புள்ளினங்காள்

புள்ளினங்காள்

ஓ…… புள்ளினங்காள்

உன் பேச்சரவம் கேட்டு நின்றேன் ❤️❤️❤️

கடந்த வருடம் புது வீட்டுக்கு மாறியதில் இருந்து தான் அவதானித்தேன் எங்கள் வீட்டு உறுப்பினர்களை விடப் புதிதாகவும் சிலர் சேர்ந்திருப்பதை. ஆம் அவர்கள் யாருமல்ல இந்தியன் மைனா அல்லது common myna என்று சொல்லக் கூடிய நம்மூர் மைனாக்கள் தான். ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 23 வருட அவுஸ்திரேலிய வாசத்தில் மைனாவின் வாசனையே இல்லாதிருந்த எமக்கு ஏதோ நம்மூர்க்காரரைக் கண்ட மகிழ்ச்சி.

என்னுடைய இசைக்கூடத்தின் மேற் சாளரத்தின் கண்ணாடிகளின் மறு அந்தத்தின் ஓர இருக்கையில் இரண்டு மைனாக்கள் தவறாது வந்து குந்தியிருக்கும். அவற்றைப் படம் பிடிக்கக் கமராவைத் தூக்கினால் ஊர்மிளா தடுத்து விடுவார், நம் சலனம் கேட்டு அவை ஓடி விடுமென்று. முன் விறாந்தையில் கடித்துத் துப்பிய ஊதா நிறப் பழங்களும் அவற்றின் சாயமும் படர்ந்திருக்கும். புது வீட்டின் முகப்பில் இப்படிச் செய்யலாமா என்ற கரிசனை இந்தப் பறவைகளுக்கு இருக்குமா என்ன என்று ஊர்மிளாவிடம் விசனித்தால் “பரவாயில்லை விடுங்கோ அதுகள் ஆசையில் வந்து ஒதுங்கிப் போற இடம்” என்று சமாதானப்படுத்துவார்.

பின் வளவிலும் இதே கதை தான். கடித்துத் துப்பிய பழங்கள் ஆங்காங்கே சிதறியிருக்கும். அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் நிறை மாதக் கர்ப்பிணி போலத் தம் உடம்பை ஆட்டி ஆட்டி அந்தப் புல்லுப் பாதைகளில் மைனாக் கூட்டம் நடை போட்டுக் கொண்டிருப்பினம். அட வீட்டுக்காரன் வாறான் என்ற பயபக்தி இருக்குதா இவற்றுக்கு என்று ஈகோ என்ற வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ளும்.

இருந்தாலும் நெருக்கமான உறவுகள் இல்லாத இந்த அந்நிய தேசத்தில் வாய் பேசாது வலிய இந்தப் பறவைகள் மேல் பச்சாதாபம் பிறக்கும். கலைத்து விடாமல் தன் பாட்டில் நிற்கட்டும் என்று சந்தடி காட்டாது ஒதுங்கிப் போய் விடுவேன்.

ஆனால் என் ஆசையில் மண் அள்ளிப் போட்டார் பிராண்டன் என்ற வெள்ளைக்காரர், நம் பூந்தோட்டத்தை விரிவு படுத்த வந்தவர் இந்த மைனாக் கூட்டத்தைக் கண்டு இரத்த அழுத்தம் ஏறிய தமிழ்ப் பட வில்லன் போல எகிறினார்.

“பிரபா! உங்களுக்குத் தெரியுமா

இந்த மைனாக்கள் ஆபத்தானவை ஆஸி நாட்டின் மரபு சார் பறவைகளுக்கு இவைகள் எதிரிகள். உணவுச் சுழற்சி முறையில் தம் உணவைப் பகிர்ந்துண்ணும் பழக்கம் இல்லாத இந்த இந்தியன் மைனாக்கள் இந்த நாட்டுக்குக் கேடு. இவற்றை ஒழித்துக் கட்ட அரசாங்கம் முயற்சி எடுக்கிறது” என்று பெரிய விரிவுரையை அடித்து முடித்தார் பிராண்டன். எனக்கோ பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஊர்மிளாவுக்கோ அந்தக் கருத்து அதிர்ச்சியாக இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் கதையை ஓரம் கட்டினோம்.

இந்த இந்திய மைனாக்கள் குறித்த எச்சரிக்கையை ஆஸி நாட்டின் விலங்கு, பறவைகள் நல அமைப்பும் இங்கே பகிர்ந்திருக்கிறது.

https://kb.rspca.org.au/what-should-be-done-about-common-(indian)-myna-birds_140.html

பிராண்டன் வந்து போனதில் இருந்து இசைக் கூடத்தின் சாளரத்தில் அந்தரத்தில் வந்து நிற்கும் மைனாக்களைக் கண்டால் ஏனோ அனுதாபம் பிறக்கும்.

பக்கத்து நகரம் Westmead இலுள்ள ஒரு பூங்காவை விடிகாலை வேளையில் கடக்கும் போது யாரோ ஒரு புண்ணியவான் பாண் (Bread) துண்டுகளைக் கொட்டி விட்டுப் போயிருப்பார். புறாக் கூட்டம் வந்து மொய்த்துக் கொண்டிருக்கும். தினமும் நடக்கும் கூத்து இது.

தாயகத்தில் இருந்த காலத்தில் எங்கோ ஒரு குயிலின் “கூ” ஒலி கேட்டு அதுக்கு எதிர்ப்பாட்டு கூவொலி போட்டுக் காட்டுவேன். அது இன்னும் அழுத்தமாகக் கூ ஒலி போடும். இப்படி மாறி மாறி.

சித்தி வீட்டுக்குப் பின் காணியில் பரமலிங்கம் மாமாவின் திராட்சைப் பழத் தோட்டம் இருந்தது. நிறைய பால்மா ரின்களைக் கட்டி ஒரு கயிற்றில் பிணைத்து விட்டு தோட்டத்தின் மறு முனையில் ஒரு நிழற் பந்தலில் இருந்து கொண்டு அதை ஆட்டுவார் பரமலிங்கம் மாமா. பேணிகள் ஒலிக்கும் சத்தத்தில் திராட்சைப் பழம் திருட வந்த கிளிகள் கூட்டமாக ஓடி வானத்தில் குழுமிப் பிரியும். அந்தத் தோட்டத்தின் பக்கத்தில் இருந்த கிணற்றை ஒட்டி தென்னமரம் ஒன்று இருந்த்து. அந்த மரத்தில் பொந்து ஒன்று திடீரென்று தோன்றியதை சித்தி மகன் ராமா கண்டு விட்டார். ஓரு நாள் அந்த மரத்தில் அவர் ஏறிக் கொண்டிருந்ததை எங்கிருந்தோ இருந்து வந்த தாய்க் கிளி கண்டு விட்டது. மரத்தைச் சுற்றிச் சுற்றி அது வட்டமிடுவதைக் கண்டும் அவர் விடாக் கொண்டனாக முன்னேறிக் கொண்டிருந்தார்.

“ராமா அண்ணா! கிளிப் பொந்துக்குள்ள பாம்பிருக்கும் இறங்குங்கோ இறங்குங்கோ” என்று வெருட்டிய பின்னர் தான் மெல்ல இறங்கினார்.

பிடித்த கிளியை வீட்டுக்குக் கொண்டு போனால் சித்தியிடம் கிழி வாங்க வேண்டும் என்ற நினைப்பும் தோன்றியொருக்கலாம்.

புரட்டாசிச் சனிக்கு அம்மா சோற்றுப் படையலை மதிலில் போட்டு விட்டு நகர்ந்ததும் அவற்றைச் சாப்பிட்டு முடிக்கும் காகத்துக்காகக் காத்திருந்திருக்கிறேன். ஆனால் ஏனோ வீட்டில் பறவைகளைக் கூண்டில் வைத்து அடைத்து வளர்க்கப் பிரியப்படவில்லை நான். நண்பன் வீட்டில் கிளியைப் பேசச் சொல்லிக் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க அதுவோ தன் காலால் முகத்தைப் பிறாண்டிக் கொண்டிருக்கும்.

பெரியம்மாவின் மகன் சுரேஷ் ஒரு லவ் பேர்ட்ஸ் பண்ணையே வைத்திருந்து அவற்றை விற்றுக் காசாக்கிக் கொண்டிருந்தார். இன்றும் யாழ்ப்பாணத்தில் மணிப் புறாக்களை வளர்த்து இலட்ச ரூபாவுக்கு விற்கும் குடிசைக் கைத்தொழில் இருப்பதாக அறிந்து வியந்தேன்.

தேவதேவனின் பறவைக் கவிதை ஒன்றை வாசகர் ஒருவர் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் படித்த போது அடடா எல்லாருக்கும் ஒரே மன நிலை தான் வாய்க்கும் போல என்று எண்ணிக் கொண்டேன்.

சின்னஞ் சிறு குருவியே

————————–

எத்துணை கொடுத்து வைத்தவள் நீ !

மானுடப் பரப்பில்

உன் மூளை இயங்கிக் கொண்டிருக்கவில்லை

அமைதி அமைதியின்மை அறியாத

பேரமைதியின் புதல்வி நீ.

எளிய தேவைகளுக்கும்கூட

தன் வாணாளைப் பணையம் வைத்துப்

பாடுபட வேண்டிய

விந்தை உலகத்தவனில்லை நீ.

உன் உயிர் தயாரிப்பதற்கான

சிற்றுணவு பஞ்சத்தை

நீ ஒரு நாளும் அறிந்திருக்கவில்லை.

புகழுக்கும் மேலாண்மைக்கு போகத்திற்குமாய்

அல்லலுறும் மானுட உலகையே அறியாது,

வானத்திற்கும் பூமிக்கும் பிறந்தவளாய்

அன்பின் பெருவிரிவில் சிறகுவீசும் என் செல்லம் !

இன்பமும் துன்பமும் உயிரெச்சமும்

அறியாதவன்

என்றாலும் இயற்கைப் பெருவெளியை

உதைக்கும் ஒரு சிறு கீறலுக்கும்

துணுக்குற்று அலறும் ஒரு நுண்ணுயிர் !

உனக்காக,

உனக்காகவேதான் என் கண்ணே,

இந்த ஈனச்சிறு மானுடர்க்காய் அல்ல;

அவர்களுக்காகவெனில்

இவ்வுலகை ஆயிரம்முறை அழிக்கலாம்.

உன் துணுக்குரலாற் துயருற்றே

உனக்காகவேதான் என் செல்லமே

தன்னை சரிசெய்துகொள்ளத் துடிக்கிறது

இப் பேரியற்கை

என் அன்பே !

-தேவதேவன்

இந்த மாதிரிப் பறவைப் புராணம் திடீரென்று எழுவதற்குக் காரணம் இந்த வாரம் நடந்த இரண்டு விடயங்கள். இரண்டுமே இரண்டோடு சம்பந்தப்பட்டவைகள். ரஜினிகாந்தின் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தின் பாடல்கள் பல மாதங்களுக்கு முன்பே வந்திருந்தாலும் அவற்றைக் கேட்பதில் ஆர்வமிருக்கவில்லை.

என்னடா வானொலிக்காரன் இப்படிப் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். நான் பழைய பாடல்களோடும் பழைய வாழ்க்கை நினைவுகளோடும் தான் வாழ்ந்து கொண்டிருப்பவன்.

அப்படியிருக்க இந்த இறந்தும் இறவாக் கவிஞன் நா.முத்துக்குமார் 2.0 படத்துக்கு எழுதிய “புள்ளினங்காள்” பாடல் தான் என் இந்த மன அதிர்வலைக்க்கு முக்கிய காரணம்.

பறவைகளோடு மனிதனுக்கு இருக்கும் நேசம் குறித்து இதுவரை திரையிசையில் இவ்வளவு அணுக்கமாக எழுதியதில்லையோ? ( செக்கச் சிவந்த வானம் படத்தில் வரும் மழைக்குருவி பாடல் வேறு தளம்)

இந்த புள்ளினங்காள் பாடலைக் கேட்டு முடித்த பின்னாலும் பாடலில் எழும் பறவை ஒலிகள் அசரீரியாகக் கேட்டுக் கொண்டே இருந்தன.

அவை கிராமத்துத் தோட்டத்துக் கிளிகளாகவோ அன்றி கூக்கூ போட்ட குயில்களாகவோ மனதின் நினைவுகளைச் சுழியோடின.

நேற்று 2.0 படத்தைப் பார்த்த பின் அந்தத் தாக்கம் இன்னும் அதிகமாகி விட்டது. இந்தப் படத்தை விமர்சனத் தளத்தில் இன்னும் பலவேறாக ஆராயலாம் என்றாலும் படத்தில் முக்கியமாகப் பேசப்பட்டது. செல்போன் யுகம் வந்த பின் பறவை இனங்களுக்கு அடிக்கும் சாவு மணி பற்றியது. கதிரலைகளின் தாக்கத்தால் அழியும் சிட்டுக் குருவிகளை இனித் தமிழ்த் திரையிசைப் பாடல்களில் தான் தேடிப் பிடிக்க முடியும் போல. படத்தில் சொல்லப்பட்ட இந்தச் செய்தி அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டதோடு நம் எதிர்காலம் குறித்த பயத்தையும் எழுப்பி விட்டது.

படம் பார்த்து முடித்த பின் பாடலை மீண்டும் கேட்ட போது ஒரு கலவையான உணர்வில் குழம்பி நிற்கிறது மனது.

புள்ளினங்காள்

ஓ…… புள்ளினங்காள்

உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்

“புள்ளினங்காள்

ஓ…… புள்ளினங்காள்

உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்

மொழியில்லை

மதமில்லை

யாதும் ஊரே

என்கிறாய்

புல் பூண்டு அது கூட

உன் சொந்தம்

என்கின்றாய்

காற்றோடு விளையாட

ஊஞ்சல் எங்கே செய்கிறாய்

கடன் வாங்கிச் சிரிக்கின்ற

மானுட நெஞ்சைக்

கொய்கின்றாய்

உயிரே…..

எந்தன் செல்வமே

உன் போல் உள்ளம் வேண்டுமே

உலகம் அழிந்தே போனாலும்

உன்னைக் காக்கத் தோன்றுமே

செல்லும் செல்லும் செல்லும் செல்லும்

எல்லைகள் இல்லை

செல்லும்

செல்லும் செல்லும் செல்லும் செல்லும்

என்னையும் ஏந்திச் செல்லும்

கானா பிரபா

01.12.2018

வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் ?????

இதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை “மடத்துவாசல் பிள்ளையாரடி” என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு பதின்மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து பதினான்காவது ஆண்டில் காலடி வைக்கிறேன்.

பால்ய காலத்து ஈழத்து வாழ்வியலில் இருந்து எழுத்தாளர்கள் தாம் ஆதர்ச நாயகர்களாக அடையாளப்பட்டார்கள். தேடித் தேடி வாசிப்பதோடு நின்று விடாது எழுதி அதைப் பதிப்பிக்கவும் வேண்டுமென்ற வேட்கையில் அப்போது நானும் பள்ளிப் பிராயத்தில் இருந்தே எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன்.

ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளோசு உதயன் பத்திரிகை அப்போது கொண்டு வந்திருந்த அருச்சுனா என்ற சிறுவர் சஞ்சிகையில் கதைப் போட்டியில் சிறப்புப் பரிசு வாங்கியிருக்கிறேன். அப்போது வே.வரதசுந்தரம் அருச்சுனா இதழின் ஆசிரியராக இருந்தார். என்னுடைய முதல் சிறுவர் நாவல் “ஆனந்தன்” ஐ அருச்சுனாவின் தொடராகக் கொண்டு வர இருந்த சமயம் உதயன் பத்திரிகைக் காரியாலயம் மீது விமானக் குண்டு வீச்சு பாய்ச்சப்பட்ட போது அருச்சுனாவின் ஓட்டமும் நின்று போனது. அதோடு என் எழுத்துப் பயணமும் ஒரு தற்கால விடுமுறை எடுத்துக் கொண்டது. ஆனாலும் தேடித் தேடி வாசிப்பது மட்டும் ஓயவில்லை.

அவ்வப்போது அவுஸ்திரேலியாவில் வெளிவந்த ஈழமுரசு, உதயம் பத்திரிகைகளுக்கு எழுதி வந்தேன்.

இந்தச் சூழலில் வலைப்பதிவு (Blog) யுகம் என்னுள் தேங்கியிருந்த எழுதும் ஆர்வத்தை மடை திறப்புச் செய்தது. வலைப்பதிவு உலகின் சிறப்பு என்னவெனில் அது எழுதுபவரையும், வாசிப்பவரையும் மிக அணுக்கமாக வைத்துக் கொள்வது. நான் ஒன்றை எழுதப் போக அதை இன்னொரு கோணத்தில் பார்க்கும் வாசகனையும், இன்னும் தேடலும் பதித்தலும் நிறைந்த வாசகர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. இதனால் வலைப்பதிவு உலகம் வெறுமனே எழுத மட்டும் களத்தை வழங்காமல் கற்றுத் தேறிக் கொண்டே இருக்கவும் வழி ஏற்படுத்தியது.

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன்.

எப்பேர்ப்பட்ட வரம் இது.

இறந்த காலத்து மனிதர்களை; அந்தக் காலத்துச் சம்பவங்களை உயிர்ப்பித்து எழுதி வந்த பதிவுகளைப் படித்துத் தங்கள் காலத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அழுதும் உணர்வு வயப்பட்டும் எழுதிய தனி மடல்களும், பின்னூட்டல்களும் தான் என் எழுத்துக்கான இலக்கைத் தீர்மானித்திருக்கின்றன.

இன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர், கூகுள் ப்ளஸ் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு ஒத்தடமாக என் வலையுலக வாழ்க்கையே துணை நின்றிருக்கிறது.

ஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.

இதுவரை “கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி”, மற்றும் “பாலித் தீவு – இந்துத் தொன்மங்கள் ஆகிய நூல்களை என் வலைப்பதிவு அனுபவ வெளிப்பாடுகளாய்ப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறேன். கூடவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் என் ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல் குறித்த நூலான “அது எங்கட காலம்” நூலை, தாயகத்தில் என் பிறந்த மண்ணில் அங்கு கூடி வாழ்ந்த மனிதர்களோடு வெளியிட்டேன். இந்த நூலில் இடம்பெற்ற சம்பவங்கள், களம் , சக மனிதர்கள் இவற்றோடு அந்த நூலை வெளியிட்டது ஒரு புதிய அனுபவம். வலைப்பதிவு உலகத்துக்கு எழுத ஆரம்பித்த போது இம்மாதிரியான வாய்ப்பெல்லாம் கிட்டுமா என்றெல்லாம் நினைத்தே பார்த்ததில்லை நான்.

தமிழ்ச் சூழலில் இயங்கும், இயங்கிய கலைஞர்கள், படைப்பாளிகளோடு நான் கண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலையும் வெளியிட உள்ளேன்.

எனக்குக் கிடைத்த இந்த வலையுலகச் சூழலைப் பயன்படுத்தி என் மனவெளிப்பாடுகளைக் காட்டும் களமாகத் தொடர்ந்தும் பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில் ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக

மடத்துவாசல் பிள்ளையாரடி

http://kanapraba.blogspot.com/

அல்லது

www.madathuvaasal.com

என்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக

றேடியோஸ்பதி

http://www.radiospathy.com/

எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக

உலாத்தல்

http://ulaathal.com

இவை தவிர

காணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர

வீடியோஸ்பதி

http://videospathy.blogspot.com.au/

ஈழத்து முற்றம்

http://eelamlife.blogspot.com.au/

என்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,

நான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர

கங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்

http://eelamlife.blogspot.com.au/

அருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி http://isaiarasi.blogspot.com/

என்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவிலுமாக இயங்கியிருந்தேன்.

ஒருகாலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சூடகங்களுக்கு எழுதி அனுப்பி அவை வருமா வராதா என்ற காலம் எல்லாம் மாதக்கணக்கில் இருந்தன. ஆனால் இந்த இணையப்புரட்சியின் மூலம் குறிப்பாக வலைப்பதிவுகளின் வருகை மூலம் ஒவ்வொருவரும் தம்முள் புதைந்த அனுபவங்களை நொடியில் கொட்டித் தீர்க்கும் காலமாகி விட்டது. முன்னணிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை இன்று வலையுலகைக் கண்காணித்து அவற்றில் இருந்து நல்ல பல ஆக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் போடும் சூழலுக்கு மாறிவிட்டது. அந்த வகையில் வீரகேசரி, தினக்குரல், இருக்கிறம், சுடரொளி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும், விக்கிபீடியா, ஆனந்த விகடன், நக்கீரன் இணையம், அம்ருதா, காக்கைச் சிறகினிலே, தமிழ் இந்து போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள், தென்றல், தமிழ் அவுஸ்திரேலியன் இன்னும் பிற “அனுமதி பெறாது பிரசுரிக்கும்” புலம்பெயர் சஞ்சிகைகள் மூலம் என் பதிவுகள், ட்விட்டுக்கள் இடம்பெற்று வருவது ஆத்ம திருப்தியான விடயமாக நினைத்துக் கொள்கிறேன்.

இதே வேளை என்னிடம் அனுமதி பெறாமல் என் ஆக்கங்களைப் பிரசுரித்த இணையத்தளங்கள், அச்சு ஊடக சஞ்சிகைகள், பத்திரிகைகள் இந்தச் செய்தியைப் படிக்கும் போது இனியாவது அனுமதி பெற்றுப் பிரசுரிக்கும் எழுத்துலக அடிப்படைத் தார்மிகத்தைப் பேண அன்புடன் வேண்டுகிறேன்.

தொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.

நேசம் கலந்த நட்புடன்

கானா பிரபா

05.12.2018

சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை

வீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று மண்ணில் விழும். இரண்டு விரல்களை வளையமாக்கி அதில் வைத்து ஊதி ஊதி மண்ணைத் துரத்தி விட்டு வேப்பம் பழத்தின் கசப்பைச் சுவை பார்த்திருக்கிறேன். காய்ந்து உலர்ந்து போன வேப்பங்கொட்டைகளைக் குவித்து வைத்து அவற்றை இரவில் ஒரு சட்டி தணலில் போட்டு எரிக்கும் போது வெளிப்படும் புகை மண்டலம் வீட்டுக்குள் அழையா விருந்தாளிகளாக வரும் நுளம்புக் கூட்டத்தை (கொசு) விரட்டியடிக்கும்.

 
இந்த வேப்பம் கொட்டைகளுக்கு இன்னொரு பயன் இருப்பதை அப்போது நான் அறிந்து கொண்டது நம்மூர்த் திருவிழாக்களில் தான். மருதடிப் பிள்ளையார் கோயிலிலும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலும் திருவிழா நாட்களில் “மில்க்வைற்” நிறுவனம் கடை பரப்பியிருந்தது. அப்போது ஒரு அறிவிப்பை அச்சிட்டுப் பகிர்ந்தார்கள். ஒரு கிலோ வேப்பம் கொட்டை கொடுத்தால் ஒரு மில்க்வைற் தொப்பி கிடைக்கும் என்பது தான்.
விடுவேனா நான். வாசுகி திருவள்ளுவருக்குக்கு நிலத்தில் விழுந்த சோற்றுப் பருக்கைகளை ஊசியால் ஒற்றி எடுத்துக் கொடுத்தது போல வீட்டு முற்றமெல்லாம் தேடித் தேடி வேப்பங்கொட்டை பொறுக்கினாலும் அந்த மருதடிப் பிள்ளையார் கோயில் தேர்த் திருவிழாவுக்கு மில்க்வைற் இடம் தொப்பி வாங்க ஒரு கிலோ தேறவில்லை. என்னுடைய திடீர் ஆர்வக் கோளாறைப் பார்த்து விட்டு அம்மம்மாவும் அயலட்டையில் பொறுக்கிக் கொஞ்சம் தந்தார். ஏறக்குறைய ஒரு கிலோ தேறிய அந்த வேப்பங்கொட்டைச் சரையைச் சைக்கிள் கரியரில் கிடத்தி வைத்து, மருதடிப் பிள்ளையார் கோயிலில் கடை விரித்திருந்த மில்க்வைற் நிறுவனத்தின் தற்காலிக விற்பனை மேம்படுத்தல் கூடத்தில் கொண்டு போய்க் கொடுத்தேன். நிறுத்துப் பார்த்தார்கள்.
“ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் குறையுது ஆனாலும் பறவாயில்லை தம்பிக்கு ஒரு தொப்பி குடுங்கோ” என்று முகப்பில் நின்ற ஒருத்தர் கட்டளையிட ஒரு வெள்ளைத் தொப்பி எனக்குப் பரிசாகக் கிடைத்தது.
 
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சுதேச உற்பத்திகள் செழிப்போட்டு இருந்த நேரம் “மில்க்வைற் தொழிலகம்” தம் பங்குக்கு சோப் உற்பத்தியில் பெரும் தொழிற் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. குளிக்க, உடுப்பு தோய்க்க என்று வித விதமான சவர்க்காரங்கள். நம்மூரில் சோப் ஐ சவுக்காரம் (சவர்க்காரம்) என்போம். என்னைப் போலவே பலரும் சேமித்துக் கொடுத்த வேப்பங் கொட்டைகளைச் சுத்தம் செய்து நுளம்பை விரட்ட மில்க்வைற் வேப்பங்கொட்டைகள் என்றும், அந்த வேப்பங்கொட்டைகளை மூலப் பொருளாக உபயோகித்து “நீம் சோப்” என்றும், வேப்பெண்ணெய் என்றும், “நீமியா” உரம் என்றும் மில்க்வைற் ஸ்தாபனத்தார் உற்பத்திகளை விரித்திருந்தனர்.
 
என்னதான் நம்மூர் உற்பத்தி என்றாலும் நம்மூர் தானே என்ற ஏளனத்தால் மில்க்வைற் பொருட்களை பணக்கார வர்க்கம் அதிகம் சீண்டாது. ஆனாலும் என்ன மில்க்வைற் சோப் ஏழைகளின் தோழனாகவும், மத்திய வர்க்கத்தின் காவலனாகவும் அப்போது விளங்கியது. என்னுடைய அம்மம்மாவுக்கு மில்க்வைற்றின் நீம் சோப் போட்டுக் குளித்தால் தான் பொச்சம் தீரும். லைஃப் போய் சோப்புக்கு நிகரான சுகம் அவருக்கு. நீம் சோப்பைப் போட்டு விட்டு குளித்து விட்டு கமுக மரத்தில் முதுகைத் தேய்த்து விடுவார். அவரளவில் அவருக்குக் கிட்டும் மசாஜ் அது.
 
“அழகு ராணிகளின் சோப்” என்று ஶ்ரீதேவி, பூனம் தில்லான் போன்ற அழகிகளின் முகம் போட்டு வெளி வந்த லக்ஸ் சோப், ராணி சோப் இவற்றில் தான் பணத்தில் குளிப்போருக்கு மோகம் அதிகம். உடுப்புத் தோய்க்க இருக்கவே இருக்கு சன் லைற் சவுக்காரம். அந்தக் காலத்தில் எங்கள் உறவினர் பெரும் வர்த்தகராக இருந்த காலத்தில் இந்த சோப் நிறுவனங்களின் விளம்பரச் சுவரொட்டிகள் வழு வழுப்பான காகிதங்களில் கிடைக்கும். ஒரு சுவரொட்டியை வைத்து மூன்று அப்பியாசக் கொப்பிகளுக்கும், பாட விளக்கக் குறிப்புகளுக்கும் (கோனார் நோட்ஸ்) உறை போடலாம்.
 
அப்போது அந்தச் சவர்க்கார உறைகளின் உட்புறம் போட்டிகள் எல்லாம் அச்சிடப்பட்டிருக்கும். தங்க நாணயம் கிடைக்கும், கார் கிடைக்கும் என்றெல்லாம் அந்தப் போட்டியில் சோப் கம்பனிக்காரர் ஆசை காட்டுவார்கள். ஆனால் போட்டியில் பரிசு விழுவது என்னவோ அம்பாந்தோட்டை பியதாசாவுக்கோ அல்லது அனுரதபுரம் குசுமாவதிக்கோ தான். இங்கேயும் கை கொடுப்பது மில்க்வைற் தான். பத்து நீம் சோப் உறைகளை அனுப்பி ஒரு திருக்குறள் புத்தகத்தை வெல்லுங்கள், ஒரு தேகப்பியாசப் புத்தகத்தை வெல்லுங்கள். “பனையை வளர்ப்போம் பயனைப் பெறுவோம்” என்றெல்லாம் சவர்க்கார உறைகளில் அச்சிட்டு மில்க்வைற் காறர் உள்ளூர் மக்களைக் கவர்ந்திழுப்பார்கள். அம்மம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி நீம் சோப் உறையைப் பிரித்து எடுத்து விட்டு ஒரு சோப்பு டப்பாவில் அந்தச் சோப்பைப் போட்டுக் கொடுத்து விட்டு “நீம் சோப்” உறைகளை மில்க்வைற் நிறுவனத்துக்குத் தபால் மூலம் அனுப்பி புத்தகங்களை வாங்குவோம்.
 
அரிவரியில் ஆனா ஆவன்னா எழுதிப் பழகப் பனையோலையில் அரிச்சுவடி செய்து பள்ளிக்கூடங்களுக்கும், கோயில்களுக்கும் அனுப்புவதில் இருந்து ஆத்திசூடி நீதி நூல் வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை அச்சிட்டு விநியோகிப்பது, “மில்க்வைற் செய்தி” என்ற சமூக, சமய, அறிவியல் சார்ந்த பத்திரிகையை வெளியிடுவது என்று மில்க்வைற் கனகராசா அவர்களின் பணி விரிந்தது அதனால் அவருக்குச் சிவ தர்ம வள்ளல் என்ற பட்டமும் கிட்டியது. அவருக்கு உறுதுணையாக எழுத்து முயற்சிகளுக்குப் பொறுப்பாக அறிஞர் க.சி.குலரத்தினம் விளங்கினார். (மில்க்வைற் நிறுவனம் பற்றி நீண்ட விரிவான கட்டுரை எழுத வேண்டும் அதைப் பின்னர் தருகிறேன் இப்போது சோப்புடன் மட்டும் ஒட்டிக் கொள்கிறேன்)
 
இது இவ்வாறிருக்க இரண்டாம் கட்ட ஈழப் போர் கனத்த போது இலங்கை அரசின் பொருளாதாரத் தடை தமிழர் பிரதேசங்களுக்கு அமுலாகியது தொண்ணூறுகளின் முற்பகுதியில். பெற்றோல், டீசல் உட்பட ஐம்பத்துச் சொச்சம் பொருட்களைப் பட்டியலிட்டு இவை பயங்கரவாத நடவடிக்கையை முன்னிட்டுத் தடை செய்யப்படுகின்றன என்று
இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
 
ஒரே இரவில் தானும் பயங்கரவாதி ஆக்கப்படுவேன் என்று ராணி சந்தன சோப்போ ஶ்ரீதேவி படம் போட்ட லக்ஸ் சோப்போ நினைத்திருக்கவில்லை அதே சமயம்,மில்க்வைற் நிறுவனம் ஒரே இரவில் யாழ்ப்பாணம் பூராக சூப்பர் ஸ்டாராக மாறியது.
அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சோப் என்ற சவர்க்காரம் இல்லை. எனவே கடைகளில் மெல்ல மெல்ல குளிக்கும் சோப் இருப்புத் தீர்ந்து போகவும், உடுப்புத் தோய்க்கும் சன் லைட் சோப்புக்கோ அல்லது நோயாளிகளுக்கு என்று முத்திரை குத்தியிருந்த லைஃப் போய் சோப்புக்கும் மாறினோம். சோப்பைச் சின்னச் சின்னத் துண்டாக்கிப் பாவிப்பது, துணியில் சுருட்டிப் பாவிப்பது என்று சிக்கன நடவடிக்கைகள் அரங்கேறின. கொஞ்ச நாளில் இருப்பில் இருந்த எல்லா சோப்பும் கடைகளில் காலியாகின.
 
கையிருப்பில் இருந்த பகட்டான சவுக்காரங்கள் தீர்ந்து போக, தாய் வீடு தேடி வரும் மகள் போல எல்லாரும் மில்க்வைற் சோப் நோக்கி ஓடினோம். மில்க்வைற்றின் ஆயுட்கால நீம் சோம் வாடிக்கையாளர் எங்கட அம்மம்மா கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டிருந்திருப்பா அப்போது.
மில்க்வைற் சோப் விலை மலிவு என்றாலும் வேகமாகக் கரையக் கூடியது. வாசனை திறம் என்றோ திறமற்றதன்றோ என்று இல்லாத ஒரு மோன நிலையில் இருக்கும். என்னதான் உள்ளூர் உற்பத்தியாக இருந்தாலும் சோப் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களுக்குத் தென்னிலங்கையையே தங்கியிருக்க வேண்டிய சூழல் நிலவியதால்
மில்க்வைற் தொழிற்சாலையும் மெல்ல முடங்கிப் போக, இப்போது மில்க்வைற் சோப்பும் இல்லாத மாதங்களாக நீண்டன.
 
சீயாக்காய் (சிகைக்காய்) அரப்பு அரைச்சுத் தலையில குளிச்சால் தான் பொச்சம் தீரும் என்ற கொள்கையோடு வாழும் என் அம்மாவுக்கு ஷாம்பூ இல்லாதது கூடப் பொருட்டில்லை.
“தம்பி! நீங்கள் அந்த நீட்டுத் தலை முடி ரீச்சரின்ர மேன் எல்லோ” என்று மற்றவர்கள் கேட்கும்
அளவுக்கு முடி வளர்த்தி கொண்ட என் அம்மாவும் சீயாக்காய் தான் தன் முடி வளர்த்தியைத் தீர்மானிப்பதாக நம்புவார். ஆனால் சோப்புத் தட்டுப்பாடு பொதுப் பிரச்சனை ஆகி விட்டதே இப்போது.
 
இனி சோப்புக்கு மாற்று வழியைத் தேடினோம். எஞ்சியிருந்த சோப்புத் துண்டுகளைச் சேகரிக்கும் படலம் ஆரம்பமாகியது. சுரக்காயைக் காய வைத்து அதன் உள் எலும்புக் கூட்டை எடுத்தால் ஸ்பொன்ச் மாதிரி இருக்கும். அதற்குள் சோப்புத் தண்ணியைக் கரைத்து ஊற்றி வெது வெதுவாக்கி குளிக்கும் போது சோப்புப் போடுவது போலப் போட்டுத் தேய்த்துக் குளிப்போம்.
பனம் பழச் சாற்றை எடுத்து விட்டு முடியால் சூழப்பட்ட கிழவன் போன இருக்கும் அந்தப் பனங்கொட்டையைத் தேய்த்துக் குளிப்போரும் உண்டு.பனஞ்சாற்றை எடுத்து உடுப்புத் தோய்ப்போம். பூ, செவ்வரத்தம் இலையை ஊறப்போட்டு அது நொய்ந்து ஒரு நெகிழ் கலவையாக வந்த பின்னர் அதைப் போட்டு உரஞ்சிக் குளிப்போரும் உண்டு.
 
அந்த நாளில் பெரும்பாலும் துலாக் கிணறுகள் தான் மிஞ்சி மிஞ்சிப் போனால் கப்பி வளையம் போட்டவை. எல்லாக் கிணறுகளுக்கும் பக்கத்தில் சலவைக் கல் இருக்கும். உடுப்புத் தோய்ப்பதோடு காலில் படர்ந்திருக்கும் பித்த வெடிப்புகளை உரஞ்சித் தேய்க்கவும் இந்த சலவைக்கற்கள் அரும்பணியாற்றின. இந்த சலவைக் கற்களில் ஒட்டியிருந்த சோப்புத் துகள்கள் தான் எங்கள் உடுப்புத் தோய்க்கப் பயன்பட்டன. மின்சாரம் இல்லாத சூழலில் அயர்ன் பண்ணவும் வழியில்லாமல் உடுப்புகளை பெரிய புத்தக அடுக்குகளுக்குக் கீழ் நெரித்து வைத்து மடிப்பு வைப்போம்.
ஒன்றல்ல இரண்டல்ல மாதக் கணக்காக, வருடக் கணக்காக இந்த சோப்பு இல்லாப் போராட்டம் நிகழ்ந்தது.
 
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் கொழும்பில் இருந்து வரும் லக்ஸ், ரெக்ஸோனா சோப் வகைகள் தமிழகத்துக்கு வள்ளம் வழியாக நாடு கடத்தப்படும். இங்கிருந்து வள்ளத்தில் போவோர் வெள்ளிக்கிழமை தூத்துக்குடி, இராமேஸ்வரத்தில் இறங்கிப் புதுப் படம் பார்த்து விட்டு அங்கிருந்து பட்டு உற்பத்திப் பொருட்களோடு ஈழத் தமிழகம் வந்து சேருவர். இந்த நிலை தொண்ணூறுகளில் மாறியது. தமிழகத்தில் இருந்து மைசூர் சந்தன சோப் கடத்தப்பட்டுக் கொள்ளை விலையில் விற்ற காலமும் உண்டு. அந்த நேரம் யாழ்ப்பாணத்தில் CIMA கற்கை நெறி ஆரம்பித்திருந்தது. அந்த வகுப்பில் என்னோடு படித்தவர் எங்களை விடப் பல வயது மூத்தவர். எங்கட செற்றில் இருந்து பம்பலடிச்சுக் கொண்டு கொட்டம் போட்டுக் கொண்டிருப்பார்.
“அண்ணை என்ன தொழில் செய்யுறீங்கள்?” என்று கேட்டால் “ஸ்மக்ளிங்” என்று சிரிப்போடு சொல்லுவார். அவர் இப்போது எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை.
 
மில்க்வைற் கனகராசா எங்கள் அம்மாவின் சிறிய தந்தையோடும், அயலவர் அண்ணா கோப்பி நடராசா மாமாவுடனும் நட்புடன் இருந்தவர். நான் அவுஸ்திரேலிய வதிவிட உரிமை பெறுவதற்கான நற்சான்றிதழ் கடிதத்தை 1995 இடப்பெயர்வுச் சூழலிலும் அனுப்பி வைத்தவர்.
ஆனால் இந்தப் போர் எல்லாரையும் மாற்றி உருக்குலைத்து விட்டது. தொழிலில் முடங்கியிருந்தாலும் மில்க்வைற் தொழிலகத்தில் வேலை செய்தோருக்குத் தொடர்ந்து பணம் கொடுத்து நொடித்து விட்டார். கனகராசா அவர்கள் இறந்து 19 வருடங்கள் கழித்து அவரோடு இறுதிக் காலத்தில் உறுதுணையாக இருந்த நலன் விரும்பியிடம் மில்க்வைற் கனகராசா பற்றிய பேச்சு வந்தது.
“பாவம் தம்பி கடைசிக் காலத்தில அவர் பெரியாஸ்பத்திரியில் படுக்கையில கிடக்கேக்க அவர் உதவி செய்த யாருமே வந்து அவரைப் பார்க்கேல்லை. அவர் பெரியாஸ்பத்திரியில் இருக்கிறார் என்று உதயன் பேப்பரில போட்டும் இரண்டு பேர் தான் வந்தவை. ஒரு ஆள் வாய் பேச முடியாத வாகனச் சாரதி”என்று பெருமூச்சோடு சொன்னவர்
“அதையும் தாங்கலாம் ஆனால் இவ்வளவு செழிப்பால வாழ்ந்த மனுசன் ஒரு நாள் வைத்தியசாலைப் படுக்கையில் இருந்து கொண்டு “தம்பி! ஒரு பத்தாயிரம் ரூபா கைமாத்தா யாரிடமாவது வாங்கித் தாங்கோ” எண்டதைத் தான் பொறுக்க முடியாது”
என்றார்.
 
மில்க்வைற் தொழிலகம் இருந்த சுவடு இப்போது இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னர் அந்தத் தொழிலகம் இருந்த காணியின் முகப்பில் இருந்த “மில்க்வைற் தொழிற்சாலை” என்ற புகைப்படத்தை மட்டும் என் சேமிப்பில் எடுத்து வைத்திருக்கிறேன்.
 
கானா பிரபா
22.11.2018
 
மில்க்வைற் செய்தி நூலகத் தளத்தின் களஞ்சியத்தில்
இங்கே படிக்கலாம்
 
http://www.noolaham.org/wiki/index.php?search=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B1%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3ASearch&profile=default&fulltext=1

நிறைவு ? (சிறுகதை)

மடிக்கணினியை வெறித்துப் பார்த்துக் கொண்டே எவ்வளவு நேரம் இருப்பது….
கண் பூசலாடுவது போல இருக்கிறது, மேலதிகாரி தந்த
கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சொல்லியிருப்பது ஒன்று தானே?

“இன்றுடன் உங்கள் பணி இடை நிறுத்தப்படுகிறது.
இந்த முடிவு உங்களின் தனிப்பட்ட திறமையை முன் வைத்து எடுக்கப்பட்டதன்று. நிறுவனத்தின் நிர்வாக மாறுதலுக்கு ஏற்பவே நாம் பணிக்குறைப்பு செய்ய வேண்டியுள்ளது. இதுவரை காலமும் எங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி.”

எட்டு வருடமாக வேலை பார்த்த நிறுவனம் இன்று ஒற்றை வார்த்தையோடு வழியனுப்புகிறது. இன்னும் இரண்டு வருடங்கள் இழுத்திருந்தால் நீண்ட காலப் பணிக்கான படியளிப்பும் கிட்டிருக்கும். திடீரென்று இப்படியொரு கடிதத்தை எதிர்பார்த்த அதிர்ச்சி ஒரு பக்கமிருக்க இன்னொரு பக்கம் கோபம் கோபமாக வந்தது.

“ கிரி! முக்கியமான ஒரு நிறுவனத்தோடு செய்ய வேண்டிய உடன்படிக்கைக்காக Slide Pack செய்ய வேண்டும் வார இறுதியில் செய்து முடிக்க வேண்டும் நீங்கள்”
வெள்ளிக்கிழமை பின்னேரம் தான் மேலதிகாரி வந்து சொல்கிறார். சனிக்கிழமை மகனின் நான்காவது பிறந்த நாளுக்குப் போட்ட திட்டமெல்லாத்தையும் மூட்டை கட்டி விட்டு PowerPoint slides உடன் மல்லுக் கட்டி வேலையை முடிச்ச திருப்தியோடு வந்தால் இப்படிக் கடைசி நேரத்திலும் வேலை வாங்கி விட்டுக் கழுத்தறுத்திட்டாங்களே என்ற ஆத்திரம் தான் உள்ளூரக் குமுறிக் கொண்டிருந்தது.
“திங்கட்கிழமை என் வேலை பறி போகும் என்று மேலதிகாரிக்கு வெள்ளியே தெரிந்திருக்குமே?
படு சுயநலவாதி இவன்” என்று திட்டிக் கொண்டிருந்தது மனம்.

கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று விட்டு உணவு அருந்தும் பகுதிக்கு வந்தால் வழி நெடுகக் கடக்கும் சக மனிதர்கள் அனுதாபப் பார்வையோடு கடக்கிறார்கள். சிலர் வலிந்த சிரிப்பை மட்டும் போட்டு விட்டு நகர்கிறார்கள்.
“ஹும் எனக்கு வேலை போனது என்னை விட எல்லோருக்குமே முதலிலேயே தெரிந்து விட்டது போல” இப்போது விரக்தியான சிரிப்புத் தான் வந்தது.

கை கழுவும் இடத்தின் ஓரத்தில் நீர்த்தாங்கி, சூழவும் கோப்பி மக்கிப் போன கோப்பைகள், அரைகுறைச் சாப்பாட்டுடன் அப்படியே போட்ட தட்டுகள் என்று நிறைந்திருந்தது. இம்மாதிரியான பொறுப்பற்ற வேலைகளைச் செய்பவர்களை எட்டு வருடமாகப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். கையெட்டும் தூரத்தில் இருக்கும் கோப்பை கழுவும் இயந்திரத்தில் தாம் குடித்த, சாப்பிட்ட பாத்திரங்களைப் போடுவதற்குக் கூட சோம்பேறித்தனத்தை வைத்திருப்பவர்களா இந்தப் பெரிய நிறுவனத்தைப் பொறுப்போடு கட்டியெழுப்பப் போகிறார்கள்? என்று ஒவ்வொரு தடவையும் இவற்றைக் காணும் போது முணுமுணுத்தாலும் பின்னர் சேர்ட்டின் கையை முழங்கை வரை இழுத்து விட்டு ஒவ்வொன்றாக எடுத்து அந்தக் கோப்பை கழுவும் இயந்திரத்தின் வயிற்றில் செருகி விட்டு, சோப்புத் தூளைப் போட்டு இயங்க வைத்து விட்டுத்தான் நகர்வான். இன்றும் அப்படியே. இயந்திரத்தை இயக்கி விட்டுத் திரும்பினால் துப்பரவுப் பணியாளர் பின்னுக்கு நின்று நன்றிப் புன்னகையை உதிர்க்கிறார்.

தண்ணீர் குவளையில் இருந்து மடக்கு மடக்கென்று குடித்து விட்டு மீண்டும் அந்தக் கடிதத்தை இன்னொரு தடவை பாடமாக்குமாற் போலப் படித்துக் கொண்டே கடைக் கண்ணால் தன் சக பணியாளர்களைப் பார்த்தால் தங்களுக்குள் குசுகுசுப்பது தெரிகிறது.
ஒவ்வொரு நாளும் சிரித்துப் பேசி மகிழும் இவர்களுக்கு இன்று நான் அந்நியன்.

“வார இறுதியில் நானே செய்தேன்
எப்பிடி இருக்கிறது?”
என்று பெருமைபடச் சொல்லிக் கொண்டு திங்கட்கிழமைகளில் கேக், இனிப்பு வகைகளை நீட்டும் நிக்கோலா இன்று இந்தப் பக்கமே வரவில்லை.

கிறிக்கெற், சினிமா என்று குட்டி அரட்டை போடும் மார்ட்டினும் தன் இருக்கைக்குள் ஒடுங்கிப் போய் விட்டான்.

“கோப்பி அருந்தப் போகலாமா?” என்று பத்து மணிக்கு மணியடிக்கும் மைக்கேலும் தனியாகப் போய் விட்டு வந்து விட்டான்.

என்னைத் தொந்தரவு படுத்தக் கூடாது என்றா?
அல்லது என்னுடன் பேசினால் தங்களின் வேலையும் பறி போய்விடும் என்ற சுயநலமா?

Messenger இல் கூட வந்து ஏன் எப்படி என்று சுகம் விசாரிக்கப் பயம் போல அவர்களுக்கு, எங்கே அதைக் கூட கொம்பனிக்காறன் கண்டு பிடித்து விசாரிப்பானோ இதென்ன கொலைக் குற்றமா செய்து விட்டேன்?

இன்றும் இன்னுமொரு காலை என்று நினைத்து வந்தவனுக்குக் காலையிலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டு விட்டது.

சாப்பிடப் போகவும் மனமில்லை. மின்னஞ்சல் பெட்டியில் அதுவரை தேங்கியிருந்த அஞ்சல்களில் ஏதும் முக்கியமான ஆவணங்கள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தால்….
முன்னால் நிற்கிறார் மேலதிகாரி, பக்கத்தில் மனித வளப் பிரிவில் இருந்து குட்டைப் பாவாடைப் பெண்ணொருத்தி.

“நல்லது கிரி, நாங்கள் உங்களிடமிருக்கும் எங்கள் நிறுவனத்தின் உடமைகளைச் சரி பார்க்கப் போகிறோம்” என்று விட்டுக் கையில் இருந்த துண்டுச் சீட்டில் கணிணிப் பிரிவுக்காறர் எழுதிக் கொடுத்த சொத்து விபரத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

கொழும்பிலிருந்து வட பகுதி போகும் போது ஓமந்தை இராணுவச் சாவடியில் வைத்து சூட்கேசில் ஆசையாக அடுக்கிக் கொண்டு போன உடு பிடவைகளைக் கலைத்து போட்டுச் சோதிப்பது போன்றதொரு நிலை.

“ஒரு ஐந்து நிமிடம் தருகிறீர்களா என்னுடைய குழந்தையின் படங்கள் நிறைய இந்த laptop இல் இருக்கு எடுத்து விட்டுத் தருகிறேன்?”

“மன்னிக்கவும் அதற்கு நீங்கள் IT Security இல் முன்னமே விண்ணப்பித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் இப்போது நேரம் கடந்து விட்டதே?” மனத வளப் பிரிவுப் பெண்மணியின் வாய் மட்டும் உணர்ச்சியில்லாமல் அசைகிறது.

“சரி நல்லது”

மேசையின் லாச்சிகளைத் திறந்து அவற்றில் தேங்கியிருந்த கற்றைக் காகிதங்களைக் குப்பைக் கூடைக்குள் திணித்து விட்டு மேலதிகாரிக்கும் கைலாகு கொடுத்து விட்டு வெறும் மடிக்கணனிப் பையுடன் வெளியேறுகிறேன்.

இந்த அலுவலகத்தில் எத்தனை பேருக்குச் சீரும் சிறப்புமாகப் பிரியாவிடை செய்திருக்கிறேன், எத்தனை பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்குச் சொந்தக் காசைப் போட்டுக் கொண்டாடியிருக்கிறேன். இன்று ஏதோ அயல் நாட்டு உளவாளி போல ஒதுக்கப்பட்டுவிட்டேனே? மனம் இன்னும் வலித்தது.

அலுவலகத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் தேநீர்க் கடைக்குப் போவோம் என்று மனம் உந்தியது.
இனி எப்போது வேலை கிடைக்குமோ? கிடைக்கும் வேலையும் இந்தப் பக்கம் வருமோ? என்ற குழப்பங்களை ஒதுக்கி விட்டு வழக்கமாகச் செல்லும் தேநீர்க் கடையில் கொஞ்சம் இளைப்பாறத் தோன்றியது. அந்தக் கடை உரிமையாளர் அப்பாஸ் அறுபதைக் கடந்த ஒரு லெபனான் நாட்டவர். அந்தப் பரபரப்பான காலை வேளையிலும் ஐந்து நிமிடமாதல் என்னுடன் கதைத்து விட்டுத்தான் மறு வேலை என்ற அளவுக்குப் பழக்கம்.
தூரத்திலேயே கண்டு “கிரி” என்று ஆனந்தக் குரல் அது அப்பாஸ் தான்.

சனக் கூட்டம் அதிகமில்லை. ஓரமான இருக்கையில் அமர்ந்து விட்டு ஒரு கேக் துண்டுக்கும், கப்பச்சினோவுக்கும் Order கொடுத்து விட்டுத் திரும்பினால் அப்பாஸ் முன்னால். வழக்கம் போலக் குசலம் விசாரித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். விடை பெறும் போது வேலை போன கதையைச் சொல்லலாம் என்று மனம் ஆறுதல் படுத்தியது.

கேக் துண்டும் கப்பச்சினோவும் வந்து விட்டது. சரி இந்த எட்டு வருட காலப் பணி நிறைவை எனக்கு நானே பிரியாவிடை கொடுத்துக் கொண்டாடுவோம் உள்ளுக்குள் விரக்தியாகச் சொல்லிச் சிரித்துக் கொள்கிறேன்.

ஒரு விள்ளல் கேக் ஐக் கரண்டியால் கிள்ளி வாயில் போடும் போது
“ஆஹ்ஹ் ஊஊஊஊ” என்றொரு பெருங்குரல் கேட்டுத் திரும்பினால் என்னைப் போலவே வளர்ந்த வெள்ளையின வாலிபன் ஒருவன். அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள் பக்கத்தில் இருக்கும் ஒரு அழகான வெள்ளையினப் பெண்மணி.
பின்னர் சிறு துண்டு கேக் ஐ அவன் வாயில் ஊட்டி விட்டு வாயைத் துடைக்கிறாள். அவளைப் பார்த்து விநோதமாகச் சிரித்து விட்டு மீண்டும் பெருங்குரல் எடுத்துக் கத்துகிறான். மீண்டும் அவன் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்துகிறாள் அவள். அந்தச் செய்கையில் எந்தவிதமான அலுப்போ சலிப்போ இருப்பதாகத் தெரியவில்லை. தனக்காக order செய்த கோப்பியும், கேக்கும் காய்ந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு ஊட்டி விடுவதிலேயே மும்முரமாக இருக்கிறாள் அவள்.

தன்னுடைய தோள்ப்பட்டையில் அவனைச் சாய்த்து உச்சிமோந்து விடுகிறாள். அவன் குலுங்கிக் குலுங்கிஒ குழந்தை மாதிரிச் சிரிக்கிறான். இப்படியான குழந்தை ஆகிப் போன மனிதர்களைக் காண்பது முதல் தடவையல்ல. பிறக்கும் போதே அப்படியே பிறந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிலரோ கால ஓட்டத்தில் நிகழும் வாழ்க்கை மாற்றங்களால் மனச் சிதைவுக்கு ஆளானவர்கள். அவர்கள் குடும்பம், குழந்தை குட்டி என்று ஆனதுக்குப் பின் தான் இவ்விதம் மாறிப் போனவர்கள். Parramatta ரயில் நிலையத்தில் நின்று
தானே ஸ்டேசன் மாஸ்டர் போன்ற பாவனை பிடித்து
ஒவ்வொரு ரயிலையும் வழியனுப்பும் ஒரு வாட்டசாட்டமான சிங்களவரைக் கண்டிருக்கிறார்.
இவளுடைய இளமைக்கும், அழகுக்கும் இவள் நினைத்திருந்தால் இன்னொருவனிடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம். காலாகாலமாக எங்களவர்கள் தான் குடும்ப நெறியைப் பின்பற்றுகிறார்கள் என்ற பிம்பம் உடைவது இந்த மாதிரியான செய்கைகளைப் பார்க்கும் போது தான்.
எவ்வளவு வேலைக்களைப்போடு வீடு திரும்பினாலும் “அப்பா அப்பா” என்று சிரித்துக் கொண்டு ஓடி வந்து விளையாட்டுக் காட்டும் மகனும், “போய் றெஸ்ட் எடுங்கோ” என்று நிலைமையை உணர்ந்து ஆறுதல்படுத்தும் மனைவியும் மங்கலாகத் தெரிவது போல ஒரு பிரமை.
பாதி தின்ற கேக்கையும், கோப்பியையும் விட்டு விட்டு உடனேயே ஓடிப் போய் மனைவியையும், பிள்ளையையும் பார்க்க வேண்டும் என்று மனம் உந்துகிறது.
“அவர்களுக்கு என் கவலையைக் காட்டக் கூடாது, இந்த வேலை போனால் இன்னொரு வேலை” என்று சமாதானப்படுத்த வேண்டும் மனம் கங்கணம் கட்டிக் கொண்டது.
எழும்பி வந்து காசாளர் பக்கம் போனால்
“Hello Young man!”
அறுபது வயது அப்பாஸை அழைக்கிறது ஒரு குரல்.

திரும்பிப் பார்த்தால் எண்பதுகளின் விளிம்பில் நிற்கும் ஒரு பழுத்த மூதாட்டி, கூனிக்குறுகிய தன் உடலைப் புதைத்துக் கொண்டு சக்கர வண்டியில் இருந்து தானே உந்தித் தள்ளி இழுத்து இழுத்து வருகிறாள்.
அப்பாஸ் அவளை எதிர்பார்த்தது போல கன்னங்கள் உப்பி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்து வரவேற்கிறார்.

“I’m not ready to die”
“I’m not ready to die”
திரும்பத் திரும்ப மந்திரம் போலச் சொல்லிக் கொண்டே அந்தத் தேநீர்ச் சாலைக்குள் நுழைகிறாள் அந்த மூதாட்டி.
நெஞ்சத்தில் இருந்து ஏதோவொரு பந்து வெளியே கிளம்பிப் பாய்வது போல உணர்கிறேன் நான்.

கானா பிரபா
30.10.2018

இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்

சற்று முன்னர் இணுவையூர் திருச்செந்திநாதன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன்.

ஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்த ஆக்க இலக்கியக்காரர்களில் கே.எஸ்.ஆனந்தன் மற்றும் இணுவையூர் திருச்செந்திநாதன் ஆகியோர் எங்கள் மண்ணின் வாழ்வியலை அதே வாசனையோடு நாவல்களாகவும், சிறுகதைகளாகவும் தம் எழுத்தில் கொண்டு வந்தவர்கள்.

எண்பதுகளில் அம்புலிமாமா காலத்தில் இருந்து வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த போது செங்கை ஆழியானைத் தொடர்ந்து சிதம்பர திருச்செந்திநாதனின் எழுத்துகள் எனக்கு அறிமுகமான போது நிகழ்ந்த சம்பவமொன்று இன்றும் நினைவில் தங்கியிருக்கிறது. அப்போது ஈழநாடு வார மலரில் ஒரு தொடர் நாவலை அவர் எழுதிக் கொண்டிருந்தார்.

பத்திரிகையில் வந்த அவரின் பாஸ்போர்ட் சைஸ் படமொன்றைப் பார்த்து ஆளை அடையாளம் கண்டு கொண்டேன் எங்கள் இருவருக்கும் பொதுவான உறவினர் வீட்டுத் திருமணமொன்றில்.

“நீங்கள் தானே இணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன்” என்று தயங்கித் தயங்கிக் கேட்ட சிறு பையன் என்னைப் பார்த்து “ஓமோம்” என்று சிரித்துக் கொண்டே தலையாட்டியது இன்றும் நினைவில் இருக்கிறது. அப்போது அழகானதொரு வாலிபர் அவர். பின்பு அம்மாவிடம் இதை வந்து சொன்ன போது

“அவை எங்களுக்குச் சொந்தம் எல்லோ” என்று சொன்ன போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை.

வெளிச்சம் சஞ்சிகை உட்பட இவரின் எழுத்துகள் இடம்பிடித்த போது ஈழ தேச விடுதலையில் மிகுந்த தீவிரப் போக்கோடு இயங்கியவர். போர்க்காலத்தில் வன்னிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்தும் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். போர் முற்றிய காலத்தில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தவர் போர் முடிவுற்ற பின்னர் சமீப ஆண்டுகளில் “தளவாசல்” என்ற கலை இலக்கியக் காலாண்டிதழை வெளியிட்டு வந்தவர்.

இணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன் அவர்களுடைய ஆரம்பக காலத்து எழுத்துலக நட்பு அருண் விஜயராணி அக்கா என்னிடம் “பிரபா! திருசெந்தி நாதன் குறித்த சிறப்பு நூல் “பதிவும் பகிர்வும்” என்று வருகுதாம் ஏதாவது எழுதிப் பகிரக் கேட்டார் உங்களால் முடியுமோ?” என்று கேட்டார். அப்போது விஜயராணி அக்காவும் கடும் சுகயீனமுற்றிருந்த வேளை அது. நானும் அவரின் சிறுகதைகளை மீளப்படித்து ஒரு பகிர்வு எழுத ஆரம்பித்தாலும் குறித்த நேரத்தில் கொடுக்க முடியாத கவலை இருந்தது. விஜயராணி அக்காவும் அடுத்த சில மாதங்களில் இறந்தது பெருங்கவலை.

சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் தன்னுடைய அருமை மனைவியின் திடீர் இழப்பில் அவரை மையப்படுத்தி “மருத்துவர்களின் மரணம்” என்ற நூலை இறுதி எழுத்தாகக் கொண்டு வந்தவர் இன்று தன் மனைவியின் அடி தேடிப் போய் விட்டார்.

இவரைச் சந்தித்துப் பேச வேண்டும் இவரின் வாழ்வியல் அனுபவங்களை இவர் குரலில் பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது அந்த வாய்ப்பு நிரந்தரமாகக் கிட்டாத துயர் தான் என்னிடம் இப்போது.

உதயன் பத்திரிகைப் பகிர்வு

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த சிதம்பர திருச் செந்திநாதன் இன்று தனது 66 ஆவது வயதில் காலமானார்.

இவர் ஈழப்பத்திரிகைகளின் பிரபல எழுத்தாளராக நீண்டகாலம் கடமையாற்றியுள்ளார். இவர் ஈழத்தின் அவலங்கள் தொடர்பில் பல புத்தகங்களையும் எழுதி வெளியீட்டுள்ளார்.

இணுவில் கிழக்கைச் சேர்ந்த இவர் தம்மையா சிதம்பரநாதன் என்பவரின் மூத்த புதல்வராவார். இணுவில் சைவமகாஜன வித்தியாசாலையில் கற்கும் போதே எழுத்துலகில் பிரவேசித்தவர். நாளேடுகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதிப் பிரபலமடைந்தவர்.

யாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசங்களில் எழுத்தாளராக மிளிர்ந்த இவர், சிறுகதைகள் பலதையும் எழுதியுள்ளார். இவரது இலக்கிய ஆக்கங்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டமை சிறப்பு அம்சமாகும்.

ஈழத்து நூலகத்தில் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் குறித்த குறிப்பு மற்றும் நூல்கள்

சிதம்பர திருச்செந்திநாதன் யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஒரு வணிகவியல் பட்டதாரி. 1972 ஆம் ஆண்டிலிருந்து இவர் வீரகேசரி, ஈழநாதம், சுடர், சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதி வந்துள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது கதைகளை வீரகேசரியில் மாத்திரம் எழுதியுள்ளார். இவர் 1985களில் யாழ்ப்பாணக் கலாச்சாரக் குழு வெளியிட்ட எக்காளம் சஞ்சிகை, 1986 இல் வெளியான ஈழமுரசு வாரமலர், அமிர்தகங்கை போன்றவற்றில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

http://www.noolaham.org/wiki/index.php/பகுப்பு:சிதம்பர_திருச்செந்திநாதன்

கானா பிரபா

15.10.2018

பனைமரக்காடு ? திரைப்பார்வை

போருக்குப் பின்னான வாழ்வியலில் ஈழத்துச் சமூகம் முகம் கொடுக்கும் பண்பாட்டுச் சிக்கல்கள், பூர்வீக நிலங்கள் மீதான வாக்குறுதிகள், நம் தமிழரின் பிரதிநிதிகள் என்று சொல்லக் கூடிய அரசியல் தலைமைகளின் வெற்று வாக்குறுதிகள் இவற்றை மையப்படுத்தி எழுந்திருக்கும் திரைச் சித்திரமே “பனைமரக்காடு”

ஒரு சிறந்த படைப்பாளி எனப்படுவர் தன் படைப்புகளின் வழியாகச் சமகாலத்தைப் பேசக் கூடிய காலக் கண்ணாடியாகத் திகழ வேண்டும். அதன் வழியாகப் பெறப்படும் படைப்புகளே காலம் தாண்டிப் பேசப்படக் கூடியவைகளாக அமையும் என்ற வகையில் திரு கேசவராஜன் அவர்களின் இயக்கமென்பது போரியல் வாழ்வில் அவர் சந்தித்து எடுத்த படைப்புகளோடு இப்போது பனைமரக்காடு வெளிப்படுத்தியிருக்கும் கதைப் பின்புலமும் அவரின் வாழ்வியலோடு இணைந்து அவர் தம் படைப்புலகமும் இயங்கி வருவதை மீள நிறுவியிருக்கிறது.

திடீர் இடப் பெயர்வுகளில் வழியாக அப்பன், பாட்டன், முப்பாட்டன் வழி வழியாக வந்த நிலங்களை விட்டு நகரும் மக்கள் மீளவும் திரும்பி அந்த நிலங்களுக்கு உரித்தானவர்களாக நிலை நாட்ட எவ்வளவு தூரம் போராட வேண்டியிருக்கிறது, தம் மக்களுக்காக, தம் நாட்டுக்காகப் போராடி வதை முகாம்களில் இருந்து மீளும் போராளிகளின் இன்றைய நிலை என்ன? ஒரு கட்டுக் கோப்பாக நெறி முறையோடு வாழ்ந்த சமூகத்தில் புரையோடியிருக்கும் போதைப் பழக்கத்தால் எழும் சீர்கேடுகள் இவற்றையெல்லாம் விலாவாரியாகக் காட்சியமைப்புகளின் வழி நகர்த்தியிருக்கிறது பனைமரக்காடு. ஒரு முழு நீள சினிமாவாக அமைந்திருப்பதால் ஒரு குறிப்பிட்ட சிக்கலை மட்டும் மையப்படுத்தாது விரிவானதொரு பார்வையில் விரிகிறது இந்தப் படம்.

பனைமரக்காடு திரைப்படத்தின் அத்தனை கதை மாந்தர்களும் தம் பிரதேச வழக்கில் இருந்து வழுவாத மொழி பேசுவதால் அந்நியப்படாத நம் ஈழத்தமிழ் பேச்சு வழக்கு வெகு சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை வணிக நோக்கிலான சமரசத்துக்கு இடம் கொடுக்காததால் உரையாடல்களில் இருந்து பாடல்கள் வரை ஈழத்துத் திரை மொழிக்குண்டான பக்குவத்தோடு பயன்பட்டிருக்கின்றன. படத்தின் ஓட்டத்துக்கு ப்ரியனின் இசையமைப்பு பெரும் பலம். குறிப்பாக வஞ்சகர்களின் நகர்வுகளில் ஒலிக்கும் பின்னணி இசை படம் முடிந்த பின்னாலும் நினைவில் தங்கி ஒலியெழுப்புகிறது. படத்தின் இரண்டு பாடல்களையுமே நாம் எப்படி வாழ்ந்திருந்தோம், எதைத் தொலைத்தோம் என்ற ஏக்கம் தொனிக்கும் வரிகளாக ஷாலினி சார்ள்ஸ் கொடுத்திருக்கிறார். அவையும் தேவை கருதிய பட ஓட்டத்துக்கே துணை புரிந்திருக்கின்றன.

நம்முடைய தாயக மண்ணில் காலடி வைத்ததும், அங்கு மட்டுமே கேட்கக் கூடிய இயற்கைச் சூழல் ஒலிகள், பறவைகளின் ரீங்காரம் போன்றவற்றைக் கொண்டே பின்னணி இசையை நகர்த்தியிருப்பது படத்தின் யதார்த்தத்தை அழகுபடுத்துகிறது.

இந்தப் படம் தயாரிக்க இரண்டு கோடி வரை போயிருக்குமே? என்னு சிங்கள இயக்குநர்கள் கேட்ட போது அதில் கால்வாசி கூட வராது என்று தான் பதிலுக்குச் சொன்னதாக பேட்டியில் நினைபடுத்திப் பேசியிருந்தார் இயக்குநர் கேசவராஜன். படத்தைப் பார்க்கும் போது அவ்வாறானதொரு பிரமிப்பு எழாமலில்லை. குறிப்பாக போர் மூண்ட சூழலில் எழும் வெடி குண்டுக் கணைகளின் காட்சி அமைப்புகள் உள்ளிட்ட சிறப்பு ஒளி வெளிப்பாடுகள். இங்கே துஷிகரனின் பங்கையும் மெச்ச வேண்டும்.

பனைமரக்காடு படத்தில் யாரை உயர்த்திச் சொல்வது? யாரை விலக்குவது?

மண்ணின் மூத்த மைந்தனாக வைராக்கியத்தோடு தன் நிலத்தில் இருந்து எழும்பாத மாமனிதர் அரசு தொடங்கி, சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இயலாமையால் குமுறும் நாயகன், கழுகுகளின் கண்களில் இருந்து தப்பி வாழ எத்தனிக்கும் நாயகி, வரட்டுக் கெளரவத்துக்காகத் தன் சொந்தத்தைத் தொலைத்துப் பின் தன் பூர்வீக மண்ணுக்காகப் போராடும் நாயகியின் தந்தை யூல்ஸ் கொலின், நிகழ்கால அரசியல்வாதிகளையும் அவர்களின் அடிப்பொடிகளையும் ஞாபகப்படுத்தும் வில்லன்கள் , அந்தப் பல்லு மிதப்பான நாயகனின் அம்மா , சமூகம் வஞ்சித்தாலும் நானிருக்கிறேன் என்று தோள் கொடுத்து வேலை கொடுக்கும் குணசித்திரம் என்று நீண்டு கொண்டே சொல்லிக் கொண்டே போகும் பாத்திரங்கள் எல்லோருமே அவரவர் பாத்திரமுணர்ந்து மிளிர்ந்திருக்கிறார்கள். இதுவரை திரையில் பாத்திராத முகங்கள் எல்லாம் இந்தப் படைப்பின் வழியாக ஒரு சினேகபூர்வமான தொடர்பைக் கொடுத்ததாக உணர்கிறேன்.

அதிலும் அந்த நாயகியின் அச்சொட்டான குழந்தை முகத்தில் ஒரு சிறுமியை எப்படித் தேடிப் பிடித்தார்கள் என்று வியந்தேன். நாயகியின் மகளாக நடிக்கும் சிறுமியும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்.

உட்புறப் படப்பிடிப்பில் இன்றைய சூழலில் இடம் பெயர்ந்து தம் நிலபுலன்களை இழந்து வாழும் மக்களின் ஓலைக் கொட்டில் வாழ்வியல் அப்படியே உள்ளதை உள்ளவாறு காட்சிப்படுத்தியது போல, வெளிப்புறப் படப்பிடிப்பில் வேலிகளும், பற்றைக்காடுகளும், நீரோடையுமாக விரிகிறது. இந்த மாதிரி ஒரு வறண்டதொரு சமுதாயச் சிக்கலைத் திரை வடிவம் கொடுக்கும் போது காட்சி வடிவம் எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதற்கு இவை சான்று பகிர்கின்றன. பனைமரக்காடு படத்தை அது சொல்ல வந்த செய்திக்காக மட்டுமன்றி இன்றைய ஈழத்தமிழர் தாயகத்தின் வாழ்வியலையும் கண்டு தரிசிக்கவும் ஒரு வாய்ப்பு.

நமது ஈழத்தமிழ் திரைக்கெனத் தனி இலக்கணமுண்டு. அதை எதனோடும் பொருத்தி ஒப்பிட்டு ரசிக்க முயற்சிக்கக் கூடாது. அவ்வாறானதொரு ஒப்பிடல் என்பது எவ்வளவு தூரம் நாம் வாழ்ந்த வாழ்க்கையோடு இன்னொரு சமூகத்தோடு ஒப்பிட்டு நோக்கும் முரணுக்கு நிகரானது. அந்த வகையில் “பனைமரக்காடு” ஈழத் தமிழ் சினிமாவுக்கான தனித்துவமான நெறியைக் கைக் கொண்டிருக்கும் சிறப்பானதொரு படைப்பு.

கானா பிரபா

14.10.2018

“பனைமரக்காடு” ?

“அப்போது கிளி நொச்சி மண் ஶ்ரீலங்கா இராணுவத்திடம் வீழ்ந்த பின் அந்த மண்ணில் இருந்து வெளிக்கிட்ட கடைசி வாகனம் எங்களுடைய “நிதர்சனம்” இனுடையது. நிதர்சனம் பொறுப்பாளர் சேரலாதன், தளபதி ஒருவர் அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஆகியோருடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் வட்டக்கச்சி வீதி வழியாக வெளியேறிக் கொண்டிருந்தோம்.

வட்டக்கச்சி அருகே வரும் போது

“விடை கொடு எங்கள் நாடே” என்ற பாடல் றேடியோவில் வந்து கொண்டிருந்தது. அந்த இடத்திலே எல்லோரும் அழுது விட்டோம் தளபதி உட்பட.

அதில் வந்த “பனைமரக்காடே பறவைகள் கூடே” என்ற வரிகள் எனக்குச் சரியான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

அதுவரை யாழ்ப்பாணத்தான் என்று பெருமை பேசிக் கொண்டிருந்த எனக்கு ஒரு பாடம் கற்பித்தது முள்ளைவாய்க்கால்.

மன்னர் முல்லைத்தீவு, கிளி நொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று எல்லோரும் முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் நின்று எந்தவித பாரபட்சம் பார்க்காது அந்த அந்த மக்கள் எல்லோருமே ஆளாளுக்கு உதவினார்கள்.

அதன் பின் இறுதிப் போர் வரை ஷெல்லடிகள், விமானத் தாக்குதல்கள் என்று சாவின் இறுதி வரை போய்த் தப்பிப் பிழைத்திருக்கிறேன். சாவதற்குச் சாத்தியமில்லாதவர்கள் கூட இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்க, இத்தனை இடர்களைக் கடந்து இறைவனோ, இயற்கையோ இவ்வளவு தூரம் என்னைக் காப்பாற்றியது எதற்காக என்ற சிந்தனை எழுந்தது.

என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றே ஒன்று தான் உள்ளது அது தான் கலை”

இவ்வாறு இயக்குநர் மற்றும் அன்புச் சகோதரர் திரு ந.கேசவராஜன் அவர்கள் தன்னுடைய “பனைமரக்காடு” படம் பிறந்த கதையை என்னோடு நேற்றுப் பகிர்ந்து கொண்டிருந்தார். அந்தப் பேட்டியின் முழு ஒலி வடிவம்

இதோ

அது ஒரு காலம் இருந்தது. எங்களுக்கான அடையாளம், எங்களுக்கான செய்திகள், எம் மக்களின் குரல்கள் இவற்றை முன்னுறுத்தியே எம் மக்களும், போராளிகளுமாகத் தாமே இசைத்துப், பாடி, இயக்கி, நடித்து, பேசி செய்தி ஒளிப் பகிர்வுகள், குறும்படங்கள்

“ஒளி வீச்சு” என்றும், பெருந்திரைப் படங்களாகவும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்தச் சூழலில் தாயகத்திலும் சரி, புலம் பெயர் சூழலிலும் சரி ந.கேசவராஜன் என்ற படைப்பாளியோடு அணுக்கமான உறவை ஏற்படுத்தி வைத்திருந்தன அவர் யாத்த ஈழத்துத் திரை இலக்கியங்கள். திசைகள் வெளிக்கும், அம்மா நலமா, கடலோரக் காற்று போன்ற படைப்புகளோடு எண்ணற்ற திரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

தொண்ணூறுகளில் இந்திய சினிமாவுக்கு நிகராக யாழ்ப்பாணம் ஶ்ரீதர் தியேட்டர், ஆரிய குளம் சந்தி எங்கும் பெரும் கட் அவுட் வைத்து அந்தப் படங்களைத் திரையிட்ட காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

நேர்மையாக எழுந்த ஈழத்துத் திரை முயற்சிகளை எங்கள் வரலாறு பேசும் ஆவணங்களாகவே கொள்வேன். இன்னும் பத்து இருபது ஆண்டுகள் கடந்து இந்தத் திரை இலக்கியங்களைப் பார்க்கும் போது எவ்வாறானதொரு போரியல் வாழ்வில் எம் மக்கள்

சாவுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கழித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டக் கூடிய காலக் கண்ணாடிகள் அவை.

அதில் ந.கேசவராஜன் படைப்புகள் தனித்துவமானவை. ஈழத்துச் சினிமா இயக்கத்தில் அவரின் பெயரை விலத்தி எழுத முடியாத அளவுக்கு வரலாற்றில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறார்.

ஆனால் நடப்பது என்ன?

இறுதி யுத்தம் முடிந்த காலத்தில் அதே இராணுவ நெருக்கடிகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையெல்லாம் சந்தித்து இன்று “பனைமரக்காடு” என்ற ஒரு படத்தை எடுத்து விட்டு எட்டு ஆண்டுகளாக அதைத் தலை மேல் சுமந்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் தயாரிப்பாளர் அல்ல. ஒரு படைப்பாளியாகத் தன்னுள் கருவுற்ற் அந்தப் படைப்பெனும் குழந்தையைத் தம் மக்களுக்குக் காட்ட வேண்டும் என்று அவர் எடுத்த முயற்சிகள், சவால்கள், சங்கடங்களை வைத்தே இன்னொரு சினிமா எடுக்கலாம். அந்தக் காலத்தில் ஒளிவீச்சு படங்களையெல்லாம் புலம் பெயர் மக்களுக்காகப் பொது வெளியில் காட்சியிடும் ஆரோக்கியமான சூழல் இருந்தது. இன்று அந்தச் சூழலைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை மீண்டும் எழுகிறது. எங்கள் படைப்பாளிகள் வழியாக ஈழத்தின் சொல்லப்படாத கதைகள் பேச வேண்டுமென்றால் அந்தப் படைப்புகளை வெளியிடும் பொருளாதார நெருக்கடிகளை அவர்களின் தலையில் ஏற்றக் கூடாது.

பனைமரக்காடு வழியாக இனியேனும் உலகத் தமிழருக்கான வலையமைப்பு பலமாக நிறுவப்பட்டு இம்மாதிரிப் படைப்புகள் அரங்கேற வேண்டும் என்ற ந.கேசவராஜன் அவர்களின் ஆதங்கத்தை மெய்ப்படுத்த நாம் எல்லோரும் இணைய வேண்டும்.

அவுஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை மெல்பர்னில் திரையிட்ட போது “33 வருடங்களுக்குப் பின் என் தாய் மண்ணைப் பார்க்கிறேன்” என்று ஒரு அன்பர் நெகிழ்ந்தார்.

இதோ இந்த வார இறுதியில் சம காலத்தில் ஈழத்திலும் அவுஸ்திரேலியாவிலும் திரையிடப்படும் பனைமரக்காடு திரைப்படக் காட்சிக்கு இங்குள்ளோரும், அங்குள்ளோரும் சென்று பார்த்து ஆதரவை நல்குவோம்.

சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக திரையிடப்படவுள்ளது.

சிட்னி திரையிடலுக்கான facebook அழைப்பு

https://www.facebook.com/events/295077637943237/

யாழ்ப்பாணத்தில் ராஜா தியேட்டரில் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி காலை 10.30, முற்பகல் 2.30 மற்றும் மாலை 6.30 மணி காட்சிகளாகத் திரையிடப்படுகின்றது.

எங்களுக்கான சினிமாவை ஆதரிப்போம்.

உமாஜியின் “காக்கா கொத்திய காயம்” நூல் நயப்பு ?


இன்று எஞ்சியிருக்கும் ஈழத்துச் சனத்துக்கு மரணம் என்ற ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் கண்டு கடந்திருக்கும். வயது வேறுபாடில்லாமல் எல்லோருக்குமே பொதுமையான அனுபவம் இது. போர் தின்ற அந்தச் சனங்கள் மரணத்தின் நுனி வரை போய் வந்திருக்கிறார்கள். அந்த வாழ்வியல் அனுபவங்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே வெவ்வேறான கால கட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன.
போர் உச்சம் பெற்ற எண்பத்து மூன்றாம் ஆண்டுக்குப் பின்னதான கால கட்டம் என்பதை எழுதப் போனால் ஈழத்துச் சனங்களின் இரத்த வாடையைத் தொடாது கடக்க முடியாது. எனக்கும் இந்த மாதிரியான அனுபவங்கள் வாய்த்திருந்தாலும் 95 ஆம் ஆண்டுக்குப் பின்னான நேரடிக் கள அனுபவம் இல்லை. என்னைப் போலவே இந்தப் போர்க்கால வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பலரும் ஒரு குறித்த கால எல்லையோடு நின்று தான் எழுதிப் போந்திருக்கிறார்கள். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில், இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்றாதாகக் கருதும் இறுதி யுத்தம் வரையான போர்க் கால வாழ்வு பற்றிப் பேசிய ஒரு முழுமையான நூலாக காக்கா கொத்திய காயம் பற்றியே சொல்லுவேன்.
உமாஜி என்ற இளைஞனை பேஸ்புக் வழியாகத் தான் அதிகம் அறிந்திருந்தேன். வலைப்பதிவு யுகம் பரவலாக இயங்கிய காலத்தில் கூட சக ஈழத்துப் பதிவராக அவர் எழுதியதாக நினைவிலில்லை. அந்த நேரத்தில் 4TamilMedia என்ற செய்தித் தளத்தில் உமா ஜி இன் வாழ்வியல் அனுபவங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தாலும் உண்மையில் ஒரு பதிவையும் வாசிக்கும் சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்தவில்லை. இப்போது வெளிவந்திருக்கும் காக்கா கொத்திய காயம் என்ற அவருடைய வாழ்வியல் அனுபவப் பகிர்வுத் திரட்டு கூட இவ்விதம் 4TamilMedia இல் அவர் எழுதிய பதிவுகளின் திரட்டே. சகோதரன் மைந்தன் சிவாவின் திருமணப் பரிசாக அவர் எனக்களித்த போது படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஆனால் ஒவ்வொரு பதிவையும் படித்து முடித்து உடனேயே அடுத்ததுக்கு என்னால் நகர முடியாத ஒரு உளவியல் தாக்கத்துக்கு ஆளானேன். உண்மையிலும் உண்மை இது. ஏனென்றால் இந்த எழுத்தாளன் காட்டுகின்ற அந்த வாழ்ந்து கழித்த உலகு அப்படியொன்றும் சொகுசானதில்லை. போரின் நொருக்குவாரத்தில், வாழ்வின் பல்வேறு சவால்களோடு வாழ்ந்து கழித்த பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு மனிதர்களைப் பற்றியும் இவர் சொல்லி முடித்ததும் உமா ஜி ஆகி அந்த மனிதர்களோடு பழகி விட்டுத் திரும்புமாற் போலவொரு உணர்வை அந்த எழுத்துகள் ஏற்படுத்தி விட்டன. இப்போது சொல்லுங்கள் இதையெல்லாம் வேக ஓட்டத்தொடு வாசித்து முடிக்கும் காரியமா?
இந்த நூல் குறித்த நயப்புக்குப் போவதற்கு முன்னர் இது குறித்த என் வெளிப்படையான இரண்டு விமர்சனத்தைச் சொல்லி விடுகிறேன்.
ஈழத்தின் இரு தசாப்தங்களை உள்ளடக்கிய இந்த வாழ்வியல் அனுபவப் பகிர்வை காக்கா கொத்திய காயம் என்று கவிதைத்தனமாகத் (!) தலைப்பிட்டதற்குப் பதில் இன்னமும் அணுக்கமான தலைப்பை இட்டிருக்கலாம்.
இன்னொன்று, இந்தப் புத்தகத்தில் மிக ஆழமாகப் பேசப்பட்டிருக்கும் போரியல் வாழ்பனுபவங்கள் பிற் பகுதியிலேயே இடம் பெற்றிருக்கின்றன. உதாரணம் ஊரடங்கு வாழ்வு. ஒரே புத்தகத்தில் கனதியான பக்கங்களோடு வந்ததிலும் இதைத் தொகுதியாக வெளியிட்டிருக்கலாம். உதாரணமாக வேதநாயகம் தபேந்திரனின் நூல் போன்று பாகங்களாகப் பிரித்து வெளியிட்டிருக்கலாம் என்பது என் கருத்து.
அடுத்த நிமிடம் வாழ்வோமா என்ற நிலையாமை குறித்த கேள்வி எழும் சூழலில், போர்க்கால வாழ்வியலில், அத்தகு துன்பகரமான சூழலில் தான் உயர்ந்த நகைச்சுவை பிறக்கிறது. Life is beautiful படத்தில் கண்டதை எல்லாம் நம் வாழ்வியலில் தரிசித்திருக்கிறோம். அப்படியான எழுத்தைக் காட்டுகிறார் உமாஜி.
பக்கத்துக்குப் பக்கம் எள்ளல், நகைச்சுவை என்று கனதியான சம்பவங்களிலும் இந்த எழுத்தைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையில் சொல்லப் போனால் இந்தப் புத்தகதை எடுத்துப் படித்துக் கொண்டு போகும் போது இசேலான பொறாமையும் எட்டிப் பார்த்தது. எவ்வளவு ஆழமான எழுத்து. யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையிலோ கொழும்பிலோ, வன்னியிலோ நிகழ்ந்ததைக் கொண்டு போய் ஒரு உலகத் தரமான Pianist படத்தோடோ The Last Emperor உடனோ அல்லது அறிஞர் ஒருவரின் கூற்றோடோ பொருதி எழுதும் நுட்பம் இவருக்குக் கச்சிதமாக வாய்த்திருக்கிறது.
ஈழத்துப் பிரதேசங்களில் தான் வாழ்ந்த காலத்தில் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகளைப் பற்றி எழுதினாலும் பொதுவான தமிழையே கையாண்டிருக்கிறார். பிரதேச வழக்குச் சொற்கள் கூட அந்நியப்படாமல் விளங்கக் கூடிய வகையில் குறித்த அனுபவங்களோடே இருப்பதால் தமிழகத்து வாசகனுக்கும் நெருக்கமாக இருக்கக் கூடியது.
இரண்டு தசப்தங்களைக் கடந்த புலம் பெயர் வாழ்வில் இருந்து கொண்டு தாயகம் செல்லும் போதெல்லாம் என்னோடு வாழ்ந்து பழகியவர்களைத் தேடி அவர்களின் இருப்பை அறிந்து கொள்ளும் வேட்கையை உமாஜியின் இந்த நூலும் செய்கிறார். அவரும் தேடுகிறார் இந்திய இராணுவ காலத்தில் இருந்து இறுதி யுத்தம் கண்டு, பழகிய அண்ணனில் இருந்து, மாமா, பாட்டா முறை சொல்லி அழைத்தவர்கள் எல்லாம் எங்கே என்று தேடும் எழுத்துகளில் அந்தப் பழைய நினைவுகளைப் பதிப்பிக்கிறார். இவர்களை நானும் போய்ப் பார்த்தால் என்ன என்றவொரு ஏக்கத்தை எழுப்பி விட்டு அவர்களின் இன்றைய நிலையை நிறுத்துமிடத்தில் மனது கனதியாகிறது. உமாஜியோடு வாழ்ந்து பழகியவர்கள் இப்போது நமக்கும் அறிமுகமானவர்களாகிறார்கள்.
காலி முகத்திடலில் நின்று விடும் பட்டமும் போரியல் வாழ்வை நோக்கி இழுத்துப் போகிறது, தமிழ்த் திரையிசையை இளையராஜாவாகவும், ரஹ்மானாகவும், ஹாரிஸ் ஜெயராஜாகவும் ஏன் எங்களூர் எஸ்.ஜி.சாந்தனாகவும் ஆழ்ந்து நுகரும் போதும் அப்படியே கடக்கிறார். இதையே
யுத்தம் எமக்களித்த நாடோடி வாழ்க்கையில் நாம் கடந்து வந்த ஊர்களையும், வாழ்க்கையையும் பாடல்களே ஒரு காலப் பயணத்தினூடு, அடிக்கடி நிகழுலகுக்குக் கொண்டு வருகின்றன என்று சொல்கிறார். இசைவு என்ற பகிர்தலில் இசை வேட்கை கொண்ட ஒரு கலைஞனின் இன்றைய நிலையை எழுதும் போது இது ஒரு உதாரணம் தான் இவர் போல இன்னும் பலரின் உண்மையான முகத்துக்கு நமது யுத்த பூமி கரியைப் பூசி மறைத்திருக்கிறது என்ற கசப்பான நிஜமும் உறைக்கிறது. இதையே இன்னொரு வாழ்வியல் அனுபவத்தில்
வாழ்நாள் முழுவதும் தம்மை யாருக்கோ நிரூபித்துக் கொண்டிருப்பது கர்ணனுக்கு மட்டும் விதிக்கப்பட்டதல்ல. தோற்றுப் போனதாகக் கருதப்படும் வாழ்நாள் போராளிகளுக்கும் கூடத்தான். வாழ் நாள் போராளிகள் ஒவ்வொருவரும் ஒருவகையில் கர்ணன்கள்தான். கர்ணன்கள் பாவம்!” என்கிறார்.
பெருமூச்சு ஒன்றை எழ வைத்து விடுகிறது.
A9, ஊடரங்கு, மற்றும் விடைபெறல் ஆகிய பகிர்வுகளைப் படிக்கும் போதே அந்தக் காலகட்டத்து யுத்த நெருக்கடிகளும், அடுத்த நிமிடம் வாழ்தலுக்கான சவாலும் மீளவும் நிகழ் உலகில் அனுபவிப்பதைப் போன்ற உணர்வு, இங்கேயும் தன் வழக்கமான நகைப் பூச்சைப் போடுகிறார்.
எங்கள் வாழ்வியலில் புத்தகம் படிக்கவும், பாட்டுக் கேட்கவும் ஏன் இயக்கத்துக்குப் போகவும் கூட பக்கத்து வீட்டு அண்ணாவோ அக்காவோ முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். அதிலும் இந்தப் பாட்டுக் கேட்டல் ஒரு குரு சீட மரபில் கடத்தப்படுவது. இங்கேயும் அதையே எழுத்தாளர் தன்னுடைய அனுபவ வெளிப்பாட்டில் பகிர்கிறார்.
ரணேஸ் வாத்தி போன்ற ஒரு ரியூஷன் மாஸ்டரையோ அல்லது சோதிலிங்கம் மாமா போல ஆமிக்காறனோட மல்லுக் கட்டிப் பாட்டுப் போடுற உறவையோ, கல்குலஸ் கணக்கைப் பாடமெடுக்கும் மன நிலை பிறழ்ந்த மனிதரையோ எப்படியோ நாம் வாழ்ந்த ஊரில் இருந்த இன்னொருவரோடு பொருத்திப் பார்க்க முடிகிறது.
வவுனியா, குருமன்காட்டில் நான் கல்வி நோக்கில் வாழ்ந்திருக்கிறேன். இனி ஒருமுறை போக வேண்டும் உமாஜி சொன்ன அந்த குருமன்காட்டுப் பிள்ளையாரடி ஐப் பார்க்க.
மாவிட்டபுரத்தில் பிறந்து பின் போர்க்கால இடப் பெயர்வால் மில்க்வைற் கனகராசா அவர்களின் பக்கத்தி வீடு போய் வன்னி, கொழும்பு எல்லாம் பயணித்த உமாஜியின் இடப்பெயர்வுகள் அந்தந்தக் களத்தில் நிகழ்ந்த நனவிடை தோய்தல்களாகப் பிரசவித்திருக்கின்றன.
என்னால் இந்தப் புத்தகத்தைத் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை. காரணம், ஒவ்வொரு பகிர்வையும் படித்து முடித்த கணமே அதில் வாழ்ந்த மனிதரோடு ஐக்கியப்பட்டு விடுவேன். அதிலும் அந்த சோதிலிங்கம் மாமாவின் கதையைப் படித்து நான்கு வாரங்களாகியும் இன்னமும் அவர் நினைப்பிலேயே இருக்கிறேன். பகிர்வுகளின் முடிவில் உமாஜி முத்தாய்ப்பாய் முடித்து வைப்பார். அந்தக் கடைசிப் பந்தி தான் ஒவ்வொன்றுக்கும் அடி நாதம்.
கடந்த மூன்று தசப்தங்கள் தேங்கிய ஈழத்தின் வடபுலத்தோர் வாழ்வியலை ஆய்வு ரீதியான கண்ணோட்டத்தில் எப்படி அணுக முடியுமோ அதே போன்று இந்த காக்கா கொத்திய காயம் நூல் வழி திரட்டப்பட்டிருக்கும் அனுபவங்கள் அத்தகு பணியைச் செய்திருக்கிறது.
இந்த நூல் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த போது இருந்த பரபரப்பு இப்போது இல்லை. அதாவது நூலைப் படித்து விட்டு நாலு வரியாவது எழுதியவரையும் காணோம். நூலாசிரியருக்கும் தன்னை விளம்பரப்படுத்தத் தெரியாது ?. ஆனால் அவ்வளவு தூரம் எளிதில் கடந்து விட முடியாத ஒரு படைப்பு இது என்பேன்.
கானா பிரபா
04.10.2018
இந்தப் புத்தகத்தைத் தமது திருமண நிகழ்வில் பரிசாக வழங்கிய சகோதரன் மைந்தன் சிவா & ஆர்த்தி தம்பதிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

வடக்கே போகும் மெயில் ? நூல் நயப்பு

சூரன் ஏ.ரவிவர்மாவின் 16 சிறுகதைகளை உள்ளடக்கியதாக இந்த சிறுகதைத் தொகுதி அமைந்திருக்கிறது. இலங்கை ரயில் சேவைகளில் வடக்கே பயணிக்கும் யாழ்தேவி ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் சேவையாக இருந்து வந்தது. போர் தீவிரமடைந்து இரு தசாப்தங்களாக இந்த சேவை முடங்கிப் போயிருந்த போதிலும் கூட யாழ் தேவியை மக்கள் மறக்கவில்லை. “வடக்கே போகும் மெயில்” என்ற தலைப்பு ஐந்து வருடங்களுக்கு முன் இந்த நூல் வெளிவந்த போதும் என்னை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.

ஈழத்தில் ஒரு சமூக விடுதலைப் போராளியாக வாழ்ந்து காட்டி இன்றைய தலைமுறைக்கும் தனது விளைச்சலை விட்டுச் சென்ற சூரன் அவர்களின் பேரன் ரவிவர்மா அவர்கள். அடிப்படையில் ஊடகவியலாளராக இருந்த போதும் ஈழத்தில் வெளி வந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதிய சிறுகதைகளே இத்தொகுதியில் திரட்டப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகையாளர் கற்பனாவாதியாக, எழுத்தாளனாக

ஒருங்கே கைவரப் பெற்றவர்கள் என்றால் மூத்த எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களையும், இராணுவத்தின் ஷெல் தன் குடும்பத்தையே

தின்ற எழுத்தாளர் சக பத்திரிகையாளர் நெல்லை க.பேரனையும், ரவிவர்மாவின் உறவினர் மற்றும் ஊடகவியலாளராகவும் பத்திரிகையாளராகவும் இயங்கிய அமரர் ராஜஶ்ரீகாந்தன் ஆகியோரையும் தான்

நினைவில் கொண்டு வர முடிகிறது. இவர்களோடு ரவிவர்மாவின் சிறுகதைகளை இப்போது தான் வாசிக்கக் கிட்டியது.

“வடக்கே போகும் மெயில்” என்ற சிறுகதை இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளில் ஒன்று. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் அந்த ரயில் பயண நினைவுகள் தான் எவ்வளவு இனிமை அதே நேரம் அதன் இன்னொரு பக்கம் அவலமானது. சிங்களக் காடையரால் ரயிலில் பயணித்த அப்பாவிப் பயணிகள் கொல்லப்பட்ட வரலாறுகளும், இனத்துவேஷங்கள் சங்கமித்த களமாகவும் இந்தப் பயணம் இனப் பிரச்சனையைத் தண்டவாளத்தில் ஓட்டிக் காட்டும் ஒரு குறு நாடக மேடை. ரவி வர்மா எழுதிய சிறுகதையும் இவ்வாறானதொரு போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. அத்தோடு ஏனைய சிறுகதைகளின் அடி நாதத்தில் இந்த இனப் பிரச்சனையே மையம் கொண்டிருக்கிறது. ஆகவே தலைப்புகளும் களங்களும் வெவ்வேறாயினும் எல்லாச் சிறுகதைகளுமே வாசகனை “வடக்கே செல்லும் மெயில்” இருத்தியே பயணிக்கின்றன.

ஈழத்து எழுத்தாளர்களில் ஒரு வகையினர் பிரதேச வழக்குகளைத் தீவிரமாகக் கையாண்டு எழுதுகையில் இன்னொரு சாரார் பொதுத் தமிழில் எழுதத் தலைப்படுவர். வெகுஜனப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவ்வாறான பொதுத் தமிழைக் கையாளும் சிறுகதைகளே அதிகம். இதன் வழியாகப் பரவலான வாசகர் வட்டத்துக்குச் சொல்ல வந்த சேதி போய்ச் சேரும் சிறப்புண்டு. ரவிவர்மா தன் மொழியாடலில் உரையாடல் பகுதிகளில் ஈழத்துப் பேச்சுத் தமிழையும் கதையோட்டத்துக்குப் பொதுத் தமிழையும் கையாண்டிருக்கிறார்.

சைக்கிள் களவு போன கதையை வேடிக்கையாக “போனால் போகட்டும்” சிறுகதை வழியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். யாழ்ப்பாண வாழ்வியலில் சைக்கிள் ஒரு பிரதான ஊர்தி அதே சமயம் சைக்கிள் களவில் இருந்து தப்பியவரும் அரிது. “பொன்னுக்கிழவி” கதை படித்த போது ராஜஶ்ரீகாந்தனின் சிறுகதை ஒன்றைப் படித்த அனுபவம். ஈழநாடு வார இதழ் போன்று ஈழத்துப் பத்திரிகை உலகில் தினக்குரலின் பாய்ச்சல் வேகமானது. இவ்விரண்டு பத்திரிகைகளிலும் தன் கதைகளை எழுதியிருக்கிறார். அத்தோடு ஈழத்தின் மூத்த சஞ்சிகை “மல்லிகை” இலும் இவர் பங்களிப்பு வந்திருக்கிறது. அது போல் இன்றும் தசாப்தம் கடந்து வெளிவரும் “ஞானம்” சஞ்சிகையிலும் எழுதிய சிறுகதையும் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

வானொலியில் பாட்டுக் கேட்கும் போது நம்மையறியாமலேயே நம் குடும்ப விபரங்களைப் பகிர்வதன் ஆபத்தை “என்னைத் தெரியுமா?” சிறுகதை வழியாகக் காட்டியிருக்கிறார்.

“செல்லாக்காசு” நாயகன் கணேச மூர்த்தியின் கதை ஏதோ நிஜத்தில் கண்டு கேட்டது போல இருந்தது.

“திக்குத் தெரியாத” சிறுகதை எந்தத் திசையில் செல்லப் போகிறது என்ற ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத அதன் முடிவு முறுவலை எழுப்பியது.

உருவகக் கதை பாணியில் “குலதெய்வம்” என்ற சிறுகதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த உத்தியில் எழுபதுகளில் செங்கை ஆழியான் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் நம் ஈழத்து எழுத்தாளர்கள் அதிகம் தொடாதது.

புலம்பெயர் வாழ்வியலைத் தொட்டு எழுதிய “திரைகடல் ஓடியும்” கதை இன்றைய யதார்த்த உலகில் சுய நலம் தோய்ந்த உறவுகளைக் காட்டும் ஒரு கண்ணாடி.

இடப் பெயர்வின் அவலத்தை முதன் முதலில் சந்தித்தவர்கள் வடமராட்சி மக்கள். அவர்களின் கதைகளின் வழியே உண்மையின் சாட்சியங்கள் தான் கிட்டும். அப்படியொரு உணர்வை எழுப்பியது “என்று மறையும்” என்ற சிறுகதை. இந்தச் சிறுகதையும், தொகுதியின் நிறைவில் உள்ள “விடியலைத் தேடி” சிறுகதையும் மிகவும் ஆழமான பார்வையோடு எழுதப்ப்பட்டிருப்பவை. இவை இரண்டுமே ரவிவர்மா என்ற எழுத்தாளர் இன்னும் பல ஈழத்துப் போரியல் வாழ்வைக் களமாகக் கொண்ட சிறுகதைகளைக் கொடுக்க வல்லவர் என்ற நம்பிக்கையை அதிகம் விளைவிப்பவை.

ஒரு நல்ல சிறுகதையொன்றைப் படித்து முடித்ததும் அந்தக் கதைக்களமும், கதை மாந்தர்களும் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி விடும் உணர்வைப் பிரதிபலித்தால் அதன் வெற்றியென்று கொள்ளப்படும்.

அந்த வகையில் ஈழத்தவரின் வாழ்வியல் பண்பாடுகள், அனுபவங்களை அந்தந்தக் காலகட்டத்தினூடே எடுத்துச் சென்று கதைகளின் வழி நிகழ்த்திக் காட்டியதன் வழியாக சூரன் ஏ.ரவிவர்மா நல்ல சிறுகதை ஆசிரியராக அடையாளப்படுத்தப்படுகிறார்.

கானா பிரபா

27.08.2018

அருட்செல்வம் மாஸ்டர் ? இணுவிலின் அடையாளம்

கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி இணுவில் கிராமமே விழாக் கோலம் பூண்டு 40 ஆண்டுகள் கல்விச் சேவையை வழங்கி வரும் எம் அன்புக்குரிய ஆசிரியர் இரா அருட்செல்வம் அவர்களுக்குத் தன் நன்றியறிதலைப் பாராட்டு விழாவாக எடுத்துக் கெளரவித்தது. தன் கல்விச் செயற்பாட்டில்

அருட்செல்வம் மாஸ்டர் தலைமுறைகளை உருவாக்கியவர் அவருக்கான விழா மலருக்காக நான் பகிர்ந்த கட்டுரை இது

???????????????

இணுவில் கிராமத்தைத் தனித்துவத்தோடு அடையாளப்படுத்த ஆலயங்களும், தோட்ட நிலங்களும், தொழிற்சாலைகளும் இருக்குமாற் போல அருட்செல்வம் மாஸ்டர் வீடும் அதில் ஒன்றாகி விட்டது. அது போலவே இன்று நான்கு தசாப்தங்களாக அருட்செல்வம் மாஸ்டரும் பலருக்கு அடையாளத்தைக் கொடுத்தவர், இணுவிலின் அடையாளங்களில் ஒருவராக ஆகி நிற்கிறார்.

“இரா. அருட்செல்வம்” இந்த மந்திரச்சொல்லை உச்சரிக்காத இணுவில் கிராமவாசிகள் மட்டுமல்ல, அயற் கிராமங்களான உடுவில், தாவடி, மானிப்பாய், கோண்டாவில் பிரதேசவாசிகள் இல்லையென்றே சொல்லலாம். ரியூசன் வகுப்புக்கள் எனக்கு அறிமுகமாகாத காலகட்டத்தில் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரீயூசனுக்கு அண்ணன்மார் போகும் போது நான் வீட்டு கேற்றில் ஏறி நின்று வேடிக்கை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று ஏங்கிய காலம் உண்டு.

அருட்செல்வம் மாஸ்டரை எப்போது நினைத்தாலும் கண்ணுக்குள்ளை அவரின் சிரித்த முகமும், சோக்கட்டிகையின் சோக் தூள் படாத புறங்கையால் தலைமயிரை அவ்வப்போது வாரும் ஸ்ரைலும் தான் ஞாபகத்துக்கு வரும். கணிதபாடத்தையும், விஞ்ஞான பாடத்தையும் சொல்லிக் கொடுப்பார். அது க.பொ.த.சாதாரண வகுப்பு வரை போகும். சோக்கட்டியால் அவர் கீறி விளக்கும் மனித உறுப்புக்களை கரும்பலகையில் பார்த்தால் ஏதோ ஓவியக் கண்காட்சி மாதிரி இருக்கும் அவ்வளவு அழகு.

அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரியூட்டறிக்கு A.T.C (Arul Tution Club)என்று என்னதான் பெயர்வச்சாலும் சனம் அந்தப் பெயரை எல்லாம் நினைப்பில் வச்சிருக்கவில்லை, அருட்செல்வம் மாஸ்டர் வீடு என்று தான் உச்சரிப்பார்கள். அருட்செல்வம் மாஸ்டர் அயற்கிராமங்களான மானிப்பாய், கொக்குவில் போன்ற பகுதிகளில் உள்ள ரியூட்டறிகளிலும் பாடம் சொல்லிக் கொடுத்தவர்.

அருட்செல்வம் மாஸ்டரின் ரியூட்டரியில் கொண்டாடும் வாணி விழா மறக்கமுடியாதது. ஒவ்வொரு வாணிவிழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகப்பதிவுகள் மிக அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்துக்கு ஒரு மாதம் முன்பே அருட்செல்வம் மாஸ்டர் ஆறாம் ஆண்டுமுதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார்.

ஒவ்வொரு தடவை ஊருக்குப் போனாலும் முதல் நாளிலேயே அவரின் தரிசனம் கிடைத்து விடும். “ஒருக்கால் எங்கட ரியூஷன் சென்ரர் பக்கம் வாரும்” என்பார். தகர ஓலையால் வேயப்பட்ட கட்டடங்களுக்குள் நீளப்பலகை வாங்குகளில் கொட்டமடித்துக் கொண்டிருக்கும் மாணவக் குருத்துகளைப் பார்க்கும் போது அந்த அழகிய பழைய காலத்துக்குப் போய் விடும் மனசு. அருட்செல்வம் மாஸ்டர் புதிது புதிதாகத் தன் ரியூஷனுக்குச் செய்த அபிவிருத்திகளைக் காட்டி மகிழ்வார். தன்னுடைய கல்விநிறுவனத்தை இத்தனை ஆண்டுகளும் தனி ஆளாகக் கட்டி எழுப்பியதோடு அதைத் தன் பிள்ளை போலப் பெருமை பேசும் பூரிப்பு அவர் முகத்தில் தொனிக்கும்.

கடந்த தடவை ஊருக்குப் போன போது, ஒவ்வொரு மாதமும் போயா விடுமுறை தினத்தில் மாணவருக்கான கலைத்திறன், பொது அறிவுத் திறனை வளர்க்கும் பாங்கில் அவர்களை வைத்து நிகழ்த்தப்படும் ஒன்றுகூடலின் பூர்வாங்க நிகழ்ச்சிக்குப் போனேன். ஒரு விடுமுறை தினத்தைக் கூடத் தன் மாணவர்களுக்காகவே ஒதுக்கும் இவ்வளவு தன்னலமற்ற சிந்தனையை மனசுக்குள் பாராட்டினேன்.

பகல் முழுதும் ஆடி ஓடிப் படிப்பித்த களைப்பைத் தாண்டித் தன் இரவு நேரத்தையும் ஒதுக்கி விடுவார் பாடத்தில் ஏதும் சந்தேகம் இருந்தால்அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவரைத் தேடி வரும் மாணவர்களுக்காக.
ஆசிரியத் தொழில் கடவுள் பணிக்கு நிகரானது என்பதை அனுபவ ரீதியாகக்கண்டது அருட்செல்வம் மாஸ்டரிடம் தான். தன்னுடைய வாழ்நாளில் மாணவர் நலனைப் பற்றிச் சிந்திக்காத நாளில்லை எனலாம்.

இன்று மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, கணினித்துறை வல்லுநர்களாக, கணக்கியலாளர்களாக அடையாளப்பட்டோர்களைத் தாண்டி“மனிதர்களாக” அவர்களை வளர்த்தெடுத்தவர் எங்கள் அருட்செல்வம் மாஸ்டர்.

எங்கள் அருட்செல்வம் மாஸ்டர் என்றென்றும் தன் தனித்துவமான வாழ்க்கை நெறியிலும், ஆசிரியப் பணியிலும் எந்த விதமான இடையூறும் இன்றித் தொடர, அவர் ஒவ்வொருநாளும் தன் கடமைக்கு முன் வணங்கித் தொழும் எல்லாம் வல்ல ஶ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் பெருமானை வேண்டுகிறேன்.

என்றும் பாசத்துக்குரிய
பிரபு (கானா பிரபா)

???????????????

இந்த நிகழ்வில் அருட்செல்வம் மாஸ்டரின் வீட்டில் இருந்து இணுவில் பொது நூலகம் வரையான நடை பவனியைச் சுடச் சுடப் பகிர்ந்த சகோதரன் Arulmurugan Sabesan இன் பேஸ்புக் இல் காணக் கிடைக்கும் படங்கள்.

இணுவிலின் விழா கோலம்.

Posted by Arulmurugan Sabesan on Sunday, August 19, 2018

இரா.அருட்செல்வம் ஆசிரியரின் விழா நிகழ்வை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கும் சகோதரன் Vathsangan Piraba பகிர்ந்த படங்கள்

அருள் கல்வி நிலையத்தின் 40 வது ஆண்டு விழாவும் திரு.இரா.அருட்செல்வம் ஆசானின் மணிவிழாவினதும் சில பதிவுகள்…..பழைய மாணவர்கள், ஊரவர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகளுடன் சிறப்பாக நடைபெற்றது….

Posted by Vathsangan Piraba on Tuesday, August 21, 2018