வரதரின் படைப்புலகம்

வரதர் என்ற தி.ச.வரதராசனின் படைப்புலகப் பணியில் அவரின் அச்சுவாகனமேறிய படைப்புகளை அன்னாரின் நினைவுப் படையலாக வழங்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் கருக்கட்டியிருந்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற அவர்தம் படைப்புக்களை முன்னர் வாசித்த பலருக்கு இதுவொரு நினைவு மீட்டலாகும் அதே சமயம் வரதரின் எழுத்துலகப் பங்களிப்பின் ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியாயும் கூட இது அமையும். அந்த வகையில் மார்ச் 2004 இல் வெளிவந்த வரதர் 80 என்ற சிறப்பு மலரில் இருந்து இந்தப் பட்டியலைத் தருகின்றேன்.

முழுப்பெயர்: தியாகர் சண்முகம் வரதராசன்
பிறந்த திகதி: 1924-07-01
தொழில்: அச்சக முகாமையாளர், நூல் வெளியீட்டாளர்
புனை பெயர்கள்: வரதர், வரன்

முதலில் அச்சில் வெளிவந்த கட்டுரை: 1939, ஈழகேசரி – மாணவர்களுக்கான கல்வி அனுபந்தம்

முதலில் அச்சில் வந்த சிறுகதை: கல்யாணியின் காதல், ஈழகேசரி ஆண்டு மலர் 1940

படைத்த சிறுகதைகள்:
ஈழகேசரி
1. கல்யாணியின் காதல் (1940)
2. விரும்பிய விதமே (1941)
3. கல்யாணமும் கலாதியும் (1941)
4. குதிரைக்கொம்பன் (1941)
5. தந்தையின் உள்ளம் (1941)
6. ஆறாந்தேதி முகூர்த்தம் (1941)
7. கிழட்டு நினைவுகள் (1941)
8. விபசாரி (1943)

மறுமலர்ச்சி
9. இன்பத்திற்கு ஓர் எல்லை (1946)
10. வென்றுவிட்டாயடி ரத்னா (1946)
11. ஜோடி (1947)
12. அவள் தியாகம் (1948)
13. வேள்விப் பலி (1948)

சுதந்திரன்
14. மாதுளம்பழம்

ஆனந்தன்
15. கயமை மயக்கம்
16. உள்ளுறவு
17. வாத்தியார் அழுதார்

தினகரன்
18. பிள்ளையார் கொடுத்தார்
19. வீரம்
20. ஒரு கணம்

வரதர் புத்தாண்டு மலர்
21. உள்ளும் புறமும்

கலைச்செல்வி
22. புதுயுகப் பெண்

தமிழ் எழுத்தாளர் சங்கக் கதையரங்கு
23. வெறி

மத்திய தீபம்
24. கற்பு

புதினம்
25. இன்று நீ வாழ்ந்திருந்தால்…..
26. ஓ இந்தக் காதல்!

மல்லிகை
27. பொய்மையும் வாய்மையிடத்து
28. தமிழ்மொழி தேய்கிறதா
29. உடம்போடு உயிரிடை நட்பு
29. தென்றலும் புயலும் (1976)

படைத்த குறுநாவல்கள்
1. வென்றுவிட்டாயடி இரத்தினா
2. உணர்ச்சி ஓட்டம்
3. தையலம்மா (மறுமலர்ச்சி)

படைத்த கவிதைகள்
1. ஒர் இரவிலே (ஈழகேசரி)
2. அம்மன் மகள் (மறுமலர்ச்சி)
3. யாழ்ப்பாணத்தார் கண்ணீர் – குறுங்காவியம் (வீரகேசரி)

நூல்களாக வெளிவந்த ஆக்கங்கள்
1. நாவலர்
2. வாழ்க நீ சங்கிலி மன்ன!
3. கயமை மயக்கம் – (மறுபதிப்பு “வரதர் கதைகள்”)
4. மலரும் நினைவுகள் (வரலாற்றுத் தரிசனம்)
5. பாரதக்கதை
6. சிறுகதைப் பட்டறிவுக்குறிப்புக்கள்

நடத்திய சஞ்சிகைகள்
1. மறுமலர்ச்சி (1946)
2. வரதர் புத்தாண்டு மலர் (1949)
3. ஆனந்தன் (1952)
4. தேன்மொழி (1955)
5. வெள்ளி (1957)
6. புதினம் (1961)
7. அறிவுக்களஞ்சியம் (1992)

வெளியிட்ட நூல்கள்:
1. இலக்கிய வழி (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை)
2. வள்ளி (மஹாகவி)
3. கயமை மயக்கம் (வரதர்)
4. தெய்வப் பாவை (சொக்கன்)
5. மூன்றாவது கண் (கனக செந்தில்நாதன்)
6. பிரபந்தப்பூங்கா (கனக செந்தில்நாதன்)
7. இசை இலக்கணம் ( சங்கீத பூஷணம், சந்திரசேகரம்)
8. தமிழ் மரபு ( வித்துவான் பொன் முத்துக்குமாரன்)
9. சிலம்பின் சிறப்பு (வித்துவான் பொன் முத்துக்குமாரன்)
10. இலக்கியமும் திறனாய்வும் ( பேராசிரியர் கைலாசபதி)
11. கோபுர வாசல் (முருகையன்)
12. 24 மணிநேரம் (நீலவண்ணன்)
13. 12 மணிநேரம் (நீலவண்ணன்)
14. மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது (நீலவண்ணன்)
15. யானை (செங்கை ஆழியான்)
16 மழையில் நனைந்து (செங்கை ஆழியான்)
17. விடிவெள்ளி பூத்தது (சோமகாந்தன்)
18. ஒட்டுமா (சாந்தன்)
19. சிலம்பொலி (நாவற்குழியூர் நடராசன்)
20. அமிர்தலிங்கம் (சாமிஜி)
21. “நாம் தமிழராகிடுவோம்” (வி.பொன்னம்பலம்)
22. திருக்குறள் பொழிப்புரை (தி,ச,வரதராசன்)
23. ஆங்கிலத் தமிழகராதி ( கொக்கூர் கிழார்)
24. வரதரின் பலகுறிப்பு
25. திருக்குறள் – 100
26. பாதை மாறியபோது – (கலாநிதி,காரை,செ.சுந்தரம்பிள்ளை)
27. அவன் பெரியவன் (நாகராசன்)
28. சுதந்திரமாய்ப் பாடுவேன் (திருச்செந்தூரன்)
29. இராமன் கதை ( சம்பந்தன்)
30. போக்கிரி முயலாரின் சகாசங்கள் (சொக்கன்)
31. வேப்பமரத்தடிப் பேய் (சி.சிவதாசன்)
32. திருமலைக் கொடுமைகள் (கா.யோகநாதன்)
33. ஈழத்துச் சிறுகதை வரலாறு ( கலாநிதி.க.குணராசா)

இன்னுஞ்சில….


இப்பதிவில் வரதரின் “கற்பு” மற்றும், “வாத்தியார் எழுதார்” ஆகிய இரண்டு சிறுகதைகளைத் தருகின்றேன். இச்சிறுகதைகளைத் தட்டச்சி வலையேற்ற உதவியவர் நண்பர் கோபி (ஈழத்து நூலகம் மூலப்பதிவு)

கற்பு – வரதர்

(வரதர் எழுதிய கற்பு பரவலான கவனம் பெற்ற சிறுகதைகளில் ஒன்று.
அச்சிறுகதையும் அதுபற்றிய கா. சிவத்தம்பி, க. குணராசா ஆகியோரது குறிப்புக்களும்.)


மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டின் முன் விறாந்தையிலே மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றி வந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள்.

“மாஸ்டர், நீங்கள் ‘கலைச்செல்வி’யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?” என்று கேட்டார் ஐயர்.

“ஓமோம், ஆரம்பத்திலிருந்தே ‘பார்த்து’ வருகிறேன். ஆனால் எல்லா விஷயங்களையும் படிக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏன், என்ன விஷேசம்?”

“கலைச்செல்வி’ பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை…”

“யார் எழுதியது?”

“எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவந்தான் மனத்தை உறுத்திக்கெண்டேயிருக்கிறது.”

“சொல்லுங்கள், நினைவு வருகிறதா பார்க்கலாம்?”

“மூன்றாம் வருஷம் இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டதல்லவா; அந்தச் சூழ்நிலையை வைத்துக் கதை எழுதப்பட்டிருக்கிறது. குளக்கட்டை உடைத்துக்கொண்டு ஒரு கிராமத்துக்குள் வெள்ளம் பெருகி வருகின்றது; சனங்கள் உயரமான இடத்தைத் தேடி ஓடுகிறார்கள். அந்த ஊரில் ஒரு பணக்காரனின் வீட்டுக்கு ‘மேல்வீடு’ம் இருக்கின்றது; அங்கே அவன் தனியாக இருக்கின்றான்; வெள்ளத்துக்கு அஞ்சி ஒரு ஏழைப்பெண் – இளம் பெண் அந்த மேல் வீட்டுக்குச் செல்கிறாள்; பணக்காரன் அவளைப் பதம் பார்க்க முயல்கிறான்; அவள் இசையவில்லை; அவன் பலாத்காரம் செய்தேனும் அவளை அடையத் துணிந்து விட்டான். அவள் உயிரைவிடக் கற்பையே பெரிதாக மதிப்பவள். மேல் வீட்டிலிருந்து கீழே குதித்து உயிரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள்…. இந்தக் கதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் மாஸ்டர்?”

“என்ன நினைக்கிறது? புராண காலத்தில் இருந்து திருப்பித் திருப்பிப் படித்த ‘கருத்து’த்தான். கதையை அமைத்த முறையிலும் வசன நடையின் துடிப்பிலுந்தான் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும். நான் படிக்கவில்லை. படித்தால்தான் அதைப்பற்றிச் சொல்லலாம்.”

“நான் கதைக்கு விமர்சனம் கேட்கவில்லை மாஸ்டர். புராண காலத்திலிருந்து படித்ததாகச் சொன்னீர்களே, அந்தக் ‘கருத்தை’ப்பற்றித்தான் உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்.”

“எதைக் கேட்கிறீர்கள் ஐயா? தனது கற்பைக் காப்பாற்ற உயிரைத் துறந்தாளே, அதைப்பற்றியா?”

“ஓமோம், அதையேதான்.”

“ஒரு பெண்ணின் முக்கியமாகத் தமிழ்ப் பெண்ணின் சிறப்பே அத்ல்தானே இருக்கின்றது! மானம் அழிந்தபின் வாழாமை இனிதென்பதல்லவா தமிழன் கொள்கை?”

ஐயர் பெருமூச்சு விட்டார். பிறகு, “நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களா?” என்று கேட்டார்.

மூர்த்தி மாஸ்டர் திகைத்தார். தான் என்ன தவறுதலாகச் சொல்லிவிட்டாரா? இந்த ஐயர் என்ன இப்படிக் கேட்கிறார்?

ஒரு நிமிஷ நேரம் மௌனம் நிலவிற்று. ஏதோ எண்ணித் துணிந்துவிட்டவர்போல கணபதி ஐயரே மீண்டும் மௌனத்தைக் கலைத்தார்.

“மாஸ்டர், எனக்கும் என் மனைவிக்கும் மட்டும் தெரிந்த ஒரு இரகசியத்தை உங்களுக்குச் சொல்லப்போகிறேன் – உங்களுக்குச் சொல்லலாம்; சொல்வதால் ஒரு தீமையும் ஏற்படாது. இதைக் கேட்டபிறகு ‘கற்பு’ பிரச்சினையைப்பற்றிப் பேசுவோம்.

* * *

போனவருஷம் பெரியந்தனை முருகமூர்த்தி கோயிலில் நான் பூசை செய்து கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும். அங்கே தமிழர்கள் தொகை ஐம்பது பேர்கூட இருக்காது. விசேட தினங்களுக்கு மட்டும் பிற இடங்களிலிருந்தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்களவர்கூடப் பலர் கோயிலுக்கு வந்து அருச்சனை செய்விப்பது வழக்கம்.

சிங்களவர் – தமிழர் கலகம் துவங்கினவுடனே அங்கே இருந்த தமிழர்களில் முக்கால்வாசிப் பேரும் யாழ்ப்பாணத்துக்கு ஓடிவந்துவிட்டார்கள். நான் பூசையை விட்டுவிட்டு எப்படிப் போகமுடியும்? என் மனைவியைப் போகும்படி சொன்னேன். எனக்கு வருவது தனக்கும் வரட்டுமென்று அவள் மறுத்துவிட்டாள். சிங்களவரும் அக்கோயிலிலே கும்பிட வரும் வழக்கம் இருந்ததால் கோயில் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். எங்களுக்கும் ஆபத்து நேராது என்ற துணிவில், அவளை மேலும் வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன்.

ஒரு புதன்கிழமை, அன்று பேபிநோனா என்ற சிங்களக் கிழவி – அவள் எங்களோடு நன்கு பழகியவள். கோயிலுக்கும் நாள் தவறாமல் வருகிறவள் – அவள் சொன்னாள். “நீங்கள் இனி இங்கேயிருப்பது புத்தியில்லை ஐயா. காலியிலிருந்து சில முரடர்கள் மூன்று லொறிகளில் வருகிறார்களாம். வருகிற வழியெல்லாம் தமிழர்களை இல்லாத கொடுமை செய்கிறார்களாம். ந்றிரவோ நாளையோ இந்தப்பக்கம் வரக்கூடுமென்று கதைக்கிறார்கள். நீங்கள் இப்போதே புறப்பட்டு பொலீஸ் ஸ்டேசனுக்குப் போய் விடுங்கள். பிறகு பொலீஸ் துணையோடு கொழும்புக்குச் செல்லலாம்” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்ட பிறகு ‘அப்பனே முருகா! என்னை மன்னித்துக்கொள்’ என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு கையோடு கொண்டு போகக்கூடிய பொருள்களை இரண்டு பெட்டிகளுள் சேகரித்தோம். என் மனைவியின் நகைகளையும் – நூலில் கட்டிய தாலியொன்றைத் தவிர – எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் பூட்டினோம். இந்த ஆயத்தங்கள் செய்வதற்குள் மாலை ஐந்து மணியாகி விட்டது. நாங்களும் புறப்பட ஆயத்தமானபோது பேபி நோனா அவசரம் அவசரமாக ஓடிவந்தாள். “ஐயா, ஐயா, சில்வாவும் வேறு இரண்டு பேருமாக வாறான்கள். அம்மாவை அவன்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஒளித்திருக்கச் சொல்லுங்கோ! கேட்டால் ‘நேற்றே ஊருக்குப் போய்விட்டா’ என்று சொல்லுங்கோ. நான் இங்கே நின்றால் எனக்கும் ஆபத்து; உங்களுக்கும் ஆபத்து, கவனம் ஐயா” என்று சொல்லி விட்டு பேபி நோனா ஓடி மறைந்து விட்டாள்.

சில்வாவை எனக்குத் தெரியும்; ஆள் ஒரு மாதிரி. ‘ஐயா, ஐயா’ என்று நாய்மாதிரிக் குழைந்து ஐம்பது சதம், ஒரு ரூபா என்று இடைக்கிடை என்னிடம் வாங்கியிருக்கிறான். ஆள் காடைத் தரவளியாதலால் நானும் பட்டும் படாமலும் நடந்து வந்திருக்கிறேன். இரண்டொரு நாள் என் மனைவியை றோட்டில் தனியாகக் கண்டபோது அவனுடைய பார்வையும் சிரிப்பும் நன்றாக இருக்கவில்லையென்று அவள் சொல்லியதுண்டு.

இப்போது அவன் வருகிறானென்றால்…

எனக்கு ஒருகணம் ஒன்றும் தோன்றவில்லை. யோசிக்கவும் நேரமில்லை. வீட்டுக்குள் உயரத்திலே பரண் மாதிரி மூன்று மரங்களைப் போட்டு அதன்மேல் சில பழைய பெட்டிகளைப் போட்டிருந்தது. என் மனைவியை நான் தூக்கி அந்த மரங்களின்மேல் விட்டு மெதுவாக அந்தப் பெட்டிகளின் பின்னால் மறைந்திருக்கும்படி விட்டேன். பிறகு எங்கள் பயணப் பெட்டிகளை எடுத்துச் சற்று மறைவாக ஒரு மூலையில் வைத்துவிட்டேன். பிறகு, முன் விறாந்தைப் பக்கம் வந்தேன். நானும் வர அந்தக் காடையர்களும் வாயிலில் நுழைந்தார்கள். எனக்கு உள் மனது நடுங்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, “என்ன சில்வா, இந்தப் பக்கம்?” என்று சிரிக்க முயன்றேன்.

“சும்மாதான், நீங்கள் இருக்கிறீர்களா, இல்லாவிட்டால் யாழ்ப்பாணத்துக்குக் கம்பி நீட்டி விட்டீர்களா என்று பார்க்கத்தான் வந்தேன்” என்றான்.

“முருகனை விட்டு நான் எங்கேதான் போகமுடியும்?” என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லை.

“எங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும்” என்றான் சில்வா. நான் சரியென்று குசினிப் பக்கம் போனேன். எனக்குப் பின்னால் அவர்கள் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு செம்பில் தண்ணீரை வார்த்துக் கொண்டு நிமிர்ந்தேன். எனக்கு முன்னால் அந்த மூன்று காடையர்களும் நின்றார்கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லை.

“அதுசரி அயா, எங்கே அம்மாவைக் காணவில்லை?”

நான் திரும்பித் திரும்பி மனத்துக்குள் ஒத்திகை பார்த்து வைத்திருந்த வசனங்களை ஒப்புவித்தேன்: “அவ நேற்றே ஊருக்குப் போய்விட்டாவே.”

‘பளீர்’ என்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது! செம்பும் தண்ணீரும் உருண்டு சிதறியது. என் கண்களுக்குப் பார்வை வருமுன்பே என் மடியில் கையைப் போட்டு ஒருவன் இழுத்தான்; மற்றக் கையினால் வயிற்றில் ஒரு குத்து விட்டான்.

“தமிழ்ப் பண்டி, பொய்யா சொல்லுகிறாய்? இன்று காலையிற்கூட உன் பொண்டாட்டியைப் பார்த்தேனே!”

மற்றவன் கேட்டான்: “சொல்லடா! அவளை யார் வீட்டில் கொண்டு போய் ஒளித்து வைத்திருக்கிறாய்?” எனக்கு நெஞ்சிலே கொஞ்சம் தண்ணீர் வந்தது. இந்த முரடர்கள் நான் அவளை வேறு யார் வீட்டிலோ ஒளித்து வைத்திருப்பதாக நினைத்துவிட்டார்கள். ஆகையால் இந்த வீட்டில் அதிகம் பார்க்க மாட்டார்கள். என் உயிர் போனாலும் சரி; அவள் மானம் நிலைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

“என்னடா பேசாமல் நிற்கிறாய்?”

குத்து! அடி! உதை!
குத்து! அடி! உதை!
குத்து! அடி! உதை! ……..

நான் இயக்கமின்றிக் கீழே விழுந்து விட்டேன். அம்மட்டிலும் அவர்கள் விடவில்லை. இரண்டுபேர் என்னைப் பிடித்துத் தூக்கினார்கள்.

“அவள் இருக்கிற இடத்தை நீ சொல்ல மாட்டாய்? … கடைத் தெருப்பக்கம் காலியிலிருந்து லொறியில் வந்திருக்கிறான்கள். அவன்களிடம் உன்னைக் கொண்டுபோய்க் கொடுத்தால், உன்னைத் தலை கீழாகக் கட்டித் தூக்கித் தோலை உரித்த பிறகு கீழே நெருப்பைக் கொழுத்தி சுடுவான்கள், உனக்கு அதுதான் சரி!….. வாடா!” என்று சொல்லி இழுத்தார்கள். என்னால் நடக்கவும் முடியவில்லை. அவ்வளவு அடி அகோரம். அவர்கள் என்னை இழுத்துக் கொண்டு நடுவீட்டுக்கு வந்துவிட்டார்கள். மேலே என் மனைவி… அந்த அறையையும் கடந்து வெளியே காலை வைத்து விட்டார்கள்.

“நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்ற கூச்சலோடு என் மனைவி பரணிலிருந்து குதித்தாள்.

“அவரை விட்டு விடுங்கள்!” என்று அலறிக் கொண்டே என்னிடம் ஓடி வந்தாள்.

அவர்கள் என்னை விட்டு விட்டார்கள். ஆறு முரட்டுக் கரங்கள் அவளை மறித்துப் பிடித்தன.

பிறகு……

என்னை ஒரு மேசையின் காலோடு பின்கட்டாகக் கட்டினார்கள். அவளை – என் மனைவியை – குசினிப்பக்கம் இழுத்துக் கொண்டு போனார்கள். இரண்டொரு நிமிஷங்களில் அவளுடைய அலறல் கேட்டது. பிறகு அவள் அலறவில்லையோ, அல்லது நாதான் இரத்தம் கொதித்து, மூளை கலங்கி, வெறிபிடித்து, மயங்கி விட்டேனோ!

மறுபடி எனக்கு நினைவு வரும்பொழுது அதே மேசையடியில் யாரோ ஒருவருடைய மடியில் படுத்திருபதை உணர்ந்தேன். என்னை அவ்விதம் ஆதரவாகத் தூக்கி மடியில் வைத்திருப்பது யாரென்று அறிய ஒரு ஆவல். கண்களைத் திறந்து பார்த்தேன்.

என் மனைவி!

மானம் அழிந்த என் மனைவி……

எத்தனையோ நூற்றாண்டுகளாக ஊறிப்போன ‘கருத்து’ என்னைச் சித்திரவதை செய்தது. மானத்தை இழந்த என் மனைவியின் மடிமீது தலை வைத்துப் படுத்திருக்கிறேனே; …… என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே நிலத்தில் விழுந்துவிட வேண்டுமென்று மனம் உன்னிற்று.

என் முகத்திலே ஒரு சொட்டுக் கண்ணீர்; இன்னொன்று, இன்னொன்று. என் முகமும் அவள் கண்ணீரால் நனைய, மனம் சிந்திக்கத் தொடங்கியது.

மூன்று விஷப் பாம்புகள் அவளைக் கடித்து இன்பத்தை உறிஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித்தன. எரிந்து போகிற உடலை யோரோ என்னவோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப்படாதபோது அவளுடைய மானம் போய்விடுமா? செய்யாத குற்றத்துக்கு அவள் தண்டனை அடைய வேண்டுமா? மனம் சம்பந்தப்படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால் பிரசவத்துக்காக டாக்டரிடம் போகும் பெண்களெல்லாம் –

என் மனத்தில் எழுந்த ருவருப்பை வெளியே இழுத்தெடுத்துத் தூர வீசினேன். பரிதாபப்படவேண்டிய, பாராட்டப்படவேண்டிய என் மனைவியின் பெருமை என் நெஞ்செல்லாம் நிறைந்தது. மெதுவாக அவள் கைகளைப் பற்றி என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.

பிறகு பொலீஸ் வந்தது. பேபி நோனாதான் அந்த உதவியைச் செய்தாளென்று பின்னால் தெரிந்து கொண்டேன். என்னவோ கஷ்டமெல்லாம் மட்டு, அகதி முகாமில் கிடந்துழன்று எப்படியோ இங்கே வந்து சேர்ந்தோம்…….

* * *

“இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணின் உடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்துவிடுமா? அதற்காக அவள் உயிரையும் அழித்துவிடவேண்டுமா? ….. அப்படி உயிரை விட்டவளைப் பத்தினித் தெய்வமென்று கும்பிட வேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறியவள் – அப்படிச் செய்வதே கற்புடைய மகளிர் கடமை என்ற சமூகக் கருத்தினால் உந்தப்பட்டு ஏற்றப்பட்டவள் பத்தினித்தெய்வமா, அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்துக்குப் பலியான பேதையா? ….. சொல்ல்ங்கள் மாஸ்டர்!…”

கணபதி ஐயர் உணர்ச்சி மேலீட்டால் பொருமினார்.

“என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா! இப்படித்தான் பரம்பரை பரம்பரையாக இரத்தத்தில் ஊறிப்போன பல விஷயங்களைப்பற்றிச் சிந்திக்காமலே அபிப்பிராயம் கொண்டுவிடுகிறோம். நான் கூட எவ்வளவு முட்டாள்தனமாக அபிப்பிராயம் சொல்லி விட்டேன்….. ஐயா, பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு தேவையில்லாத விஷயங்களிலெல்லாம் வாய்வீச்சு வீசுகிற பலரை எனக்குத் தெரியும். ஆனால் உண்மையான ஒரு பகுத்தறிவுவாதையை இன்றைக்குக் கண்டு பிடித்துவிட்டேன்” என்று சொன்னார் மூர்த்தி மாஸ்டர். ஐயர் வீட்டுச் சுவரிலே இருந்த மகாத்மா காந்தியின் படம் – அதிலே ஐயரின் சாடை தெரிவதுபோலத் தோன்றியது மூர்த்தி மாஸ்டருக்கு.

(“கற்பு” முதலில் மத்தியதீபம் இதழில் வெளியானது. வரதரின் கயமை மயக்கம் (1960) இல் இடம்பெற்றுள்ளது. செம்பியன் செல்வன் எழுதிய ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மணிகள் (1973) நூலில் வரதர் பற்றிய குறிப்போடு வெளிவந்தது.)

கா. சிவத்தம்பி – மலரும் நினைவுகள் (1996) நூல் முன்னுரையில்,

இவரது சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960இல் வெளிவந்தது. அத்தொகுதியில் இடம்பெறும் “கற்பு” எனும் சிறுகதை. 1956 இனக்கலவரத்தின் பொழுது கற்பழிக்கப்பட்ட தனது மனைவியை ஏற்றுக் கொள்ளும் கோயிற் பூசகரின் மனத்திண்மை பேசப்படுகிறது. இந்தச் சிறுகதை இலக்கிய விமர்சனங்கள் முதல் சமூகவியலாளர் வரை பலரால் எடுத்துப் பேசப்படுவதாகும்.

செங்கை ஆழியான் க. குணராசா – ஈழத்துச் சிறுகதை வரலாறு (2001) நூலில்,

இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரச் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு கற்பு, வீரம் என்றிரு சிறுகதைகளை வரதர் எழுதியுள்ளார். கற்பு வரதருக்குப் பெருமை சேர்த்த சிறுகதை எனலாம். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணுடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்து விடுவதில்லை என்ற கருத்தினைக் கூறக் கற்பு உருவாகியது.

புரட்சிகரமான சமூகக் கருத்தொன்றினைப் பேசுகின்ற கற்புச் சிறுகதை காலதேச வர்த்தமானங்களைக் கடந்த சிறுகதையாகப்படுகிறது. பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்கள் சமூகத்தில் தற்கொலை செய்து தம்மை அழித்துக் கொள்கிறார்கள். இச்சமூகம் அதை விரும்புவது போலப்படுகின்றது. கணபதி ஐயரின் வீட்டுக்குள் நுழைந்த காடையர்கள் அவரைக் கட்டிவைத்து விட்டு அவர் மனைவியைப் பலாத்காரம் செய்து விடுகிறார்கள். நன்கு பழகிய சில்வாவே முன்னின்று இந்த ஈனச் செயலைச் செய்கிறான்.

‘செய்யாத குற்றத்திற்கு அவள் தண்டனை அடைய வேண்டுமா? ம்னம் சம்பந்தப்படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால்…..’ பகுத்தறிவற்ற சமுதாயத்திற்குப் பலியான பேதை மனைவியை எதுவித மனக்காயமுமின்றி கணபதி ஐயர் ஏற்றுக் கொள்கிறார். இதுதான் கற்பு சிறுகதை. இச்சிறுகதை கூறுகின்ற சமூகச்செய்தி இன்று மட்டுமல்ல, என்னும் நமது யுத்தச் சூழலில் வாழ்கின்ற சமூகத்திற்கு தேவையென்பேன். புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் சிறுகதையில் சந்தர்ப்பச் சதியால் அகல்யை இந்திரனால் மானமிழக்கிறாள். ‘சதர்ப்பம் செய்த சதிக்கு பேதை நீ என்ன செய்வாய்?’ என்கிறார் கௌதமர். அது அவள் கல்லாகிச் சாபவிமோசனமடைந்ததன் பிறகு. ஆனா, கற்பில் கணபதி ஐயர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அவளைக் கடியவில்லை. சாபமிடவில்லை. வாழ்க்கையில் எதுவுமே சகசமாக்கிக் கொள்கிறார். கௌதமரிலும் பார்க்க வரதரின் கணபதி ஐயர் ஒருபடி உயர்வான பாத்திரம்.


வாத்தியார் அழுதார் – வரதர்


பள்ளிக்கூடம் விடுகிற நேரம். நாலாம் வகுப்புக்குக் கடைசிப்பாடம் வரைதல். முருகேசு உபாத்தியாயர் கரும்பலகையில் ஒரு பெரிய பூசினிக்காயின் படம் வரைந்திருந்தார். அதைப்பார்த்து மாணவர்கள் கொப்பிகளில் வரைந்து கொண்டிருந்தார்கள்.

சுந்தரம் அந்த வகுப்பிலேயே முதலாம் பிள்ளை. அவனுடைய ‘ஆட்டுப்புழுக்கைப்’ பென்சிலாலே ஒருமாதிரி பூசினிக்காய்க்கு உருவம் போட்டு விட்டான். அதன் ஒரு பக்கம், மறுபக்கத்திலும் பார்க்கக் கொஞ்சம் ‘வண்டி’ வைத்துவிட்டாற் போலிருதது. அழித்துக் கீறலாமென்றால் அவனிடம் றப்பர் இல்லை. பக்கத்திலிருந்த ‘தாமோரி’யிடம் இரவல் கேட்டான். தாமோரி, தன்னுடைய பெரிய ‘ஆர்ட்டிஸ்ற் றோய்ங்’ கொப்பியிலே புத்தம்புதிய வீனஸ் பென்சிலால், பூசினிக்காயென்று நினைத்துக் கொண்டு பனங்காய் மாதிரி ஏதோ ஒரு உருவம் போட்டுக் கொண்டிருந்தான். சுந்தரம் வடிவாகக் கீறியிருப்பதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஒரு பக்கம் கொஞ்சம் வண்டியாக இருப்பதையும் சுந்தரம் அழித்துத் திருத்துவதை அவன் பொறுப்பானா? “போடா! என்னுடைய றப்பர் தேய்ஞ்சுபோம்; நான் தரமாட்டேன்” என்றான்.

சுந்தரம் விரலிலே சாடையாக எச்சியைத் தொட்டு பிழையான கோட்டை அழிக்க முயன்றான். இதுகூடப் பொறுக்கவில்லை தாமோரிக்கு. டக்கென்று எழுந்து, “வாத்தியார்!” என்று ஒரு பெரிய சத்தம் போட்டான்.

மத்தியான இலவச போசனத்தை அரசாங்கத்தார் நிறுத்தப் போவதைப் பற்றிப் பத்திரிகையிலே வாசித்துக் கொண்டிருந்த உபாத்தியாயர் தாமோரி போட்ட சத்தத்தில் நிமிர்ந்து “என்னது?” என்றார்.

“வாத்தியார், இங்கே சுந்தரம்……. எச்சிலைத் தொட்டுப் படத்தை அழிக்கிறான்!”

முருகேசு உபாத்தியாயர் அந்த ஊர் மனுசர்தான். அவருக்குப் பணக்கார வீட்டுப் பிள்ளையான தாமோரியையும் தெரியும்;தந்தையை இழந்தவுடன் ஏழைப் பிள்ளையாகிவிட்ட சுந்தரத்தையும் தெரியும். அதோடு இருவரின் குணத்தையும் நன்றாக அறிவார்.

“இங்கே வா சுந்தரம்!” என்றார்.

படபடக்கும் நெஞ்சோடும், அதைப் பிரதிபலிக்கும் முகத்தோடும், இயற்கையாகவே மெலிந்த உடம்போடும் சுந்தரம் வந்தான்.

“நீ எச்சில் தொட்டு அழித்தாயா?”

சுந்தரம் பதில் சொல்லுமுன்பே தாமோரி எழும்பி, “நான் பார்த்தேன் வாத்தியார்!” என்றான்.

“நீ இரடா அங்கே! உன்னை யாரடா கூப்பிட்டது?” என்று விழித்துப்பார்த்த உபாத்தியாயரின் கண்ணில் பொறி பறந்தது! அதைப் பார்த்ததும் சுந்தரத்தின் உடம்பு பதறத் தொடங்கிவிட்டது.

ஆனால் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்த உபாத்தியாயரின் முகத்தில் கருணை தவழ்தது. “இங்கே வா, சுந்தரம்” என்று அவாஇப் பக்கத்தில் கூப்பிட்டு முதுகில் லேசாகத் தட்டினார். “நீ எச்சில் போட்டாயா?” என்றார்.

“என்னிடம் றப்பர் இல்லை வாத்தியார்; அம்மாவிடம் காசும் இல்லை!” என்ற சுந்தரத்தின் கண்களில் நீர் ந்றைந்து விட்டது.

“றப்பர் இல்லாவிட்டால் எச்சில் போடக்கூடாது…” என்றார் உபாத்தியாயர். ஆனால் வேறு என்ன செய்யச் சொல்லலாம் என்று யோசித்தவருக்கு ஒரு யோசனையும் ஓடவில்லை. குனிந்து பார்த்தவர் சுந்தரத்தினுடைய கால்சட்டைப் பையுக்குள்ளே என்னவோ மொத்தமாகத் தள்ளிக்கொண்டு கிடப்பதைக் கவனித்தார்; “கால்சட்டைப் பையுக்குள்ளே என்ன வைத்திருக்கிறாய்?”

சுந்தரம் பரிதாபமாக உபாத்தியாயரைப் பார்த்தான். அந்தப் பார்வை அவரை என்னவோ செய்தது. “ஏன் பயப்படுகிறாய்? நீ நல்ல பையன்; பிழையான காரியம் செய்ய மாட்டாய். பயப்படாமல் சொல்லு!” என்றார்.

சுந்தரம் அப்போதும் பதில் சொல்லவில்லை. தலையைக் குனிந்தான். பொல பொலவென்று நாலு சொட்டுக் கண்ணீர் அவன் காலடியில் விழுந்தது. உபாத்தியாயர் அவனை இன்னும் கிட்ட இழுத்து அவன் முதுகைத் தடவிக்கொடுத்து “அழாதே சுந்தரம், அதற்குள்ளே என்ன, புத்தகமா?” என்றார்.

சுந்தரம் இல்லையென்று தலையசைத்தான். பிறகு துடித்துக் கொண்டிருந்த உதடுகளைக் கஷ்டத்துடன் திறந்து மெதுவாக, “வாத்தியார்…. அது… அது… கொஞ்சப் பாண்!” என்றான்.

“ஏன், நீ சாப்பிடவில்லையா?…. பசிக்கவில்லையா?”

“கூப்பன் அரிசி விலை கூடிப்போச்சென்று அம்மா அரிசி வாங்கவில்லை. வீட்டிலே இருக்கிற தங்கச்சிக்கு சாப்பிடக் கொடுக்கத்தான் அதை வைத்திருக்கிறேன்….”

‘நீ போ சுந்தரம்’ என்று உபாத்தியாயர் வாயால் சொல்லவில்லை; அவரால் சொல்ல முடியவில்லை. ‘அண்ணை பள்ளிக்கூடத்தால் வரும்போது பாண் கொண்டுவருவார் என்று, பசியோடு வழி பார்த்திருக்கும் அந்த மூன்று வயதுக் குழந்தையின் வயிறுமல்லவா இனிமேல் துடிக்கப்போகிறது!’ சுந்தரத்தைப் போகும்படி தலையசைத்து விட்டு, உபாத்தியாயர் சால்வைத் தலைப்பினால் தமது கண்களை ஒற்றிக்கொண்டார்.

சுந்தரம்! ….. உன்னைப்போல எத்தனை சுந்தரங்கள்!

(இச்சிறுகதை முதலில் ஆனந்தன் இதழில் பிரசுரமானது. வரதரின் கயமை மயக்கம் (1960) தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.)

வரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது


ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா.
தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி யாழிலிருந்து வலைப்பதிவெழுதும் பகீ மூலம் அறிந்து நெஞ்சம் கனத்தது. என் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று வரதரின் இலக்கியப்பணியை அவர் குரலில் ஆவணப்படுத்துவது அது இனிமேலும் நிறைவேறாது வரதரின் மரணம் என்ற முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது.

கடந்த மார்ச், 2005 நான் யாழ்ப்பாணம் சென்றபோது சந்திக்க முனைந்த எழுத்தாளர்களில் ஒருவர் செங்கை ஆழியான், மற்றவர் வரதர்.

மார்ச் 17 ஆம் திகதி, 2005 காலை வேளை என்அப்பாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு யாழ் நகரம் போகும் போது ஆனந்தா அச்சகம் என்ற வரதரின் அச்சக நிலையம் சென்று அவரைச் சந்திக்கலாம் என்று முடிவெடுக்கின்றேன். சைக்கிளை கே.கே.எஸ் வீதியின் ஓரமாக நிறுத்தி விட்டு அச்சகம் உள்ளே நுளைகின்றேன்.


முகப்பில் இருந்த கதிரையில் இருந்து ஏதோ எழுதிக்கொண்டிருக்கின்றார் வரதர். ஒரு முறையும் சந்திக்கவில்லை என்றாலும் புகைப்படம் மூலம் ஏற்கனவே அறிமுகமாயிருந்த அவரை இனங்கண்டு,
“வணக்கம் ஐயா, நான் உங்களைப் பார்க்கவெண்டு வந்திருக்கிறன், உங்கட வரதர் வெளியீடுகள் மூலம் நிறைய வாசித்திருக்கிறன்” இது நான்.

வெள்ளைத் தும்பை மீசைக்குள்ளால் தன் வெண்பற்கள் எட்டிப்பார்க்க முறுவலித்தவாறே
“ஓ அப்பிடியே, சந்தோஷம்”, வெளியால இருந்து வந்திருக்கிறீங்களே?” இது அவர்.

“ஓம் ஐயா, நான் ஒஸ்ரேலியாவில இருக்கிறன், ஊருக்கு விடுமுறையில் வந்த போது உங்களையும் கட்டாயம் பார்க்கவேணும் என்டு வந்தனான்.” பவ்யமாக நான் சொல்லவும், எழுத்தை நேசிப்பவர்களை நானும் நேசிப்பேன் என்ற தோரணை கலந்த சிரிப்பு மீண்டும் அவரிடமிருந்து.

வரதர் வெளியீடுகளில் 95 இற்குப் பின் நான் தவறவிட்ட அவர் வெளியீடுகள், படைப்புக்களைப் பற்றி நிறையவே பேசினார். கண்ணாடிப்பெட்டிக்குள் அடுக்கியிருந்த நூல்களை எடுத்து உதறித் தட்டி ஒரு துணியால் தூசை வளித்தெடுத்து விட்டுத் தந்தார்.
“இந்தப் புத்தகங்கள் இப்போது போறது குறைவு” என்றும் அவர் சொன்னது இப்ப நினைவுக்கு வருகுது.
என்னால் வாங்கக்கூடிய அவரின் இலக்கியக் கையிருப்பை அப்படியே அள்ளிக்கொண்டேன்.

“நான் ஒஸ்ரேலியா போனதும் சனிக்கிழமை செய்யும் வானொலி நிகழ்ச்சியில் உங்களின் இலக்கியப் பணி குறித்து ஒரு நேர்காணல் செய்ய விருப்பம்” இது நான்.

“நல்ல சந்தோஷம், கட்டாயம் செய்வம்” என்றவாறே தன் தொலைபேசி இலக்கம் பொறித்த முகவரி அட்டையைத் தந்தார்.அவரைப்புகைப்படமும் எடுத்துக்கொள்கின்றேன்(மேலே இருக்கும் முதற்படம்)
ஒரு பழுத்த இலக்கியக்காரரைச் சந்தித்த நல்லனுபவத்தோடு சைக்கிளில் சவாரியை ஆரம்பித்தேன்.

வரதர் எனக்குத் தந்த தன் விலாச அட்டை

மீண்டும் நான் வாழும் நாடு வந்து வரதரோடு நேர்காணல் செய்ய முனையும் ஒவ்வொரு முனைப்பிலும் ஏதாவது தடங்கல் வந்துவிடும். நாட்டுப்பிரச்சனை கொழுந்து விட்டு எரியவும், முக்கிய பிரச்சனைகளுக்காக வானொலியில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. யாழுக்கான தொலைபேசி உரையாடலும் சீரற்று வரதர் ஐயா குறித்த என் வானொலி நிகழ்ச்சியும் கனவாயிற்று.

“இலங்கையில் உள்ள எழுத்தாளர்களுள், சமுதாயத் தொண்டர்களின் தொகைபெருகி வருகின்றது. வாழ்க்கையை உள்ளத்தால் உணர்ந்து, சிக்கல்களுக்கு மருந்து தேர்ந்து, தெளிந்து அவற்றைத் தம் கதைகளிற் படைத்துக் காட்டுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். திரு.தி.ச.வரதராசன் (வரதர்) இவ்வகையான எழுத்துத் தொண்டொன்று புரிந்து வருகின்றார்”- சொன்னவர் டாக்டர் மு.வரதராசன் (மு.வ)

தன் எழுத்தை மட்டுமே நேசித்து மற்றையவர்களில் படைப்பைப் புறங்கையால் ஒதுக்கும் இலக்கியக்காரர் மத்தியில் , தன் எழுத்துப்பணியுடன் மற்றையவர்களை எழுதத் தூண்டி வரதர் பிரசுரம் மூலம் அச்சுவாகனமேற்றும் வரதர் ஐயா உண்மையில் ஒரு ஆலமரம். அவரின் விழுதுகளாக நிலைபெற்றவை அவரின் வெளியீடுகள். வரதர் பிரசுரம் ஒன்றையாதல் வாசிக்காமல் விடுபவர் ஈழத்து இலக்கியத்தின் வாசிப்பனுபவத்தில் குறைவை விட்டுச் செல்பவர்.

“ஒரு ஆக்க இலக்கியம், எழுத்தாளனுடைய மனத்திலே ஒரு நல்ல கருத்து குடிபுக, அவன் அந்தக் கருத்தைச் சுவையான முறையிலே வெளிப்படுத்துக்கின்றான். வெளிப்படுத்தும் உருவம் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று யாரும் கட்டுப்பாடு செய்ய முடியாது. நல்ல ஆக்கமானால் அந்த ஆக்க இலக்கியம் விலை போகும். மக்களிடையே பேசப்படும். அதைப்பிறகு ஆய்வு செய்யும் இலக்கணக்காரர்கள் அந்த உருவத்துக்கு ஒரு பெயர் வைக்கட்டும்.” – வரதர்

திசை புதிது இதழ்-1 (2003) இல் வெளிவந்த வரதர் குறித்த ஆக்கம்
(எழுத்தாக்கம் கோபி)

மூத்த எழுத்தாளர் வரதர் ஈழத்தின் இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று ‘வரதர்’ என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர். ‘வரதர்’ என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார்.

சிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச – புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம்.

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் போல வரதர் எழுதத் தொடங்கியதும் ஈழகேசரி (1930-58)யிற் தான். ஈழகேசரி கல்வி அனோபந்தத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்த ‘கல்யாணியின் காதல்’ வரதரின் முதற் சிறுகதை.

தொடர்ச்சியாக எழுதி வந்த வரதர் அவரையொத்த எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களை இணைத்து ஓர் எழுத்தாளர் சங்கம் உருவாக்கும் ஆவல் வரதருள் எழுந்தது; செயல்வடிவம் பெற்றது. 1943. 06. 13 இல் ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்’ உருவானது. இந்த வகையில் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கத்திற்கு அடித்தளமிட்ட பெருமை பெறுகிறார் வரதர். இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய ‘ஓர் இரவினிலே’ எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது. தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் முதலில் ‘மறுமலர்ச்சி’ எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டது.

1946 பங்குனியில் மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சிடப்பட்டது. வரதர், கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சரசர்மா, க.ஆ.சரவணமுத்து ஆகிய ஐவருமே முதல் போட்டு மறுமலர்ச்சியைத் தொடங்கினர். மறுமலர்ச்சி யாருக்குச் சொந்தம் என்பது பிரச்சினையாகி நீதிமன்றம் வரை சென்று மீண்டே மறுமலர்ச்சி வெளியானது. மறுமலர்ச்சி வெளியீட்டாளராக நடராசன் இருந்தார். ஆசிரியர்களாக வரதரும் அ.செ.முருகானந்தனும் இருந்தனர். 18 ஆவது இதழிலிருந்து அ.செ.முருகானந்தனுக்குப் பதிலாக பஞ்சாட்சரசர்மா பணியாற்றினார். 1946 பங்குனி முதல் 1948 ஐப்பசி வரை ‘மறுமலர்ச்சி’ 24 இதழ்கள் வெளியாகின.

ஈழத்துச் சிறுகதையின் தனித்துவத்திற்கும் 50களில் ஏற்பட்ட ஈழத்து இலக்கிய எழுச்சிக்கும் அடித்தளமிட்டது மறுமலர்ச்சி தான் என்றால் அது மிகையாகாது. 1952 இல் வரதர் ஆனந்தன் எனும் சஞ்சிகையை ஆரம்பித்தார். இதுவும் ஓர் இலக்கிய இதழே. ஆரம்பத்தில் யாழ்ப்பாணனும் பின்னர் புதுமைலோலனும் ஆனந்தனின் இணையாசிரியராக இருந்தனர். 1955 இல் வரதர் மஹாகவியை இணையாசிரியராகக் கொண்ட ‘தேன் மொழி’யை வெளியிட்டார். ஈழத்தில் கவிதைகளுக்கென வெளிவந்த முதற் சஞ்சிகை தேன்மொழி. தேன்மொழி ஆறு இதழ்களே வெளியாகின.

இவை தவிர ‘வெள்ளி’ எனும் சஞ்சிகையும் ‘புதினம்’ எனும் வார இதழும் கூட வரதரால் வெளியிடப்பட்டன. பொருளாதாரக் காரணங்களால் இவையும் நின்று போயின. வரதரின் பிரசுர முயற்சிகளும் முக்கியமானவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கைலாசபதி, மஹாகவி, முருகையன், பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், காரை சுந்தரம்பிள்ளை, சோமகாந்தன், சாந்தன் முதலான பலரது நால்கள் ‘வரதர் வெளியீடு’ ஆக வெளிவந்தன.

‘வரதரின் பல குறிப்பு’ அவரது இன்னொரு முயற்சி. தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியாகின. வரதரின் இதழியற் பணியில் இன்னொரு மைல்கல் அறிவுக் களஞ்சியம். இலாப நோக்கின்றி குறைந்த விலையில் மாணவர்க்கான அறிவுத் தகவல்களைத் தாங்கி அறிவுக் களஞ்சியம் வெளியானது. செங்கை ஆழியான் இணையாசிரியராக இருந்தார். 1995 இலம் பெயர்வு வரை யாழ்ப்பாணத்தில் 3000 பிரதிகள் வரை விற்பனையாகி அமோக வரவேற்புப் பெற்றது அறிவுக் களஞ்சியம். வரதர் ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர். ஈழத்தின் முதலாவதும் முக்கியமானதுமான மறுமலர்ச்சிச் சங்கத்திற்கு கால்கோள் இட்டவர். இதழியலில் சிறந்து விளங்கியவர். முதற் கவிதை இதழ் வெளியிட்டவர். இவை தவிர ஈழத்தின் முக்கிய பதிப்பாளர். வரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு ‘சாஹித்திய இரத்தினம்’ எனும் பட்டத்தை அளித்திருக்கிறது.

வரதர் ஐயா! போய் வாருங்கள்,
மீண்டும் நீங்கள் என் தாய்நாட்டில் பிறக்கவேண்டும்
என்ற என் சுயநல அவாவுடன்


கண்ணீர் அஞ்சலிகளோடு பிரியாவிடை கொடுக்கின்றேன் உங்களுக்கு.

வலைப்பதிவில் ஒரு வருஷம்


தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது.

இன்பத் தமிழ் ஒலி வானொலியில் நான் படைக்கும் “கருத்துக்களம்” நிகழ்ச்சியில் அவ்வப்போது பயனுள்ள தமிழ் தளங்களைப் பற்றிய அறிமுகங்களை அவ்வப்போது வழங்கியபோது கண்ணிற்பட்டது தமிழ்மணம் என்ற வலைப்பதிவுகளின் திரட்டி.

ஆரம்பத்தில் தமிழ் மணம் என்பது ஒரு நண்பர் குழுமத்தின் படைப்பு என்ற வகையிலேயே என் நினைப்பிருந்தது. புளொக்கரில் என் கணக்கை ஆரம்பித்து முதற் இடுகை போட்டதும் கனக்ஸ் (சிறீ அண்ணா) ” பிரபா நீங்கள் இன்னும் தமிழ்மணத்தில் சேரவில்லையா” என்று கேட்டபோது தான் தமிழ்மணத்தின் பயன்பாட்டைக் கொஞ்சம் அறிந்துகொண்டேன்.

மதி கந்தசாமி என்ற ஒருவர், என் இரண்டாவது இடுகையை வாசித்து ”மதி கந்தசாமி (Mathy) said…
படிச்சு முடிக்கேக்க சரியான கஷ்டமா இருந்தது…//
என்று பின்னூட்டியதும், பின்னர் என் இரண்டு இடுகையோடே தமிழ்மணத்தில் சேர முயன்று,
மீண்டும் மதி கந்தசாமியின் மடல் ” நீங்கள் தமிழ்மணத்தில் சேரக் குறைந்தது மூன்று இடுகைகளாவது இடவேண்டும்” என்று வந்தது.

“இதென்னடா யாரோ மதி கந்தசாமி என்ற மனுஷன் ( ஒரு அம்பது வயசு யாழ்ப்பாணத்துக் கனடாவாசி என்ற நினைப்பில்) இப்படிப் படுத்துறாரே” என்று மனசுக்குள் நினைத்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மூன்றாவது இடுகையும் போட்டுத் தமிழ்மணத்தில் நுழைந்துகொண்டேன்.
ஆரம்பத்தில் என் வலைப்பதிவுலகில் ஆனா.. எழுத ஆரம்பித்த நாளில் பேருதவி புரிந்த சிறீ அண்ணாவையும்(கனக்ஸ்), மதியையும் நன்றியோடு நினைப்பில் வைத்திருக்கின்றேன். புதிய வலைப்பதிவரைத் தட்டிக்கொடுத்து எழுதத் தூண்டும் பண்பை மதியிடமிருந்து தான் கற்றேன் என்பதையும் இங்கே சொல்லவேண்டும். (கனடாவில வின்ரறாம்)

1995 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் பல்கலைக்கழகத்தின் கணினியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தளத்தில் “ஈழம் செய்திகள்” (தமிழில் ரைப் செய்து ஸ்கான் செய்யப்படிருந்தது) வலையில் வந்த நாளில் அதைப் பிரதியெடுத்து இணையத்தில் என் தாய்மொழி வந்திருக்கின்றதே இன்ப அதிர்ச்சியோடு எனக்கு நானே புழகாங்கிதப்பட்டதும், பின் தமிழ்பதிவுகளே என் வாழ்க்கையின் அங்கமாகியதும் “நம்தமிழ்.கொம்” என்ற இணையத்தைக் கொஞ்சக்காலம் நடத்தியதும் கழிந்த நிகழ்வுகள்.

சொந்த நாட்டிலிருந்து திசைமாறிய பறவைகளாகத் திக்கொன்றாய்ப் போன உறவுகளாக நாம் இப்போது…..
பல ஆண்டுகள் புலம்பெயர்வாழ்வில் இருந்த தாய்நாடு மீதான ஏக்கம் என் பதிவுகளுக்கு வடிகாலாய் மாறி என் உள்ளக்கிடக்கைகளைக் கொட்டியது. அதேவேளை ஒத்த சிந்தனையுள்ள பல நண்பர்களைக் கடந்த ஒருவருஷத்தில் தமிழ்மணத்தின் உறவுப்பாலம் தேடித்தந்துவிட்டது.
ஒருவரா இருவரா விரல் விட்டுச் சொல்ல..?
எல்லா நண்பர்களின் உற்சாகப்படுத்தலுக்கும், பின்னூட்டல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

இன்னும்….தனிப்பட்ட முறையில் பல நல்ல உள்ளங்களை நண்பர்களாகச் சம்பாதித்ததும் 13 வருஷங்களுக்கு மேல் தொலைத்துவிட்ட நண்பன் இங்கிலாந்திலிருந்து என்னை மீண்டும் இனம் கண்டுகொண்டதும் கூட இந்தப் பதிவுலகாலும் தமிழ்மணத்தாலும் நான் சம்பாதித்தவை.
பெங்களூரில் ராகவனுடன் ஏப்ரல் 06 இலும், செந்தழல் ரவியுடன் மே 06 இலும், நெல்லைக்கிறுக்கனுடன் ஆகஸ்ட் 06 இலும்(கூடவே மழை ஷ்ரேயா, கஸ்தூரிப்பெண், கார்திக் வேலு), துளசிம்மாவுடன் செப்டம்பர் 06 இலுமாக (கூடவே மழை ஷ்ரேயா, பொட் டீ கடை, கஸ்தூரிப்பெண், சிறீ அண்ணா) வலைப்பதிவாளர் சந்திப்புக்களும் அமைந்துவிட்டது.

எனக்குப் பிடிக்காத விஷயத்தைப் பற்றிப் பேசவும் மட்டுமல்ல, எழுதவும் இயன்றவரை விரும்புபவதில்லை. அதனால் தான் என் பதிவுப் பங்களிப்பும் மிகக்குறைவு. ஆனால் பிடித்த விஷயத்தைப் பற்றி நேரக்கணக்கில் பேச, எழுதப் பிடிக்கும். அதனால் தான் என் பதிவில் நீட்சி அதிகம். பதிவு எவ்வளவு சிறப்பாக வரவேண்டும் என்று ஆசைபடும் அதே கணம் பதிவின் தலைப்பிலும் பொருத்தமான படத் தேர்விலும் இருக்கவேண்டும் என்பதிலும் அதி கூடிய முனைப்பிருக்கிறது.

கடந்த மே மாதத்திலிருந்து உலாத்தல் என்ற என் சக பதிவுத்தளமும் வந்துவிட்டது. வாரியார் தளத்தின் பதிவரில் ஒருவராக வலைப்பதிவு நண்பர் கோபி இணைத்துள்ளார்.
தனியான ஒலித்தளம் நடத்தவேண்டும் என்பதும் (கூல்டவுண் சின்னக்குட்டி:-))) புளெக்கரை நம்பாமல் புதிய தளத்தைக் கட்டியெழுப்பவேண்டும் என்பதும் என் அடுத்த சுற்றில் அமுற்படுத்த வேண்டும் என்ற முனைப்பான ஆசைகள்.
இந்த வருஷம் ஏபரல், 2006 ஊருக்குப் போனபோது நான் எடுத்த படங்களின் பின்னே சொல்லப்படாத சோகங்கள் பதிவுகளாக வேண்டும். இப்படி நிறையக் கனவிருக்கிறது. எம் சமுதாயம் கழிந்த நிகழ்வுகளோடும் கழியாத நினைவுகளோடும் தானே நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றது.
என் பதின்ம வயதுகளில் மடத்துவாசல் பிள்ளையரடியில் தோழர்களோடு வாழ்ந்து தொலைத்த நினைவுகளை இன்றைய நிஜங்களோடு இரைமீட்கின்றேன்.

மீண்டும் தொடங்கும் மிடுக்கு

நேசம் கலந்த நட்புடன்
கானா.பிரபா

கடந்த ஒரு வருஷத்தில் பிரத்தியோக அறிவித்தல்கள் தவிர்ந்த என் இடுகைகள் இதோ:

தேவராசா அண்ணை குடும்பம் இருந்த வீடு

2005 மார்ச் கடைசியில பத்து வருடம் கழிச்சு ஊருக்கு போனேன்.
தேவராசா அண்ணர் வீடு அதே அழிபாட்டோட கிடந்தது.
அதுதான் இந்தப்படம்.மூத்தவள் கத்தி கத்தி பேச்சு போட்டிக்கி பயிற்சி எடுப்பதும், கடைக்குட்டியின் வெக்கச்சிரிப்பும், என்ர மனசுக்குள்ள ஒருக்கா அந்தநேரம் வந்து போனது.
” பிரவு அண்ணா வைரவரடிக்கு போவமே” எண்டு லாவண்யன் கூப்பிடுவது போல எனக்குப்பட்டது அந்த நேரம்.

பதேர் பாஞ்சாலியும் பெரிய மாமியும்

முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், விலகிப் போன பந்தங்களையும் தேடி அது ஒடுகின்றது, கிடைக்காத பட்சத்தில் கழிந்து போன வாழ்வியலின் நினைவுகளை அசை போட்டு எஞ்சிய அந்திம காலத்தை அது கழிக்கின்றது.

எங்க ஊரு காவல்காரங்கள்

இலங்கை அரசாங்கத்தின்ர விமானம் இந்த முகாமைக் குறிபார்த்த குண்டு பக்கத்துத் தோட்டதில நின்று விளையாடிய இருண்டு பாலகரைப் பரிதாபமக் கொன்று தன் பசியை அடக்கியது. ஈழ வரலாற்றில முதல் தடவையா போட்ட விமானக் குண்டு அது தான். முதல் கோணம் முற்றும் கோணல் போல இவன்கள் போட்ட குண்டுகள் எப்போதுமே பொது சனத்தைத் தான் பதம் பார்க்கும்.

வெடி கொளுத்தி ஒரு ஊர்ப்பொங்கல்

பொங்கலுக்கு முதல் நாளே வெடிச்சத்தம் கிளம்பிவிடும். சின்னம்மாவின் மகன் துளசி அண்ணாவும், வெடிகளை வெடிக்க வைப்பதில் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து அவற்றை அமுல்படுத்துவதில் கெட்டிக்கார். பழைய மண்ணெண்ணை பரலுக்குள்ள வெடிச்சரத்தைப்போட்டு விட்டு கொள்ளிக்கட்டையைப் போடுவார். அமுக்கமான அந்த நெருக்கத்துக்குள்ள இருந்து அவை வெடிக்க ஆரம்பிக்கும் போது அந்தத் சத்ததோட ஒப்பிடேக்க ஆமிக்கறன்ர ஷெல் பிச்சை வாங்கோணும்

ஃபீனிக்ஸ் தேசத்தில் நான்

” அப்பா! ஜப்பான்காரன்கள் ஓய்வொழிச்சல் இல்லாம நல்லா வேலை செய்வான்கள்”
இது நான்.

” ஏன் நாங்கள் மட்டும் என்ன குறைச்சலே தம்பி? நான் வெள்ளன மூண்டு நாலு மணிக்கு எங்கட தோட்டத்துக்குக் தண்ணி இறைக்கப் போவன், பிறகு எட்டுமணிக்குப் பள்ளிக்கூடம் போய் வாத்தியார் வேலை, பின்னேரம் திரும்பவும் தோட்டவேலை, ஆடுகளுக்கு குழைவெட்ட வேணும்”
இது என்ர அப்பா.

சுக்குபக்கு சுக்குபக்கு கூ……!

ஈழத்தில் எங்கோ ஒரு மூலையில தூரத்தில் புள்ளிகளாக யாரோ சில பிள்ளைகள் ரயில் விளையாட்டு விளையாடுவது போல ஒரு உணர்வு மனதை நிறைக்கின்றது.
” சுக்குபக்கு சுக்குபக்கு கூ, கடகட வண்டி கடுகதி வண்டி போகுது பார், சுக்குபக்கு சுக்கு பக்கு கூ”

வீடும்…. வீடுகளும் !

எங்கட நாட்டில உப்பிடி வாயையும் வயித்தையும் கட்டிக் கட்டின எத்தின வீடுகள் இண்டைக்கு காடுகளாகக் கிடக்குது. ஆமி ஊரைப் பிடிக்கேக்க ஓடு ஒளிவதும் பிறகு வீடு பாக்க வரும் போது ஆமியின்ற சூடு பட்டு சாகிறது, மிதிவெடியில அகப்பட்டுக் கால் போறது எண்டு எத்தினை அவலம்.
வீடு ஒரு சடப்பொருள் எண்டாலும் எங்கட ஆக்களுக்கு அதில் இருக்கிற ஏதோ ஒரு இனம் புரியாத நேசம் தான், இப்பிடி எங்கோ இடம்பெயர்ந்து இருந்தாலும் தன் வீட்டைத் தேடி ஓடிப் போகச் செய்கிறது.

சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும்


என்னைப் பொறுத்தவரையில் சினிமா என்பது என்னுடைய வாழ்க்கையோடு ஊறிவிட்ட ஒரு அம்சம். அதற்காக ரம்பா எத்தனை நாய் வளர்க்கின்றார், கமலஹாசன் யாரோடு புதிதாக dating போகிறார் போன்ற அதிதீவிர சினிமாப் பக்கம் நான் போவதேயில்லை.
என் வாழ்க்கையில் சந்தித்துப் போன சில தியேட்டர் சம்பந்தமான அனுபவங்களும் நினைவுக்கு வருகுது.

கடலினக்கரை போனோரே…..

” கடலினக்கரை போனோரே” என்ற சினிமாப் பாடலை எப்படி இன்னும் கேட்டுக்கேட்டு ரசிக்கிறேனோ அதே அளவு உயர்ந்த இசைத்தரத்தில் தான் பார்வதி சிவபாதம் பாடிய ” கடலலையே கொஞ்சம் நில்லு” பாடலையும் சாந்தன் பாடிய “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலையும் ரசிக்கின்றேன், எள்ளளவும் குறையாமல்.

யாழ்ப்பாணத்து வருசப்பிறபபு

வருசப்பிறப்பு நினைவுகளின் எச்சங்களை இரை மீட்டிக் கொண்டு இணுவிலுக்குத்திரும்பினேன்.
புதிதாய்ப் பிறந்த வருடத்திலாவது நிரந்தர நிம்மதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு நிற்குமாற்போலக் காங்கேசன் துறை வீதி அமைதியாகக் குப்புறப் படுத்துக்கிடந்தது. பாதை நீண்ட தூரம் போல எனக்குப் பட்டது.

சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!

“நந்தனாருக்கு சுவாமி தரினம் தரத் தில்லை நடராஜப்பெருமானே “சற்றே விலகியிரும் பிள்ளாய்” என்று நந்திக்குக் கட்டளையிட்டு விலகச்செய்ததும், தில்லை நடராஜரின் ஆனந்தத் தாண்டவத் தரிசனமும், தில்லை மூவாயிரவர் என்று ஆண்டவனைத் தோத்தரித்த அந்தணர்கள் என இதன் வரலாற்றுப்பெருமையை இன்னும் நீட்டும்.
பாலா மாஸ்டர் இந்துநாகரிகம் வகுப்பில் படிப்பிக்கும் போது கற்பனையுலகில் அதைஉருவகித்து வியந்தது ஒருகாலம்,
கண்முன்னே எம்மதத்தவரே அதைச் சீர்க்கெடுப்பது நிகழ்காலம்.

நான் உங்கள் ரசிகன்

என் தாயகத்தில் இருக்கும் எனதருமை எழுத்தாளரே!
தங்கள் படைப்புக்களை நுகர்ந்து போகும் வெறும் வாசகன் அல்ல நான், உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் நேசிக்கும்
நான் உங்கள் ரசிகன்.

எங்களூர் வாசிகசாலைகள்

இந்த வாசிகசாலைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து இளைஞர்களின் நிலைக்களனாக இருந்திருக்கின்றன . ஒவ்வொரு காலகட்டத்திலும் காற்சட்டை போட்ட ஒரு புதிய தலைமுறை இதைத் தாங்கிப்பிடிக்கக் காத்திருக்கும். யுத்தம் என்ற புயல் அடிக்கும் போது பொட்டிழந்து போகும் பாவை போலச் சிதைந்து போகும் இந்த வாசிகசாலைகள் . ஆனால் இன்னொரு தலைமுறை வந்து இதைப் பூச்சூட்டி அலங்கரித்து அழகு பார்க்கும் அடுத்த யுகம் தொடங்கும்.

கறுப்பு ஜுலை 83 – ஒரு அனுபவப் பகிர்வு

(எழுத்து: சோழியான்)
இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா?

இரை தேடும் இயந்திரக் கழுகுகள்

“ஓடு.. ஓடு எண்டு என்ர மூளை கட்டளை போட்டது. என்கால்கள் ஓடுவது போல பிரமை. ஆனால் பயத்தில் அதே இடத்திலேயே குத்திட்டு நின்று மண்ணை விறாண்டிக்கொண்டிருந்தன என் கால்கள். உடம்பெல்லாம் மின்சாரம் அடித்தது போல இருந்தது. சற்றுத் தூரத்தில் முகுந்தன் அதிர்ச்சியில் குப்பிறப்படுத்திருந்தான். நானும் பொத்தென்று தரையில் விழுந்து படுத்தேன்.

ஆகாச வாணியும் விவித் பாரதியும்….!

நேயர்விருப்பம் நிகழ்ச்சிக்கு அடிக்கடி பாடல் கேட்கும் நேயர் பட்டியல் எனக்கும் பாடமாய் ஆகும் அளவிற்கு வந்த நாட்கள் அவை. எமக்கும் பிடித்த பாடல்களை ஒலிப்பதிவு செய்யவும், திரையில் பார்க்கவும் முடியாத அன்றைய யுத்தகாலத்தில் , இந்த நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையின் கடைகோடியில் இருக்கும் சகோதரனோ, சகோதரியோ நான் விரும்பிக்கேட்க விரும்பிய பாடலைத் தாமும் கேட்க அது ஒலிபரப்பாக, அந்த எதிர்ப்பாராத இன்ப அதிர்ச்சித் தருணங்கள் வார்த்தைகளால் வடிக்கமுடியாதவை.

ஈழம் வந்த வாரியார்

80 களின் ஆரம்பப்பகுதியில் தனது ஆன்மீகச் சொற்பொழிவுப் பயணததினை நடாத்த யாழ்ப்பாணம் வந்த வாரியார் சுவாமிகள், எங்களுர் செல்வந்தரும் எனக்குப் பாட்டனார் முறையான உறவினர் வீட்டுக்கு வாரியார் சுவாமிகள் வந்த நிகழ்வும், பேச்சின் நடுவே தானே இரசித்துத் தன் தொந்தி வயிறும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த காட்சியும் என் சிறுவயது ஞாபகத்தில் கறுப்பு வெள்ளைப் படமாக நிரந்தரமாக ஒட்டிக்கொண்டு விட்டது.

அந்த நவராத்திரி நாட்கள்

விஜயதசமி நாளான்று நாலு நாலரை மணிக்கெல்லாம் நீண்டதொரு வாழை மரம் பிள்ளையார் கோயிலடிப் பெடியளால் நட்டு நிமிர்ந்திருக்கும். சுவாமி வெளி வீதி வலம் வந்து உட்புக முன் சோமஸ்கந்தக் குருக்கள் கையில் நீண்டதொரு வாள் போன்ற கத்தி கைமாறும். ஒரே போடாக வெட்டு ஒன்று துண்டு ரண்டாக வெட்டப்படும் வாழைக் குத்தியின் நட்ட பாகத்தில் தன்கையில் இருக்கும் குங்குமத்தால் தடவி விடுவார். (மகிடாசுரனின் ரத்தமாம்).

ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸின் தேன்மழை

ஓட்டோக்காரர் வீரசிங்கம் மண்டபத்துக்குச் சற்றுத் தொலைவில் வண்டியை நிறுத்துகின்றார். ” அங்க மண்டபத்துக்கு முன்னாலை ஆமியின்ர சென்றி பொயின்ற், நான் உதிலை நிக்கிறன், நீங்கள் போய்ப் படமெடுங்கோ” என்றவாறே வண்டிக்குள் காந்தமாக ஒட்டிக்கொள்கிறார் சாரதி. எட்டப் போய்ப் படமெடுத்துவிட்டு வண்டியில் அமர்கின்றேன்.

“எத்தனை எத்தனை களியாட்டங்கள் நடந்த மண்டபம் இது” ஆட்டோவின் இருக்கையில் இருந்து பெருமூச்சாய் என் மனதில் தெறித்த அங்கலாய்ப்பின் வார்த்தைகள்.

ஏ.ஜே.கனகரத்னா நினைவுப்பகிர்வு

ஏ.ஜே.கனகரத்னா பற்றிய நினைவுப் பகிர்வை வழங்கலாமே என்று முடிவெடுத்தபோது நினைவுக்கு வந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அவரைத் தொடர்புகொண்டபோது மறுப்பேதும் சொல்லாது உடனடியாகவே சம்மதித்தார்.

வடக்கும் நாதன்

“நாம் எல்லோருமே ஒரு வகையில் மனநோயாளிகள் தான், நோயின் அளவு தான் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகின்றது” என்று யாரோ சொல்லி, எங்கோ படித்தது நினைவுக்கு வருகின்றது.

என் இனிய மாம்பழமே….!


உயரே மாமரக் கொப்புக்களூடே கடந்து நிலத்தில் தெறித்துத் திசைக்கொன்றாயச் சிதறியோடும் வெம்பல் மாங்காய்களாய் எம் சமூகம்.

தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் என் பதிவுகள்

வாழைமரக்காலம்

நன்றாக உழுது பண்படுத்தி பாத்தி கட்டி, வாழை மரங்கள் லைனுக்கு நிக்கினம். என்ர கண்கள் தோட்டத்தை வெறித்தவாறே நிலைகுத்தி நிற்கின்றன.இந்த வாழைக்குட்டிகளுக்கு உரமாகிப் போனவை தேவராசா அண்ணை,அவர் மனைவி, மூண்டு பிள்ளையள்.கொஞ்ச நாள் அமைதி, பிறகு சண்டை, ஹெலியும், பொம்மரும் குண்டு போடும், தேவராசா அண்ணை குடும்பம் போலை சில குடும்பங்கள் அழியும், தென்னிலங்கைப் பேப்பர்களில இவர்கள் பயங்கரவாதிகள் போலவும் , பயங்கரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டது போலவும் செய்திவரும்.

திரையில் புகுந்த கதைகள்

“திரையில் புகுந்த கதைகள்” என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல் அதிகப்படியான நாவல் இலக்கியங்களைத் திரையில், தமிழ்ப்படங்கள் தராவிட்டாலும் சிறந்த பல நாவல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

ரச தந்திரம் – திரைப்பார்வை

படத்தின் முதற்பாதியில் மீரா ஜாஸ்மின் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் , மறுபாதி மோகன்லால் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் காட்டியிருப்பது இந்தப் படத்தின் திரைக்கதையின் சிறப்பு. போரடிக்காமல் நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்குப் படமாக சத்தியன் அந்திக்காடு தந்திருப்பது அவரின் இயக்குனர் முத்திரையில் இன்னொரு முத்து.

வாடைக்காற்று

நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு.

மறக்கமுடியாத மலரக்கா

வீட்டுக்கு வந்து குளியலறையைப் பூட்டிவிட்டு முகக்கண்ணாடியை வெறித்துப் பார்க்கின்றேன். அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறுடுகின்றது. குமுறிக் குமுறி அழுகின்றேன் நான்.அன்று அழுது தீர்த்துவிட்டேன், இன்றும் மலரக்காவை நினைத்து மனசுக்குள் மெளனமாக அழுகின்றேன். மலரக்கா என்ற நல்லதொரு நேயரை இழந்துவிட்ட சோகம் நான் வானொலி வாழ்வை விட்டுப் போகும் வரையும்..

பிஞ்சுமனம் – குறும்படப்பார்வை

சொல்ல வந்த செய்தியை மையப்படுத்தி, வேறெந்த அலட்டலில்லாத காட்சிகள்.அது போல் ஒரு குறும்படத்துக்கு மிக முக்கியமான உறுத்தல் இல்லாத இசை, கஞ்சத்தனமான வசனங்கள் இவையும் இப்படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. இங்கே கமரா தான் நிறையப் பேசியிருக்கிறது. ஒரு படத்தைப் பார்க்கின்றோம் என்ற உணர்வில்லாது, ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைத்திருந்து எடுத்த காட்சிகள் போல், நடித்த கலைஞர்கள் யதார்த்தமாகச் செய்திருக்கிறார்கள்.

தேரடியில் தேசிகனைக் கண்டேன்!

செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ட கணத்தை யோகர் இப்படிச் சொல்லுகின்றார்,”தேரடியில் தேசிகனைக் கண்டேன், தீரெடா பற்றென்றான், சிரித்து”. இதை என் மனக்கண்ணில் நினைக்கும் போதும் எழுதும் போதும் மெய்சிலிர்க்கின்றது எனக்கு.

அடைக்கலம்

யாழ்.பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து ஆனந்தவிகடனை வாங்கி, தீராத ஆவலால் இணுவிலிற்குச் சென்று வாசிக்கவிரும்பாமல், ஒரு ஒரமாகச் சைக்கிளை நகர்த்தி , சைக்கிள் பாரில் இருந்தபடியே நான் வாசித்துத் தீர்த்த சிறுகதை இது.

காழ்ச்சா – அன்பின் விளிம்பில்

பவன் என்ற அநாதைக்கு வாழ்வளிக்க ஒரு குடும்பம் தயாராக இருந்தும், அரசின் இந்தச்சிவப்பு நாடாமுறை (Red tapism) இந்த அன்புப் பாலத்திற்குக் கத்தரி போடுகின்றது. மம்முட்டி மறுவாழ்வு முகாமில் வைத்து பவனுக்கு பிற்ஸ் வரும் என்று கரிசனையோடு சொல்லிவிட்டு, தன் விலாசத்தைக் கொடுத்து ” பவனின் உறவுகள் கிடைக்காத பட்சத்தில் அவனை அனுப்புங்கள்” என்று இரந்து கேட்டுவிட்டு நம்பிக்கையோடு நகர்வதும்,பவன் கைகாட்டி வழியனுப்புவதும், சம காலத்தில் மம்முட்டியின் கோரிக்கை அந்தப் புனர்வாழ்வு முகாம் அரச ஊழியரால் குப்பைக் கூடைக்குள் போவதுமாக காழ்ச்சா, ஒரு வலிக்கும் ஹைக்கு.