நடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது

இரு வாரங்களுக்கு முன்னர் திரு தம்பிஐயா தேவதாஸ் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது ஈழத்து எழுத்தாளர்களது சிறுகதைகளுக்கான குரல் பதிவுக்குப் பொருத்தமானவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போனவரின் பட்டியலில் முதல் ஆளாக இருந்தவர் நடராஜசிவம் அவர்கள். எனக்குள் உள்ளூரப் பேராசை தொற்றிக் கொண்டது இந்த வழியிலாவது அவரோடு அறிமுகமாகலாம் என்று. ஆனால் அது இனி ஒரு போதும் நடக்காது என்ற வலியோடு இன்றைய காலையில் வந்த அவரின் இறப்புச் செய்தி சொல்லி வைத்தது.

வானொலி கேட்கும் பழக்கம் தீவிரமாக இருந்த காலத்தில் தன் நிகழ்ச்சி முடியும் போது நட ராஜ சிவம் என்று பெயரை உடைத்து அழகுற முத்தாய்ப்பாய் முடித்து வைக்கும் அவரின் பாணியே தனி.
ஈழத்து வானொலியாளர்கள் மிக அற்புதமான நாடக நடிகர்களாகவும் விளங்கியது எமது கலையுலகத்தில் கிட்டிய பேறு. இவர்களில் நாடகத்தில் இருந்து திரைத்துறை வரை கால் பதித்த மிகச்சிலரில் நடராஜ சிவம் அவர்களும் ஒருவர். சிங்களத் திரைப்படங்களில் அவரின் பங்களிப்பு தனியாக நோக்கப்பட வேண்டியது.

பெரும்பாலும் விளம்பரக் குரலுக்கு வாயசைக்கும் கவர்ச்சிகரமான உருவங்களைக் கண்டு தரிசிக்கும் உலகில் எமக்கெல்லாம் விளம்பரக் குரலே உருவமாக வெளிப்பட்ட இரட்டை ஆளுமைகளில் கமலினி செல்வராஜனும், நடராஜசிவமும் மிக முக்கியமானவர்கள்.
கோப்பி குடித்துக் கொண்டே நடிக்கும் அவரின் உருவம் கண்ணுக்குள் நிழலாடுகிறது.

பண்பலை வானொலி யுகத்தில் இன்றைய முன்னணி வானொலியான சூரியன் எஃப் எம் இன் நிகழ்ச்சி முகாமையாளராக நடராஜசிவம் அவர்கள் அந்த வானொலியைக் கட்டமைத்த ஆரம்ப காலங்கள் விரிவாக அந்தக் காலத்து நிகழ்ச்சித் தொகுப்பாளர்களால் பேசப்பட வேண்டியது.

அவரின் நிகழ்ச்சித் தொகுப்பு ஒன்று

தினகரன் வாரமஞ்சரியில் ஏடாகூடமான கேள்விகளுக்கு அவரின் பதில்கள்

http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/10/21/?fn=f12102117

காற்றலையில் கலந்து விட்ட மீண்டும் சந்திக்காத வரை
நட
ராஜ
சிவம்
என்ற வானொலிப் படைப்பாளிக்கு எம் பிரியா விடை.

கானா பிரபா

“புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம்

“புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம்
ஒலி வடிவில் : செ.பாஸ்கரன்
#ஈழத்தவர்_கதை_கேட்போம்

ஈழத்து எழுத்தாளர்களை அவர்களது சிறுகதைகளினூடே வெளிக் காட்டும் தொடரில் இம்முறை மு.தளையசிங்கம் அவர்களது “புதுயுகம் பிறக்கிறது” சிறுகதையின் ஒலிப் பகிர்வோடு வந்திருக்கிறோம்.

ஈழத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான மு.தளையசிங்கம் அவர்கள் 1935 இல் பிறந்து 1973 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். எழுத்துப் பயணத்தில் 1956 ஆம் ஆண்டிலிருந்து வெறும் 17 ஆண்டுகால இவரது இயக்கத்தில் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றின் வழியாக இலக்கியப் பங்களிப்புச் செய்தவர், வெங்கட் சாமிநாதன், சுந்தரராமசாமி உள்ளிட்ட மூத்த தமிழகத்து இலக்கியவாதிகள் வரை ஈர்க்கும் அளவுக்கு முக்கியமானதொரு படைப்பாளி என்பது பதிவு செய்ய வேண்டியதொன்று.

தளையசிங்கம் தமிழின் முக்கியமான மீபொருண்மைச் சிந்தனையாளராக அறியப்படுபவர், சமூகப் போராளியாகவும், சிந்தனாவாதியாகவும் இருந்தவர் மானுட குலத்தின் அறிவார்ந்த பரிணாமத்தைப்பற்றிய கருத்தாக்கங்களை உருவாக்கினார். இதன் வழி மெய்யியல் ஆய்வுகளையும் எழுதினார். ஈழத்தின் மிக முக்கியமானதொரு கவிஞர் மு.பொன்னம்பலம் (மு.பொ) இவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே பகிரப்படும் சிறுகதையின் ஒலி வடிவத்தை வழங்கியிருப்பவர், தளையசிங்கம் பிறந்த அதே புங்குடுதீவு மைந்தன் கவிஞர் செ.பாஸ்கரன். கவிஞராக, தமிழ் முரசு அவுஸ்திரேலியா இணையப் பத்திரிகையின் ஆசிரியராகத் தடம் பதித்துத் தொடர்பவர்.
“புதுயுகம் பிறக்கிறது” கதை மெய்ஞானத்துக்கும், விஞ்ஞானத்துக்குமிடையிலான ஊடாடலை கணவன், மனைவி என்ற பாத்திரக் குறிகள் வழி நகர்த்துகின்றது.

கவிஞர் செ.பாஸ்கரன் அவர்கள் மு.தளையசிங்கத்தின் கதையை உயிரோட்டிய அனுபவத்தைக் கேட்போம் தொடர்ந்து.

மன்னிப்பு – சிறுகதை

மன்னிப்பு – சிறுகதை
எழுத்தாளர் : தேவகி கருணாகரன்
ஒலிவடிவம் : செ.பாஸ்கரன்

#ஈழத்தவர்_கதை_கேட்போம்

ஈழத்தின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமை தேவகி கருணாகரன் அவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறுகதை படைக்கும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது படைப்புகள் ஈழத்தின் வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திகைகளிலும், ஞானம், கலைமகள், கல்கி போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.

இங்கே நாம் ஒலிப்பகிர்வாகப் பகிரும் படைப்பான “மன்னிப்பு” என்ற சிறுகதை கல்கி வார இதழில் கடந்த மார்ச் 2020 இல் வெளியானது.
கவிஞர் செ.பாஸ்கரன் அவர்களின் ஒலி நடையில் தொடர்ந்து இந்தச் சிறுகதையைக் கேட்போம்.

வெடிமணியமும் இடியன் துவக்கும் – குறும் படம் ஒரு பார்வை

ஈழத்துக் குறும்பட இயக்கத்தில் மிக முக்கியமானதொரு படைப்பாக இன்று வெளியாகியிருக்கிறது.

ஈழத்துப் படைப்பாளிகளில் சகோதரன் மதிசுதா  நடிகராக, இயக்குநராக முன்னரேயே அறியப்பட்ட ஆளுமை என்றாலும் இந்தப் படைப்பைச் சற்று முன்னர் பார்த்த போது நெகிழ்வும், பெருமிதமும் கலந்ததொரு உணர்வு எழுந்தது.

எமது ஈழத்தின் நிகரற்ற கலைஞன் முல்லை யேசுதாசன் அண்ணரின் மறைவின் பின்னர் வெளிவரும் படைப்பாக இதைக் கண்ணுற்ற போது கலங்கிப் போனேன். இந்த அற்புதமான படைப்பாளி இன்னும் இருந்திருந்தால் இது போன்ற எவ்வளவு அற்புதமான படைப்புகளை அநாயசமாகச் செய்து விட்டுக் கடந்திருப்பார்.

ஈழத்துத் திரை இயக்கத்தில் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” மிக முக்கியமானதொரு படைப்பு என்பேன்.
அது ஏன் அவ்வளவு முக்கியமானது என்பதை இங்கே சுடச் சுடப் பகிர்ந்தளிக்கிறேன்.

வெடிமணியமும் இடியன் துவக்கும் – எனது பார்வையில்

வெடிமணியமும் இடியன் துவக்கும் – குறும் படத்தைத் தவற விடாமல் பாருங்கள், இங்கே

செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் – “சிவபூமி” வழி பன்முகப்பட்ட அறப்பணிகள்

செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகவும், சிவபூமி என்ற சிறுவர் மன வளர்ச்சிப் பாடசாலைகள், சிவ பூமி முதியோர் இல்லம், கீரிமலைச் சிவபூமி யாத்திரிகர் மடம், நாவற்குழியில் திருவாசக அரண்மனை, ஆதரவற்ற நாய்களைப் பேணும் காப்பகம் போன்ற அற நிலையங்களை நிறுவி அவற்றைக் கொண்டு நடத்துபவராகவும் இயங்கி வருகிறார். தன் வாழ்வைச் சைவத்துக்கும் அறப் பணிகளுக்காகவும் அவரை நினைக்கும் போதெல்லாம் வியப்பும், பெருமையும் எழும்.

நம்மால் ஒரு சிறு துரும்பை எடுக்கக் கூட ஆயிரம் சாட்டுச் சொல்லும் வாழ்வியலில் அவரின் பன்முகப்பட்ட அறப்பணிகள் நம் ஈழச் சமூகத்துக்குக் கிட்டிய பெரும் பேறு.
தாயகத்துக்குப் போகும் தோறும் என்னை அவரின் வாகனத்தில் இருத்தித் தன் சமூக ஸ்தாபனங்களின் இயக்கத்தைக் காட்டி வருவார்.

ஆறு திருமுருகனின் “சிவபூமி” அறச் செயற்பாடுகளை அவுஸ்திரேலிய மக்களின் பார்வைக்கு எட்டும் வண்ணம் ஒரு ஆவணப்படத்தை எடுக்க வேண்டும் என்று நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் நினைத்த போது அதற்குச் செயல் வடிவம் தந்தவர் சகோதரன் ஜெரா. 
இப்படியான பட வேலைகளுக்கு இரண்டு, மூன்று கமெராக்கள் தேவைப்படும் சூழலில் ஒரே கமராவை வைத்துக் கொண்டு, நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கத் தானே தன் குரலில் ஒலிச் சேர்க்கை செய்து திறமானதொரு ஆவணப்படத்தை ஆக்கியளித்தார். அவருக்கு உறுதுணையாக விளங்கிய சகோதரர்கள்
யோ ரவீந்திரன், காண்டீபன் இப்பட உருவாக்கத்தில் இணைந்துள்ளார்கள்.
இவ் ஆவணப்படம் சிட்னியில் ஆறு திருமுருகன் அவர்கள் கலந்து கொண்ட நிதி சேகரிப்பு ஒன்று கூடலிலும் திரையிடப்பட்டது.

இந்த ஆவணப் படம் சிவபூமி என்ற சமூக இயக்கத்தின் பன்முகச் செயற்பாடுகளை விரிவாகக் காண்பிக்கின்றது.

இன்று பிறந்த தினத்தைக் கொண்டாடும் பெரு மதிப்புக்குரிய செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் பல்லாண்டு காலம் நோயற்ற வாழ்வும், குறைவற்ற தன் அறச் செயற்பாட்டோடும் உழைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இன்றைய நாளில்
“ஈழத்தில் சிவபூமியின் அறப்பணிகள்” என்ற ஆவணப்படத்தை உங்கள் பார்வைக்காகவும் பகிர்கின்றேன்

அன்புடன்

அப்புவுக்கு 100 வயசு

“நீங்கள் கல்கி சின்னத்துரை ஐயாவின்ர ஆட்களெல்லோ”

யாராவது அடையாளம் கண்டு விசாரிப்பார்கள், அப்படியொரு முகவரி அப்புவால் வந்தது.

குடும்பத்தில் மூத்த பிள்ளை, தன்னுடைய ஏழு வயதில் தகப்பனை இழந்தவர், பதுளை சென்று தன் மாமனாரான தம்பி ஐயாவிடம் தொழில் பயின்று, அப்போது சம காலத்தில் படித்துக் கொண்டிருந்த தன் தம்பியார் சிவஞானத்துட.ந் இணைந்து யாழ்ப்பாணத்தில் 1945 ஆம் ஆண்டு சின்னத்துரை அன்ட் பிரதர்ஸ் என்ற பலசரக்கு வாணிபத்தில் இறங்குகிறார்கள். மெல்ல அடுத்த முயற்சியாக திருச்சியில் இருக்கும் கல்கி பீடி ஸ்தாபனத்தாரின் ஏக விநியோகஸ்தர்கள் என்ற நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் கடை விரிக்கிறார்கள்.

இந்த நிலையில் தனது சிவஞானம் அவர்களது எதிர்பாரா இழப்பு அடுத்த சோதனையாக அமைய, தனியனாகத் தொடரும் அவருக்கு அடுத்த சோதனை அரசாங்கத்தின் அறிவிப்பு வழியாக வருகிறது. இனிமேல் பீடித் தயாரிப்பு உள்ளூரிலேயே அமைய வேண்டும் என்ற அரச அறிவிப்பைத் தொடர்ந்து, உள்ளூர் முகவர் மூலம் பீடித் தயாரிப்பு என்ற அடுத்த படி நிலையில் உள்ளுர் வேலை வாய்ப்பை விரிவுபடுத்தும் களத்தில் இறங்குகிறார்.

பின்னர் மெல்ல மெல்லத் தன் வர்த்தக முயற்சிகளைப் பன்முக நோக்கில் விரிக்கும் அவருக்கு உறுதுணையாக மகன்களும், தம்பி மகன், மருமகரும் மற்றும் நண்பர்கள் என்று கை கொடுக்க, துணி பதனிடும் ஆலை, ஆடைத் தொழிற்சாலை, அரிசி ஆலைகள், புத்தளம் மாவட்டத்தில் வெள்ளைத் தும்பு (வெள்ளைக் கயிறுj தொழிற்சாலை, கல்கி பாம் என்று பழத் தோட்டங்களையும், நெல் உற்பத்தியையும் பளையில் இருந்து வன்னி வரை வியாபித்தார். ஏற்றுமதி வர்த்தகத்திலும் வெற்றிகரமான தொழிலதிபராக அடையாளப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் அவ்வளவு பெரிய தனவந்தராக அறியப்பட்டாலும் “அப்பு” என்று நாங்கள் கூப்பிடும் அம்மாவின் சிறிய தகப்பன் செல்வத்தின் முலாம் பூசாத எளிமையானவர். அவரது வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையும் போல. படுக்கைக்குப் போகும் போது கை உள்ள பனியனும், வெள்ளைச் சாரமும், தன் தொழில் நிலையம் போகும் போது வெள்ளை வேட்டியும், வெளிர் நிற வேட்டியும் இதுதான் அப்புவின் சீருடை. யாழ்ப்பாணத்தில் தொழில் நடத்திய காலத்திலும் சரி, கொழும்புக்குப் போய் அங்கு தன் அடுத்த முயற்சியில் இறங்கியதிலும் சரி எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நாட் தப்பாமல், எந்தவொரு அலுப்போ பஞ்சியோ பாராது செய்யும் தொழிலே தெய்வம் என்றிருந்தவர். நான் அப்புவைக் கடைசியாகப் பார்த்த ஆண்டு 2003 அவருக்கு 83 வயசிலும் அப்படியே இருந்தார். அப்படியே தன் கடமைகளைச் செய்தார்.

காலை எழுந்ததும் தேக அப்பியாசம், பிறகு, கண்ணாடிப் போத்தலில் நீர் நிரப்பி வெறும் வயிற்றில் மடமடவென்று குடிப்பதை எல்லாம் ஒளிச்சிருந்து பார்த்திருக்கிறேன். அப்புவுக்குக் கிட்டப் போகப் பயம் கலந்த மரியாதை எனக்கு. ஆனால் அவர் தன் வீட்டுப் பணியாட்களிடம் கூட அதிர்ந்து பேசியதை நான் கண்டதில்லை. அப்புவுக்கு அம்மம்மாவின் மேல் பயம். அம்மம்மாவும் அப்புவோடு துணிஞ்சு பேசுவார். பதிலுக்கு ஒன்றும் பேசாமல் கண்ணடித்து விட்டுப் போவார்.

“என்ன சாப்பிட்டாச்சோ?”
அப்பு முதலில் கேட்கும் கேள்வி இதுதான். பெரும்பாலும் அவரோடு சேர்ந்து உண்ட காலங்கள் கொழும்பு வாழ்க்கையில் அதிகம் வாய்த்தது.

அந்தக் காலத்தில் வந்த தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, ஈழநாடு, The Island, Daily News என்று ஒன்றும் விடாமல் எல்லாப் பத்திரிகைகளும் அப்பு வீட்டுக்கு வரும். வேலையால் வந்து கொஞ்ச நேரம் படுக்கையில் சாயும் போது பேப்பரும் கையுமாகத் தான் இருப்பார்.
அந்த நேரம் அப்பு வீட்டில் இருந்த பத்திரிகைகளைச் சின்னப் பொடியனாக எழுத்துக் கூட்டி வாசித்த பயிற்சியில் தான் பின்னாளில் எழுதவும், கதைகளைத் தேடிப் படிக்கவும் என்னைத் தூண்டியது.

பின்னேரம் இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோயில் ஆறு மணிப்பூசை முடிஞ்சு நேராக அப்பு வீட்டு முற்றம் வந்து கூடி ஆற அமர இருந்து அமெரிக்காவில் இருந்து சுண்ணாகம் வரைக்கும் நடக்கிற விஷயங்களை அலசி ஆய்ந்து விட்டுப் போவினம் அயலில் இருந்த சொந்தக்காரர் கூட்டம். அவர்களோடு கூட இருந்து கதைத்துச் சிரிப்பார் அப்பு.

கூடவே வடை, சூடான பால் தேத்தண்ணி எல்லாம் வருவினம். றேடியோவைச் சத்தமாக வைத்து ஒன்பது மணிச் செய்தி வந்து அறிவித்தல்கள் வரும் வரை றேடியோ சத்தம் போடும். இதெல்லாம் தினப்படி நடக்கும் சமாச்சாரம். தங்கள் எல்லைகளுக்குட்பட்ட சந்தோஷம், கவலை, எதிர்பார்ப்பு எல்லாமே அந்தப் பேச்சுக் கச்சேரியில் இருக்கும். ஏதோ ஒரு மன நிறைவோடு மெல்லக் கலைவார்கள். இதெல்லாம் எண்பதுகளின் வாழ்வியல் கோலங்கள்.

எங்களூரில் முதல் தொலைக்காட்சிப் பெட்டி வந்ததும் அப்பு வீட்டில் தான், ஆபத்து அந்ததரத்துக்குத் தொலைபேசி அழைப்பென்றாலும் அப்பு வீட்டுக்குத் தான் சனம் வரும்.

திருமுருக கிருபானந்த வாரியாரில் இருந்து சீர்காழி கோவிந்தராஜன், பாலமுரளி கிருஷ்ணா, கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்ட பாட்டுக்காரர்கள் அப்பு வீட்டுக்கு வந்த போதெல்லாம் நான் சின்னப் பெடியன். ஆனாலும் மங்கலான நினைவுகளாக நெஞ்சில் தேங்கியிருக்கு.

ஒரு ஏழ்மையான சூழலில் வளர்ந்து சிறு வயதிலேயே தொழில் கற்று முன்னேறியவர் சம காலத்தில் உலக நடப்புகளையும் ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டே இருந்தவரை இப்போது நினைத்தாலும் வியப்பு.
தொண்ணூறுகளில் ஒரு முறை இந்தியாவுக்குப் போய் விட்டு வரும் போது தினத்தந்தி பேப்பர் கட்டுடன் வந்தவர்
“திரும்பிற பக்கமெல்லாம் சிவாஜியின்ர மகன் தான் நிக்கிறான்”
என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டது பிரபு நடித்து நூறாவது படமாக வெளிவந்த “ராஜகுமாரன்” படத்தின் வெளியீட்டு ஆடம்பரங்களைப் பார்த்து.

போன வருஷம் ஊருக்குப் போன போது அப்பு வீட்டில் இருந்த படங்களை எனது அண்ணா காட்டிக் காட்டி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். தந்தை செல்வாவின் மரணச் சடங்குக்கு மா.பொ.சி, நாஞ்சில் மனோகரன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் வந்த போது அப்பு வீட்டில் தங்கிப் போனதன் சுவடுகளையும், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறுவனர் தனி நாயகம் அடிகளார் போன்றோரோடு கூடிப் பேசிய படங்களையும் பார்த்துப் பிரமித்துப் போனேன்.
“இந்த உலகப் பெருமஞ்சத்தைத் திருத்தி எழுப்பத்
திருப்பணி நல்கிய சின்னத்துரை அவர்கள்”

இணுவில் கந்தசுவாமி கோயில் தைப்பூச மஞ்சம் காணும் போதெல்லாம் நேர்முக அஞ்சலைச் செய்து கொண்டிருக்கும் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுகன் அவர்களின் குரலில் வரும் அந்த நினைப்பூட்டலில் அப்பு காலம் கடந்தும் அவ்வூர் நிகழ்வில் தேங்கியிருக்கியிருக்கிறார் அப்பு.

காலங்கள் கடந்து திரும்பிப் பார்க்கும் போது அப்புவின் கடின உழைப்போடு, தன்னைச் சுற்றியுள்ளவர்களோடு எவ்வளவு இயல்பாக வாழ்ந்திருக்கிறார் என்ற விடையே கிடைக்கிறது,
அத்தோடு கால மாற்றத்துக்கேற்ப தன்னைப் புதுப்பித்து, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடாமல் ஒவ்வொரு தொழி முயற்சியாக இறங்கி அவற்றில் ஆழம் கண்டு முத்தெடுத்த கடின உழைப்பாளி அப்புவை நினைத்துப் பார்த்தால் அவர் வாழ்ந்து காட்டிய பாடம்.

இன்று அப்பு பிறந்து நூறு ஆண்டுகள்.

பிரபு என்ற கானா பிரபா14.05.2020

எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”

எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”#ஈழத்தவர்_கதை_கேட்போம்

சிறுகதை ஒலிப்பகிர்வு

ஒலி வடிவம் : சங்கீதா தினேஷ் பாக்யராஜா

ஈழத்து எழுத்தாளர்களது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை அவர்களது எழுத்தின் தனித்துவத்தைக் காட்டவெண்ணிக் குரல் பகிர்வுகளாகத் தொடரும் முயற்சியின் அடுத்த படைப்பு இது,

எழுத்தாளர் சுதாராஜ், இவரின் இயற்பெயர் சிவசாமி இராஜசிங்கம் என்பதாகும். ஈழத்தின் மிக முக்கியமான சஞ்சிகைகளான சிரித்திரன், மல்லிக்கை உள்ளிட்டவைகளிலும், வீரகேசரி உள்ளீட்ட பல்வேறு பத்திரிகைகளிலும் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

எனது வாசிப்பு அனுபவத்தில் 1987 ஆம் ஆண்டில் இந்திய இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து மடத்துவாசல் பிள்ளையாரடியில் இருந்த காலத்தில் இவரின் “இளமைக் கோலங்கள்” என்ற நாவல் தான் இவரை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியது. இவர் எழுத்தில் இருந்த வித்தியாசமான நடை, தொடர்ந்தும் என்னைச் செங்கை ஆழியான் தாண்டி சுதாராஜ்ஜின் எழுத்துக்களையும் வாசிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது.

வித்தியாசமான களங்களைத் தன் சிறுகதைகளுக்குத் தேர்ந்தெடுப்பது, அல்லது ஒரே களத்தில் வித்தியாசமான கதைக்கருக்களைத் தேர்ந்தெடுப்பது, இவரின் பலங்களில் ஒன்று. இவரின் ஒரு சிறுகதையை வாசித்து முடித்தால் கிடைக்கும் திருப்தி.

இங்கே குரல் பகிர்வாகத் தரும் “அடைக்கலம்” சிறுகதை, 1991 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடாத்திய வைர விழா சிறுகதைப் போட்டியில் பரிச பெற்றது.அப்போது நான் ஈழத்தில் இருந்தேன். யாழ்.பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து ஆனந்தவிகடனை வாங்கி, தீராத ஆவலால் இணுவிலிற்குச் சென்று வாசிக்கவிரும்பாமல், ஒரு ஒரமாகச் சைக்கிளை நகர்த்தி , சைக்கிள் பாரில் இருந்தபடியே நான் வாசித்துத் தீர்த்த சிறுகதை இது. ஆனந்த விகடனால் “ஒரு மெளனத்தின் அலறல்” என்ற தொகுப்பிலும் இடம்பிடித்தது இந்தச் சிறுகதை.

இந்தச் சிறுகதையை ஒலி வடிவில் தரவேண்டும் என்று பேராவல் கொண்டபோது அன்புக்குரிய சுதாராஜ் அவர்கள் உடனேயே அனுமதி தந்தார். தனிப்பட்ட ரீதியின் என் நேசத்துக்குரிய வட்டத்தில் இருப்பவர் என்ற பெருமையும் எனக்குண்டு.

அடைக்கலம் சிறுகதையைத் தன் வழக்கமன பேச்சாற்றலால் சங்கீதா தினேஷ் பாக்யராஜ் உயிரோட்டமான திரைச் சித்திரம் போலப் படைத்திருக்கிறார். அவர் இதற்கு முன் படைத்த குரல் பகிர்வுக்கு இன்னமும் பல நண்பர்கள் பாராட்டி வருவது இம்முயற்சிக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

இந்தப் பகிர்வுக்கு உறுத்தாத மேலதிக இசைச் சேர்க்கையையும் இட்டிருக்கிறேன்.

இதோ “அடைக்கலம்” ஒலி வடிவைக் கேளுங்கள்.

செங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு

செங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்”

குரல் பகிர்வு : சங்கீதா தினேஷ் பாக்யராஜா

வீடியோஸ்பதி காணொளி வலைத் தளமூடாக ஒரு புதிய முயற்சியை முன்மெடுக்க வேண்டி, ஈழத்தின் முது பெரும் எழுத்தாளர்களில் இருந்து சம காலத்தவர் வரை அவர்களது சிறுகதைகளை ஒளி, ஒலி வடிவில் வெளிக் கொணரும் தொடரை ஆரம்பிக்க முனைந்தேன்.

ஆனால் இதை ஒரு கூட்டு முயற்சியாக, இலக்கிய வாசகர்களின் வழியாகவே பகிரும் நோக்கில் வரும் முதல் படைப்பு இது.ஈழத்தின் மிக முக்கியமானதொரு சிறுகதை, நாவல் படைப்பாளி, வரலாற்றாசிரியர் செங்கை ஆழியான் அவர்களது சிறுகதையான “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” என்ற சிறுகதையை டொமினிக் ஜீவா அவர்களது மல்லிகை தனது 200 வது இதழில் (ஜூலை, 1986) இல் பகிர்ந்தது. அப்போது நான் பள்ளி மாணவன். அந்தச் சிறு வயதிலேயே என்னுள் ஒரு பெரிய அதிர்வலையை உண்டு பண்ணிய சிறுகதை இது.

செங்கை ஆழியான் “மல்லிகைச் சிறுகதைகள்” தொகுப்பை டொமினிக் ஜீவா அவர்களது பவள விழாச் சிறப்பு நூலாக வெளியிட்ட போது மல்லிகை இதழில் வெளிவந்த முக்கியமான சிறுகதைளை, அவை ஏன் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முக்கியமாகக் கொள்ளப்படுகின்றன என்ற ஆய்வுக் கண்ணோட்டத்தோடு தொகுத்து வெளியிட்டிருந்தார். அதில் இந்தச் சிறுகதையையும் அவர் இனம் காட்டியதில் இருந்து இதன் கனம் புரியும்.ஈழத்தின் போர் தின்ற சனங்களின் ஒரு முகம் இந்தச் சிறுகதை.

ஈழத்து வானொலி ஊடகப் பரப்பில் நீண்ட அனுபவமும், ஆற்றலும் கொண்ட சகோதரி சங்கீதா தினேஷ் பாக்யராஜா அவர்களிடம் வீடியோஸ்பதியின் தொடர் முயற்சியைக் குறிப்பிட்டு இந்தச் சிறுகதையை நேற்று முன் தினம் தான் பகிர்ந்திருந்தேன். முழு மூச்சில் படித்து விட்டு சிறுகதையை சிலாகித்து விட்டு உடன் குரல் பகிர்வைச் செய்து பகிர்ந்தார். இவரின் திறமையில் எனக்கு அபார நம்பிக்கை இருந்தாலும் குரல் பகிர்வைக் கேட்டதும் திகைத்து விட்டேன். அப்படியே செங்கை ஆழியானுக்கு உருவம் கொடுத்தது போல அபாரமான உரையாடல் ஏற்ற இறக்கங்களுடன், ஒரு மிகச் சிறந்த குறும்படம் போல உருவாக்கி விட்டார்.

இந்தச் சிறுகதையை வெளியிட அனுமதி கோரிய போது பெரு மதிப்புக்குரிய செங்கை ஆழியான் (க.குணராசா)“அப்பாவின் எழுத்துக்கள் மூலமாக அவர் சிரஞ்சீவியாக வாழ்வது பெரு மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்”என்று அவர்கள் சொன்ன போது நெகிழ்ந்து போனேன்.
இன்று உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள். இந்த நாளில் இந்தப் புதிய முயற்சியை ஆரம்பிக்க உதவிய எம் செங்கை ஆழியான் குடும்பத்தினருக்கும், சங்கீதா தினேஷ் பாக்யராஜாவுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

YouTube இணைப்பு

கானா பிரபா

அப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்

இன்று விடிகாலை தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்ததுமே அப்போலோ 13 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு இன்றோடு (ஏப்ரல் 11) ஐம்பது ஆண்டுகள் என்ற செய்தி ஓடிக் கொண்டிருந்தது. விண்ணுலகத்தை உரசிப் பார்த்த விண்வெளி ஆய்வுகளில் தோல்விகரமான முயற்சி இந்த அப்போலோ 13. விண்ணில் ஏவப்பட்ட இந்தக் கலம் ஆக்சிஜன் கலன் வெடித்ததால், நிலவில் மிதிக்காமல் மீண்டும் பூமிக்கே திரும்பி வந்தது. போனவர்கள் பத்திரமாகத் திரும்பினார்கள். 13 ஆம் இலக்கம் இங்கேயும் தன் ராசிக்கே உரிய துரதிர்ஷ்ட விளையாட்டைக் காட்டி விட்டதோ என்று எண்ணுவதுண்டு.

நிலவைக் காட்டிச் சோறுண்ட காலம் போய் எங்கள் காலத்தில் வானத்தில் தினம் தினம் நிலவோடு போட்டி போடும் ஒளிக் கொத்துகள் தோன்றுவதுண்டு. அவை போர்க்காலத்தில் இலங்கை விமானப் படையினர் இரவிரவாக தாக்குதல் நிலைகளைக் கண்கணித்துக் குண்டு போடுகிறேன் பேர்வழி என்று வானத்தில் மேலே எறிந்து வெளிச்சம் பாய்ச்சும் வெளிச்சக் குண்டுகள். நிலவைப் பார்த்துக் கவிதை பாட முடியாது, எப்ப ஹெலிக்காரனும், பொம்மர் காரனும் வாறான் என்று மேலே பயந்து பயந்து பார்த்த காலங்கள். உலக விடயங்களையும் உள்ளூர் சமாச்சாரங்களோடு பொருத்தி நினைவில் வைக்கும் எனக்கு அப்போலோ என்றதும் நினைவுக்கு வந்தது அப்போலோ சுந்தா என்ற முத்திரைப் பெயரையும் பெற்ற எங்கள் சுந்தா அங்கிள். ஒலிபரப்பாளராகப் பல சாதனைகள் புரிந்த சுந்தா சுந்தரலிங்கம் என்ற அவருக்குக் கிட்டிய மணி மகுடம் அந்த வாய்ப்பு. அப்போலோ 11 என்ற விண்கலம் விண்ணில் ஆளேறிய முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெறுவது. அந்த விண்கலம் பயணித்த நாள் ஜூலை 16, 1969 ஆம் ஆண்டு, தனது பணியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஜூலை 24, 1969 இல் திரும்பியது. அப்படியானால் சந்திரனில் மனிதன் காலடி வைத்து ஐம்பது ஆண்டுகளை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

சுந்தா சுந்தரலிங்கம் அங்கிளின் மன ஓசை புத்தகத்தில் மனிதன் சந்திரனில் காலடி வைத்த கணங்களை ஒலிபரப்பிய தன் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் என்ற ஞாபகம் தப்பவில்லை. புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன். தொடர்ந்து சுந்தா அங்கிள் பேசுகிறார்.

அப்போலோ சுந்தா

என் ஒலிபரப்பு அனுபவக் களத்திடை மகிழ்ச்சியும், புகழும் தேடித் தந்த அப்போலோ வர்ணனை பற்றிய நினைவுகள் என்றும் இனிமையானவை.

அப்பொழுது நான் இலங்கை வானொலியில் இருந்து இலங்கைப் பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன். அன்றைய இலங்கை வானொலி இயக்குநர் நாயகம் நெவில் ஜயவீர அவர்களிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. சந்திர மண்டலத்துக்கு மனிதன் பயணிக்கப் போகிறான். வாய்ஸ் ஒப் அமெரிக்கா என்ற அமெரிக்க வானொலி நிலையம் தொடர்ச்சியாக வர்ணனை செய்யவுள்ளது. தொடர்ச்சியாக என்றால் ஓரிரு நாட்கள் அல்ல, மூன்று நான்கு நாட்கள். வாய்ஸ் ஒப் அமெரிக்கா ஒலிபரப்பை இயர்போன் மூலம் காதில் வாங்கியபடி உடனடியாகத் தமிழிலும், சிங்களத்திலும் தர முடியுமா? என்று அவர் கேட்டார். என்னோடு பாராளுமன்றத்தில் இருந்த சிங்கள அறிவிப்பாளர் அல்பிரட்டும் கூட இருந்தார்.

பெரியதொரு சவாலாக இது எமக்கு இருந்தது. இரண்டு பேருமே “நிச்சயம் முடியும்” என்று உறுதி கூறினோம். அவர் உடனேயே ஏற்பாடு பண்ணி கொழும்பிலே உள்ள அமெரிக்கன் தூதரகத்துக்கு அனுப்பி வைத்தார். ஏற்கனவே இத்திட்டம் போல ஜெமினி என்றொரு விண்வெளிக்கலத்தை வானுக்கு அனுப்பிப் பரீட்சித்துப் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. அதற்குரிய படங்களையெல்லாம் அவர்கள் திரைப்படங்களாக வைத்திருந்தார்கள். அவர்களே ஏற்பாடு பண்ணி எங்கள் இருவருக்குமாகத் திரையிட வைத்தார்கள். திரையிடும் போது தான் உண்மையாகவே எப்படி இது நடக்கப் போகிறது, எப்படி அவர்கள் பேசப் போகிறார்கள், என்ன என்ன விடயம் எல்லாம் தேவை என்பது எங்களுக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்தது. பொறுப்பு மிக அதிகம் என்பதும் புரிய ஆரம்பித்தது. ஆங்கிலத்தில் பேசுவதைத் தமிழிலோ, சிங்களத்திலோ மொழி பெயர்ப்பது ஒன்று, ஆனால் மறு பக்கத்திலோ அமெரிக்கன் ஆங்கிலம் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கர்கள் பேசுகின்ற முறையும், ஆங்கிலத்தை அவர்கள் பேசினாலும், அதை உச்சரிக்கும் முறையும் இந்த மாதிரியான வான் வெளிப் பிரயாணத்துக்கான சேவையிலே இருக்கின்ற அந்தத் திட்டத்திலே வேலை செய்கின்றவர்கள் பேசுகின்ற சொற் பிரயோகங்களும் பிரயோகித்த சொற்களும் வேறு விதமாக இருந்தன. இதனைப் படங்கள் பார்த்த பின்னர் தான் நாம் அறிந்தோம். சாதாரணமாகப் பாராளுமன்றத்தில் பேசுகின்ற ஒரு உரையினைத் தமிழிலோ சிங்களத்திலோ கொடுப்பது போன்றதல்ல இது என்று எங்களுக்குத் தெரியும். அமெரிக்கர்களின் இந்தப் பேசும் முறை, அவர்கள் பேசும் மொழி, அவர்களது ஆங்கில உச்சரிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வான்வெளிக்களங்களில் என்ன மாதிரியான சொற்களை எல்லாம் பிரயோகிக்கிறார்கள் என்ன மாதிரியாக அது இருக்கும் என்பதெல்லாம் எங்களுக்குப் புதிதாக இருந்தது. ஆனால் அமெரிக்கன் தூதரகம் மிகவும் ஒத்தாசையாக இருந்து அந்தப் படங்களை எங்கள் வசதிப்படி எங்களுக்கு எப்பப்போ தேவையோ அப்பப்போ எல்லாம் போட்டுக் காட்டினார்கள். ஒருவகையில் எங்களுக்குப் பயிற்சி அளித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இத்தனை உதவிகளையும், ஒத்தாசைகளையும் செய்தவர்கள் இவர்கள் இந்த நிகழ்ச்சி தரமாக அமைய வேண்டும், மக்களுக்குத் தெளிவாக இவை புரிய வேண்டும் என்பதற்காக எங்களுக்கு உதவியாக மேலும் நான்கு பேரை ஆயத்தம் செய்தார்கள். பேராசியர் குலரத்தினம், இவர் புவியியல் பேராசிரியராகப் பல்கலைக்கழகத்தில் இருந்தவர். பேராசிரியர் ஏ டபிள்யூ மயில்வாகனம், இவர் பெளதீகவியல் பேராசிரியராக இருந்தவர். ஆனந்த சிவம் என்றொரு இளைஞர். அவர் ஒரு விஞ்ஞானி. இவர்களை விட கோபாலபிள்ளை மகாதேவா என்னும் ஒரு விஞ்ஞானி, , பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராக இருந்த திரு குமாரசாமி இப்படியாக ஐந்து பேரை அவர்கள் ஆயத்தம் செய்திருந்தார்கள். வொய்ஸ் ஒப் அமெரிக்கா தருகின்ற விடயங்களுக்கு இடையிடையே விளக்கம் கொடுப்பதற்கும், அதே வேளையிலே நாம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்க முடியாது, இன்னும் உதவியாளர்கள் தேவை என்பதற்காக இவர்கள் ஒழுங்கு செய்யப்பட்டனர். அவர்களது உதவியும் எமக்குத் தேவையாக இருந்தது.

எங்களுடைய ஒலிபரப்பு எவ்வளவு வெற்றிகரமாக முடிந்தது என்பதற்குச் சான்றாகச் சில விடயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இலங்கை வானொலிக்கு அதுவும் தமிழ்ப் பணிக்கு ஒரு தனிப்பட்ட வசதி இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

அதாவது நேயர்களைப் பொறுத்த மட்டிலே இலங்கையில் உள்ளவர்கள் மட்டுமல்ல தென்னிந்தியாவில் உள்ளவர்களும் எமது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு வசதியாக இருக்கின்றது. அப்பொழுதும் இருந்தது. ஆக முக்கியமாக சந்திர மண்டலம் தொடர்பான இந்த ஒலிபரப்பை ஆல் இந்தியா ரேடியோ எங்களைப் போல வர்ணனையாகத் தரவில்லை என்பதனாலும், தமிழிலே அது தொடர்பான எந்தவித நிகழ்ச்சிகளும் இருக்கவில்லை என்பதனாலும் எமது நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு அன்று இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். முன்பின் தெரியாதவர்கள் கூட எங்களுக்குக் கடிதம் எழுதினார்கள். முக்கியமாக இந்த நிகழ்ச்சியைப் பற்றி லட்சம் பேர் என்று சொல்லலாம். அவ்வளவு கடிதங்கள் வந்தன. ஒரு நாள் நான் இலங்கை வானொலி நிலையத்துக்குப் போயிருந்த போது சுந்தரலிங்கம் வந்தால் இங்கே வரச் சொல்லுங்கள் என்று திரு நெவில் ஜெயவீர சொல்லி வைத்து இருந்தாராம். அவரின் அழைப்புக் கிடைத்ததும் அவரிடம் போனேன். அவர் மெல்லியதொரு புன்முறுவலுடன் தன் உதவியாளரைக் கூப்பிட்டு அந்த சாவியை எடுத்து வரச் சொன்னார். என்னையும் கூட்டிக் கொண்டு அவருடைய காரியாலயத்துக்குப் பக்கத்திலே இருந்த ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று அதைத் திறக்கச் சொன்னார். சிறிய அறை அது. கதவைத் திறந்ததும் ஆயிரக் கணக்கான போஸ்ட் கார்ட் கடிதங்கள் குவிந்து வீழ்ந்தன. அதைப் பார்த்துக் கொண்டு அவர் என்னைக் கட்டித் தழுவி இவை தான் உமக்கும் எங்களுக்கும் கிடைத்த பரிசு என்று மிகவும் பெருமையுடன் சொன்னார். இவ்வளவு கடிதங்களும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவை என்பது தான் முக்கியம். அவ்வளவு கடிதங்களையும் அவர் பிரித்துப் படித்து, அவருக்குத் தமிழ் ஓரளவு தான் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் எல்லாவற்றையுமே அவர் பார்த்துக் கணக்கெடுத்து இவ்வளவு கடிதங்கள் எங்களுக்குத் தென்னிந்தியாவில் இருந்தே வந்திருக்கின்றன என்று சொன்ன போது பெருமையாகத் தான் இருந்தது. அவர் பின்னர் இலங்கையிலே உள்ள பத்திரிகைகளுக்கு எழுதி விஷயத்தை விளக்கி எங்களுக்கு இவ்வளவு நண்பர்கள் தென்னிந்தியாவிலே இருக்கிறார்கள் என்று விளம்பரப்படுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி அப்பொழுது இலங்கை வானொலி செய்த இந்தச் சேவையைப் பாராட்டி அல்பிறெட் பெரேரா என்ற நண்பருக்கும் எனக்கும் தனது கைப்படக் கடிதங்கள் எழுதியிருந்தார். கூடவே அமெரிக்க வரலாறு தொடர்பான ஆங்கில நூல் ஒன்றும் ஜனாதிபதி கையெழுத்துடன் அன்பளிப்பாக இணைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் எனது நண்பர்கள் கூட “அப்போலோ சுந்தா” என்று அழைக்க ஆரம்பித்தார்கள் ! இது எனது வாழ்க்கையிலே கிடைத்த பெரும் அனுபவம். பெரும் பாராட்டென்று சொல்வேன்.
மூத்த ஒலிபரப்பாளர் சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் தனது “மன ஓசை” நூல் வழியே எழுதியதை மேலே தட்டச்சும் போது கண்கள் பூத்து ஒரு சொட்டுக் கண்ணீர் வந்து வந்தும் விட்டது. எப்பேர்ப்பட்ட சாதனைகளை நிகழ்த்திக் காட்டி விட்டு மெளனமாகப் பயணித்து விட்டார்கள் நம் ஊடகத்துறை முன்னோர்கள்.

கானா பிரபா

11.04.2020

படம் நன்றி : ஈழத்து நூலகம்

கலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)

ஈழத்தவரால் மரபுக் கலைகள் பேணிப் பாதுகாக்கப்பட்டு, நிகழ்த்திக் காட்டிய தருணத்தில் வில்லிசைக் கலை என்பது பள்ளிக்கூடத்தில் இருந்து கோயில்கள், வாசிகசாலைகள் என்று கடைக்கோடி ரசிகர்கள் வரை கட்டியெழுப்பப்பட்ட மரபாக விளங்கியது.

அந்த வகையில் இந்த வில்லிசைக் கலைக்குப் பெருமை சேர்த்தவரில் நாச்சிமார்கோயிலடி இராசன் அவர்களின் பங்கு புலம் பெயர் சூழல் வரை தடம் பதித்தது.

இன்று எங்களின் பெருமை மிகு ஈழத்துப் படைப்பாளி நாச்சிமார்கோயிலடி இராசன் அவர்களது பிறந்த நாளில் அவர் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம நிதிக்கான வில்லிசை நிகழ்வு நடத்த அவுஸ்திரேலியாவுக்கு 2011 ஆம் ஆண்டில் வருகை தந்தபோது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் நான் எடுத்த பேட்டியைப் பகிர்கிறேன்.

🥅🥅🥅🥅🥅🥅🥅🥅🥅🥅🥅🥅

அன்புச் சகோதரர் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்) அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கானா பிரபா