ஈழத்தமிழர் எம் நெஞ்சில் உறங்கும் எம்.ஜி.ஆர்

1987 ஆண்டு அது. அண்ணா தொழிலகம் என்ற உள்ளூர் உற்பத்தி நிறுவனத்தின் பற்பொடி தயாரிக்கும் களஞ்சியத்தின் தூசு பரவிய அறைக்குள் இருநூறு பேருக்கு மேல் அடைந்து கிடைக்கிறோம். அதுதான் எமக்கு அப்போது வாய்த்த தற்காலிக அகதி முகாம். பலர் கோயில்களுக்குச் சென்று அடைக்கலமாகி விட்டாலும், இந்த அண்ணா தொழிலகத்தின் நான்கு அடுக்கு மாடிக்கட்டடத்தின் கீழ் அறையில் ஒளிந்திருந்த எமக்கு இருந்த ஒரே அற்ப நம்பிக்கை தூரத்தில் இருந்து வரும் எம பாணம் எம்மைத் தாக்காது என்பது தான்.

தூரத்தில் இருந்து பாய்ந்து வரும் ஷெல் கணைகள் எங்கோ ஒரு மூலையில் குத்தி வெடிக்கும் ஓசை தொடந்து ஒலிக்கிறது. மாரிகாலம் தொடக்கி வைத்த பெருமழைச் சத்ததுக்கு மேலாக ஷெல் மழை ஓசை எல்லாப் பக்கமும் கேட்கிறது. அது வேறென்றுமில்லை காங்கேசன் துறை வீதிப்பக்கமாக நகர்ந்து வரும் இந்திய அமைதிப்படையினரின் முன்னெடுப்பின் கட்டியம் தான். அவர்கள் காங்கேசன் துறையில் இருந்து ஒரு அணியாகவும், பலாலிப்பக்கம் இருந்து இன்னொரு அணியாகவும் பிரிந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதல் தேவை முன்னே எதிர்ப்படும் எல்லாம் நாசமாகிப் போக வேண்டும். அதற்கு மேலால் தான் செயின் புளாக்குகள் எனப்படும் சுடுகலன்கள் பொருத்திய இராணுவ வண்டிகள் பாய்ந்து வரும். எல்லாப் பக்கமும் தன் கழுத்தைத் திருப்பி அந்த செயின் புளாக்குள் எறிகணைகளை ஏவிக் கொண்டே இன்னும் முன்னே முன்னே நகர்கின்றன.
அந்தப் படையணிக்கும் சரி, பாய்ந்து வரும் ஏவுகணைகளுக்கும் சரி கிளியர் ஆக வேண்டிய முன்னால் எதிர்ப்படும் கிராமங்கள் எல்லாமே புலிகள் தான். அதுக்கு ஆறு மாசக் குழந்தையும் சரி அறுபது வயது கிழவனும் சரி எல்லாம் ஒன்று தான்.

“என்ரை பிள்ளையார்க் கிழவா! என்னைக் காப்பாற்று”, பக்கத்து வீட்டுக்கார அன்ரி பெரும் குரலெடுத்து அழுகிறா. எனக்கு இரண்டு வயசு மூத்த பாலகுமார் முன்னால் மாட்டியிருக்கும் அம்மனின் படத்தையும், சாயிபாபா படத்தையும் மாறி மாறி நடுங்கிக் கொண்டே தொட்டுத் தொட்டு “தாயே….தாயே” என்று புலம்புகிறான்.

எல்லாரையும் பார்க்கையில் எனக்கு பயம் இன்னும் இரண்டு மடங்கு, மூன்று மடங்காக எகிறுகிறது. அம்மாவின் நைலெக்ஸ் சீலையில் என்னுடைய கண்ணீர்த் துளிகள் தொப்பு தொப்பாக விழ அவரின் கையைப் பிடித்துக் கொள்கிறேன் பயத்தோடு. அம்மாவின் வாயில் எல்லாத் தேவாரங்களும் ஒழுங்கில்லாமல் அவசரகதியில் புலம்பலாக வருகின்றன.

ஒன்று இரண்டாக ஆரம்பித்த அழுகுரல்கள் இப்போது ஒட்டுமொத்தமாக அந்தப் பற்பொடி அறையையே ஆக்கிரமிக்கிறது. ஏனென்றால், கிட்ட கிட்ட ஏவுகணை ஒலி கேட்குதே.

தொப்புள் கொடி உறவாக, கண்ணுக்குத் தெரியாத உறவுப்பாலத்தைப் போட்டு வைத்து ஒரு தாய் மக்கள் போல் பழகி அது நாள் வரை இருந்த இந்திய -ஈழ உறவை சிங்கள அரசியல் சாணக்கியம் விழுங்கி ஏப்பம் விட்டதன் அறுவடையின் பலனை அனுபவித்துக் கொண்டிருந்தோம். ஒபரேஷன் பூமாலை மூலம் சாப்பாட்டுப் பொதி போட்டு சில மாதங்களில் வாய்க்கரிசியும் அவர்களாலேயே போடப்படுகிறது.

மெல்ல மெல்ல அந்த ஏவுகணை மழை ஓய ஆரம்பிக்க, இருட்டுக் கட்டுகிறது வானம். அந்த இடைவெளியில் நாங்கள் இருந்த அகதி முகாமின் முற்றத்துக்குப் போய் இரவுக்குத் தேவையான கஞ்சியைத் தயார்படுத்த ஒரு கூட்டம் தயாராகிறது. இன்னொரு கூட்டம் றேடியோவில் பற்றறி போட்டு “ஆகாசவாணி” கேட்கத் தயாராகிறது. வானொலியைச் சுற்றி நின்ற பெரியவர்கள் எல்லோரதும் அப்போதைய ஒரே நம்பிக்கை
“எம்.ஜி.ஆர் விடமாட்டார், ஏதாவது செய்வார்”.

00000000000000000000000000000000000000000000000000000000
ஈழ விடுதலைப் போராட்டத்தின் தார்ப்பரியத்தை உணர்ந்து அதற்கு ஆதரவளித்த நாள் முதல் தான் இறக்கும் வரை இதய சுத்தியோடு செயற்பட்ட ஒரே தமிழினத் தலைவர் எம்.ஜி.ஆர் தான் என்பதை 22 வருஷங்கள் கழித்தும் இன்றும் நிரூபிக்கக் கூடியதாக இருக்கிறது இன்றைய அரசியல் களமும், தமிழீனத் தலைவர்கள் சொல்லும் காலத்துக்குக் காலம் உதிக்கும் வேதாந்தங்களும்.

தமிழக டி.ஜி.பி ஆக இருந்த கே.மோகன்தாஸ் எழுதிய “எம்.ஜி.ஆர் நிஜமும் நிழலும்” நூலை வெகு காலம் முன்னர் படித்திருந்தேன். அதில் போலீஸ்துறையில் தான் பணியாற்றிய காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை வரலாற்றுப் பதிவாக்கியிருந்தார். குறிப்பாக எண்பதுகளில் தமிழகத்தில் நிலை கொண்டிருந்த போராளி இயக்கங்களின் நடவடிக்கைகளும், அதனை எம்.ஜி.ஆர் அரசு நோக்கிய விதத்தையும் பல பக்கங்களில் சொல்லிக் கொண்டே போகிறார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தேசியத்தலைவர் பிரபாகரன் மீது எம்.ஜி.ஆர் கொண்ட நம்பிக்கை என்பனவெல்லாம் குறித்த சம்பவங்களோடு விரிகின்றன.
அது ஆங்கிலத்திலும் MGR, the man and the myth ஆக வந்திருந்தது.

0000000000000000000000000000000000000000000000000000
ஈழத்தில் எழுச்சிப் பாடல்கள் என்ற வடிவம் முளை விடுவதற்கு முன்னும் சரி, பின்னும் சரி எம்.ஜி.ஆரின் “தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை” போன்ற தத்துவப்பாடல்கள் போருக்கு அழைக்கும் பரணிப் பாடல்களாக அமைந்திருக்கின்றன.
வடமாகாணத்தின் மினிபஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவராக இருந்த பொன்.மதிமுகராசா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கழகத்தை ஆரம்பித்து அந்தக் கழகத்தின் 1991 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நினைவு நாளினை எங்கள் இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடத்திய அன்று தமிழீழ விடுதலைப் புலிகளில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தினை அழைத்துச் சிறப்புரை ஆற்றச் செய்திருந்தார். அப்போது கூட்டத்தோடு கூட்டமாக இருந்து நிகழ்வைப் பார்த்த எமக்கு, எம்.ஜி.ஆர் தலைவர் பிரபாகரனோடு நட்புப் பாராட்டிய காலங்கள், ஆரம்ப கால உதவிகளைச் சொல்லிக் கொண்டு போக அப்போது எமக்கெல்லாம் விழிகளை விரித்த வியப்பு வந்தது.

0000000000000000000000000000000000000000000000000
இந்திரா காந்தி இறந்த அந்த நாள் எங்களூரில் அப்பிக் கொண்ட சோகத்தைச் சிறுவனாகப் பார்த்த எனக்கு எம்ஜிஆரின் பிரிவைக் கேட்ட போது துடிதுடித்த எங்களவர் இன்னும் கண்ணுக்குள் நிக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் ஒபரேஷன் பவான் என்ற தொடர் அவலம் நடந்து கொண்டிருந்த காலத்தில் தான் எம்.ஜி.ஆரின் உடல் நலம் குன்றி நிரந்தரமாகப் பிரிந்தது எமது இனத்துக்கு இன்னும் சாபக்கேடு ஓயவில்லை என்று சொல்லாமல் சொல்லியது. இன்றும் எம்ஜிஆரைப் பெரு மதிப்போடு நெஞ்சில் வைத்துப் போற்றக் காரணம், அவர் அரசியலைக் கடந்து இதயசுத்தியோடு எமது போராட்டத்தைப் பார்த்தது மட்டும் தான். அதை இன்றைய அரசியல் விபச்சாரிகளிடம்/சந்தர்ப்பவாதிகளிடம் எதிர்பார்ப்பவன் முட்டாள் என்று சொல்லித் தெரிவதில்லை.

எம்ஜிஆர் என்ற தமிழகத் தலைவனோடு ஈழத்தமிழினத்துக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் தொலைந்து போனாலும் உங்களை மறவோம்.

இன்று எம்ஜிஆரின் 22 ஆவது நினைவு நாள்

வலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்

“திட்டோ பாராட்டோ நான் கவனிக்கப்படுகிறேன்” என்று சொல்லுவார் முதுபெரும் ஈழத்து எழுத்தாளர் டொமினிக் ஜீவா.

என்னைப் பொறுத்தவரை என்னைப் பாதித்த விஷயங்களை, அவை நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி என் மனதில் பட்டதைப் பகிர்ந்து கொள்ளவே நான் ஊடகத்தைப் பயன்படுத்தி வருகின்றேன். இது என் 11 ஆண்டுகால வானொலிப் பணிக்கும் பொருந்தும், இந்த மாதத்தோடு நான்காவது ஆண்டு முடிந்து ஐந்தாவது ஆண்டில் தடம் பதிக்கும் வலைப்பதிவு ஊடகத்துக்கும் இது பொருந்தும். என்னை நான் சமரசம் செய்து கொள்ளாத எந்த விடயத்திலும் என்னை நான் ஆழம் பார்ப்பதும் இல்லை, மற்றவர்களின் மேல் திணிப்பதும் இல்லை. ஆனால் எனக்குத் தோன்றியதை ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொள்வதில் நான் எந்த வித சமரசமும் செய்து கொள்வதேயில்லை.

ஒருமுறை சகவலையுலக நண்பர் கேட்டார், எப்படி உங்களால் இவ்வளவு காலமும் சிக்கலுக்குள் மாட்டுப்படாமல் வலையுலகில் இருக்க முடிகின்றது என்று. உண்மையைச் சொல்லப் போனால், அந்த அரசியல் என்னையும் தாக்கியிருக்கின்றது. ஆனால் என்னை நான் சுலபமாக விடுவித்துக் கொண்டேன், கொள்கிறேன், கொள்வேன்.

வலையுலக மூதாதையர்கள் என்று சொல்லப்படும் ஒரு கூட்டம் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று புதிதாக வலைப்பதிவுக்கு வரும் இளையோரை ராக்கிங் செய்து பார்க்கும் போது வேதனையோடு பார்க்கின்றேன். ஏனென்றால் அதை நானும் அனுபவித்தவன் தானே. சுமார் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் நடிகை ரேவதி அவுஸ்திரேலியா வந்த போது அவரின் வானொலிப் பேட்டி நடக்கிறது. பேட்டியில் நேயர் ஒருவர் வந்து “ஈழப்போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு என்ன?” என்று கேட்கிறார். அன்று வானொலியைக் கேட்டு விலா நோகச் சிரித்த அதே மனநிலையோடு தான் இன்றும் இருக்கின்றேன். சும்மாவா சொன்னான் பாரதி “வாய்ச் சொல்லில் வீரரடி” என்று.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் சிட்னியின் ஒரு பிசியான உணவகத்தில் Take Away

கியூவில் நானும் நிற்கிறேன். எனக்கு முன்னால் “கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி” நூலைத் தன் முகத்துக்கு நேரே பார்த்த படி ஒருவர்.

சில வாரங்களுக்கு முன் சிட்னி நகரப் புகையிரத நிலையத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப ரயில் பிடிக்கக் காத்திருக்கின்றேன். என்னைக் கடந்து ஒருவர் வேகமாகப் போகிறார், கையில்

“கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி”.

கழிந்த நான்காவது வருஷ வலையுலகப் பங்களிப்பில் என்னாலும் ஏதோ செய்ய முடிந்ததே என்று சொல்லிக் கொள்ளும் விதமாக அமைந்தது என் கம்போடியப் பயணம் குறித்த வடலி வெளியீடான “கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி”. மேலே சொன்ன அந்த இரண்டு சந்தர்ப்பங்களும் உண்மையிலேயே ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் பேரானாந்தத்தைக் கொண்டு வந்தவை. கம்போடியா நூலை இன்னும் விரிவாக கலர் கலராக பெரும் புத்தகமாக ஆங்கிலப் பயண இலக்கியத்துக்கு நிகராகக் கொண்டு வரவேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது. வெளிநாட்டு வாழ்க்கையில் டொலரில் உழைத்து சொகுசுப் பயணம் என்று யாரோ ஒருவர் சொன்ன ஆற்றாமைப் பின்னூட்டம் எல்லாம் வலிக்கவில்லை, நகைப்பாக இருக்கிறது. ஏனென்றால் என் உலாத்தல்கள் அனைத்துமே தேடல்களாக, தேடல்களைப் பதிப்பித்தல்களாக மட்டுமே இருந்தன, இருக்கின்றன, இருக்கப் போகின்றன.

இது நாள் வரை எமது மண்ணின் மைந்தர்களை, அவர்கள் எழுத்தாளர்கள், நாடக, இசைக் கலைஞர்கள் என்று காட்டக் கூடியவர்களைச் சந்தித்த ஒலிப்பகிர்வுகளை நூலாகக் கொண்டு வரவேண்டும், கூடவே அந்த நூலோடு இணைப்பாக குறித்த ஒலி இறுவட்டுக்களை இணைக்க வேண்டும் என்பதே என் அடுத்த முனைப்பு.

என் மண்ணின் பகிர்வுகளுக்கு இன்னொரு களமாக அமைந்தது இந்த ஆண்டு ஆரம்பித்த குழுமப்பதிவு “ஈழத்து முற்றம்”. கூடவே ட்விட்டர் என்ற குறும்பதிவிலும் என் நாளாந்த எண்ணங்களைப் பகிர ஆரம்பித்திருக்கிறேன்.

“எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது” . என்றோ என் புலம்பெயர் வாழ்வின் தனிமையைப் போக்கிய சுரேஷ் சக்ரவர்த்தி என்ற கலைஞனை இந்த ஆண்டு வானொலிப் பேட்டி மூலம் சந்தித்ததும் என் வாழ்வில் மறக்க முடியாததொன்று.

மடத்துவாசல் பிள்ளையாரடி தவிர்த்து,

என் பயணப் பதிவுகளுக்காக உலாத்தல்

ஒலி மற்றும் இசைக்காக றேடியோஸ்பதி

வீடியோ காட்சித் தொகுப்புக்காக வீடியோஸ்பதி

அவுஸ்திரேலிய நடப்புக்கள் குறித்த கூட்டு வலைப்பதிவு

ஈழத்துப் பிரதேச வழக்குகள் சார்ந்த கூட்டு வலைப்பதிவான ஈழத்து முற்றம்

பாடகி பி.சுசீலாவிற்கான கூட்டு வலைப்பதிவான இசையரசி

என்றும் இன்னும் சில வலைப்பதிவுகளைக் கட்டி மேய்க்கின்றேன் 😉எல்லாப் பதிவுகளையும் ஒரே கூரையின் கீழ் திரட்டவெண்ணி “கானா பிரபா பக்கங்கள்” என்ற தனித்தளத்தையும் தொடர்ந்து இயக்கிவருகிறேன். இவையெல்லாவற்றையும் விட எனக்கு இன்னும் பெருமிதத்தைத் தருபவை உங்களைப் போன்ற உறவுகளைச் சம்பாதித்தது. அந்தப் பெருமிதம் தான் என் நாளாந்த வாழ்வின் ஒரு பகுதி சந்தோஷத்தைப் பங்கு போட்டுக் கொள்கின்றது. மறக்க மாட்டேன் உங்களை.

நேசம் கலந்த நட்புடன்

கானா பிரபா

வலைப்பதிவில் ஒரு வருஷம்

2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.

வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று

2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு

வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்

2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

00000000000000000000000000000000000000000000000000

கடந்த 2009 ஆண்டின் என் பதிவுகளின் தொகுப்பு

Madagascar கொணர்ந்த கார்ட்டூன் நினைவுகள்

தொட்டிலில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் போல என் பால்யகாலத்தில் அதிகம் பாதித்த இந்த கார்ட்டூன் படங்கள் இன்று வரை அதே ரசனையுடன் பார்க்க வைக்கின்றன. மனம் ஒடுங்கி கவலை ஆக்கிரமிக்கும் போது இளையராஜாவின் பாட்டுக்கு நிகராக ஒத்தடம் கொடுப்பது கைவசம் இருக்கும் கார்ட்டூன் சரக்குகள் தான்.

ஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக

தமிழ்த் தேசியத்தை நேசித்த டாக்டர் இந்திரகுமார், உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியவர். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற தொடர் கட்டுரையை வீர கேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது.

ஈழப்போராட்டம் பேசும் நூல்கள்

இந்தக் காலகட்டத்தில் தாயக விடுதலைப் பயணத்தின் போது தாம் சந்தித்த நேரடியாகச் சந்தித்த அனுபவங்களையும், கண்ட சாட்சியங்கள் மூலம் பலர் இந்த ஈழப்போராட்டத்தினை மையப்படுத்திய நூல்களை எழுதியிருக்கின்றார்கள். இந்த நூற்பட்டியலைத் திரட்ட வேண்டும் என்று முயற்சி எடுத்து இரண்டு நாள் வேலைத் திட்டத்தில் எடுத்துத் திரட்டியவையே இந்த நூற் பட்டியல்.

மரணத்தின் வாசனை” பேசும் அகிலன்

ஈழத்தின் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் மிகவும் நம்பிக்கை தரக்கூடிய இளையவர் த.அகிலன். அவரது சீரிய எழுத்துக்கள் கவிதைகள், நனவிடை தோய்தல்கள், சிறுகதைகள் போன்ற படைப்பிலக்கியங்களாக அமைந்திருப்பதோடு கட்புல ஊடகம் வழியும் எதிர்காலத்தில் தடம்பதிக்கத் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்.

Hunting the Tigers – சிறீலங்கா நடப்பு நிலவரம்

அவுஸ்திரேலிய தேசிய தொலைக்காட்சி SBS இன் Dateline நிகழ்ச்சியில் அதன் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் Amos Roberts சிறீலங்காவின் நடப்பு நிலவரம் குறித்து நேரடிப் பகிர்வினை Hunting the Tigers என்னும் ஒளியாவணம் மூலம் வழங்கியிருந்தார்.

Death on a Full Moon Day – நாளை வருவான் என் பிள்ளை

வன்னிஹாமி என்று ஒருவரல்ல, பல்லாயிரம் குடும்பங்களின் நிலை இதுதான். இருந்தால் சில ஆயிரங்கள், இறந்தால் ஒரு லட்சம் என்ற விதியோடு வேள்விக்குப் பலிகொடுக்க பலியாடுகள் சிப்பாய்களாக. தம் பிள்ளை மீண்டும் உயிரோடு வருவான் என்ற நினைப்பில் காத்திருக்கின்றார்கள். மிஞ்சுவது வாழைக் குத்திகளை நிரப்பி, சடலம் என்ற போர்வையில் காத்திருக்கும் ஏமாற்றங்கள்.

புகைப்பட அல்பம் கிளப்பிய ஞாபகம்

பிறகு தானே எல்லாம் மாறிப் போச்சு, ஆளாளுக்கு திக்குத் திக்கா தேச எல்லைகளைக் கடந்தவர்கள் ஒரு பக்கம், குண்டுவீச்சில் செத்துப் போனவை ஒருபக்கம், இதுகளை எல்லாம் பார்த்து வருத்தம் வந்து திடீர் திடீரெண்டு மேலை போனவை ஒருபக்கம், இண்டைக்கும் நடைப்பிணமாய் எஞ்சிய வாழ்வை கடனே என்று கழிக்கும் சிலர் ஒருபக்கம் எண்டு அந்தக் கூடு கலைஞ்சு போச்சு.

தமிழகம் – புலம்- சிறீலங்கா: இங்கிருந்து எங்கே?

இன்றைய சூழ்நிலையில் என் மனதுக்குள் உழன்று கொண்டிருக்கும் விஷயங்களைப் பேசா மடந்தையாக வெறுமனே விட்டுவிடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்து சில விஷயங்களைச் சொல்லலாம் என்றிருக்கின்றேன். இந்தக் கருத்துக்கள் என் சுய எண்ணத்தில் தோன்றியவை மட்டுமே ஆய்வு/வாய்வு பகுதியில் அடக்க எனக்கு உடன்பாடில்லை.

என் கம்போடியப் பயண நூல் பிறந்த கதை

நூலில் கொண்டு வருவது என்பது திரைப்படம் எடுப்பது மாதிரி. பலர் கைக்கும் போய்ச் சேரும் விஷயம். கூடவே வரலாற்றுப் பகிர்வுகளைத் தரும் போது உச்சபச்ச அவதானிப்பும், கவனமும், முறையான உசாத்துணையும் இருக்கவேண்டும். இந்த முயற்சியில் என் கம்போடியப் பயணப் பதிவுகளை கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு மேல் நேரம் எடுத்துப் பதிவாக்கினேன்.

அடுத்த பிறவியில் பூனையாய் பிறப்போம்!

“ஓ சிறீலங்கன் எண்டா சிங்களவன் மட்டுமாம், சரி” மனசுக்குள் சொல்லியவாறே மீண்டும் வேலைவாய்ப்புப் பணியகம் நோக்கி நடையில் பயணிக்கிறேன்.

மேலே இருந்து சூரியன் சிரித்துக் கொண்டிருந்தான்.

புலிகளின் குரல் – “வரலாறு திரும்பும்”

இந்த நேரம் முளைத்தது தான் புலிகளின் குரல். ஆரம்பத்தில் இரவு எட்டு மணியில் இருந்து ஒன்பது மணி வரை மட்டுமே தன் இருப்பை வைத்திருந்தது. பிரேமதாசா அரசின் தேனிலவுக்காலத்தில் வாங்கி வைத்து கொஞ்சக் காலம் ஒப்பேற்றிய பற்றறிகளும் தீர்ந்து விட எமக்குக் கிடைத்த அடுத்த மின்சக்தி உபகரணம் கார் பற்றறிகள், அதுவும் எல்லா இடமும் தீர்ந்து விட, அடுத்து வந்தது சைக்கிள் டைனமோ. சைக்கிளைத் தலைகீழாகக் குத்தி விட்டு ஒருவர் சைக்கிள் பெடலைச் சுழற்ற டயரில் மோதும் டைனமோ பிறப்பிக்கும் மின்சாரம் வயர் வழியே பாய்ந்து வானொலியை உயிர்ப்பிக்கும்.

ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை…..

சாதியம் சொல்லி கோயில் கிணற்றிலேயே தண்ணி அள்ள விடாமல் தடுக்கும் சமூகம், ஆராவது கோயில் படி மிதிச்சால் காலை முறிச்சுப் போடுவோம் என்று ஒரு பகுதி மக்களை தீட்டு என்று ஒதுக்கி வைத்த சமூகம், மூட நம்பிக்கையிலும் தாம் சளைத்தவர்கள் இல்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கின்றார்கள். இனி மெல்ல மெல்ல எல்லாம் விட்டதில் இருந்து தொடங்கும். சாதீயத்திமிரும், பிற்போக்குத் தனமும் கொண்ட எம் சமூகத்துக்குப் படிப்பினைகள் போதாது போல.

கவிஞர் இ.முருகையன் நினைவில்…!

ஈழத்தின் தமிழ் இலக்கியத்துறையில் நாடறிந்த மூத்த கவிஞரும் நாடக எழுத்துருப் படைப்பாளியுமான கலாநிதி இ.முருகையன் தனது 74 வது வயதில் நேற்று கொழும்பில் காலமானார்.

நடிகமணி வி.வி.வைரமுத்து 20 ஆம் ஆண்டு நினைவு இன்று

நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்கள் மறைந்து இன்றோடு 20 ஆண்டுகள் கடந்திருக்கின்றது.

கவிஞர் முருகையன் & நடிகமணி வி.வி.வைரமுத்து நினைவுப் பகிர்வுகள்

கவிஞர் முருகையனின் அஞ்சலி நிகழ்வு தேசிய கலை இலக்கியப் பேராவையால் கடந்த 06.07.2009 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்களும், கலாநிதி மனேன்மணி சண்முகதாஸ் அவர்கள் ஆற்றிய உரைகள் ஒலி வடிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஒரு குட்டியானையின் டயறிக்குறிப்பு

கழிந்து போன யூலை 7 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான குடும்பங்களில் எதையெல்லாம் மறந்திருப்பார்களோ தெரியாது ஆனால் அந்த நேரம் Channel 7 தொலைக்காட்சியின் The Zoo நிகழ்ச்சியை மட்டும் மறந்து தொலைத்திருக்கமாட்டார்கள். அது வேறொன்றும் இல்லை. அன்று தான் தன் வயிற்றில் 22 மாதங்களாச் சுமந்து வந்த தன் பிள்ளையை Thong Dee ஈன்ற பொழுதைக் காட்டிய விவரண நிகழ்ச்சி அது.

“இன்னமும் வாழும்” மாவை வரோதயன்”

“ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்” என்ற ஒலிப்பகிர்வாக கொடுக்க யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று எழில் அண்ணாவிடம் கேட்டபோது அவர் மாவை வரோதயனை அறிமுகப்படுத்தி வைத்தார். அன்றிலிருந்து வாரா வாரம் மாவை வரோதயனின் “ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்” இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது அந்த நிகழ்ச்சியில்.

“கே.டானியல் கடிதங்கள்” – ஒரு சாதி ஒழிப்புப் போராளியின் பயணத்தடங்கள்

“தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டவை பொதுக்கருத்துக்கள் ஆகிவிடமாட்டாது. சில சந்தர்ப்பங்களில் பொதுக்கருத்துக்கு தனிமனிதக் கருத்து மூலவேராகவும் அமைந்துவிடுகின்றது. ”

( கே டானியல் 15-12-83, “கே.டானியல் கடிதங்கள் )

கே.எஸ்.பாலச்சந்திரனின் “கரையைத் தேடும் கட்டுமரங்கள்”

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த கலைஞர். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் இவர் புலம்பெயர்ந்த மண்ணிலும் தன் கலைச் சேவையை ஆற்றி வருகின்றார். இவர் நடிப்புத் துறையில் மட்டுமன்றி எழுத்துலகிலும் தன் தடத்தைப் பதித்திருக்கின்றார் என்பது பலரும் அறியாததொன்று. குறிப்பாக வடலி வெளியீடாக இவரது “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி கனடாவின் Agincourt Community Centre இல் மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படுகின்றது.

“தொப்புள் கொடி” தந்து தொலைந்த “நித்தியகீர்த்தி”

தொப்புள் கொடி என்னும் தன்னுடைய நாவலை வெளியீடு செய்ய 3 நாட்களே இருக்கும் நிலையில் படைப்பாளி நித்தியகீர்த்தி அவர்கள் வியாழன் இரவு மாரடைப்பால் இறந்தார் என்ற சோகச் செய்தி இன்று காலை கிட்டியது. வரும் ஞாயிற்றுக்கிழமை தனது நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து, வியாழன் இரவு மெல்பனில் இயங்கும் உள்ளூர் வானொலியிலும் தனது நூல் தொடர்பில் பேட்டி ஒன்றை வழங்கிவிட்டுப் போன இரவே மாரடைப்பால் காலன் அழைத்த அவரின் கடைசி இரவாக அமைந்தது ஜீரணிக்க முடியாத செய்தியாக வருத்தத்தை விளைவித்திருக்கின்றது.

“வானொலி மாமா” சரவணமுத்து நினைவாக

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒரு விழுதான “வானொலி மாமா” என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த திரு.ச.சரவணமுத்து அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 30 திகதி தனது 94 வது வயதில் காலமானார்.

“16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை” – போக முன்

இது வெறும் கற்பனைக் கதை அல்ல, 16 வருஷங்களுக்கு முன்னர் என்னைச் சுற்றி நடந்த சம்பவங்களோடு பயணிக்கும் ஒரு நனவிடை தோய்தலாக அமைகின்றது. கொஞ்சம் பொறுங்கோ அவசரப்படாமல் கேளுங்கோ. இந்தக் கதையில் வரும் நாயகனோ அல்லது அவனைச் சுற்றி வரும் காதல் சமாச்சாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் நானும் இருப்பேன், நாயகனின் தோழர்களில் ஒருவன் வடிவில். எனக்கும் ஒரு கதை இருக்கும் தானே 😉

16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை – யாழ்தேவி ரயில் பிடிக்க

“மச்சான்! நான் ஊருக்குப் போறன், வவுனியா வளாகத்திலை இருந்து படிச்சு ஒரு சாதாரணனா வெளியில வாற்தை விட நாட்டுக்காகப் போராடப் போறன், எங்கட சனத்துக்கு விடிவு வேணுமடா” அந்தக் கடைசி இரவில் குருமன் காட்டில் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து அந்த இரவில் பேசியது தான் வாசனோடு இருந்த கடைசி நாள்.

தமிழீழ மாணவர் எழுச்சியின் ஆரம்பம் : சில நினைவுகள்

கார்த்திகை 26, 2006 ஆம் வருஷம் மாவீரர் வாரத்தின் வானொலிப் பகிர்வாக ஈழத்தின் மாணவர் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான சத்தியசீலன் அவர்களை நேர்காணல் கண்டிருந்தேன்.