நல்லூரும் நாவலரும் – பதின்னான்காம் திருவிழா

நல்லை நகர்க் கந்தனைப் பற்றிச் சொல்லும் போது நல்லை நகர் ஆறுமுக நாவலரைத் தவிர்த்து எழுதமுடியாத அளவிற்கு இவரின் பந்தம் இருக்கின்றது. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை சிவாகமங்களுக்கும், குமார தந்திரத்திற்கும் இணக்க அவர் விரும்பினார்.

ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டில்
யாழ்ப்பாணத்துச் சைவசமயிகளே என்று விளித்து எழுதப்பட்ட குறிப்புக்களில் சில பாகங்களின் முக்கிய பகுதிகளை மட்டும் இங்கே தருகின்றேன்.

குறிப்பு 4. இவ்யாழ்ப்பாணத்திலே முக்கியமாகிய கோயில் நல்லூர்க்கந்தசுவாமி கோயிலிலே நீங்கள் உங்கள் வழிபாட்டை அங்கே செய்கின்றீர்கள். உங்கள் பொருளை மிகுதியாக அங்கே செலவழிக்கின்றீர்கள். அக்கோயிலும், அங்கே நடக்கும் பூசை திருவிழா முதலியனவும் சிவாகமங்களுக்கும், குமார தந்திரத்திற்கும் முழு விரோதம். அவ்வாகம விரோதங்களையே மற்றைய கோயில்களுக்கும் நீங்கள் பிரமாணமாகக் கொள்ளுகின்றீர்கள்.

குறிப்பு 7
இக்கோயிலுக்குப் பெயர் யாது? கந்தசுவாமி கோயில். இங்கிருக்கின்ற மூர்த்தி கந்தசுவாமியா? இல்லை வேலாயுதம்.
கந்தசுவாமிக்கு வடிவம் வேலாயுதமா?
அது அவர் கைப்படைக்கலம். அவரேவல் செய்யும் அடிமை அவ்வுண்மை.

குறிப்பு 10
எந்தக் கோயிலுக்கும் சண்டேசுரர் கோயில் வேண்டுமே இங்கே சண்டேசுரர் கோயில் இருக்கின்றதா?

குறிப்பு 11
வைரவர் கோயில் இருக்க வேண்டிய தானம் எது? வைரவர் எந்தத் திக்குமுகமாகப் பிரதிஷ்டை செய்யப்படல் வேண்டும்? வைரவர் பொருட்டு விக்கிரகம் தாபியாது சூலாயுதந் தாபிக்க விதி என்னை?

குறிப்பு 12
இக்கோயிலார் விக்னேசுர விக்கிரகம் தாபித்தது என்னையோ?
சுப்பிரமணியர் பொருட்டு அவர்கை வேலாயுதமும், வைரவர் பொருட்டு அவர்கைச் சூலாயுதமும் தாபித்துவிட்ட தம்முன்னோர் கருத்துக்கொப்ப, இவரும் விக்னேசுரர் பொருட்டு அவர் கைத்தோட்டு தாபித்து விடலாமே?

குறிப்பு 14
சுப்பிரமணிய சுவாமிக்கு மகோற்சவம் மூன்று நாள், ஐந்து நாள், ஏழு நாள், ஒன்பது நாள், பன்னிரண்டு நாள் நடத்துக என்று குமார தந்திரம் விதித்திருக்க இங்கே இருபத்து நான்கு நாள் மகோறசவம் நடத்துவதென்னையோ?

இவ்வாறாகத் தன் முதற்பத்திரிகை வேண்டுகோளை ஆறுமுக நாவலர், யுக வருசம் ஆடிமாதம் 1875 ஆம் ஆண்டு முன் வைக்கின்றார்.

தொடர்ந்து இவரால் நல்லூர்க் கந்தசாமி கோயில் குறித்து இரண்டாம் பத்திரிகையும் முப்பத்தேழு குறிப்புக்களுடன் வெளியிடப்படுகின்றது.

கி.பி 1873 இல் கந்தையா மாப்பாணர் அதிகாரியாக இருந்த காலத்தில் ஆறுமுக நாவலர் அவர்கள் அக்கோயிற் திருப்பணியைக் கருங்கல்லாற் கட்டும் பணியை மேற்கொண்டு மேற்கொண்டு 6000 வரையில் பணமும் கையொப்பமுஞ் சேர்த்தார். ரூ 3000 வரைடயிற் செலவு செய்து கருங்கற்களும் எடுக்கப்பட்டன. இந்தியாவிலிருந்து முருகன், வள்ளி, தெய்வயானை விக்கிரகங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் இடையில் நடந்த மாற்றங்களால் அவ்விக்கிரகங்கள் நல்லையில் இடம்பெறாமல், தென்மராட்சி விடற்றற்பளை வயற்கரைக் கந்தசுவாமி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

மேலும் தேர்திருவிழாவுக்கு முதல்நாள் செய்து வரும் ஆட்டுக் கொலையைச் செய்யமாட்டோம் என்ற வாக்கினை மீறிச் செயற்பட்டமையால் 1876 ஆம் ஆண்டு அம்மேலதிகாரியை விலக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. அது விளக்கத்துக்கு வருமுன் நாவலரவர்கள் தேவகவியோகமாயினார்.

இந்தக் குறிப்புக்களின் பிரகாரம் நாவலருக்கும் மாப்பாணர்களுக்கும் விரோதம் இருந்துள்ளதை அறியமுடிகின்றது. ஒரு கட்டத்தில் இருபத்தைந்து வருடகாலம் நாவலர் நல்லூர்க் கோயிலுக்குப் போகாதிருந்திருக்கின்றார்.

கி.பி 1248 ஆம் ஆண்டிற் அமைக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில், சைவ மக்களின் வழிபாட்டிடமாகவும், தமிழ்மக்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பெருங்கோயிலாகவும் கடந்த பல நூறு ஆண்டுகளாக விளங்கி வருகின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆயிரமாயிரமாண்டுகள் நீண்டபாதையில் கந்தவேள் ஆலயம் வரலாறு படைத்துள்ளது.

வரலாற்றுக் குறிப்புக்கள் மூலம்:
1. “ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு”, மூன்றாம் பதிபின் மீள் பிரசுரம் மார்கழி 1996 – தொகுப்பாசிரியர் நல்லூர் த.கைலாசபிள்ளை
2. “ஈழத்தவர் வரலாறு” இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 – கலாநிதி க.குணராசா

புகைப்பட உதவி: http://www.vajee4u.com/

பிரித்தானியர் காலத்து நல்லூர் – பதின்மூன்றாந் திருவிழா

இலங்கையில் பெரும்பாகங்களில் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றி ஒல்லாந்தர் ஆளுகை நடாத்தி வருகையில் 1795 ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தேசாதிபதியாகவிருந்த Lord Oobart என்பவர் Genaral Steward என்ற சேனாதிபதியை இலங்கைக்கு அனுப்பினார். படைகளுடன் சென்ற ஜெனரல் ஸ்துவார்ட் திருகோணமலையை வளைந்து மூன்று வாரமாகக் காவல் செய்து ஈற்றில் கைப்பற்றினான். அடுத்த 1796 ஆம் ஆண்டு நீர்கொழும்பு, மற்றும் கொழும்பு, காலி ஆகிய பிரதேசங்களும் பிரித்தானியர் ஆளுகைக்குச் செல்கின்றது.

இவ்வாறே ஒல்லாந்தர் 138 வருடமாகக் கட்டியாண்டு வந்த கரைத்துறை நாடுகள் எல்லாம் ஒருங்கே ஆங்கிலேயர் கைக்கு மாறுகின்றது.

அப்பால் அவன் Genaral Steward ஒரு படையோடு யாழ்ப்பாணம் சென்று அதனையும் எதிர்ப்பாராருமின்றிக் கவர்ந்தான்.

குடிகளும் தத்தமது வருணாசாரத்தையும், சமயாசாரத்தையும் சுயேற்சையாகக் கைக்கொண்டு ஒழுகும் சுயாதீனம் ஆங்கிலவரசால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. முன்னர் போலல்லாது கொட்டில் போல இலைமறைவிற் கிடந்த கோயில்களெல்லாம் வெளிப்படத் தொடங்கின.

அக்காலவேளையில் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் அர்ச்சகராக, கிருஷ்ணையர் சுப்பையரின் பேரர் சுப்பையர் என்ற வால சுப்பிரமணிய ஐயர் இருந்தார். ஆலயத் தர்மகர்த்தாவாக ஆறுமுக மாப்பாண முதலியார் இருந்தார்.

கந்தசுவாமி கோயில் ஆலய நிர்வாகத்தில், பிரதம அர்ச்சகர் சுப்பையருக்கும், தர்மகர்த்தா ஆறுமுக மாப்பாணருக்கும் இடையில் பிரச்சனைகள் முதன்முதலாகத் தோன்றின. ஆலய நிதியைத் தனது சுயதேவைகளுக்காக ஆறுமுக மாப்பாணர் பயன்படுத்துவதாக வழக்கு ஒன்று சுப்பையரால் தாக்கல் செய்யப்பட்டது. பிரதம நீதியரசர் சேர்.அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ரன் என்பவர் விசாரித்துத் தனது தீர்ப்பில் “ஆலய நிர்வாகத்தை இருவரும் இணைந்தே நிர்வகிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பு ஆறுமுக மாப்பாண முதலியாருக்குத் திருப்தியைக் கொடுக்காது போகவே 1809 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசுக்குப் பெட்டிசம் ஒன்றைச் சமர்ப்பித்தார். அப்பெட்டிசம் 1811 ஆம் ஆண்டு கறிங்டன் யாழ்ப்பாணக் கலெக்டரால் விசாரணை செய்யப்பட்டு, மாப்பாண முதலியாரின் தகப்பனாரே இக்கோயிலைக் கட்ட முக்கிய காரணராகவிருந்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டு குருக்களிடம் இருந்த பண்டகசாலையின் ஒரு திறப்பு மீளப்பெறப்பட்டு மாப்பாணரிடம் கையளிக்கப்பட்டது. எனவே யாழ்ப்பாணக் கலெக்டரின் இச்செயலால் கிருஷ்ணையர் சுப்பையரின் பரம்பரையினர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உரிமையை இழந்தனர். மாப்பாண குடும்பத்தினர் ஆலயத்தில் ஏகபோக உரிமையைப் பெற்றனர்.

இன்றைய மந்திரி மனைக்குள் கறையான் புற்று

உசாவ உதவியது:
ஈழத்தவர் வரலாறு” இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 – கலாநிதி க.குணராசா
புகைப்படம்:
1. கறுப்பு வெள்ளை: www.postmancard.net 2. மந்திரிமனைக்குள் கறையான் புற்று: ஊடகவியலாளர் துஷ்யந்தி கனகசபாபதிப் பிள்ளை

குருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் – பன்னிரண்டாந் திருவிழா


சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் முதன் மந்திரியாகவிருந்த புவனேகபாகு முதன் முதலில் அமைத்த கந்தசுவாமி கோயில் இருந்த இடத்தில் மீளவும் ஆலயம் அமைக்க கிருஷ்ண சுப்பையர் விண்ணப்பித்தார். அதற்கு ஒல்லாந்தர் ஆட்சிககாலத்தில் சிறாப்பராகவிருந்த தொன்யுவான் மாப்பாண முதலியார் தமது பதவி காரணமான செல்வாக்கைப் பயன்படுத்தி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீண்டும் கட்டுவதற்கு உத்தரவு பெற்றார் என்று குலசபாநாதன் தனது நூலில் குறிப்பிடுகின்றார். ஒல்லாந்த ஆட்சியாளர்களை இதனை அனுமதிக்க இரண்டு காரணங்கள் இருந்துள்ளன என ஊகிக்கலாம்.
ஒன்று,
கிறீஸ்தவ தேவாலயத்துக்கு அருகிலிருக்கும் கந்த மடாலயத்தை அவ்விடத்தினின்றும் அகற்றும் நோக்கம்
இரண்டு,
தமது வர்த்தகப் போட்டியாளராகவிருந்த முஸ்லீம்களைக் குருக்கள் வளவிலிருந்தும் அகற்றும் நோக்கம்.


நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீள நிறுவுவதில் கிருஷ்ண சுப்பையரும் இரகுநாத மாப்பாண முதலியாரும் முனைப்பாகவிருந்து ஊர் ஊராகச் சென்று நிதி திரட்டினர். கோயிலை மீள அமைப்பதற்குரிய குருக்கள் வளவில் முஸ்லீம்கள் அப்போது குடியிருந்தார்கள்.

அந்நிலத்திற்குப் பெரும் விலை தருவதாகச் சொல்லி முஸ்லீம்களை இறஞ்சியபோது அவர்கள் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு, நாவாந்துறைக்குக் கிழக்கேயுள்ள இடத்தை வாங்கிக்கொண்டு அங்கே குடியேறினார்கள் என்று ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை தன் யாழ்ப்பாணச் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.


Origin/Meaning:
The arms show the very typical Palmyra palm, an important tree for the local economy at the time. A Tamil poem describes the 801 uses of the tree… The helmet was also used by the city of Jaffna and indicates that these cities were of high importance to the colony (after Colombo).
When the above arms were adopted is not known. The above image dates from a manuscript dating from 1717/1720.

இந்த டச்சுக்காலத்து (ஒல்லாந்து) இலட்சணையின் தமிழ் விளக்கம் யாதெனில்
இது யாழ்ப்பாணப் பிரதேசத்தின் முக்கிய உள்நாட்டு வருவாயைத் தரக்கூடிய பனைமரம் தாங்கியது. ஒரு தமிழ்ப்பாடலின் படி இந்த மரத்தின் மூலம் 801 வகையான பயன்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விலட்சணையில் பொருந்தியிருக்கும் தலைப்பாகை, கொழும்புப் பிரதேசத்துக்கு ( கோட்டை இராச்சியம்) அடுத்து யாழ்ப்ப்பாணப் பிரதேசம் காலணித்துவ ஆட்சியில் முக்கியமானதொரு இடத்தை வகித்திருப்பதைக் குறிக்கின்றது. இவ்விலட்சணையின் பகுதிகள் எப்போது அறிமுகப்படுப்படுத்தப்பட்டது என்ற விளக்கம் அறியப்படவில்லை. இவ்விலட்சணை 1717/1720 காலப்பகுதியில் பதியப்பட்ட எழுத்துப் பிரதியில் எடுக்கப்பட்டது.

நான்காவது தடவையாக அமைக்கப்பட்ட ஆலயம் அவ்விடத்தில் அமைந்திருந்த யோகியாரின் சமாதிக்கு அருகில் நிறுவப்பட்டது. யோகியாரின் பெயர் சிக்கிந்தர் என்பர், இவரை அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லீம்களும் போற்றினர். இரு மத மக்களும் அவரை வழிபட்டனர். போர்த்துக்கேயருக்கும், தமிழ்ப்படை வீரர்களுக்கும் குருக்கள் வளவில் நிகழ்ந்த யுத்தத்தில் இவர் இறக்க நேர்ந்தது. குருக்கள் வளவுச் சுற்றாடலில் அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லீம்கள் அந்த யோகியாருக்கு ஒரு சமாதி கட்டி வழிபட்டனர். மீள அமைக்கப்பட்ட கோயிலின் உள்வீதியில் இச்சமாதி அகப்பட்டபடியால் சமாதியை வழிபட முஸ்லீம்கள் அனுமதி கேட்டார்கள். அவர்கள் கலகம் செய்யாதிருக்கக் கோயிலின் மேற்கு வீதியில் வாயில் வைத்து அவர்கள் வணங்கிவர இடம் கொடுத்தனர்.இதற்குச் சாட்சியாக இவ்வாயிற் கதவு இன்றுமுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெற்ற நிதியில் ஆலயத் திருப்பணி நிறைவேற்றப்பட்டு இரகுநாத மாப்பாண முதலியாரின் நிர்வாகத்தில் கிருஷ்ணையர் சுப்பரே அக்கோயிலின் முதற் பூசகராகவிருந்து ஆலயக் கிரியைகளை ஆச்சாரத்தோடு நடாத்திவந்தார்கள்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகாமண்டபத்துக்கு கீழைச் சுவரிலே மேற்கு முகமாக இக்கோயில் தாபகராகிய இரகுநாத மாப்பாண முதலியார் பிரதிமையும், அவர் மனைவி பிரதிமையும் வைக்கப்பட்டுள்ளன.

திருவிழாக்காலங்களில், கந்தசுவாமி கோயிலின் ஒரு தாபகராகிய புவனேகபாகுவின் பெயரை முன்னும், இக்கோயிற் தாபகராகிய இரகுநாத மாப்பாண முதலியாரைப் பின்னும் கட்டியத்தில் கூறிவருகின்றார்கள்.

“சிறீமான் மகாராஜாதிராஜ
அகண்ட பூமண்டல
ரத்தியதிகிந்த விஸ்ராந்த கீர்த்தி
சிறீ கஜவல்லி மகா வல்லி
ஸமேத சிறீ சுப்ரிமண்ய
பாதாரவிந்த ஜாந்திருட
சிவகோத்திரேற்பவஹா
இரகுநாத மாப்பாண
முதலியார் சமூகா”

உசாவியது: “ஈழத்தவர் வரலாறு” இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 – கலாநிதி க.குணராசா
டச்சு (ஒல்லாந்து) இலட்சணை : International Civic Heraldry தளம்

கந்தமடாலயம் அமைந்த கதை – பதினோராந் திருவிழா


From “Peninsula Indiae citra Gangem, hoc est Orae Celeberrimae Malabar & Coromandel. Cum Adjacente Insula non Minus Celebratissima Ceylon,” by Homann Heirs, 1733

முத்திரைச் சந்தியில் சிறீ சங்கபோதி புவனேகபாகுவினால் குருக்கள் வளவில் அழிக்கப்பட்டு முத்திரைச் சந்தையில் அமைத்த நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின் 1621 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி, இருந்தவிடம் தெரியாமல் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு, கத்தோலிக்க கிறீஸ்தவ தேவாலயம் நிறுவப்படுகின்றது.

போர்த்துக்கேயரின் ஆட்சி இலங்கையில் நிலவி வரும் காலத்தில் ஒல்லாந்தரின் வருகை இவர்களுக்குக் கேடுகாலமாகின்றது. இலங்கை அரசனோடு ஒப்பந்தம் செய்து கொட்டியாரத்தில் ஒல்லாந்தர் கோட்டை கட்டப்படுகின்றது.
பின்னர் மட்டக்களப்புக் கோட்டையை 1639 ஆம் ஆண்டில் வெஸ்தர்வால்டு என்ற ஒல்லாந்துத் தளபதி கைப்பற்றிக் கண்டியரசனோடு துணை உடன்படிக்கை செய்துகொண்டான்.
பின்னர் திருகோணமலை, காலி, நீர்கொழும்பு என்று இவர்களின் நிலக் கைப்பற்றல் தொடர்ந்தது. பின்னர் 1656 இல் ஒல்லாந்தர் கொழும்புக் கோட்டையைக் கைப்பற்றி, பின்னர் தொடர்ந்து மன்னார், ஊர்காவற்துறையையும் பிடிக்கின்றார்கள்.

பின்னர் 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையையும் மூன்றரை மாசம் மதிலிடைத்து வளைத்திருந்து யூன் மாதம் 22 ஆம் நாள் யாழ்ப்பாண இராச்சியம் ஒல்லாந்தர் வசமாகின்றது. அவர்கள் தமது புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்புவதில் தீவிரமாகவிருந்தனர். முன்பிருந்த கத்தோலிக்க கோயில்களை இடித்தும், சிலவிடத்தில் புதுக்கியுந்திருத்தியும் தமது மதத் தேவாலயங்களை ஆக்கினர்.

ஒல்லாந்தர் ஆட்சியின் போது முன்பிருந்த போர்த்துக்கேயர் போல் அல்லாது பிறசமயங்களின் மீது தமது வன் கண்மையைக் குறைத்துக் கொண்டனர் என்று கூறப்படுகின்றது. முந்திய நல்லூர்க் கோயிலின் அர்ச்சக சந்ததியின் வழித் தோன்றலாக இருந்த கிருஷ்ணயர் சுப்பையர் என்ற பிராமணர், புராதன கந்தசுவாமி கோயில் இருந்த இடத்துக்கு அண்மையில் மடாலயம் ஒன்றினை நிறுவி வேலினைப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டியற்றக் காரணமாகவிருந்தார். இது கந்தபுராணம் படிக்கும் மடமாகவே பெரிதும் பயன்பட்டது.

பெரிய கோபுரம் தூபி முதலியனவிருந்தால் ஒல்லாந்தர் அதனை மீண்டும் தரைமட்டமாக்கிவிடக்கூடும் என்றெண்ணி அமைதியான வழிபாட்டிடமாக இதனை ஆக்கினர் என்று கொள்ள இடமுண்டு.

உசாவ உதவியவை:

1. “யாழ்ப்பாணச் சரித்திரம்”, நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 – ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை

2. “ஈழத்தவர் வரலாறு” இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 – கலாநிதி க.குணராசா

3. “யாழ்ப்பாண இராச்சியம்”, தை 1992 – பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்

டச்சு (ஒல்லாந்து) இலட்சணை : International Civic Heraldry தளம

சித்திரம்:
Map by Homann Heirs- Columbia University வரலாற்றுத் தளம்

மஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே….!


“இன்று மஞ்சத்திருவிழா! முத்துக்குமார சுவாமி திருவுலா வரும் நாள்!!!(இந்த முத்துக்குமரனில் எனக்கு மாறாப் பிரியம்; அழகொழுகும் சிலை)
இந்த நாளில் முதல் முதல் தங்கரதம் இழுத்த அன்று;( ஆண்டு நினைவில்லை.) சுவாமி வெளி வீதி சுற்றி வந்து , தேர் முட்டியடியில் திரும்பிக் கோவிலைப் பார்த்துக் கொண்டு ;தேரில் இருந்து இறங்கத் தயார் நிலையில் நிற்கும் போது; இன்குழல் வேந்தன் என்.கே. பத்மநாதன் குழலில் இருந்து பீறிட்டு வந்தது.

கலைக் கோவில் திரைப்படத்தில் இடம் பெற்ற பாலமுரளி கிருஸ்ணா பாடிய “தங்கரதம் வந்தது நேரிலிலே.. என்ற பாடல் . எல்லோர் முகமும் ஓரத்தே ஒதுங்கி நின்று சகலதையும் அவதானிக்கும் கோவில் அறக்காவலர் குகதாஸ் மாப்பாண முதலியார் பக்கமே திரும்பியது. அவர் முகத்திலோ சிறு குறு நகை… திரையிசைப் பாடலுக்கே இடமில்லாத (பக்திப் பாடலெனினும்)நல்லூர்க் கந்தனாலயத்தில்; வித்துவான் மறுப்புச் சொல்லமுடியாவண்ணம் சந்தர்ப்பத்துக்கு ஏற்பவாசித்து விட்டாரே; சட்டத்தையே தகர்த்து; விதி விலக்கு அளிக்க வைத்துவிட்டாரே என்பதாக நினைத்தாரோ!! யாரறிவார்.

வித்துவானுமோ சுரப் பிரயோகங்களுடன் அழகு சேர்த்து மிக விஸ்தாரமாக வாசித்து; இசை ரசிகர்களை மகிழ்வித்தார்.
அந்த நாள் நான் வாழ்வில் மறக்கமுடியாதநாள்.
இத்தருணத்தில் அதை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்.
என் விருப்பமாக இப்பாடலையும் இப்பதிவில் சேர்க்கவும்.
மேலும் கந்தன் சரித்திரம்…எத்தனை இன்னலைக் கண்டுள்ளான். எம் கந்தன் என எண்ண வைக்கிறது.

இன்றைய பத்தாந் திருவிழாவுக்கான பதிவை எழுதிப் போட்டுவிட்டு வேறு வேலையாக இருக்கிறேன். மேலே வந்த வரிகளைத் தாங்கிய பின்னூட்டம் யோகன் அண்ணாவின் நினைவுச் சிதறலாக வந்து விழுகின்றது.

எல்லாம் வல்ல எம்பெருமான் தன் கருணை மழையைப் பொழியட்டும் என இறைஞ்சி, சங்கீத மழையைப் பரவ விடுகின்றேன்.

தங்க ரதம் வந்தது வீதியிலே…..!

Get this widget Share Track details

படங்கள் நன்றி: தமிழ் நெற் மற்றும் ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை

கந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் – பத்தாந் திருவிழா

தற்போதய நல்லூர்க் கந்தன் ஆலயம் பழைய இடத்தில் கட்டப்பட்டிருப்பதாகக் கூறமுடியாது. அவ்வாறு கூறக்கூடிய அளவிற்கு இலக்கிய ஆதாரங்களோ அன்றித் தொல்லியற் சான்றுகளோ காணப்படவில்லை. நல்லூரில் இருந்த இதன் ஆரம்ப கால ஆலயமும் ஏனய ஆலயங்களைப் போல் போர்த்துக் கேயரால் இடிக்கப்பட்டதாகும்.

இது பற்றிக் குவேறோஸ் சுவாமிகள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
“யாழ்ப்பாணத்தை இறுதியாக வென்ற போர்த்துக்கேயத் தளபதி பிலிப்டி ஒலிவீரா 1620 ஆம் ஆண்டிலே நல்லூருக்குச் சென்றான். அங்கிருந்த பெரிய கோயிலிலே (கந்தசாமி கோயில்) கிறீஸ்தவர்கள் அல்லாதவர் (சைவர்) மிக்க ஈடுபாடு உடையவர்கள். அவர்கள் அதனை அழியாது விட்டுச் சென்றால் அவன் விரும்பிய எல்லாவற்றையும் வழங்குவதாகவும், அவனுக்கு வீடு கட்டித் தருவதாகவும் பலமுறை வாக்குறுதி செய்து வந்தனர். ஆனால் அவன் மதப்பற்று மிக்க கத்தோலிக்கன் ஆகையால் அவர்களின் நடவடிக்கை அக்கோயிலை அழிக்க அவன் கொண்டிருந்த விருப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. எனவே அதன் அத்திவாரத்தையும் இல்லாது அழிக்கக் கட்டளையிட்டான்”. இக்கூற்றை யாழ்ப்பாண வைபவமாலையும் உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறு போர்த்துக் கேயரால் இடிக்கப்பட்ட பழைய கந்தசாமி கோயிலானது தற்போது முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலைக்கு முன்புள்ள கிறீஸ்தவ ஆலயத்தை அண்டியுள்ள பகுதியில் இருந்துள்ளதென்பதற்குச் சில தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன. இப்பகுதியில் பல அத்திவாரங்களின் அழிபாடுகள் கிறீஸ்தவ ஆலயத்தைச் சுற்றியும் அதன் கீழாகவும் செல்வதையும் அவதானிக்கலாம். இக்கட்டிட அழிபாடுகளுக்கு வடக்கே புனித யமுனா ஏரி அமைந்துள்ளது இக்கருத்தினை மேலும் உறுதிப்படுத்துகின்றது. இப்பழைய அத்திவாரமுள்ள இடத்திலே ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் போது ஆரம்பத்தில் களிமண்ணாலான கிறீஸ்தவ தேவாலயம் இருந்ததாக அக்காலத்தில் கிறீஸ்தவ சமயப் பணி புரிந்து வந்த போல்டேயஸ் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக கத்தோலிக்க மதம் பரப்பிய போர்த்துக்கேயர் இந்து ஆலயங்களை இடித்து அந்த அமைவிடங்களில் அல்லது அவற்றுக்கு அருகிலேயே தமது தேவாலயஙகளை அமைத்திருக்கின்றன. அதே போல் கந்தசாமி ஆலயம் இருந்த இடத்தில் அக்காலத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றையும் அமைத்தனர். அக்கிறீஸ்தவ தேவாலயம் இன்றும் அதேயிடத்தில் இருந்துவருகின்றது.

தற்போதைய மந்திரி மனைக்குள் சில மந்திகளின் வேலை

இராசதானியில் இருந்த நான்கு எல்லைக் கோயில்களுக்கு இக்கந்தசுவாமி கோயில் மையக் கோயிலாகவும் பெருங்கோயிலாகவும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அக்கோயில் இருந்த இடத்தை அடுத்து அரச அரண்களுக்குரிய சான்றுகள் காணப்படுவதால் இதை ஓர் அரச கோயிலாகவும் கருதுகின்றனர்.

போர்த்துக்கேயர் இக்கோயிலை இடிப்பதற்கு முன்னர் சிலகாலம் தமது பாதுகாப்பு அரணாகவும் இதனைப் பயன்படுத்தியிருக்கின்றனர். சுவாமி ஞானப் பிரகாசர் ” போர்த்துக் கேயருடனான போரில் தோல்வியுற்ற செகராசசேகரன் என்னும் மன்னன் அரண்மனைத் திரவியங்களை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குத் தீயிட்டு விட்டு ஓடிய பின் போர்த்துக்கேயர் எரிந்த அரணையும் கைப்பற்றிய ஆலயத்தையும் சுத்தம் செய்து அவற்றிலோர் ஸ்தோத்திர பூஜை செய்து மகிழ்ந்தனர்” எனக்கூறுகின்றார்.

இக்கோயிலைத் தமது கட்டுப்பாட்டில் போர்த்துக்கேயர் வைத்திருக்கும் காலத்தில் தஞ்சாவூரில் இருந்து படையெடுப்புக்கள் இரண்டை எதிர்கொண்டதாகவும் , மூன்றாம் தடவை மேற்கொண்ட படையெடுப்பில் அப்படைத்தலைவனுக்கு இக்கோயிலில் வைத்தே தண்டனை கொடுத்ததாகவும் சுவாமி ஞானப்பிரகாசர் கூறுகின்றார். இவ்வாறு சில காலம் அரணாகப் பயன்படுத்தப்பட்ட இக்கோயில் 2.2.1621 இல் அழிக்கப்பட்டதாக குவேறோஸ் கூறுகின்றார்.

உசாவ உதவியவை:

1. “யாழ்ப்பாணச் சரித்திரம்”, நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 – ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை

2. “ஈழத்தவர் வரலாறு” இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 – கலாநிதி க.குணராசா

3. “யாழ்ப்பாண இராச்சியம்”, தை 1992 – பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்

மந்திரி மனை பட உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை

சங்கிலி மன்னன் அரசாங்கம் – ஒன்பதாந் திருவிழா


பரராஜசேகர மன்னனின் அவைக்கு வந்த சுபதிருஷ்டிமுனிவர் சொன்ன ஆரூடத்தினை மெய்ப்பிக்கும் வண்ணம் தொடர்ந்து வரலாற்றில் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படலாயின.

சிங்கைப் பரராஜசேகரனுக்கு சிங்கவாகு, பண்டாரம், பரநிருபசிங்கம், சங்கிலி என நாங்கு ஆண்மக்களும், ஒரு பெண்ணுமாக ஐந்துகுழந்தைகள் இருந்தனர். சங்கிலி தன் துஷ்டதுணைவரோடு சேர்ந்து சூழ்ச்சி செய்து பரராஜசேகரனின் மூத்த மகனாகிய சிங்கவாகுவை நஞ்சூட்டிக் கொன்றார். சங்கிலியின் செய்கை இதுவென யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பரராஜசேகரன் தன் இளையகுமாரனாகிய பண்டாரத்தை இளவரசனாக்கி அவனிடத்தில் அரசை ஒப்புவித்துவிட்டுத் தன் புத்திரத் துயர் ஆற்ற கும்பகோணத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்கின்றான். தந்தையோடு கூடவே சென்ற சங்கிலி, “அங்கு எதிர்ப்பட்ட சோழமன்னனுக்கு உரிய மரியாதை கொடுக்காது அவமதிக்கின்றார். இதனால் சினங்கொண்ட சோழமன்னன், பரராஜசேகரனையும் சங்கிலியையும் சிறைப்பிடிக்கின்றார்.

அது கேட்டு, பரராஜசேகரனின் அடுத்த மகன் பரநிருபசிங்கன் தான் கொண்டு சென்ற படையைத் திரட்டிச் சோழமன்னனை வென்று தன் தந்தையையும், சகோதரனையும் சிறைமீட்கின்றான்.

பரராஜசேகரன் நல்லூருக்கு மீண்டவுடன் தன் மகன் பரநிருபசிங்கனின் வீரபராக்கிரமத்தை மெச்சி, அவனுக்குக் கள்ளியங்காடு, சண்டிருப்பாய், அராலி, அச்சுவேலி, உடுப்பிட்டி, கச்சாய், மல்லாகம், என்னும் ஏழு கிராமங்களையும், தாமிர சாசனமுங் கொடுத்து அக்கிராமங்களுக்கு அதிபதியாக்கினான். அது சங்கிலியின் மனதில் ஆறாத் தீயை உண்டு பண்ணியது.

ஒருமுறை தன் சகோதரன் பண்டாரம் பூந்தோட்டத்தில் உலா வரும்போது நிராயுதபாணியாக அவன் நிற்பதைக் கண்டு ஓடி அவனை வெட்டிகொன்றான் சங்கிலி. முதுமை காரணமாகத் தளர்ந்திருந்த பரராஜசேகரனும் பேசாதிருந்தான். பரநிருபசிங்கன் கண்டி சென்றிருந்த சமயம் தனது தந்தையின் எதிர்ப்பையும் புறக்கணித்து விட்டு கி.பி 1517 ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரியணை ஏறினான் சங்கிலி. மன்னன் பரராஜசேகரனையும் ச்ங்கிலியே கொன்று, செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான் எனப் போர்த்துக்கேய ஆதாரங்கள் கூறும். பரநிருபசிங்கன், சங்கிலியின் வலிமைக்கு அஞ்சிப் பேசாதிருந்தான்.

சங்கிலியன் தோப்பு இன்று

கி.பி 1519 ஆம் ஆண்டளவிலே சங்கிலி யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாகினான். தமிழ் மக்களிடையே மிக நினைவு கொள்ளப்படும் மன்னனாக சங்கிலி விளங்கி வருகின்றான். பரராஜ சேகரரின் பட்டத்து இராணியல்லாத ஒருத்திக்கு மகனாகப் பிறந்து, பட்டத்துக்கு உரித்தான மூத்த சகோதரர்களை அழித்து யாழ்ப்பாண இராச்சியத்தின் சிம்மாசனம் ஏறினான் இவன். 1505 ஆம் ஆண்டே கோட்டே இராசதானிக்குப் போர்த்துக்கேயர் வந்தபோதும் அவர்கள் யாழ்ப்பாணத்துடனான தொடர்பை 1543 ஆம் ஆண்டிலேயே கொள்ளமுடிந்தமைக்குக் சங்கிலி மன்னனின் எதிர்ப்பே காரணமாகக் கொள்ளப்படுகின்றது. போர்த்துக்கேய நூல்கள் சங்கிலி மன்னனைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கப்படுவதற்குக் காரணம் இல்லாமலில்லை.

இவன் ஆரம்பத்தில் இருந்தே போர்த்துக்கேயரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு அவர்களோடு தொடர்புகொண்டோரைத் தண்டிப்பதிலும் முனைப்பாக இருந்தான். உண்மையில் சங்கிலி ஓர் ஆளுமை மிக்க மன்னனாகவும், நாட்டுணர்வு மிக்க தலைவனாகவும் தீர்க்கதரிசனமும் கடும்போக்கும் கொண்ட ஓர் ஆட்சியாளனாகவும் நடந்து கொண்டான் எனத் தெரிகின்றது.

வினிய தாபிரபேனியா (Vinea Tabrobonea) என்ற சரித்திர நூலின் பிரகாரம் பறங்கிகள் 1590 இல் யாழ்ப்பாணத்திலே படையேற்றிச் சென்று சங்கிலி மன்னனோடு யுத்தம் செய்து அரசைக் கைப்பற்றினர் என்று கூறுகின்றது. பரநிருபசிங்கனும் பறங்கிகளும் செய்த ஒப்பந்தப் பிரகாரம் பரநிருபசிங்கனைத் திறையரசனாக்கி அவன் மகன் பரராசசிங்கனை அவனுக்குக் கீழ் ஏழுரதிபன் ஆக்கினார்கள்.

பரநிருபசிங்கன் ஒன்பது வருசம் அரசு செய்து இறந்தான். அவன் இருக்கும் வரையிலும் பறங்கிகள் சமய விஷயத்திலும், பொருள் விஷயத்திலும் கொடுங்கோல் செலுத்தாது ஒருவாறு அதிகாரம் செலுத்தி வந்தனர். பரநிருபசிங்கன் இறந்தபின்னர் அவன் மகன் பரராசசிங்கனைப் பறங்கிகள் முதன்மந்திரியாகினார்கள்.

பரராசன் இறக்கும் வரை அவன் பொருட்டு கீரிமலை திருத்தம்பலேஸ்வரன் கோயிலையும் நல்லூர்க் கந்தசாமி கோயிலையும் மாத்திரம் இடியாது விட்டிருந்தனர். அவன் இறந்த பின்னர் அவற்றையும் இடித்தொழித்தார்கள். அவர்கள் நல்லூர்க் கந்தசாமி இடிக்கும் முன்னே அதன் மெய்க்காப்பாளனாக இருந்த சங்கிலி என்பவன் அக்கோயில் விதானங்கள் வரையப்பெற்ற செப்பேடு, செப்பாசனங்களையும், திருவாபரணங்களையும் கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான். அங்கிருந்த சில விக்கிரகங்களை அக்கோயிற் குருக்கள்மார் புதராயர் கோயிலுக்குச் சமீபத்தேயுள்ள குளத்திலே புதைத்துவிட்டு நீர்வேலிப்பகுதிக்கு ஓடினர். தொடர்ந்து நல்லைக் கந்தன் ஆலயம் தரைமட்டமாகியது.

உசாத்துணை:
1. “யாழ்ப்பாணச் சரித்திரம்”, நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 – ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
2. “ஈழத்தவர் வரலாறு” இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 – கலாநிதி க.குணராசா

புகைப்படம்:
1. சங்கிலி மன்னன் சிலை மற்றும் சங்கிலியன் தோப்பு – பத்திரிகையாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை

போர்த்துக்கேயர் வருகை – எட்டாந் திருவிழா

A map by *MUNSTER*, c.1588

கி.பி 1505 ல் போர்த்துக்கல் தேசவாசிகள் சிலர், பிராஞ்சிஸ்கோ தே அல்மேதா என்பவைத் தலைவனாகக் கொண்டு காலித்துறைமுகத்தை அடைந்தனர். காலித் துறைமுகம் இலங்கையின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ளது. அப்போது தர்மபராக்கிரமவாகு என்பவன் தென் இலங்கை அரசனாய் கோட்டைக்காடு என்னும் நகரத்திலிருந்து அரசாட்சி செய்தான். போர்த்துக்கேயர் அவனிடம் அனுமதி பெற்று பண்டசாலை ஒன்றைக் கட்டினர். போர்த்துக்கேயரைப் பறங்கியர் என்பது அக்காலம் தொட்ட வழக்கு.

துருக்கியப்படை ஒன்று அப்போது சிலாபம் முதலான பகுதியை முற்றுகையிட வந்து தோற்றுப் போனது. பின்னர் 1517 மற்றும் 1520 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இருமுறை படையெடுத்து வந்து பறங்கியர் கட்டிய கோட்டையை முற்றுகையிட வந்து அதிலும் தோல்வியைத் தழுவினர்.
பின்னர் தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் போர்த்துக்கேயர் சிங்கள அரசனாகிய புவனேகபாகுவின் மகனைக் கிறீஸ்தவனாக்கிய மதம் பரப்பும் எண்ணத்தோடு புவனேகபாகுவைத் தற்செயலாகச் சுட்டது போலச் சுட்டுக் கொன்றனர்.

தம் எண்ணம் போலத் தர்மபாலாவைக் கிறீஸ்தவனாக்கினர். அரசன் எவ்வழி மக்களும் என்பது போல அரசபிரதானிகளும், மக்களுமாக கிறீஸ்தவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பின்னர் பறங்கிகள் மெல்ல மெல்ல இலங்கைத் தீவின் மற்றைய இடங்களையும் தமதாக்க முனைந்து வெற்றியும் பெற்றனர்.

போர்த்துக்கீசர் தீட்டிய சிலோன் வரைபடம்

கனக சூரிய சிங்கையாரியான் இழந்த தன் மகுடத்தை மீண்டும் சூட்டிக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த பின் அவனது மூத்த மகனான பரராஜசேகரன் கி.பி 1478 ஆம் ஆண்டு சிங்கைப் பரராஜ சேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான். நல்லூரை மேலும் சிறப்பு மிக்க நகராக்கியவன் சிங்கைப் பரராஜசேகரன்.

சப்புமல் குமரயாவின் படையெடுப்பால் அழிவுற்ற ஆலயங்களை இவன் புனருத்தாரணம் செய்திருப்பதாகக் கொள்ள இடமுண்டு. சட்ட நாதன் கோயில் வெயுலுகந்தப் பிள்ளையார் கோயில், கைலாயநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் என்பனவற்றை இவன் மீண்டும் புனரமைத்தான் எனக் கொள்ளல் வேண்டும்.

பரராஜசேகர மன்னனுடைய ஆட்சியைப் பொற்காலம் என்றே ஈழவரலாற்று நூல்கள் வருணிக்கின்றன. இப்படிப் பரராஜசேகரன் ஆட்சி செய்து வருகையில் சுபதிருஷ்டிமுனிவர் என்பார் அவன் சபைக்கு வந்தார். அவன் அவரை வணங்கி வரவேற்று, முனிவரிடம்
“அடியேன் இவ்விராச்சியத்துக்கு இனி யாது நிகழுமென்றறியப் பேராசையுடையேன். திரிகாலமும் உணர்ந்த நீங்கள் சொல்ல வேண்டும் “
என வினவினான்.

புருஷோத்தம, நீ புண்ணியவான், நீ இருக்கும் வரைக்கும் உன்னுடைய அரசு குறைவின்றி நடக்கும். அதன் மேல் உனது மூத்த குமாரன் நஞ்சூட்டிக் கொல்லப்படுவான். இரண்டாங் குமாரன் வெட்டுண்டு இறப்பான். இரண்டாம் பத்தினியின் வயிற்றிற் பிறந்த சங்கிலியின் மாயவலைக்குட்பட்டு அரசை அவன் கையிற் கொடுத்திடுவான். சங்கிலி கொடுங்கோலோச்சித் தன்னரசை அந்நிய தேசவாசிகளான பறங்கியர் கையிற் கொடுத்து இறப்பான். பறங்கிகள் சிவாலயங்களை அழித்துத் தமது சமயத்தைப் பரப்பிக் கொடுங்கோலாக்கி நாற்பது வருசம் ஆள்வர். அவரை ஒல்லாந்தர் வென்று சமய விசயத்தில் அவரைப் போற் கொடியராகி நூற்றிருபது வருசம் அரசு செய்வர். அதன் மேல் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர் – ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதி ஆட்சி செய்வர். உன் சந்ததிக்கு அரசு ஒரு காலத்திலும் மீள்வதில்லை” என்றார்.

இதையே திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டும் சொல்கின்றது இப்படி
“முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னாட் பறங்கி பிடிப்பானே – பொன்னாரும்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற
மானே வடுகாய் விடும்”.

சுபதிருஷ்டிமுனிவர் குறி சொன்ன அந்தக் கொடிய நிகழ்வுகள் அடுத்த பதிவுகளில் தொடர்கின்றன.

உசாவ உதவியவை:
1. “யாழ்ப்பாணச் சரித்திரம்”, நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 – ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
2. “ஈழத்தவர் வரலாறு” இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 – கலாநிதி க.குணராசா
3. “யாழ்ப்பாண இராச்சியம்”, தை 1992 – பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்

சித்திரம்:
1. map by *MUNSTER*, c.1588 (ebastian Münster (1488-1552) was a German cartographer, cosmographer) – Columbia University வரலாற்றுத் தளம்
2.போர்த்துக்கீசர் தீட்டிய சிலோன் வரைபடம் – Library of congress an illustrated guide

உயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் – ஏழாந் திருவிழா

கி.பி 1248 ஆம் ஆண்டு புவனேகபாகு எனும் அமைச்சரால் முதன்முதலாகக் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கி.பி 1450 ஆம் ஆண்டு, சப்புமல் குமரயாவின் படையெடுப்பால் தகர்த்தழிக்கப்பட்டது. தான் புரிந்த பாவத்துக்குப் பரிகாரம் தேடுவான் போன்று குருக்கள் வளவு என்ற இடத்தில் அழிக்கப்பட்ட நல்லூர்க் கோயிலை மீண்டும் புதிதாகக் கட்டுவித்தான்.

படையெடுப்பின் போது அழிந்துபோன தேவாலயம் இருந்த இடத்தில் மீள ஆலயத்தைக் கட்டாது புதியதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமைப்பித்தான். அரண்மனை அரசமாளிகைகள் என்பன அமைந்திருந்த பண்டார வளவு, சங்கிலித் தோப்பு (பின்னர் வந்த பெயர்) என்பவற்றுக்கு அருகில் இக்கோயிலுக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவ்விடம் முத்திரைச் சந்தியில் இன்று கிறீஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள இடமாகும்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலே திருவிழாக் காலங்களில் கூறப்படும் சமஸ்கிருதக் கட்டியம் (புகழ் மாலை) இக் கோவிலை சிறீ சங்கபோதி புவனேக பாகு கட்டினான் எனக் கூறப்படுகின்றது. இது கல்வெட்டாக இல்லாவிடினும் மரபு வழியாக நிலவி வந்துள்ளது. இப்புவனேக பாகு தான் ஆறாவது பராக்கிரம பாகு சார்பிலே யாழ்ப்பாணத்தை வென்று சிறிது காலம் (கி.பி 1450 – 1467) நிர்வாகம் செய்த சபுமால்குமாரய (தமிழில் செண்பகப் பெருமாள்) எனவும, இவனே பின்னர் கோட்டை அரசனாக ஆறாம் புவனேக பாகு எனும் பெயருடன் விளங்கினான் எனவும் பொதுவாகக் கொள்ளப்படுகின்றது.

ஏற்கனவே முன்னைய தமிழரசரால் அமைக்கப்பட்டுப் போரின் போது பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படாத கோயிலை இவன் மேலும் திருத்தியமைத்தமையால் அல்லது விசாலித்தமையால் இவன் பெயர் கோயிற் கட்டிடயத்தில் இடம் பெற்றிருக்கலாம். மேலும் சிலர் இப் புவனேகபாகு தமிழரசனின் மந்திரி என்பர். வரலாற்றிலே ஒரு நிறுவனத்தை நிறுவியவனின் மங்கிப் பின்னர் அதனைத் திருத்தியவனின் பெயர் நிலைபெறுதலுமுண்டு.

கஜவல்லி, மகாவல்லி சமேதராகிய சுப்பிரமணியர் மீது செண்பகப் பெருமாள் மிகுந்த பக்தியுடையவனென்றும், பதினாறு மகாதானங்களையும் புரிந்த சிறப்புடையவன் என்றும் கட்டியம் அவனைப் புகழ்ந்துரைக்கின்றது.
ஆறாம் பராக்கிரமபாகு தன் ஆட்சியின் முடிவிலே முடி துறந்து தன் மகள் வழிப் பேரனும் உலகுடைய தேவியின் மகனுமாகிய ஜய்வீர பராக்கிரமபாகு என்னும் இளைஞனைக் கோட்டை இராச்சியத்தின் அரசனாக முடிசூட்டிவிட்டு கி.பி 1467 இல் இறந்தான். இவற்றை அறிந்த செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலுள்ள தன் படைகளை அழைத்துக் கொண்டு கோட்டைக்குச் சென்று அங்கு போர் புரிந்து அதன் விளைவாக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். சிறீ சங்கபூதி புவனேகபாகு என்னும் பட்டப்பெயரோடு அங்கு ஆட்சி புரிந்தான்.
அவனுடைய அதிகாரத்தை ஒப்புக்கொள்ளாத சிங்களப் பிரதானிகள் மலைநாட்டிலும் கீழ்நாட்டிலும் கலகம் விளைவித்தார்கள். கீழ் நாட்டில் ஏற்பட்ட கலகத்தைச் சிங்கள நூல்கள் சீஹள சங்கே (சிங்களக் கலகம்) என வர்ணிக்கின்றன. ஆயினும், தனது தம்பியான அம்புலாகல குமாரனின் ஆதாரவுடன் புவனேக பாகு அக்கலகங்களை அடக்கி விட்டான்.
செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கித் தென்னிலங்கைக்குப் போனபின் கனகசூரிய சிங்கையாரியான் தமிழகத்திலுள்ள அரசர்களின் உதவி பெற்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்து தனது ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டான். யாழ்ப்பாண இராச்சியமானது கோட்டை அரசனின் மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
உசாத்துணை:
“ஈழத்தவர் வரலாறு” இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 – கலாநிதி க.குணராசா

யார் இந்த செண்பகப் பெருமாள்? – ஆறாந் திருவிழா

ஆறாம் பராக்கிரமபாகு கோட்டையில் கி.பி 1415 இல் அரசனாகிய பொழுது பல நூற்றாண்டுகளாகப் பலவீனமுற்றிருந்த சிங்கள இராச்சியம் மீண்டும் வலுப்பெற்றது. மலைப் பிரதேசத்தையும் வன்னிகள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்ட பின் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது கவனஞ் செலுத்தினான். அக்காலத்திலே கனக சூரிய சிங்கையாரியானின் ஆட்சி யாழ்ப்பாண இராச்சியத்திலே விளங்கி வந்தது.

மலையாள தேசத்துப் பணிக்கன் ஒருவனுடைய மகனும் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனுமாகிய செண்பகப் பெருமாள் என்னும் சப்புமல் குமாரய யாழ்ப்பாணத்துக்கு எதிரான படையெடுப்புக்குத் தலைமை தாங்கினான்.
முதலாவது தடவையாகப் படையெடுத்தபோது செண்பகப் பெருமாள் எல்லைக் கிராமங்கள் சிலவற்றைத் தாக்கி விட்டுத் திரும்பினான். பின்பு, மீண்டுமொருமுறை அவன் வட இலங்கையை நோக்கிப் படையெடுத்துச் சென்று பெரு வெற்றி பெற்றான்.

கனக சூரிய சிங்கையாரியான் இயலுமானவரை போர் புரிந்து விட்டு நிலமையைச் சமாளிக்க முடியாத நிலையிலே தன் மனைவி மக்களுடன் தென்னிந்தியாவிற்குத் தப்பியோடிவிட்டான். கி.பி 1450 ஆம் ஆண்டளவிலே எழுதப் பெற்ற முன்னேஸ்வரம் சாசனம் பராக்கிரமபாகுவைப் “பரராஜசேகர புஜங்க” என்று வர்ணிப்பதால், அக்காலகட்டத்திலேயே செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியிருக்கவேண்டும்.
ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்திலே ஆட்சி செலுத்துவதற்கென, செண்பகப் பெருமாளை அரசப் பிரதிநிதியாக நியமித்தான். செண்பகப் பெருமாள் ஆரியச் சக்கரவர்த்திகளின் சிம்மாசனத்திலே வீற்றிருந்து யாழ்ப்பாணத்துப் பிரதானிகளை அரச சபையிற் கூட்டி அவர்களுடைய ஆதரவுடன் ஆட்சிபுரிந்தான். செண்பகப் பெருமாளைப் பற்றிய தனிச் செய்யுளொன்று கையாலமாலையிலே காணப்படுகின்றது.

அது பின்வருமாறு அமைந்துள்ளது.
” இலகிய சகாப்த மெண்ணூற்
றெழுபதாஅ மாண்ட தெல்லை
அலர் பொலி மாலை மார்ப
னாம்புவ னேக வாகு
நலம் மிகு யாழ்ப்பாணத்து
நகரிகட் டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக்
கோயிலும் கட்டுவித்தானே”

வரலாற்று நூல்கள் சிலவற்றின் பிரகாரம் புவனேகபாகு என்பது செண்பகப் பெருமாள் அரசனாகிய போது சூடிக்கொண்ட பட்டப் பெயராகும். செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலே தங்கியிருந்த காலத்திலே அரசனொருவனுக்குரிய சின்னங்களையும் விருதுகளையும் பெற்றிருந்தான். என்று கருத இடமுண்டு. அவனாலேயே யாழ்ப்பாண நகரும், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலும் கட்டப்பட்டதாக இச்செய்யுள் வாயிலாக அறியப்படும் செய்திகளாகும்.

உசாத்துணை:
1. “யாழ்ப்பாணச் சரித்திரம்”, நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 – ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
2. “ஈழத்தவர் வரலாறு” இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 – கலாநிதி க.குணராசா
3. “நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் (வரலாறு)”, ஆடி 2005 – கலாநிதி க.குணராசா
4. “யாழ்ப்பாண இராச்சியம்”, தை 1992 – பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்
சித்திரம்:
The University of Chicago Magazine December 1995