“1999″ - சபிக்கப்பட்ட இனத்தின் இன்னொரு கதை

admin February 20th, 2010

இன்று கனேடியா வாழ் ஈழத்தமிழர்களால் தயாரித்து இயக்கிய 1999 படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். அவுஸ்திரேலியாவில் தமிழகத்துச் சினிமாக்கள் வருவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், எமது ஈழத்துப் படைப்புக்களைப் பொறுத்தவரை, லண்டனில் தயாரான “கனவுகள் நிஜமானால்”, கனடாவில் தயாரான “தமிழச்சி”, ஈழத்தில் எடுக்கப்பட்ட “ஆணிவேர்” வரிசையில் 1999 படமே ஈழத்துப் படைப்பாகத் திரையைத் தொட்டிருக்கிறது. இவற்றில் “ஆணிவேர்” படத்தை நான் இங்கே திரையிட அவாக் கொண்டு எதிர்கொண்ட சிரமங்களை எல்லாம் ஒரு தொடராகவே எழுதலாம். ஒரு படத்தைத் திரையிடும் மோசமான அனுபவத்தை முதன்முறையாக (கடைசியுமாகவும் என்றும் சொல்லிவைக்கலாம்)எனக்குச் சம்பாதித்துக் கொடுத்தது “ஆணிவேர்” படத்தை இங்கே திரையிட்ட போது நான் சந்தித்த அனுபவங்கள். அதில் இருந்து நான் பெற்ற பாடம், எங்கள் மண்ணின் கதை சொல்லும் படைப்புக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று உணர்ச்சிப் பிழம்பாகப் பேசுபவர்களை ஒரு எல்லைக்கு மேல் நம்பக் கூடாது என்பதுதான். 1999 படத்தைப் பேச வந்து விட்டு ஆணிவேரைப் பற்றிப் பேசுகிறாரே என்று நீங்கள் முணுமுணுக்க முன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன்.

1999 படத்தினை எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அலோசியஸ் ஜெயச்சந்திரா திரையிடவேண்டும் என்று முனைப்புக் காட்டியபோது எனது ஆணிவேர் பாலபாடத்தை அவருக்குக் காதில் போட்டு வைத்தேன். அவருக்குத் துணையாக இங்கே சிட்னியில் இருக்கும் இந்தியத் தமிழர்களின் அமைப்பான “சிட்னி தமிழ் மன்றம்” கை கொடுத்தது ஒரு நல்ல முன்னுதாரணம் என்று சொல்ல வேண்டும். காரணம் பேசும் மொழி ஒன்றாக இருந்தாலும் ஈழத்தமிழருக்கு பல அமைப்புக்கள், இந்தியத் தமிழருக்குச் சில அமைப்புக்கள் என்று “என் வழி தனி வழி”யாகப் போகும் புலம் பெயர் சூழலில் இப்படியான நம்மவர் முயற்சிகளுக்கு தமிழக உறவுகளும் இணைந்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். சிட்னியில் 2 காட்சிகள் ஏற்பாடாகியிருந்தன. இரண்டுக்கும் நல்ல வரவேற்பு கிட்டியிருந்தது.

புலம்பெயர் ஈழத்தமிழர்களது படங்களைப் படங்களைப் பார்த்து நிரம்பிய அனுபவத்தோடு, என்னைத் தயார்படுத்திக் கொண்டே இந்தப் படத்தையும் பார்க்கத் தொடங்கினேன். காரணம், நம்மவர் தொழில்நுட்பத்தில் தம்மை விருத்தி செய்த அளவுக்குக் கதை சொல்லும் பாணியிலும், திரைக்கதை அமைப்பிலும் பல படிகளைக் கடக்கவேண்டும் என்பதை இதுநாள் வரை வெளிவந்த பல புலம்பெயர் தமிழர்களது சினிமாக்கள் உறுதிப்படுத்தியிருந்தன. குறும்படங்கள் பல சின்னத்திரை நாடகங்களோடு போட்டி போட, நம்மவர் சினிமாக்களோ அஜித், விஜய் போன்றவர்களின் ந(ர)கல் வடிவங்களாக இருக்கும் போக்கும் ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து நிலவும் வழமை. ஆங்காங்கே அத்தி பூத்தாற்போல நல்ல குறும்பட முயற்சிகளும் வராமல் இல்லை. புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் கனடா வாழ் உறவுகள் முழு நீள சினிமாக்கள் பலதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவை ஒருவாரமோ இரண்டு வாரமோ கனேடியத் திரையரங்குகளை மட்டும் முத்தமிட்டு விட்டு காணாமல் போய் விடும்.

இப்படியாக இன்னொரு நம்மவர் படம் தானே என்ற ஒரு தயார்படுத்தலோடு தான் 1999 படத்துக்கும் போனேன். வெண் திரை அகலக்கால் பதிக்கப் படம் ஆரம்பமாகின்றது. எடுத்த எடுப்பிலேயே இரவு நேரத்துக் கனேடிய நகரப் பெருந்தெருக்கள் வழியே காமெரா துரத்தக் கூடவே மேற்கத்தேயப் பின்னணி இசையும் பயணிக்க முகப்பு எழுத்தோட்டம் வருகின்றது. ஆகா, ஆரம்பமே கைதேர்ந்த தொழில்நுட்ப உத்தியோடு எடுக்கப்படுகிறதே என்ற உசார் மெல்ல வந்து ஒட்டிக் கொள்ள அவநம்பிக்கை மெல்லக் கழன்று கொள்கின்றது.
படத்தின் முதற்காட்சியில் வரும் கொலையை மையப்படுத்தி நகர்கின்றது தொடர்ந்து வரும் காட்சிகள். அந்த விறுவிறுப்பும், பார்வையாளனைக் கட்டிப் போடும் கதை நேர்த்தியும் படம் முடியும் வரை நிறைந்து நிற்கின்றது. அதுதான் 1999 படத்தின் பலம்.

இந்தப் படத்தின் கதையைப் பற்றி நான் பேசப்போவதே இல்லை, ஏனென்றால் அது இனிமேல் பார்க்கப் போகின்றவர்களுக்குச் சுவாரஸ்த்தை இழக்கச் செய்து விடும். ஆனால் இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்புக்களையே பகிர்கின்றேன். ஈழத்தின் உள்நாட்டுப் போரால் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உலகெங்கும் ஏதிலிகளாகச் சிதறி பரந்த ஈழத்தமிழினம், கனடாவில் மட்டும் பெரும்பான்மை சமூகத்தை உள்வாங்கிக் கொண்டது. ஆனால் இந்தப் புலம்பெயர் வாழ்வு வரமா, சாபமா என்பதில் ஒரு வெட்டுமுகமே 1999 படம் சொல்லும் செய்தி. குறிப்பாக எமது அடுத்த தலைமுறையில் ஒரு சிலர் தறிகெட்டு , வன்முறை நோக்கிக் குழுக்களாகப் பிரிந்து இலக்கற்ற வாழ்வை புலம்பெயர் சூழலில் அமைத்துக் கொள்ள முற்படும் போது அதன் தொடர்பிலான அவல வாழ்வியலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சூழல் அவர் தம் பெற்றோருக்கும், ஏன் அந்தச் சமூகத்துக்கும் கூட வந்தமைந்து பெருத்த சுமையாக மாறி, பெரும் விலை கொடுக்கும் முடிவைத் தந்து விடுகின்றது. இதுவே 1999 படத்தின் திரைக்கதை சொல்லும் சேதி.

கே.எஸ்.பாலசந்திரன் போன்ற மூத்த கலைஞர்களோடு இளைஞர்கள் பலரை முக்கிய பாத்திரங்களை ஏற்க வைத்து இயக்கியிருக்கிறார் லெனின் எம்.சிவம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வேண்டாத இடங்களில் கதையைத் திருப்பாமல் சொல்ல வந்த விஷயத்தைச் சுற்றியே கதைக்களத்தை அமைத்திருக்கின்றார். அந்த வகையில் கதை, திரைக்கதை ஆகியவை இரண்டுமே இப்படத்துக்குப் பெரிய பலமாக அமைந்திருக்கின்றது. 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடக்கும் கதை, அதே காலகட்டத்தில் நானும் புலம்பெயர்ந்த சூழலில் வாழ்ந்த போது நடந்த விஷயங்களை மீண்டும் இரைமீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பமாகப் பல காட்சியமைப்புக்கள் இருக்கின்றன. புலம்பெயர் சூழலில் அவதானிக்கும் விடயங்களை வைத்து வசனங்களை அமைத்திருப்பதும் அவற்றை ஈழத்தமிழ் பேசும் பாங்கில் சமரசமில்லாது வைக்கப்பட்டிருப்பதும் சிறப்பு, கூடவே அவற்றை நேர்த்தியாக வெளிப்படுத்தும் நடிகர்களும் சபாஷ் போட வைக்கிறார்கள். அந்தந்தப் பாத்திரங்கள் எப்படி எப்படியெல்லாம் தம் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்பதை மிகையில்லாமல் காட்சி அமைப்பிலும், வசன அமைப்பிலும் அடக்கியிருக்கிறார் இயக்குனர். இப்படத்தினைத் தந்ததன் மூலம் புலம்பெயர் வாழ்வியலின் விரிந்த தளங்களை இம்மாதிரி முயற்சிகள் மூலம் எதிர்காலத்தில் தரவிருப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றார்.

நான் அதிகம் பிரமித்துச் சிலாகிக்கும் விடயம் A.அருள்சங்கரின் படத்தொகுப்பு. ஒவ்வொரு காட்சிகளையும் வெவ்வேறு கேணங்களில் எடுத்து அவற்றை முன்பின்னாகப் பொருத்தி அமைத்த இந்தப் பாணி புதியதொரு அனுபவத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இப்படி முழுமையான புதிய தொழில்நுட்ப உத்தியோடு படத்தொகுப்பை அமைத்ததை இதுவரை நான் எந்தத் தமிழ் சினிமாவிலும் பார்க்கவில்லை. இதை நான் இங்கே மிகையாகச் சொல்லி வைக்கவில்லை. 1999 படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பட்டியலிட்டால் முதலில் வருவது அருள் சங்கரின் நேர்த்தியான படத்தொகுப்பு தான்.
இந்தப் படத்தை உலகத்தரத்துக்கு நகர்த்திச் செல்வதில் முதலில் நிற்பது படத்தொகுப்புத் தான்.

ராஜ்குமார் தில்லையம்பலம் பாடல்களுக்கு இசையமைத்துப், பின்னணி இசை வழங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் எழுத்தோட்டத்தின் பின்னணி இசைக் கோர்ப்பாகட்டும், இளைஞர் குழு எடுக்கும் பரபரப்பான முடிவுகளின் காட்சி அமைப்புக்களின் பின்னால் ஒலிக்கும் இசையாகட்டும் மிகவும் சிறப்பாக, சினிமாவுக்கேற்ற இசை நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பா, மகன் உரையாடல் காட்சிகள் போன்ற உணர்ச்சிபூர்வமான காட்சிகளின் பின்னால் அடக்கி வாசிக்கும் புல்லாங்குழல் ரக இசை மிகவும் அன்னியப்பட்டு தொலைக்காட்சித் தொடருக்குப் போவது போலப் பயமுறுத்துகிறது. இப்படியான காட்சிகளுக்கு இன்னும் வேறொரு பரிமாணத்தில் வித்தியாசமான இசைக்கலவையைப் பயன்படுத்தியிருக்கலாம். படத்திற்காக மொத்தம் ஆறு பாடல்கள் ஒரு தீம் இசை, எடுக்கப்பட்டாலும் இரு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட்டிருக்கின்றன. எஸ்பி.பாலசுப்ரமணியம், கார்த்திக் குரல்களில் கேட்ட பாடல்களைப் படத்தில் பார்க்கும் போது இன்னும் இனிமை.

படத்தின் ஒளிப்பதிவைப் பொறுத்தவரை இரவு நேரக் காட்சிகள், பாடற் காட்சிகள் போன்றவற்றில் இருந்த நேர்த்தியான கமெரக் கோணங்கள், ஒளியமைப்பு போன்றவை மற்றைய காட்சிகள் சிலதில் பொலிவிழந்து, ஒளி பெருகி சீரியலுக்குப் போவோமா என்று அடம்பிடிப்பது போல அமைந்ததைத் தவிர்த்திருக்கலாம். நுணுக்கமாகப் பார்த்தால் சில இடங்களில் கமெரா மெல்ல ஆட்டம் கண்டிருக்கிறது. அத்தோடு குளோசப்பில் முகங்களைக் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இந்த நுணுக்கமான குறைளைத் தவிர்த்தால் தொழில்நுட்ப ரீதியில் இன்னும் மேம்பட்ட படைப்பாக இது அமைந்திருக்குக்கும்.
அட, நம்மவர் படத்தில் பாடற்காட்சியை சிரிக்க வைக்காமல் சிறக்க எடுத்திருக்கிறார்களே என நினைக்கத் தோன்றுகிறது.

படத்தில் நடித்த எந்த ஒரு நடிகருமே தம் பாத்திரத்துக்கு மிகையில்லாமலும், குறையில்லாமலும் தந்தாலும், நாயகன் அன்புவாக வந்த சுதன் மகாலிங்கம், இளைஞர் கோஷ்டித் தலைவர் குமாராக வரும் திலீபன் சோமசேகரமும் ஒரு படி சிறப்பாகச் செய்கிறார்கள். மூத்த கலைஞர் கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் வரும் காட்சியமைப்புக்கள் குறைவு என்றாலும் அங்கேயும் நிறைவு. கனடாவில் இருக்கும் குழு மோதல்களை மையப்படுத்தியதாக அமைந்தாலும் எதிர்க்குழுவை படம் முடியும் வரை காட்டாது பயணிப்பது வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொருவரின் கோணத்தில் தம்மை நியாயப்படுத்தும் போது எங்கே இந்தத் தவறு நடக்கிறது என்று தர்க்க ரீதியான கேள்வி மனதில் எழுகின்றது.

“வன்னியில் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையை விடுதலைப்புலிகள் ஆரம்பித்திருக்கிறார்கள், ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கின்றன” படத்தின் முடிவில் வானொலி ஒன்றின் குரல் மேலெழுகிறது. மனம் பெருங்குரலெடுத்து அழுகிறது, என்னைப் போலவே பலரும் அதை உணர்ந்திருப்பார்கள்.

படம் முடிந்ததும் அரங்கம் கைதட்டிப் பாராட்டுகிறது.
புலம்பெயர் வாழ்க்கைச் சூழலில் அன்பு என்னும் திசை மாறிய இளைஞனின் போக்கில் கதையை அமைத்து அதனூடே சொல்லும் நிஜங்கள் சுடுகின்றன. ஊரை இழந்து, உறவை இழந்து புலம்பெயர்ந்து போன நாம் அங்கே நிம்மதியான வாழ்வை எதிர்கொண்டோமா, நம் இனம் சபிக்கப்பட்ட இனமா என்ற ஆதங்கம் மனதில் பாரமாக ஒட்டிக்கொள்கின்றது. அதுவே “1999″ படத்தின் உருவாக்கத்துக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.

ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்

admin February 11th, 2010


நேற்றைய இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் “உதயன்” பத்திரிகையினை இணையத்தில் விரிக்கின்றேன், ஒவ்வொரு பக்கமாக விரியும் ஈ பேப்பரின் ஒரு பக்கம் ஒரு அதிர்ச்சியான செய்தியைப் பகிர்கின்றது. அது, நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் காலமான ஈழத்துக் கலைஞர் செல்லையா மெற்றாஸ்மயில் அவர்களுக்கு அஞ்சலிச் செய்தியாக அமைகின்றது.

பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகத்தின் அமைப்பாளரும் பாரம்பரிய சைவ வல்லுநருமான கலாபூஷ ணம் செல்லையா மெற்றாஸ்மயில் கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது-65. நேற்றுப் பிற்பகல் நெஞ்சு வலியால் அவஸ்தைப்பட்ட அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவரின் உயிர் பிரிந்தது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட கலாபூ ணம் செ.மெற்றாஸ்மயில் யாழ்ப்பாணம்,தீவகம் ஆகிய கல்வி வலயங் களில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமை யாற்றி ஓய்வு பெற்ற பின் தற்போது கிளிநொச்சி கல்வி வலயத்தில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்தவர்.1945 ஆம் ஆண்டு பிறந்த இவர் புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலத்தில் கல்வி கற்று சித்தியடைந்த பின்னர் யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் உயர்தர வகுப்புப் படித்து கொழும்பு பல்கலைக்கழகம் சென்றவர்.

மேலே படங்கள் : மெற்றாஸ் மயில் அவர்களின் மேடையேற்றங்கள்

பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த அவர், அண்ணாவிமாரைக் கெளரவிப்பதிலும் அவர் கள் பற்றிய ஆவணங்களைத் தயாரிப்பதி லும் காத்திரமான பங்காற்றியவர்.”வேழம்படுத்த வீராங்கனை” என்ற நாட கத்தை நெறியாழ்கை செய்து பல மேடை யேற்றிய பெருமையும் இவருக்குரியது. பாரம்பரிய கலைகள் தொடர்பான பல நூல் களையும் இறுவெட்டுக்களையும் வெளியிட்ட மெற்றாஸ்மயில் சிறந்த நிர்வாகி என்ற பெருமையையும் பெற்றவர்.

செல்லையா மெற்றாஸ் மயில் கலைத்துறைக்கு ஆற்றிய பணிகளில் சில முத்துக்கள்

இசை நாடக நடிகனாக -

நாட்டுக்கூத்துக் கலைஞனாக விளங்கிய இவர், இசை நாடகக் கலையைப் பயில வேண்டும் என்ற ஆவலில் 1997 ஆம் ஆண்டு இசை நாடகத்தினை மூத்த கலைஞர்களிடையே பயின்று “சத்தியவான் சாவித்திரி” என்ற இசை நாடகத்தில் சத்தியவானாக நடித்தார். வள்ளி திருமணம் நாடகத்தில் விருத்தன் பாத்திரத்தை ஏற்று நடித்தார்,

நாட்டார் இசைப்பாடகனாக -

நாட்டார் பாடல்களில் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான வன்னிப் பகுதி நாட்டார் பாடல்களை தொகுத்து 1980 ஆம் ஆண்டு “வன்னி வள நாட்டார் பாடல்” என்னும் நூலை வெளியிட்டார். இவரின் முயற்சியால இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன யாழ்சேவை மூலம் துறை சேர்ந்த கலைஞர்களைக் கொண்டு நாட்டார்பாடல்கள் நிகழ்ச்சி “நாட்டார் இசை மாலை” என இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பவனி வந்தது.

கிராமியக் கலை ஆடவல்லோனாக -

பாரம்பரியக் கலைகளான மயிலாட்டம், கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம், கரகம், காவடி, குதிரையாட்டம் போன்றவற்றைப் பயின்று ஆற்றுகை செய்திருக்கிறார். குறிப்பாக இவர் 1993 ஆம் ஆண்டில் இளங்கலைஞர் மன்றத்தில் ஆடிய ஒயிலாட்டம் நிகழ்வை விழா மலர் ஒன்றில் காணக் கிடைக்கின்றது. யாழ்ப்பாணம் குருசாமி அண்ணாவியாரிடம் ஒயிலாட்டம் கலையைக் கற்றவர்.

கூத்து இசை நாடகத் தயாரிப்பாளனாக -

படித்தவர்கள் மட்டத்தில் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து இவர் வழங்கிய நாட்டுக் கூத்து “கண்ணகி வழக்குரை”. அதன் பின் “காத்தவராயன் கூத்து”,”வேழம்படுத்த வீராங்கனை கூத்து” வள்ளுவர் வாக்கு இசை நாடகம், சத்தியவான் சாவித்திரி இசை நாடகம், வள்ளி திருமணம் இசை நாடகம் போன்றவற்றைத் தயாரித்தார்.


கூத்து நெறியாளனாக -

வேழம் படுத்த வீராங்கனை போன்ற நாட்டுக் கூத்து இசை வடிவங்களினூடாக சிறந்த நெறியளானாக யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.

நூல் எழுத்தாளனாக -

இவரின் ஐந்து முக்கிய படைப்புக்களாக, வன்னி வள நாட்டார் பாடல் (1981), ஆனையை அடக்கிய அரியாத்தை (1993), இசை நாடக மூத்த கலைஞர் வரலாறு (1999), மண் வாசனையில் மூன்று நாடகங்கள் (2000), மரபு வழி இசை நாடகங்கள் ஒன்பது (2001) போன்றவை குறிப்பிடத்தக்கவை. அத்தோடு இவரது இரண்டு நூல்கள் வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்தியப் பரிசினையும், ஒரு நூல் மத்திய கலாச்சார அமைச்சின் கலைக்கழக சாகித்தியப் பரிசினையும் பெற்றுள்ளன.

மேலே படத்தில்: யாழ்ப்பாணம் மாதனை கிராமத்தில் ஆறு பெண்கள் ஒரு உரலில், ஒரே நேரத்தில் நெல்லுக் குற்றிப் பாடலைப் பாடி நெல்லுக் குத்தும் பாடலை இவர் ஆவணப்படுதியிருக்கின்றார். எனக்கு அனுப்பிய புகைப்படங்களில் மறக்காமல் இதையும் அனுப்பியிருந்தார்.


பாரம்பரியக் கலைகளின் பாதுகாவலனாக -

பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நாட்டின் குழப்பமான சூழ்நிலையிலும் வவுனியா , திருகோணமலை, மட்டக்களப்பு, மலையகம், மன்னார், உடப்பு, புத்தளம் ஆகிய இடங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று பல பாடல்களைப் பெற்று ஆவணப்படுத்தியிருக்கின்றார்.

இவரின் மேடையேற்றங்கள் படங்களாக

செல்லையா மெற்றாஸ்மயில் என்ற கலைஞனின் அறிமுகமும் எனக்கு உதயன் பத்திரிகை மூலம் தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டியது. 2006 ஆம் ஆண்டு என் தாயகத்துக்குச் செல்கிறேன். என் யாழ்ப்பாண மண்ணில் இருந்து கொழும்பு திரும்பும் நாளுக்கு முதல் நாள் உதயன் பத்திரிகையில் செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் அங்கம் வகிக்கும் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஈழத்து நாட்டுக்கூத்து, இசை நாடகங்கள் பதினொன்றை இறுவட்டிலே வெளியிடுகிறார்கள் என்றும், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் நிகழ்வும் இந்த விழா ஏப்ரல் 16, 2006 ஆம் ஆண்டு நிகழவிருப்பதாகவும் விளம்பரம் ஒன்று தென்படுகிறது. ஆகா, எமது மண்ணின் கலைவடிவங்களைப் பேணிப்பாதுகாக்கும் இந்தப் பணியைக் காணும் வாய்ப்பைத் தவற விடுகிறோமே என்ற பெரும் கவலை அப்போது எனக்குள். அந்த நேரம் பார்த்து யாழ்ப்பாணத்துக்கு என்னைப் போலவே நீண்ட நாட்களுக்குப் பின்னர் விடுமுறைக்காக அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த அபிமான வானொலி நேயரான திருமதி ஜெகந்தா பிரிதிவிராஜ் அவர்கள் என்னுடைய மொபைல் போனுக்கு எடுத்தார். என் கவலையை அவரிடம் சொன்னேன். “நீங்கள் ஒன்றும் கவலைப்படாதேங்கோ பிரபா, நான் அந்த சீடிக்களை உங்களுக்காக வாங்கிக் கொண்டு வருகிறேன். கூடவே உங்களின் ஈழத்துக் கலைப் படைப்புக்களை வைத்துச் செய்யும் வானொலி நிகழ்ச்சிக்காகவும் திரு செல்லையா மெற்றாஸ்மயிலைப் பேட்டி எடுத்து வருகிறேன் என்றார். அவர் சொன்னது போலவே 50 நிமிடம் திரு செல்லையா மெற்றாஸ்மயிலின் கலையுலக வாழ்வினை அழகான பேட்டியாக எடுத்ததோடு அவர் மூலமாக மேடையேற்றங்களின் படங்கள், 11 இறுவட்டுக்கள், அவரின் வாழ்க்கைப் பணியைக் கெளரவித்த விழா மலர் போன்றவற்றையும் வாங்கிக் கொண்டு வந்து தந்தார்.

இறுவட்டு நிகழ்வு அழைப்பிதழ்

இறுவட்டு நிகழ்வின் புகைப்படங்கள், ஏப்ரல் 17, 2006 யாழ் உதயனில் வந்த போது

திருமதி ஜெகந்தா பிரிதிவிராஜ் அவர்கள் எனது முற்றத்து மல்லிகை வானொலி நிகழ்ச்சிக்காக திரு மெற்றாஸ் மயில் அவர்களைப் பேட்டி கண்ட அந்த 50 நிமிடத் துளிகள் இதோ:

1945 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ்மயில் என்ற படம் வந்த போது அந்தப் படத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் இவரது தந்தை இவருக்கு மெட்ராஸ்மயில் என்று பெயரைச் சூட்டினாராம், இது வானொலிப் பேட்டியில் அவர் சொன்னது. இவரின் இந்தப் பேட்டியைக் கொடுக்கும் போது மெட்ராஸ் மெயில் படம் குறித்த விளம்பரத்தையும் இடவேண்டும் என்று நான் தேடி எடுத்து வைத்திருந்த படத்தையும் பகிர்கின்றேன். தன்னுடைய கலையுலக வாழ்வு மட்டுமன்றி கூடவே நாட்டுப்புற, இசை நாடகங்கள் குறித்த பகிர்வாக பாடியும் பரவசம் கொண்டும் இந்தப் பேட்டியை அவர் வழங்கியிருக்கின்றார்.





செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் நாட்டுக்கூத்து, இசை நாடகங்களைப் பாதுகாக்கவெண்ணி வெளியிட்ட அந்த இறுவட்டுக்கள் இவை தாம்:

சம்பூர்ண அரிச்சந்திரா (இசை நாடகம்) 5 மணி நேரம்
காத்தவராயன் (சிந்து நடைக்கூத்து ) - 6 மணி நேரம் ( 2 இறுவட்டுக்கள்)
சத்தியவான் சாவித்திரி (இசை நாடகம்) - 3 மணி நேரம்
நந்தனார் இசை நாடகம் ( இசை நாடகம்) - 1 1/2 மணி நேரம்
சிறீ வள்ளி (இசை நாடகம்) - 1 1/2 மணி நேரம்
கோவலன் கண்ணகி (இசை நாடகம்) - 2 3/4 மணி நேரம்
சாரங்கதாரன் (இசைநாடகம்) - 2 1/2 மணி நேரம்
பூதத்தம்பி (இசை நாடகம்) - 2 3/4 மணி நேரம்
பவளக் கொடி (இசை நாடகம்) 3 1/4 மணி நேரம்
நல்ல தங்காள் ( இசை நாடகம்) - 4 மணி நேரம்
ஞான செளந்தரி ( இசை நாடகம்) - 5 1/4 மணி நேரம் ( 2 இறுவட்டுக்கள்)

ஈழத்தின் இசை நாடகக் கலைஞர்கள் பலரை ஒருங்கிணைத்துச் செய்த இந்த ஒலி ஆவணப்படுத்தல் முயற்சியின் விளைவாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் கோயில்களிலும், விழாக்களிலும் விடிய விடிய அரங்கேறும் முழு நீள இசை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களை அப்படியே முழு அளவிலாகப் பதிவு பண்ணிச் செய்த பெருமுயற்சியாக அமைந்தது. அந்த வகையில் செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் ஈழத்து இசை நாடகத் துறைக்கு ஆற்றிய பணி வரலாற்றில் பதிவு பண்ணத்தக்கதாக அமைந்து விட்டது.

செல்லையா மெற்றாஸ்மயில் அவர்களின் கலைப்பணியைக் கெளரவித்து தங்க்கிரீடம் என்ற மலரை 2002 ஆம் ஆண்டில் வெளியிட்டார்கள், அதனையும் நான் பேணிப் பாதுகாக்கும் ஒரு ஆவணமாக வைத்திருக்கிறேன். அதில் வெளியான சில கருத்துரைகளை இங்கே பகிர்கின்றேன்.

மெற்றாஸ்மயில், எல்லோரும் நேசிக்கும் ஒரு கலைஞன், எல்லோரையும் நேசிக்கும் ஒரு கலைஞன். பாரம்பரியக் கலையே தன் மூச்சு, பேச்சு என்று தன் முழு வாழ்வையும் அந்த நற்பண்புக்காகவே அர்ப்பணிக்கும் ஒரு கலைப்பித்தன் என்று கூறின் அது மிகையாகாது - அருட்திரு கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளார்

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மட்டுமன்றி வன்னிப் பிரதேசத்தில் கலை, பண்பாடு, பாரம்பரியங்களை வளர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதுடன் இதற்கு தனது பாரிய பங்கினை நல்கி வருகின்றார். கலை சம்பந்தமான நீண்ட அனுபவம் கொண்ட இவர் நூல்களை வெளியிட்டு இருப்பதுடன் மக்களுக்கும், மாணவர்களுக்கும் ஏன் சமுதாயத்திற்கும் கூட சிறந்த கலைப்படைப்பாளராகத் திகழ்கிறார் - யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை

கூத்துக்களில் ஆடுவது மட்டுமன்றி, கூத்துக்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது, நாட்டுப்புறக்கலைகளான பழமொழிகள் நாட்டார் பாடல்கள், இசை நாடகங்கள் போன்றவற்றைச் சேகரிப்பதிலு, அவற்றை ஆவணப்படுத்துவதிலும் இவரது பணி குறிப்பிடத்தக்கது - இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உயர் திரு க.பரமேஸ்வரன்

செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் 1992 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கால் வைத்த பின் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்தை நிறுவி அதன் மூலம் 15 மூத்த கலைஞர்களை ஒரே மேடையில் அமர்த்தி கிரீடம் அணிவித்து கெளரவிக்கக் காரணமாக இருந்ததுடன், சுமார் 36 மூத்த கலைஞர்களின் வரலாற்றையும் நூல் உருவில் கொணர்ந்தார். - பொன் தர்மேந்திரன் (விழா அமைப்புக்குழுத்தலைவர்)

இவர் தனது 45 வது வயதில் துணிச்சலுடன் கூத்தினைப் பழகியதோடு, “வேழம்படுத்த வீராங்கனை” நாட்டுக்கூத்தில் வன்னி மகாராசனாக ஆடும் ஆட்டத்தைப் பார்த்த பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் “வயதுக்கு மிஞ்சிய ஆட்டம்” எனப்புகழ்ந்துரைத்தார். கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை “பார்க்கப் பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது” என்று புகழ்ந்துரைத்ததுடன் சுமார் ஏழு மேடைகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்து ரசித்திருக்கின்றர்.
1990 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கோவலன் கூத்தை மேடையேற்றி பாண்டியரசனாக நடித்தார். இந்தக் கூத்து ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் ஒளிபரப்பப்பட்டது.

ஈழத்து இசை நாடக உலகில் செல்லையா மெற்றாஸ்மயிலின் இழப்பு ஒரு வெறுமையை ஏற்படுத்தியிருக்கின்றது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

மேலதிக தகவல் உதவி:
தங்கக்கிரீடம் விழா மலர்
உதயன் நாளிதழ்
வேம்படி இணையம்

நன்றி:
பேட்டியை எடுத்ததோடு ஆவணங்களையும், இறுவட்டுக்களையும் அன்பளித்த திருமதி.ஜெகந்தா பிரிதிவிராஜ்

Balibo - “நிர்வாணப்படுத்தப்பட்ட சுதந்திரத்தின் கதை”

admin January 24th, 2010

“No other profession calls on its practitioners to lay down their lives for their art save the armed forces and, in Sri Lanka, journalism…. Electronic and print-media institutions have been burnt, bombed, sealed and coerced. Countless journalists have been harassed, threatened and killed. It has been my honour to belong to all those categories and now especially the last” - Lasantha Wickrematunge (former editor of Sunday Leader) (இவர் எழுதிய கடைசி ஆசிரியர் தலையங்கத்தில் இருந்து மேற்கண்டது)

“வன்னியிலே தற்போது நடந்து வரும் சிறீலங்கா அரசின் மூர்க்கமான தாக்குதல்களுக்கு மத்தியில் இருந்து நான் உலகத்துக்கு இந்த அவலங்களை எடுத்து வருகின்றேன், எனக்கு பக்கத்தில் எல்லாம் குண்டுகளும், ஷெல்களும் விழுந்து வெடிக்கின்றன. நாளை என் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லாத ஒரு சூழ்நிலையில் இருந்து கொண்டு நான் உங்களோடு பேசுகிறேன்” - வன்னிச் செய்தியாளர் அமரர் பு. சத்தியமூர்த்தி (இந்தச் செய்தியை வழங்கிய ஒரு சில தினங்களுக்குள் அவரும் குண்டு வீச்சில் பலியாகின்றார்)

Balibo திரைப்படத்தின் டிவிடியை இன்று வாங்கித் திரையில் ஓட விடுகின்றேன். ஜீலியானா என்ற மங்கை Timor-Leste Commission for Reception, Truth and Reconciliation என்ற ஆணைக்குழுவின் முன்னால் பேசத் தொடங்குகிறாள். அவள் ஒன்பது வயதுப் பெண்ணாக இருந்த அந்த 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி கண்முன் நடந்த காட்சிகள் விரிகின்றன.

“இந்தோனோசியத் துருப்புக்கள் எமது கிழக்கு தீமோரின் தலைநகர் டிலிக்குள் ஊடுருவப் போகின்றன. எனவே எங்களை எல்லாம் இங்கிருந்து வேறு இடத்துக்குப் போகச் சொல்லி என் அப்பா பலவந்தப்படுத்தி அனுப்ப எத்தனிக்கிறார். Hotel Turismo என்ற என் அப்பாவின் ஹோட்டலில் தங்கியிருந்த Roger East என்ற அவுஸ்திரேலிய செய்தியாளருக்குக்கு நடந்த கொடூரத்தை நான் என் கண் முன்னே பார்க்கின்றேன்” குமுறலோடு வெளிப்பாட்ட ஜீலியானாவின் வார்த்தைகள் ஆணைக்குழுவிடம் கண்ணீருடன் சாட்சியமாக.


படம் தொடர்ந்து Roger East என்ற அந்தச் செய்தியாளரின் பயணமாக ஆரம்பிக்கின்றது. Australian Associated Press என்ற அவுஸ்திரேலிய செய்திஸ்தாபனத்துக்கு ஒரு சுதந்திர செய்தியாளனாகத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட Roger East ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்ட கிழக்குத் தீமோரின் வெளியுறவு அமைச்ச்சர் Jose Ramos-Horta ஐ சந்திக்கின்றார். கிழக்குத் தீமோரின் செய்திஸ்தாபனத்துக்கு Roger East தலைமையேற்று நடத்தவேண்டும், இந்தோனோசியா தம் நாட்டின் மீது கொண்டிருக்கும் வல்லாதிக்கத்தை வெளியுலகுக்குக் காட்ட வேண்டும் என்பதே Jose Ramos-Horta இன் விருப்பாக அமைகின்றது. ஆனால் அவுஸ்திரேலியாவில் இருந்து செய்தியாளர்களாகப் பயணப்பட்ட ஐந்து ஊடகவியலாளர்கள் கிழக்குத் தீமோர் - இந்தோனோசிய எல்லையில் இருக்கும் Balibo என்ற இடத்தில் வைத்துக் காணாமற் போன செய்தி என்ற ஒன்று மட்டுமே Roger East இந்த நாட்டுக்குப் பயணப்பட வைக்கும் ஒரே காரணியாக அமைகின்றது. Roger East கிழக்குத் தீமோர் வருகின்றார், எத்தனையோ போர் அவலங்களைச் சந்திக்கின்றார், அனுபவப்படுகின்றார், தான் தேடி வந்த அந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு நடந்த கோர நிகழ்வு கண்டு வெதும்புகிறார். தொடர்ந்து என்ன நடக்கிறது அதைத் தான் Balibo என்ற இப்படம் பேசுகின்றது.

ஜீலியானா என்ற சாட்சியத்தின் குரலாக ஆரம்பிக்கும் இப்படம், பின்னர் Roger East என்ற செய்தியாளன் ஐந்து ஊடகவியலாளர்களைத் தேடும் பயணமாக அமையும் காட்சிகள், இன்னொரு புறம் குறித்த ஐந்து ஊடகவியலாளர்கள் கிழக்குத் தீமோரில் ஒவ்வொரு இடங்களாகப் பயணப்பட்டு போரவலங்களைச் செய்திகளாகத் திரட்டும் சூழ்நிலையும் மாறி மாறிக் காண்பிக்கப்பட்டு Balibo பகுதியில் நடக்கும் கோரத்தாண்டவத்தோடு பார்வையாளனுக்குச் சொல்ல வந்த செய்தி பாரமாக ஏற்றி வைக்கப்படுகின்றது.

1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிழக்குத் தீமோர் வரலாற்றில் மறக்க முடியாத ஓர் ஆண்டு. மனிதப் பேரவலம் ஒன்று இந்தோனேசியாவால் கோரத்தாண்டவமாக கிழக்குத் தீமோரில் அரங்கேற்றிய ஆண்டு தான் அது. போர்த்துக்கீச தீமோர் என்று அது நாள் வரை போர்த்துக்கல் நாட்டின் காலணித்துவமாக இருந்த கிழக்குத் தீமோரை இந்த 1975 தன் பிடியை விடவும், தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது. ஆனால் தொடர்ந்த இந்தோனோசியாவின் வல்லாதிக்கத்தினால் மீண்டும் அடிமைச் சிறைக்குள் புகுந்து கொண்டது.

ஏன் எமக்கு இந்த நிலைமை? உங்கள் நாடு ஏதாவது செய்யக் கூடாதா? தன்னுடைய படையை அனுப்பி வைக்கக் கூடாதா? எமக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை குறைந்த பட்சம் ஐ.நா சபையிலாவது எடுத்துக் கொண்டு போய் உலகத்தின் கவனத்தை எம்மீது திசை திருப்பலாமே? ஜப்பான் உங்கள் நாட்டுக்குப் படையெடுக்கும் போதெல்லாம் எங்கள் ஆட்களை உங்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்து உயிர்த்தியாகம் செய்ய வைத்தோமே? எங்களுக்கு உங்கள் நாடு ஏதாவது செய்யலாமே? நிர்க்கதி நிலையில் இந்தோனோசியாவின் வல்லாதிக்கப் போர்ச் சூழலில் இருக்கும் கிழக்குத் தீமோர் அபலைகள் அந்த அவுஸ்திரேலியச் செய்தியாளர்களிடம் கேட்கிறார்கள். “என்னிடம் இதற்குப் பதில் இல்லை” என்ற வாறே சானல் 7 தொலைக்காட்சியின் செய்தியாளர் Greg Shackleton பெயர் தெரியாத அந்தக் கிராமத்தில் நின்று கொண்டு வீடியோ கமராவின் முன்னால் பேசுகிறார். இந்தோனோசியப் படைகள் அந்த இடத்தை நோக்கி நகர்கின்றார்களாம். அவசரமாக இன்னோர் இடத்துக்கு நகர்கின்றார்கள்.

Balibo பகுதி இப்போது இந்தோனோசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது, பெரும் ஆபத்து நிறைந்த அந்தப் பகுதிக்குப் போய் உன்னால் செய்ய செய்ய முடியும்? Roger East ஐ கிழக்குத் தீமோருக்கு அழைத்து வந்து Jose Ramos-Horta அவரைப் பார்த்துக் கேட்கிறார்.
உண்மைகள வெளியே வரவேண்டும், அந்த ஐந்து செய்தியாளருக்கும் என்ன நடந்தது என்ற உண்மையை நான் வெளியுலகுக்குக் கொண்டு வருவேன், அதன் மூலம் இந்தோனோசிய அரசின் வல்லாதிக்கத்தைக் காட்ட ஒரு வாய்ப்பும் கிட்டும் - இது Roger East.
“முட்டாள்தனமாகப் பேசாதே, இத்தனை ஆயிரம் எம் கிழக்குத் தீமோர் மக்கள் கொல்லப்படும் போது உங்கள் உலகத்தால் என்ன செய்ய முடிந்தது? ஐந்து வெள்ளையர்களை வைத்துத் தான் மனிதாபிமானம் பார்ப்பார்களா?” Jose Ramos-Horta .

படம் முழுவதும் கிழக்குத் தீமோர், இந்தோனோசியா மெல்ல மெல்லத் தன் ஆதிக்கத்தை பெரும் போர் கொண்டு நடத்திய அந்த நாட்களில் ஓட்டு மொத்த உலகமே கைகட்டி வேடிக்கை பார்த்த வலிக்கும் நிஜங்களைக் காட்சிப்படுத்துகின்றது. அன்றைய அவுஸ்திரேலியப் பிரதமராக இருந்த Malcolm Fraser மற்றும் அமெரிக்க அரசாங்கமும் இந்தோனோசியா கிழக்குத் தீமோரைக் கைப்பற்றி (அப்போது போர்த்துக்கீச தீமோர்) தன் 27 ஆவது மாகாணமாக அமைக்க முழுமையான ஆசி வழங்கியதை இப்படம் சொல்லிவைப்பதோடு இந்த வரலாற்றுத் தவறுக்குக் குட்டும் வைக்கின்றது.

சானல் 7 என்ற அவுஸ்திரேலியத் தொலைக்காட்சியின் சார்பில் Greg Shackleton (செய்தியாளர்), Tony Stewart (ஒலிப்பதிவாளர்), Gary Cunningham (படப்பிடிப்பாளர்), மற்றும் இன்னொரு அவுஸ்திரேலிய தொலைக்காட்சி சானல் 9 சார்பில் Brian Peters (படப்பிடிப்பாளர்), Malcolm Rennie (செய்தியாளர்) ஆகிய ஐந்து பேரும் கிழக்குத் தீமோரில் அப்போது நடந்த பேரவலத்தை போர்க்களத்தில் நின்று செய்தி திரட்டி வெளியுலகுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற முனைப்போடு செயற்பட்டதையும் அதற்கு அவர்கள் கொடுத்த விலையும் கூடவே இந்தச் செய்தியாளர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைத் தேடிப் போகும் Roger East சந்திக்கும் அனுபவங்கள் சொல்லும் செய்திகள் அன்று அடிமைப்பட்டுப் போகின்ற ஒரு சமுதாயத்தின் இறுதிக் கணங்களை வேதனையோடு சொல்லி மாய்கின்றது. மனதில் பெரும் பாரம் ஒட்டிக் கொள்கின்றது.

Jill Jolliffe என்ற அவுஸ்திரேலியச் செய்தியாளர் 1975 ஆம் ஆண்டில் இதே போர்ச்சூழலில் இருந்த போது ஐநது ஊடகவியலாளர்களுக்கும் நடந்த கோர முடிவை Cover-Up என்ற தனது நூலில் கொண்டு வந்திருக்கிறார். இந்த நூலை அடிப்படையாக வைத்தே Balibo என்ற இப்படம் Robert Connolly இயக்கத்தில் David Williamson திரைக்கதை அமைப்பில் 2009 இல் வெளிவந்திருக்கின்றது. Anthony M. LaPaglia என்ற அவுஸ்திரேலிய நடிகர் முக்கிய பாத்திரம் ஏற்றிருக்கின்றார். Melbourne International Film Festival இல் திரையிடப்பட்ட இப்படம் இதுவரை உலகத்தின் பெரும் கவனத்தை ஈர்க்காதது பெரும் குறை. இதையே ஹொலிவூட் நடிகர்கள் Morgan Freeman போன்றோர் நடித்தால் ஆஹா, ஓகோ என்றிருப்பார்களோ தெரியவில்லை. கிழக்குத் தீமோர் சந்தித்த பேரவல வாழ்வியலின் ஆரம்ப கட்டமான 1975 இல் நடக்கும் கதை அந்த உலகத்துக்கே எம்மை அழைத்துச் சென்று இந்தக் கொடூரமான போரின் பக்கங்களைக் காட்டுகின்றது. படத்தின் நிறைவில் சுதந்திர பூமியாக 1999 ஆம் ஆண்டில் மலர்ந்த கிழக்குத் தீமோரில் Jose Ramos-Horta என்ற போராளி 24 வருடங்களுக்குப் பின் தன் சுதந்திர பூமியில் காலடி வைத்துத் தன் மக்களோடு சுதந்திரக் களிப்பில் இருப்பதோடு நிறைவடைகின்றது. கொல்லப்பட்ட ஐந்து ஊடகவியலாளர்களுக்கும், கூடவே அவர்களைத் தேடிச் சென்ற Roger East இற்கும் நீதி இன்னும் கிடைக்கவில்லை என்ற உண்மையை சிகரெட் நெருப்பாகச் சுடவைத்து நிறுத்தி ஓய்கிறது இப்படம்.

ஒரு ஊடகவியலாளனாகப் போர்ச் சூழலை முகம் கொடுக்கும் விதம், அந்த வெளிநாட்டு ஊடகவியலாளனை ஏதோ அரச பிரதிநிதி போலக் கையேந்தி நிற்கும் விதம் Jose Ramos-Horta என்ற போராளி இறுதி வரை தன் இலட்சிய வேட்கைக்காகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் விதம் என்று ஓராயிரம் செய்திகளை வெகு யதார்த்தமாகச் சொல்லி வைக்கும் இப்படம் கிழக்குத் தீமோரின் போரியல் வரலாற்றையும், அது சுதந்திரத்தை நாடிய விதத்தையும் ஒரு வெட்டு முகமாகக் காட்டி நிற்கின்றது. டிவிடியோடு இணைத்த மேலதிக டிவிடி ஒன்றிலும் விடுபட்ட செய்திகள் ஆவணங்களாகக் காண்பிக்கப்படுகின்றன்.

(Just days before his death, Greg Shackleton paints “Australia” on a shop wall in Balibo in East Timor in 1975.photo courtesy: The Age Newspaper)

தாம் Balibo வில் தங்கியிருக்கின்ற Chinese house இன் முன் சுவரில் Australia என்று சிவப்பு மையினால் எழுதி வைத்தால் எங்களை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கும் Greg Shackleton (சானல் 7 செய்தியாளர்), பின்னர் இந்தோனோசிய இராணுவம் ஊடகவியலாளர்களை நடாத்திய கொடூரமும், பின்னர் அதைச் சாதாரணமாக “இராணுவம் முன்னேறிய போது தவறுதலாகச் சுடப்பட்டார்கள்” என்று இந்தோனோசிய அரசு சொல்லிய சப்பைக் கட்டை இன்று வரை ஏற்கும் உலகமும் என்று முழுமையான வலி தாங்கிய உண்மைச் சம்பவங்களின் கோர்வையாகத் தான் இந்தப் படம் அமைந்திருக்கின்றது.


கொல்லப்பட்ட செய்தியாளர் Greg Shackleton இன் மனைவி பின்னாளில் கிழக்குத் தீமோர் சுதந்திரத்துக்காகத் தீவிரமான போராட்டக்காரராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தோனோசியா தந்த கொடுந்துயரில் பாதிக்கப்பட்ட 8000 கிழக்குத் தீமோர் அபலைகளின் வாக்குமூலங்களைத் தான் ஜீலியானா என்ற பாத்திரத்தின் வாயிலாகப் பேசுகிறது Balibo.

படம் நிறைவை நாடும் கணங்கள் வருகின்றன. மீண்டும் ஜீலியானாவின் சாட்சியத்தைக் காட்சி பகர்கின்றது.
நாளை உன்னுடைய மிச்ச அனுபவங்களைச் சொல்வாயா? - ஆணைக்குழு அதிகாரி ஜீலியானாவைப் பார்த்துக் கேட்கிறார்.
கடந்த 24 வருச கொடும் போர்ச் சூழலில் நான் சந்தித்த எல்லா அவலங்களையும் கேட்க உங்களுக்கு நேரம் கிட்டுமா? எத்தனை நாட்கள் உங்களால் இதற்காக ஒதுக்க முடியும்? எந்த அவலத்தை நான் சொல்லாமல் விடுவது? சொல்லுங்கள்? ஜீலியானா குமுறிக் கொண்டே கேட்கிறாள் அந்த அதிகாரியைப் பார்த்து.

அந்தக் குரல் முப்பது வருஷங்களுக்கு மேலாக இன்னும் ஓய்வில்லாத அடிமைச் சூழலில், முள் வேலிகளுக்குள் இருக்கும் அபலைகள், சிறைச்சாலைகளுக்குள்ளும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள், அரச பயங்கரவாதத்தை வெளியுலகுக்குக் காட்ட முனைந்து தம் உயிரை அதே பயங்கரவாதத்துக்குப் பறி கொடுத்த ஊடகவியலாளர்கள், சொந்த நாட்டில் இருந்து உயிரை மட்டும் பிடித்தால் போதும் போதும் என்று உலகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கின்ற ஏதிலிகள் என்று ஈழத்தின் ஒட்டு மொத்த வலிகளையும் பொருத்திப் பார்த்து வேதனைப்பட்டு நிற்க முடிகின்றது.

ஆண்டாண்டு காலமாகப் வெறும் பட்டியல் போட்டு வைக்க முடிகின்றது எம்மவர் அவலங்களை. “Who is Lasantha” என்று கேட்கும் கோத்தபய ராஜபக்க்ஷேக்களை கைகுலுக்கி வைக்கிறது உலகம்.

வானொலியில் பணி புரியும் காலத்தில் ஈழத்தில் இருந்து செய்திகளை மறுமுனையில் கொடுத்த ஊடகவியலாளர்கள் நிலையும் இப்படம் காட்டிய அதே நிலைதான்.

புலம்பெயர்ந்த சூழலில், கிழக்குத் தீமோர் மக்கள் ஈழத்து அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததை அனுபவ ரீதியாகப் பல எழுச்சி நிகழ்வுகளில் கண்டிருக்கின்றேன். அவர்களின் பிரதிநிதி ஒருமுறை எங்கள் அமைப்பு ஒன்றின் பிரதிநிதியிடம் சொன்னாராம், “எங்களுக்கு முன் உங்கள் நாட்டின் விடுதலை தான் கிட்டியிருக்கும்” என்று நினைத்தேன் என்று. அவருக்குத் தெரிந்திருக்காது ஒற்றுமை இல்லாத எம் சமூகம் கொடுத்த பெரிய விலை இது என்று.

அன்று தொட்டு இன்று வரை உலகம் கண்மூடி நிற்கின்றது, ஐ.நாவில் உதடு ஒட்டாது ஜனநாயகம் பேசப்படுகின்றது, எங்கோ ஒரு மூலையில் சுதந்திரம் நிர்வாணப்படுத்தப்படுகின்றது.

தகவல் குறிப்புக்கள் நன்றி:
Balibo திரைப்பட இணையம்
Balibo உசாத்துணை டிவிடி
விக்கிபீடியா
Scribe Publications

அன்ரெனா திருப்பு…! தூரதர்ஷன் பார்க்க,

admin January 7th, 2010

“என்ன தெரியுதா..இன்னும் திருப்ப வேணுமோ?”
“இன்னும் கொஞ்சம்…கொஞ்சம்…ஆ இப்ப சரி படம் வருகுது”

கூரையில் இருந்த அன்ரெனாவின் கழுத்தை மத்தாகத் திருகிக் கைவலித்த சின்ன அண்ணன் கீழே ஓடி வருகிறார். வீட்டுக்குள் இருந்து ரீவியின் காதைத் திருகித் திருகிப் படம் வரப் பண்ணி ஓரளவு ஆடி அசையும் முகங்களைக் கண்ட சந்தோசத்தில் நான்.

இதெல்லாம் ஒரு காலத்தில் எங்களூர் வீடுகளில் பெரும்பாலும் காணும் நிகழ்வுகள் தான். எதற்காக இந்தப் பகீரதப் பிரயத்தனம் என்றால் அது வெள்ளிக்கிழமை “ஒலியும் ஒளியும்” தூரதர்ஷனில் பார்க்க வேண்டுமே.

இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்பது போல என்னதான் இலங்கை வானொலியும், ரூபவாஹினி தொலைக்காட்சியும் இருந்தாலும், திருச்சி வானொலியைக் கேட்பதும், தூரதர்ஷனைப் பார்ப்பதும் எங்களுக்கு அலாதியான விஷயங்கள். எண்பதுகளின் ஆரம்பத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள் எங்களூர் பணக்காரர் வீட்டுச் சொந்தங்களாக மட்டுமே இருந்தன. அப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியைக் காணாத சனம் சில புரளியையும் கிளப்பிவிட்டிருக்கும்.

“உந்தப் பெட்டியிலை இருக்கிற அன்ரெனாவை ராஜா தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை ஓடுற படம் வருமாம், சிறீதர் தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை போடுற படம் காட்டுமாம்” இப்படி தேவிமாமியின் தாய்க்கிழவி ஒரு புரளியைச் சந்தடி சாக்கில் போட்டு விட்டுப் போயிருந்தா.

தொலைக்காட்சிப் பெட்டிகளின் அறிமுகத்தை எங்களூர் வாசிகசாலைகள் செய்த கதையை முந்தி ஒரு பதிவில் சொல்லியும் இருக்கின்றேன்.

மெல்ல மெல்ல தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்ட ஒவ்வொரு வீட்டுக் கூரையிலும் கொம்பு (அன்ரெனா) முளைத்தது. அப்போதெல்லாம் ரூபவாஹினி தொலைக்காட்சி ஆரம்பித்த நாள் முதலே கலர் திரையில் தமது ஒளிபரப்பைத் தந்தாலும் அதைப் பார்க்கும் ஆர்வம் ஏனோ அதிகம் எமக்கு வரவில்லை. சின்னப் பிள்ளைகளை வைத்து “காயனா” என்ற பெயரில் ஒரு பாட்டு நிகழ்ச்சியும், “கோப்பிக் கடே” என்ற நாடகமும் , காதம்பரி, ஒரு சில ஈழத்துத் திரைப்படங்களைப் பாகம் பாகமாகக் காட்டியது என சொற்பமான சில நினைவுகளையுமே நினைவுகளையுமே ரூபவாஹினி விட்டுச் சென்றிருக்கிறது.

ஆனால் சென்னைத் தொலைக்காட்சி மேல் அந்தக் காலத்தில் இருந்த வெறிபிடித்த ஆசையை நினைத்தால் இன்றும் வியப்பாக இருக்கின்றது. கலர்ப்படங்கள் வந்த காலத்திலும் பிடிவாதமாக கறுப்பு வெள்ளைப் படங்களை எடுத்துத் தள்ளிய பாலசந்தர் ரகமாய் தூரதர்ஷனும் தன்னுடைய ஒளிபரப்பை அந்த எண்பதுகளிலும் கறுப்பு வெள்ளையாய் சில காலம் இருந்து வந்தது. அதனால் தான் ஒரு வேடிக்கையும் நிகழ்ந்தது. எப்போதாவது அத்தி பூத்தாற் போலத் தெளிவாக வரும் ஒளிபரப்புக்கு மத்தியில் பாயாச மழையாய் காட்சி தரும் ரீவியில் “கிளியரா வரப் பண்ணுறன் பாருங்கோ” என்று சின்ன அண்ணா அம்மாவிடம் கெஞ்சிக் கேட்டு வீட்டுக் கூரையில் ஏறிப் போய் அன்ரெனாவை ஒவ்வொரு பக்கமாகத் திருப்ப ஆரம்பிப்பார். அதிலும் ஒரு ரெக்னிக் இருக்கு. கீழ்க் குழாயில் செருகியிருக்கும் மேல்த்துண்டை மெல்ல நிமிர்த்தி லாவகமாக, மெதுவாகத் திருப்ப வேணும். கொஞ்சம் அதிகப்படியாகத் திருப்பினால் போச்சு “உள்ளதும் பேச்சேடா நொள்ளைக் கண்ணா” என்று திட்டு வாங்க வேண்டியது தான்.
சின்ன அண்ணரின் இந்த முயற்சிக்குக் கண்காணிப்பாளராக நான். வீட்டுக்குள் பாய்ந்து ரீவியை எட்டிப் பார்ப்பதும் வெளியில் ஓடி வந்து கத்துவதுமாக இருக்கும். சில வேளை திரையில் தோன்றும் பாயாச மழையைப் பார்த்து ஏதோ சனக்கூட்டம் தெரிவது மாதிரி இருக்கு என்று நானே முடிவுகட்டிப் பின்னர் டோஸ் வாங்கியதும் உண்டு.

எப்படா வெள்ளிக்கிழமை வரும் ஒலியும் ஒளியும் பார்க்கலாம் என்று காத்திருந்தால் அந்த நிகழ்ச்சி வருவதற்கு முன்னால் தமிழ்ப்பாடமெடுக்கும் பேராசிரியர் நன்னன் எல்லாம் தெளிவாகத் தெரிவார். ஏழரைக்கு ஒலியும் ஒளியும் என்று கடிகாரத்தின் நாடி பிடிக்கும் நேரம் பார்த்து ரீவித்திரை கழுத்தறுத்து விடும். சிலவேளை எங்கள் அன்ரெனா திருப்பும் படலம் ஒலியும் ஒளியும் ஆரம்பிப்பதற்கு முன்னிருந்து அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த நேரம் வரை கடந்து அலுத்துப் போவோம். தப்பித் தவறி நல்ல தெளிவான காட்சியா ரீவியும் குழப்படி இல்லாமல் வேலை செய்தால் ஆற அமர உட்கார்ந்து பார்ப்போம்.
“அரை மணித்தியாலத்தில் அஞ்சு பாட்டுப் போடலாமே, ஏன் உவங்கள் மூண்டோட நிப்பாட்டிட்டாங்கள்” என்றும் சில வேளை கடுப்பை ஏற்படுத்தும் தூரதர்ஷன். கோவா கலரில் “இயற்கை என்னும் இளைய கன்னி” சாந்தி நிலையம் பாட்டு, கறுப்பு வெள்ளையில் “காதோடு தான் நான் பேசுவேன்” என்று இன்றும் அருமையாகப் பெருமையாகப் பார்த்த பாட்டுக்கள் நினைப்பில் இருக்கு,.

புதிதாக வரும் ஐ.ஆர் ரக அரிசி விளக்கத்தோடு ஒருவர் “வயலும் வாழ்வும்” நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு சீரியசாகப் பாடமெடுப்பார். செய்திகளைத் தொடர்ந்து வரும் காணாமற் போனோர் அறிவிப்பை விநோதமாகப் பார்ப்போம். தூரதர்ஷன் தவிர இந்தக் காணாமற் போனருக்கு முக்கியத்துவம் கொடுத்த தொலைக்காட்சி உண்டா என்ன?

எண்பதுகளின் இறுதிப் பகுதியில் தூரதர்ஷன் சிக்கல் இல்லாமல் ஓரளவு ஒளித்தரத்தில் தன்னைக் காட்ட எங்களுக்கும் அடிக்கடி அன்ரெனா திருப்பும் வேலையும் அதிகம் இருக்கவில்லை.

ஒளிபரப்பு ஆரம்பிக்கும் முன் வளையமாகச் சுழன்று எழுப்பும் அந்த ஒலியை நாமும் வேடிக்கையாக வாயில் ரியூன் போட்டு ரசிப்போம்.


ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஒளிபரப்பில் “மஹாபாரத்” என்ற கணீர்க் குரலோடு வரும் பாடலோடு ராமானந்த் சாகரின் மகாபாரதம் பார்த்த காலமும் உண்டு. இரண்டரை மணி நேரப் படத்தில் ஆயிரத்தெட்டு இடைவேளைகளும், “தடங்கலுக்கு வருந்துகிறோம்” அறிவிப்பும் வந்து போகும். ஒரு நாற்காலியும் பேப்பரும் பின்னால் திரையும் அமைந்த செட் அமைத்து அரங்கேற்றிய இழுவை தொலைக்காட்சி நாடகங்கள் கழிந்து, மெல்ல மெல்ல நிகழ்ச்சிகள் மெருகேறி, “ரயில் சினேகம் ரயில் சினேகம்” என்று ஜேசுதாஸ் பாட பாலசந்தரின் இயக்கத்தில் நிழல்கள் ரவி நடிப்பில் வந்த “ரயில் சினேகம்”, ஓவ்வொரு
விதமான பெண் பாத்திரங்களை எடுத்து பார்த்திபன் போன்ற ஹீரோக்களை இணைத்து சுஹாசினி இயக்கிய “பெண்”, எஸ்.வி.சேகர் இயக்கிய “வண்ணக்கோலங்கள்” என்று வரிசை கட்டி வந்த நாடகங்களைப் பார்த்த ஞாபகமும் உண்டு. இவற்றுக்கு மத்தியில் சுஜாதா எழுதிய “டாக்டர் நரேந்திராவின் விநோத வழக்கு” நாடகமும் தனித்து நின்றது.

தேசிய ஒளிபரப்பில் என்றோ பார்த்த, அமிதாப்பச்சன் கூலிங் கிளாசுடன் வில்லன் கோஷ்டிகளுக்கு மத்தியில் மறைந்து பாடும் அந்த ஹிந்திப் பாடலின் முகவரி தெரியாமல் அந்த மெட்டை மட்டும் இன்னும் முணுமுணுத்துத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ஷோபனா ரவி, வரதராஜன் குரல்களில் வந்த செய்திகளின் தரமே தனி தான், அதெல்லாம் ஒரு காலம்

இருபது வருஷ இடைவெளியில் கடந்த சில வாரங்களாக கடல்கடந்து பொதிகையாய் என் வீட்டுத் தொலைக்காட்சியில் தெரிகிறது இப்போது. தேசியத் தொலைக்காட்சிகளாக மற்றைய நாடுகளில் இருக்கும் சேவைகள் தொழில்நுட்ப ரீதியிலும் நிகழ்ச்சித் தரத்திலும் எங்கோ உச்சத்துக்குப் போய் விட , பொதிகையின் ஒலித்தரமோ லவுட்ஸ்பீக்கரில் வரும் “சிறுபொன்மணி அசையும்” ரகமாக இருக்கின்றது. அதே காணாமல் போனோர் அறிவிப்புக்களும் செய்திகளைத் தொடர்ந்து வருகின்றன. வயலும் வாழ்வும் பெயர் மாறி வேறோர் பெயரில் வருகின்றது. நிழல்கள் ரவியும் ஏதோ ஒரு சீரியலில் போலீஸ் கதாநாயகன் வேஷம் கட்டி நடிக்கிறார். தனியார் தொலைக்காட்சிகள் சுவீகரிக்கமுன் உள்ள காலத்தில் வந்த உரிமம் வாங்கிய படங்களைப் போடுகின்றது. ஒரு காலத்து நினைவுகளை நெஞ்சுக்குள் புதைத்து வைத்த அதே திருப்தியோடு, அது மட்டும் போதும் என்று பொதிகை நினைக்கிறதோ.

ஈழத்தமிழர் எம் நெஞ்சில் உறங்கும் எம்.ஜி.ஆர்

admin December 24th, 2009

1987 ஆண்டு அது. அண்ணா தொழிலகம் என்ற உள்ளூர் உற்பத்தி நிறுவனத்தின் பற்பொடி தயாரிக்கும் களஞ்சியத்தின் தூசு பரவிய அறைக்குள் இருநூறு பேருக்கு மேல் அடைந்து கிடைக்கிறோம். அதுதான் எமக்கு அப்போது வாய்த்த தற்காலிக அகதி முகாம். பலர் கோயில்களுக்குச் சென்று அடைக்கலமாகி விட்டாலும், இந்த அண்ணா தொழிலகத்தின் நான்கு அடுக்கு மாடிக்கட்டடத்தின் கீழ் அறையில் ஒளிந்திருந்த எமக்கு இருந்த ஒரே அற்ப நம்பிக்கை தூரத்தில் இருந்து வரும் எம பாணம் எம்மைத் தாக்காது என்பது தான்.

தூரத்தில் இருந்து பாய்ந்து வரும் ஷெல் கணைகள் எங்கோ ஒரு மூலையில் குத்தி வெடிக்கும் ஓசை தொடந்து ஒலிக்கிறது. மாரிகாலம் தொடக்கி வைத்த பெருமழைச் சத்ததுக்கு மேலாக ஷெல் மழை ஓசை எல்லாப் பக்கமும் கேட்கிறது. அது வேறென்றுமில்லை காங்கேசன் துறை வீதிப்பக்கமாக நகர்ந்து வரும் இந்திய அமைதிப்படையினரின் முன்னெடுப்பின் கட்டியம் தான். அவர்கள் காங்கேசன் துறையில் இருந்து ஒரு அணியாகவும், பலாலிப்பக்கம் இருந்து இன்னொரு அணியாகவும் பிரிந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதல் தேவை முன்னே எதிர்ப்படும் எல்லாம் நாசமாகிப் போக வேண்டும். அதற்கு மேலால் தான் செயின் புளாக்குகள் எனப்படும் சுடுகலன்கள் பொருத்திய இராணுவ வண்டிகள் பாய்ந்து வரும். எல்லாப் பக்கமும் தன் கழுத்தைத் திருப்பி அந்த செயின் புளாக்குள் எறிகணைகளை ஏவிக் கொண்டே இன்னும் முன்னே முன்னே நகர்கின்றன.
அந்தப் படையணிக்கும் சரி, பாய்ந்து வரும் ஏவுகணைகளுக்கும் சரி கிளியர் ஆக வேண்டிய முன்னால் எதிர்ப்படும் கிராமங்கள் எல்லாமே புலிகள் தான். அதுக்கு ஆறு மாசக் குழந்தையும் சரி அறுபது வயது கிழவனும் சரி எல்லாம் ஒன்று தான்.

“என்ரை பிள்ளையார்க் கிழவா! என்னைக் காப்பாற்று”, பக்கத்து வீட்டுக்கார அன்ரி பெரும் குரலெடுத்து அழுகிறா. எனக்கு இரண்டு வயசு மூத்த பாலகுமார் முன்னால் மாட்டியிருக்கும் அம்மனின் படத்தையும், சாயிபாபா படத்தையும் மாறி மாறி நடுங்கிக் கொண்டே தொட்டுத் தொட்டு “தாயே….தாயே” என்று புலம்புகிறான்.

எல்லாரையும் பார்க்கையில் எனக்கு பயம் இன்னும் இரண்டு மடங்கு, மூன்று மடங்காக எகிறுகிறது. அம்மாவின் நைலெக்ஸ் சீலையில் என்னுடைய கண்ணீர்த் துளிகள் தொப்பு தொப்பாக விழ அவரின் கையைப் பிடித்துக் கொள்கிறேன் பயத்தோடு. அம்மாவின் வாயில் எல்லாத் தேவாரங்களும் ஒழுங்கில்லாமல் அவசரகதியில் புலம்பலாக வருகின்றன.

ஒன்று இரண்டாக ஆரம்பித்த அழுகுரல்கள் இப்போது ஒட்டுமொத்தமாக அந்தப் பற்பொடி அறையையே ஆக்கிரமிக்கிறது. ஏனென்றால், கிட்ட கிட்ட ஏவுகணை ஒலி கேட்குதே.

தொப்புள் கொடி உறவாக, கண்ணுக்குத் தெரியாத உறவுப்பாலத்தைப் போட்டு வைத்து ஒரு தாய் மக்கள் போல் பழகி அது நாள் வரை இருந்த இந்திய -ஈழ உறவை சிங்கள அரசியல் சாணக்கியம் விழுங்கி ஏப்பம் விட்டதன் அறுவடையின் பலனை அனுபவித்துக் கொண்டிருந்தோம். ஒபரேஷன் பூமாலை மூலம் சாப்பாட்டுப் பொதி போட்டு சில மாதங்களில் வாய்க்கரிசியும் அவர்களாலேயே போடப்படுகிறது.

மெல்ல மெல்ல அந்த ஏவுகணை மழை ஓய ஆரம்பிக்க, இருட்டுக் கட்டுகிறது வானம். அந்த இடைவெளியில் நாங்கள் இருந்த அகதி முகாமின் முற்றத்துக்குப் போய் இரவுக்குத் தேவையான கஞ்சியைத் தயார்படுத்த ஒரு கூட்டம் தயாராகிறது. இன்னொரு கூட்டம் றேடியோவில் பற்றறி போட்டு “ஆகாசவாணி” கேட்கத் தயாராகிறது. வானொலியைச் சுற்றி நின்ற பெரியவர்கள் எல்லோரதும் அப்போதைய ஒரே நம்பிக்கை
“எம்.ஜி.ஆர் விடமாட்டார், ஏதாவது செய்வார்”.

00000000000000000000000000000000000000000000000000000000
ஈழ விடுதலைப் போராட்டத்தின் தார்ப்பரியத்தை உணர்ந்து அதற்கு ஆதரவளித்த நாள் முதல் தான் இறக்கும் வரை இதய சுத்தியோடு செயற்பட்ட ஒரே தமிழினத் தலைவர் எம்.ஜி.ஆர் தான் என்பதை 22 வருஷங்கள் கழித்தும் இன்றும் நிரூபிக்கக் கூடியதாக இருக்கிறது இன்றைய அரசியல் களமும், தமிழீனத் தலைவர்கள் சொல்லும் காலத்துக்குக் காலம் உதிக்கும் வேதாந்தங்களும்.

தமிழக டி.ஜி.பி ஆக இருந்த கே.மோகன்தாஸ் எழுதிய “எம்.ஜி.ஆர் நிஜமும் நிழலும்” நூலை வெகு காலம் முன்னர் படித்திருந்தேன். அதில் போலீஸ்துறையில் தான் பணியாற்றிய காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை வரலாற்றுப் பதிவாக்கியிருந்தார். குறிப்பாக எண்பதுகளில் தமிழகத்தில் நிலை கொண்டிருந்த போராளி இயக்கங்களின் நடவடிக்கைகளும், அதனை எம்.ஜி.ஆர் அரசு நோக்கிய விதத்தையும் பல பக்கங்களில் சொல்லிக் கொண்டே போகிறார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தேசியத்தலைவர் பிரபாகரன் மீது எம்.ஜி.ஆர் கொண்ட நம்பிக்கை என்பனவெல்லாம் குறித்த சம்பவங்களோடு விரிகின்றன.
அது ஆங்கிலத்திலும் MGR, the man and the myth ஆக வந்திருந்தது.

0000000000000000000000000000000000000000000000000000
ஈழத்தில் எழுச்சிப் பாடல்கள் என்ற வடிவம் முளை விடுவதற்கு முன்னும் சரி, பின்னும் சரி எம்.ஜி.ஆரின் “தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை” போன்ற தத்துவப்பாடல்கள் போருக்கு அழைக்கும் பரணிப் பாடல்களாக அமைந்திருக்கின்றன.
வடமாகாணத்தின் மினிபஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவராக இருந்த பொன்.மதிமுகராசா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கழகத்தை ஆரம்பித்து அந்தக் கழகத்தின் 1991 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நினைவு நாளினை எங்கள் இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடத்திய அன்று தமிழீழ விடுதலைப் புலிகளில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தினை அழைத்துச் சிறப்புரை ஆற்றச் செய்திருந்தார். அப்போது கூட்டத்தோடு கூட்டமாக இருந்து நிகழ்வைப் பார்த்த எமக்கு, எம்.ஜி.ஆர் தலைவர் பிரபாகரனோடு நட்புப் பாராட்டிய காலங்கள், ஆரம்ப கால உதவிகளைச் சொல்லிக் கொண்டு போக அப்போது எமக்கெல்லாம் விழிகளை விரித்த வியப்பு வந்தது.

0000000000000000000000000000000000000000000000000
இந்திரா காந்தி இறந்த அந்த நாள் எங்களூரில் அப்பிக் கொண்ட சோகத்தைச் சிறுவனாகப் பார்த்த எனக்கு எம்ஜிஆரின் பிரிவைக் கேட்ட போது துடிதுடித்த எங்களவர் இன்னும் கண்ணுக்குள் நிக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் ஒபரேஷன் பவான் என்ற தொடர் அவலம் நடந்து கொண்டிருந்த காலத்தில் தான் எம்.ஜி.ஆரின் உடல் நலம் குன்றி நிரந்தரமாகப் பிரிந்தது எமது இனத்துக்கு இன்னும் சாபக்கேடு ஓயவில்லை என்று சொல்லாமல் சொல்லியது. இன்றும் எம்ஜிஆரைப் பெரு மதிப்போடு நெஞ்சில் வைத்துப் போற்றக் காரணம், அவர் அரசியலைக் கடந்து இதயசுத்தியோடு எமது போராட்டத்தைப் பார்த்தது மட்டும் தான். அதை இன்றைய அரசியல் விபச்சாரிகளிடம்/சந்தர்ப்பவாதிகளிடம் எதிர்பார்ப்பவன் முட்டாள் என்று சொல்லித் தெரிவதில்லை.

எம்ஜிஆர் என்ற தமிழகத் தலைவனோடு ஈழத்தமிழினத்துக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் தொலைந்து போனாலும் உங்களை மறவோம்.

இன்று எம்ஜிஆரின் 22 ஆவது நினைவு நாள்

வலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்

admin December 14th, 2009

“திட்டோ பாராட்டோ நான் கவனிக்கப்படுகிறேன்” என்று சொல்லுவார் முதுபெரும் ஈழத்து எழுத்தாளர் டொமினிக் ஜீவா.

என்னைப் பொறுத்தவரை என்னைப் பாதித்த விஷயங்களை, அவை நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி என் மனதில் பட்டதைப் பகிர்ந்து கொள்ளவே நான் ஊடகத்தைப் பயன்படுத்தி வருகின்றேன். இது என் 11 ஆண்டுகால வானொலிப் பணிக்கும் பொருந்தும், இந்த மாதத்தோடு நான்காவது ஆண்டு முடிந்து ஐந்தாவது ஆண்டில் தடம் பதிக்கும் வலைப்பதிவு ஊடகத்துக்கும் இது பொருந்தும். என்னை நான் சமரசம் செய்து கொள்ளாத எந்த விடயத்திலும் என்னை நான் ஆழம் பார்ப்பதும் இல்லை, மற்றவர்களின் மேல் திணிப்பதும் இல்லை. ஆனால் எனக்குத் தோன்றியதை ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொள்வதில் நான் எந்த வித சமரசமும் செய்து கொள்வதேயில்லை.

ஒருமுறை சகவலையுலக நண்பர் கேட்டார், எப்படி உங்களால் இவ்வளவு காலமும் சிக்கலுக்குள் மாட்டுப்படாமல் வலையுலகில் இருக்க முடிகின்றது என்று. உண்மையைச் சொல்லப் போனால், அந்த அரசியல் என்னையும் தாக்கியிருக்கின்றது. ஆனால் என்னை நான் சுலபமாக விடுவித்துக் கொண்டேன், கொள்கிறேன், கொள்வேன்.

வலையுலக மூதாதையர்கள் என்று சொல்லப்படும் ஒரு கூட்டம் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று புதிதாக வலைப்பதிவுக்கு வரும் இளையோரை ராக்கிங் செய்து பார்க்கும் போது வேதனையோடு பார்க்கின்றேன். ஏனென்றால் அதை நானும் அனுபவித்தவன் தானே. சுமார் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் நடிகை ரேவதி அவுஸ்திரேலியா வந்த போது அவரின் வானொலிப் பேட்டி நடக்கிறது. பேட்டியில் நேயர் ஒருவர் வந்து “ஈழப்போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு என்ன?” என்று கேட்கிறார். அன்று வானொலியைக் கேட்டு விலா நோகச் சிரித்த அதே மனநிலையோடு தான் இன்றும் இருக்கின்றேன். சும்மாவா சொன்னான் பாரதி “வாய்ச் சொல்லில் வீரரடி” என்று.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் சிட்னியின் ஒரு பிசியான உணவகத்தில் Take Away

கியூவில் நானும் நிற்கிறேன். எனக்கு முன்னால் “கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி” நூலைத் தன் முகத்துக்கு நேரே பார்த்த படி ஒருவர்.

சில வாரங்களுக்கு முன் சிட்னி நகரப் புகையிரத நிலையத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப ரயில் பிடிக்கக் காத்திருக்கின்றேன். என்னைக் கடந்து ஒருவர் வேகமாகப் போகிறார், கையில்

“கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி”.

கழிந்த நான்காவது வருஷ வலையுலகப் பங்களிப்பில் என்னாலும் ஏதோ செய்ய முடிந்ததே என்று சொல்லிக் கொள்ளும் விதமாக அமைந்தது என் கம்போடியப் பயணம் குறித்த வடலி வெளியீடான “கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி”. மேலே சொன்ன அந்த இரண்டு சந்தர்ப்பங்களும் உண்மையிலேயே ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் பேரானாந்தத்தைக் கொண்டு வந்தவை. கம்போடியா நூலை இன்னும் விரிவாக கலர் கலராக பெரும் புத்தகமாக ஆங்கிலப் பயண இலக்கியத்துக்கு நிகராகக் கொண்டு வரவேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது. வெளிநாட்டு வாழ்க்கையில் டொலரில் உழைத்து சொகுசுப் பயணம் என்று யாரோ ஒருவர் சொன்ன ஆற்றாமைப் பின்னூட்டம் எல்லாம் வலிக்கவில்லை, நகைப்பாக இருக்கிறது. ஏனென்றால் என் உலாத்தல்கள் அனைத்துமே தேடல்களாக, தேடல்களைப் பதிப்பித்தல்களாக மட்டுமே இருந்தன, இருக்கின்றன, இருக்கப் போகின்றன.

இது நாள் வரை எமது மண்ணின் மைந்தர்களை, அவர்கள் எழுத்தாளர்கள், நாடக, இசைக் கலைஞர்கள் என்று காட்டக் கூடியவர்களைச் சந்தித்த ஒலிப்பகிர்வுகளை நூலாகக் கொண்டு வரவேண்டும், கூடவே அந்த நூலோடு இணைப்பாக குறித்த ஒலி இறுவட்டுக்களை இணைக்க வேண்டும் என்பதே என் அடுத்த முனைப்பு.

என் மண்ணின் பகிர்வுகளுக்கு இன்னொரு களமாக அமைந்தது இந்த ஆண்டு ஆரம்பித்த குழுமப்பதிவு “ஈழத்து முற்றம்”. கூடவே ட்விட்டர் என்ற குறும்பதிவிலும் என் நாளாந்த எண்ணங்களைப் பகிர ஆரம்பித்திருக்கிறேன்.

“எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது” . என்றோ என் புலம்பெயர் வாழ்வின் தனிமையைப் போக்கிய சுரேஷ் சக்ரவர்த்தி என்ற கலைஞனை இந்த ஆண்டு வானொலிப் பேட்டி மூலம் சந்தித்ததும் என் வாழ்வில் மறக்க முடியாததொன்று.

மடத்துவாசல் பிள்ளையாரடி தவிர்த்து,

என் பயணப் பதிவுகளுக்காக உலாத்தல்

ஒலி மற்றும் இசைக்காக றேடியோஸ்பதி

வீடியோ காட்சித் தொகுப்புக்காக வீடியோஸ்பதி

அவுஸ்திரேலிய நடப்புக்கள் குறித்த கூட்டு வலைப்பதிவு

ஈழத்துப் பிரதேச வழக்குகள் சார்ந்த கூட்டு வலைப்பதிவான ஈழத்து முற்றம்

பாடகி பி.சுசீலாவிற்கான கூட்டு வலைப்பதிவான இசையரசி

என்றும் இன்னும் சில வலைப்பதிவுகளைக் கட்டி மேய்க்கின்றேன் ;-)

எல்லாப் பதிவுகளையும் ஒரே கூரையின் கீழ் திரட்டவெண்ணி “கானா பிரபா பக்கங்கள்” என்ற தனித்தளத்தையும் தொடர்ந்து இயக்கிவருகிறேன். இவையெல்லாவற்றையும் விட எனக்கு இன்னும் பெருமிதத்தைத் தருபவை உங்களைப் போன்ற உறவுகளைச் சம்பாதித்தது. அந்தப் பெருமிதம் தான் என் நாளாந்த வாழ்வின் ஒரு பகுதி சந்தோஷத்தைப் பங்கு போட்டுக் கொள்கின்றது. மறக்க மாட்டேன் உங்களை.

நேசம் கலந்த நட்புடன்

கானா பிரபா

வலைப்பதிவில் ஒரு வருஷம்

2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.

வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று

2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு

வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்

2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

00000000000000000000000000000000000000000000000000

கடந்த 2009 ஆண்டின் என் பதிவுகளின் தொகுப்பு

Madagascar கொணர்ந்த கார்ட்டூன் நினைவுகள்

தொட்டிலில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் போல என் பால்யகாலத்தில் அதிகம் பாதித்த இந்த கார்ட்டூன் படங்கள் இன்று வரை அதே ரசனையுடன் பார்க்க வைக்கின்றன. மனம் ஒடுங்கி கவலை ஆக்கிரமிக்கும் போது இளையராஜாவின் பாட்டுக்கு நிகராக ஒத்தடம் கொடுப்பது கைவசம் இருக்கும் கார்ட்டூன் சரக்குகள் தான்.

ஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக

தமிழ்த் தேசியத்தை நேசித்த டாக்டர் இந்திரகுமார், உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியவர். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற தொடர் கட்டுரையை வீர கேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது.

ஈழப்போராட்டம் பேசும் நூல்கள்

இந்தக் காலகட்டத்தில் தாயக விடுதலைப் பயணத்தின் போது தாம் சந்தித்த நேரடியாகச் சந்தித்த அனுபவங்களையும், கண்ட சாட்சியங்கள் மூலம் பலர் இந்த ஈழப்போராட்டத்தினை மையப்படுத்திய நூல்களை எழுதியிருக்கின்றார்கள். இந்த நூற்பட்டியலைத் திரட்ட வேண்டும் என்று முயற்சி எடுத்து இரண்டு நாள் வேலைத் திட்டத்தில் எடுத்துத் திரட்டியவையே இந்த நூற் பட்டியல்.

மரணத்தின் வாசனை” பேசும் அகிலன்

ஈழத்தின் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் மிகவும் நம்பிக்கை தரக்கூடிய இளையவர் த.அகிலன். அவரது சீரிய எழுத்துக்கள் கவிதைகள், நனவிடை தோய்தல்கள், சிறுகதைகள் போன்ற படைப்பிலக்கியங்களாக அமைந்திருப்பதோடு கட்புல ஊடகம் வழியும் எதிர்காலத்தில் தடம்பதிக்கத் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்.

Hunting the Tigers - சிறீலங்கா நடப்பு நிலவரம்

அவுஸ்திரேலிய தேசிய தொலைக்காட்சி SBS இன் Dateline நிகழ்ச்சியில் அதன் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் Amos Roberts சிறீலங்காவின் நடப்பு நிலவரம் குறித்து நேரடிப் பகிர்வினை Hunting the Tigers என்னும் ஒளியாவணம் மூலம் வழங்கியிருந்தார்.

Death on a Full Moon Day - நாளை வருவான் என் பிள்ளை

வன்னிஹாமி என்று ஒருவரல்ல, பல்லாயிரம் குடும்பங்களின் நிலை இதுதான். இருந்தால் சில ஆயிரங்கள், இறந்தால் ஒரு லட்சம் என்ற விதியோடு வேள்விக்குப் பலிகொடுக்க பலியாடுகள் சிப்பாய்களாக. தம் பிள்ளை மீண்டும் உயிரோடு வருவான் என்ற நினைப்பில் காத்திருக்கின்றார்கள். மிஞ்சுவது வாழைக் குத்திகளை நிரப்பி, சடலம் என்ற போர்வையில் காத்திருக்கும் ஏமாற்றங்கள்.

புகைப்பட அல்பம் கிளப்பிய ஞாபகம்

பிறகு தானே எல்லாம் மாறிப் போச்சு, ஆளாளுக்கு திக்குத் திக்கா தேச எல்லைகளைக் கடந்தவர்கள் ஒரு பக்கம், குண்டுவீச்சில் செத்துப் போனவை ஒருபக்கம், இதுகளை எல்லாம் பார்த்து வருத்தம் வந்து திடீர் திடீரெண்டு மேலை போனவை ஒருபக்கம், இண்டைக்கும் நடைப்பிணமாய் எஞ்சிய வாழ்வை கடனே என்று கழிக்கும் சிலர் ஒருபக்கம் எண்டு அந்தக் கூடு கலைஞ்சு போச்சு.

தமிழகம் - புலம்- சிறீலங்கா: இங்கிருந்து எங்கே?

இன்றைய சூழ்நிலையில் என் மனதுக்குள் உழன்று கொண்டிருக்கும் விஷயங்களைப் பேசா மடந்தையாக வெறுமனே விட்டுவிடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்து சில விஷயங்களைச் சொல்லலாம் என்றிருக்கின்றேன். இந்தக் கருத்துக்கள் என் சுய எண்ணத்தில் தோன்றியவை மட்டுமே ஆய்வு/வாய்வு பகுதியில் அடக்க எனக்கு உடன்பாடில்லை.

என் கம்போடியப் பயண நூல் பிறந்த கதை

நூலில் கொண்டு வருவது என்பது திரைப்படம் எடுப்பது மாதிரி. பலர் கைக்கும் போய்ச் சேரும் விஷயம். கூடவே வரலாற்றுப் பகிர்வுகளைத் தரும் போது உச்சபச்ச அவதானிப்பும், கவனமும், முறையான உசாத்துணையும் இருக்கவேண்டும். இந்த முயற்சியில் என் கம்போடியப் பயணப் பதிவுகளை கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு மேல் நேரம் எடுத்துப் பதிவாக்கினேன்.

அடுத்த பிறவியில் பூனையாய் பிறப்போம்!

“ஓ சிறீலங்கன் எண்டா சிங்களவன் மட்டுமாம், சரி” மனசுக்குள் சொல்லியவாறே மீண்டும் வேலைவாய்ப்புப் பணியகம் நோக்கி நடையில் பயணிக்கிறேன்.

மேலே இருந்து சூரியன் சிரித்துக் கொண்டிருந்தான்.

புலிகளின் குரல் - “வரலாறு திரும்பும்”

இந்த நேரம் முளைத்தது தான் புலிகளின் குரல். ஆரம்பத்தில் இரவு எட்டு மணியில் இருந்து ஒன்பது மணி வரை மட்டுமே தன் இருப்பை வைத்திருந்தது. பிரேமதாசா அரசின் தேனிலவுக்காலத்தில் வாங்கி வைத்து கொஞ்சக் காலம் ஒப்பேற்றிய பற்றறிகளும் தீர்ந்து விட எமக்குக் கிடைத்த அடுத்த மின்சக்தி உபகரணம் கார் பற்றறிகள், அதுவும் எல்லா இடமும் தீர்ந்து விட, அடுத்து வந்தது சைக்கிள் டைனமோ. சைக்கிளைத் தலைகீழாகக் குத்தி விட்டு ஒருவர் சைக்கிள் பெடலைச் சுழற்ற டயரில் மோதும் டைனமோ பிறப்பிக்கும் மின்சாரம் வயர் வழியே பாய்ந்து வானொலியை உயிர்ப்பிக்கும்.

ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை…..

சாதியம் சொல்லி கோயில் கிணற்றிலேயே தண்ணி அள்ள விடாமல் தடுக்கும் சமூகம், ஆராவது கோயில் படி மிதிச்சால் காலை முறிச்சுப் போடுவோம் என்று ஒரு பகுதி மக்களை தீட்டு என்று ஒதுக்கி வைத்த சமூகம், மூட நம்பிக்கையிலும் தாம் சளைத்தவர்கள் இல்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கின்றார்கள். இனி மெல்ல மெல்ல எல்லாம் விட்டதில் இருந்து தொடங்கும். சாதீயத்திமிரும், பிற்போக்குத் தனமும் கொண்ட எம் சமூகத்துக்குப் படிப்பினைகள் போதாது போல.

கவிஞர் இ.முருகையன் நினைவில்…!

ஈழத்தின் தமிழ் இலக்கியத்துறையில் நாடறிந்த மூத்த கவிஞரும் நாடக எழுத்துருப் படைப்பாளியுமான கலாநிதி இ.முருகையன் தனது 74 வது வயதில் நேற்று கொழும்பில் காலமானார்.

நடிகமணி வி.வி.வைரமுத்து 20 ஆம் ஆண்டு நினைவு இன்று

நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்கள் மறைந்து இன்றோடு 20 ஆண்டுகள் கடந்திருக்கின்றது.

கவிஞர் முருகையன் & நடிகமணி வி.வி.வைரமுத்து நினைவுப் பகிர்வுகள்

கவிஞர் முருகையனின் அஞ்சலி நிகழ்வு தேசிய கலை இலக்கியப் பேராவையால் கடந்த 06.07.2009 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்களும், கலாநிதி மனேன்மணி சண்முகதாஸ் அவர்கள் ஆற்றிய உரைகள் ஒலி வடிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஒரு குட்டியானையின் டயறிக்குறிப்பு

கழிந்து போன யூலை 7 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான குடும்பங்களில் எதையெல்லாம் மறந்திருப்பார்களோ தெரியாது ஆனால் அந்த நேரம் Channel 7 தொலைக்காட்சியின் The Zoo நிகழ்ச்சியை மட்டும் மறந்து தொலைத்திருக்கமாட்டார்கள். அது வேறொன்றும் இல்லை. அன்று தான் தன் வயிற்றில் 22 மாதங்களாச் சுமந்து வந்த தன் பிள்ளையை Thong Dee ஈன்ற பொழுதைக் காட்டிய விவரண நிகழ்ச்சி அது.

“இன்னமும் வாழும்” மாவை வரோதயன்”

“ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்” என்ற ஒலிப்பகிர்வாக கொடுக்க யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று எழில் அண்ணாவிடம் கேட்டபோது அவர் மாவை வரோதயனை அறிமுகப்படுத்தி வைத்தார். அன்றிலிருந்து வாரா வாரம் மாவை வரோதயனின் “ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்” இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது அந்த நிகழ்ச்சியில்.

“கே.டானியல் கடிதங்கள்” - ஒரு சாதி ஒழிப்புப் போராளியின் பயணத்தடங்கள்

“தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டவை பொதுக்கருத்துக்கள் ஆகிவிடமாட்டாது. சில சந்தர்ப்பங்களில் பொதுக்கருத்துக்கு தனிமனிதக் கருத்து மூலவேராகவும் அமைந்துவிடுகின்றது. ”

( கே டானியல் 15-12-83, “கே.டானியல் கடிதங்கள் )

கே.எஸ்.பாலச்சந்திரனின் “கரையைத் தேடும் கட்டுமரங்கள்”

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த கலைஞர். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் இவர் புலம்பெயர்ந்த மண்ணிலும் தன் கலைச் சேவையை ஆற்றி வருகின்றார். இவர் நடிப்புத் துறையில் மட்டுமன்றி எழுத்துலகிலும் தன் தடத்தைப் பதித்திருக்கின்றார் என்பது பலரும் அறியாததொன்று. குறிப்பாக வடலி வெளியீடாக இவரது “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி கனடாவின் Agincourt Community Centre இல் மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படுகின்றது.

“தொப்புள் கொடி” தந்து தொலைந்த “நித்தியகீர்த்தி”

தொப்புள் கொடி என்னும் தன்னுடைய நாவலை வெளியீடு செய்ய 3 நாட்களே இருக்கும் நிலையில் படைப்பாளி நித்தியகீர்த்தி அவர்கள் வியாழன் இரவு மாரடைப்பால் இறந்தார் என்ற சோகச் செய்தி இன்று காலை கிட்டியது. வரும் ஞாயிற்றுக்கிழமை தனது நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து, வியாழன் இரவு மெல்பனில் இயங்கும் உள்ளூர் வானொலியிலும் தனது நூல் தொடர்பில் பேட்டி ஒன்றை வழங்கிவிட்டுப் போன இரவே மாரடைப்பால் காலன் அழைத்த அவரின் கடைசி இரவாக அமைந்தது ஜீரணிக்க முடியாத செய்தியாக வருத்தத்தை விளைவித்திருக்கின்றது.

“வானொலி மாமா” சரவணமுத்து நினைவாக

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒரு விழுதான “வானொலி மாமா” என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த திரு.ச.சரவணமுத்து அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 30 திகதி தனது 94 வது வயதில் காலமானார்.

“16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை” - போக முன்

இது வெறும் கற்பனைக் கதை அல்ல, 16 வருஷங்களுக்கு முன்னர் என்னைச் சுற்றி நடந்த சம்பவங்களோடு பயணிக்கும் ஒரு நனவிடை தோய்தலாக அமைகின்றது. கொஞ்சம் பொறுங்கோ அவசரப்படாமல் கேளுங்கோ. இந்தக் கதையில் வரும் நாயகனோ அல்லது அவனைச் சுற்றி வரும் காதல் சமாச்சாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் நானும் இருப்பேன், நாயகனின் தோழர்களில் ஒருவன் வடிவில். எனக்கும் ஒரு கதை இருக்கும் தானே ;-)

16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை - யாழ்தேவி ரயில் பிடிக்க

“மச்சான்! நான் ஊருக்குப் போறன், வவுனியா வளாகத்திலை இருந்து படிச்சு ஒரு சாதாரணனா வெளியில வாற்தை விட நாட்டுக்காகப் போராடப் போறன், எங்கட சனத்துக்கு விடிவு வேணுமடா” அந்தக் கடைசி இரவில் குருமன் காட்டில் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து அந்த இரவில் பேசியது தான் வாசனோடு இருந்த கடைசி நாள்.

தமிழீழ மாணவர் எழுச்சியின் ஆரம்பம் : சில நினைவுகள்

கார்த்திகை 26, 2006 ஆம் வருஷம் மாவீரர் வாரத்தின் வானொலிப் பகிர்வாக ஈழத்தின் மாணவர் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான சத்தியசீலன் அவர்களை நேர்காணல் கண்டிருந்தேன்.

தமிழீழ மாணவர் எழுச்சியின் ஆரம்பம் : சில நினைவுகள்

admin November 24th, 2009

கார்த்திகை 26, 2006 ஆம் வருஷம் மாவீரர் வாரத்தின் வானொலிப் பகிர்வாக ஈழத்தின் மாணவர் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான சத்தியசீலன் அவர்களை நேர்காணல் கண்டிருந்தேன்.

சிங்கள அரச பயங்கரவாதம் தமிழினத்தின் மீதான அடக்குமுறையின் ஆரம்பமாக கல்வித் தரப்படுத்தல் முறைமையைக் கொண்டு வந்திருந்த வேளை தமிழ் மாணவர் பேரவை என்னும் அமைப்பை சத்தியசீலன் அவர்களோடு சக மாணவர்கள் ஆரம்பித்த அந்த இயக்கமே ஈழத்தின் போராட்ட வரலாற்றின் இளைஞர் சக்தியை ஒன்று திரட்டி ஆரம்பித்த போராட்டமாக அமைந்தது.

பேட்டியின் ஒலிவடிவைக் கேட்க

திரு சத்திய சீலன் அவர்களின் பேட்டியில் இருந்து சில துளிகள்

ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தமிழ் இளைஞர் ஒன்றயம் என்ற அமைப்பு தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற நோக்கோடு ஆரம்பித்தோம். இதற்கு அன்றைய அரசியல் சூழ்நிலைகளே காரணமாக இருந்தன.

1965 ஆம் ஆண்டு திருச்செல்வத்தை மந்திரியாக நியமிப்பதன் மூலம் தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலையில் இருந்து விலகிப் போவதை இளைஞர்களாகிய நாங்கள் அன்று உணர்ந்திருந்தோம். அதன் அடிப்படையிலேயே தமிழர் இளைஞர் ஒன்றயம் என்ற அமைப்பு தோற்றம் பெற்றது.

1970 ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்காவால் தரப்படுத்தல் கொள்கை கொண்டுவரப்பட்டது. இதனடிப்படையில் மாணவர்களை ஒன்று திரட்டி 1970 ஆம் நவம்பர் 23 ஆம் திகதி தமிழ் மாணவர் பேரவை தனது முதலாவது அரச எதிர்ப்பு ஊர்வலத்தை யாழ் முற்றவெளியில் நடத்தியது.

நாம், சிவகுமாரன் உட்பட பல இடங்களுக்குச் சென்று பிரச்சாரங்களை நடத்தினோம். இவ்வாறு டிசம்பர் 7, 1970 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை கூட்டத்துக்கு சென்றபோது ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் தேவையை உணர்த்தினோம். அந்தக் கூட்டத்தில் சந்தித்தேன் சின்னப்பையனாக இருந்த “பிரபாகரனை”. தமிழ் மாணவர் பேரவையில் தானும் இணைந்து பங்களிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அங்கேயே ஒரு ரூபா அங்கத்துவப் பணத்துடன் தமிழ் மாணவர் பேரவையில் அவரை இணைத்துக் கொண்டேன்.

1971 ஆம் ஆண்டு யூன் மாதம் தமிழீழத்தில் இருக்க முடியாத அரசியல் நெருக்கடியால் தமிழகம் சென்றேன். திருச்சியில் ஈ.வே.ரா பெரியாரை ஆகஸ்டில் சந்திக்கிறேன். எமது மாணவர் போராட்டத்தைப் பற்றி விளக்கி உங்கள் ஆதரவை எமக்குத் தாருங்கள் என்று கேட்டேன். அப்பொழுது
“இவையெல்லாம் சாத்தியப்படுமா?” என்று அவர் தனது பாணியிலேயே கேட்டார்.
“அவர்கள் பெரிய டாங்கிகளையும் துப்பாக்கிகளையும் வைத்து உங்கள் எல்லோரையும் அழித்துப் போடுவார்களே” என்றும் சொன்னார்.
“இல்லை அதை எதிர்த்து எங்களால் போராட முடியும், அந்த மனவலிமை எங்களுக்கு இருக்கிறது, உங்களுடைய ஆசி தான் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டேன்.
“சரி, நீங்கள் சொன்னதையெல்லாம் எழுத்து வடிவில் தாருங்கள் விடுதலை பத்திரிகையில் அதைப் பதிவாக்குகிறேன்” என்றார். அதைப் பதிவாக்கினார்.

ஜி.டிநாயுடு என்ற அன்றைய பிரபல விஞ்ஞானி, அவரிடம் சென்று எங்களுக்கான வாக்கி டாக்கி (walkie talkie) என்ற கருவியைச் செய்து தரும்படி கேட்டிருந்தோம். அவரும் உங்களுக்கான ஆதரவைச் சேருங்கள் என்று ஊக்குவித்தார்.

உரும்பிராயில் அமைக்கப்பட்ட மாணவர் பேரவையின் முன்னோடிகளில் ஒருவரும், தமிழீழ விடிவிற்காய் களப்பலியாகியவருமான தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவுத் தூபி

1972 டிசம்பருக்கு மீண்டும் ஈழம் வந்தோம். அப்போது அமுல்ப்படுத்த இருந்த அரசியல் யாப்புக்கு எதிரான போராட்டங்களை ஆரம்பித்தோம். அந்தக் காலகட்டத்தில் பாடசாலைச் சிறுவனாக இருந்த தம்பி பிரபாகரன் அடிக்கடி வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டார்.

படங்கள் நன்றி:
http://tamilmakkalkural.blogspot.com
www.tamilnation.org/

16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை - யாழ்தேவி ரயில் பிடிக்க

admin November 18th, 2009

ஏப்ரல் 10 ஆம் திகதி, வருஷம் 2015 காலை 6.15

வாடகைக் கார் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் பவ்யமாக வந்து நின்றது. கார் ஓய்ந்த வேகத்தில் குட்டித்தூக்கத்தில் இருந்த பிரசாத் விழித்துக் கொண்டான். கூடவே வந்த தம்பிராசா கார் எப்படா நிற்கும் என்று ஏங்கியிருந்தவன் போல அவுக்கென்று கார்க்கதவைத் திறந்து வெளியில் வந்து தன் கோடுபோட்ட கிப்ஸ் மார்க் சாரத்தை இரண்டுபக்கமும் துலாவிவிட்டுக் இடுப்பில் நிறுத்தினான். முன் சீட்டில் இருந்த பிரசாத்தும் மெல்ல எழும்பி வெளியே வந்து இரண்டு கைகளையும் மேலே நோக்கி உயர்த்தி ஒரு குறும் உடற்பயிற்சி செய்து அலுப்பை நீக்கி விட்டு தம்பிராசாவைப் பார்த்துச் சிரித்தான்.

“தம்பி! நீங்கள் இங்கேயே நில்லுங்கோ, நான் போய் ரிக்கட் எடுத்திட்டு வாறன்” பிரசாத்தின் பதிலுக்குக் காத்திரமால் கோட்டை புகையிரத நிலைய ரிக்கட் கவுண்டரை நோக்கிப் பாய்ந்தான்.
வாடகைக்கார்க்காரருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஒரு ஓரமாக பேவ்மன்ற் பக்கமாக நின்றான் பிரசாத்.

“தம்பி! சொல்லு வழி கேட்டுப்பழகு மோனை, அந்த நாளையை மாதிரி இல்லை இப்ப உலகம், நீயும் 20 வருஷமா பிடிவாதமா ஊருக்கு வாராமல் இருந்து விட்டு இப்ப வாறாய், கட்டுநாயககாவிலை பிளேன் எடுத்தா அடுத்த இருபது நிமிஷத்திலை பலாலியிலை நிப்பாய், உனக்கேன் இந்தக் றெயில் பயணமெல்லாம்?” யாழ்ப்பாணத்தில் இருந்து பிரசாத்தின் தாய் தங்கம்மா முதல் நாள் வரை தொலைபேசியில் இறைஞ்சியும் கேட்டால் தானே.

“அம்மா! கனகாலத்துக்குப் பிறகு வாறன், யாழ்தேவி எப்பிடி இருக்குதெண்டும் பார்க்காவேண்டாமோணை?”

ஒருமாதிரி தன் பிடிவாதத்தைக் காட்டி இன்று அதைச் சாதித்தும் காட்டும் முனைப்பில் கோட்டைப் புகையிரத நிலையம் முன் நிற்கிறான் இவன். தம்பிராசா ரிக்கட் எடுத்து வருவது தெரிகிறது.

“தம்பிராசா! இந்தப் பத்து நாளும் திக்குத் தெரியாமல் மாறியிருக்கிற கொழும்பிலை நீயும் இல்லையெண்டா என்பாடு கஷ்டமாயிருந்திருக்கும்” தன் நன்றியறிதலை காட்டும் தருணமிது என்று பிரசாத் ஆரம்பித்தான்.

“சும்மா போங்கோ அண்ணை, இதெல்லாம் என்ன பெரிய உதவியோ, உங்கட அப்பா எவ்வளவு தங்கமானவர், சுறுட்டுக் கொட்டிலுக்குள்ள இருந்த என்னை கொழும்பு காண வச்சு இப்ப நான் பேர் சொல்லுறது மாதிரி இருக்க அவர் தானே காரணம்” தம்பிராசா சாகும் வரைக்கும் கடன் கழிப்பான் போல.

பிரசாத்தின் தகப்பன் கனகசபை தமிழ் வாத்தியாராக இருந்தவர், கூடவே தோட்டவேலையும். வெள்ளன நாலு மணிக்கே தோட்டப்பக்கம் போய் இறைப்பு முடிச்சு பிறகு வீடு வந்து தாவடிப்பள்ளிக்கூடம் போய் பிறகு பின்னேரம் பள்ளிக்கூடம் முடிச்சதுக்குப் பிறகு மீண்டும் தோட்டத்தை எட்டி ஒருக்கால் பார்த்து விட்டு இணுவில் கந்தசுவாமி கோயிலுக்குப் போய் அங்கே இருக்கிற மடத்தடியில் இருந்து உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியலைப் பேசிவிட்டு இரவு ஒன்பது மணிச் செய்தியைக் கேட்டு விட்டுப் படுக்கைக்குப் போகும் சுழற்சி முறை வாழ்க்கையைக் கொண்டவர்.

“உந்தப் பொயிலையால (புகையிலை) என்ன கோதாரி லாபம் கிடைக்குது, உணர்த்திப் போட்ட பொயிலை எல்ல்லாம் பிறகு நாட்கணக்கில் கிடந்து இழுபடும், முந்தியெண்டா சிங்கள நாட்டுக்கும்
போகும், இப்ப தண்டவாளமே இல்லாம சல்லிக்கல்லு குவிஞ்சிருக்கு, உது உங்களுக்குத் தேவையோ?” பிரசாத்தின் தாய் என்னதான் சொன்னாலும் அவர் கேட்டால் தானே.

“இஞ்சை பாரப்பா! என்ர அப்புவின்ர காலத்திலை இருந்து செய்யிற தோட்டம், பணத்தை நம்பியே நான் செய்யிறனான்? தோட்டத்துக்குள்ளை இறங்காட்டி எனக்கு சீவன் போனது மாதிரி” பிடி கொடாமல் கனகசபையர் கதைப்பார்.

இனிமேல் பணப்பயிர்களை உற்பத்தி செய்வதை நிறுத்தி சீவனோபாய உற்பத்தியை பெருக்க வேணும் என்று விடுதலைப்புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் தமீழீழமெங்கும் சொன்ன காலத்திலை மட்டும் பக்கத்திலை இருந்த மாமியாட்களின் காணியிலை தக்காளி போட்டு காலம் தள்ளினார். இதெல்லாம் தொண்ணூறாம் ஆண்டுகளிலை.

கனகசபையரோடு தோட்டத்தில் கூட மாட வேலை செய்து , இறைப்புக்கு வந்து, புகையிலை வேளாண்மை முடிந்து கோடா போடும் வரை துணையாய் இருந்தவன் மாரிமுத்து. மாரிமுத்தன் தான் உவரின்ர பி.ஏ என்று பிரசாத்தின் அம்மா கிண்டலடிப்பார். மாரிமுத்துவின் மகன் தான் இந்த தம்பிராசா. அதிகம் படிக்காத தம்பிராசா சுருட்டுக் கொட்டிலுக்குள் தான் வாழ்க்கையைத் தேடப்போனான். ஆனால் கனகசபையர் தன்னுடைய சொந்தக்காரரின் வெள்ளவத்தைக் கடைக்கு அவனை அனுப்பி வைத்தார். படிக்காக விட்டாலும் தம்பிராசா நல்ல விசயகாரன் பத்து வருசத்துக்குள்ளை பம்பலப்பிட்டியில் ஒரு சின்ன பலசரக்குக் கடை போடுமளவுக்கு முதலாளி ஆகி விட்டான்.

பிரசாத் இருபது வருஷங்கள் கழித்து நாட்டுக்கு வருகின்றான் என்று அறிந்த நாள் முதல் அவனுக்கு தேவையான தங்குமிட வசதியெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்ததோடு தேவை ஏற்படும் போதெல்லாம் பிரசாத்தோடு ஒட்டிக்கொண்டு இடங்களைக் காட்டவும் போய்த் திரிந்தான். இந்த இருபது வருஷங்களில் கொழும்பு அடியோடு மாறி விட்டது. ஏதோ ஒரு வீறாப்பிலை இருந்திட்டன் என்று நினைத்துக் கொண்டான் பிரசாத்.

“யாழ்ப்பாணம் போவதற்கான ரயில் தயாராகி விட்டது” சிங்களத்தைத் தொடர்ந்து தமிழில் அறிவிப்பு கேட்டது. யாழ்தேவியை காணும் போது சொந்தக்காரரைக் காணும் சந்தோஷம். தாவி ஏறினான் பிரசாத். கூடவே தம்பிராசா பெட்டிகளோடு. இரண்டாம் வகுப்புப் பெட்டியில் யன்னல் ஓரமாக இடம் பிடித்துக் கொண்டான்.
“சரியண்ணை, அப்ப நான் வரப்போறன், சுகமாப் போட்டு வாங்கோ” தம்பிராசா பிரசாத்தின் கைகளை இறுகப்பற்றி விடை கொடுத்தான்.

சித்திரை வருஷப்பிறப்புக்கு ஊருக்குப் போற கூட்டம் பெரிதாக வரும் என்று நினைத்தான் பிரசாத். ஆனால் இப்பதானே சொகுசு பஸ், பிளேன் என்று இருப்பதால் சனத்துக்கு நிறைய சொய்ஸ், என்று முன்னால் இருந்த வெறும் சீட் ஒன்றைப் பார்த்து முணுமுணுத்தான்.

வவுனியா பல்கலைக் கல்லூரியில் கொஞ்சக் காலம் படித்த காலத்தில் வெள்ளி இரவு யாழ்தேவி எடுத்து வந்து கொழும்பில் சீமா (CIMA) கிளாசுக்கு சனிக்கிழமை போய் விட்டு பிறகு ஞாயிறு கொன்கோர்ட், ஈரோஸ் பக்கம் படம் பார்க்க ஒதுங்கி விட்டு பிறகு மீண்டும் வவுனியாவுக்கு ரயில் எடுத்த காலம் நினைவில் வந்து மோதியது. யாழ்தேவியின் டீசல் கலந்த ஒரு நச்சு மணமே பெர்பியூம் போல நாசிக்குள் நிறைந்திருந்தது.

தன் முதுகில் சுமந்து உப்பு மூட்டை காவுவது போல மெல்ல மெல்ல யாழ்தேவி தாள லயத்தோடு பயணிக்க ஆரம்பித்தாள். யன்னல் பக்கமாக குவிய வைத்த பிரசாத்தின் முகத்தை குப்பென்று காற்று அடித்து விட்டுப் போனது.

“இதயம் படத்திலை வாற முரளி மாதிரித் தான் இவர் யாழ் தேவியில போனா கற்பனை லோகத்துக்குப் போயிடுவார்” பிரசாத்தைப் பார்த்து கிண்டலடித்த வாசன் பக்கத்தில் இருப்பது போலப் பிரமை. அவனும் இவனோடு கூடவே சீமா கிளாசுக்கு கொழும்புக்கு வாற கூட்டாளி. கடைசியாக எப்ப நான் அவனைப் பார்த்தேன்.

“மச்சான்! நான் ஊருக்குப் போறன், வவுனியா வளாகத்திலை இருந்து படிச்சு ஒரு சாதாரணனா வெளியில வாற்தை விட நாட்டுக்காகப் போராடப் போறன், எங்கட சனத்துக்கு விடிவு வேணுமடா” அந்தக் கடைசி இரவில் குருமன் காட்டில் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து அந்த இரவில் பேசியது தான் வாசனோடு இருந்த கடைசி நாள்.

“16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை” - போக முன்

admin November 13th, 2009

இன்று உலகளாவிய ரீதியில் இணையம் அறிமுகப்படுத்திய நாள் (நவம்பர் 13, 1990)சுபயோக சுப தினத்தில் ஒரு தொடரை ஆரம்பிக்கலாமே என்று முனைப்போடு வந்திருக்கிறேன். இது வெறும் கற்பனைக் கதை அல்ல, 16 வருஷங்களுக்கு முன்னர் என்னைச் சுற்றி நடந்த சம்பவங்களோடு பயணிக்கும் ஒரு நனவிடை தோய்தலாக அமைகின்றது. கொஞ்சம் பொறுங்கோ அவசரப்படாமல் கேளுங்கோ. இந்தக் கதையில் வரும் நாயகனோ அல்லது அவனைச் சுற்றி வரும் காதல் சமாச்சாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் நானும் இருப்பேன், நாயகனின் தோழர்களில் ஒருவன் வடிவில். எனக்கும் ஒரு கதை இருக்கும் தானே ;-)
1993 ஆண்டில் இதே மாதிரி ஒரு நாள் மதிய நேரம். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் (பல்கலைக்கழக நுழைவு) படித்துக் கொண்டிருக்கின்றேன். இந்து நாகரீக பாடம் ஆரம்பமாகும் நேரமது. சற்று முன்னர் இடைவேளை மணி நேரம் முடிந்தாலும் ஃபாதரின் கன்ரீனை விட்டு விலகி வரவிரும்பாமல் கூட்டாளிமார் ராசனும் விக்கியும் அங்கேயே நிக்கிறாங்கள் போல. நான் வகுப்பின் மொனிட்டர் ஆச்சே, விரும்பியோ விரும்பாமலோ வந்து வாங்கில் குந்தி இருக்க வேண்டிய நிலையில் என் கதிரையில் போய் இருக்கின்றேன். பக்கத்துக் கதிரையில் இருந்து ஒரு இயக்கம் சம்பந்தமான ஏதோ ஒரு நூலை வாசித்துக் கொண்டிருக்கின்றான் பேரின்பன். இவன் விடுதலைப் புலிகளின் மூதூர் பிராந்திய தளபதியாக எண்பதுகளில் இருநது வீரச்சாவடைந்த மேஜர் கணேஷ் இன் தம்பி. திருகோணமலையில் இருந்து மேல் வகுப்புப் படிப்புக்காக யாழ்ப்பாணம் வந்திருக்கின்றான். முஸ்லீம் மகாவித்தியாலயம் பக்கமாக இருக்கும் ஒரு வீட்டில் தான் தங்கி இருந்து படிக்கின்றான். பொதுவாக யாரோடும் அதிகம் பேசமாட்டான். கேணல் குமரப்பா மாதிரி இருக்கும் தடித்த மீசை ஆனால் செக்க சிவந்த மலையாளி போல கன்ன உச்சி பிரித்து வாரப்பட்ட தலையுமாக அவனே ஒரு போராளியின் மிடுக்கில் இருப்பான்.அவனையும் ரியூசன் வகுப்பில் ஒருத்தி துரத்தித் துரத்திக் காதலித்தாள், ஆள் மசிந்தால் தானே.
ஏனோ தெரியவில்லை மற்ற நண்பர்களை விட என்னோடு மட்டும் உரிமையெடுத்துப் பழகுவான். வாசிப்புக்கு கம்பெனி கொடுக்கும் தோழன் அவன்.

“என்ன மச்சான் பிரபு எழுதிக்கொண்டிருக்கிறாய்” என்னைப் பார்த்துக் கேட்கின்றான். (பிரபு என் செல்லப் பெயர்). இந்து நாகரீகம் எடுக்கும் ரீச்சர் திருமதி நாகேஸ்வரன் வரும்வரைக்கும் எழுதிக் கொண்டிருந்த அந்த எழுத்துப் பதிவைக் காட்டுகின்றேன் அவனுக்கு. அந்தக் கதை அப்போது என்னைச் சுற்றி நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை வைத்து எழுதிய ஒரு கதையின் கால் பங்கு. “தொடர்ந்து எழுது மச்சான் நான் ரைப் பண்ணித் தாறன்
என்று சொன்ன பேரின்பன் ஆர்வமாக அதைப் படிக்கத் தொடங்கினான்.

எனது கல்லூரிப் படிப்பு முடியும் தறுவாயில் ஓய்ந்தது அந்தக் காதல் கதை எழுதும் படலம். அவனும் ஒவ்வொரு அத்தியாயமாக ரைப் பண்ணிக் கொண்டு வந்து காட்டுவான். அப்போதெல்லாம் கணினியே இல்லாத காலம். ரைப்ரைட்டர் மூலமாகவே அவன் தட்டச்சிக் கொண்டு வந்தான். கற்பனையும் நிஜமும் கலந்த அந்தக் கதை முடிந்த போது அதை பைண்ட் பண்ணி எனக்குப் பரிசாகவே தந்தான். அப்போது அதற்கு நான் சூட்டிய பெயர் “மண்ணில் இந்தக் காதல் இன்றி” (கேளடி கண்மணி படம் வந்தபோது ஏற்பட்ட பாதிப்பு ;-)
மேற்படம் : பேரின்பன் அப்போது ரைப்ரைட்டரில் தட்டாச்சித் தந்த ஒரு அத்தியாயம்

மூன்று வருஷங்களுக்கு முன்னர் நான் தாயகம் போனபோது அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரே மக்கு வாசனை வீசிய அந்தப் புத்தக அறையைத் திறந்து “மண்ணில் இந்தக் காதலின்றி” என்ற அந்த காதல் கதையைத் தேடினேன். பலத்த தேடலில் லேசான மழை ஒழுக்கு ஓரமாக ஒட்டியிருந்த சுவடோடு பேரின்பன் அன்று எனக்கு பைண்ட் பண்ணித் தந்த என் காதல் கதைப் பதிவு கிட்டியது. எத்தனையோ இடப்பெயர்வுகள், விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் அப்பால் தப்பியிருந்த அந்த பைண்ட் பண்ணப்பட்ட புத்தகம் இப்போது என் பக்கத்தில் இருக்கு.
ஆனால் பேரின்பன் என்னவாகியிருப்பான், இயக்கத்துக் போயிருப்பானா, கல்யாணம் முடிச்சு நாலைந்து பிள்ளைகளுக்குத் தகப்பனாகியிருப்பானா? தெரியவில்லை :(
“மண்ணில் இந்தக் காதலின்றி” என்று அன்று எழுதி வைத்த கதையை ஆசையோடு புரட்டிப் பார்த்து மேலதிகமாக சில சம்பவங்களைச் சேர்த்து எழுத ஆரம்பிக்கின்றேன்
“16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை” என்று……

பிற்குறிப்பு:
இந்தத் தொடருக்காக முகப்புப் படம் செய்ய பல நாட்கள் என்னிடம் கஷ்டப்பட்ட ஆயில்யனுக்கு சிறப்பு நன்றிகள்

“வானொலி மாமா” சரவணமுத்து நினைவாக

admin October 30th, 2009

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒரு விழுதான “வானொலி மாமா” என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த திரு.ச.சரவணமுத்து அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 30 திகதி தனது 94 வது வயதில் காலமானார்.

ஈழத்துத் தமிழ் ஒலிபரப்புக்களின் முன்னோடியாக இருந்தவர்களில் ஒருவர் என்பதோடு இவர் ஆரம்பித்து வைத்த சிறுவர் மலர் என்ற நிகழ்ச்சி பல்லாண்டுகாலமாக நீடித்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி என்பதோடு, “வானொலி மாமா” என்ற கெளரவ அடைமொழியை இவரைத் தொடர்ந்து வந்த பல நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் பின்னாளில் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. வானொலி ஒலிபரப்புக் கலையின் தனித்துவங்களான திரு சோ.சிவபாதசுந்தரம், மரைக்கார் ராம்தாஸ் போன்ற கலைஞர்களின் அறிமுகத்துக்குத் துணை புரிந்ததோடு, ஆங்கிலேயர் இலங்கை வானொலியை ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழில் நிகழ்ச்சிகள் வரவேண்டும் என்று முனைப்பு எடுத்துச் செயற்பட்டதோடு நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் திரு.சோ.நடராஜாவுடன் இணைந்து நிகழ்ச்சிகளைப் படைத்திருந்தார். இலங்கையர்கோனின் “விதானையார் வீடு” என்ற நாடகத்திலும் ஈழத்தின் முக்கியமான கலைஞர்களோடு இவர் நடித்திருந்தத குறிப்பிடத்தக்கது.

வானொலி மாமா ச.சரவணமுத்து குறித்த நினைவுப்பகிர்வை வழங்க ஈழத்திலிருந்து மூத்த ஊடகவியலாளர், வானொலிப் படைப்பாளி திரு.எஸ்.எழில்வேந்தன் அவர்களை வானலையில் அழைத்திருந்தேன். அந்த ஒலிப்பகிர்வைத் தொடர்ந்து கேட்கலாம். ஒலிப்பகிர்வின் முழுமையான எழுத்து வடிவைப் பின்னர் தருகின்றேன்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறுவர் மலர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவரும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நிகழ்ச்சி ஆலோசகராக விளங்கி வரும் வானொலி மாமா திரு.நா.மகேசன் அவர்கள் வழங்கிய நினைவுப் பகிர்வினைத் தொடர்ந்து தருகின்றேன்.

நான் அறிந்த வானொலி மாமா
அமரர் திரு. ச. சரவணமுத்து

இலங்கை வானொலியில் மிகவும் புகழ்வாய்ந்த நிகழ்ச்சி “சிறுவர் மலர்” என்னும் சிறுவர் நியழ்ச்சி. எட்டுவயது தொடக்கம் பதினைந்து வயது வரையிலான சிறுவர்களைக் கொண்டு தயாரித்து, ஞாயிறுதோறும் காலையில் 45 நிமிடங்கள் ஒலிபரப்பாகிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைச் சிறுவர்கள் மட்டுமல்ல வளர்ந்தவர்களும் கேட்டு மகிழ்வார்கள். சிறுவர்கள் ஞாயிறு எப்போ வரும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, முதலாவது “வானொலி மாமா” என்ற கற்பனைப் பாத்திரமாக நிகழ்ச்சிக்கு அத்திவாரம் இட்டு நடத்தியவர் மதிப்புக்குரிய திரு. எஸ். சிவபாதசுந்தரம் என்று அறிகக் கிடக்கிறது. பெயர் ஒலிபரப்பாகாத இந்தக் கற்பனைப் பாத்திரத்தை பலர் ஏற்று நிகழ்ச்சியை நடத்தி வந்திருக்கிறார்கள்.

இந்த வானொலி மாமாக்களிலே நான் அறிந்த பலர் இருப்பினும், “வானொலி மாமா” என்ற அடைமொழியை நெடுங்காலம் தாங்கி நின்றவர் அமரர் திரு. ச. சரவணமுத்து அவர்கள். இவர் நெடுங்காலமாக கொழும்பில் வெள்ளவத்தையில் வசித்து வந்தார். நானும் வெள்ளவத்தையில் நெடுங்காலமாக வசித்து வந்தபடியால், அடிக்கடி அவரைச் சந்திக்கும் வாய்ப்பு நான் வெளிநாடு வருவதற்குமுன் கிட்டியது. பின்னரும் இலங்கை சென்ற போதெல்லாம் “மாமா” வைச் சந்திக்காது வருவதில்லை. இன்று புலம் பெயர்ந்து வாழும் பல வானொலிக் கலைஞர்களை உருவாக்கிய பெருமை, சரவணமுத்து மாமாவைச் சாரும் என்றால் அது மிகையாகாது. அன்னார் பழகுவதற்கு மிகவும் இனியவர். உயர்ந் குணங்கள் உடையவர். உயர்ந்து வளர்ந்த தோற்றம் உடையவர். இன்சொல் அன்றி வன்சொல் பேசாதவர். அவர் தனித் தன்மையோடு சிறுவர் மலர் சிகழ்ச்சியை தயாரித்து வழங்கிவந்தார். சிறுவர்களுக்கு நடிப்பைச் சொல்லிக் கொடுத்து, இயற்கையாக நடிக்க வகை செய்தவர்களிலே இவர் ஒரு முன்னோடி.

சென்ற 29. 10. 2009 அன்று இவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயர் எய்தினேன். அமரர் சரவணமுத்து அவர்க்ள் ஒரு வானொலி நிலையக் கலைஞர் என்றுதான் பலர் கருதுவார்கள். அன்னார் இலங்கை வொனொலின் அழைப்பை ஏற்றுச் சென்ற ஒரு தயாரிப்பாளர். (guest Producer) ஆரம்ப காலத்தில் அரச கரும மொழித் திணைக்களத்தில் கடமையாற்றிப் பின்னர் பாராழுமன்றத்திலும் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். சரவணமுத்து மாமா கலைத்துறையில மட்டுமல்லாது, சமய, சமூகப் பணிகளிலும் நெடுங்காலமாகச் சேவை செய்த பெரும் தொண்டன். 95 ஆண்டுகள் வரை வாழ்ந்து, தனது வாழ்நாளின் பெரும் பகுதியைப் பொதுப் பணிகளுக்காக அர்ப்பணித்த ஒரு பெரியார்.

திருக் கேதீச்சர ஆலயப் புனருத்தாரனச் சபையின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து அவ்வாலயத்தின் வளர்ச்சிக்கு நெடுங்காலம் தொண்டாற்றியவர். கொழும்பு இந்து மாமன்றத்தின் அங்கத்தவராக இருந்து பல பணிகளில் ஈடுபட்டவர். வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 1966ம் ஆண்டில் இருந்து 2000மாம் ஆண்டுவரை அங்கத்தவராக இருந்து பொதுகச் செயலாளர், துணைத் தலைவர் பதவிகளில் நெடுங்காலம் கடமையாற்றித் தமிழ்த் தொணடு செய்தார். அன்னாரின் மறைவு, இலங்கைத் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு. அவரது பிரிவால் துயருறும் மக்களக்கும்; உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் செய்த பணிகளும், தொண்டுகளும் அன்னாரைத் தக்கோன் எனக் காட்டி நிற்கின்றன.

“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.”

நா. மகேசன்
சிட்னி, அவுஸ்திரேலியா
1. 11. 2009


( விதானையார் வீடு நாடகம் ஒலிப்பதிவில், இடமிருந்து வலம் கணபதிப்பிள்ளை விதானையா (கா.சிவத்தம்பி), வைரமுத்துச் சட்டம்பியார் (சரவணமுத்து), செளந்தரவல்லி ( பத்மா சோமசுந்தரம்), விசாலாட்சி (பரிமளாதேவி விவேகானந்தா), சின்னத்துரை விதானையார் ( வீ.சுந்தரலிங்கம்), ஆறுமுகம் (வி.என்.பாலசுப்ரமணியம்).

கொழும்பு தமிழ்ச்சங்கம் விடுத்த இரங்கல் அறிக்கை

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் “வானொலி மாமா” என அழைக்கப்பட்ட திரு.ச.சரவணமுத்து அவர்களின் மறைவையொட்டி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலி இலங்கையில் முதன்முதல் சிறுவர் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடாத்திய “வானொலி மாமா” என அழைக்கப்பட்ட திரு.ச.சரவணமுத்து அவர்கள் தனது 94ஆவது அகவையில் 30.10.2009 அன்று கொழும்பில் காலமானார். அன்னாரது மறைவையொட்டி கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கின்றது. அன்னார் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் (1966ஃ1972) துணைத் தலைவராகவும் (1976ஃ1980) பல ஆண்டுகள் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்து சங்கத்தின் கலை, இலக்கிய செயற்பாடுகளில் தீவிர பங்கெடுத்து சங்கத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றவர். அவரது சேவையினைக் கருத்தில் கொண்டு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்தாகப தின விழாவில் “சங்கச் சான்றோர் - 2006’ விருது அளித்துக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவித்தது. முதுமையெய்தியும் தள்ளாதவயதிலும் சங்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை பழக்கமாகக் கொண்டிருந்தார். 13.09.2009ஆம் திகதி நடைபெற்ற சங்கத்தின் 67ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் உணர்வும் தமிழ்ப்புலமையும் இலக்கிய ஆளுமையும் நிரம்பியவர். சிறந்த சமூக சேவையாளரான இவர் கொழும்பு விவோகானந்த சபை, அகில இலங்கை இந்து மாமன்றம், திருக்கேதீஸ்வர திருப்பணிச் சபை, கொழும்பு இந்து வித்தியாவிருத்திச் சபை (சரஸ்வதி மண்டபம்) உலக தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக்கிளை ஆகிய அமைபப்புக்களிலும் அங்கம் வகித்து ஆற்றிய சேவைகள் அளப்பரியன. அரசகருமமொழித் திணைக்களத்தில் அதிகாரியாகவும், பாராளுமன்றத்தில் மொழி பெயர்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். வானொலியில் சைவநற்சிந்தனைகள், பௌத்த நற்சிந்தனைகள் இரண்டையும் நடாத்தினார். அன்னாரின் பிரிவினால் துயரும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி: நினைவுப்பகர்வை வழங்கிய திரு எஸ்.எழில்வேந்தன்

« Prev - Next »