அடுத்த பிறவியில் பூனையாய் பிறப்போம்!

மூன்று வாரங்களுக்கு முந்திய ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு.
இலக்கமற்ற பிரைவேட் நம்பர் ஒன்றின் மூலம் என் கைத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகின்றது. “கொட்டி (புலி)” என்று ஆரம்பித்து ஏதேதோ சிங்களத்தில் வசவு வார்த்தைகளாக வந்து விழுகின்றது. நான் நிதானிப்பதற்குள் அந்தத் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது.

இது நடந்து அடுத்த ஞாயிறு காலை உடற்பயிற்சி நிலையத்துக்குக் காலை செல்லும் போது அதுவரை அணைத்திருந்த கைத் தொலைபேசியை விழிக்க வைக்கிறேன். முந்திய சனி இரவு 11.09 இற்கு என் கைத் தொலைபேசியில் ஒரு மெஜேச் பதிவாகியிருக்கிறது, அதுவும் சிங்களத்தில். நேரே சிங்களம் தெரிந்த நண்பர் வீட்டுக்கு என் காரைச் செலுத்தி, அவர் முன் அந்த கைத் தொலைபேசியில் பதிவான தகவலை ஒலிக்க விடுகின்றேன்.
“உங்களை எல்லாம் கொல்லாமல் விட மாட்டோம், சரியா?” இது தான் அந்தச் சிங்களப் பேச்சின் சாராம்சம்.

எனது கைத் தொலைபேசியின் நிறுவனத்துக்கு அழைக்கிறேன். எல்லாவற்றையும் விபரமாகக் கேட்ட மறுமுனை வாடிக்கையாளர் சேவைக்காரர் “இந்தப் பிரச்சனைக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்” என்று தொடங்கி ஏற்கனவே பாடமாக்கியிருந்ததை கிளிப்பிள்ளை போல ஒப்புவிக்கிறார்,
1. உங்கள் தொலைபேசி இலக்கத்தை மாற்றுங்கள் (இலக்கத்தை மாற்றினால் மட்டும் என் புது இலக்கத்தைத் தேடி எடுப்பது அவ்வளவு கஷ்டமா என்ன?)
2. பொலிசாருக்கு ஒரு புகார் கொடுத்தால் அவர்களுக்கு இந்த அனாமோதய அச்சுறுத்தல் யாரால் வந்தது என்ற விபரங்களைக் கொடுப்போம்.

இதை விட வேறு ஏதாவது உதவி தேவையா என்று தேனாகப் பேசுகிறது மறுமுனை. இதுவே போதும் என்று வெறுப்போடு தொலைபேசியின் வாயை மூடுகிறேன்.

ஆற்றாமை, கோபம் எல்லாம் கிளப்ப நேரே எங்கள் பிராந்தியப் பொலிஸ் நிலையத்துக்குக் காரைச் செலுத்துகின்றேன்.
ஒரேயொரு இளம் பொலிஸ்காரர் அங்கே கடமையில் இருந்தார்.
இதுவரை வந்த அநாமோதய அழைப்புக்களைப் பற்றிய விபரங்களையும் சொல்லி, ஏற்கனவே பதிவான அந்தத் தகவலையும் ஒலிக்க விடுகிறேன். எல்லாவற்றையும் கேட்ட அந்த பொலிஸ்காரர்,
“சரி நான் ஒரு புகாரைப் போடுகிறேன் ஆனால் என் மேலதிகாரி தான் ஏதாவது செய்யவேணும், ஆனால் இது மாதிரி புகாருக்கெல்லாம் நடவடிக்கை எடுப்பாரா என்பது சந்தேகமே” என்று சொல்லி வைத்தார்.

“தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், இந்த நாட்டில் இப்படியான கேவலமான காரியங்களைச் செய்பவர்களைக் கண்டித்து வையுங்கள், எனக்கு இந்த நபர் யார் என்று சொல்லத் தேவையில்லை” என்று இறைஞ்சுகிறேன்.

“ஒகே பார்க்கலாம்” என்று என் நேரம் முடிந்ததாகக் குறிப்பால் உணர்த்துகிறார் அந்தப் பொலிஸ்காரர்.

வீட்டுக்கு வந்து இரு மணி நேரம் கழித்து மீண்டும் அந்த பொலிஸ் நிலையத்துக்கு போனில் அழைக்கிறேன். அதே பொலிஸ்காரர் தான் மறுமுனையில்
“என் புகாரில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா சேர்” என்று வினவுகிறேன்.

“என் மேலதிகாரி சொல்லிவிட்டார் இதுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாதாம்”

“ஏன் என்று அறியலாமா”

“இது மாதிரி ஒரு நாளைக்கு நூறுக்கு மேல் புகார் வருது, இதுக்கெல்லாம் நாங்கள் எங்கள் நேரத்தை செலவிட முடியாது”

“ஆனால் எனக்கு இரண்டாவதாக வந்தது கொலைப் பயமுறுத்தல் ஆயிற்றே”

“இப்படி போனில் பேசுபவன் எல்லாம் கொலை செய்ய மாட்டான்”

“ஒருக்கால் அடுத்த முறை அவன் சொன்னதை செய்து காட்டினால் என்னவாகும்?”

“திரும்பவும் சொல்கிறேன், சொல்பவன் எல்லாம் செய்ய மாட்டான்”

“சேர்! நான் கடந்த 12 வருஷகாலமாக இந்த நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட குடிமகன், என்னைக் காப்பது இந்த நாட்டின் காவலர்கள் உங்கள் வேலை இல்லையா”

“லுக்! என் நேரத்தை விரயமாக்க வேண்டாம், பயமாக இருந்தால் வந்து எங்கள் பொலிஸ் ஸ்ரேசனில் வந்து தங்கு”

“சரி! நான் கொடுத்த புகார் மனுவின் விபர இலக்கத்தை எடுக்கலாமா?”

ஒரு ஐந்து நிமிடம் கழித்து “இதோ எழுதிக் கொள்” என்று அப்போது தான் புகாரைத் தயார் பண்ணியது போலச் சொல்லி முடிக்கிறார்.

எனது ஆற்றாமை ஓயவில்லை. எமது பிரதேசத்தைக் கட்டுப்படுத்தும் காவல்துறை கண்காணிப்பு மேலிடத்துக்கு தொலைபேசுகிறேன். மறுமுனையில் இன்னொரு பொலிஸ்காரர்.
மீண்டும் ஆரம்பத்தில் இருந்து எல்லாம் சொல்லி முடிக்கிறேன். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டு விட்டு அவர் சொல்கிறார் இப்படி,
“உனக்கு முதலில் அந்த பொலிஸ்காரர் சொன்னாரோ அதுதான் எங்கள் பதிலும்”

“உங்கள் மேலதிகாரி யாருடனாவது பேசமுடியுமா சேர்?”

“காத்திரு”

மீண்டும் ஒரு சுழற்சிக்குப் பின் என் தொலைபேசி போய்ச் சேர்ந்த இடம் அந்த ஆரம்பத்தில் புகார் கொடுத்த பொலிஸ்காரருக்கே மாற்றப்படுகிறது. என் குரலைக் கண்டு கொண்ட அவர்
“முதல் என்ன சொன்னேனோ அவ்வளவு தான், இந்தப் புகாருக்கெல்லாம் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு நேரமில்லை”.

மேலே சொன்ன சம்பவம் எல்லாம் இப்போது தாயகத்தில் நடக்கும் நிகழ்வுகளோடு ஒப்பிடும் போது கால் தூசி பெறும். ஆனால் சிறீலங்கா இனவாதம் இப்போது நகர்ந்திருப்பது சிறீலங்காவுக்கு வெளியே என்பது போல இதை விட எத்தனையோ சம்பவங்கள் அரங்கேற ஆரம்பித்து விட்டன. மெல்பனில் கார்ப்பவனியில் போன தமிழர்களை நோக்கி சிங்கள இளைஞர்கள், யுவதிகள் நடத்திய காடைத்தனம், சென்ற வாரம் மெல்பனில் ஒரு இந்தியத் தமிழரை ஈழத்தமிழர் என்று நினைத்து சிங்களவர்கள் தாக்கிய கொடூரம், சிட்னியில் உணர்வெழுச்சி நிகழ்வுக்குப் பயணித்த இளைஞர்களை சிஙகளக் காடையர் தாக்கியது (ஆதாரம்), சிங்களவர் கடைகளை சிங்களவர்களே உடைத்து விட்டு பழியை ஏதிலித் தமிழன் மீது போடுவது என்று இப்போது இந்த எல்லை தாண்டிய இனவாதம் கனகச்சிதமாக ஆரம்பித்திருக்கிறது.

ஈழத்தமிழன் அவுஸ்திரேலியப் பிரஜை என்றால் என்ன, அமெரிக்க பிரஜை என்றால் என்ன நீ பூனையை விடக் கேவலம், அதுக்கும் ஒரு சம்பவம் இருக்கே.

2005 ஆம் ஆண்டில் ஒரு நாள், நான் இருக்கும் நகரத்துக்கு அடுத்த நகரமான செவன் ஹில்சில் நான்கு விடலைப் பையன்கள் சேர்ந்து ஒரு பூனையைத் துன்புறுத்தியதற்காக $22,000 அவுஸ்திரேலிய வெள்ளிகள் தண்டப்பணமும், 2 வருஷ சிறைத் தண்டனையும் கிடைத்தது. ஆதாரம்

ஆண்டவா! அடுத்த பிறவியிலாவது என்னைப் பூனையாகப் பிறக்க வை.

000000000000000000000000000000000000000000000000000000000000000000

1995 ஆம் ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒரு நாள். இருபதுகளின் ஆரம்பத்தில் என் வயது அப்போது. அவுஸ்திரேலியா வந்து ஒரு சில வாரங்கள் கடந்திருக்கும். அதுவரை அண்ணன் அனுப்பிய பணத்தில் படிக்க ஆரம்பித்துப் பின் குற்றவுணர்வு உறைக்க ஆரம்பித்த நாள் அது. அப்போது இங்கே வேலை தேடித் தர அரசாங்கத்தின் முகவர் நிறுவனமாக C.E.S என்ற அமைப்பே இருந்தது. அந்த அமைப்புக்குப் போய் வேலைவாய்ப்புப் பட்டியலைப் பார்க்கின்றேன். எல்லா வேலைகளுக்குமே “experience required” என்று அடியில் ஆப்பு வைக்கப்பட்டிருந்தது. தேடிச் சலித்த என் கண்களுக்கு ஒரு வேலை விபரம் கண்களைக் குளிர வைத்தது.
“ஒரு சிறீலங்கன் மளிகைக் கடைக்கு ஆள் தேவை, சிறீலங்கனாக இருப்பது விரும்பத்தக்கது”
அவ்வளவு தான் பக்கென்று அந்தக் கடை குறித்த விபரங்களை வேலைவாய்ப்பு அலுவலகரிடம் பெற்றுக் கொண்டு அடுத்த நாள் அந்தக் கடைக்குப் போகின்றேன்.

நான் வருவது குறித்து ஏற்கனவே அந்த வேலைவாய்ப்புப் பணியகம் அந்தக் கடைக்காரரிடம் சொல்லி வைத்தது போல. கல்லாப் பெட்டிக்குப் பக்கத்தில் நின்ற அந்த நபர் தான் கடை முதலாளி என்று எழுதி ஒட்டாமலே தெரிந்தது. கையோடு கொண்டு போன என் விபரத்தைக் கொடுக்கிறேன்.

என் விபரங்கள் எல்லாவற்றையும் முழுசாகப் பார்த்து முடித்து விட்டு
“அதோ அங்கே நிற்கிறாரே அவர் தான் முதலாளி என்று ஆங்கிலத்தில் பேசி கடையின் உட்புறம் மூட்டைகளை அடுக்கிக் கொண்டு நின்ற ஒரு வயதான பெனியன் மட்டும் அணிந்த கிழவரைக் காட்டுகிறார்.
நான் போய் அவர் முன்னால் நிற்க, அந்தக் கிழவரோ ஏன் இவன் எனக்குப் பக்கத்தில் நிற்கிறான் என்று தெரியாமல் விழிக்க, நான் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கிறேன். அவர் விழுந்து விழுந்து சிரித்து விட்டு குறும்பாக, முன்னே கல்லாப்பெட்டிக்குப் பக்கத்தில் நின்ற அந்த முதலாளியைப் பார்த்து முறுவலிக்கிறார்.

நான் அதை உணர்ந்தது போல அசட்டுச் சிரிப்புடன் மீண்டும் அவரை நோக்கிப் போகின்றேன்.

“நான் சிறீலங்கன் விரும்பத்தக்கது என்று அந்த விளம்பரத்தில் போட்டது சிங்களவராக கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தான்” என்று சொல்லிச் சிரித்து வழியனுப்பாமல் அனுப்புகிறார் அந்தக் சிங்களக் கடைமுதலாளி.

“ஓ சிறீலங்கன் எண்டா சிங்களவன் மட்டுமாம், சரி” மனசுக்குள் சொல்லியவாறே மீண்டும் வேலைவாய்ப்புப் பணியகம் நோக்கி நடையில் பயணிக்கிறேன்.
மேலே இருந்து சூரியன் சிரித்துக் கொண்டிருந்தான்.

(மேலே சொன்ன சம்பவங்கள் யாவும் உண்மையே)

பதிவர்களின் கவனம் செல்ல வேண்டிய இடங்கள்!

கடந்த நான்கு நாட்களும் வலையுலகச் சூழல் தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்தான மரண மாயைக்குள் சிக்கித் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கும் நிலையைப் பார்க்கும் போது இந்த விஷயத்திலும் இலங்கை அரசு வென்றுவிட்டது போல, கடந்த 4 நாட்களில் தலைவர் குறித்தான மாயைச் செய்திகளால், இலங்கை அரசு செய்த, செய்து வரும் பெரும் மனிதப் பேரவலம் மறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் பதிவர் சுந்தரவடிவேல் அவர்கள் கொடுத்திருந்த பதிவு நாம் செய்ய வேண்டிய உடனடிக் களப்பணிகளைக் காட்டுவதாக இருக்கின்றது. இந்தச் செய்தி இன்னும் எட்டாத பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சுந்தரவடிவேல் அவர்களின் அனுமதியோடு அந்தப் பதிவை மீள் இடுகையாகத் தருகின்றேன். கீழே தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னூட்டங்களும் அந்தப் பதிவில் இருந்து.

மூலப்பதிவின் சுட்டி

1. வன்னி அவலங்களை வெளியுலகிற்குச் சொன்ன மூன்று மருத்துவர்களை இலங்கையரசு பிடித்து வைத்துள்ளது. இந்த மூவரும் போரின்போது கொல்லப்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் எண்ணிக்கையைக் குறித்துப் பொய்யான செய்திகளை வெளியிட்டார்கள் என்று கூறி இவர்களைக் கைது செய்து “விசாரித்து” வருகிறது சிறீலங்கா அரசு. எவ்வித வசதிகளும் அற்ற நிலையிலும் இம்மருத்துவர்கள் வன்னியில் நின்று தங்களாலான அளவுக்கு உயிர்களைக் காப்பாற்றியவர்கள். இவர்களைத் தடுத்து வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம். இவர்களை விடுவிக்குமாறு Reporters without Borders கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து மனுக்களை அனுப்பலாம். அல்லது உங்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களை அழைத்துப் பேசலாம். விபரங்கள் தெரிந்தவுடன் பகிர்கிறேன்.

2. பிரபாகரனின் மரணச் செய்தியினைச் சுற்றியே தமிழர்கள் தம் கவனத்தை வைத்திருக்க வேண்டும் என இலங்கையரசும், அதன் தோழமை நாடுகளும் விரும்புகின்றன. இதன் காரணம், போரில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள், போரியல் குற்றங்கள், சிறீலங்கா அரசு இனிமேல் தமிழர்களைக் காட்டி சர்வதேசத்திடம் பிச்சையெடுக்கப் போடவிருக்கும் நாடகங்கள் அனைத்தின் மீதும் மக்களின் கவனம் திரும்பிவிடக் கூடாது என்பதே. இதனைப் பதிவர்கள் உணர்ந்து, மேற்சொன்ன போரியல் குற்றங்கள், சிறீலங்கா அரசுக்கு என்னவிதமான உதவிகளை யார் செய்யப் போகிறார்கள், ஐ.நா அடுத்து என்ன செய்யப் போகிறது, பல்வேறு நாடுகளில் என்னவிதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தே கவனத்தைச் செலுத்த வேண்டும். இதுவே மனிதநேயம் கொண்டவர்கள் செய்ய வேண்டியது. புலியெதிர்ப்பையும், தமிழின எதிர்ப்பையுமே கடமையாகக் கொண்ட சில பழங்கொட்டைப் பதிவர்களும், நீதிமான்களும் பொத்திக் கொண்டுவிட்டனர். அவ்வளவுதான் அவர்களது மனிதவுரிமைப் பற்று! ஒருவேளை மகிந்தவின் லட்டு அவர்கள் வாயிலும் இனித்துக் கிடக்கலாம். கவனத்தைத் திருப்பும் பதிவுகளைப் புறக்கணித்தலே இப்போதைய தேவை.

அந்தப் பதிவில் வந்த தேர்ந்தெடுத்த பின்னூட்டங்கள் சில

Balaji-paari said…

சு.வ.,
நீங்கள் சுட்டி இருப்பது மிகவும் முக்கியமானது.

தலைவரின் இருப்பை எளிதில் மறுதலித்து, அதன் மூலம் இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக கூறப்படுவது, இலங்கை அரசின் திட்டமிட்ட திசை திருப்பல் மட்டுமே. நாம் இந்த நேரத்தில் செய்ய வேண்டியது வன்னியில் நிகழ்ந்த துயரத்தையும், இலங்கை அரசின் போர்க் குற்றங்களையும் மக்களிடத்தில் கொண்டு செல்வதேயாகும்.
இத்தகைய அவலத்தை மேற்குலக நாடுகள் அவதானித்து இருப்பது, ஐரோப்பிய யூனியன் அழைத்துள்ள சர்வ தேச விசாரணை-யில் இருந்து அறிந்து கொள்ள இயலும். மேலும், நார்வே தற்போது உள்ள நிலைமை பற்றி கூறுவதையும் மனதில் கொள்ள வேண்டும். கனடிய வானொலியில், இலங்கை அரசிற்கான பண உதவிகள் தொடர்பான விவாதத்தில் குறிப்பிடப்பட்ட இலங்கைக்கு மூன்றாவது பார்வையாளர்கள் இல்லாமல் பண உதவிகள் செய்யக்கூடாது என்ற வட அமெரிக்கர்களின் கருத்தும் முக்கியமானது. மேலும் கனடா தமிழ் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் திரு. பூபாளபிள்ளை தெரிவித்திருக்கும் கருத்துக்களும் குறிப்பிடத்தக்கது.

Anonymous said…

///போரியல் குற்றங்கள், சிறீலங்கா அரசுக்கு என்னவிதமான உதவிகளை யார் செய்யப் போகிறார்கள், ஐ.நா அடுத்து என்ன செய்யப் போகிறது, பல்வேறு நாடுகளில் என்னவிதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தே கவனத்தைச் செலுத்த வேண்டும்///

புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் நாடுகளில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை பதிவு செய்யவும், அதைப் பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு செய்யவேண்டியவைகள் குறித்த விவாதங்களை தாங்கள் வாழும் நாட்டில் உள்ள (அதிலும் போர்க்குற்றங்கள் பற்றிய விவகாரங்களில் தேர்ந்த வழக்கறிஞர்கள், ஆய்வாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகம்) ஆய்வாளர்கள், வழக்குரைஞர்களை அழித்து பரவாலான விவாதங்களை ஊடகங்களில் நடத்துவத்ன் மூலம் ஒன்றுபட்டு இயங்க வேண்டும். அது தான் இப்போதைய உடனடித்தேவை.

இந்திய அரசும், ஊடக சதியாளர்களும், வழக்கம் போல புனுகு பூசும் வேலைகளை தொடங்கி, 25 கோடி உதவிப்பணம், இனங்களிடையே ஆன புரிந்துணர்வு, சம உரிமைகளைப் பெற அமைதிவழிப் போராட்டம் என்று இலங்கை அரசைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் இறங்குவார்கள். இன்று வேண்டியது சம உரிமை அல்ல; ஒரு போர்க்குற்றவாளி தனது பதிப்புக்குள்ளானவருக்கு அதைத் தரமுடியாது.

மாறாக இவை இரண்டுமே

1. காயப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி, தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்ட மக்களை பாதுகாத்து, விரைவில் அவர்களை அவர்களது பாரம்பரிய பிரதேசங்களுக்கு அனுப்ப முயற்சி

2. இலங்கையின் போர்க்குற்றங்களை நேர்மையாக விசாரித்து தண்டனை மற்றும் அதில் பங்கு பெற்ற மற்ற நாடுகளை அம்பலப்படுத்துதல்.

இதில் முன்னதை அரசு முன்னெடுக்கவிடாமல் மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம் வழியாக அய்.நா மற்றும் அரசு சாரா அமைப்புகள் வழியாக உதவி செய்ய வேண்டி போராட்டங்களை நடத்தி உதவிப்பொர்ட்களை அனுப்புவதை புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டும்

இரண்டாவது வேலையான போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான போராட்டங்களை வலுப்படுத்தி அதன் அடிப்படையி குற்றவாளியான இலங்கை அரசுக்கும் அதன் தோழமை நாடுகளுக்கும் தமிழர்களை புணரமைப்பு செய்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்ற அடிப்படையின் கீழ் அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது; அரசு சாரா, அய்ரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளை இப்பணிக்கு ஈடுபடுத்துவது.

இப்பணிகளே இப்போது தலையானவை.

-தங்கமணி

சயந்தன் said…

கிட்டத்தட்ட 10 000 க்கும் மேற்பட்ட சடலங்களை இராணுவம் அப்புறப்படுத்தி வருகிறது. ராணுவ கமராக்கள் தங்களது இலக்குகளை மட்டும் அங்கிங்கென அசையாமல் படம்பிடிக்கிறது.

பொதுமக்கள்.. போராளிகளின்தாய்தந்தையர் மனைவியர் பிள்ளைகள்.. ஊனமுற்ற ஆயிரக்கணக்கான போராளிகள் என அனைவரும் எரித்துக் கொல்லப்பட்டனர்.

ஐநா செயற்கைகோள் மூலமாக தற்போதைய நிகழ்வுகளையும் படமெடுக்கவேண்டும். ஆனால் அது எடுத்த படங்களையே ஒளித்து வைக்கிறது.

உண்மையில் விமானமொன்றின் ஊடாக அவை பதிவு செய்யப்பட வேண்டியவை. யார்கேட்பார் யார் செய்வார்..?

களப்பிரர் said…

கிட்ட தட்ட இதே தோரணையில் நான் இப்பொழுது தான் எழுதினேன். முதலிலே பார்த்திருந்தால் இங்கு பின்னூட்டமாகவே போட்டிருக்கலாம்

http://tamilkuruthi.blogspot.com/2009/05/blog-post.html

தமிழ் சசி / Tamil SASI said…

சுந்தர்,

தற்போதைய உடனடி தேவை இது தான்.

என்னுடைய பதிவு…

வதந்திகளை புறக்கணித்து, மக்களின் பிரச்சனைகளை பேசுவோம்
http://blog.tamilsasi.com/2009/05/ignore-rumours-about-prabhakaran.html

பதி said…

பிரச்சனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் ஒவ்வொரு சிறு முயற்ச்சியும் வரவேற்கப்பட வேண்டியது. முக்கியமானது….

இங்கு பலரும் குறிப்பிட்டுள்ளதைப் போல ஊடக வதந்திப் போரில் சிக்காமல் இருப்பதே முதல் தேவையுமாகும்..

நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் உடனடியாகச் செய்ய முயல்வோம். அது சம்பந்தமான முன்னெடுப்புகள் ஏதும் நடந்தால் உடனடியாக மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்….

சுந்தரவடிவேல் said…

Please sign the following petition regarding the Doctors release!
http://www.pearlaction.org/action-alerts/2009/aa81.php

என் கம்போடியப் பயண நூல் பிறந்த கதை


நட்பு, பகைமை, குரோதம், நம்பிக்கைத் துரோகம், ஆட்சிக் கவிழ்ப்பு, நில ஆக்கிரமிப்பு, அரச பயங்கரவாதம். ஒரு யுத்த பூமியில் இவையெல்லாம் சர்வ சாதாரணம். உலகமெங்குமான பொது வழமை.

கம்போடியா மட்டும் விலகியோட முடியுமா? அங்கும் அதுதான் நடந்தது. இரத்தம் தோய்ந்த இம்மண்ணில் எழுதியதற்கான வினையை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கம்போடிய நாணத்தின் பெறுமதி அதள பாதாளத்தில் விழுந்து விட்டது. வாழ்க்கைத் தர படு மோசமாகி விட்டது. கை கால் முடமான சந்ததியும், அப்பா, அம்மா, உற்றார் உறவினர்கள் யாரென்றே தெரியாத பரம்பரையுமாக மக்கள் வாழ்வினை இழந்திருக்கிறார்கள். போரின் வடுக்கள் இன்னமும் முற்றாக அழிந்து விடவில்லை.

பதவி வெறியும், என்னை விட்டால் யாரிங்கே உண்டு என்று எகத்தாளம் இட்ட ஆட்சியாளரும் அவர் தம் அடிப்பொடிகளும் இன்று காணாமல் போனோர் பட்டியலிலும், சிறைக்கதவுகளின் பின்னாலும் இருக்கின்றனர்.

இப்போது தான் அமைதிச் சுவாசத்தை ஏற்றி கொண்டிருக்கிறது அம்மண்.

கம்போடியாவின் யுத்த வரலாறு நீண்டது. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் அது ஆரம்பிக்கிறது. அதுவரையான கம்போடிய மன்னராட்சி இரண்டாம் ஜெயவர்மனின் கைமர் பேரரசுக் காலத்துக்கு மாறியது. அது தான் புள்ளி. அத்தோடு கம்போடியாவின் ஆளுகை வந்தேறி வென்றார்களிடம் கைமாறியது.

கி.பி 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் தாய்லாந்து மன்னர்கள் அவ்வப்போது படையெடுத்து மதம் பரப்பினார்கள். தேரவாத பெளத்தம் அப்போது தான் ஆரம்பிக்கிறது.

கம்போடியா ஒரு மத்தளம் போல. இரண்டு பக்கமும் அடிவாங்கிக் கொண்டிருந்தது. இந்தப் பக்கம் வியட்னாம். அப்பால் தாய்லாந்து. இரண்டு பேருமே மாறி மாறி படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். கி.பி 19 ஆம் நூற்றாண்டு வரையான இந்தக் காலம் கம்போடியாவின் கறை படிந்த காலம்.

1890 இல் கம்போடியா ஒரு பெரும் போரைச் சந்தித்தது. பெரும் போர். பேரவலத்தைத் தந்த போர். அதுவரை வீரத்தில் வீறு நடை போட்ட கம்போடியாவின் கால்களை முடமாக்கிப் போட்ட போர். கம்போடியாவின் வீரம் இந்தப் போரின் பின் காணாமல் போனது. அரசியல் ஸ்திரம் ஆட்டம் காணத் தொடங்கியது.

பக்கத்து நாடுகள் விட்டுவைப்பார்களா? ஆளுக்காள் நாட்டைக் கூறு போட முனைந்தனர். ஏதாவது செய்தாக வேண்டும். அப்போதைய கம்போடிய மன்னன் Norodom க்கு வேறு வழி தெரியவில்லை. பக்கத்து நாட்டுக்காரர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எங்கோ இருந்த பிரான்ஸ் நாட்டின் காலில் விழுந்தான். காவலன் என்ற பெயரில் பிரான்ஸ் உள் நுழைந்தது.

சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையென்பார்களே. அதுதான் கம்போடியாவில் நடந்தது. பிரான்ஸ் தொடர்ந்து தொண்ணூறு ஆண்டுகள் கம்போடியாவில் ஆதிக்கம் செலுத்தியது. இல்லையில்லை, கபளீகரம் செய்தது.

கோயில்களில் புதைத்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் குவியல் குவியலாக திருடப் பட்டன. அற்புதமான சிற்ப சிலைகள் உடைத்தும் பெயர்த்தும் எடுக்கப் பட்டன.

1953 ஆம் ஆண்டு பிரான்ஸ் விடை பெற்றது. கொள்ளையடிப்பதற்கு ஏதும் மீதமிருக்கவில்லைப் போலும். அப்போதைய கம்போடிய மன்னன் Sihanouk , People’s Socialist Community (Sangkum Reastr Niyum) என்ற அரசியல் கட்சியையும் ஸ்தாபித்தான். 1955 இல் குடியாட்சி மலர்ந்தது. Sihanouk இவனே நாட்டின் தலைவனும் ஆனான். ஆனால் கோர யுத்தம் கம்போடியாவைத் தன் பிடியில் இருந்து விட்டு விடவில்லை.

1960 களில் நிலவிய வியட்னாமிய யுத்தத்தின் போது கம்போடியா நடுநிலைமையைத் தான் முதலில் பேணியது. சோவியத் நாட்டிற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ சார்பற்ற நிலை அது. இடையில் என்ன நடந்ததோ. அமெரிக்காவுடனான இராஜ தந்திர உறவினை வெட்டி விட்டு வியட்னாமிய கம்யூனிஸ்ட் போராளிகளுக்குத் தன் ஆதரவுக் கரத்தை நீட்டினார் Sihanouk.

வியட்னாமியப் போராளிகளின் பாசறைகள் கம்போடியாவெங்கும் பரவின. ஆனால் துரதிஸ்டம் மீளவும் அமெரிக்காவோடு கை கோர்த்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தை வழங்கியது. கம்போடிய பொருளாதாரம் மீள முடியாமல் வீழத் தொடங்கியது. வியட்னாம் போராளிகளா? சொந்த நாட்டின் பொருளாதாரமா? வேறு வழியில்லை. அமெரிக்காவுடன் கை குலுக்கியே ஆக வேண்டும். பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அப்போதைக்கு அது ஒன்றே தெரிவு.

அமெரிக்காவோடு Sihanouk கூட்டுச் சேர்ந்தார். அமெரிக்காவின் கடைக் கண் பார்வை இப்போது உடனடித் தேவை. என்ன செய்யலாம். இருக்கவே இருக்கிறது கம்போடிய மண்ணில் வியட்னாம் போராளிகளின் பாசறைகள். காட்டிக் கொடுத்து விடலாம்.
“கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி” நூலிலிருந்து

0000000000000000000000000000000000000000000000000000000

“எந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு” என்று என் அம்மா ஊரில் இருக்கும் போது என்னைப் பார்த்துச் சொன்னது போல, ஒரு இடத்தில பொறுமையாக இருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. என்னைப்பொறுத்தவரை படிப்போ, வேலையோ, வாசிப்போ, இசையோ, அல்லது நான் படைக்கும் வானொலி நிகழ்ச்சிகளோ, அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும்.அதுபோலவே அடிக்கடி புதுசு புதுசாக இடங்களைப் பார்ப்பதும், பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது அந்த இடங்களைப் பற்றிய பதிவுகளை என் நாட்குறிப்பில் எழுதுவது கூட எனக்கு ஆனந்தம் தரும் விடயங்கள்.

பயணங்களிடையே காணும் வரலாற்றின் எச்சங்கள், விதவிதமான மனிதப் பண்புகள், வாழ்வியல் முறைகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அவதானித்து நெஞ்சில் இருத்தும் பண்பை இன்னும் அதிகம் எனக்கு விளைவித்தது பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் “தேசாந்தரி” என்னும் பயண அனுபவப் படைப்பிலக்கியம்.

கடந்த வருஷம் பத்து நாள் குறுகிய கால விடுமுறையாக ஈஸ்டரை ஒட்டி எனக்கு வாய்த்தது. வெளிநாட்டுப்பயணம் கிளம்பி இரண்டுவருட இடைவெளியாகி விட்டது. வெளிநாடு எங்காவது கிளம்பலாம் என்றால் எனக்கு முதலில் தோன்றியது கேரளாவில் கடந்தமுறை விடுபட்ட பகுதிகள் தான். ஆனால் இருக்கும் பத்து நாளுக்கு இதுவெல்லாம் தேறாதென்று திடீரென்று முடிவு கட்டி கம்போடியாவை மையப்படுத்தி என் விடுமுறையை மாற்றிக் கொண்டேன். ஏற்கனவே கம்போடியாவுக்குச் சென்று திரும்பியவர்களிடமும் சில தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். கம்போடியா என்றாலே அங்குள்ள பிரமாண்டமான “அங்கோர் வாட்” ஆலயமும் கொடுங்கோலன் பொல் பொட்டின் ஆட்சியுமே தெரிந்து வைத்திருந்த எனக்கு, இந்தப் பயணத்தின் முன்னேற்பாடுகளிலும், பின்னர் கம்போடியாவில் வாய்த்த சிறப்பான பயண அனுபவமும் எனக்கு இந்த நாட்டின் முழுமையான பரிமாணத்தை அந்தப் பத்து நாளும் காட்டி விட்டது. இந்தச் சுவை மிகு அனுபவத்தை, ஒரு காலத்தில் ஆண்டு செழித்த இந்திய வரலாற்றுத் தொன்மங்களைப் பலரும் அறிய வேண்டும், கம்போடிய மண் சென்று இவற்றை நேரே காணும் பாக்கியத்தை ஒரு பயண இலக்கியம் மூலம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தோன்றியதை இப்போது பிரசவமாகியிருக்கும் “கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி” என்ற இந்த நூல்.

எனக்கு நடை பழக்கி எங்களூர் குச்சொழுங்கை எல்லாம் கூட்டிக் கொண்டு உலாத்தி இப்போது மேலுலகில் களைப்பாறும் என் அம்மம்மாவுக்கு இந்த நூலைக் காணிக்கையாக்கியிருக்கின்றேன்.

என் வாழ்வில் மறக்கமுடியாத மனிதரிகளில் ஒருவரான உடன்பிறவாச் சகோதரர், மூத்த ஊடகவியலாளர் எஸ்.எழில்வேந்தன் அண்ணா தந்த நூல் நயவுரை குறித்தும் இங்கே நிச்சயம் சொல்லி வைக்க வேண்டும். ஒரு வாரகாலத்தில் முழுமையான எழுத்துப் பிரதியைக் கொடுத்து எனக்கு உங்கள் நயவுரை வேண்டும் என்று கேட்டபோது “ஓம்/இல்லை சொல்ல மாட்டேன், காரணம் வேலைப்பழு தம்பி” என்று சொன்ன எழில் அண்ணா மூன்றே நாட்களில் கச்சிதமாகத் தன் மனப்பதிவை எழுதி அனுப்பி விட்டார். வெறுமனே நூலில் பொதிந்திருக்கும் விடயதானங்கள் மட்டுமன்றி என்னைச் சந்தித்த நாள் முதல் அவர் மனப்பதிவில் இருந்தவற்றை எழுத்தில் வடித்த போது உண்மையில் எனக்கு கண் கலங்கியது.

எழில் அண்ணா அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 1997 இல் வந்த போது அப்போது மெல்பனில் பல்கலைக்கழகப் படிப்பில் இருந்த என் முகம் காண நட்பில் என்னைச் சந்தித்த அந்த நிகழ்வை இப்படிச் சொல்கின்றார்.
அப்போது முகம் தெரியாதிருந்த அந்த இளைஞர், நான் சிட்னியிலிருந்து நிகழ்ச்சி படைக்கும் வேளைகளில் மெல்பேணிலிருந்து என்னைத் தொடர்புகொள்வார். அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துவிட்டாரென்றால் நிகழ்ச்சியின் தரம் உச்சத்தைத் தொடும் அளவிற்கு, நிகழ்ச்சியின் போக்கையே மாற்றிவிடுவார். வெறும் பொழுதுபோக்கிற்காக நடத்தும் அந்த நிகழ்ச்சிகள் இலக்கியத்தரமிக்கதாகவும்,வாழ்வியல்,கலாசார விழுமியம் சார்ந்ததாகவும் புத்துருக்கொண்டு, வானொலியில் பேசாதவர்களையே பேச அழைத்துவந்துவிடும். அதைத்தவிர இடையிடையே அழைத்து “அண்ணா.இப்போ வந்த நேயர் இன்றைய நிகழ்ச்சிக்கு வந்த 100வது நேயர்” ,“இது 125வது நேயர்’ என்று புள்ளிவிபரமும் தந்துவிடுவார்.

கம்போடியா அல்லது கம்பூச்சியா என்ற பெயரோடு எங்களுக்கு மிகப் பரீட்சயமாக இருந்தவை, ‘கெமரூச்’ தீவிரவாத இயக்கமும், பெல் பொட்டும், அவன் செய்த படுகொலைகளும் , அவன் அடுக்கிவிட்டுப்போன மனித எலும்புகளும் கபாலங்களுந்தான். குறிப்பாக செய்தி வாசிப்பாளனாக இருந்த எமக்கு கெமரூச் என்ற பெயர் எப்படி உச்சரிக்கப்படவேண்டுமெனச் சொல்லித்தந்தது நினைவுண்டு.

ஆனால் தம்பி கானா பிரபா ஒரு புதிய கம்போடியாவை எங்களுக்குக் காட்டியிருக்கிறார். அதுவும் கம்போடியாவின், தென்னிந்தியத்தொடர்புகள், மதங்கள் மற்றும் ஆட்சி அரசுகள் எனத் தான் பார்த்து ரசித்தவற்றை மட்டும் அப்படியே எழுதாமல், பார்த்தவற்றைக் கொண்டு பார்க்க முடியாமற்போனவற்றை நுட்பமாக ஆய்ந்து அறிந்து எழுதியிருக்கிறார். பல சுவையான தகவல்கள். சில தகவல்கள் எமது இலங்கைக்கேயுரிய குணங்குறிகளுடன் காணப்படுகின்றன.! காட்சிகளை எமது கற்பனைக்கு மட்டும் விட்டுவிடாமல் அழகிய வர்ணப்படங்களுடன் அவற்றைத் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிரபாவின் எழுத்துகளில் ஒரு எள்ளல் சுவையிருக்கும். அதையும் ஆங்காங்கே தூவிவிட்டிருக்கிறார். “நீயும் போய்ப் பார் இந்த இடங்களை” எனச் சொல்லாமல் சொல்லும் வர்ணனைகள். குறிப்பாக, சிதைந்து போயிருக்கும் ஆலயங்கள் குறிப்பாக சைவ ,வைஷ்ணவ ஆலயங்கள் தொடர்பான எழுத்துகள் நெருடுகின்றன. உலகெங்கும், பெளத்த சிலைகள் என்பவை, புதிதாக முளைப்பதற்கென்றே உருவாகின்றனவோ என என்ணத் தோன்றுகிறது.

இப்படியே தொடர்கின்றது எழில் அண்ணாவின் மனப்பதிவு.

கம்போடிய நூல் வரவேண்டும், அதுவும் வடலி வெளியீடாக இருக்க வேண்டும் என்ற முனைப்போடு நின்றவர் நண்பர் சயந்தன். இணையத்தில் பதிவு போடுவது என்பது மேடை நாடகம் நடத்துவது மாதிரி, அவ்வப்போது குறை நிறைகளைப் பகிரும் வாசகர்களின் கருத்துக்களால் அவற்றை அடிக்கடி செம்மையாக்கும் வசதி உண்டு. ஆனால் இதை நூலில் கொண்டு வருவது என்பது திரைப்படம் எடுப்பது மாதிரி. பலர் கைக்கும் போய்ச் சேரும் விஷயம். கூடவே வரலாற்றுப் பகிர்வுகளைத் தரும் போது உச்சபச்ச அவதானிப்பும், கவனமும், முறையான உசாத்துணையும் இருக்கவேண்டும். இந்த முயற்சியில் என் கம்போடியப் பயணப் பதிவுகளை கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு மேல் நேரம் எடுத்துப் பதிவாக்கினேன். அங்கிருந்து ஆரம்பிக்கின்றது சயந்தனின் பணி.

ஒரு நல்ல நூல் வருவதற்கு முறையான பதிப்பாசிரியர் பணி இன்றியமையாதது. பயண நூலில் சுவாரஸ்யம் குன்றும் இடங்களில் இன்னொரு அத்தியாயத்தின் இன்னொரு முகத்தைக் காட்டுவது, ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கச்சிதமான தலைப்பு வைப்பது, zip file ஆக நான் அனுப்பிய 2000 இற்கும் மேற்பட்ட படங்களை அந்தந்த இடத்தில் வருமாறு பார்த்துக் கொள்வது, எந்தப் படத்தைக் கலரில் இட்டால் சிறப்பாக இருக்கும் என்று தீர்மானிப்பது என்று சயந்தனின் உழைப்பு இந்த நூலில் விரவியிருக்கின்றது. அத்தோடு நூலின் அட்டையை ஓவ்வொன்றாக அனுப்பிக் காட்ட நானும் புறங்கையால் ஒதுக்கித் தள்ள என்று கடைசியில் 12 வது அட்டையில் தான் ஒரு முடிவுக்கு வந்தது எங்கள் அட்டை அலங்கார வேலை 🙂

சயந்தனின் பணி அகிலனுக்கு மாறியது, குறித்த நேரத்தில் அச்சுப் பணிக்கு நூலைத் தயார்படுத்தி அனுப்பி வைப்பதில் இருந்து முறையாக அவற்றை விநியோக வழங்கலை ஏற்படுத்துவது வரை அகிலனின் பங்கு இருந்தது. இவற்றினிடையே அகிலன் இன்னொரு நூலுக்கு பதிப்பாசிரியராக இருக்க வேண்டிய பொறுப்பும் வேறு.

சயந்தன், அகிலன் ஆகிய இருவரும் வடலி என்ற பதிப்பகத்தை எவ்வளவு நேசிக்கின்றார்கள் என்பதற்கு மேலே நான் சொன்னது சின்ன சாம்பிள் மட்டுமே. வடலியின் பயணம் சீரானதும் , நெடுந்தூரமும் இருக்கும், இருக்க வேண்டும் என்று இருவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த வேளை சொல்லிக் கொள்கின்றேன்.

இணையத்தில் பதிவாக வந்தபோதும், நூலாக வரப்போவது தெரிந்தும் ஆனந்தத்தோடு வாழ்த்துக்களைப் பரிமாறிய அன்பு உள்ளங்கள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்தக் கம்போடிய நூல் வெளிவருவது வரை கிடைத்த அனுபவங்கள் பல. ஆனால் இந்த நூல் இவையெல்லாம் கடந்து கைக்குக் கிடைத்த போது வரும் ஆனந்தம் இருக்கிறதே அது முதல் குழந்தை பெறும் சுகத்துக்கு ஈடானது.

கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி இணையத்தில் பெற