எங்கோ…யாரோ…..யாருக்காகவோ….!? – லெ.முருகபூபதி

எங்கோ…யாரோ…..யாருக்காகவோ….!?

எழுத்தாளர் லெ.முருகபூபதி எழுதிய சிறுகதை

ஒலி வடிவம் : சங்கீதா தினேஷ் பாக்யராஜா

#ஈழத்தவர்_கதை_கேட்போம் 7

தமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி

தமிழ் இருக்கை என்பது தமிழ் மொழியை கற்பிக்க, ஆய்வு செய்யவென பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள ஒரு பேராசிரியர் பொறுப்பு ஆகும். “ஒரேயொரு பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்படுவது தமிழ் இருக்கை” என்று தமிழ் இருக்கை குழுமத்தின் உறுப்பினர் அ. முத்துலிங்கம் அவர்கள் விபரிக்கிறார். பொதுவாக நிலையான நிதியில் (endowments) இருந்து பெறப்படும் வருவாயில் இருந்து தமிழ்க் இருக்கைக்கு நிதி வழங்கப்படுகிறது. (விக்கிப்பீடியா)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இதற்கான தொடர் முயற்சியில் ஈடுபட்டவர் பால சுவாமிநாதன்.அமெரிக்கவாழ் தமிழரான பால சுவாமிநாதன் பல ஆண்டுகளாக ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய கடும் முயற்சி எடுத்து வந்தார். அவரது கோரிக்கைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. அதேநேரம், ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைவதற்கு உலகம் முழுவதும் குவியும் ஆதரவைக் கண்ட ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகமும் தமிழ் இருக்கை அமைய அனுமதி அளித்துள்ளது. இதனால் தனது முழு முயற்சியால் தன் சொந்த செலவிலேயே ஸ்டோனி ப்ரூக்கில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் முனைவர் பாலா சுவாமிநாதன் வெற்றி கண்டுள்ளார்.

கனடாவில் இன்று மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர் வாழும் சூழலில் Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் வாய்ப்பைத் தேடி வந்து வழங்கியிருக்கிறார்கள் பல்கலைகழகத்தார்.

இந்த மாதிரியானதொரு வாய்ப்புக் கிடைக்க பல்லாண்டுகளுக்கு முன்னர் முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இப்போது ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று நிறுவப்பட்ட சூழலில் அந்த வெற்றிகரமான முயற்சியைக் கண்டு Toronto பல்கலைக்கழக இயக்குநர்கள் தமிழ் மக்களிடம் தமிழ் இருக்கை அமைப்பதற்கான சம்மதத்தை வழங்கி வரவேற்றிருக்கிறார்கள்.

ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ எப்படித் தன்னார்வலர்கள் மில்லியனில் இருந்து உண்டியல் கணக்கு வரை உலகெங்குமிருந்தும் அள்ளிக் கொடுத்து ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிரப்பி நிறுவினார்களோ அது போன்றதொரு இன்னொரு முன்னெடுப்பு இது. இம்முறை

இந்தத் தமிழ் இருக்கைக்கான வைப்பு நிதியாக மூன்று மில்லியன் டொலர்கள் தேவை. இதுவரை 1.3 மில்லியன் டொலர்கள் திரட்டப்பட்டுள்ளன.Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை இணையப்பக்கம்
http://torontotamilchair.ca/
இது ஒரு நிரந்தரச் சொத்துக்கான முதலீடு, இதன் மூலம் கற்பித்தல், ஆராய்ச்சி, கருத்தரங்கு உள்ளிட்ட பன்முகப்பட்ட வாய்ப்பு செம்மொழியான தமிழ் மொழிக்குக் கிட்டப் போகிறது.
இந்த முயற்சிகள் குறித்து முனைவர் பாலா சுவாமி நாதன் அவர்களோடு வீடியோஸ்பதி இணையத்துக்காகக் கண்டிருந்த பேட்டி இதோ

யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை

பெருமதிப்புக்குரிய பொன்.குலேந்திரன் அவர்களது எழுத்துகளுக்கும் எனக்குமான பந்தம் ஒரு தசாப்தம்கடந்தது. கனடாவை மையப்படுத்தி வெளி வந்த குவியம் இணைய மாத சஞ்சிகையின் தீவிர வாசகனாகஅப்போது இருந்தேன். இணைய எழுத்துகள் என்றால் நுனிப் புல் மேய்தல், பிறர் ஆக்கங்கங்களைப் பிரதிபண்ணுதல் போன்ற மோசமான இலக்கணங்கள் பதிந்திருந்த சூழலில் குவியம் இணையப் பத்திரிகையின்அறிவியல் தளமும், அதன் சுயமும் அப்போது என்னுள் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. அதன் வழியாகஅறிமுகமானவர் தான் திரு பொன்.குலேந்திரன் அவர்கள். அறிவியல், ஆன்மிகம், அரசியல் என்று பல்துறைநோக்கில் கட்டுரைகள் தொட்டு கதைகள் வரை எழுதும் பன்முகப் படைப்பாளி.

குவியம் தவிர இவரது “விசித்திர உறவு” (குவியம் இதழில் வந்த சிறுகதைகள்), மற்றும் கோபுர தரிசனம்கோடி புண்ணியக் ஆகிய நூல்களையும் அப்போது பெற்று வாசித்திருந்தேன்.
ஈழத்துக் கோயில்கள் குறித்த கனதியானதொரு தொகுப்பான “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்றநூல் அப்போது நான் தொகுத்தளித்த “ஈழத்து முற்றம்” என்ற வானொலிச் சஞ்சிகை நிகழ்ச்சிக்குஉசாத்துணையாக, முதன்மை நூலாகவும் அமைந்து சிறப்பித்தது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பொன்.குலேந்திரன் அவர்களது தொடர்பும், அதன் வழியே அவரது“யாழ்ப்பாணத்தான்” சிறுகதைத் தொகுதியையும் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.
இதில் மொத்தம் 23 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
பொன் குலேந்திரன் அவர்களது சிறுகதைகளைப் படிக்கும் போது அரை நூற்றாண்டுக்கு முன்னதான, ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களது சிறுகதைகளைப் படிக்கும் பாங்கில் தான் பயணித்தேன். அவ்வளவுதூரம் இயல்பாகவும், வார்த்தைகளில் நவீனம் படியாத ஊர்ப் பேச்சு அழகியலையும் அனுபவித்தேன். அதற்கு இன்னொரு காரணம் ஒவ்வொரு சிறுகதைகளின் பின்புலமும் கூட.

யாழ்ப்பாணத்தில் நிலவிய வழமைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட தேச வழமைச் சட்டத்தைப் பற்றிஇந்த நூலில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அது எதேச்சையாக அமைந்ததோ தெரியவில்லை. இந்தச்சிறுகதைத் தொகுதியின் ஒவ்வொரு சிறுகதைகளின் அடிநாதத்திலும் இந்தத் தேச வழமை ஒட்டிக்கொண்டிருக்கிறது.

கதைகளினூடு அந்தந்தப் பிரதேசங்களின் புவியியல், வரலாற்றுப் பின்புலன்களையும் கொடுப்பதைப்படிப்பதும் புதுமையானதொரு அனுபவம். யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கையோ, நடைமுறை வாழ்வில்கொள்ளும் சொல்லாடலையோ தன் கதைகளில் கொண்டு வரும் போது இயன்றவரை அவற்றுக்கானவிளக்கக் குறிப்புகளையும் பகிர்கிறார்.
சில இடங்களில் அப்படியே விடுகிறார், காரணம் அதை அப்படியே வாசகன் உள்வாங்கிப் புரியக் கூடியமொழி நடை என்ற உய்த்துணர்வில்.
இந்த மாதிரியான பின்னணியோடு சிறுகதைகள் எழுதுவது மரபை உடைத்தல் என்று விமர்சக ரீதியில் பார்த்தாலும் இந்தத் தொகுப்பினைப் படிக்கும் போது எழுத்தாளரின் வாழ்வியல் அனுபவங்கள், நிஜங்களின் தரிசனங்களே பதிவாகியிருப்பது போன்றதொரு உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆகவே இதுவொரு சுயவரலாற்றின் கூறாகக் கூட இருக்க முடியும்.

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் அண்மையில் இருபது வயது மதிக்கத்தக்க யாழ்ப்பாணத்து இளைஞனோடு பேசிக் கொண்டிருக்கும் போது நாம் அங்கு சகஜமாகப் புழங்கும் ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டேன். அதற்கு அர்த்தம் தெரியாது அந்த இளைஞன் யோசித்தார். அப்போது தான் எங்கள் பேச்சு வழக்கும் அதன் தனித்துவமும் தென்னிந்திய சினிமாக்களின் ஊடுருவலால் சிதைக்கப்படும் அபாயம் கண்டு உள்ளூரக் கவலையும் எழுந்தது. ஏனெனில் அந்த யாழ்ப்பாணத்து இளைஞனின் பேச்சில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சொல்லாடல் தான் மிகுதியாக இருந்தது.
பொன்.குலேந்திரன் அவர்களது சிறுகதைகளைப் படிக்கும் போது இந்த நிகழ்வு தான் நினைவுக்கு வந்தது. நாம் எத்தனை அரிய, எம் மண்ணுக்கே உரித்தான கலைச் சொற்களை, மருவிப் போன தூய தமிழ்ச் சொற்களை நம் அன்றாடப் பேச்சில் தொலைத்து விட்டோம். இந்த உணர்வெல்லாம் “யாழ்ப்பாணத்தான்” சிறுகதைத் தொகுதியைப் படித்த போது எழுந்தது.

‘புதுச் சுருட்டு” கதையின் களம் எங்கள் இணுவில் மண்ணை ஞாபகப்படுத்தியது, ஊரெல்லாம் சுருட்டுக் கொட்டிலும், புகையிலைத் தோட்டமுமாக விளைந்த நம் ஊரின் பண்பின் மறு பக்கத்தில் அது எவ்வளவு தூரம் ஆட்கொல்லி நோயாக இருக்கிறது என்ற செய்தியோடு கதையைச் சுருட்டியிருக்கிறார்.

யுத்தம் முடிந்த காலத்துக்குப் பின்னரும் ஏன் இந்தத் தொழில் நுட்பம் விளைந்த காலத்திலும் வேலிச் சண்டையோடு நிற்கும் யாழ்ப்பாணத்தாரைத் தினசரிப் பத்திரிகைகளில் படித்து வருகிறோம். “வேலி” சிறுகதை இம்மாதிரியானதொரு கதையோட்டம் கொண்டது. ஆளில்லா ஊரில் இனி எங்கே வேலிச் சண்டை என்ற யதார்த்தமும் எழுந்து மெல்ல வலியெழுப்பியது.

கல்வித் தரப்படுத்தல், போன்ற ஈழத்துச் சமூகம் எதிர் நோக்கும் சவால்களையும், சகுனம் பார்த்தல், கோயில்களில் நேர்த்திக் கடன் கழிக்கும் உயிர்ப்பலி கொடுக்கும் பண்பு, புலம் பெயர் சூழலிலும் கூடவே கொண்டு வந்திருக்கும் சீட்டுக் கட்டும் மரபு, சீதனப் பிரச்சனை போன்ற நம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் கதைகளில் காவும் ஆசிரியர் தீண்டாமைக் கொடுமையால் எழுந்த ஆலயப் பிரவேச மறுப்பையும் கையில் எடுத்திருக்கிறார்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் “இப்படியும் நடக்கிறது” என்றொரு பகுதி வரும். இப்படியும் நடந்திருக்கிறதா என்று எண்ண வைக்கும் பல கதைகளின் யதார்த்தங்களோடு வாழ்ந்து பழகிய யாழ்ப்பாணத்தாருக்கு இவை பழகிப் போனவை. ஆச்சரியம் என்னவெனில் ஒவ்வொரு கதைகளிலும் ஒவ்வொரு சமுதாயச் சிக்கல்களைக் கையிலெடுத்துக் கதைகளாகச் சமைத்த ஆசிரியர் யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் முழுமையான பரிமாணத்தைக் காட்டி நிற்கின்றார். “யாழ்ப்பாணத்தான்” வெறும் சிறுகதைகள் அல்ல இவை நம் வாழ்வியலின் கோலங்கள்.

யாழ்ப்பாணத்தான் சிறுகதைத் தொகுதி ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்த நூல் பூபாலசிங்கத்தில் விற்பனைக்குக் கிட்டுகிறது.

கானா பிரபா
சிட்னி
அவுஸ்திரேலியா

பிற்குறிப்பு
எழுத்தாளர் பொன்.குலேந்திரன் அவர்களது சிறுகதைத் தொகுதிக்கான அணிந்துரையை எழுதுவதற்கு பெருமதிப்புக்குரிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் என்னைப் பரிந்துரைத்திருந்தார். இந்த மாதிரியானதொரு கொடுப்பினைக்கும் மிக்க நன்றி.

ஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்

இன்று ஆடிப்பிறப்பு தினமாகும்.

ஈழத்தவரின் வாழ்வியலில் ஆடிப்பிறப்பு மிக முக்கியமானதொரு பண்டிகை. இந்தத் தினத்தை நினைத்தால் “தங்கத்தாத்தா” நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் “ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தமானந்தம் தோழர்களே” பாடலும், “ஆடிக் கூழும்” நினைவில் மிதக்கும்.

இந்த நிலையில் ஒரு புதுமையானதொரு பகிர்வோடு வந்திருக்கிறோம். இந்தப் பகிர்வில் தாயார் அனுராதா பாக்யராஜா அவர்கள் “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை” பாடலைப் பாட, கானா பிரபாவின் “ஆடிப்பிறப்பு நனவிடை தோய்தலையும்”, “ஆடிக்கூழ்” செய்முறையையும் மகள் சங்கீதா தினேஷ் பாக்யராஜா அவர்களும் பகிர்கிறார்கள்.

கலாபூஷணம் திருமதி அனுராதா பாக்யராஜா அவர்கள் சிறுகதை, நாடகம், ஆன்மிகக் கட்டுரைகள் என்று இலக்கிய உலகில் தடம் பதித்தவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலிக் கலைஞர், இலங்கை ரெலிகொம் நிறுவனத்தினர் நடத்திய “இலங்கை நாட்டுப் பாடல்” போட்டியில் பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்களில் முதலிடத்தில் வந்த பெருமைக்குரியவர்.

சங்கீதா தினேஷ் பாக்யராஜா இலங்கையின் தனியார் வானொலி யுகத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, தொகுப்பாளராக, நாடக நடிகையாகத் தனக்கென அடுத்த தலைமுறை வானொலி ரசிகர் வட்டத்தைச் சம்பாதித்தவர்.

ஒரு நாளைக்குள் தீர்மானித்து அணுகிய போது தாயும், மகளுமாக எவ்வளவு அழகாக இந்த ஆடிப்பிறப்புப் பகிர்வைக் கொடுத்திருக்கிறார்கள் என்றுணர்ந்து வியந்தேன், நீங்களும் அதை ரசியுங்கள்.

அ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”

சிறுகதை ஒலி வடிவம்

ஈழத்து எழுத்தாளர்களது சிறுகதைகளை ஒலி ஆவணப்படுத்தும் தொடரில் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான அ.செ.மு (அ.செ.முருகானந்தன்) அவர்களது “காளிமுத்துவின் பிரஜா உரிமை” என்ற சிறுகதையின் ஒலிவடிவத்தைப் பகிர்கிறோம்.

இந்த சிறுகதையின் ஒலி வடிவத்தைச் சிறப்பாக ஆக்கித் தந்தவர் அவுஸ்திரேலியா நன்கறிந்த ஊடகர், தமிழ்க் கல்வி ஆசிரியர் திரு.நவரட்ணம் ரகுராம் அவர்கள்.

எழுத்தாளர் அ.செ.மு குறித்து பேராசிரியர் சு,வித்தியானந்தன் “மனித மாடு” சிறுகதைத் தொகுதியில் இவ்விதம் குறிப்பிடுகிறார்,

ஈழத்தின் தமிழ்ச் சிறுகதை கால வரலாற்றில் 1930 ஆம் ஆண்டுகளின் பிற் பகுதியில் இலங்கையர்கோன், சம்ந்தன், சி. வைத்திலிங்கம் ஆகியோர் இத்துறையில் முதல் முயற்சிகளை மேற் கொண்டனர். இம்முதல் மூவரை அடுத்த இரண்டாவது தலைமுறையொன்று 1940 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திற் சிறுகதைத் துறையிற் கவனம் செலுத்தத் தொடங்கிய இவ்விரண்டாம் காலகட்ட எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர் அ. செ. முருகானந்தம் அவர்கள்.

1921 ஆம் ஆண்டிலே மாவிட்டபுரத்தில் பிறந்த முருகானந்தம் அவர்கள் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிற் பயின்றவர். மஹாகவி, அ ந கந்தசாமி ஆகிய படைப்பாளிகளின் இலக்கியச் சூழலில் வாழ்ந்தவர். ஈழகேசரி, மறு மலர்ச்சி. சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு முதலிய பத்திரிகை களினூடாக இலக்கியப்பணி செய்தவர். எரிமலை என்ற பத்திரிகையைச் சில காலம் வெளியிட்டவர். இவரது படைப்புகளில் புகையில் தெரிந்த முகம் என்ற குறுநாவல் மட்டுமே இதுவரை நூல் வடிவம் பெற்றது.

யாழ். மாவட்டக் கலாசாரப் பேரவையின் வழியாக “மனித மாடு” சிறுகதைத் தொகுதி வெளிவந்தும் அது பரவலான விற்பனைக்குச் செல்லாது முடங்கிய அவலத்தை செங்கை ஆழியான் அவர்கள் வருந்தி எழுதியிருக்கிறார்.

எழுத்தாளர் முருகபூபதி அவர்களும் “அ.செ.மு” அவர்களின் வாழ்வியலை விரிவாக எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிட வேண்டியது.

தொடர்ந்து அ.செ.முருகானந்தனின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை” ஒலி வடிவைக் கேட்போம்.

ஆக்காண்டி….ஆக்காண்டி….

சண்முகம் சிவலிங்கம் ஈழத்தின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவர். அடிப்படையில் விஞ்ஞான ஆசிரியரான இவர் கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் பலவற்றை எழுதி அவை நூலுருப் பெற்றும் உள்ளன, அவற்றுள் நீர்வளையங்கள் என்ற கவிதைத் தொகுதி குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர், இலக்கியம் கடந்து தமிழ் இன உணர்வாளராக வாழ்ந்து மடிந்தவர். டிசம்பர் 19, 1936 – ஏப்ரல் 20, 2012)

“ஆக்காண்டி ஆக்காண்டி” என்ற இவரது நாட்டாரியல் சார்ந்த கவிதை ஈழத்துப் போர் வடுக்களை மறை பொருளாகக் கொண்டு வலியெழுப்பும் படைப்பாகும். இதற்குக் குரல் வடிவம் தந்து உணர்வு பூர்வமாகப் பகிர்கிறார் சங்கீதா தினேஷ் பாக்யராஜா.

நடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது

இரு வாரங்களுக்கு முன்னர் திரு தம்பிஐயா தேவதாஸ் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது ஈழத்து எழுத்தாளர்களது சிறுகதைகளுக்கான குரல் பதிவுக்குப் பொருத்தமானவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போனவரின் பட்டியலில் முதல் ஆளாக இருந்தவர் நடராஜசிவம் அவர்கள். எனக்குள் உள்ளூரப் பேராசை தொற்றிக் கொண்டது இந்த வழியிலாவது அவரோடு அறிமுகமாகலாம் என்று. ஆனால் அது இனி ஒரு போதும் நடக்காது என்ற வலியோடு இன்றைய காலையில் வந்த அவரின் இறப்புச் செய்தி சொல்லி வைத்தது.

வானொலி கேட்கும் பழக்கம் தீவிரமாக இருந்த காலத்தில் தன் நிகழ்ச்சி முடியும் போது நட ராஜ சிவம் என்று பெயரை உடைத்து அழகுற முத்தாய்ப்பாய் முடித்து வைக்கும் அவரின் பாணியே தனி.
ஈழத்து வானொலியாளர்கள் மிக அற்புதமான நாடக நடிகர்களாகவும் விளங்கியது எமது கலையுலகத்தில் கிட்டிய பேறு. இவர்களில் நாடகத்தில் இருந்து திரைத்துறை வரை கால் பதித்த மிகச்சிலரில் நடராஜ சிவம் அவர்களும் ஒருவர். சிங்களத் திரைப்படங்களில் அவரின் பங்களிப்பு தனியாக நோக்கப்பட வேண்டியது.

பெரும்பாலும் விளம்பரக் குரலுக்கு வாயசைக்கும் கவர்ச்சிகரமான உருவங்களைக் கண்டு தரிசிக்கும் உலகில் எமக்கெல்லாம் விளம்பரக் குரலே உருவமாக வெளிப்பட்ட இரட்டை ஆளுமைகளில் கமலினி செல்வராஜனும், நடராஜசிவமும் மிக முக்கியமானவர்கள்.
கோப்பி குடித்துக் கொண்டே நடிக்கும் அவரின் உருவம் கண்ணுக்குள் நிழலாடுகிறது.

பண்பலை வானொலி யுகத்தில் இன்றைய முன்னணி வானொலியான சூரியன் எஃப் எம் இன் நிகழ்ச்சி முகாமையாளராக நடராஜசிவம் அவர்கள் அந்த வானொலியைக் கட்டமைத்த ஆரம்ப காலங்கள் விரிவாக அந்தக் காலத்து நிகழ்ச்சித் தொகுப்பாளர்களால் பேசப்பட வேண்டியது.

அவரின் நிகழ்ச்சித் தொகுப்பு ஒன்று

தினகரன் வாரமஞ்சரியில் ஏடாகூடமான கேள்விகளுக்கு அவரின் பதில்கள்

http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/10/21/?fn=f12102117

காற்றலையில் கலந்து விட்ட மீண்டும் சந்திக்காத வரை
நட
ராஜ
சிவம்
என்ற வானொலிப் படைப்பாளிக்கு எம் பிரியா விடை.

கானா பிரபா

“புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம்

“புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம்
ஒலி வடிவில் : செ.பாஸ்கரன்
#ஈழத்தவர்_கதை_கேட்போம்

ஈழத்து எழுத்தாளர்களை அவர்களது சிறுகதைகளினூடே வெளிக் காட்டும் தொடரில் இம்முறை மு.தளையசிங்கம் அவர்களது “புதுயுகம் பிறக்கிறது” சிறுகதையின் ஒலிப் பகிர்வோடு வந்திருக்கிறோம்.

ஈழத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான மு.தளையசிங்கம் அவர்கள் 1935 இல் பிறந்து 1973 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். எழுத்துப் பயணத்தில் 1956 ஆம் ஆண்டிலிருந்து வெறும் 17 ஆண்டுகால இவரது இயக்கத்தில் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றின் வழியாக இலக்கியப் பங்களிப்புச் செய்தவர், வெங்கட் சாமிநாதன், சுந்தரராமசாமி உள்ளிட்ட மூத்த தமிழகத்து இலக்கியவாதிகள் வரை ஈர்க்கும் அளவுக்கு முக்கியமானதொரு படைப்பாளி என்பது பதிவு செய்ய வேண்டியதொன்று.

தளையசிங்கம் தமிழின் முக்கியமான மீபொருண்மைச் சிந்தனையாளராக அறியப்படுபவர், சமூகப் போராளியாகவும், சிந்தனாவாதியாகவும் இருந்தவர் மானுட குலத்தின் அறிவார்ந்த பரிணாமத்தைப்பற்றிய கருத்தாக்கங்களை உருவாக்கினார். இதன் வழி மெய்யியல் ஆய்வுகளையும் எழுதினார். ஈழத்தின் மிக முக்கியமானதொரு கவிஞர் மு.பொன்னம்பலம் (மு.பொ) இவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே பகிரப்படும் சிறுகதையின் ஒலி வடிவத்தை வழங்கியிருப்பவர், தளையசிங்கம் பிறந்த அதே புங்குடுதீவு மைந்தன் கவிஞர் செ.பாஸ்கரன். கவிஞராக, தமிழ் முரசு அவுஸ்திரேலியா இணையப் பத்திரிகையின் ஆசிரியராகத் தடம் பதித்துத் தொடர்பவர்.
“புதுயுகம் பிறக்கிறது” கதை மெய்ஞானத்துக்கும், விஞ்ஞானத்துக்குமிடையிலான ஊடாடலை கணவன், மனைவி என்ற பாத்திரக் குறிகள் வழி நகர்த்துகின்றது.

கவிஞர் செ.பாஸ்கரன் அவர்கள் மு.தளையசிங்கத்தின் கதையை உயிரோட்டிய அனுபவத்தைக் கேட்போம் தொடர்ந்து.

மன்னிப்பு – சிறுகதை

மன்னிப்பு – சிறுகதை
எழுத்தாளர் : தேவகி கருணாகரன்
ஒலிவடிவம் : செ.பாஸ்கரன்

#ஈழத்தவர்_கதை_கேட்போம்

ஈழத்தின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமை தேவகி கருணாகரன் அவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறுகதை படைக்கும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது படைப்புகள் ஈழத்தின் வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திகைகளிலும், ஞானம், கலைமகள், கல்கி போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.

இங்கே நாம் ஒலிப்பகிர்வாகப் பகிரும் படைப்பான “மன்னிப்பு” என்ற சிறுகதை கல்கி வார இதழில் கடந்த மார்ச் 2020 இல் வெளியானது.
கவிஞர் செ.பாஸ்கரன் அவர்களின் ஒலி நடையில் தொடர்ந்து இந்தச் சிறுகதையைக் கேட்போம்.

வெடிமணியமும் இடியன் துவக்கும் – குறும் படம் ஒரு பார்வை

ஈழத்துக் குறும்பட இயக்கத்தில் மிக முக்கியமானதொரு படைப்பாக இன்று வெளியாகியிருக்கிறது.

ஈழத்துப் படைப்பாளிகளில் சகோதரன் மதிசுதா  நடிகராக, இயக்குநராக முன்னரேயே அறியப்பட்ட ஆளுமை என்றாலும் இந்தப் படைப்பைச் சற்று முன்னர் பார்த்த போது நெகிழ்வும், பெருமிதமும் கலந்ததொரு உணர்வு எழுந்தது.

எமது ஈழத்தின் நிகரற்ற கலைஞன் முல்லை யேசுதாசன் அண்ணரின் மறைவின் பின்னர் வெளிவரும் படைப்பாக இதைக் கண்ணுற்ற போது கலங்கிப் போனேன். இந்த அற்புதமான படைப்பாளி இன்னும் இருந்திருந்தால் இது போன்ற எவ்வளவு அற்புதமான படைப்புகளை அநாயசமாகச் செய்து விட்டுக் கடந்திருப்பார்.

ஈழத்துத் திரை இயக்கத்தில் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” மிக முக்கியமானதொரு படைப்பு என்பேன்.
அது ஏன் அவ்வளவு முக்கியமானது என்பதை இங்கே சுடச் சுடப் பகிர்ந்தளிக்கிறேன்.

வெடிமணியமும் இடியன் துவக்கும் – எனது பார்வையில்

வெடிமணியமும் இடியன் துவக்கும் – குறும் படத்தைத் தவற விடாமல் பாருங்கள், இங்கே