பரா என்றதோர் ஈழத்து இசைச்சிங்கம்

சந்தன மேடை எம் இதயத்திலே…
உன்
சந்தங்கையின் நாதம் நான் கேட்குதடி
மந்திரமில்லாத மயக்கமடி…
மாமயில் நீ எம் தேவியடி….
பாட்டுக்கு ஆடிடும் பாவையாள்
அவள்
பாவமெல்லாம் புதுமை ராகம் தான்….
மானுடத்தின் குரல் ஒன்று தான்
அவள்
மனதை மயக்கியது உண்மை தான்
கானத்தில் கனிந்தவள் வந்திடுவாள்
இங்கே
கண்டறியா இன்பம் தந்திடுவாள்
வானத்திலே ஒளிரும் நட்சத்ரமாய்
எங்கள்
வாழ்வுக்கு வழிகாட்டி நின்றிடுவாள்
பொன்னுலகின் புதிய கீதங்களே!
பூமியின் செளந்தர்ய கோலங்களே!
மின்னி வரும் நாளை மேன்மைகளே!
மானுடத்தின் வெற்றி நாதங்களே!

ஐந்து வருடங்களுக்கு முன் நான் படைத்த வானொலி நிகழ்ச்சி ஒன்றில் சினிமாப் பாடல்களை ஒலிபரப்பி அலுத்த கணமொன்றில், கையில் சிக்கிய ஈழத்து மெல்லிசைப் பாடல்களில் இருந்து மேற்கண்ட பாடலை ஒலிபரப்பி விட்டு காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டே கேட்க ஆரம்பிக்கின்றேன். ஏதோ இனம்புரியாத இனிய இசை இன்பத்தை என். சண்முகலிங்கன் வரிகளில், எஸ்.கே.பரராஜசிங்கம், மற்றும் எம்.ஏ.குலசீலநாதனின் குரலினிமை கொடுப்பதை உணர்கின்றேன். அன்று தொடங்கியது என் மெல்லிசைப் பாடல்களைத் தேடிக் கேட்கும் ஆவல், அது இன்றும் தணியவில்லை.

என் பதின்ம வயதுகளில் இலங்கை வானொலி தீண்டப்படாத சக்திகளின் கைகளில் வந்தபோது என் மனசு வெளிநடப்புச் செய்து இந்திய வானொலியையே நேசிக்க வைத்தது. அதற்கு முற்பட்ட காலங்களில் என் சிறுபிராயத்தின் நினைவுகளில் எஞ்சியிருப்பது பள்ளிக்குப் போகும் பரபரப்பில் அம்மா தந்த பிட்டுச் சாப்பாட்டை வாயில் முழுங்கிக் கொண்டே, மற்றைய அறையில் றேடியோ சிலோனின் காலை ஒலிபரப்பை அப்பா கேட்கும் போது, காலை ஆறு மணி நாப்பத்தைந்து நிமிசம் மரண அறிவித்தலைத் தொடர்ந்து பொங்கும் பூம்புனலுக்குமுன் வரும் ஒரு சில மெல்லிசைப் பாட்டுக்களில் ஒன்றிரண்டு இலேசாக நினைவில் இருக்கின்றது. அவ்வளவே
ஈழத்து மெல்லிசையில் அப்போது எனக்கிருந்த ஞானம்.

ஐந்து வருடங்களாக ஈழத்து மெல்லிசைப்பாடல்களோடு “முற்றத்து மல்லிகை” என்றும் பின்னர் இப்போது படைக்கும் “ஈழத்து முற்றம்” போன்ற என் வானொலிப் படைப்புக்களுக்கும் பிள்ளையார் சுழி கூட இந்தப் பாடலில் இருந்தே ஆரம்பித்தது. இந்த நன்றிக் கடனைத் தீர்க்க எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் பதிவாக இதனைத் தருகின்றேன்.

பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் “பரா” என்னும் எஸ்.கே.பரராஜசிங்கத்தைப் பற்றிச் சொல்லும் போது:

வானொலியில் நவ நவமாய்
வளமான நிகழ்ச்சிகளை
வனைந்தளிப்பான்!
தேனொலிக்கும் தண் குரலால்
இசை பிழிந்து வார்த்திடுவான்!
தெவிட்டாதென்றும்!
தான் ஒத்த கலைஞர்களும்
தலை நிமிர வழி காட்டித்
தலைமை செய்வான்!
பா நோய்க்காவாறு “கங்கை
யாளை” ஒலித் தட்டமைத்த
பணியே சான்று!

மெல்லிசைக்கும் நம் நாட்டின்
மூல பிதா! அரங்கேற்றம்
மேடை தோறும்
மெல்லியர்கள் பரதத்தில்
நடத்துகையில் பாட இன்று
வேறார் உள்ளார்?
துல்லியமாய்த் தமிழினிலே
விளம்பரங்கள் எழுதி ஒலி
கூட்டிச் சீராய்ச்
சொல்லுகையில் கூட அதில்
கலை அழகு குன்றாமல்
கோக்கும் வல்லோன்!

என்று தொடர்கின்றார் சில்லையூரார்.

இலக்கியம், கலை ஆகியவற்றின் பெயரால் தம்மை வளர்த்துக் கொள்ளும் கலைக்கழுகுகளின் மத்தியிலே தன்னை மறைத்து இசையையும் வளர்த்த அபூர்வ மனிதர் இவர் சர்வதேச “உண்டா” விருதினையும் தம் வானொலிப் பணிக்காகப் பெற்றுக் கொண்டவர்.

விஞ்ஞானப் பட்டதாரியாகி ஆசிரியத் தொழிலை மேற்கொண்ட “பரா” ஒலிபரப்புத் துறையில் நுழைந்தமை தன்னை வளர்த்துக் கொள்வதற்காகவல்ல என்பதைச் சுமார் கால் நூற்றாண்டு காலமாக அவரோடு பழகியவர்களும் பணியாற்றியவர்களும் அறிவர். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கண்ணியத்தையும் தம் சொந்த நேர்மையையும் பேணிக்காத்த மிகச்சிலரில் பரா ஒருவர், இப்படியாகச் சொல்கின்றார் காவலூர் இராசதுரை அவர்கள்.

ஒலி அரசு வீ.ஏ. திருஞானசுந்தரம் அவர்கள், பரா பற்றிச் சொல்லும் போது:
இசைஞானம், இனிய குரல் வளம், கலை இலக்கியப் பின்னணி, சினிமா, நாடகத்தில் பரிச்சயம், புலமைப் பயிற்சி இத்தியாதிகளும் ஒருங்கே அமையப் பெற்ற இவர் பிறந்தது மலேசியாவில். வளர்ந்தது இலங்கையில்.
அக்காலக் கல்வி ஒலிபரப்பில் இடம்பெற்று வந்த வெண்பா வாசிப்புப் போட்டிகளில் பெரும்பாலும் பெண்களேபரிசுகளைத் தட்டிக்கொள்ளும் பாக்கியம் பெற்றிருந்தனர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவன் அந்த மரபை மாற்றியமைக்கக் காரணம், “குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்” என்ற வெண்பாவை பொருள் தெளிவுற இனிய குரலில் அமைவாக அதிக ஆலாபனையின்றிப் பாடியதே. பாடிய அம்மாணவர் பராவே தான், என்கின்றார்.

இளமையிலேயே இசையில் தேர்ச்சிபெற்றதுடன், விஞ்ஞானப் பட்டதாரியாகி ஹற்றனில் உள்ள கல்லூரி ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராகப் பணியை மேற்கொண்டிருந்த போது , 1961 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பரராஜசிங்கம் வானொலியில் சேர்கின்றார். வர்த்தக சேவையில் தன் பணியை ஆரம்பித்த போது வெறும் சினிமாப்பாடல்களையே ஒலிபரப்பும் ஒரு சேவை தானே என்று இளக்காரமாக இருந்த போது “திரை தந்த இசை”, ஒலி மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார்.

எஸ்.கே பரராஜசிங்கம், ஏ.சி.கருணாகரனுடன் இணைந்து வழங்கிய கர்னாடக இசைச் சித்திரம்

அறுபதுகளில் கொழும்பு சரஸ்வதி மண்டபத்திலே முருகையன், பரராஜசிங்கம், குலசீலநாதன் போன்ற கலைஞர்களின் ஒருங்கிணைவில்

நிகழ்ந்த மெல்லிசை அரங்கங்கள் முன்னோடியாகக் குறிப்பிடப்படும். இலங்கை வானொலியின் வர்த்தக நிகழ்ச்சிகளிடை முதன்முதலாக ஒலித்தது மலிபன் கவிக்குரல். பின்னாலே ஈழத்துப் பாடல்கள் என்ற நிகழ்ச்சிக்கான மூலதனம் என்று சொல்லக்கூடிய குறிப்பிடத்தக்க சில பாடல்கள் இந்நிகழ்ச்சிகளிடை உருப்பெற்றவை தான். பரராஜசிங்கம், காவலூர் இராசதுரை, ரொக்சாமி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள், என்று “ஈழத்து மெல்லிசை இயக்கம்” என்ற தனது கட்டுரையில் நாகலிங்கம் சண்முகலிங்கன் (யாழ் பல்லைக் கழகம்)
இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

திரு.எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களது மெல்லிசைப் பாடல்கள் காற்றோடு கலந்து போகாவண்ணம் பாதுகாத்து அவற்றை முதன்முதலில் ஒலிப்பேழையாகக் கொணர்ந்தவர் கலைஞர் திரு கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள். 1994 ஆம் ஆண்டு இவ்வொலி நாடா “ஒலி ஓவியம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கனடாவில் இதனை இறுவட்டாக “அருவி வெளியீட்டகம்” வெளியிட்டது.

கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள், தான் நேசிக்கும் பரா அண்ணர் குறித்து இப்பதிவில் சொல்லுகின்றார்.

“அவருடன் நான் இணைந்து செய்த நிகழ்ச்சிகள் எனக்கு ஒரு பாடப்புத்தகமாக்கப்பட்டது. அவர் செய்த ஒவ்வொரு வானொலி நிகழ்ச்சியையும் கேட்கும் போது பல்கலைக்கழக விரிவுரை போன்ற உணர்வை ஏற்படுத்தியது” என்று கூறிச் செல்கின்றார் ஒலிபரப்பாளர் சி.நடராஜசிவம்.

திருமணமே செய்யாது வானொலியையே தன் துணையாக வரித்துக் கொண்டு வாழ்ந்த பரா அவர்கள் எதிர்பாராத சில முரண்பாடுகளால் வானொலியை விட்டு விலகிச் சிறிது காலம் தமிழகத்தில் அஞ்ஞாத வாசத்தை மேற்கொண்டார்.

இந்தப் பதிவுக்காக நான் எஸ்.கே.பரராஜசிங்கம் குறித்த உசாத்துணை நூல்களைத் தேடியபோது அதிஷ்டவசமாகக் கண்ணிற்பட்டது “இதய ரஞ்சனி” சமூக பண்பாட்டுக் கோலங்கள் என்ற எஸ்.கே.பரராஜசிங்கம், என் சண்முகலிங்கன் எழுதி வெளியிட்ட நூல். இந்த நூலை எடுத்து விரித்துப் படிக்கும் போது ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிகின்றன.

இன்று உலகமயப்படுத்தப்பட்ட தமிழ் வானொலிச் சேவையில், அலைவரிசையைக் குத்தகைக்கு எடுத்த யாரும் வானொலி
நிலையம் ஒன்றை உருவாக்கலாம், பாட்டுப் போடத் தெரிந்த எவரும் அறிவிப்பாளராகலாம் என்னும் யதார்த்த உலகில் ஆயிரம் ஆச்சரியக் குறிகளை விதைக்கின்றது இந்த நூல். ஒரு நேர்மையான வானொலியாளனால் வானொலியில் இடம்பெறும் ஆக்கம் எப்படியெல்லாம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதற்கு
இதயரஞ்சனி ஓர் உதாரணம்.

நாம் காண விழையும் நாளையின் நாயகி, வானொலியூடாக அறிமுகமான ஆளுமை தான், நூல் வடிவில் இப்பொழுது தரிசனமாகின்றாள்.
வெகுஜனத்தொடர்பு சாதனங்களின் சமூகச் செல்வாக்கு இன்று பெரிதும் உணரப்படும் இந்த ஊடகங்களைச் சமூகமேன்மைக்குப் பயன்படுத்தலின் இன்றியமையாமையும், இன்றைய சமூக அபிவிருத்தித் திட்டமிடல்களில் முதன்மை பெறும். இந்த வழியில், சக்தி வாய்ந்த தொடர்பூடகமான வானொலியூடாக ஒலித்த இதயரஞ்சனி என்ர கலை இலக்கிய மஞ்சரியின் பண்பாட்டுக் கோலங்கள் என்ற அம்சத்திலிருந்து, இருபத்தைந்து கீற்றுக்கள் இங்கு எழுமாற்றாகத் தரப்படுகின்றன. எழுமாற்றாகத் தேர்ந்தெடுத்த போதிலும் பரந்த நம் பண்பாட்டின் விழாக்கள், வழிபாட்டு மரபுகள், கிராமியக் கலைகள், சடங்குகள், நம்பிக்கைகள், மனவெழுச்சிகள், தொடர்பு சாதனங்கள், ஆளுமைகள் என வகைகளையும் ஒருவித ஒழுங்கினையும் இங்கே காணமுடியும் என்று நூலாசிரியர்கள் தம் முகப்புரையில் சொல்கின்றார்கள்.

ஒரு வானொலிப் பிரதி எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு அணிகலனாகத் திகழ்கின்றது இந்த “இதய ரஞ்சனி”. எப்படி ஒரு வானொலிப் படைப்புக்கான அறிமுகம் இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து, இசை வருமிடம், குரல், பாடல், இடையிசை, நிறைவுக்குறிப்பு எனப் பிரிவாக்கி ஒவ்வொரு நிகழ்ச்சிப்படைப்பும் இருக்கின்றது.

இப்பிரதியில் இருந்து உதாரணத்துக்கு ஒன்றைக் காட்டுகின்றேன். “வசந்தன்” என்ற தலைப்பிலான ஆக்கம். இதில் எமது பாரம்பரியக் கலைகள் குறித்த சுருக்கமான அறிமுகம் அமைகின்றது. அடுத்து குரல், என்ற வகைப்படுத்தலில் தமிழகத்திலே இடம்பெறும் வசந்தன் கோலாட்டத்தை ஈழத்துமரபோடு ஒப்பீடு செய்து, தொடர்ந்து கேரள, சிங்கள மக்களின் பண்பாட்டுக் கோலங்களயும் தொட்டுச் சென்று, அலவத்தை வீரபத்திரர் வசந்தன் ஒலிப்பதிவைப் போடும் இடம் சுட்டிக்காட்டப்படுகின்றது, தொடர்ந்து நிறைவுரை.

பார்த்தீர்களா? ஒரு வானொலிப்படைப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதை இன்றைய வானொலியாளர்களுக்கும், நேயர்களின் ரசனை குறித்த மாற்றத்தையும் வேண்டி நிற்கின்றது இப்படைப்பு.

பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல்ஹமீதின் வானொலித்துறை ஆசான்களில் ஒருவராக வாய்த்த பரராஜசிஙம் பற்றிக் குறிப்பிடும் போது, நாம் விடும் சிறு தவறுகளையும் நாகரீகமாகச் சுட்டிக் காட்டி, சிக்கனமாகப் பேசி, எம்மைத் திருந்தச் செய்யும் பண்புள்ளவராகத் திகழ்ந்தார். ஒலிபரப்பில் எதனையும் முன் கூட்டியே எழுதி ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்து நிச்சயப்படுத்திய பின்பே ஒலிபரப்ப வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர்.

ஏடுகள் சுமக்காத பாடல் வரிகளாக, கிராமிய இசையாக, மக்கள் நினைவில் மட்டுமே நிலைத்திருந்த நாட்டுப்பாடல்களுக்கு மறைந்த இசையமைப்பாளர்
எம்.கே றொக்சாமியின் துணையோடு, புது இசை வடிவம் கொடுத்து அவர் உருவாக்கிய பாடல்களே பின்னாளில் மெல்லிசைப் பாடல்கள் உருவாகுவதற்கு அடிப்படையாக விளங்கின. உதாரணத்திற்கு கீழ்க்காணும் நாட்டார் பாடல், பின்னர் மெல்லிசையாக எம்.கே.றொக்சாமி இசையில், பரா பாடுவதைக் கேளுங்கள்

கிண்ணி போல் சந்திரரும்
கிழக்கே பார்த்த சூரியரும்
பாதி மரிக்கொழுந்தை நீர்
பாதையிலே பார்த்தீங்களா….

கிண்ணி போல் சந்திரரும்
கிழக்கே பார்த்த சூரியரும்
பாதி மரிக்கொழுந்தை நீர்
பாதையிலே பார்த்தீங்களா….

சிட்டுப் போல் நடையழகி
சிறுகுருவி தலையழகி……
பட்டுப் போல் மேனியாளை
பாதையிலே பார்த்தீங்களா…..

கோரைப்புல் மயிரழகி
குருவிரத்த பொட்டழகி
பவளம் போல் பல்லழகி
பாதையிலே பார்த்தீங்களா….

கிண்ணி போல் சந்திரரும்
கிழக்கே பார்த்த சூரியரும்
பாதி மரிக்கொழுந்தை நீர்
பாதையிலே பார்த்தீங்களா….

பட்டம் போல் நுதலழகி
பவளம் போல் வாயழகி
முத்துப் போல் பல்லழகி
முன்னே போகக் கண்டீரோ
முன்னே போகக் கண்டீரோ….

கிண்ணி போல் சந்திரரும்
கிழக்கே பார்த்த சூரியரும்
பாதி மரிக்கொழுந்தை நீர்
பாதையிலே பார்த்தீங்களா….

மெல்லிசையில் நாட்டார் பாடல்களைப் புகுத்தியது மட்டுமன்றி இவர் செய்த இன்னொரு புதுமையைச் செயல் முறையில் தருகின்றேன்.
இந்திய இசை மேதை சிட்டிபாபு தந்த வீணை இசையை எடுத்து அதை அங்கையன் கைலாசநாதனைக் கொண்டு வீணை இசையோடு இயைந்து வரக்கூடிய பாடல் வரிகளை எழுதிப் பின் தன் பாட்டினை இந்த இசையோடு இணைத்தார். நவீன தொழில்நுடபம் எட்டிப் பார்க்காத முப்பது வருஷங்களுக்கு முன் இந்தப் புதுமையைத் தன் மெல்லிசையில் படைத்தார் பரா.

சிட்டிபாபுவின் மூல இசை

“மணிக்குரல் இசைத்தது” பாடலை இணைத்துக் கொடுத்த பின்

பாகிஸ்தானிய இசைவல்லுனர் சொஹைல் ரானா, இசைக்கருவிகளைக் கொண்டு சொல்ல விழைந்ததை, சண்முகலிங்கனைக் கொண்டு “குளிரும் நிலவின் இரவு” என்ற சோக கானமாக வடித்தார்.

ஒலி ஓவியம் என்னும் இசைப்பேழையில் பேராசிரியர் சிவத்தம்பியின்
சிலாகிப்பு இப்படிச் சொல்கின்றது:

“Para, a carnatic musician and musicologist is also known from his contribution to light music in tamil. The songs in this cassettes are his pioneering effort in the field of light music in Sri Lanka. They were recorded with minimum instruments on a single track, when electronic technology was unheard of.

The lyrics notable for their poetic quality and melodic content, have been rendered with emotional meaning that lingers forever – the true stamp of any creative music and its musician”.

பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்றை இந்த மெல்லிசைப் பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.
கருத்து செறிவையும், குரல்வளத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து
இப்பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன. சான்றாக, எனக்கு மிகவும் பிடித்த
பராவின் மெல்லிசைப் பாடல் இரண்டின் வரிகளையும் பாடல்களையும் கீழே தருகின்றேன்.

பாடல் வரிகள்: கவிஞர் முருகையன்
பாடியவர்கள்: எஸ்.கே பரா மற்றும் கோகிலா சிவராஜா
இசை: எம்.கே.ரொக்சாமி

கங்கையாளே… கங்கையாளே…
காடு கழுவி வரும் கங்கையாளே!
எங்குமோடி….. எங்குமோடி…..
ஈழம் குளிரவைக்கும் கங்கையாளே!

நுவரெலியா முதலான உயரமலை
பயிலும் கங்கையாளே…!
தவறாத வளமுடைய….
தன்மை பொழியும் எங்கள் கங்கையாளே…!
கங்கையாளே… கங்கையாளே……

கந்தளாயும்….மூதூரும்….
காத்து வரவேற்கின்ற கங்கையாளே….
வந்து சேர்வாய் திருமலைக்கே..
மாகடலில் போயிறங்கும் கங்கையாளே…!

கங்கையாளே… கங்கையாளே…
காடு கழுவி வரும் கங்கையாளே!
எங்குமோடி….. எங்குமோடி…..
ஈழம் குளிரவைக்கும் கங்கையாளே!

இந்தக் கலைஞன் எவ்வளவு தூரம் பெருமைக்குரியவன், பெறுமதியானவன் என்பதற்க்குச் சான்றாக அதே வானொலித் துறையில் சகாவாக இருந்த சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் தமது “மன ஓசை” என்னும் வானொலி நனவிடை தோய்தலை பரராஜசிங்கம் அவர்களுக்குச் சமர்ப்பிக்கின்றார்கள்.

“பரா” என்கிற பரராஜசிங்கத்திற்கு….
நண்பர்களுக்குக் கலைகளின்
சுவையைக் காட்டிய நீ
வாழ்க்கையின் சுகங்களை
அநுபவிக்காமலே
போய்விட்டாயே!

இறைவா சங்கீத “சதஸ்” ஒன்றை – உன்
திருவடிகளுக்கு அழைத்து விட்டாய்!
அதன்
சுநாத நினைவுகளை
எங்களிடமிருந்து பிடுங்கிவிடாதே!

என்று சுந்தாவும் நண்பர்களும் கரைகின்றார்கள்.

மேலும் வானொலிப் படைப்பாளி சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் தனது நண்பன் பரராஜசிங்கம் பற்றி இப்படிச் சொல்கின்றார்:

பரா என்றதுமே அவனது தம்புராவுடன் இசைந்த உயிரின் குரல் என் நரம்பு நாளங்களையெல்லாம் மீட்டி நிற்கும்.அவனோடும் நண்பன் சிவானந்தத்தோடும் சேர்ந்து சென்னை இசைவிழாக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் நயந்திடத் திரிந்த பொழுதுகள் மீண்டும் வருமா என்ற ஏக்கம் மேலிடும். சொல்லியபாட்டின் பொருளுணர்ந்து பாடும் பராவின் இசை நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்புச் செய்வதே ஒரு உயிர்ப்பான அனுபவம் தான்.(சேக்கிழார் அடிச்சுவட்டின் போது – (இடமிருந்து வலம்) சுந்தா சுந்தரலிங்கம், சிட்டி சுந்தரராஜன், வேணு, எஸ்.கே.பரராஜசிங்கம், படம்: சோ.சிவபாதசுந்தரம்)

நாங்கள் நாங்கள் இணைந்து வழங்கிய ஆக்கங்கள் பல. “சக்திக்கனல்” இன்னமும் என் நெஞ்சை நிறைத்து நிற்கிறது. தம்புரா சுருதியில் என் அறிமுகக்குறிப்பும் அதனைத் தொடரும் பராவின் அபிராமி அந்தாதியும் மறக்க முடியாதவை. மீனாட்சி கல்யாண இசையமைப்பு வேலைகளிலும் பராவின் நுண்ணிய இசைத்திறனை வியந்த சந்தர்ப்பங்கள் பல. ஈழத்து மெல்லிசையின் மூலவர்களில் முக்கியமானவராக புகழபெறும் பராவின் வானொலி அனுபவங்கள் மிக மிகப் பெறுமதியானவை. பராவின் இசை சார்ந்த வானொலிப்படைப்புக்கள் தமிழக, வானொலி தொலைக்காட்சிகளுக்கும் கூட முன்னோடியானவை. அந்தச் சம்பவம் இன்னமும் என் மனதில் உள்ளது.

எனது மகள் சுபா சென்னையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த காலம். கல்லூரிக்குச் செல்கையில் பஸ்ஸுக்குள், முன் ஆசனத்தில் இருந்த இரண்டு பேர் இசை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்களாம். பேச்சிடை ரேடியோ சிலோன் பரராஜசிங்கம் என்ற சொற்களைக் கேட்டதும் சுபா தன் காதுகளைத் தீட்டிக் கவனமாகக் கேட்டிருக்கிறாள்.
“இப்பதான் நம்ம வானொலிக்காரங்கள், ரி.வி.காரங்கள், திரை இசைக்குள் சாஸ்திரிய இசைக் கண்டுபிடிப்புக்கள், நிகழ்ச்சிகள்னு செய்யிறாங்க ஆனா எவ்வளவோ நாளைக்கு முன்னாடியே சிலோன் ரேடியோவிலே எஸ்.கே.பரராஜசிங்கம் திரை தந்த இசை என்ற பெயரிலும் வேறு பெயர்களிலும் ஆக்க இசை பற்றி அருமையான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்” என்பது அவர்கள் பேச்சிடை மிதந்த சாரம். சுபா உடனடியாகவே இதனைப் பராவுக்கு எழுதியிருந்தாள்.

இலங்கையின் முதல் தமிழ் மெல்லிசை இசைத்தட்டான “கங்கையாளே”, பராவின் மெல்லிசைப் பாடல்களிலான ஒலி ஓவியம், கட்டுவன் வீரபத்திர வசந்தன் பாடல்களை மெருகேற்றித் தயாரித்த ஒருமணி நேர கிராமிய இசையாக்கம், எழுபதுகளில் யுனெஸ்கோ வேண்டுதலில் எம்.ஏ.குலசீலநாதன், சி. மெளனகுரு, எஸ்.கே.மகேஸ்வரன், என்.சண்முகலிங்கன் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கப்பட்டு பரிசும் பெற்ற வடமோடிப் பாடலும், வசந்தன் பாடல்களுமென பராவின் ஆக்கங்கள் பல.

ஆக்க இசைக்கலைஞனான பராவின் வானொலி ஆரம்பம் உண்மையில் வர்த்தக ஒலிபரப்பிலேயே தொடங்கியது. மலைநாட்டில் ஆசிரியப் பணியில் இருந்த பரா, கொழும்பில் வானொலி அறிவிப்பாளர் பதவிக்கு விளம்பரப்படுத்திய வேளை, ஆசிரியப் பணியிலே தொடரவா அல்லது வானொலி அறிவிப்பாளனாக வரவா என்று என்னிடம் கேட்டபொழுது, வானொலிக்கு வரும்படி தயங்காமல் கூறி விட்டேன். வானொலி விளம்பரக்கலையில் என்னோடு பரா இணைந்து செய்த Jingles பல. எனது Jingles இன் வெற்றிக்குப் பராவின் இசை முக்கியமானது. முழுத் திருப்தி வரும் வரை றெக்கோடிங்கை முடிக்க மாட்டான். அப்படி ஒரு Perfectionist.

பரா வர்த்தக ஒலிபரப்பிலேயே தம்பி சண்முகலிங்கனுடன் சேர்ந்து கலை, இலக்கியம் படைத்தவன். சண்முகலிங்கமும் பராவும் இணைந்து எத்தனை ஆக்கங்களைத் தான் படைத்தார்கள்! இத்தனைக்கும் பராவின் திறமைகளை எங்கள் சமூகம் உரியவாறு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது மிக மிகத் துயரமானது.


படத்தில் (இடமிருந்து வலம்): திரு. குஞ்சிதபாதம், திரு. சிட்டி சுந்தரராஜன், திரு. சுந்தா சுந்தரலிங்கம், திரு எஸ்.கே.பரராஜசிங்கம்

பராவிடம் உள்ள இசை சார்ந்த வானொலி சார்ந்த அறிவு அனுபவங்களை இனியேனும் எதிர்கால சந்ததியினர் தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டும். பராவும் எழுத்து வடிவில் அவற்றை எதிர்காலத்துக்குத் தர வேண்டும் என்று தமது மன ஓசையில் குறிப்பிடுகின்றார் சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள். என்னே துரதிஷ்டம், மன ஓசை எழுதி அச்சில் வரும் போது சுந்தாவின் கனவு மெய்ப்படாது பரா என்ற இசை நாதம் நிரந்தர மெளனம்
கொள்கின்றது, பராவின் வானொலி சார்ந்த ஆளுமை உரியவகையில் எம் அடுத்த ஊடகத்துறைச் சந்ததிக்குக் கைவராமல் போயிற்று.

இன்று இந்தப் பதிவுக்கான ஆயத்தங்களைச் செய்யும் போது, Google chat இல் வருகின்றார், உடன்பிறவாச் சகோதரன், வானொலிப் படைப்பாளி இளையதம்பி தயானந்தா. அவரிடம் நான் எழுதப் போகும் பரா என்னும் பரராஜசிங்கம் குறித்த ஆக்கம் பற்றிச் சொல்கின்றேன். இந்த முயற்சிக்குப் பாராட்டைத் தந்து விட்டு ஒரு சேதியையும் சொல்லி விட்டுப் போகின்றார் அவர். பரராஜசிங்கம் அவரது இறுதிச் சடங்கு நடந்த அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலையகத்தில் இருந்து இரவு “மணிக்குரல் ஓய்ந்தது’ என்ற 1 மணி நேர அஞ்சலி நிகழ்ச்சியை செய்த பெருமையைச் சொல்லிச் சிலாகித்தார்.

அப்போது தான் எனக்கு பழைய நினைவுகள் மீளக் கிளறுகின்றன. எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்கள் இறந்த நாள் இரவு அவுஸ்திரேலியாவில் இயங்கும் ஒரு வானொலியில் இலங்கையில் இருந்து சிட்னி வந்து தற்காலிக வானொலிப்பணியில் ஈடுபட்டிருந்த சக்தி எப்.எம் வானொலியின் அப்போதய நிர்வாகி எஸ்.எழில்வேந்தன், பராவின் நினைவுப் பகிர்வை வழங்கிக் கொண்டிருக்கின்றார். அப்போது தொலைபேசியூடாக இணைந்து கொண்ட அறிவிப்பாளர் பி.எஸ்.அப்துல்-ஹமீதும்இணைந்து பரராஜசிங்கம் அவர்களின் பெருமைகளைப் பேசிக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் உடைந்து போய் விம்மி விம்மி அழுகின்றார். அதுவும் வானொலியின் அஞ்சலியில் கலந்து வந்து எம் நெஞ்சைக் கனக்க வைக்கின்றது. ஒரு உண்மையான கலைஞன் தன் சாவின் பின்னும் நீண்ட நெடு நாட்கள் நினைவில் வைத்திருக்கப்படுவான் என்பதற்குப் பரா ஒரு சான்று.

பரா என்னும் பரராஜசிங்கத்தின் கலைப்பயணத்தில் கூடவே பயணித்த என்.சண்முக லிங்கன் இப்படிச் சொல்கின்றார்.

என் ஞானக்குயிலே!
“எல்லையற்ற ஞானத்துடன்
இதயம் கனக்க
நீ காத்திருந்தாய்
உன்னை முழுதாய்ப் பருகும் பாக்கியமின்றி
அவசர உலகில்
அலைந்து தொலைந்தோம்.

உசாத்துணை:
மன ஓசை – வீ.சுந்தரலிங்கம், மார்ச் 1999
“பரா”வுக்குப் பாராட்டு – விழா மலர் நவம்பர் 7, 1992
ஈழத்து மெல்லிசை இயக்கம் – நாகலிங்கம் சண்முகலிங்கன், யாழ் பல்கலைக் கழகம்
இதயரஞ்சனி – எஸ்கே.பரராஜசிங்கம், என்.சண்முகலிங்கன், காந்தளகம், ஜனவரி, 1998

“நிலக்கிளி” தந்த அ.பாலமனோகரன்


“ஒரு நாவல் அல்லது கதையானது அதை வாசிப்பவர்களுக்கு ஒரு செய்தியை கொண்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.” – நிலக்கிளி அ. பாலமனோகரன்.

ஈழத்தின் வன்னி மண் தந்த தரமான படைப்பாளிகளில் ஒருவர். ஆக்க இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஓவியம் என்று தன்னுடைய திறமையை விசாலமாக்கிக் கொண்டவர். திரு. பாலமனோகரனின் படைப்புப் பயண அனுபவத்தை நாம் இப்போது அவருடன் பகிர்ந்து கொள்வோம்.

Esnips ஒலி வடிவில் கேட்க
பாகம் 1
பாகம் 2

imeem Player ஒலி வடிவில்

பாகம் 1

பாகம் 2


கானா.பிரபா: வணக்கம் திரு.பாலமனோகரன் அவர்களே
முதலில் தங்களின் இலக்கியப் பயணத்தின் தொடக்க காலம் குறித்து சொல்ல முடியுமா?

அ.பாலமனோகரன்: என்னுடைய இருபத்து ஐந்தாவது வயதில்தான் எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டேன். அப்போது பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 2 வருட பயிற்சி முடித்துவிட்டு மூதூருக்கு முதல் நியமனம் பெற்றுச் சென்றிருந்த நேரம். அங்கு யாரோ ஒருவருக்கு ஒரு சிறுகதை எழுதிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அந்தச் சிறுகதையை எழுதி என்னுடைய பெரிய வகுப்பு மாணவர் ஒருவரிடம் கொடுத்து “இதை நல்ல எழுத்தில் எழுதித் தா” என்று சொன்னேன். அம்மாணவர் கதையைப் படித்துப் பார்த்துவிட்டு “இதை.. ‘வ. அ.’ அவர்களிடம் கொடுத்துப் பார்ப்போமே…. நல்ல கதையாக இருக்கிறதே?” என்றார்.

மூதூரைச் சேர்ந்த வ. அ. இராசரத்தினம் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் எனக்கோ அவரை முன்பின் தெரியாது. அந்த மாணவரே, தான் சொன்னபடி அவரிடம் சென்று கதையைக் கொடுத்தார்.

பின்னர் வ.அ எனக்கு தகவல் அனுப்பி, “நான் உங்களைச் சந்திக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். நானும் சென்று சந்தித்துப் பேசினேன்.

“நீங்கள் அனுப்பிய கதையின் நடை நன்றாக இருக்கிறது. ஆனால் இது சிறுகதை அல்ல. சிறு நாவல்” என்றார்.

அந்தக் கதையில் பார்த்திபன் என்பன போன்ற பெயர்களைத்தான் அதிகம் பயன்படுத்தியிருந்தேன். ஏனெனில் ஆனந்த விகடன், கல்கி போன்ற தமிழக இதழ்கள், அல்லது இலக்கியங்களை மட்டுமே அதிகம் படித்திருந்தபடியால், அந்த வகையில்தான் எங்கள் சிந்தனையும் இருந்தது போலும்.

அவர் என்னிடம் வேறு பல ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களையும், சில ஆங்கில நூல்களையும் தந்து, வாரந்தோறும் படித்துவரச் சொல்வார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்வோம்.
திரு. வ. அ. வின் அறிமுகத்துக்குப் பின்னர்தான் எங்கள் மண்ணையும், அங்கு வாழும் மக்களையும், அவர்களின் வாழ்க்கையையும் ஊன்றிக் கவனிக்கத் தொடங்கினேன்.

அதற்கு முன்பும் கூட இதே ஈடுபாட்டுடன் இவற்றையெல்லாம் கவனித்து வந்திருந்தாலும்கூட, அவ்வாறு நான் கவனித்தவற்றை எல்லாம் எழுத்தில் படைக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்ததில்லை. எனவே என்னை இந்த துறைக்கு அறிமுகப்படுத்தியவர் திருவாளர் வ. அ. அவர்கள்தான். அவர் இப்போது நம்மிடையே இல்லை.

கானா.பிரபா: நீங்கள் ஆரம்பத்தில் எழுதிய படைப்புகள் அந்தக் காலகட்டத்தில் இருந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது அல்லவா…? அவற்றைப் பற்றி?

அ.பாலமனோகரன்: வந்திருக்கிறது. அந்த நாட்களில் ‘தினபதி’யில் புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் ஒரு திட்டம் இருந்தது. அதற்கு வ. அ. அவர்களும் சில எழுத்தாளர்களை, கதைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அந்த வகையிலே வ. அ ‘தினபதி’ யின் வாரப் பதிப்பான ‘சிந்தாமணி’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் திரு. இராஜ அரியத்தினத்திற்கு எனது முதலாவது கதையை அனுப்பிய போது அது வெளியானது.

அதைத் தொடர்ந்து இராஜ அரியத்தினம் அவர்களுடான நெருக்கம் அதிகரித்தபோது, தொடர்ந்து ‘சிந்தாமணி’யிலேயே வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் ஒரு கதை அல்லது சிறுகதை எழுதிக் கொண்டிருந்தேன்.

இந்த வகையில்தான் என்னுடைய படைப்புகள் என் எழுத்துப் பயணத்தின் தொடக்க காலத்தில் பத்திரிகைகளில் வெளிவந்தன.

கானா.பிரபா: ஈழத்தின் நாவல் இலக்கிய வரலாற்றிலே ‘நிலக்கிளி’ என்ற உங்களுடைய நாவல், தவிர்க்க முடியாத ஒரு படைப்பாக விளங்கி வருகிறது. உங்களைக் கூட ‘நிலக்கிளி’ பாலமனோகரன் என்று பலர் அடைமொழியிட்டு அழைப்பார்கள். இந்த ‘நிலக்கிளி’ நாவல் எழுதியதற்கென பின்னணி ஏதாவது இருக்கிறதா?

அ.பாலமனோகரன்: ஆமாம். பாலமனோகரனைவிட ‘நிலக்கிளி’ முக்கியமானதும், பிரபலமானதும் கூட. எனவே ‘நிலக்கிளி’ பாலமனோகரன் என்ற பெயரிலேயே நானும் இப்போது படைப்புகளை எழுதி வருகிறேன்.

இந்த ‘நிலக்கிளி’ நாவலுக்கு எழுதிய முன்னுரையிலேயே நான் சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளேன். வன்னி மண்ணையும் அதன் மக்களையும் மிக அதிகமாக காதலிப்பவன், நேசிப்பவன் நான்.

அப்படிப்பட்ட ஒரு நேசமும், அந்த மண்ணும் அந்த மக்களும் என்னுள் ஏற்படுத்திய பிரதிபலிப்புகளும், அந்த மண்ணின் அழகு மற்றும் மக்களின் குணாதிசயங்கள்தான் அந்த நாவலில் இடம்பிடித்துள்ளன.

‘நிலக்கிளி’ என்ற பெயரை நான் அந்த நாவலுக்கு வைக்கக் காரணமே, அந்தமக்களும் ஒருவகையில் நிலக்கிளி போன்றவர்கள்தான்.
உயரப் பறக்க முடியாதவர்கள் அல்ல, உயரப் பறக்க விரும்பாதவர்கள் என்று சொல்லலாம். அந்த நாட்களைப் பொறுத்தவரையில்…!
அப்படிப்பட்ட ஒரு பாத்திரப் படைப்புகளைக் கொண்ட நாவல் அது.

முக்கியமாக நான் அனுபவித்த அந்தக் காட்டு வாழ்க்கை, வயல், என்னுடைய ஊர், சூழல், அங்கு வாழும் மக்கள், எல்லாம் அந்த நாவலில் இடம்பிடித்துள்ளன.

சில பாத்திரங்கள்…. அவர்கள் உண்மையிலேயே கதாபாத்திரங்களாக வரக்கூடியவர்கள்தான். தண்ணிமுறிப்பு என்ற கிராமத்திலே ராஜசிங்கம் என்று ஒருவர் வாழ்ந்தார். அவர்தான் கோணாமலையர். என்னும் பாத்திரத்தில் வருகின்றார். அவர் வாழ்ந்த வாழ்க்கையும் இந்நாவலில் உள்ளது. அவருக்கு மகன்கள் இருந்தார்கள். அவர்களுடன் நானும் காட்டிலே வேட்டைக்கு போவதுண்டு.

இப்படி அந்த உண்மையான நிஜமான இடங்களை வைத்து, சிலரை ‘மொடல்’ (Model) பாத்திரமாகக் கொண்டு இந்தப் படைப்பைக் கொடுத்தேன்.
அப்போது பத்துப் பதினைந்து சிறுகதைகள் மட்டுமே நான் எழுதியிருப்பேன். ‘நிலக்கிளி’ தான் எழுதிய முதலாவது நாவல். இதை வீரகேசரியில் பிரசுத்தனர். இதுதான் ‘நிலக்கிளி’ வெளியீடு கண்ட கதை.

கானா.பிரபா: வீரகேசரியில் தொடராக வெளிவந்து, பின்னர் வீரகேசரி பிரசுரமாக வந்த ஒரு நாவல் தானே இது?

அ.பாலமனோகரன்: இல்லை. நேரடியாகவே வீரகேசரி பிரசுரமாக வந்தது. இதற்கு இலங்கை அரசாங்கமும் ஒருவகையில் நன்மை செய்திருக்கிறது எனலாம்.

அதாவது தமிழகத்தில் வெளி வந்த தமிழ்ப் பத்திரிகைகளை அக்காலத்தில் நிறுத்தியிருந்தார்கள். அந்த இடைவெளியை நிரப்புவதற்காக வீரகேசரி மாதம் ஒரு நாவல் என்ற திட்டத்தைக் கொண்டு வந்து 50 அறுபது நாவல்களுக்கு மேல் வெளியிட்டிருப்பார்கள்.

அந்தத் திட்டத்தின் மூலமாக அறிமுகமான எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். முக்கியமாக என்னைப் பொறுத்தவரையில் வீரகேசரியின் அனுசரணையும் ஒத்துழைப்பும்தான் எழுத்துத் துறையில் நான் பிரவேசிக்கவும், என்னுடைய படைப்புகள் மக்களைச் சென்றடைவும் முக்கிய காரணமாக அமைந்தது. அந்த வகையில் வீரசேகரிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

கானா.பிரபா: நீங்கள் குறிப்பிடுவதுபோல அன்றைய காலகட்டத்தில் வீரசேகரி பிரசுரம் தொடர்ச்சியாக பல நாவல்களையும் பல எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இவ்வேளையில் ஒரு தகவலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறோம். ‘நிலக்கிளி’ என்ற இந்த நாவலையும், செங்கை ஆழியானின் ‘வாடைக்காற்று’ நாவலையும் படமாக்க வேண்டுமென்று ஒரு முனைப்போடு தயாரிப்பாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திராவிடம் கொடுத்த போது, ‘நிலக்கிளி’ கதையில் வரக்கூடிய ‘பதஞ்சலி’ கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவுக்கு ஒரு நடிகையை தென்னிந்தியாவிலேயே அப்போது தேட முடியாது என்று சொல்லி, ‘வாடைக்காற்று’ நாவலைப் படமாக்குமாறு சொல்லியிருந்தாராம். இது சுவையான தகவல், இல்லையா?

அ.பாலமனோகரன்: இது சுவையான தகவல்தான். யாரோ என்னிடம் முன்பு ஒருமுறை இதைச் சொல்லியிருக்கிறார்கள். இது எந்தளவு உண்மை அல்லது பொய் என்பது அப்போது தெரியவில்லை. பின்னர் ஒரு நல்ல இடத்திலிருந்து தம்பியய்யா தேவதாஸ் அவர்கள் இதைப்பற்றி எங்கோ குறிப்பிட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.
பாலுமகேந்திரா மட்டக்களப்பை சேர்ந்தவர்.

கானா.பிரபா: ஆமாம். தம்பியய்யா தேவதாசுடைய ‘ஈழத்து தமிழ்ச் சினிமாவின் வரலாறு’ என்ற நூலிலே இதைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வகையில் ‘நிலக்கிளி’க்கும் அதில் வரும் பதஞ்சலி பாத்திரத்திற்கும் ஒரு தனித்துவத்தை அன்றே கொடுத்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி அல்லவா?

அ.பாலமனோகரன்: ஆமாம்.

கானா.பிரபா: நீங்கள் குறிப்பிட்டதுபோல வீரகேசரி பிரசுரம் மூலமாக ‘நிலக்கிளி’ வெளியானது. தொடர்ந்து ‘குமாரபுரம்’ என்ற இன்னொரு நாவலும் உங்களுடைய படைப்பாக வெளியாகியிருந்தது அல்லவா?

அ.பாலமனோகரன்: ஆமாம். ‘குமாரபுரம்’ என்றொரு நாவல், அதைத் தொடர்ந்து ‘கனவுகள் கலைந்தபோது’ என்ற நாவலும் வீரகேசரி ஸ்தாபனத்தால்தான் வெளியீடு செய்யப்பட்டது.

கானா.பிரபா: தொடர்ந்து உங்களுடைய படைப்புகளாக, அதாவது நூல் வடிவில் வந்த படைப்புகளாக எவற்றைச் சொல்வீர்கள்?

அ.பாலமனோகரன்: ‘நிலக்கிளி’, ‘குமாரபுரம்’ எழுதிய காலத்திலேயே எனது ஊரிலே, தண்ணீரூற்று கிராமத்துக்கு அருகிலே உள்ள வற்றாப்பளையிலே உள்ள அருணா செல்லத்துரை என்பவர் அப்போது இலங்கை வானொலியில் இருந்தார். அவர் மூலமாக என்னுடைய சிறுகதைகளில் பெரும்பாலானவற்றை பின்பு வானொலி நாடகமாக்குவதுண்டு.

ஜோர்ஜ் சந்திரசேகரன், வாசகர் போன்றவர்கள் அந்த நாடகங்களை மிக அற்புதமாக உருவாக்கினார்கள்.
அத்தோடு ‘வீக் எண்ட்’ என்ற ஆங்கில வாராந்திர ஞாயிறு பத்திரிகையிலும் என்னுடைய கதைகள் ஆங்கிலத்தில் பிரசுரமாயின. எல்லா கதைகளுமே வன்னி மண்ணையும் மக்களையும் பிரதிபலிப்பனவாகத்தான் இருந்தன.

கானா.பிரபா: அன்றைய காலகட்டத்தில் – அதாவது நீங்கள் வன்னி மண்ணிலே இருந்த காலகட்டத்திலே – வன்னி மண்ணிலே இருந்து எழுதக்கூடியவர்களாக உங்களால் குறிப்பிட்டு யாரையெல்லாம் சொல்ல முடியும்?

அ.பாலமனோகரன்: முதலாவதாக நான் குறிப்பிட வேண்டியவர் முல்லைமணி சுப்பிரமணியம். இவர் முள்ளியவளையைச் சேர்ந்தவர்.
இவர் ஒரு ஆசிரியர். இவர் அண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார் என்று கேள்விப்பட்டேன். தற்போது வவுனியாவில் இருக்கிறார். அடுத்து, கலாநிதி க. நா. சுப்பிரமணிய ஐயர். இவர் தன்னுடைய எம். ஏ. பட்டத்துக்கு நாவல்கள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

கானா.பிரபா: அதாவது இலங்கையில் எழுதப்பட்டிருந்த தமிழ் இலக்கிய நாவல்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தார்.

அ.பாலமனோகரன்: ஆமாம். அவர் முள்ளியவளையைச் சேர்ந்தவர். வித்தியானந்தா கல்லூரியிலிருந்து முதன்முதலாக பல்கலைக்கழகம் சென்ற பெருமைக்குரியவர். நான் முன்பே குறிப்பிட்ட அருணா செல்லத்துரை. அவரும் இப்போது நிறைய நூல்களை வெளியிட்டுள்ளார்.

நான் குறிப்பிட வேண்டிய மற்றொரு எழுத்தாளர் கவிஞர் முல்லையூரான் என்றழைக்கப்படும் ஒருவர். அவரும் வற்றாப்பளையைச் சேர்ந்தவர். டென்மார்க்கிலே இருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் இப்போது நம்மிடையே இல்லை.

ஏனைய எழுத்தாளர்கள் என்று சொன்னால், பொன் புத்திசிகாமணி என்று வட்டுவாகல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இது முல்லைத்தீவிலிருந்து புதுக்குடியிருப்புக்கு போகும் வழியிலே உள்ள அழகான கிராமம். அவரும் நல்ல சிறுகதைகள் எழுதியுள்ளார் இப்போது ஜேர்மனியில் வசிக்கிறார். க. ந. இரத்தினசபாபதி மணிவண்ணன் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர். அவரும் இப்போது நம் மத்தியில் இல்லை. ‘காற்றில் மிதக்கும் சருகுகள்’ என்ற அவருடைய நூல் ஒன்று வீரகேசரி பிரசுரம் மூலமாக வெளிவந்தது.

மெட்ராஸ் மெயில் என்று ஒரு எழுத்தாளர் உள்ளார். அவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர். அரியான் பொய்கை செல்லத்துரை, முள்ளியவளையில் வாழ்பவர். அடுத்து ஊத்தங்கரையான். தணணீரூற்றிலே ஊறிப் பாய்கின்ற நல்ல கேணி ஒன்று உண்டு. அதன் அருகிலே ஊத்தங்கரை பிள்ளையார் கோவில் இருக்கும். இந்த ஊத்தங்கரை என்பதை தனக்குப் பெயராகச் சூட்டிக்கொண்டு எழுதியவர். என்னுடைய மாணவர் என்று கூட சொல்லலாம். ஐங்கரலிங்கம் என்பது அவர் பெயர். அடுத்து தாமரைச் செல்வி. இவர் நான்கைந்து வருடங்கள் முன்புதான் எனக்கு அறிமுகமானார்.

நான் யாழ்ப்பாண கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேதான் நவாலியைச் சேர்ந்த அப்பச்சி மகாலிங்கம் வித்தியானந்த கல்லூரியில் பணியாற்றினார். அவர் நல்ல எழுத்தாளர், நாடக ஆசிரியர். அவர் வித்தியானந்தா கல்லூரியில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்தார். அந்த பத்து ஆண்டுகளும் அவர் என்னுடைய வீட்டிலேயே தான் வாழ்ந்தார். நான் இளைஞனாக இருந்த அந்தச் சமயத்தில் அவரிடம் நிறைய புத்தகங்கள் பெற்று படித்திருக்கிறேன். அவரும் என்னைப் பொறுத்தவரையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு அடக்கமான எழுத்தாளர்.

அவருடைய ஒரு நாவல் கூட வீரகேசரி பிரசுரமாக வெளிவந்துள்ளது.முக்கியமாக கலைமகளில் ‘ராமனுக்கு தோணியோட்டிய வம்சம்’ என்ற அவருடைய கதை ஒன்று வந்தது. நல்ல எழுத்தாளர், நல்ல மனிதர். அவரும் இப்போது நம்மிடையே இல்லை.

கானா.பிரபா: வீரகேசரி பிரசுரமாக வந்த உங்களது நாவல்களை அறிந்தோம். அதை தவிர உங்களுடைய படைப்புகள் எழுத்துருவில் பதிப்பாக வந்துள்ளனவா? அவற்றைப் பற்றி?

அ.பாலமனோகரன்: ‘வண்ணக்கனவுகள்’ என்ற பெயரிலே ஒரு நாவல். அது வீரசேகரி பிரசுரத்திற்காக நான் அளித்தபோது, அவர்கள் அதை ‘மித்திரன்’ இதழில் பிரசுரித்துவிட்டு பிறகுதான் புத்தகமாகப் போடுவோம் என்று கூறினர். அது மித்திரனில் வெளியானது.

‘வட்டம்பூ’ என்றொரு நாவல். ‘அப்பால்தமிழ்’ (www.appaaltamil.com) இணையத்தளத்தில் தொடர்கதையாக வந்தது.அந்த நாவலும்கூட ‘நிலக்கிளி’யை ஒத்ததுதான். ‘நிலக்கிளி’ வன்னி பிரதேசத்தைக் கொண்டு அமைந்தது என்றால், ‘வட்டம்பூ’ ஆண்டாங்குளம் என்ற கிராமத்தைக் கொண்டு அமைந்தது. இது நாயாறு, குமளமுனை காட்டுப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ள பழையகாலத்து பனைகள் உள்ள ஒரு குக்கிராமம்.

அங்கு வாழும் ஒரு முதியவருக்கு குழுமாடு சவாலாக வருகிறது. அவர் எருமை, பசுக்கள் என்று நிறைய வைத்திருப்பவர். மற்ற விலங்குகளைவிட குழுமாடு மிகவும் பயங்கரமானது என்பது பலருக்குத் தெரியும்.அதை எப்படி அவர் அடக்கி வென்றார் என்ற கதையைச் சொல்கையில், இந்த குழுமாடு பிடிக்கின்ற முறைகளையும், அதற்குப் பயன்படும் வார்க்கயிறு ஆகியவை குறித்தும், கூறியுள்ளேன்.

அங்குள்ள காட்டு வாழ்க்கையை மிகவும் அனுபவித்து வாழ்ந்தவன் நான். அதை ஒரு படைப்பிலே கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன்.

அந்தக் காலக்கட்டத்திலேதான் இளைஞர்களும் மாணவர்களும் தங்களுக்கென்று ஒரு அமைப்பை அமைத்து அரசியலில் பிரவேசிக்கின்ற ஒரு காலமாக இருந்தது.
பாராளுமன்ற பிரிதிநிதிகளின் போக்கில் அதிருப்தி ஏற்பட்டு அல்லது வேறு வகையான ஆயுத போராட்டத்தை முன்னெடுக்க முனைகின்றனர். அந்தக் காலகட்டத்தில் குமளமுனையிலே ஒரு மாணவன் பல்கலைக்கழகத்தில் இருந்தார். அவருடைய வாழ்க்கை கூட என்னை மிகவும் பாதித்தது. அவர் இப்போது இல்லை.

ஒரு தேர்தலின் பின்னர் தென்னமரவடி கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாம் இடம்பெயர்ந்து குமளமுனையிலே வாழ வேண்டிய ஒரு நிர்பந்தம்.
ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும், தேர்தலில் தோற்றவர்கள் கொழும்பில் உள்ள தமிழர்களையும், இலங்கையில் உள்ள மற்ற தமிழர்களையும் தாக்கி தமது கோபத்தை தீர்த்துக் கொள்வது வழக்கம். அதனால் கலவரங்கள் ஏற்படும். இதைப் பின்னணியாகக் கொண்டு ஒரு கதை.

இப்படியொரு கதைக் களமிருப்பதை வீரகேசரி ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இதை விரும்பவில்லை.
அப்போது முல்லையூரான் அந்தக் கதையைப் படித்தார். ‘இந்தியாவுக்குப் போய் இந்தக் கதையை எழுதுங்கள்’ என்று அவர் சொன்னார்.

நானும் இந்தியாவுக்குச் சென்று இக்கதையை எழுதி உடனே வெளியிட வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றேன். இத்தனைக்கும் கதைக்கான குறிப்புகள் எதையுமே கையில் எடுத்துச் செல்லவில்லை. இந்தியாவில் எனக்கு வசதியான இடம் கூட கிடையாது.

இந்தியாவில் ஒரு மட்டையை மடியில் வைத்து தரையில் அமர்ந்தபடி எழுதுவார்கள். உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அப்படி தரையில் அமர்ந்தபடி இரண்டு நாட்களில் அந்த நாவலை எழுதி முடித்துவிட்டேன். அந்த சுவாரசியமான அனுபவம் பற்றி நிறைய சொல்லலாம். கதையை முடித்து ‘நர்மதா’ ராமலிங்கம் அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அது திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலம்.

“இப்போது எங்களுடைய இலக்கிய முயற்சிகளுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. என்னால் இந்தக் கதையைப் படித்துக்கூட பார்க்க முடியாது” என்பதுபோல நர்மதா ராமலிங்கம் சொன்னார். நான் அவரிடம் சொன்னேன், “இலங்கையிலிருந்து இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து, இரண்டு நாட்களுக்குள் இக்கதையை எழுதி முடித்துள்ளேன். நீங்கள் ஒருமுறை படித்துப் பாருங்கள். நான் காலையில் வந்து வாங்கிச செல்கிறேன்” என்று சொல்லி விடைபெற்றேன்.

காலையில் சென்றபோது அவர் என்னை மிகவும் அன்பாக வரவேற்று உபசரித்தார். வீட்டுக்குள் அழைத்துச் சென்று காலை உணவு அளித்து, தான் ஒரு பண்புக்காக, நாகரிகத்துக்காக அந்தக் கதையில் இரண்டு பக்கங்கள் படிக்கலாம் என்ற எண்ணத்தில் எடுத்துப் படித்தால், அதன் பிறகு கதையை வைக்க முடியவில்லை என்றும் முழுமையாகப் படித்ததாகவும் சொன்னார்.

“இந்தக் கதை ஒரு ‘உலகளாவிய கருத்து’ (யூனிவர்சல் தீம்) ஆக இருக்கிறது. எனினும் என்னால் வெளியிட முடியாத சூழ்நிலை” என்று கூறிவிட்டார்.
பிறகு எப்படியோ இந்தியாவில் சோமபுத்தக நிலையத்தினர் மூலமாக ‘நந்தாவதி’ என்ற பெயரில் இக்கதை வெளியானது.

‘வட்டம்பூ’ என்றால் மக்கள் வாங்கமாட்டார்கள் என்று கூறிவிட்டனர். இப்படித்தான் ‘நிலக்கிளி’க்குக் கூட வீரகேசரி பிரசுரத்தார் பெயரை மாற்றுப்படி கூறினர். நான் மறுத்துவிட்டேன். பிரசுரிப்பதாக இருந்தால் ‘நிலக்கிளி’ என்ற பெயரில் வெளியிடுங்கள், இல்லையென்றால் பிரசுரிக்கத் தேவையில்லை என்று கூறிவிட்டேன்.

நல்லவேளையாக முதல் நாவலிலேயே என்னுடைய விருப்பத்தில் தீவிரமாக இருந்தபடியால் நிலக்கிளி என்ற பெயர் வந்தது. இல்லையெனில் அந்நாவல் பதஞ்சலி என்ற பெயரில் கூட வந்திருக்கக்கூடும். நிலக்கிளி என்ற பெயரை எல்லோரும் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று கருதினர். வெட்டுக்கிளி, நீலக்கிளி என்றெல்லாம் பலர் பலவிதமாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதெல்லாம் சுவையான அனுபவங்கள்.

இதைத் தொடர்ந்து 1984ல் டென்மார்க் வந்துவிட்டேன். இங்கு டென்மார்க் வந்த பிறகு ‘தாய்வழி தாகங்கள்’ என்றொரு நாவல் எழுதி அதை சென்னையில் வெளியிட்டேன்.

இங்கே டென்மார்க்கிலே எனது டெனிஷ் தமிழ் அகராதியை பதினைந்து வருடங்களுக்கு முன்பு இங்குள்ள ஒரு பெரிய வெளியீட்டு நிறுவனம் தங்களது பதினோராவது பிறமொழி அகராதியாக வெளியிட்டனர்.
அவர்களே ஐந்து மாதங்கள் கழித்து நான் ஆங்கிலத்தில் எழுதிய பத்துப் பதினைந்து சிறுகதைகளை இங்குள்ள இரண்டு பிரபலபமான எழுத்தாளர்கள் மொழிபெயர்த்து அச்சிறுகதைத் தொகுதியை ‘நாவல் மரம்’ என்ற பெயரில் வெளியிட்டனர். அந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்ற கதைகள் அனைத்துமே என் மண்ணையும் மக்களையும் பற்றியதுதான்.

இதேபோல் ‘தீப தோரணம்’ என்ற பெயரில் என்னுடைய சிறுகதைகளில் பதினொரு கதைகளைத் தேர்ந்தெடுத்து நானே வெளியிட்டேன். அதற்கு இலங்கையில் எனக்கு சாகித்ய மண்டபப் பரிசும் கிடைத்தது. இதற்கிடையே ‘நிலக்கிளி’ நாவலும் மல்லிகைப் பந்தலின் வெளியீடாக, இரண்டாவது பதிப்பாக மூன்று – நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறது.

ஏன் இவ்வாறு வெளியிட நேர்ந்தது என்றால், வீரகேரி நாவல்களுக்கும் புத்தகங்களுக்கும் அவர்கள் பயன்படுத்துவது வெறும் நியூஸ் பிரிண்ட் தாள்தான். அது நீண்ட காலம் நிலைத்து இருக்காது. எனவே ‘நிலக்கிளி’ நாவல் நாளடைவில் இல்லாமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில், பயத்தில் நான் ‘மல்லிகை’ ஜீவா அவர்களுடன் பேசி, அவர் மூலமாக இரண்டாம் பதிப்பாக வெளியிட்டேன்.

கானா.பிரபா: எழுத்துத்துறை தவிர ஓவியம், மொழிபெயர்ப்புத் துறையிலும் தடம் பதித்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு பற்றிச் சொல்லும்போது டெனிஷ் மொழியில் வெளி வந்துள்ள பல ஆக்கக்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் குறித்து?

அ.பாலமனோகரன்: டெனிஷ் மற்றும் ஆங்கிலம் எனப் பல மொழியாக்கம் செய்திருந்திருக்கிறேன். ஆனால் இவை எல்லாவற்றையும்விட என்னுடைய வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரிய அதிர்ஷ்டமாக கலாநிதி குணசிங்கம் அவர்கள் தன்னுடைய கலாநிதி பட்டத்துக்காக எழுதிய ‘தமிழ் தேசியவாதம்’ என்ற நூலை தமிழாக்கம் செய்கின்ற வாய்ப்பு கிடைத்ததைச் சொல்ல வேண்டும்.

காரணம், எங்களுடைய வரலாற்றுக்குரிய சான்றுகள் பல அந்நூலில் உள்ளன. கலாநிதி குணசிங்கம் என்னிடம் அடிக்கடி சொல்வார், “இலங்கைத் தமிழர்களுடைய வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களைக் குறிக்கின்ற நூல்கள்தான் இதுவரை வெளிவந்துள்ளன. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை ஒரே நூலில் முழுமையாகவும் தகுந்த ஆதாரங்களுடன் சான்றுகளுடனும் சொல்கின்ற ஒரு ஆக்கம் நம்மிடையே இல்லை. அதை நான் கட்டாயம் உருவாக்க வேண்டும்” என்பார்.

இதை ஒருவித தியாக உணர்வுடன், தாகத்துடன் அவர் செய்து கொண்டிருந்தார். அவருக்கு சிறு உதவியாக என்னால் இருக்க முடிந்ததைப் பெரிய காரியமாக நினைக்கிறேன்.

கானா.பிரபா: இத்தகைய பெரிய பணிக்காக நீங்கள் செலவழிக்கும் நேரம் என்பதும் கூட மிக அதிகமாகேவ இருந்திருக்கும் அல்லவா?

அ.பாலமனோகரன்: உண்மைதான். நான் முறையான பட்டப் படிப்பு பெற்றவன் அல்ல. என்னுடைய அதிகபட்ச படிப்பு என்று பார்த்தால் ஆங்கில ஆசிரியராகப் பட்டம் பெற்றதுதான். அதைவிட இங்கே டென்மார்க்கில் டெக்னிக்கல் அஸிஸ்டென்ற் எனப்படும் கட்டிடத்துறையில் தொழில்நுட்பவியலாளருக்கான மூன்று வருடப் படிப்பை முடித்திருக்கிறேன்.
என்னுடைய ஐம்பதாவது வயதில் அந்தப் பட்டப்படிப்பை முடித்தேன்.

என்னுடைய ஒரே ஆசை என்னவென்றால், என் தாய்நாட்டுக்குப் போகவேண்டும். அங்கு எவ்வளவோ கட்டிடங்கள் எழுப்பப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அதற்கு ஏதேனும் ஒருவகையில் உதவியாக இருக்கலாம் என்பதற்காகவே படித்தேன்.

கானா.பிரபா: ஓவியத்திலும் நீங்கள் கைதேர்ந்த கலைஞராக இருக்கிறீர்களே… எப்படி?

அ.பாலமனோகரன்: டென்மார்க்கில் என் ஓவியங்களை டெனிஷ் மக்கள் ஓரளவு விரும்பிப் பார்த்து ரசித்திருக்கிறார்கள். சிலர் தங்களுடைய வீடுகளிலும் அவற்றை வைத்துள்ளனர். ஆனால் எங்கள் மக்கள் மத்தியில் ஒரு இடம் கிடைத்திருக்கிறது என்றால், நான் ஓவியம் வரைவேன் என்பது எம் மக்களுக்குத் தெரியவந்தது என்றால் அதற்காக நான் திரு. கி.பி. அரவிந்தன் அவர்களுக்குதான் நன்றி சொல் வேண்டும். ‘அப்பால் தமிழ்’ தளத்தில் ஓவியக்கூடம் என்று ஒரு பகுதியை ஆரம்பித்து அதிலே என்னுடைய ஓவியங்களை மட்டுமல்ல ஈழத்து ஓவியர்களின் படைப்புகளையும் அளித்தார். அதிலே என்னுடைய ஓவியங்களும் உள்ளன.

நான் ஒன்றும் முறையாக ஓவியம் கற்றுக் கொள்ளவில்லை. சுயமாகத்தான் வரையத் தொடங்கினேன். இப்போதும் அதில் ஈடுபட்டு வருகிறேன். சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல இவ்வாறு நான் சுயமாக கற்றுக் கொண்டது நல்ல விஷயமாகவே இருக்கிறது.


( அ.பாலமனோகரனால் 1994 இல் வரையப்பட்ட “காட்டுக் கோழிகளின் சண்டை”, இது Amateur Art Scene வெளியிடும் PAINT சஞ்சிகையில் வெளிவந்தது)

கானா.பிரபா: உங்களது இளம் பருவ காலம் குறித்து?

அ.பாலமனோகரன்: என்னுடைய தாயார் தான் எனக்கு சிறு வயதில் ஆசிரியையாக இருந்தவர். மூன்றாம் வகுப்பு மட்டும் தண்ணீற்று சைவ பாடசாலையில் படித்தேன். அங்குதான் என் தாயார் பணியாற்றினார். அவரை பெரியம்மா வாத்தியார் என்று சொல்வார்கள். அதன் பிறகு உடுவில் மகளிர் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள், அதன் பிறகு யாழ்ப்பாணம் கல்லூரியில் படித்தேன்.

மிக சின்ன வயதிலேயே என்னை என் தாயார் பெரிய வகுப்பு மாணவர்கள் ஓவியம் வரையும்போது அங்கு அழைத்துச் சென்று அவர்களுடன் ஓவியம் வரைய விடுவார்.

அதன் காரணமாகவோ என்னவோ ஓவியம் பழகிவிட்டது. எழுத்துத் துறையில் ஒரு ஓவியரின் கண்ணோட்டத்துடன் சில விஷயங்களைப் பார்க்கும்போது அது எங்களுடைய எழுத்துக்கு அழகும் மெருகும் சேர்ப்பதை என்னால் உணர முடிகிறது.

கானா.பிரபா: வன்னி மண் மாந்தர்கள், அதாவது உங்கள் காலட்டத்திலேயே வாழ்ந்தவர்கள் பின்னர் கதை மாந்தர்களாக கருதப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்றைய காலக்கட்டடத்தில் வன்னி மண்ணின் முக்கியத்துவம் கருதி நமது தேசிய போராட்டம் கருதி – அதாவது வன்னி மண்ணில் இருந்துகொண்டு பலர் கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதற்கு முன்னர் – அதாவது 90-களுக்குமுன்னர் வன்னி மண்ணிலிருந்து அதிகமான படைப்பிலக்கியங்கள் வெளிவராமல் இருந்ததற்கு குறிப்பிட்ட காரணம் ஏதாவது உண்டா?

அ.பாலமனோகரன்: எங்களுடைய விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்துக்குப் பிறகு வன்னியில் ஒரு புது வெள்ளம் அல்லது புது ரத்தம் பாய்ந்தது போன்ற நிலைமை ஏற்பட்டது. 84ஆம் ஆண்டு டென்மார்க் வந்து, அதன் பிறகு பத்து வருடங்களுக்குப் பின்னர் முதன்முதலாக அங்கு சென்றபோது, வன்னி மண்ணையும் சரி, மக்களையும் சரி முன்பிருந்த வகையில் நான் காணவில்லை.

குறிப்பாக அங்கு வாழ்ந்த இளைஞர்கள் மிகவும் வலிமையான சில தன்மைகளைப் பெற்றிருந்தனர். அதாவது சூழல் பிரச்சனையாகும்போது – சூழல் வாழ்க்கைக்கு இலகுவாக இல்லாத வேளையில் தாவரங்களும் சரி, மனிதர்களும் சரி, அந்த சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டிருந்ததைக் கவனிக்க முடிந்தது. அதாவது இயற்கை அவர்களை மாற வைத்திருந்தது.

நான் அங்கு சென்ற வேளையில் இந்திய ராணுவம் அங்கிருந்தபோது நடந்த போர்களால் யாவுமே வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. காயம்பட்ட மாந்தர்களையும் மரங்களையும் செடிகளையும்தான் பார்க்க முடிந்தது.

இருந்தாலும் காலையில் இருள் பரந்த நேரத்திலே கற்கள் நிறைந்த அந்த வீதியிலே . ஒரு ஒற்றையடிப் பாதைமூலமாகத்தான் சைக்கிளில் போவார்கள். இளைஞர்களும் யுவதிகளும் அந்தக் காலை நேரத்திலே சைக்கிளில் செல்வார்கள். அப்போதுதான் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. அவர்கள் அந்த நேரத்திலும் சிரித்துப் பேசிக் குதூகலத்துடன் சென்றார்கள்.
நான் பார்த்தது ஒரு புது சந்ததி. வன்னி மண்ணிலே ஒரு புதிய சந்ததி, வலிமையான சந்ததி உருவாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

அதன் பிறகு ஓவியத்துறை தொடர்பாக நான் அங்கு சென்று சில இடங்களை சென்று பார்த்ததுண்டு. அங்கு பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். இலக்கியத் துறையிலும் கால்பதித்து தங்களுக்கென தனி முத்திரை பதித்து, மிகவும் யதார்த்தமான இலக்கியதைப் படைத்துக் கொண்டிருக்கின்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

அந்த படைப்புகள் எல்லாம் வெளியே வந்துள்ளனவா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
அங்கே உள்ள ஓவியர்கள், திறமை உள்ளவர்களின் பல படைப்புகள் நம்மை வந்து அடையவில்லை. இதுபற்றி அரவிந்தன் அவரிகளிடமும் கூறியுள்ளேன். அத்தகைய படைப்புகளை நாம் எடுக்க வேண்டும்.
அவற்றுக்கென தனியாக ஒரு ஓவியக்கூடத்தை – தமிழீழ ஓவியக்கூடம் என்ற பெயரில் உருவாக்க வேண்டும். அந்தப் படைப்புகளுக்கென ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட வேண்டும்.

புலம்பெயர்ந்து வெளியே இருக்கின்ற நம்மவர்களுக்கு நம் மண்ணைச் சேர்ந்த திறமைசாலிகளின் படைப்புகள் வெளியே வரவேண்டும் என்கிற ஆதங்கம் இருக்கிறது.
ஆர்ட் கேலரி என்று சொல்கின்ற இணையத்தளங்களில் சென்று பார்த்தால் நம்முடைய சகோதர இனமாகிய எத்தனையோ சிங்கள ஓவியர்களின் எத்தனையோ படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் ஈழத்தில், எங்களுடைய மண்ணில் அத்தகைய திறமை இல்லாமல் இல்லை. அப்படிப்பட்ட படைப்புகளை இணையத்தளத்தில் கொண்டு வருவதும் சிரமமான பணியல்ல. இந்தப் பணியைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. வன்னி மண் இப்போது புதிய வடிவம் எடுத்துள்ளது என்பேன்.

கானா.பிரபா: நிறைவாக ஒரு கேள்வி, உங்களுடைய பார்வையிலே ஓர் இலக்கியப் படைப்பு என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?

அ.பாலமனோகரன்: இலக்கியம் குறித்து இந்தக்கட்டத்தில் பெரிதாகப் பேசும் அளவு எனக்கு அதுகுறித்த ஆழ்ந்த புலமை இல்லை என்பேன்.
எனினும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு நாவல் அல்லது கதையானது அதை வாசிப்பவர்களுக்கு ஒரு மெசேஜ், அதாவது ஒரு செய்தியை கொண்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
அதாவது வாசி, யோசி, நேசி என்பேன்.
நாங்கள் எழுதுவதையெல்லாம் வாசிக்கிறோம்தானே? அவ்வாறு வாசிக்கும்போது ஒரு செய்தியை வாசகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு படைப்பானது அமைய வேண்டும் என்பது என் கருத்து.

ஒரு விஷயத்தை சிந்தித்து, அதை எழுதி, அதன் வழியாக பிறரை நேசிக்கச் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனையை வளர்க்க வேண்டும்.
இந்த உலகத்திலே எந்தத் துறையாக இருப்பினும், அதில் வெற்றிகரமாக முன்னேறியிருப்பவர்களைப் பார்த்தால் அவர்கள் ஒரு குழு முயற்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும்.

குறிப்பாக வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் வாழும் இளம் தலைமுறையினரின் திறமைகளை நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
இப்படிப்பட்ட வினாக்களை, பிரச்னைகளை, விஷயங்களை நம்முடைய படைப்புகளில் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன்.
நம்முடைய படைப்பு ஏதாவது ஒருவகையில் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்ளுக்கும், இந்த உலகுக்கும் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். கதையளவில் இத்தகைய அம்சங்கள் இருக்க வேண்டும்தான். ஆனால் அதைவிட இளம் தலைமுறையினரின் திறமைகளை வெளிக்கொண்டு வருவது முக்கியம் என்றும், அதை நம் படைப்புகள் பிரதிபலிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

நன்றி வணக்கம்

புகைப்படங்கள் உதவி: அப்பால் தமிழ்

ஓவியம்: பாலமனோகரனின் பிரத்தியோகத் தளம்

படைப்பாளிகளின் வாழ்வியில் அனுபவப் பகிர்வுகளை அவர்களின் குரலிலேயே பதிவு செய்து ஒலி ஆவணப்படுத்த வேண்டும் என்ற என் தொடர் முயற்சியின் பிரகாரம் திரு.அ.பாலமனோகரன் அவர்களை இப்பேட்டியைக் கண்டிருந்தேன். இப்பேட்டி ஒலி வடிவில் தமிழ்நாதம் இணையத்தளத்திலும், எழுத்து வடிவில் அப்பால் தமிழ் இணையத் தளத்திலும் வந்திருந்தது. இம்முயற்சியில் உறுதுணை புரிந்த என் சக பயணிகளுக்கு என் மேலான நன்றிகள் உரித்தாகுக.

அ. பால மனோகரனின் பிரத்தியோகத் தளம் சென்று தரிசிக்க

“அப்பால் தமிழ் இணையத்தில் தொடராக வரும்

“குமாரபுரம்” நாவலை வாசிக்க

“நிலக்கிளி” நாவலை வாசிக்க

“வட்டம்பூ” நாவலை வாசிக்க