ஒரு நினைவுப்பதிவும், ஒரு திரைப்பதிவும்

இலங்கை வானொலி என்னும் ஊடகம் உலகத் தமிழ் வானொலி ஒலிபரப்புக்கு முன்னோடியாக இருந்த காலம் அது. தனித்துவம் மிக்க ஒலிபரப்புக் கலைஞர்கள், படைப்பாளிகளை உருவாக்கிய அந்த வானொலிக் களத்தில் தோன்றிய சிறப்பு மிகு கலைஞன் அமரர் திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்கள். வானொலியில் செய்தி அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நடிகராக விளங்கிய இவர் கடந்த ஜூன் 6, 2008 இல் இந்த உலகில் இருந்த தன் வாழ்வு என்னும் பாத்திரத்திலிருந்து விலகிக் கொண்டார். அமரர் ஜோர்ஜ் சந்திரசேகரன் குறித்த அஞ்சலிப் பகிர்வு ஒன்றை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நான் படைத்தபோது, இலங்கை வானொலியின் கலைஞரும், முன்னாள் சக்தி எப்.எம் வானொலிப் பணிப்பாளருமான திரு எஸ்.எழில்வேந்தன் அவர்கள் கலந்து கொண்டு தன் அமரர் திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன் குறித்த அஞ்சலிப்பகிர்வை வழங்கியிருந்தார்.

அதன் ஒலிவடிவத்தைக் கேட்க


மேலே படத்தில் இடமிருந்து வலம் 1. ராமசந்திரன் – (நிகழ்ச்சி உதவியாளர்) , 2.எஸ்.எழில்வேந்தன் 3.வசந்தி பொன்னுத்துரை (செயலாளர்) 4.குகமூர்த்தி (கடத்தப்பட்டுக் காணாமல் போனவர் – எழுதுவினைஞர்) 5. ஏ.ஸ்ரீஸ்கந்தராஜா (கட்டுப்பாட்டாளர்), 6.ஜோர்ஜ் சந்திரசேகரன் (அமைப்பாளர்) 7. ஹரிஹர சர்மா (கட்டுப்பாட்டாளர்) 8.சோமசுந்தரம் (தயாரிப்பாளர்), 9. வி.என். மதிஅழகன், 10.நடேச சர்மா (அறிவிப்பாளர்), 11. செல்வி சற்சொருபவதி நாதன், 12.ஜி. புஷ்பரத்தினம் (தயாரிப்பாளர்) .

ஜோர்ஜைப் பற்றி இங்கே நினைவு கொள்ளும் போது என் மனக்கண் முன்னே வருகின்ற ஜோர்ஜ், நான் சிறுபையனாக அதாவது அரைக்காற்சட்டை போட்டுக் கொண்டு திரிகின்ற காலத்திலே நான் ஜோர்ஜைக் கண்டிருக்கின்றேன். அப்போது என் தந்தையார் கவிஞர் நீலாவணன் ஆட்டுப்பட்டித் தெருவிலுள்ள அரசு பதிப்பகம் அதாவது எம்.ஏ.ரஹ்மானுக்கு சொந்தமாக இருந்த ரெயின்போ பிறிண்டர்ஸ் கொழும்புக்கு வரும்போதெல்லாம் செல்வார். என்னுடைய தந்தையாருக்கும் எம்.ஏ.ரஹ்மானுக்குமிடையில் ஒரு நட்பு இருந்தது. அங்கேதான் எஸ்.பொன்னுத்துரை அவர்களும் எம்.ஏ.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார், நூல்கள் வெளிவருவதற்குக் காரணமாகவிருந்தார். இளம்பிறை என்னும் மாத சஞ்சிகை ஒன்று அங்கிருந்து வெளிவந்து கொண்டிருந்தது.

அப்போது நான் சின்னப்பையனாக இருந்த போது கேணியா ஒப்பரேஷன் நடந்தது. அதை முடித்து விட்டு நாங்கள் எல்லோரும் கதிர்காமத்துக்குப் போகவேண்டும் அதற்கு முன்னர் நாம் எல்லோரும் ரெயின்போ பிறிண்டர்ஸ் இல் தான் போன் நின்றோம். அப்போது நான் அங்கே பார்த்தேன், ரெயின்போ பிறிண்டர்ஸ் இன் முன்பக்கத்தில் ஒரு மேசையிலே ஒரு மெல்லியான, குச்சி உருவம் கொண்ட இளைஞர் ஒருவர் இருந்து புரூப் றீடிங் பார்த்துக் கொண்டிருப்பார். அவரை என் தந்தையார் ஜோர்ஜ், ஜோர்ஜ் என்று அழைப்பதை நான் கேட்டிருக்கின்றேன். இவர் தான் ஜோர்ஜ் சந்திரசேகரன், இவருடன் சேர்ந்து நான் பணியாற்றப் போகின்றேன் என்று அப்போது அரைக்காற்சட்டை போட்ட ஒரு 9,10 வயதிருக்கும் என்று நினைக்கிறேன், அந்தக் காலத்திலே நான் அறிந்திருக்கவில்லை.

இலக்கிகர்த்தா இலங்கையர் கோன் அவர்கள் கல்முனையிலே ஒரு பெரிய இலக்கியவிழாவை நடாத்தவேண்டுமென பல திட்டங்களைப் போட்டிருந்தார். அது நிறைவேறாமலேயே அவர் 1961இல் இறந்து விட்டார்.62 ஆம் ஆண்டிலே எனது தந்தையார் கவிஞர் நீலாவணன் அவர் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 62 ஆம் ஆண்டு காலஞ்சென்ற இலங்கையர்கோன் நினைவாக,அவரின் ஞாபகார்த்தமாக கல்முனை தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒர் இலக்கிய விழாவினை நடாத்திய போது அவர்கள் சிறுகதைப் போட்டி ஒன்றையும் நடாத்தினார்கள். அந்தப் போட்டியிலே பங்குபெற்றவர்களில் முதலாம் பரிசு பாலகிருஷ்ணனுக்கு என்று நினைக்கின்றேன். இரண்டாம் பரிசு குண்டுமாமா என்றொரு சிறுகதைக்குக் கிடைத்தது. அந்தக் கதையை எழுதியவர் ஜோர்ஜ் சந்திரசேகரன். நான் சின்னப் பையனாக இருந்தகாலத்திலும் என்னுடைய தந்தையாருடைய இலக்கிய முயற்சிகளை அவதானித்து வருவதுண்டு. அதனால் தான் இந்த விடயமும் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. அப்போது அப்பா சொன்னார் குண்டுமாமா சிறுகதைக்குப் பரிசு ஜோர்ஜ் தான் கொழும்பில் றெயின்போ பிறசில் முன்னுக்கு இருப்பவர் என்று.

அதற்குப் பிறகு நான் எழுபத்தியேழிலே இலங்கை வானொலியில் நான் ஒரு ஒப்பந்த அடிப்படையில் பகுதி நேரமாகத் தொழிலிற்குச் சேர்ந்தபோது மீண்டும் ஜோர்ஜ் சந்திரசேகரனை நான் கண்டேன். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குச் சென்றபோது ஜோர்ஜை சந்தித்து என்னை கவிஞர் நீலாவாணன் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஜோர்ஜ் சந்திரசேகரனின் ஆரம்பகால நினைவுகளை மீட்டிப் பார்க்கின்றபோது இதுதான் என் மனதிலே நிழலாடுகின்ற விஷயங்கள்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்ற வந்த பின் ஜோர்ஜிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஏனென்றால் நாடகத்திலே எனக்கு இயல்பாகவே ஈடுபாடிருந்தது. அவருக்கும் நாடகங்கள் தொடர்பில் மிகுந்த ஈடுபாடிருந்தது. இருவரும் நாடகங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருப்போம். குறிப்பாக ஜோர்ஜ் அவர்கள் எமது தமிழ் நாடகங்களை விடுத்து அவருக்கு மேலைத்தேய நாடகங்கள் தொடர்பில் நிறைய அறிவிருந்தது. மேலைத்தேய திரைப்படங்கள் தொடர்பில் நிறைய அறிவிருந்தது. அவற்றைப் பற்றியெல்லாம் பேசுவார். அவருக்கு தனக்குத் தெரிந்த விடயங்களைப் பலரிடம் பேசி அவற்றைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் இருந்தது. மேலைத்தேய கலைஞர்கள் பற்றியும், அந்த நாடகம் எப்படி, இந்த நாடகம் இப்படி நிறைய விஷயங்களை அவர் பகிர்ந்து கொள்வார். வருகின்ற இளைஞர்கள் எல்லோருக்குமே தன்னுடைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்ற ஒரு ஆவல் மிக்கவராக இருந்தார்.

ஜோர்ஜிடம் நான் கண்டுகொண்ட இன்னுமொரு இயல்பு என்னவென்றால், அதைச் சிறப்பியல்பா எதென்று சொல்லத் தெரியவில்லை. அவரைத் திருப்திப்படுத்துவது மிகச் சிரமம். அதாவது எவ்வளவு சிறப்பாகத் தான் நாம் ஒரு நாடகத்தில் நடித்தாலும், எவ்வளவு சிறப்பாகத் தான் நிகழ்ச்சியை செய்தாலும், ஜோர்ஜை நாங்கள் ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருப்போம், அவரிடம் போய் “ஜோர்ஜ்! எப்படி இருந்தது?” என்று கேட்டால் “ஏதோ இருந்தது” என்று சொல்லி விடுவாரே தவிர நன்றாக இருந்தது என்று ஒருநாளுமே அவர் சொல்ல மாட்டார். ஏனென்றால் அவருக்கு இன்னும் இன்னும் நிறைய விஷயங்கள் நன்றாகச் செய்யவேண்டும் என்ற ஆவல் இருந்தது.

அதற்குப் பின்னர் நாம் அவருடன் பேசிப் பழகிக் கொண்டு போகும் போது உண்மையிலேயே இவருக்கு வானொலியில் ஒரு குருவாக இருந்தவர் யாரென்று பார்த்தால் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தான் குருவாக இருந்திருக்கின்றார். ஜோர்ஜ் சென்ற் பெனடிக்ற் கல்லூரியில் கற்ற காலத்திலே, இளைஞர் மன்றம் என்ற வானொலி நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதற்காக அவர் வந்த போது பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தான் வானொலி அண்ணாவாக இருந்திருக்கின்றார். அவரால் புடம் போடப்பட்ட ஒருவராகத் தான் ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்கள் இருந்திருக்கின்றார். ஆகவே பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய வானொலி மாணாக்கர் ஜோர்ஜ் அவர்கள் என்றால் அது மிகையில்லை.

அதுமட்டுமல்ல ஜோர்ஜ் சந்திரசேகரன் ஒரு சிறுகதை எழுத்தாளர், ஒரு நாடக எழுத்தாளர், நாடக நடிகர், தொலைக்காட்சி நடிகர் இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போகலாம். இதைத் தவிர அவருக்கிருந்த சித்திரம் வரைகின்ற இயல்பைப் பற்றியும் சொல்லவேண்டும். அவர் அந்தக் காலத்தில் மித்திரன் இதழில் என்று நினைக்கின்றேன், சித்திரக் கதைகள் கூடச் செய்திருக்கின்றார். கே.எஸ்.சந்திரன் என்ற பெயரிலே இதைச் செய்திருக்கின்றார்.

மேலைத் தேய நாடகங்களை மொழிபெயர்க்கின்ற ஒரு பழக்கம் அவரிடம் இருந்திருக்கின்றது. குறிப்பாக அபத்த நாடகங்கள் என்ற அதாவது absurd play என்று சொல்லுவார்கள், அந்த நாடகங்களை எழுதுவதிலே, நடிப்பதிலே எல்லாம் அவருக்கு ஆர்வம் இருந்தது. அவர் நான் நினைக்கின்றேன் 1999 ஆம் ஆண்டு அபத்த நாடகங்கள் என்ற ஒரு நூலைக் கூட வெளியிட்டார். அந்த நூல் அவருடைய ஒரு மகளின் திருமணத்திற்காக, அந்தத் திருமணத்தை நினைவுகூர்ந்து வெளியிட்ட நூலாக அமைந்தது. அதாவது நத்தையும் ஆமையும் ( கே.எஸ்.பாலசந்திரன் இதில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்தவர்), சொர்க்கமும் நரகமும் என்ற இரண்டு நாடகங்களை கொண்ட தொகுதியாக அது அமைந்திருந்தது.

ஜோர்ஜ் அவர்கள் யோகர் சுவாமிகளின் “சும்மா இருத்தல் சுகம்” என்ற மகாவாக்கியத்தை மிகவும் பற்றிப் பிடித்திருந்தார். ஒரு சோம்பல் தன்மையோடு இருப்பார். ஆனால் நிறைய வேலைகளைச் செய்துகொண்டிருப்பார். யாராவது ஆட்டோகிராபில் எழுதக் கொடுத்தாலும் “சும்மா இருத்தல்” சுகம் என்று எழுதிக் கொடுத்து விடுவார். யோகர் சுவாமிகளின் அந்த மகாவாக்கியத்தில் எவ்வளவு தூரம் அவருக்குப் பற்றிருந்தது என்பதை நான் அறியேன். தனது மேசையில் கூட இந்த “சும்மா இருத்தல் சுகம்” என்பதை எழுதி வைத்துவிடுவார்.

மற்றையது அவர் மிகவும் சிறந்ததொரு சதுரங்க/செஸ் விளையாட்டுக்காரர். அநேகமாக ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் எழுத்துக்களை விரும்பி வாசிப்பார். அதாவது எல்லோரையும் விட வித்தியாசமான மனிதராக அவர் இருந்தார் என்று தான் நான் சொல்வேன்.

அவரின் ஆரம்ப காலத்திலே பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் பாராட்டுமளவுக்கு ஒரு சிறந்த கவிதைகளைப் படைக்கும் கவிஞராகக் கூட இருந்திருக்கின்றார். தாமாகவே கவிதை இலக்கணத்தைக் கற்று அதாவது யாப்பெருங்க் கலக்காரிகையை இந்தியாவில் இருந்த தன்னுடைய பேனா நண்பர் மூலம் பெற்று அதன் மூலம் கவிதை இலக்கணத்தைக் கற்று கவிதைகளை எழுதியிருக்கின்றார். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இவரின் கவிதையைப் பாராட்டி அப்போது வானொலியில் இசைப்பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த மணி பாகவதரிடம் கொடுத்து அதை ஒரு நிகழ்ச்சியிலே மெல்லிசைப் பாடலாகக் கூடப் பாட வைத்திருக்கின்றார்.

ஆங்கிலத்தில் செய்யப்படும் absurd play என்னும் அபத்த நாடகங்களை ஜோர்ஜ் தமிழுக்கு அறிமுகம் செய்தார். வானொலியில் தாளலய நாடகம் என்னும் வடிவத்தை அவர் மிகவும் சிறப்பாகக் கையாண்டார். அதே போன்று தொலைக்காட்சிக்கு நாடகங்களை எழுதியது மட்டுமல்ல அவற்றில் நல்ல பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல அவர் ஒரு தொலைக்காட்சிப் பிரதி எழுதி வைத்திருந்தார். தனியே விரல்களை மட்டும் வைத்துக் கொண்டே ஒரு கதையைச் சொல்கின்ற பாங்கில். தனியே விரல்கள் மட்டுமே காட்சியில். அதாவது ஒரு காதலன், காதலி விரல்கள். அவை திருமணத்திலே பற்றிப் பிடிக்கின்றன, முதலிரவிலே விரல்கள் பற்றிப் பிடிக்கின்றன, பிள்ளை பிறக்கின்றது விரல்கள், என்று தனியே விரல்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு நாடகப் பிரதியை எழுதியிருந்தார். இப்படி எல்லாவற்றையும் வித்தியாசமாகப் பார்க்கின்ற ஒரு மனிதராக அவர் இருந்தார்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலே சில புதிய முயற்சிகளான நாடகங்களை, அதாவது பரீட்சார்த்த நாடகங்கள் என்னும் நாடக முயற்சியிலே அவர் ஈடுபட்டார். பி.விக்னேஸ்வரன் அவர்களுடன் இணைந்து இந்த முயற்சிகளிலே அவர் ஈடுபட்டார். பிரதிகளை அவர் எழுதிக் கொடுக்க விக்னேஸ்வரன் அவற்றைத் தயாரித்திருக்கின்றார். அதுமட்டுமல்ல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மேடை நாடக விழாக்களிலும் கூட அவர் நாடகங்களை எழுதி, நடித்து, இயக்கியுமிருக்கின்றார். உண்மையில் இலங்கையின் நாடக வரலாற்றை எழுதும் போது ஜோர்ஜை விலக்கிவிட்டு நாடக வரலாற்றை எழுத முடியாது என்ற வகையில் ஜோர்ஜின் பங்களிப்பு நிறையவே இருந்திருக்கின்றது என்று துணிந்து சொல்லலாம்.

ஐரிஎன் என்னும் தொலைக்காட்சி தனியாரினால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின் அங்கு தமிழ் செய்திப் பிரிவுக்குப் பொறுப்பாக ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்கள் இருந்திருக்கிறார்.

ஜோர்ஜ் அவர்களுக்கு மேலைத்தேய இலக்கியங்கள் குறித்த மிகுந்த ஈடுபாடு இருந்தது போல், மகாகவி பாரதி மேலும் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதாவது பாரதியின் குயில் பாட்டை வானொலி வடிவமாக்கி வழங்கியது ஜோர்ஜ் தான். அதற்குக் குரல் வடிவம் கொடுத்து நடித்தார். நான் நினைக்கிறேன் இலங்கை வானொலியில் அந்த ஒலிப்பதிவு இன்னமும் இருக்கிறதென்று. உண்மையில் அவர் பாரதி மீது கொண்ட பற்றுக் காரணமாகத் தன் பிள்ளை ஒன்றுக்கு பாரதியென்றே பெயரைச் சூட்டியிருந்தார். அந்தப் பிள்ளையை மட்டக்களப்புப் பல்கலைக் கழகத்திற்கு நாடகம் தொடர்பான கற்கை நெறிக்குத் தான் அனுப்பியிருந்தார் என்று நினைக்கிறேன். இன்னொரு புதல்வருக்கு காஃப்கா (Franz Kafka ஜேர்மன் மொழியில் எழுதிய செக் எழுத்தாளர்)என்ற மேலைத் தேய எழுத்தாளரின் பெயரையே அவர் சூட்டியிருந்தார். அப்போது அவரின் உறவினர்கள் என்ன காக்கா என்று பெயர் வைக்கிறாயே என்று கிண்டலடித்தபோதும், இல்லை காஃப்கா என்னுடைய மனங்கவர்ந்த எழுத்தாளன். அவனுடைய பெயரை என்னுடைய பிள்ளைக்கு வைக்க உரிமையில்லையா என்று விடாப்பிடியாக இருந்தார்.

அவரால் எழுதப்பட்ட நான்கு நூல்கள் இருக்கின்றன. ஒன்று அவரின் “ஜோர்ஜ் சந்திரசேகரனின் சிறுகதைகள்” என்ற சிறுகதைத் தொகுதி. அதற்கு இலங்கை சாஹித்ய மண்டலப் பரிசு கிடைத்தது. அபத்த நாடகங்கள் கிடைத்தன. சருகுள் கசியும் ஈரங்கள் என்ற அவரின் வானொலியோடு தொடர்புடைய வாழ்க்கை வரலாற்றைப் படைத்திருந்தார். அதன் இரண்டாவது தொகுதியாக “வானொலியும் நானும்” என்ற நூலை வெளியிட்டிருந்தார். அதற்குப் பிறகும் அவர் பல இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டார்.

பேராசிரியர் மெளனகுரு அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார், தான் ஜோர்ஜ்ஜைச் சந்தித்தபோது நாடகம் தொடர்பான ஒரு பெரிய ஆய்வு நூலை எழுதி அவர் கையெழுத்துப் பிரதியாக வைத்திருக்கின்றார் என்றும் கேள்விப்பட்டேன். அவருக்கு கிழக்குப் பல்கலைக்கழகம் இரண்டாண்டுகளுக்கு முன்னர் சிறந்த விருதினை வழங்கியிருக்கின்றது. அப்போது தான் மெளனகுரு, ஜோர்ஜின் இந்த நாடகப் பிரதி பற்றிச் சொல்லி, இது நாடகம் தொடர்பான, மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் எல்லாம் அடங்கிய ஒரு நல்லதொரு நூலாக அமையும் என்று சொன்னார். இந்தத் தமிழ் கூறும் நல்லுலகம் முடிந்தால் அதனைப் பெற்று நூலாக்க முயற்சி செய்யவேண்டும். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எவராவது அதைச் செய்வாரேயானால் அது ஜோர்ஜுக்கு செய்யும் நன்றிக் கடனாக இருக்கும், மற்றையது தமிழ் கூறும் நல்லுலகின் நாடக வளர்ச்சிக்கு நாம் செய்யும் பெரிய கைங்கரியமாக இருக்கும். யாராவது இதற்கு முன்வர வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் உறவுகள் முடிந்தால் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்தவேண்டும். அவரது குடும்பத்தினர் மட்டக்களப்பு தாமரைக்கேணியிலே இசை ஒழுங்கை என்ற விலாசத்திலே அவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி இதைச் செய்யலாம்.

“எங்களை நாங்களே கூவிக் கூவி விற்க வேண்டும், மற்றவன் விற்பான் என்று எதிர்பார்க்கக் கூடாது” என்று சொல்லுவார்கள். ஜோர்ஜ் என்ற ஒரு பெரும் கலைஞன் அந்தக் காரியத்தைச் செய்யவில்லை. அதுதான் ஜோர்ஜ் விட்ட பிழை என்று நினைக்கிறேன். ஒரு முட்டையை இட்டு விட்டுக் கோழி போலக் கொக்கரித்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கின்றார்கள். அதைப் போல் நிறைய முட்டைகளை இட்டுவிட்டு ஆமை போலத் தூங்குகின்றவர்கள் இருக்கிறார்கள்.
ஜோர்ஜ் ஒரு ஆமையாகவே இருந்துவிட்டார். உண்மையிலே அவருக்குக் கிடைக்கவேண்டிய புகழ், பெருமைகள் இதைவிட இன்னும் பல இருக்கின்றன. ஆனால் அவற்றை அவர் தேடிப் போகவில்லை, தேடிப் பெறவில்லை.

நன்றி: அஞ்சலிப்பகிர்வையும், வானொலிக் கலைஞர்கள் தாங்கிய புகைப்படத்தையும் வழங்கிய திரு எஸ்.எழில்வேந்தன்

…………………………………………………………..
வடக்கு நோக்கி யந்த்ரம்

நீண்ட நாட்களுக்கு முன்னர் பார்த்து வியந்த படம் “வடக்கு நோக்கி யந்த்ரம். இந்தப் படத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்லி வைக்கவேண்டும் என்று நினைத்து அது கைகூடாமல் காலம் இழுபட்டுப் போய் விட்டது. ஆனால் சமீபத்தில் படித்த ஒரு செய்தியால், இந்தப் பதிவை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு விட்டது. அந்தச் செய்தி “வடக்கு நோக்கி யந்த்ரம்” தமிழில் நகைச்சுவை நடிகர் கருணாஸ் நடிக்க ” திண்டுக்கல் சாரதி” என்ற பெயரில் மொழி மாற்றப்படுவதாக வந்த செய்தியே அது. நீண்ட காலமாக மலையாளத்தின் தேர்ந்தெடுத்த படங்களைப் பார்த்து வருபவன் என்ற ரீதியில் எனக்கு மிகவும் ஜீரணிக்க முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று. தொடர்ந்து நல்ல பல மலையாளப் படங்கள் தமிழ் வர்த்தகச் சந்தையில் சோரம் போய்க் கொண்டிருக்கின்றன. அதில் “வடக்கு நோக்கி யந்த்ரமும்” இப்போது சேர்ந்து விட்டது. எப்படி ஒரு நல்லதொரு பழைய பாடல் ரீமிக்ஸ் கலவையால் சீரழிக்கப்படுகின்றதோ அதற்கு ஒப்பானது நல்ல பல திரைப்படங்களை மொழி மாற்றிக் கெடுப்பது.

மலையாள ரசிகரிடம் பிடித்த நல்ல படங்களின் பட்டியலைக் கேட்டால் நிச்சயம் வடக்கு நோக்கி யந்த்ரமும் பெரும்பாலும் அவர் பட்டியலில் இருக்கும். மலையாள சினிமா உலகில் கதாசிரியராக, இயக்குனராக, நடிகராக விளங்கும் சிறீனிவாசனின் கதை இயக்கத்தில் சிறீனிவாசனே நாயகனாகவும் , பார்வதி நாயகியாகவும் நடித்து 1989 இல் வெளிவந்த படம் அது. கேரள அரசின் சிறந்த திரைப்படமாகவும் அது தேர்வு செய்யப்பட்டது.

தலத்தில் தினேசன் (சிறீனிவாசன்) ஒரு அச்சுக்கூடத்தை நடத்தி வருபவன் அவன் வார சஞ்சிகையில் வரும் மனோதத்துவ கேள்வி பதில்களையே படித்து சதா சர்வகாலமும் அதன் நினைப்பில் இருப்பவன். சுமாரான தோற்றமுள்ள, அவனுக்கு மனைவியாகக் கிடைப்பதோ அழகுச் சிலையாய் தேவதையாய் ஷோபா (பார்வதி) என்றொரு பெண் . ஆரம்பத்தில் ஒரு அழகான பெண் தனக்குக் கிடைக்கின்றாளே என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் அவனுள் இருந்தாலும், அதுவே அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையையும், பயத்தினையும் உண்டு பண்ணுகின்றது. தன் மனைவியாக வாய்த்த ஷோபாவுக்கு தான் எந்த வகையிலும் குறைந்தவனில்லை என்று நிரூபிக்கவும், அவளுக்குத் தன் மேல் அதீத ஈர்ப்பு வருவதற்கும் தன்னால் என்ன செய்யலாம் என்று நினைத்தவனுக்கு, திருமணத்தின் முன் தான் வாசிக்கும் வாரப்பத்திரிகை கேள்வி பதில் தான் ஞாபகம் வருகின்றது. தன் நிலையைச் சொல்லி அந்தப் பத்திரிகைக்குக் கேள்வி மேல் கேள்வியாக அனுப்புகின்றான். பதிலில்லை. ஆபத்பாந்தவனாக வருகின்றார் நிருபராக வேலை பார்க்கும் தலக்குலம் சேர் ( இன்னசெண்ட்). தன் நிருபர் நண்பரின் கோமாளித்தனமான ஆலோசனைகளைக் கேட்டு முயன்று பார்த்து, எல்லாவற்றிலும் தோல்வியே காண்கின்றான் தினேசன், ஆனால் அவன் மனைவி ஷோபாவின் உள்ளார்ந்த நேசத்தை உணராமலேயே. நாளடைவில் தன் அழகான மனைவியை யாராவது கவர்ந்து போய் விடுவார்களோ என்ற சந்தேக நோய் தொற்றுகின்றது. இந்த சந்தேகப் பிசாசால், தன் தம்பியையே விரட்டியடிக்கின்றான். தாயின் நேசத்தை இழக்கின்றான். தன் வேலையைத் தொலைக்கின்றான். அயலில் இருப்பவர்கள், தன் வீட்டைக் கடப்பவர்கள் யாரைக் கண்டாலும் சந்தேகம், சந்தேகம் தான் அவனுக்கு. இதுவே தனேசனுக்கு மன நோயை உண்டு பண்ணி சிகிச்சைக்கு அனுப்புகின்றது. மனநோயாளி தனேசன் திருந்தினானா என்பது தான் கதையின் முடிவில் வரும் திருப்பம்.

ஒரு சாதாரண கருவை வைத்துக் கொண்டு, தன் நடிப்பாலும், பொருத்தமான காட்சியமைப்பாலும் பேர் சொல்ல வைத்த பெருமை சிறீனிவாசனுக்கே உண்டு. தனக்கு வரவேண்டியவள் எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும் என்பதில் இருந்து, பின்னர் அழகான மனைவியைக் கவர தினேசனாக வரும் சிறீனிவாசன் போடும் நாடகங்கள் வெகு இயல்பு.

சிறீனிவாசன் என்னும் பெரிய நாயகன் அந்தஸ்து இல்லாத நடிகருக்கு பொருத்தமான வேடமும், களமும், தேவையற்ற வர்த்தக சமாச்சாரங்கள் இல்லாத திரைப்படம் இது. எண்பதுகளில் தேர்ந்தெடுத்த பல இயக்குனர்கள் வருகையும், மம்முட்டி, மோகன்லால் போன்றவர்களின் மாறுபட்ட நடிப்பையும் கொடுத்திருந்த வேளை இந்தப் படம் தனித்துவமாக நிற்பதற்கு முழுமையான காரணமும் சிறீனிவாசனின் உழைப்பே எனலாம்.

தன் வீடு இருக்கும் வீதியில் இருக்கும் வாலிபர்களுக்கு நாசுக்காக ஆலோசனை சொல்லும் இடம், தன் மனைவிக்குப் பாடிக் காட்டப் பயிற்சி எடுப்பது, வேலை நேரத்தில் திருட்டுத்தனமாக மனைவியைப் பார்க்க வந்து கள்ளன் பட்டத்தோடு அடி வாங்குவது, புகைப்படம் எடுக்கப் போய் சொதப்புவது என்று ஆங்காங்கே காட்சிகளோடு இழையோடுகின்றது நகைச்சுவை.

சந்தேக நோய் முற்றி தன் தாய், தம்பியின் சொந்தத்தை இழப்பது, பகலென்றும், இரவென்றும் சதா அலைக்கழிக்கும் சந்தேகம் பின் மனநோயாளியாக்கி தான் நேசித்த ஷோபாவே வீட்டை விட்டு வெளியேறுவது என்று தொடரும் காட்சிகளிலும் அனுதாபத்தையும் அள்ளிப் போகிறார் சிறீனிவாசன்.
“வடக்கு நோக்கி யந்த்ரம்” தன் சுயத்தை இழந்து வரும் மலையாள சினிமாவின் முந்திய நல் விளைச்சல்களில் ஒன்று.