டத்தில் சேராதே….”

ஈழத்துப் பொப்பிசைப் பிரியர்கள் இந்தத் துள்ளிசை கலந்த போதனைப் பாடலை மறந்திருக்க மாட்டார்கள். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் “பொப்பிசைத் திலகம்” எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் கடந்த 16.02.2020 இல் தாயகத்தில் மறைந்தார்.

ஈழத்தில் அரியாலை எனும் ஊரில் பிறந்த எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஈழத்து மெல்லிசைப் பாடல் உலகில் சிறுகப் பாடினாலும் பெருக ரசிகர் மனதில் நிறைந்தவர் என்பதற்கு “ஆடாதே ஆடாதே” பாடலோடு “கனவில் வந்த கனியே” https://www.youtube.com/watch?v=KtHfD-BkAH8 மற்றும் “வான நிலவில் அவளைக் கண்டேன்”https://www.youtube.com/watch?v=UcGqAirC8A4 ஆகிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

ஒரு பக்கம்

“கள்ளுக்கடைப் பக்கம் போகாதே

காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்”

என்று “பொப்பிசைப் பிதா” நித்தி கனகரத்தினம் அவர்கள் முழங்க, இன்னோர் பக்கம்

“ஆடாதே ஆடாதே சூதாட்டம் ஆடாதே…..”

என்று “பொப்பிசைத் திலகம்” எஸ்.ராமச்சந்திரன் பாடிய அந்தப் பசுமையான பொற்கால நினைவுகள் மனதில் எழ, நித்தி கனகரத்தினம் அவர்களை எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் குறித்த நினைவுப் பகிர்வைத் தர அழைத்தேன்.

அந்த நாள் நினைவு சூழ்ந்த ஒலிப் பகிர்வைக் கேட்க

ஈழத்தின் “கலைவளன்” ‪சிசு நாகேந்திரனுக்குப் பிரியாவிடை‬

அவுஸ்திரேலியாவில் நம்மிடையே வாழ்ந்து வந்த ஈழத்துக் கலைஞர் சிசு நாகேந்திரன் அவர்கள் தனது 99 வது வயதில் நேற்று பெப்ரவரி 10 ஆம் திகதி நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். ‬

சிசு நாகேந்திரன் அவர்களது நினைவுப் பகிர்வை வழங்குகிறார் எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள்.

‪அவர் குறித்து எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் எழுதிய கட்டுரையை மீள் பகிர்கின்றேன்.‬

யாழ். நல்லூர் இவரது பூர்வீகம் எனச்சொல்லப்பட்டாலும், பிறந்தது கேகாலையில் 1921 ஆம் ஆண்டில். இவரது தந்தையார் தொழில் நிமித்தம் இப்பிரதேசத்தில் வாழ்ந்த காலத்தில் பிறந்த சிசு. நாகேந்திரன் அவர்களின் வாழ்வில் அவரது ஒன்பதாவது வயதில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

நாகேந்திரனின் தந்தையார் முற்றும் துறந்த துறவியாகி குடும்பத்தையும் உத்தியோகத்தையும் விட்டுவிட்டு, வட இந்தியா நோக்கி ஒரு சந்நியாசிகோலத்துடன் புறப்பட்டுவிட்டார். ஒன்பது வயது நாகேந்திரன், அருமைத்தாயாரினதும் அன்பு அண்ணனினதும் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறார்.

தந்தையார் இந்தியா வடக்கு நோக்கிச்செல்லவும், தாயார் இலங்கை வடக்கு நோக்கி குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். அந்நாளைய அரிவரி தொடக்கம் லண்டன் மற்றிக்குலேஷன் வரையில் யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் ( இன்றைய பல்கலைக்கழகம்) படித்த நாகேந்திரன், பின்னர் யாழ். மத்திய கல்லூரியில் வர்த்தக முகாமைத்துவம் கற்று, London Chamber of Commerce உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றினார்.

1944 இல் மன்னார் அரசாங்க அதிபராக கடமையாற்றிய சிற்றம்பலம் அவர்களிடம் தட்டச்சாளராக பணியாற்றும் அரச நியமனம் கிடைத்தது. பின்னர் கொழும்பில் அரச திணைக்களம் ஒன்றில் பணிபுரியும்போது கணக்காய்வாளராக பதவி உயர்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து, 1979 இல் சேவையிலிருந்து ஓய்வுபெறும் வரையில் பல்வேறு திணைக்களங்களில் பணியாற்றியிருக்கிறார்.

நான்கு பிள்ளைகளின் தந்தை. ஒரு சாதாரண எழுதுவினைஞருக்குரிய ஊதியம். எளிமையான வாழ்க்கை. இவற்றுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்கவைத்து நல்ல நிலைமைக்கு அவர்களை உயர்த்தி விட்டு, தமது தந்தையைப்போன்றே ஒரு துறவுக்கோலம் பூண்டு அமைதியாக தனது பணியைத்தொடருகிறார்.

தமது துறவு வாழ்க்கையை சமூகத்திற்கு பலவழிகளிலும் பயன்படும்விதமாக இவர் அமைத்துக்கொண்டிருப்பதுதான் அவரது சிறப்பு. அத்துடன் மற்றவர்களுக்கு முன்மாதிரியானதாகவும் திகழுகிறது.

அதனாலும் அவர் எமது நெஞ்சத்துக்கு நெருக்கமானவராகின்றார்.

இளமைக்காலத்தில் படிப்பில் படு சுட்டி எனப்பெயரெடுத்த இவர், மாணவர் தலைவராகவும் பல்துறை விளையாட்டு வீரராகவும் திகழ்ந்திருக்கிறார். உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், டெனிஸ், டேபிள் டெனிஸ் முதலானவற்றிலும் வல்லவராகியிருக்கிறார். அயராது இயங்கும் இவரது சூட்சுமும் இந்தப்பின்னணிகள்தான் என்பது எமக்குப்புரிகிறது.

இந்த முதிய வயதிலும் தினமும் காலையில் உடற்பயிற்சி தொடக்கம் யோகாசனம் வரையில் செய்வதை அவதானித்திருக்கின்றேன்.

இவரது கலை உலக வாழ்க்கையும் ஆரோக்கியமானது. தேடல் நிரம்பியது. கொழும்பில் தொழில் நிமித்தம் வாழ்ந்த காலத்தில், ‘ராஜ் நகைச்சுவை நாடக மன்றம்’ இவரை உள்வாங்கியிருந்தமையால் இம்மன்றம் மேடையேற்றிய பல நாடகங்களில் தோன்றினார். யாழ்ப்பாணம் திரும்பியதும் அச்சுவேலி ராஜரட்ணத்துடன் இணைந்து அந்நாட்களில் பிரபல்யமாகியிருந்த ‘சக்கடத்தார்’ என்னும் நாடகத்தில் ஒரு பாத்திரமானார்.

1960 களில் நீர்கொழும்பில் வானொலிக் கலைஞர்களை அழைத்துக்கொண்டு வந்த ‘சாணா’ சண்முகநாதன், மத்தாப்பு, குதூகலம் முதலான வானொலி நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவுசெய்ய வந்தபோது சிசு. நாகேந்திரன் இணைந்து நடித்த சக்கடத்தார் நிகழ்வை பார்த்து ரசித்திருக்கின்றேன். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் வானொலிப்பெட்டி இல்லாவிட்டாலும் சக்கடத்தார் ஒலிபரப்பாகும் நேரம் அயல்வீட்டுக்குச் சென்றாவது கேட்டு ரசிப்பது எனது வழக்கம். இலங்கையில் ஒரு காலத்தில் சக்கடத்தார் தமிழ் நேயர்களிடம் நன்கு பிரபல்யம் பெற்றிருந்தார்.

இந்நாடகம் ஆயிரம் தடவைகளுக்கு மேல் மேடையேறியிருக்கும் என்பது நாகேந்திரனின் அபிப்பிராயம். யாழ்ப்பாணத்தில் கலைஞர்கள் தாசீசியஸ், குழந்தை சண்முகலிங்கம், திருநாவுக்கரசு (மருத்துவர். நந்தியின் சகோதரர்) ஆகியோருடனும் இணைந்து இயங்கியிருக்கிறார். ரகுநாதனின் நிர்மலா, வி. எஸ். துரைராஜா தயாரித்த குத்துவிளக்கு முதலான திரைப்படங்களிலும் தோன்றியிருக்கிறார்.

ஆச்சிக்குச்சொல்லாதை, வா கோட்டடிக்கு, கவலைப்படாதே, மின்னுவதெல்லாம் பொன்னல்ல, தொடாதே, அவமானம், ஊர் சிரிக்குது, அது அப்ப… இது இப்ப… முதலான பல நகைச்சுவை நாடகங்களிலும் நடித்திருக்கும் நாகேந்திரன், யாழ். திருநெல்வேலி நாடக அரங்கக்கல்லூரியினால் தயாரிக்கப்பட்ட வையத்துள் தெய்வம், கந்தன் கருணை, அன்னத்துக்கு அரோஹரா, கூடி விளையாடு பாப்பா, இனி என்ன கலியாணம், கவிஞர் அம்பியின் வேதாளம் சொன்ன கதை முதலானவற்றிலும் நடித்திருப்பதுடன், பொறுத்தது போதும், கோடை ஆகியவற்றின் மேடையேற்றத்தின்போது அரங்க நிர்மாணப்பணியையும் திறம்பட மேற்கொண்டிருக்கிறார்.

அந்நாட்களில் தமிழ் வானொலி நேயர்களின் விருப்பத்துக்குரிய நாடகங்களாகத் திகழ்ந்த சிறாப்பர் குடும்பம், லண்டன் கந்தையா முதலானவற்றிலும் நடித்திருக்கிறார்.

இங்கிலாந்திலும் சிறிது காலம் வாழ்ந்திருக்கும் இவர், அங்கு ‘களரி’ நாடகப்பள்ளியின் சார்பாக மேடையேறிய புதியதொரு வீடு, அபசுரம், எந்தையும் தாயும் முதலானவற்றிலும் பங்கேற்றிருக்கிறார்.

1994 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து விடைபெற்று அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தருணத்தில் கலைஞர் தாசீசியஸ் உட்பட பலர் இவருக்கு அளித்த பிரிவுபசார வைபவத்தில் ‘கலைவளன்’ என்ற பட்டமளிக்கப்பட்டார்.

இவ்வாறு ஒரு நாடகக் கலைஞனாக தமது இருப்பை வெளிப்படுத்திக்கொண்டவர், அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த பின்னர் தன்னை ஒரு எழுத்தாளனாகவும் நிலைநிறுத்திக்கொண்டார்.

தான் இந்த கங்காருநாட்டில் ஒரு எழுத்தாளனாக மாறியதும் விந்தையான நிகழ்வுதான் என்று குறிப்பிட்டார். தமது பேத்திக்கு அந்தக்கால யாழ்ப்பாணம் எப்படி இருந்தது…? எனச்சொல்லிக்கொடுப்பதற்காக எழுதிய கட்டுரைகளே பின்னர் சிட்னியிலிருந்து வெளியாகும் கலப்பை இதழில் பிரசுரமானது என்றார். (கலப்பை இதழின் ஆசிரியர் – மருத்துவர் கேதீஸ்வரன்) குறிப்பிட்ட கட்டுரைகளே பின்னர் அதே பெயரில் தமிழகத்தில் நூலுருவாகி பலரதும் பாராட்டையும் விமர்சனங்களையும் பெற்றது.

இந்நூலுக்கு கிடைத்த வரவேற்பினால் உற்சாகமடைந்த சிசு. நாகேந்திரன், பிறந்த மண்ணும் புகலிடமும் என்னும் மற்றுமொரு கட்டுரைத் தொகுதியையும் வரவாக்கினார். இந்நூலை எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வெளியிட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த எட்டாவது எழுத்தாளர் விழாவிலும் பின்னர் மெல்பனில் நடந்த இலக்கிய ஒன்று கூடலிலும் விமர்சன அரங்கில் இந்நூல் இடம்பெற்றது.

நாடகக்கலைஞனாக அறிமுகமாகி எழுத்தாளனாக தன்னை வளர்த்துக் கொண்ட சிசு. நகேந்திரன், சிறந்த ஒளிப்படக்லைஞருமாவார். எமது சங்கத்தின் ஆஸ்தான ஒளிப்படக்கலைஞர் பதவியும் இவருக்குத்தரப்பட்டிருந்தது.

சில வருடங்களுக்கு முன்னர் ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சில உடற்பயிற்சிகள் பற்றிய இவரது பயிற்சியும் காட்சியும் இடம்பெற்ற இறுவட்டையும் வெளியிட்டார்.

அவுஸ்திரேலியாவில் எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் மட்டுமல்ல, விக்ரோரியா ஈழத் தமிழ்ச்சங்கம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றிலும் சாக்குப்போக்குச் சொல்லாத அர்ப்பணிப்புணர்வுடன் இதயசுத்தியோடு இயங்கும் இந்த உலகம் சுற்றிய இளைஞர், தற்பொழுது முதுமை தரும் சில உபாதைகளினால் மெல்பனில் ஒரு மருத்துவ சிகிச்சை நிலையத்தில் பராமரிக்கப்படுகிறார்.

அவர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை எமது இலக்கிய நண்பர் எழுத்தாளர் ஆவூரான் சந்திரன் மூலம் கேட்டறிந்து , எமது சங்கத்தின் உறுப்பினர்கள் சிலரும் கலை இலக்கியவாதிகளும் சென்று பார்த்தோம்.

எழுந்து நடமாடிக்கொண்டே எமது சங்கத்தின் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்ற தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார். அவருடைய நீண்ட நாள் உழைப்பில் தயாரான ஒரு தமிழ் அகராதி கொழும்பில் அச்சாகிறது.

அதன் இரண்டாம் பாகத்தையும் மருத்துவமனையிலிருந்து அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.

கடந்த (2014) ஆண்டு அவரது மனைவி சிட்னியில் காலமாகிவிட்டார். ஆனால், அவரை அங்கு பயணிக்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. அவரது உடல்நிலைதான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

எனினும் இன்றைய நவீன உலகம் அவரை மனைவியின் இறுதிச்சடங்குகளை ஸ்கைப் வழியாக பார்ப்பதற்கு வசதி செய்துகொடுத்தது.

வாழ்க்கையில் நாம் கடக்கவேண்டிய காலத்தை கலைவளன் சிசு. நாகேந்திரன் கடந்து செல்கிறார். ஆனால், சோம்பிக்கிடக்காமல் இயங்கிக்கொண்டே அவர் கடப்பதுதான் எமக்கெல்லாம் முன்மாதிரியானது.

எனக்கு அவரைப்பார்க்கும்தோறும் மகாகவி பாரதியின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வரும்.

” தேடிச்சோறு நிதந்தின்று – பல

சின்னஞ் சிறு கதைகள்பேசி – மனம்

வாடித்துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பல செயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி -கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப்போலே – நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ “

அவுஸ்திரேலியா ஏழாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் (2007 இல்) இவரது சேவைகளை பாராட்டி கௌரவித்து விருது வழங்கினோம். ஞானம் இதழ் இவரை அட்டைப்பட அதிதியாக கௌரவித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் சிட்னியில் அவுஸ்திரேலியா கம்பன் கழகம் இவரது சேவைகளைப்பாராட்டி மாருதி விருது வழங்கி கௌரவித்து தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டது.

கலை, இலக்கியம் மற்றும் சமூகப்பணிகளில் சகலராலும் நேசிக்கப்படும் கலைவளன் சிசு. நாகேந்திரன் விதந்து போற்றுதலுக்குரிய பண்பாளர். முன்மாதிரியானவர்.