ஃபீனிக்ஸ் தேசத்தில் நான்

அணுகுண்டுஅழிவிலிருந்தும் ஃபீனிக்ஸ் பறவைபோல் உயிர்த்தெழுந்த ஜப்பானிய தேசத்திற்கு எனது வேலை செய்யும் நிறுவனம் தொடர்பான வேலைத்திட்டத்திற்கு கடந்த மூண்டு வருஷத்துக்கு முன்னால போயிருந்தன். என்ர டயரியின் பதிவிலிருந்து இதுவரை அச்சேறாத அந்தப் பேனாப் பதிவு இதோ.

சிட்னியிலிருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு எட்டரை மணித்தியாலப் பயணம் அது. ஜப்பானின் சர்வதேச விமானத் தளம் நரிற்றா (Narita) என்று அழைக்கப்படுகின்றது. பிளேனில இருந்து இறங்கியதும் முதல் வேலையாகப் பணமாற்று அலுவலகம் சென்றேன். பொதுவாகக் கீழைத்தேய நாடுகளுக்குச் செல்லும் போது ஒரு சில அவுஸ்திரேலிய நோட்டுக்களை மாற்றினால்போதும் கைகொள்ளாத அளவிற்கு அந்நாட்டுக் கரன்சி கிடைக்கும். இந்த அனுபவம் முந்தி என்ர சீனப் பயணத்தில் ஏற்பட்டது. இதனால ஒரு 50 அவுஸ்திரேலிய டொலரை மாற்றினால் போதும் என்று நினைத்து நோட்டை நீட்டினேன். 3000 ஜப்பானியஜென் கிடைச்சுது. அப்பாடா ஒரு கிழமைக்கு இது தாங்கும் எண்டு நினைச்சுக்கொண்டு விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குப் போகும் சொகுசுப் போரூந்தைப் பிடித்தேன். என் நினைப்பில் மண். பஸ் டிக்கற் விலை 3,000 ஜென் என்றார் பஸ் நடத்துனர். Taxi என்றால் 20,000 ஜென்னாம். நடந்தே போகலாம் என்றால் பஸ் பயணமே ஒண்டரை மணி நேரம்.

ஜப்பானில் நான் போன வேளை இதமான காலநிலை எண்டாலும் ஒருவிதப் புழுக்கம் நிலவியது. சாலைப் போக்குவரத்து சீராக இருந்தது. இதற்காகவே செய்யப்பட்டது போல Taxi க்காகப் பிரத்தியோக வடிவமைப்பில் கார்கள் இருந்தன. Taxi சாரதிமார் கோர்ட் சூட் அணிந்திருந்தார்கள். ஹோட்டலில் என் அறையில் நுழையும் வரை வாறபோற சிப்பந்திகள் தலையைக் கீழேசாய்த்து அவர்கள் பாணியில் வணக்கம் சொல்லிக்கொண்டே போனார்கள். நாம் சம்பிரதாயபூர்வமாகக் கைகூப்பி வணக்கம் செலுத்துவது போல ஜப்பானியருடைய வழக்கப்படி ஏறக்குறைய 45% தம் உடம்பை வளைத்துச் சிரம் தாழ்த்துவது அவர்களின் மரியாதை முறை. எங்களுக்கு அந்தமுறை தெரியாவிட்டால் முயற்சி செய்தும் பார்க்கக் கூடாதாம், தவறான நம் செயல்முறை சந்திக்கும் ஜப்பானியரை அவமதிப்பது போல என்றார்கள்.

ஹோட்டல் அறையில் பைபிளின் புதிய ஏற்பாடு ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிப் பதிப்புக்கள் இருந்தன. களைபாறிக்கொண்டே தொலைக்காட்சிப் பொட்டியை முடுக்கினேன். BBC, CCN தவிர அனைத்தும் ஜப்பானியச் சனல்கள் ஆனால் ஒன்றில் கூடக் குலுக்கல் நடனங்களோ அல்லது சினிமா நடிகர் நடிகையரின் அரிய பெரிய(?) பறைசாற்றல்களைக் காணோம். அறிவியல் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளே நிரம்பியிருந்தன. ஜப்பானிய ஹோட்டல்களில் டிப்ஸ் வழங்குவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. அப்படியே வழங்கினாலும் அது கொடுக்கப்படுவரை அவமானப்படுத்துவது போலவாம்.
ஜப்பானியருடைய எழுத்து முறை சித்திரவடிவில் அமைந்தது. ஒவ்வொரு ஜப்பானிய எழுத்தையும் நுணுக்கமாகப் பார்த்தால் அது சொல்லவந்த செய்தியின் படவடிவில் தான் இருக்கும். உதாரணமாக மரம் என்பதற்கு மரவடிவில் ஒரு எழுத்து இருக்கும்.

இவர்களுடைய மொழியில் மூன்று விதமான உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
Hiragana என்பது ஜப்பானியப் பூர்வீக எழுத்து வடிவங்களாக 46 எழுத்துக்களைக் கொண்டும் உதாரணம்:

Kanji என்பது சீனமொழிக்கலப்பு எழுத்துக்களாக புழக்கத்தில் 45 எழுத்துக்களைக் கொண்டும்
உதாரணம்:

Katakana என்பது மற்றைய பிறமொழிக் கலப்பு வடிவங்களாக 46 எழுத்துக்களைக் கொண்டும்
உதாரணம்:

உள்ளன. இவற்றில் Kanji என்பது மிகவும் சிக்கலான சொற்சேர்க்கை தாங்கியது. இது 1200 வருடங்களுக்கு முன்பு பெளத்தகுருமாரால் கொண்டுவரப்பட்டது.

டோக்கியோ நகரைவிட்டு சிட்னி திரும்பும்வரை என்னால் காணமுடியாததாக இருந்தவை குப்பைத் தொட்டிகள். வீதிகளின் நடைபாதைகளில் இந்தக் குப்பைத்தொட்டிகளைக் காணமுடியாதிருந்தது. ஆனாலும் சுற்றுச்சூழல் மிகவும் சுத்தமாக இருந்தது. ஜப்பானியர்கள் தாம் வழிநெடுகில் உபயோகித்துத் தீர்ந்த குப்பைகளின் இருப்பிடமாகத் தம் காற்சட்டைப் பைகளை உபயோக்கிறார்களோ என்னவோ…
நான் அவதானித்திருந்த இன்னொரு விடையம் குடைகள். குடைகளுக்கான பாதுகாப்புப் பெட்டகங்கள் (Lockers) எல்லாக் கடைத்தொகுதி மற்றும் முக்கிய நிலையங்களில் உள்ளன. கர்ணனுடைய கவசகுண்டலம் போல்ச் சராசரியாக எல்லா ஜப்பனியரும் குடையுடன் திரிகிறார்கள்.

நான் தங்கியிருந்த நகரத்தில் ஒரு மாலைப்பொழுது உலாவியபோது என்ற The Taj எழுத்து கண்ணில் பட்டது. நான்கு நாட்களாக ஜப்பானிய மற்றும் சீன உணவைச் சாப்பிட்டுச் சலித்துப் போன எனக்கு இந்த உணவகத்தைக் கண்டபோது பக்கத்துவீட்டுக்காரரைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது. இந்த உணவகத்தில் இந்தியச் சமையலாளியின் கைவண்ணத்தில் நல்ல இந்திய உணவுகள் கிடைக்கின்றன. இந்தியர்கள் பலரையும் கண்டேன்.

ஒருநாள் மாலை எமது ஜப்பானியக் கம்பனியில் வேலைபார்க்கும் ஜப்பானியருடன் Akihabara (Japan’s Electronic Shopping Capitol) என்ற இடத்திற்குச் சென்றேன். இந்த இடம் தான் ஜப்பானில் இலத்திரனியல் மற்றும் மின்சாரச் சாதனங்கள் அதிகம் விற்கும் இடம். Duty free shop ஒரு இல் சீக்கிய இனத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் விற்பனையாளராக இருந்தான். வழிநெடுகில் உள்ள கடையெங்கும் விதவிதமான புதுப்புதுச் சாதனங்கள் வாரியிறைந்திருந்தன. அவுஸ்திரேலியச்சந்தையில் தற்போது இருக்கும் நவீன உபகரணங்கள் பல ஜப்பான் சந்தையில் வழக்கொழிந்து போயிருந்தன. இருப்பினும் இந்தக்கடைகளில் வெளிநாட்டவர் பொருள் வாங்கும் போது உள்ள சிக்கல்கள் இரண்டு.
1. மிக மலிவாக இருக்கும் பொருட்கள் ஜப்பானின் நுகற் பாவனைக்கு ஏற்றவிதத்தில் மட்டுமே உள்ளன. அவற்றிற்குச் சர்வதேசப் பாவனை உத்தரவாதமும் கிடையாது.

2. சர்வதேசத்தரத்திலும் பாவனைக்கேற்றவிதத்திலும் உள்ளபொருட்களின் விலை பன்மடங்கு அதிகம்.

ஜப்பானியர்கள் பூனையைத் தங்கள் அதிஷ்டத்திற்குரிய பிராணியாகக் கருதுகிறார்கள். வெள்ளைப் பூனைச்சிலை தங்களின் வியாபாரத்தைப் பெருக்கும் என்று கருதும் அதேவேளை
தங்கநிறப்பூனைச்சிலை நிறைந்த செல்வத்தையும் வெள்ளி நிறப்பூனை கல்வியைப் பெருக்கும் என்றும் கொண்டு அவற்றை வைத்திருக்கிறார்கள்.

தம்கடைகளின் வெளியே உப்பு நிறந்தசட்டிகளை வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் துர்தேவதைகள்

அவர்களை அண்டாது என்றும் நம்புகிறார்கள்.
என்னுடன் பயணத்தில் உடன்வந்த சீன நண்பர் மூலம் சீனர்களின் நம்பிக்கை இரண்டை அறியக்கூடியதாக இருந்தது.
1. சீனர்கள் ஒருவரின் பிறந்தநாளின் போது கடிகாரத்தை வழங்குவது கிடையாது.
அப்படி வழங்குவது பிறந்தநாள் கொண்டாடுபவரை நரகலோகத்திற்கு அனுப்புவதற்கான ஆசிவழங்குவது போலவாம்.

2. ஏதாவது சுபகாரியம் சம்பந்தமான விடையங்களை சிவப்புமைப் பேனாவால் எழுதமாட்டார்களாம்.

ஒருமுறை ஜப்பானில் வெளிவரும் ஆங்கில நாளிதழைப் பார்த்தபோது ஈழத்தின் வன்னிக்குச் சென்று
வந்த ஜப்பானிய நிருபர் ஒருவர் தன் அனுபவத்தை எழுதி இருந்தார்.
முதல் பந்தியிலேயே வன்னியில் இன்னொரு அரசாங்கம் சுயமாக இயங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார்
நான் புறப்படும் தினம் Asakusa என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். நகரவாழ்க்கையிலிருந்து சற்று விலகிய இடமாக அது இருந்தாலும் நகரத்தின் பாதிப்புக்களும் சில இருந்தன. குதிரையில் பணம் கட்டிவிளையாடும் அன்பர்களுக்கான சூதாட்ட விடுதிகளும் அங்கிருந்தன. ஜப்பானிலிருந்து ஞாபகமாக ஏதாவது வாங்கி வரவேண்டும் என்றால் இந்த இடத்திற்குத்தான் வரவேண்டும் , அவ்வளவிற்கு அதிகமான ஜப்பானியக் கலைப்பொருட்களின் கடைகள் அங்கிருந்தன.

Asakusa வில் Temple of Kume என்ற ஆலயம் உள்ளது. பண்டைய காலத்திலே Heinai என்ற ஆட்சியாளன் மக்களை மிகவும் துன்புறுத்தி நாட்டை ஆண்டு வந்தானாம். பின்னர் ஒரு காலகட்டத்தில் அவன் மனம் திருந்தி இந்த ஆலயத்தில் தஞ்சம் புகுந்தானாம்.
அன்றிலிருந்து இந்த இடத்திற்கு வருபவர்களுக்கு நல்வாழ்க்கைக்கானஆசீர்வாதம் வழங்கப்படுவதாக நம்பப்படுகிறது. இந்த ஆலய முன்றலில் 100 ஜப்பானிய ஜென்னைச்
செலுத்தினால் தகரப்பேணியில் உள்ள குச்சிகளில் ஒன்றைஎடுக்கலாம்.
அருகில் இருக்கும் தபால் பெட்டிகளில் அந்தக் குச்சியில் உள்ள இலக்கத்தை ஒத்த இலக்கமுள்ள இலக்கம் பொருத்தப்பட்ட பெட்டியைத் திறந்தால் சுருட்டப்பட்ட காகிதம் இருக்கும்.

அக்காகிதத்தில் ஜப்பானிய மொழியிலும் ஆங்கில மொழியிலும் சிலவாசகங்கள் உள்ளன. அவை இந்தத் துண்டை எடுத்த நபரின் எதிர்காலம் பற்றிய குறிப்புக்களாக உள்ளன. இந்த நபரின் குறிப்பிட்ட எதிர்காலம் சரியில்லை எனும் பட்சத்தில் அருகில் உள்ள கம்பிவலையில் அந்தத்துண்டைக்கட்டி வழிபடவேண்டும்.
இந்த ஆலயத்தின் உட்புறம் பெரிய உண்டியல்
அமைக்கப்பட்டிருக்கிறது.
அதில் காசை எறிந்து வழிபடவேண்டும். அந்த ஆலயத்தின் உள் எந்தவொரு விக்கிரமும்
இல்லையென்றாலும் ஆலயச்சுற்றாடலில் சிறு சிறு புத்தர் சிலைகள் உள்ளன.
இந்த மார்ச் 1945, 2ஆம் உலகப்போரின் போது அழிக்கப்பட்டதாம்.
பின்னர் 1978 ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தின் 1350 ஆவது ஆண்டு நிறைவின்போது சுற்றுலாத்துறையினால் இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டது.

நான் சென்றவேளை ஜப்பான் பாரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்திருந்தது.
வேலையில்லாதோர் படை 6% வீதத்தைத் தொட்டிருந்தது. இருப்பினும் ஜப்பானியர்களின் கடின உழைப்பின் முன் எவரும் நிற்கமுடியாது. காலையில் வேலைக்கு வரும் பலர் இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் கதிரையைவிட்டு எழும்புவார்கள்.
அவுஸ்திரேலியா, சிட்னியில் 5.30 மணியுடன் பெரும் கடைத்தொகுதிகள் இழுத்து மூடப்பட்டுவிடும். ஆனால் டோக்கியோவில் 9 மணிக்கு மேல் கடைத்தொகுதிகள் திறந்திருப்பது சர்வசாதாரணம்.

சிட்னி திரும்பியதும் ஊருக்குப் போன் எடுத்தேன்.
மறுமுனையில் அப்பா.
” அப்பா! ஜப்பான்காரன்கள் ஓய்வொழிச்சல் இல்லாம நல்லா வேலை செய்வான்கள்”
இது நான்.

” ஏன் நாங்கள் மட்டும் என்ன குறைச்சலே தம்பி? நான் வெள்ளன மூண்டு நாலு மணிக்கு எங்கட தோட்டத்துக்குக் தண்ணி இறைக்கப் போவன், பிறகு எட்டுமணிக்குப் பள்ளிக்கூடம் போய் வாத்தியார் வேலை, பின்னேரம் திரும்பவும் தோட்டவேலை, ஆடுகளுக்கு குழைவெட்ட வேணும்”
இது என்ர அப்பா.

வெடி கொளுத்தி ஒரு ஊர்ப்பொங்கல்

பிள்ளையள் தைப்பொங்கலைப் பற்றிப் பத்து வசனம் எழுதுங்கோ, இது தமிழ் வகுப்புப்பாடம்.
“தைத்திருநாள் என்று சொல்லும் இனிய தமிழ்ப் பொங்கல்” என்று பெருங்குரல் எடுத்துப்பாடும் சங்கீத வகுப்பு,பொஙகல்திருநாளைப் பற்றிச் சித்திரம் வரையவும், இது சித்திர வகுப்பு. (மேல இருக்கிற படம் paint function ஐப் பாவிச்சு நான் கீறினது)
இப்பிடித்தான் எங்கட சீனிப்புளியடி பள்ளிக்கூடத்தின் முதலாம் தவணை ஆரம்பிக்கும்.
தைப்பொங்கல் வரப்போகுது என்பதின் அறைகூவல் தான் அது. இப்பிடித்தான் எங்களுக்குத் தைப்பொங்கல் வருவது தெரியும்.

பாட இடைவேளை நேரத்தில மைதானத்துக்குப் போய் நீண்ட சதுரப்பெட்டியாக இரண்டு காலாலும் செம்பாட்டு மண்ணைக் கிளறிக் கோலம் போட்டு நடுவில சூரியன் மாதிரிப் படம் வரைஞ்சு விடுவோம். ஓரமாய்க் கிடக்கிற கல்லிலை பெரிய கல்லாப் பார்த்து மூண்டை எடுத்து வைத்து பழை ரின்பால் பேணியை அவற்றின் மேல் வைத்து விட்டு குருமணலை அந்தப் பேணியில் நிறைத்துவிட்டு பொங்கலை வேகவைப்பது போல கல் இடுக்குகளில் வாய் வைத்து ஊதுவது போலப் பாவனை செய்வோம். இதுதான் தைப்பொங்கல் விளையாட்டு.

என்ர அம்மாவும் சீனிபுளியடியில ரீச்சரா இருந்தவ. பள்ளிக்கூடம் முடிஞ்சு எங்கடவீட்டுக்கு அயலில் இருக்கும் பிள்ளையளையும் என்னையும் கூட்டிக்கொண்டு வீடுதிரும்புவது அவரின்ர வழக்கம். கிட்டத்தட்ட முப்பது நிமிட நடைபயணம்.
விசுக்கு விசுக்கெண்டு அம்மாவும் மற்ற ரீச்சர்மாரும் கதைச்சுக்கொண்டு நடந்துகொண்டு போகவும் பின்னால் நானும் கூட்டாளிமாரும் கே கே எஸ் றோட்டின்ர ரண்டு பக்கமும் விடுப்பு பார்த்துகொண்டே போவோம். தைப்பொங்கல் சீசனில கடைநெடுக மண் பானையளும் அலுமினியப் பாத்திரங்களும் அடுக்கிவச்சிருக்கும்.
கோபால் மாமாவின் கடைப்பக்கம் நெருங்கும் போது எங்கட கண்கள் தானா விரியும்.
ஊரில் இருக்கின்ற கடையளுக்க அவற்ற கடைதான் பென்னான் பெரியது, புதுக்கடையும் கூட.
ஒரு பக்கம் கரும்புக்கட்டுகள், இன்னொரு பக்கம் மண் மற்றும் அலுமினியப்பாத்திரங்கள், ஓலையால் செய்த கொட்டப் பெட்டிகள் நிறைஞ்சிருக்கும்.

ஆனா என்ர கண் போறது வேற இடத்தில,

வட்டப்பெட்டி, சரவெடி, மத்தாப்பு, பூந்திரி (கை மத்தாப்பு),ஈக்கில் வாணம் (ஈர்க்கு வாணம்), அட்டை வாணம் (சக்கர வாணம்), வெடிப்புத்தகம் என்று சம்பியன், ஜம்போ, யானை, அலுமான் (ஹனுமான் வெடியை இப்பிடித்தான் அழைப்போம்) என வகை வகையான தயாரிப்புகளில கலர் கலரா ஒருபக்கம் குவிஞ்சிருக்கும். கோபால் மாமா ” எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போ” என்று சொல்லுவது போல ஒரு பிரமை வரும் அந்த நேரத்தில.
அவரின் கடை வரும்போது நடைவேகம் தானாகக் குறைந்து விடுப்புப் பார்க்கும் எங்களை
” கெதியா வாங்கோ பிள்ளையள்” என்று உறுக்கல் கொடுத்துவிட்டு அம்மா எட்டி நடக்கும் போது
“என்ன தங்கச்சி, பொங்கலுக்கு ஒண்டும் வாங்கேல்லையே” எண்டு கடைக்குள்ள இருந்து குரல் கொடுப்பார் கோபால் மாமா.
” இல்லையண்ணை, பிறகு உவர அனுப்பிவிடுகிறன்” என்று அம்மா சொன்னாலும் அவர் விடமாட்டார்.

” சாமான்கள் தீரமுன் கொண்டுபோ பிள்ளை” எண்டு சொல்லிப் பார்சல் போட ஆரம்பித்துவிடுவார்.
என்ர கண் பூந்திரிப்பக்கம் போவதை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு இரண்டு பக்கற் சம்பியன் பூந்திரிப் பெட்டியையும் பார்சலில் போடுவார். மணிபேர்சைத் திறந்து கொண்டிருக்கும் அம்மாவின் கையைச் சுறண்டி அட்டை வாணம் பக்கம் காட்டுவேன். யாரும் பார்க்காதவாறு என்ர கையில ஒரு கிள்ளுக்கொடுத்து விட்டு “பேசாம இரு அப்பா வாங்கிக்கொண்டு வருவார்” என்று சன்னமாகச் சொல்லிவிட்டுக் கடையிலிருந்து நகருவார்.

பொங்கலுக்கு முதல் நாள் அப்பா தாவடிசுந்தரலிங்கம் கடையிலிருந்து ஒரு சம்பியன் வட்டப் பெட்டி வெடியும் அஞ்சாறு அட்டை வாணமும், ரண்டு பூந்திரிப் பக்கற்ரும் வாங்கிவருவார்.
அண்ணனுக்குத் தான் வெடிப்பெட்டி. நான் சின்னப்பிள்ளையா இருக்கேக்க அலுமான், சம்பியன் வெடியளத் தொடவே பயம். (பின்னாளில ஆமியின்ர ஷெல், குண்டுகளுக்குப் பிறகு பழகிபோச்சு)
யானைப் படம் போட்ட வெடியளும் உண்டு. அந்த் வெடிகளில ஒரு பக்கற்றில அம்பது வெடி இருந்தால் பத்து வெடி தேர்றதே அபூர்வம். யானை வெடிகள் பெரும்பாலும் புடுக் எண்ட சத்ததோட நூந்து போகும்.
வெடிக்காத அந்த வெடியளை எடுத்து அவற்றின் கழுத்தை நெரித்திருக்கும் நூல்கட்டை அவிட்டுவிட்டு நூந்துபோன திரியை மேல எழுப்பீட்டு திரியில நெருப்ப வைத்தால் மத்தாப்பு போல அழகாகச் சீறிவிட்டு தன்ர சாவைத்தழுவிக்கொள்ளும்.
ஒரு பத்துப் பதினஞ்சு வயசுப் பொம்பிளைப் பிள்ளையின்ர குடும்பி போலச் சணல் கயிறைத் திரித்து இலேசாகத் தணல் வைத்தால் கனநேரம் அது அணையாமல் இருக்கும். அதுதான் வெடிகளுக்கும் பற்றவைக்கும் நெருப்பாக இருக்கும்.

திலகப்பெரியம்மாவின்ர பெடியள் வெடிகொழுத்துறதில விண்ணர்கள்.
கிழுவந்தடியில 100 சரவெடியைக் கட்டிவிட்டு அடிநுனியில் இருக்கும் வெடியில் நெருப்பை வைத்தால் பட படவெண்டு வெடித்துக்கொண்டே போகும்.
அவையின்ர வீட்டில செல்வராசா எண்டு வேலைகாரப் பெடியன் ஒருவன் இருந்தவன்.
தான் பெரிய சாதனை வீரன் எண்டு நினைச்சுக் கொண்டு ஒரு அலுமான் வெடியை எடுத்து அதன் அடிகட்டையை இரண்டு விரலுக்குள்ள வச்சு வெடிப்பான். படுத்திருக்கும் ஊர் நாய்களுக்கு மேல் அட்டை வாணத்தைக் கொழுத்திப்போடுவான். வள் வள் என்று பெருங்குரல் எடுத்து செல்வராசாவைத் திட்டிதீர்த்தவண்ணம் அவை ஓடி மறையும்.

எங்களூரைப் பொறுத்தவரையில் தீபாவளி வருசப்பிறப்பை விட தைப்பொங்கல் தான் விசேசம்.
வானம் பார்த்த பூமியாக விவசாயக்கிராமங்களே யாழ்ப்பாணத்தில் அதிகம் ஆக்கிரமிப்புச் செய்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழகத்தில் உள்ள தமிழுணர்வாளர்கள் தைபொங்கலைத்தான் தமிழரின் வருடப்பிறப்பாகக் கருதுகினம்.

பொங்கலுக்கு முதல் நாளே வெடிச்சத்தம் கிளம்பிவிடும். சின்னம்மாவின் மகன் துளசி அண்ணாவும், வெடிகளை வெடிக்க வைப்பதில் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து அவற்றை அமுல்படுத்துவதில் கெட்டிக்கார்.
பழைய மண்ணெண்ணை பரலுக்குள்ள வெடிச்சரத்தைப்போட்டு விட்டு கொள்ளிக்கட்டையைப் போடுவார். அமுக்கமான அந்த நெருக்கத்துக்குள்ள இருந்து அவை வெடிக்க ஆரம்பிக்கும் போது அந்தத் சத்ததோட ஒப்பிடேக்க ஆமிக்கறன்ர ஷெல் பிச்சை வாங்கோணும்.
அட்டைவாணத்தைக் கொளுத்திவிட்டு நிலத்தில இலாவகமாகச் சுழற்றிவிடுவார்.
சுழன்று சுழன்று ஓடிக் கொண்டு வண்ணசக்கர ஒளியைக் கக்கிகொண்டே தொலைவில் போய்க் கருகி ஓய்ந்துவிடும்.
நிலத்தில் ஒரு டப்பாவை வைத்து விட்டு ஈர்க்கு வாணத்தை எடுத்து அதன் மேல் சாய்வாக வைத்து நெருப்பை அவர் பற்றவைக்கும் போது வானத்தில் சென்று வெடித்து பூத்தூவ வேண்டியது தன் விதியை நொந்தபடி தரை மட்டத்தில் சாய்வாக விருக்கென்று சென்று வெடிக்கும்.
றேட்டில போற வாற சைக்கிள்காரற்றை திட்டு வசவுகள் தான் இதற்காக அவருக்குக்கிடைக்கும் கெளரவ விருதுகள். ஒருமுறை அவர் ஏறிந்த சக்கரவாணம் படுத்திருந்த ஒரு கிழவியின் மேல் விழுந்து ” ஐயோ அம்மா” என்று அந்தக் கிழவி தைப்பொஙகல் முதல் நாள் இருட்டுகுள்ள ஓடினது இப்பவும் நினைவிருக்கு.

திருஞானசம்பந்தரின் கதையை “ஞானக்குழந்தை” எண்டபெயரில் படமா எடுத்து ரவுணில இருக்கும் லிடோ தியேட்டரில வந்த நேரம் அது. சம்பந்தருக்குக் கடவுள் வந்து காட்சி கொடுத்தது போல எனக்கும் முன்னால் கடவுள் வந்தா நான் நிறையப் பூந்திரியும், அட்டைவாணமும் கேட்பேன் என்று சின்னப் பிள்ளையா இருக்கேக்க நினைப்பேன்.

ஒருமுறை இலங்கை அரசாங்கம் வெடிகளை எங்கட பிரதேசத்திற்கு அனுப்பத் தடை செய்துவிட்டது. திலகமாமியின்ர பெடியன் சுரேஸ் ஒரு பழைய லொறியின்ர சீற்பாகம் ஒண்டை நீண்ட துண்டாக வெட்டி எனக்கொன்று அவனுகொன்றாக வைத்துக் கொண்டான். அதைத்தூக்கி நிலத்தில் அடிக்கும் போது படார் என்று வெடிபோல் சத்தம் எழுப்பும். அதுதான் எங்களின் தற்காலிக வெடி.
இலங்கை அரசாங்கம் இந்ததடையை நிரந்தரம் ஆக்கியபோது வெடிவரத்து முற்றாக இல்லாமல் போனது.
ஒரு விளையாட்டுத்துப்பாக்கியை வாங்கி அதில் பொட்டுவெடி என்று சொல்லப்படும் வெடிறேலைப் பொருத்தி வெடிப்போம். அந்தத் துப்பாக்கி பழுதானால் அந்த வெடி றோலை ஒரு கொங்கிறீற் கல் மேல் வைத்துவிட்டு இன்னொரு கல்லால் ஓங்கி அடிக்கும் போது இதேபோல வெடியெழுப்பும்.

பொங்கல் அடுப்பு செய்வதும் ஒரு கலை.பொங்கல் ஆரம்பிப்பதற்கு ஒரு கிழமைக்கு முந்தியே செம்பாட்டு மண்ணிலை தண்ணீரைக் கலந்து நல்லாக் குழைத்து அலுமினிய வாளியில அந்தக் குழைத்த மண்ணைப் போட்டு இறுக்கி விட்டு சுத்தமான தரையில கொஞ்சம் குருமணலைப் பரவி விட்டு அப்பிடியே கவிட்டு விட்டால் அது கூம்பு வடிவில காய்ஞ்சு இறுகிவரும்.பொங்கலுக்கு ஒரு சில தினம் முன்னுக்கு சாணி கரைச்சு அந்த அடுப்புக்களின் மேல தடவித் திருநீறையும் தடவிவிடுவார்கள். பல குடும்பங்களுக்குப் பொதுவில் இந்த அடுப்புக்கள் செய்து பரிமாறப்பபடும்.

பொங்கல் நாள் வந்துவிட்டால் விடிய நாலு மணிக்கே எழுந்து ஆயத்தஙகளைத் தொடங்கிவிடுவோம்.

அரிசி இடிக்கும் உலக்கை, கோதுமை மாவை (சிலர் அரிசி மா, தினை மா பயன்படுத்துவார்கள்) எடுத்துக்கொண்டு நடு முற்றத்துக்குப் போய் கூட்டித் தெளித்த அந்த முற்றத்தில் உலக்கையை நீட்டிவைத்து மாவை அதன் மேல் தூவிச் சதுரவடிவப்பெட்டியாகக் கோலம் அமைப்போம். அதன் நடுவில் தான் பொங்கல் வேலை ஆரம்பிக்கும்.
சூரியன் வருவதற்கு முன்பு பொங்கிவிட்டுக் கணக்காச் சூரியன் வரும்போது வெடியைக் கொழுத்திப்போட்டு வாழையிலையில் கற்பூரத்தைக்காட்டிப் படைப்போம்.

முந்தின காலத்தில மண்பானைகள் தான் பொங்குவதற்கு அதிகம் பயன்படும். ஆனால் காலவோட்டத்தில அலுமினியப்பானை இதை ஓவர்ரேக் பண்ணிவிட்டுது.மண்பானையில் பொங்கும் போது பானை உடைந்தால் அபசகுணம் என்பார்கள்.
ஒருமுறை எங்கள் வீடுப் பானை பொங்கும் போது சிறிய ஒட்டை ஏற்பட்டு பொங்கும் போதே தண்ணீர் இலேசாகப் பெருகத் தொடங்கியது. வாழைபழத்தையும் கோதுமைமாவையும் பிசைந்து இலாவகமாக அந்த ஓட்டையை அடைத்துவிட்டார் அப்பா.
பானையில் இருந்து பால் பொங்கி வழிஞ்சாத் தான் நல்லது என்று அம்மம்மா அடிக்கடி சொல்லுவா.
காகங்களுக்கும் படையல் இருக்கும், ஆனால் அவை ஒழுங்காகச் சாப்பிட உந்த வெடி வெடிக்கிறவஙகள் விட்டால் தானே.

சரி சரி, நேரமாயிட்டுது, பொங்கலுக்கும் சாமான் வேண்ட வேணும்.
நான் நடக்கப் போறன்.
ஹிம், இந்த நாட்டில வெடிகொளுத்தாம, எலக்ரிக் குக்கரில தான் பொங்க வேணும்.
(இது நான் என்ர மனதுக்குள்ள சொல்லிகொள்வது)

எங்க ஊரு காவல்காரங்கள்


அகிரா குரொசவா ஜப்பானிய சினிமாவில மட்டுமில்ல, உலகளாவிய சினிமா அரங்கிலும்அறியப்பட்ட ஒரு தலை சிறந்த இயக்குனர். ( புண்ணியவான் தமிழ் நாட்டில பிறந்திருந்தால் புரட்சி இயக்குனர் பட்டமும் எதாவது சந்துக்குள்ள இருக்கிற பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமும் குடுத்திருக்கும்)
சில காட்சிப்படுத்தல்களை சினிமாவின் மூலம் இன்னும் அழகாகக் காட்டமுடியும். குறிப்பிட்ட நிமிடங்களே ஓடக்கூடிய சினிமாவை நச்சென்று காட்டக்கூடிய காட்சியமைப்பின் மூலம் சொல்ல வந்த விஷயத்தின்ர ஆழத்தைக் காட்டமுடியும். இதை கமரா உத்தி மற்றும் திரைக்கதை அமைப்பு மூலம் சாத்தியப்படுத்தலாம். ஒரு மேடை நாடகத்தில் இருந்து சினிமா வேறு படுவது இதில் தான். ( இயக்குனர் விசு சினிமாவையே மேடை நாடகம் ஆக்கிய பெருமைக்குரியவர்).

பக்கம் பக்கமாகப் பேசக்கூடிய காட்சிவடிவத்தைக் சில நிமிட கமராக் கோணம் மூலமும் கமராவினுடைய மிகச்சரியான இயக்கம் மூலமும் காட்சிப்படுத்தலை சினிமாவுக்குள்ள புகுத்தியவர் தான் இந்த அகிரா. இன்றைய மணிரத்னம் படங்கள் இவரின்ர உத்தியத் தான் எடுத்து அதிக அளவில் பயன்படுத்துகின்றார். (அகிராவை போன்ற முன்னோடிகளைத் தெரியாத சாமான்யன்கள் தமிழ்நாட்டுப் படங்களை அடிக்கடி ஒஸ்கார் விருதுக்கு சிபார்சு செய்வான்கள்)

இந்த உத்தியின் ஒரு வடிவத்தை சின்ன உதாரணம் மூலம் சொல்லுறன்.
வில்லன் ஒரு பெண்ணை மானபங்கப் படுத்துவதாக காட்சி என்றால் அதை உருவகப்படுத்த ஒரு புள்ளி மானை ஒரு சிறுத்தை கோரமாகக் கடித்து உண்பது திரையில் வரும்.
இது ஒரு சாதாரண உதாரணம். இது போல் பல உத்திகளைக் அறிமுகப் படுத்திய புண்ணியவான் இந்த அகிரா. 1990 ஆம் ஆண்டில இவருக்கு சிறப்பு ஓஸ்கார் விருதும் கிடைச்சது.

அண்மையில் அகிராவின் “Seven Samurai” (Shichinin no samurai, 1954 Japan 200mins) என்ற படம் பார்க்க வாய்ப்புக் கிடைச்சது.சமுராய் என்பதற்கு ஜப்பானிய மொழியில் “போர் வீரன்” என்றும் விளக்கம் வரும்.

1954ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் 16ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் நகரும் கதை இதுதான். ஜப்பானிய விவசாயக் கிராமம் ஒன்று வழிபறிக் கொள்ளையர்களின் தொடர்ச்சியான சூறையாடல்களால் தவிக்கின்றது. தமது உடைமைகளையும், பயிர்ச்செய்கைகளையும், உறவுகளையும் இழந்து தவிக்கும் அந்த விவசாயிகள் இனியும் இது தொடர்கதையாகக் கூடாது என்று முடிவு எடுத்து ஊர்ப் பெரியவரைச் சந்திக்கிறார்கள். இவரின் ஆலோசனைப்படி (Find hungry samurai) சமுராய் அதாவது காவல் வீரர்களை அமர்த்திக்காவல் காப்பது என்று முடிவு செய்யப்பட்டு தகுந்த தலைவனைத் தேடுகின்றார்கள். மிகுந்த சிரமங்களின் பின் தலைவன் ஒருவனைக் தேர்ந்தெடுத்து அவனோடு ஏழு பேராக இணைந்து அந்த ஊரைக் காப்பாற்றக் கொள்ளையர்களைத் துரத்தியடிப்பது தான் கதை.

சாதாரண மசாலா சாயம் தோய்ந்த கதைக் கருவாக இருந்தாலும் 50 களில் இருந்த தொழில் நுட்பத்தை வைத்து அகிரா நன்றாகவே இயக்கியிருக்கிறார். இப்ப்டத்தைப் பார்க்க முன் அந்தக் கால கட்டத் தொழில்நுட்பத்தை மனதில் வைத்திக்கொண்டு தான் ரசிக்கவேண்டும்.

ஊரைக்காவல் காக்கும் சமுராய்களுக்குக் கிடைக்கும் ஊதியம் நல்ல சாப்பாடு மட்டுமே. இப்படத்தின் முதல் பாகம் கொள்ளையர்களால் ஊர் மக்கள் படும் தொல்லையும், தகுந்த சமுராயைத் தேடுவதிலுமாகக் கழிகின்றது.
அடுத்த பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமுராய்களின் தலைவன் தன் வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்பது, தாக்குதல் நடவடிக்கைகள் என்று கழிகின்றது.
ஊர்மக்களுக்கும் சமுராய் வீரர்களுக்கும் உள்ள இடைவெளியும் அந்த இடைவெளி, என்ன தான் கொள்ளைக்காரர்களைக் கொன்று சமுராய் வீரர்களை இழந்தாலும் தொடர்கின்றது. படத்தின் இறுதிக் காட்சியில் இறந்த சமுராய் வீரர்களின் புதைகுழிகளில் அசைந்தாடும் தம் கொடியைப் பார்த்த வண்ணம் சமுராய்களிள் தலைவன் சொல்வான். ” இந்த ஊர் விவசாயிகள் இப்போது வென்று விட்டார்கள் நாம் தோற்று விட்டோம் என்று. ( அவன் சொல்லும் தோல்வி, இந்த ஊர்மக்கள் சமுராய்களோடு நட்புப்பாராட்டாததைக் குறிக்கின்றது). நெஞ்சம் கனக்கும் முடிவு அது.

ஆரம்பத்தில் கூறியது போன்று அகிராவின் திறமையான இயக்கத்தை காட்டப் பல காட்சிகள் உள்ளன. எந்த இடத்தில் காட்சியை மையப்படுத்த வேண்டும், பொருத்தமான இசை எங்கே வரவேண்டும் போன்ற சந்தர்ப்பங்களும், ஒரு சாதாரண ஜப்பானியக் கிராமம் ஒன்று அதன் இயல்புகெடாமல் காட்டப் படுவது மற்றும் சண்டைக் காட்சிகளின் வீரியத்தை வெளிப் படுத்த கமராவை எப்படிக் கையாள வேண்டும் என்றும் இப் படம் பாடம் எடுக்கின்றது.

படத்தின் ஆரம்பக்காட்சியமைப்பு இவ்வாறு உள்ளது.
கொள்ளையர்கள் ஊருக்கு வருவதைக் கிராமவாசி ஒருவன் காண்கின்றான். தொடர்ந்து வரும் காட்சிகளில் திரளானோர் கூடி நின்று என்ன செய்வது என்று கூடிப் பேசுவது தொலை தூரக் காட்சியமைப்பாகவும் (long shot)
தொடந்து காட்சி மாறி இரண்டு மூன்று பேர் கூடிப் நின்று பேசுவது அண்மித்த காட்சியாகவும் ( close shot) திடீரென மிக நெருக்கமான காட்சிபடுத்தலாக ஒருவனை மையப்படுத்திக் (close up) கமரா நகரும் போது “இதற்கு ஒரே வழி இந்தக் கொள்ளையர்களைக் கொல்வது” என்று அவன் சொல்வதுமாக அமைகின்றது. இதைப் போல எந்தத் சூழ்நிலைக்கு எந்த முறையில் கமராவின் கோணத்தை அமைப்பது என்று பல காட்சிகளைக் காட்டலாம்.

1954 venice film festival இல் silvar lion மற்றும் கலையமைப்பு & அரங்க அமைப்புக்காகவும், உடையலங்காரத்திற்காகவும் இரண்டு ஒஸ்கார் விருதையும் எடுத்தது மட்டுமன்றி திரைப்படம் எடுக்கும் கலாரசிகர்களுக்கு இன்றும் பால பாடமாகத் திரைப்படக் கல்லூரிகளில் இப்படம் இன்னும் சிறப்பிக்கப்படுகின்றது.

இந்தப் படம் இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து வந்ததோடு
பசுபிக் பிராந்திய நாடுகளில் ஜப்பான் மேற்கொண்ட முற்றுகை,நேச நாடுகள் அணியின்ஜப்பானிய எதிர்ப்பு நிலைப்பாடு அதைத் தொடர்ந்த யுத்த முன்னெடுப்புகள் இதனால் சிதைந்த இந்த நாடு தன் பண்பாட்டு விழுமியங்களையும் தேசப் பற்றையும் மீண்டும் தூக்கி நிறுத்த எழுந்த படைப்பாகவும் திரையுலக வல்லுனர்களால் பார்க்கப்படுகின்றது.
சிதைந்து போன தன் தேசத்தைக் கட்டியெழுப்ப ஒவ்வரு குடிமகனும் சமுராயாக மாறவேண்டும் என்ற கண்ணோட்டத்திலும் இப்படத்தைப் பார்க்கலாம்.
அதனாலோ என்னவோ இந்தப் படத்தைப் பார்க்கும் போது நமது ஈழப் போராட்டத்தின் தொடரும் வரலாறும் நினைவில் வந்து மறைகின்றது.
குறிப்பாக சமுராய் வீரர்கள் முதலில் தம்மை அடையாளப் படுத்தக் கொடியொன்றைத் தயார்படுத்துவது, களத்தில் பயிற்சி எடுப்பது, எதிரியைத் தேடிச் சென்று வலிந்திழுத்துத் தாக்குவது, கரந்தடிப் ப்டைத் தாக்குதல் என அவை எம் களச் சூழலையும் நினைவுபடுத்துகின்றன.
இந்த நேரத்தில எனக்கு ஞாபகத்துக்கு வந்த இரண்டு சம்பவங்களையும் சொல்லுறன்.
86 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஈழத்தில எல்லா இயக்கக்களும் களத்தில் இருந்த நேரம் அது.
எங்கட அயலூர் தாவடியில் சிவராசா வீட்டுக்குப் பக்கத்தில தமிழ் ஈழ இராணுவத்தின்ர முகாம் இருந்தது. இலங்கை அரசாங்கத்தின்ர விமானம் இந்த முகாமைக் குறிபார்த்த குண்டு பக்கத்துத் தோட்டதில நின்று விளையாடிய இருண்டு பாலகரைப் பரிதாபமக் கொன்று தன் பசியை அடக்கியது. ஈழ வரலாற்றில முதல் தடவையா போட்ட விமானக் குண்டு அது தான். முதல் கோணம் முற்றும் கோணல் போல இவன்கள் போட்ட குண்டுகள் எப்போதுமே பொது சனத்தைத் தான் பதம் பார்க்கும்.

இந்தக் காலப் பகுதியில தாவடிச் சுடலைப் பக்கமாக தோட்ட வெளிப்பக்கமும் துரை வீதி முடக்கில இராசநாயகம் அண்ணையின் பவர் லூம் பக்கமாவும் கிறனேற் குண்டுடன் போராளிகள் ஊரைக் இரவிரவாக் காவல் காத்த காலம் உண்டு. ஒருமுறை மானிப்பாய் பக்கம் ஹெலி ஒன்று இறங்கிப்போனதும் ஒரு காரணம்.

ஒருநாள் காலை துரைவீதி முடக்கில இரவில் சென்றிக்கு நின்ற போராளி தவறுதலாகக் கிறனேற்றின் கிளிப் கழன்று அந்த இடத்திலேயே இறந்தது இன்றும் மனச இறுக்குது.

இன்னொரு சம்பவம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பிரேமதாசா காலத்தில யுத்தம் ஆரம்பமான நேரம். ஊரில் மின்சாரம் இருந்தது. சுன்னாகம் மின்வழங்கியில இருந்து அயலூர்களுக்கு மின்சாரம் வந்து கொண்டிருந்தது. ஆனாலும் இரவு நேரங்களில் சில விஷமிகள் ஊரில் இருக்கும் உபமின்வழங்கிகளில் இருக்கும் ஒயிலைத் திருடுவதற்காக அவற்றை உடைத்துத் திடுடி விடுவார்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பகுதியாக மின் இழப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தது.
இதைத்தடுக்க வேண்டும் என்றால் இரவில் வீதிவலம் வந்து இந்த மின்வழங்கிகளைக் காவல் காபபது என்று எங்களூர் கோயிலடியில் கூடும் பெடியன்கள் முடிவு செய்தார்கள். விழிப்புக் குழுவாக ஒவ்வோர் இரவும் ஊர் மக்களின் வீட்டில் மின்சாரம் வருவதற்காகத் தாங்கள் விழித்திருந்து காத்தார்கள். இதற்கு அவர்களுக்கு கிடைப்பது சுழற்சி முறையில் வீடுகளில் இருந்து சூடான தேத்தண்ணியும் வடையும் தான்.
கொஞ்சக் காலம் கழிந்த பின் சுன்னாகம் மின்வழங்கி நிலையம் இலங்கை அரசாங்கதின்ர குண்டுகள் முற்றாகத் தாக்கியபின் உப மின்வழங்கிகளும் செயல் இழந்தன. கோயிலடி நண்பர்களின் விழிப்புக் குழுவுக்கும் வேலையில்லாமல் போனது.

இந்த இரண்டு சம்பவங்களை இப்போது நினைத்தால் பெருமிதம் தான் வருகுது. ஊர் வாழத் தன்னை அர்ப்பணிக்கும் எங்கட சகோதரர்களின் அந்த செயற்பாடு தான் இன்னும் அந்த மண்ணை ஈரப்படுத்துது.

பதேர் பாஞ்சாலியும் பெரிய மாமியும்

போன கிழமை பல்லின மக்களுக்கானதொலைக்காட்சி ஒண்டில அதிகாலை ஒரு மணிக்கு பிரபல இயக்குனர் சத்யஜித் ரேயின் “பதேர் பாஞ்சாலி” என்ற படம் போடுவதாகச் செய்தி கிடைச்சது.

பொதுவா இந்த தொலைக்காட்சியை இரவு பத்து மணிக்குப் பின்னால பார்ப்பது அறிஞ்சால் மெல்பனில இருக்கிற என்ர கூட்டாளி தாஸ் கொடுப்புக்குள்ள சிரிப்பான். ஏனெண்டால் பத்து மணிக்கு மேல அவங்கள் போடுற படங்கள் மொழி வித்தியாசமில்லாம வெளிப்படையான பாலியல் காட்சிகளை வாரி இறைக்கும். இந்தமாதிரி விசயத்தில பிரென்சு படம் என்றாலும் சீனப் படம் என்றாலும் அவங்கட கொள்கை ஒண்டு தான்.

இருந்தாலும் அத்தி பூத்தப் போல இப்பிடி ” பதேர் பாஞ்சாலி” போலப் படங்களும் வருவதுண்டு.
நீண்ட நாளாத் தமிழ்ப் பலசரக்கு கடையள்ள “மெட்டி ஒலி”, ” அண்ணாமலை” இத்தியாதி கசற் மலைகளுக்க தேடினாலும் கிடைக்காத இப்பிடியான படங்களைப் பார்க்க இதுதான் சந்தர்ப்பம் எண்டு, படத்தைப் பதிவு பண்ணி அடுத்த நாள் பார்க்க முடிஞ்சுது. சரி இனிப் படம் எப்பிடி எண்டு பார்ப்பம்.

1955 ஆம் ஆண்டு பதேர் பாஞ்சாலி” வங்காள மொழியில் வந்தது. பாட்டு, சண்டை, குழு நடனம் அல்லது குலுக்கல் டான்ஸ் போன்ற சராசரி இந்திய மசாலா சினிமாச் சமையலுக்குத் தேவையான ஒரு ஐட்டமும் இதில கிடையாது ( அடச் சீ, இவ்வளவும் இல்லாமப் படம் பாக்கோணுமோ எண்டு தாஸ் முணுமுணுப்பது போல ஒரு பிரமை). படம் 115 நிமிசம் கறுப்பு வெள்ளையில ஓடுது.
பதேர் பாஞ்சாலி என்பதன் தமிழ் விளக்கம் ” சின்னஞ் சிறு வீதியின் பாட்டு” (Song of the Little Road)
சரி, இனி இப்படத்தின் கதையைச் சொல்லுறன்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலச் சூழலில் ஒரு மிகப் பின் தங்கிய பெங்காலிக்கிராமம்.
அந்தக் கிராமத்தில் வாழும் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம், குடும்பத்தலைவன் ஹரிகர் , அவன் மனைவி சர்பஜயா, மூத்த மகள் துர்கா, இளையவன் அபு, இவர்களின் வறுமை வருமானத்திலும் பங்கு போடும் ஹரிகரின் வயதான சகோதரி. இவர்களின் ஆசைகள், நிராசைகள், எதிர்பார்ர்புகள், ஏமாற்றங்கள் தான் கதைக் கருவை ஆக்கிரமிக்கிறது.

தன் கணவன் ஹரிகரின் அப்பாவித்தனத்தால், ஏமாற்றப்பட்டு தம் சொத்தை இழக்கும் இயலாமை,
ஏமாற்றிய குடும்பம் வைத்திருக்கும் தம் காணியில் மகள் துர்கா கொய்யாப்பழம் திருடுவதும், வீட்டுக்காரி வந்து கூச்சலிடும் போது மகளுக்காகப் பரிந்து பேசுவது, பின் அவள் போனதும் துர்க்காவைத் தண்டிப்பது, கணவன் வந்ததும் தம் இயலாமையை நொந்து கொள்வது என்று சர்பஜா பாத்திரத்தில் வரும் கருணா பனர்ஜி ஒரு சராசரி இந்திய அல்லது ஈழத்துக் குடும்பத்தலைவியை நினைவு படுத்துகிறார். குடும்பத்தலைவன் ஹரிகர் இந்தக்குடும்பத்தை விட்டு அடிக்கடி வேலைதேடி நாட் கணக்கில் அலையும் போது தான் ஒருத்தியாக அவள் போராடுவதும் வெகு இயல்பு.

கொய்யாப் பழம் திருடுவது, தாயிடம் எவ்வளவு ஏச்சும், அடியும் வாங்கினாலும் தன் பால்யப் பருவத்துக்கே உரிய ஆசைகளை அடக்க முடியாத துர்க்கா பாத்திரம். திருடிய கொய்யாப்பழத்தை அப்படியே தன் முதிய மாமியாரிடம் (அப்பாவின் சகோதரி) கொடுப்பதும், மாமியார் தன் தாயிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டுப் போகும் போது கையில் பிடித்துக்கூட்டி வருவது, ரயிலைக் காட்டும் படி கேட்ட தன் தம்பியின் கைபிடித்து நெல் வயல் வெளியே கொண்டு காட்டுவது என்று அவளின் பல பரிமாணங்கள் காட்டப்படுகின்றன.

பிபூதி பூஷன் பானர்ஜி இன் மூலக்கதையும், ரவி ஷங்கரின் இசையும் படத்திற்கு மிகப்பலம்.
செல்வந்த வீட்டில் களவான முத்து மாலையைத் துர்கா தான் திருடினாள் என்று பழிச்சொல் வரும் போது அவளுக்காக நாமும் பரிந்து பேசத் தோன்றுகின்றது. ஆனால் அவள் இறந்த பின்னர் அவள் தம்பி அபு தற்செயலாகக் காணுவதும், பின் யாரும் பார்க்காமல் இருக்க அதை நீரோடையில் வீசுகின்றான்.
அந்தக் காட்சி காட்டப்படும் போது, முத்து மாலை பொத்தென விழுவதும், சிறிய சலசலப்பின் பின் சலனமற்றுத் தோன்றும் நீரோடை ஒரு அழகான கவிதை

.இந்தப் படத்தைப் பார்த்த போது ஒரு விசயம் சிந்தனைக்கு வந்தது. நல்ல படைப்பாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையின் பரிமாணங்களைச் செயற்கை இல்லாமல் அப்படியே தந்திருக்கிறார்கள். தோல்விகண்டவர்கள் பலர் மிதமிஞ்சிய செயற்கையைக் கொடுத்து அடையாளம் இழந்து போனார்கள்.
ஆக, தன் படைப்பில சுயத்தை இழப்பவன் தன் முகவரிய இழக்கிறான்.

எல்லாம் இழந்து தனிமரமாக இருக்கும் குடும்பத்தலைவியும், மகன் அபுவும் வேலை தேடி உழைத்த பணத்துடன் வரும் கணவன் வந்ததும் ஊரைவிட்டு போக முடிவெடுக்கும் போது தான் ஒதுங்கி இருந்த அயலவர்கள் உதவுவதுபோல வருகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து வந்த துன்பச் சறுக்கல்களோடு பெனாரஸ் நகர் நோக்கி புதிய வாழ்க்கை ஒன்றுக்காக அவர்களின் கட்டி வண்டி பயணிக்கின்றது.

விமர்சனத்தின் இறுதிக்கு வரும் முன்னர் இன்னொரு பாத்திரத்தையும் பார்ப்போம்.
அது படத்தில் வரும் வயதான கிழவி (துர்காவின் தகப்பனின் சகோதரி) ஊனமான கண்ணுடன் இடுக்குப் பார்வை பார்த்துக்கொண்டே தன் தம்பி வீட்டில் களவெடுத்துத் தின்பதும், தம்பியின் மனைவியின் வசவுகளைக் கேட்டுப் பழிப்புக்காட்டுவதும், கோபித்துக்கொண்டு அவர்களின் வீட்டை விட்டு வெளியேறி இன்னொரு வீட்டில் அடைக்கலம் போகும் போது ” கொஞ்ச நாளைக்குத்தான்” என்று இரஞ்சுவதும் மிக இயல்பு. சண்டி பாலா தேவி என்ற முதுபெரும் நடிகை சிறப்பாகவே அதைச் செய்திருக்கிறார்.

தம்பியின் மனைவி துரத்திய போதும் அவர்களுக்குப் பிள்ளை பிறந்த போது தன் வைராக்கியத்தையும், அவமானத்தையும் மூட்டை கட்டி விட்டு எதுவும் நடக்காதது போல், மீண்டும் வந்து குழந்தையை கொஞ்சுவதும், தன் வாழ்வின் இறுதி நிமிடங்களில் நைந்து போன சேலையைப் போல கேட்பாரற்று காட்டில் இறப்பதும் நம் இதயத்தை ஊசியால் குத்துவது போல…
தமது அந்திம காலத்தில் சொந்தங்களை இறுகப் பற்றி வாழ நினைக்கும் முதுமையும்
அவர்களின் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளாத சமுதாயமும் ஒரு சக்கரம் போல. அதே நிலை இவர்களுக்கும் இவர்களின் முதுமையின் விளிம்பில் வருவது தவிர்க்க முடியாத உலக நியதி.

இந்தப் படத்தில் வரும் வறட்டு வைராக்கியம் உள்ள அந்தக் கிழவிப் பாத்திரத்தைப் பார்த்த போது என் பெரிய மாமியின் குணாதிசயம் நினைவுக்கு வந்தது.
என்ர அப்பாவின் மூத்த சகோதரியான அவர் நான்கு இளைய சகோதரிகளின் வாழ்வுக்காக அப்புவுடன் சேர்ந்து தன் இளமையில் இருந்தே தோட்ட வேலைகளிலும், வறுமையின் போராட்டத்திலும் பங்கு போட்டவர். தன்ர திருமண வாழ்விலையும் குறுகிய கால அனுபவம் தான் அவவுக்குக் கிடைச்சது. மல்லிகைப் பூ வாசனைய விட அவர் அதிகம் மணந்தது எங்கட தோட்டத்தான் கோடா போட்ட புகையிலையாத் தான் இருக்கும். அவவின்ர வயதில முக்கால்வாசிப் பாகம் ஆச்சியைக் (அவரின் அம்மா)
கவனிப்பதிலேயே கழிந்தது. இப்படியான தொடர்ச்சியான போராட்டமும், வாழ்வின்ர நெருக்கடிகளும் அவரை ஒரு போர்க்குணம் மிக்க மனுசியாக மாற்றி விட்டது.
நான் ஊரில் இருந்த காலத்தில ஆச்சி வீட்டை போக இலேசான பயம் எப்பொழுதும் அடி மனசில இருக்கும். தப்பித் தவறி ஏதாவது என் சிறுவயதுக்கே உரிய குறும்புத்தனங்களைச் செய்தால் போதும், ” இனி இஞ்ச ஒருத்தரும் வரத்தேவேல்லை” என்று தொடங்கி வார்த்தைகள் அனல் பறக்கும். தடுக்க வரும் ஆச்சிக்கும் ” ஆச்சி நீ சும்மா இரணை” என்று தொடங்கி சரமாரியான சொல் கணைகள் வந்து விழும். என்ர அப்பாவுடன் இடைக்கிடை அவருக்கு வரும் கோபதாபங்களிலும் பலிகடா நாங்கள் தான். ஆக மொத்ததில் என்ர இளமைப் பிராயத்து மன விம்பத்தில ஒரு பயங்கரமான இடம் அவருக்கு இருந்தது.

காலம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. ஆச்சியும் போய்விட்டா.
கொழும்பில் இருந்த 2 வருசங்களையும் புலம் பெயர்வில் 10 வருசங்களையும் தின்றுவிட்ட காலங்களையும் கடந்து இந்த ஆண்டு ஊருக்குப் போனேன். பெரியமாமி எப்படி இருப்பா, இப்பவும் அப்பிடியா என்று மனதுக்குள்ள நினைச்சுக்கொண்டு ஏஷியா பைக்கை தாவடியை நோக்கி மிதித்தேன்.

ஆச்சி வீடுப் படலையைத் திறந்தேன்.

“என்ர அப்பு வந்திட்டானோ” என்று ஒரு குரல் கேட்டது.
எட்டிப் பார்த்தேன். காலம் கொடுத்த பரிசான வில் போன்ற கூன் முதுகுடன் என் பெரியமாமியே தான்.
அவரின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்து வரவா என்று கேட்பது போல இருந்தது.
என்ர கன்னத்தைத் தடவி ஒரு குழந்தையைப் போல அழகு பார்த்தார்.
என்னை அந்த மண் திண்ணையில் இருத்தி, தளர்ந்த அவரின் நரம்பு விழுந்த கை என்கையைப் இறுகப் பிடித்துக் கொண்டது. என்ர வெளிநாட்டுப் புதினங்களை கேட்கும் பாவனையில் தன் பாவனையை ஏற்படுத்திக்கொண்டார். என் உள் மனதுக்குத் தெரியும் அவர் என்னுடைய புதினங்களை கேட்பதை விட என் அருகாமை தான் அவருக்குத் தேவைப்பட்டது.
” போட்டு வாறன் பெரிய மாமி” என்ற போது ” ஓமப்பு, நல்லா இரு மேனை”என்று அவரின் உதடும் ” போகாதை” என்பது போல அவரின் மனம் சொல்லுவதைக் கண்ணும் வெளிப்படுத்தியது.

முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், விலகிப் போன பந்தங்களையும் தேடி அது ஒடுகின்றது, கிடைக்காத பட்சத்தில் கழிந்து போன வாழ்வியலின் நினைவுகளை அசை போட்டு எஞ்சிய அந்திம காலத்தை அது கழிக்கின்றது.

வாழ்க்கைப் பயணம் என்பது ஒரு பதேர் பாஞ்சாலி, அதாவது எங்கட எண்ணங்கள் போட்ட சின்னஞ்சிறு பாதையில் வரும் பாட்டு அது.

தேவராசா அண்ணை குடும்பம் இருந்த வீடு


தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இராணுவ நடவடிக்கைய தொடர்ந்து இடம்பெயர்ந்தவர்களில் தேவராசா அண்ணர் குடும்பமும் ஒன்று. எங்களூர் கார்த்திகேசு அண்ணர் மகள் கலியாணம் கட்டி கனடா போனவுடன் அவவுக்கு சீதனமாக் கிடைச்ச வீடு வெறுமையாக கிடக்கவும் அதில் குடியேறினார்கள் தேவராசா அண்ணர் குடும்பம். அவருக்கு மூண்டு பிள்ளைகள், மூத்தவள் படிப்பில் படுசுட்டி, எங்களூர் சைவப்பிரகாசா வித்தியாசாலையில் அவள் சேர்ந்த நாள் முதல் படிப்பிலும் பேச்சுப் போட்டிகளிலும் அவள் தான் முதலிடம். தன் தாயின் முன்னால் கத்தி கத்தி பேச்சு போட்டிக்கு பயிற்சி எடுப்பது இப்போதும் என்ர காதில கேட்குது.

இரண்டாவது பிள்ளை லாவண்யன் அவனுக்கு அப்போது பத்து வயது இருக்கும். நான் எங்கட வைரவர் கோயில் பூசைக்கு பின்னேரம் ஆயத்தமாகும் போது அவன் தான் கூடமாட ஒத்தாசை செய்வது வழக்கம். கூட்டுவதில இருந்து தண்ணீர் கொன்டுவருவது, என்னோடு சேர்ந்து பஜனை பாடுவது எண்டு அவன் பங்கை செய்வான்.
அவர்களில் கடைக்குட்டி சரியான வெக்கறை, அப்போது அவளுக்கு மூண்டு வயது இருக்கும் மதிலுக்கு பின்னால ஒளிச்சிருந்து தன்ர அண்ணன் என்னோடு வைரவர் கோயில் பூசை செய்வதை பார்த்துக்கொண்டு இருப்பாள். கிட்டவந்து எங்களோட சேர்ந்து தானும் இணைய அவளுக்கு விருப்பம் இருப்பதை அவளுடைய கண்கள் காட்டிக்கொடுத்து விடும்.

தாய்க்காறி குளிப்பட்டும் போது சோப்பு நுரை கண்ணில பட்டு அவள் கத்தும் கத்து ஊரையே கூட்டிவிடும்.
தேவராசா அண்ணையும் அவருடைய மனைவியும் சண்டை பிடிச்சு ஒரு நாள் அறியன்.
பிழைப்புக்காக சைக்கிள் திருத்தும் கடை வச்சிருந்தார்.

இலங்கை ஆமி 95ஆம் ஆண்டு பிளேனால குண்டு போடேக்க அவர்கள் வீட்டுக்க தான் பதுங்கி இருந்தவையாம். குண்டு இலக்காக இவர்கள் வீட்ட தான் பதம் பார்த்தது. முழுக்குடும்பமும் அழிஞ்சு போச்சு.

2005 மார்ச் கடைசியில பத்து வருடம் கழிச்சு ஊருக்கு போனேன்.
தேவராசா அண்ணர் வீடு அதே அழிபாட்டோட கிடந்தது.
அதுதான் இந்தப்படம்.மூத்தவள் கத்தி கத்தி பேச்சு போட்டிக்கி பயிற்சி எடுப்பதும், கடைக்குட்டியின் வெக்கச்சிரிப்பும், என்ர மனசுக்குள்ள ஒருக்கா அந்தநேரம் வந்து போனது.
” பிரவு அண்ணா வைரவரடிக்கு போவமே” எண்டு லாவண்யன் கூப்பிடுவது போல எனக்குப்பட்டது அந்த நேரம்.

வணக்கம்! வாருங்கோ…!


கானா பிரபாவின் “மடத்து வாசல் பிள்ளையாரடி” தளத்திற்கு வந்ததற்கு முதல்ல என்ர நன்றிகள்.
பதின்ம வயதுகளின் விளிம்பில்
இணுவில் மடத்து வாசல் பிள்ளையாரடியில் பின்னேரம் முதல் சாமம் தெரியாமல், கூட்டாளிமாருடன் அரட்டையும், சண்டையும், பிள்ளையாரடிப்பொங்கலும், காதல் கதைகளுமாகக் கழிந்த நாட்களின் நினைவுகளோட
இயந்திரமான, எங்கேயோ ஓடிக்கொண்டு,நட்புக்கும் விலைபோடும் இந்த வெளிநாட்டில மீண்டும் என்னைப் புதுப்பிக்க, என்ர மனசைப் பாதிச்ச, காயப்படுத்திய, ஒத்தடம் தந்த நினைவுகளை இதில பதியிறன், பாருங்கோ