நல்லை நகர்க் கந்தரகவல் – பதினெட்டாந் திருவிழா

நேரிசையாரியப்பா

(இஃது ஆறுமுக நாவலரவர்கள் தமையன்மாருளொருவரும் கதிரையத்திரை விளக்கத்திலுள்ள பல கீர்த்தனங்கள் செய்தவருமாகிய பரமானந்தப் புலவர் செய்தது.)

கடன்முகட் டுதித்த செங் கதிரெனத் திகழும்
படம்விரித்தொழுந்த பஃறலை யரவின்
பருமணித் தொகையு மரிமணிக் குவையும்
பச்சையும் வயிரமு மற்றைய மணியும்
விண்ணகத் திடையிடை தண்ணிழல் விடுப்ப
இந்திர வில்லென் றினமயி லேமாந்
தங்கணு மகவுஞ் செம்பொனி னிமையத்
தண்கிரி நடுவட் டழைத்தெழு பச்சைப்
பைங்கொடி யன்றருள் பண்ணிய மருந்தே

இருவராண் டளந்து மொருகரை காணாக்
கருணைவா ரிதியின் விளையுமா ரமுதே
கருத்துறக் கருதிக் கசிந்தவ ருள்ளத்
திருட்டொகை துரக்குந் திருத்தகு விளக்கே
இல்லையென் றொருவரை யிரவா தடியவர்
அல்லனோ யகற்றியின் பருளுநன் நிதியே
வண்டினங்க் குடைந்துபண் பாடிட வளர்முகை
விண்டலர் கடம்பெனும் வெறிமலர்த் தொடையனே
கோகன கத்தில்வாழ் கரவனைச் சிறைபுரிந்
தாருயிர் படைத்தரு ளளித்திடு முதல்வனே

கீரனைச் சிறைசெயுந் கிருத்திமந் தனைநெடு
வீரவேல் விடுத்துமுன் வீட்டிய விமலனே
அருட்குரு வாகிமுன் னகத்தியர்க் கருமறை
தெருட்டுநல் லுணர்வருள் சிற்பரா னந்தனே
நாரதன் மயக்கத்தினில் நணுகுறு செச்சையை
ஊர்தி யெனப் பிடித் தூர்ந்திடு மொருவனே
ஆறுருத் தனையுமோ ரங்கையா லணைத்துமை
ஓர்வடி வாத்திரட் டியவொகு முருகனே
தடநெடுஞ் சரவணந் தனிலறு மங்கையர்
குடமுலை யுறுபால் குடித்திடுங் குமரனே

ஆவினன் குடியினு மரியவே ரகத்தினுஞ்
சீரலை வாயினுந் திருப்பரங் கிரியினும்
பழமுதிர் சோலையென் றுரைபெறு மலையினும்
உளமகிழ் வோடுறை யொப்பிலா முதல்வனே
கொன்றுதொரு றாடல்செய் துலவிடுங் குழகனே
அதிர்கருங் கடல்புடை யாடர்ந்தவம் புவிதொழுங்
கதிரையங் கிரியுறை கங்கைதன் புதல்வனே
குடவளை யினம்பல குமிறுதண் பனையொடு
தடமலர் வாவிகள் தயங்குநல் லூரனே

அன்பினர் நெஞ்சத் தடந்தொறு மலர்ந்தநின்
பங்கயப் பாதமென் சிந்தைவைத் தியம்புவன்
மாயிரு ஞாலத்து மக்களிற் பற்பலர்
தந்தையுந் தாயும் தமருந் தனயருஞ்
செஞ் சொல்வஞ் சியருந் தேடிய பொருளும்
மீமிசைப் பவக்குழி வீழ்த்திடப் பிணித்த
பாசமென் றெல்லாம் பற்றறத் துறந்து
காட்டிடைப் புகுந்தொரு காலினை முடக்கிமேல்
நோக்கிய கண்ணோடு கூப்பிய கையுமாய்

நெடுந்தவம் புரிந்து மெலிந்தனர் தளர்ந்துங்
காற்றுதிர் ச்ருகுங் காயுங் கனியும்
வாய்த்தன வருந்தி வருந்தின ருலைந்தும்
பேயெனத் திரிந்தும் பேருடல் வரண்டுங்
கானிடை விலகெனக் காண்வர வுழன்றும்
வேற்றொரு தேவரை வேண்டார் நின்னடி
போற்றினர் முத்தி புகுவது பொருளாய்
அங்கவை யனைத்துஞ் சிந்தைசெய் யாது
தண்டலை மலர்விழும் வண்டின மென்னக்

கண்டன கண்டன காமுற்று வைகலும்
அறுசுவை யமுத மொருசுவை குறைந்துழி
அட்டனர் வெருவ வெட்டென வெகுண்டுந்
தண்ணறுஞ் சாந்து சவாது குங்குமம்
ஒண்மலர்ச் சூட்டென் றுள்ளன புனைந்தும்
நன்னெறி படர்கிலார் நட்பினை நயந்தும்
நாணிலாக் கணிகையர் நயனவேற் குடைந்தும்
வாணா ளெல்லாம் வீணாக் காழித்தனன்
தினகரர் போலொளி திகழ் முக மாறும்

ஒருமர வடிவா யுலகினை புலைத்தசூர்
இருபிள வாக வெறிந்திமை யோர்கள்
சிறை தவிர்த் தருளிய திருநெடு வேலும்
மற்றுள படையும் வரதமு மபயமும்
உற்றிடு பன்னிரு கைத்தல நிரையும்
அருவரை யனைய வகலமு மிரண்டு
மடவன முவந்து வாழ்வுறு பாலும்
கலகலென் றிசைக்கு நின் கழலுங் காட்டி
மரகதக் கலாப மயின் மிடைத் தோன்றும்
வடிவினை வாழ்த்தி மறவா துள்கி
இரவினும் பகிலினு மிறைஞ்சிலே னாயினும்
உன்னையே தெய்வமென் றுளத்துட் டுணிந்தனன்

அன்னது துணிந்தேற் குன்னது பாரஞ்
சினமொடு தீமையு மனமடு காமமும்
நெறியிடைப் புகாத பொருளிடைச் செலவும்
நரகிடை வீழ்த்துங் கொலைகள் வாதியும்
இன்னவு மிம்மையிலகற்றி
அம்மையின் முத்தி யருளூ மாறே.

திருச்சிற்றம்பலம்

நன்றி:
ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு – வெளியீடு: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்

புகைப்படம் உதவி: Ishta Siddhi Shree Subramanyaswamy Trust

நல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் – பதினேழாந் திருவிழா


நல்லை நகர் நாயகன் கந்தப் பெருமானின் பதினேழாந் திருவிழாவில் இரண்டு பகிர்வுகளைத் தருகின்றேன். முதலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் அருளிச் செய்த நல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் இடம் பெறுகின்றது.

அருணகவி சிதகமல மலரை நிகர் தருவதன
மாறுமநு தினமும் வாழி
அமரர் தொழு கனகசபை நடனமிடு பரமசிவ
னருண்முருகர் சரணம் வாழி
கருணைமழை பொழி பனிரு நயனமதி னெடுவலிய
கவினுலவு தோள்கள் வாழி
கனகிரியை யிருபிளவு படவுருவு நெடியவயில்
கரதலத் தினிது வாழி
வருணமர கதவழகு திகழவரு மவுணனெனு
மயிலினொடு சேவல் வாழி
வனசரர்த மரசனுத வியகுறமி னொடுகடவுண்
மயிலிவர்க டினமும் வாழி
தருணமிது வெனவமரர் பணிநல்லை யமர்கந்தர்
தமதடியர் நிதமும் வாழி
சகசநிரு மலபரம சுகிர்தபரி பூரண
சடாஷரம் வாழி வாழி


தொடர்ந்து, தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்க, இசைக்கலைமணி ஸ்ரீ வர்ணராமேஸ்வரன் பாடும் நல்லை முருகன் பாடல் ஒலியிலும் எழுத்திலுமாகத் தருகின்றேன்

Get this widget Share Track details

பன்னீரில் தினம் குளிக்கும் கந்தமுருகேசா – நாங்கள்
கண்ணீரில் குளிக்கின்றோம்
வந்து அருள்வாயா? வந்து அருள்வாயா?
உன் வாயைத் திறவாயா? – நீ
வந்து அருள்வாயா? வந்து அருள்வாயா?
உன் வாயைத் திறவாயா?

சந்தணத்தைப் பூசி மலர் சூடி வருகின்றாய் – உன்
தம்பதிகளோடு தினம் வந்து அருள்கின்றாய்
செந்தமிழால் நாம் வடித்த இன்று மலர்கின்றாய்
செந்தமிழால் நாம் வடித்த இன்று மலர்கின்றாய்
என் தேகமெல்லாம் புல்லரிக்க வந்து சிரிக்கின்றாய்

பன்னீரில் தினம் குளிக்கும் கந்தமுருகேசா – நாங்கள்
கண்ணீரில் குளிக்கின்றோம்
வந்து அருள்வாயா? வந்து அருள்வாயா

நல்லூரின் வீதியிலே உந்தன் விளையாட்டு -எந்தன்
நாயகனே எனதெரிலே வந்து முகம் காட்டு
தொல்லை, துயர் சூழ்ந்ததய்யா நீதி நிலை நாட்டு
தொல்லை, துயர் சூழ்ந்ததய்யா நீதி நிலை நாட்டு
வந்த சூரர்களை ஓட்டுதற்கு வேலை எடுத்தாட்டு

பன்னீரில் தினம் குளிக்கும் கந்தமுருகேசா – நாங்கள்
கண்ணீரில் குளிக்கின்றோம்
வந்து அருள்வாயா? வந்து அருள்வாயா

சந்ததும் உந்தனையே வந்து தொழுகின்றோம் – நீ
சாத்துகின்ற பூக்களையே சூட்டி மகிழ்கின்றோம்
கந்தனே உன் காலடியில் வந்து விழுகின்றோம் – உன்
கண்ணில் எழும் அன்பதனுக்காக அழுகின்றோம்

பன்னீரில் தினம் குளிக்கும் கந்தமுருகேசா – நாங்கள்
கண்ணீரில் குளிக்கின்றோம்
வந்து அருள்வாயா? வந்து அருள்வாயா?
உன் வாயைத் திறவாயா? – நீ
வந்து அருள்வாயா? வந்து அருள்வாயா?
உன் வாயைத் திறவாயா?

நன்றி:
1.ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு – வெளியீடு: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்
2. நல்லை முருகன் பாடல்கள் – வெளியீடு : தமிழீழவிடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுப் பிரிவு

புகைப்படங்கள் உதவி: கெளமாரம் தளம்

எந்நாளும் நல்லூரை வலம் வந்து….! – பதினாறாந் திருவிழா

நல்லூர் விழாக் காலப் பதிவுகளில் இன்றைய படையலாக வருவது சிவயோக சுவாமிகளின் இரண்டு நற்சிந்தனைப் பாடல்களின் ஒலி வடிவமும், அவற்றின் எழுத்து வடிவமும். முதலில் வரும் “எந்நாளும் நல்லூரை” என்ற பாடலைத் தாங்கிய இசைப் பேழை யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் சிவதொண்டன் நிலையத்தினரால் வெளியிடப்பட்டது. இப்பாடலை உருவாக்கியதோடு தகுந்த சங்கீத இலட்சணமும் கொடுத்தவர் சிவயோக சுவாமிகள். எளிமையான வரிகளில் வலிமையான பக்தியுணர்வைத் தூண்டும் இப்பாடல் நல்லூர் நாயகன் திருவிழாக் காலத்தில் உங்களுக்கும் அவன் பால் சித்தத்தைக் கொண்டு செல்ல உறுதுணையாக அமையும். பாடலைப் பாடியவர் விபரம் அறியக் கிடைக்காமைக்கு வருந்துகின்றேன். விபரம் தெரிந்தவர்கள் உறுதிப்படுத்திய தகவலை அளித்தால் நன்றியுடையவனாக இருப்பேன். ( யாழில் இருக்கும் பகீ, முடிந்தால் செய்துதவுங்கள்)

Get this widget Share Track details

ராகம்: பிலஹரி
தாளம்: ரூபகம்

பல்லவி

எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே

அனுபல்லவி

அந்நாளில் ஆசான் அருந்தவஞ் செய்த இடம்
அது ஆதலாலே அதிசயம் மெத்தவுண்டு
(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)

சரணம்

வேதாந்தம் சித்தாந்தம் கற்றதனால் என்ன
வேடிக்கைக் கதைகள் பேசினால் என்ன
வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால்
வில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே
(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)

சத்தியம், பொறுமை, சாந்தம், அடக்கம்
நித்தியா நித்தியம் பெறினும் – நிபுண
பக்தி செய் உத்தமர் பரவும் நல்லூரில்
நித்தியம் வந்து பார்த்தால் முத்தி நிச்சயமே

(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)

0000000000000000000000000000000000000000000000000000000000000000

சிட்னியில் இயங்கும் யோகர் சுவாமி நிலையம் யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடல்கள், மற்றும் சொற்பொழிவுப் பகிர்வுகளை தொடர்ந்து மாதாந்தோறும் நடாத்தி வருகின்றது. அது குறித்த இன்னும் மேலதிகத் தகவல்களை அடுத்து வரும் பதிவொன்றில் தருகின்றேன். இன்றைய பதிவிலே அக்கூட்டுப் பிரார்த்தனையில் பாடப்பெற்ற “நல்லூரான் திருவடியை” என்ற பாடலின் ஒலிப்பதிவையும், எழுத்து வடிவையும் தருகின்றேன். ஒலிப்பதிவின் இறுதியில் சில அடிகள் மட்டும் பதியப்படாமைக்கு மனம் வருந்துகின்றேன்.

Get this widget Share Track details

நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனெடி – கிளியே!
இரவுபகல் காணேனெடி.

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி

நான்மறந்து போவேனோடி – கிளியே!
நல்லூரான் தஞ்சமெடி.

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்

காவல் எனக்காமெடி – கிளியே!
கவலையெல்லாம் போகுமெடி.

எத்தொழிலைச் செய்தாலென்
ஏதவத்தைப் பட்டலென்ன

கர்த்தன் திருவடிகள் – கிளியே!
காவல் அறிந்திடெடி.

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களெடி – கிளியே!
ஆறுமுகன் தஞ்சமெடி.

சுவாமி யோகநாதன்
சொன்னதிருப் பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலெடி – கிளியே!
பொல்லாங்கு தீருமெடி.

நன்றி:
எனது இந்த நல்லூர்க்காலப் பதிவுகளில் உதவியளிக்க வேண்டும் என்ற விருப்போடு, இந்தப் பதிவில் இடம்பெற்ற “எந்நாளும் நல்லூரை”, மற்றும் “நல்லூரான் திருவடியை” பாடல்களின் ஒலிப்பதிவைத் தந்துதவிய திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள்.

“நல்லூரான் திருவடியை” எழுத்து வடிவைத் தந்த சகோதரர் கன.சிறீதரன் வலைப்பதிவு.

நல்லூர் முருகன் உள் ஆலயப் புகைப்படம்: http://www.tamilshots.com/

பொப் இசையில் மால் மருகன் – பதினைந்தாம் திருவிழா


கடந்த பதிவுகளில் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பில் வரலாற்றுப் பதிவுகள் அமைந்திருந்தன. தொடர்ந்து வரும் நல்லைக் கந்தன் திருவிழாக் காலத்தில் மேலும் சில படையல்களோடு அமைய இருக்கும் இவ்விசேட பதிவுகளில் இன்று நான் தருவது, நல்லூர்க் கந்தன் புகழ் பாடும் பொப்பிசைப் பாடல். ஈழத்தின் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் அவர்கள், அரவிந்தன் இசையில் பாடும் இப்பாடல் வழக்கமான பக்திப் பாடல்களில் இருந்து விலகிப் மெல்லிய இசை கலந்த பொப்பிசைப் பாடலாக மலர்ந்திருக்கின்றது. தொடர்ந்து பாடல் வரிகளையும் கீழே தந்திருக்கின்றேன்.

Get this widget | Share | Track details

மால் மருகா எழில் வேல் முருகா நீயே
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே
மால் முருகா எழில் வேல்முருகா நீயே
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே

முருகா வடிவேலா………..
தருவாய் அருள் குமரா…..
முருகா வடிவேலா…….
தருவாய் அருள் குமரா……

நல்லூர் நாயகனே….! நல்வழி காட்டுமைய்யா
நம்பிய பேர்களது துன்பங்களைத் தீருமய்யா
நல்லூர் நாயகனே….! நல்வழி காட்டுமைய்யா
நம்பிய பேர்களது துன்பங்களைத் தீருமய்யா

நல்லூர் எம்பதியே
நம்பிக்கையின் ஒளியே
நல்லூர் எம்பதியே
நம்பிக்கையின் ஒளியே

கனிமலைக் கந்தவேளே காப்பது நீயய்யா
கதியே நீயென்றால் பதியே சரணமய்யா
கனிமலைக் கந்தவேளே காப்பது நீயய்யா
கதியே நீயென்றால் பதியே சரணமய்யா
கந்தா கதிவேலா…வருவாய் சிவபாலா….
கந்தா கதிவேலா…வருவாய் சிவபாலா….

ஏழுமலை இறையினிலே எழுந்திடும் குமரேசா
ஆறுதலைத் தந்திடுவாய் ஆறுமுகா அழகேசா
ஏழுமலைப் இறையினிலே எழுந்திடும் குமரேசா
ஆறுதலைத் தந்திடுவாய் ஆறுமுகா அழகேசா
குமரா எழில் முருகா……
குறுகுறு நகை அழகா……
குமரா எழில் முருகா……..
குறுகுறு நகை அழகா……..

தோகைமயில் ஏறிவரும் சேவல் கொடியழகா
பழமுதிர்ச்சோலைகளில் பவனி வரும் வடிவழகா
தோகைமயில் ஏறிவரும் சேவல் கொடியழகா
பழமுதிர்ச்சோலைகளில் பவனி வரும் வடிவழகா
அரகர ஆறுமுகா……….
அருளீர் திருக்குமரா…..
அரகர ஆறுமுகா……….
அருளீர் திருக்குமரா…..

லண்டன், பாரிஸ், சுவிஸ், ஜேர்மனி, நேர்வே, ஒஸி
கனடா வாழ்த் தமிழன் நாயகனே முருகய்யா
லண்டன், பாரிஸ், சுவிஸ், ஜேர்மனி, நேர்வே, ஒஸி
கனடா வாழ்த் தமிழன் நாயகனே முருகய்யா
உலகாள் தமிழ்த் தலைவா…….
உமையாள் திருக்குமரா…………
உலகாள் தமிழ்த் தலைவா…….
உமையாள் திருக்குமரா………….

சிவனின் மைந்தனய்யா சிங்கார வேலனய்யா
தகப்பனுக்குபதேசம் செய்த சுவாமி நீயய்யா
சிவனின் மைந்தனய்யா சிங்கார வேலனய்யா
தகப்பனுக்குபதேசம் செய்த சுவாமி நீயய்யா

தவறுகள் பொறுத்திடுவாய்…..
தமிழரைக் காத்திடுவாய்……….
தவறுகள் பொறுத்திடுவாய்…..
தமிழரைக் காத்திடுவாய்……….

அரகர ஆறுமுகா……….
அருளீர் திருக்குமரா…..
அரகர ஆறுமுகா……….
அருளீர் திருக்குமரா…..