இந்தச் சம்பவம் நடந்து நான்கு வருடங்கள் இருக்கும், ஆனால் இன்று வரை நான் என் வானொலிக் கலையகம் போய், ஒலிபரப்புக்கூடத்தில் நுளையும் போது தவறாமல் வரும் ஞாபகச் சிதறலாக அது இருக்கின்றது. கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக என் வானொலிப் பணி மூலம் சந்தித்த எத்தனை எத்தனையோ வித்தியாசமான மனிதர்கள், அவர்களின் மன உணர்வுகள் என்று ஏராளம் அனுபவங்களை நான் சந்தித்திருக்கின்றேன். ஆனால் அவர்களை விடவும், அந்த அனுபவங்களை விடவும் மேலானதொரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது இந்த நிகழ்வு.
நான்கு வருடத்துக்கு முன் நான் செய்த வானொலி நிகழ்ச்சி ஒன்றின் பெயர் ” காதலர் கீதங்கள்” வெறுமனே ஒப்புக்குப் பாடியவர் பெயரையும், பாடல் இடம் பெற்ற திரைப்படத்தையும் சொல்லிப் பாடல் ஒலிபரப்புவது எனக்குப் பிடிக்காத அம்சம். எனவே ஒவ்வொரு காதலர் கீதங்கள் நிகழ்ச்சிக்கும் ஓவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்பிட்டு, கவிஞர் மு.மேத்தா, அப்துல் ரகுமான், மற்றும் ஈழத்துக்கவிஞர்கள், அறியப்படாத தமிழ் நாட்டுக் கவிஞர்கள், ஹைக்கூ கவிதைகள் என்று இவர்களின் ஒவ்வொரு கவிதையிலும் நல்லதொரு இரண்டடி மட்டும் எடுத்து அந்த அடிகளுக்குப் பொருத்தமான பாடல்களையும், பின்னணியில் மென்மையான இசை வழங்கி நிகழ்ச்சிகளைப் படைத்து வந்தேன். புதிய பாணியில் கிடைத்த
பாடற்சாப்பாடு, நேயர்களைப் பொறுத்தவரை நல்விருந்தாக அமைந்தது.
ஓரு நாள் இதே போல் காதலர் கீதங்கள் நிகழ்ச்சியை நான் செய்து முடித்துவிட்டு வீடு திரும்ப எத்தனிக்கையில் வானொலிக் கலையகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.
” நீர் நல்ல நல்ல பாட்டுப் போடுகிறீர் ஐசே, பெட்டையள் கியூவில உம்மை மாப்பிளை கேக்க வரப்போகினம்” இப்படி சிரித்துக்கொண்டே பேசியது மறுமுனையில் ஒரு பெண்குரல். அந்தக் குரலுக்கு வயசு நாற்பதிற்கும் மேல் இருக்கும்.
” அப்பிடியே…….!பரவாயில்லை” என் வழமையான ட்ரேட் மார்க் அசட்டுச் சிரிப்புடன் நான்.
பிறகு அந்தப் பெண் நேயர் மிகுந்த உரிமை எடுத்துக்கொண்டு தொடர்ந்து வந்த காலத்தில் நான் படைத்த நிகழ்ச்சிகள் பற்றித் தன் அபிப்பிராயம் கூறுவதும்,
“எனக்கு உம்மட குரலைக் கேட்டால் என்ர தம்பி மாதிரி இருக்குதப்பா” என்று சொல்வதுமாகத் தன் தொலைபேசி நட்பை தொடர்ந்து வந்தார்.
ஒருநாள் தான் யார் என்பதைப் பற்றியும் எனக்குச் சொன்னார் இப்படி.
“எங்கட அப்பா, அம்மா நானும் என்ர 2 தம்பிமார், 2 சகோதரிகள் நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போதே அப்பா குடிச்சுக் குடிச்சு எல்லாத்தையும் அழிச்சுப் போட்டார். நான் தான் தம்பி, தங்கச்சிமாரை வளர்த்து ஆளாக்கவேண்டிய பொறுப்பு. சிங்கப்பூருக்குப் போய் வேலை செய்தன். அவங்களும் இப்ப கல்யாணம் கட்டி இப்ப யூரோப்பில, எனக்கு இனிக் கல்யாணம் என்னத்துக்கு எண்டு விட்டிட்டன். சகோதரங்கள் யுரோப்பில எண்டாலும், நான் ஒஸ்ரேலியா வந்திட்டன்,” என்றார் மலர் என்ற அந்த நேயர்.
தொடர்ந்தகாலங்களிலும் அவர் என் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிலாகித்துப் பேசுவதுமாக ஒருவருடமாகப் போன் மூலமே பேசிக்கொண்டார். வேடிக்கையாகப் பேசிக் கொண்டே
“எங்கையப்பா, உந்தப் பாட்டெல்லாம் எடுக்கிறனீர்? ,
நான் ஒரு நாளும் கேட்டதில்லை” என்று சீண்டுவார்.
இல்லையக்கா, எல்லாம் சீடியில தான் இருக்குது,
நான் இசையமைக்கிறதில்லை என்று சிரித்துச் சமாளிப்பேன்.
“போறபோக்கை பார்த்தால் நீரும் இசையமைப்பீர் போலக் கிடக்குது” என்பார் பிடிகொடுக்காமல்.
சிட்னியில் அவர் இருந்தாலும் ஒருமுறை கூட அவரை நேரே பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.
திடீரென்று ஆறு மாதங்களுக்கு மேலாக அவர் எனக்குப் போனில் பேசவேயில்லை. எனக்கு இது மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும், ” ஏதாலும் வேலைப் பழு அவவுக்கு இருக்கும்” என்று நான் எனக்குள் சமாதானப்படுத்திக்கொண்டேன்.
ஆறு மாதம் கடந்துவிட்ட நிலையில் ஒரு நாள் வானொலிக் கலையகத்தில் இருந்தபோது தொலைபேசி அழைப்பொன்று வந்தது.
“தம்பி பிரபா, நான் மலரக்கா பேசிறன்” அவரின் குரலில் தளர்ச்சியிருந்தது.
“என்னக்கா குரல் ஒரு மாதிரியிருக்குது” இது நான்
“இல்லையப்பு, இவ்வளவு நாளும் நான் நல்லா உலைஞ்சு
போனன் கொஸ்பிடலும் வீடும் தான்” இது மலரக்கா.
“என்ன பெரிய வருத்தமோ?”
“கான்சர் எண்டு சொல்லுறாங்கள், ட்ரீட்மெண்ட் எடுத்துகொண்டிருக்கிறன்”
தளர்ச்சியான குரலில் மலரக்கா.
எனக்கு இடியே விழுந்தது போல இருந்தது, ஆனால் அதை வெளிக்காட்டாமல்
“உங்களுக்கு ஒண்டுமில்லையக்கா, சிட்னி முருகனிட்டை எல்லாத்தையும் விடுங்கோ,
இந்த நாட்டில உதெல்லாம் ஒரு வருத்தமே” என்றேன் நான். அப்போது என் குரலில் வலிமை இருந்தாலும் மனசு தளர்ந்து போயிருந்தது.
” அப்பிடியே சொல்லிறீர்? உண்மையாவே” என்று அப்பாவியாகக் கேட்டார் மலரக்கா.
” ஓண்டுக்கும் யோசியாமைப் பாட்டைக் கேளுங்கோ அக்கா, இண்டைக்கு நல்ல செலக்க்ஷன் கொண்டுவந்திருக்கிறன்” என்றேன் நான்.
” சரி தம்பி” என்றவாறே விடை பெற்றார் அவர்.
வேலை நிமித்தம் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் நான் அப்போது செல்ல வேண்டியிருந்தது.
மலரக்காவிற்கு நோய் முற்றி இப்போது ஆஸ்பத்திரியில் முழுதுமாக அட்மிட் ஆகிவிட்டாராம். எங்கள் வானொலி நிலையத்தைச் சேர்ந்த அறிவிப்பாளர்களும் சில நேயர்களுமாக 2002 தீபாவளி தினத்தை மலர் அக்காவுடன் அவரின் வார்ட்டில் கொண்டாடினார்களாம். நகுலாக்கா என்ற மலரக்காவின் நண்பி தான் அவரோடு கூட இருந்து கவனித்தாராம். டாக்டர் ஏதேனும் சொல்லும் போது நகுலாக்கா அழுவாராம். மலரக்காவோ
” சும்மா இரும், இவ்வளவு நாளும் நான்
வீட்டுக்காரருக்காக வாழ்ந்திட்டன், இனித்தான் எனக்காக ,
நல்ல சந்தேசமாய் வாழப்போறன்,
பாரும் எனக்கு எல்லா நோயும் பறந்திடும்”
என்று சிரித்துக்கொண்டே சொல்வாராம். நாள் முற்ற முற்ற மலரக்காவைக் கான்சர் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுக் கொண்டே வந்ததாம். நகுலாக்காவைச் சமாளிக்கத், தன் சக்தியெல்லாம் திரட்டித் தளர்ந்து போன தன் உடல் நிலையை நல்லது போலக் காட்ட நினைக்கும் மலர் அக்கா கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து போனார்.
நான் சீனாவிலிருந்து வந்து சேர்ந்த நாள் மறுதினம் நவம்பர் 12, 2002 காலை வானொலிப் போடுகிறேன், மலரக்கா இறந்த செய்தி வந்தது. தகனச் சாலைக்குச் செல்கிறேன். பெட்டிக்குள் மலரக்கா இருக்கிறார். முதன் முதலாக அவரைப் பார்க்கிறேன். கண்மூடிப் படுத்திருக்கிறார். மலரக்கா, நான் வந்திருக்கிறேன் என்று மனதுக்குள் சொல்லிப் பார்க்கிறேன்.
எமது வானொலி நிலையம் செய்த முன் ஏற்பாட்டுப்படி தகனச்சாலையில் வைத்து அவர் உடல் எரிக்கப்படுவதற்கு முன் நாம் ஏற்பாடு செய்து கொண்டுபோன போர்டபிள் சீடி பிளேயரில் மலரக்காவிற்குப் பிடித்த பாடலான ” மலரே மெளனமா” என்ற பாடல் ஒலிக்கின்றது. பாடல் ஒலித்து ஓய்ந்ததும் திரைக்குள் மறைகின்றது மலரக்காவின் சவப்பெட்டி.வந்த எல்லோரும் குமுறிக் குமுறி அழுகின்றார்கள். நான் வலிந்து இழுத்துக்கொண்டே என்னைக் கட்டுப்படுத்துகின்றேன், உடல் மட்டும் குலுங்குகின்றது.
வீட்டுக்கு வந்து குளியலறையைப் பூட்டிவிட்டு முகக்கண்ணாடியை வெறித்துப் பார்க்கின்றேன். அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறுடுகின்றது. குமுறிக் குமுறி அழுகின்றேன் நான்.
அன்று அழுது தீர்த்துவிட்டேன், இன்றும் மலரக்காவை நினைத்து மனசுக்குள் மெளனமாக அழுகின்றேன். மலரக்கா என்ற நல்லதொரு நேயரை இழந்துவிட்ட சோகம் நான் வானொலி வாழ்வை விட்டுப் போகும் வரையும்,
ஏன்…. நான் சாகும் வரைக்கும் இருக்கும்.
(யாவும் உண்மையே)