ஈழத்துத் தமிழ்சினிமா மீது ஞாநி எறிந்த கல்
admin June 30th, 2010
“கலைத்துறையைப் பொறுத்தமட்டில் 1983-ல் இனக்கலவரங்கள் வெடிப்பதற்கு முந்திய அமைதிக்காலகட்டத்தில் கூட ஈழத்தமிழர்களிடமிருந்து ஒரு உருப்படியான சினிமா முயற்சி கூட நடந்ததில்லை. அதே சமயம் சிங்களப்படைப்பாளிகள் உலகத்தரத்திலான திரைப்படங்களை உருவாக்கியிருக்கின்றார்கள். ஈழத்து சினிமா படைப்பாளிகளுக்கு தமிழகத்தின் மசாலா படம் தான் ரோல் மாடலாக இருந்திருக்கின்றது”
மேற் சொன்ன கருத்துக்களை தனது குமுதம் “ஓ பக்கங்களில் எழுத்தாளர் ஞாநி 09.06.2010 தேதியிட்ட இதழில் தெரிவித்திருக்கின்றார். இந்தக் கருத்தை இன்று தான் பார்க்கக் கிட்டியது. பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.
சமீப வருஷங்களாகவே ஈழத்து அரசியலில் இருந்து கலை, இலக்கியம் வரை எழுந்தமானமாக ஒரு கல்லை விட்டெறிந்து விட்டுப் போகும் போக்கு தமிழக அரசியல்வாதி எழுத்தாளர் சிலருக்கு கைவரப்பெற்றிருக்கின்றது. அந்த வகையில்இலங்கையில் நடந்த ஐபா விழாவிற்கு தமிழ்த்திரையுலகம் புறக்கணித்ததைக் கண்டிக்கும் நோக்கில் கூடவே வழக்கம் போல தி.மு.க சார்ந்த இராம நாராயணனையும் வாரிவிட்டு ஈழத்தமிழ் சினிமா குறித்த தமது “புரிதலை”யும் சொல்லிக் கல்லறிந்து போயிருக்கிறார் இவர். ஐபா விழா புறக்கணிப்பு ஏன் அவசியம் என்பதை தாமரை உட்பட பலர் ஒப்பீட்டு உதாரணங்களோடு ஞாநிக்கும் அவர் சார்ந்தோருக்கும் விளக்கிவிட்டார்கள். எனவே அந்தப் பக்கம் நான் வரவில்லை. ஈழ சினிமா குறித்து இவர் சொன்ன “விஷம்” போன்ற கருத்துக்கு எந்த வகையான ஆதாரங்களை ஞாநியால் முன் வைக்க முடியும்?
இவரே குறிப்பிட்ட 1983 ஆம் ஆண்டில் திரைப்படத் கூட்டுத்தாபனத்தில் இருந்த அதுவரை தயாரிக்கப்பட்ட 99 வீதமான ஈழத்துத் தமிழ் சினிமாக்களின் படச்சுருள்களின் ஒரே ஒரு பிரதியையும் சிங்களக்காடையர்கள் அழித்து ஒழித்தது இவருக்குத் தெரியுமோ என்னவோ. அப்படியென்றால் 1983 இற்கு முன் வந்த ஈழத்துத் தமிழ் சினிமாவை இலங்கைக்கு வந்து பார்த்துவிட்டு இது தரமில்லாதது, இது தரமானது என்ற முடிவை ஞாநி எடுத்திருப்பாரா? காரணம் பொன்மணி உட்பட ஒரு சில படங்களைத் தவிர தமிழகத்தில் ஈழத்துச் சினிமா எதுவும் திரையிடப்படவில்லை. 1983 இல் அழிக்கப்பட்ட படங்களின் சாம்பல் தான் மிச்சம். சிங்களவரோடு கைகோத்துக் குலாவ வேண்டும் என்று சாத்வீகம் பேசும் ஞாநி அவர்களே அதைத்தான் நாமும் செய்தோம். ஆனால் குலாவிக்கொண்டே அவர்கள் கைவத்தது யாழ் நூலகம் போன்ற அறிவுக்களஞ்சியத்தில் இருந்து இப்படியான கலைப்படைப்புக்கள் வரை. காரணம் தமிழனுக்கு என்று காணி மட்டுமல்ல வரலாறும் ஈழத்தில் இருக்கக்கூடாது என்ற அவர்களின் முனைப்புத் தான். இது அரச மட்டத்தில் இருந்து சிங்கள இனவாதிகள் வரை இன்று வரை செழுமையாகவே இருக்கின்றதை அறிவீர்களா?
1983 இற்கு முன் வெளிவந்த படங்களில் பெரும்பான்மையானவை ஹாலிவூட், கோலிவூட், பாலிவூட் என்று எந்த வகைக்குள்ளும் அடக்காதா ஈழத் தமிழரின் வாழ்வியலைப் பேசும் படங்களாக வந்திருக்கின்றன. பொன்மணி என்ற திரைப்படத்தில் பல்கலைக்கழக மட்டத்தில் பேராசிரியர்களாக இருப்போர் இணைந்து நடித்து எடுத்து வெளிவந்த படம். தெய்வம் தந்த வீடு ஒரு நாதஸ்வரக்கலைஞனின் வாழ்வியலைப் பேசும் சினிமா. நெடுந்தீவு என்னும் கடலோரப் பிரதேச வாழ்வியலைக் கூறும் சினிமா வாடைக்காற்று என்ற சினிமா பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? இல்லையாயின் ஆது பர்றி நான் எழுதிய பதிவைப் படிக்கவும். ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ என்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட முழு நீள சினிமா “கடமையின் எல்லை” இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படங்களில் சிலதை 1983 இற்கு முன் ரூபவாகினி தொலைக்காட்சியில் தொடராகப் போட்டார்கள்.
1983 இற்குப் பின் பல கலைஞர்கள் ஈழத்தை விட்டுப் புகலிடம் தேடி ஓடிட, புலிகளின் காலத்தில் பிறந்தது ஈழத்து போர்ச் சூழலின் அவலம் பேசும் சினிமாக்கள். புலிகள் என்றாலே சீண்டப் பிடிக்காத உங்களுக்கு இன்னொன்றும் சொல்லி வைக்கிறேன். அந்தப் போர்க்காலச் சினிமாக்களிலும் புலிகளின் பிரச்சாரப்படங்கள் என வகைப்படுத்தி முத்திரை குத்திப் பார்க்கும் படங்களைத் தவிரவும் ஈழத்து மக்களின் போரியல் அவலங்களைக் காட்டும் படங்களும் வந்திருந்தன.
சிங்கள சினிமாவை உலகத்தரத்தோடு ஒப்ப்பிட்டுப் பார்க்கும் உங்களுக்கு ஓருண்மை சொல்வேன். 1983 இற்கு முன் வந்த 99% மான ஈழத்துப் படங்கள் எந்த வித தமிழக, பாலிவூட் கலாச்சாரத்தின் பிரதிபலிப்புக்களாகவோ இல்லையோ அதே போல் 1983 இற்கு முன்னும் பின்னும் வெளிவந்த 99% மான சிங்களத்திரைப்படங்கள் பிரபல ஹிந்தி, தமிழ்ப் பாடல்களை உரிமம் பெறாது காப்பி அடித்தும், கதையை அப்படியே பிரதி பண்ணியும் தான் வந்திருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்கு எப்படி கோடம்பார்க்கத்து சினிமா பிடிக்குமோ அது போல் சிங்களவருக்கும் ஹிந்தி சினிமா தான் உயிர் என்பதை அறிய ஒரு நடை கொழும்புக்குப் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்.
சிங்களக் கலைத்துறை, சினிமா உட்பட இலங்கை அரசின் பேராதரவோடு இயங்கி வருகின்றது. இந்த நிலை தமிழ்க்கலைஞர்களுக்கும், படைப்புக்களுக்கும் இல்லை. யாராவது ஒரு பெரும் சிங்களக் கலைஞர் மனம் வைத்து இரங்கினால் ஒழிய.
ஆகவே ஞாநி அவர்களே, எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் நீங்கள் அயலகத்து விடயங்களைப் பற்றிப் பேசும் போதோ எழுதும் போதோத நன்கு உங்கள் சிந்தனையை வளப்படுத்திக் கொண்டு கருத்தைச் சொல்ல முயலுங்கள். நாளைக்கு நீங்களே “இலங்கையில் இருக்கும் தமிழர்கள் தமிழ் படித்த சிங்களவர்கள்” என்றும் சொல்ல முனைவீர்கள். எமது தமிழ் எழுத்துலகின் சாபக்கேடே எழுத்தாளன் என்றால் எல்லாம் தெரிந்தவன், எதற்கும் எப்படியும் கருத்துச் சொல்லலாம் என்பதே.
உங்கள் பார்வைக்கு தம்பி ஐயா தேவதாஸ் எழுதிய “இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை”
வாடைக்காற்று நாவல், சினிமா பற்றி நான் எழுதிய முந்திய பதிவு

செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் ” வாடைக்காற்று எழுதினாரே, அவரா?” என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் “இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே”. இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.
நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.
இவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.
இவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும்.
பெண்களை வர்ணிக்கும் போது அவர்களின் மார்பழகை மையப்படுத்தி சில இடங்களில் ஒரே மாதிரியாக வர்ணிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் பக் 19)
இக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.
படிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது. 
மரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.

செமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள். 
இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.
இந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது “செம்மீன்” போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.
” எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்” என்றார் செங்கை ஆழியான் என்னிடம். 
நாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
வாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். “ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும். 
இந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது” படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து ” கல்லுக்குள் ஈரம்” வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.

கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , “நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்” என்றாராம்.
நடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).
ஒளிப்பதிவு: ஏ.வி.எம்.வாசகர்
திரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்
இசை: ரீ.எவ்.லத்தீப்
உதவி இயக்கம்: கே.எஸ்.பாலச்சந்திரன்
இயக்கம்: பிறேம்நாத். மொறாயஸ்
படப்பிடிப்பு ஆரம்பம்: 10.02.77
(கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)
திரையிட்ட தேதி: 30.03.1978
இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்
முதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)
“வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே” ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.
மறக்கமுடியுமா இதை.












